வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
அப்போஸ்தலன் பவுல் ரோமர் 9:3-ல் எழுதினார்: “மாம்சத்தின்படி என் இனத்தாராகிய என் சகோதரருக்குப் பதிலாக நானே கிறிஸ்துவைவிட்டுச் சபிக்கப்பட்டவனாக வேண்டுமென்று விரும்புவேனே.” உடன் யூதர்களை ரட்சிப்பதற்காக அவருடைய உயிரையே அவர் தியாகம்செய்வார் என்பதை அவர் அர்த்தப்படுத்தினாரா?
இயேசு, அன்பின் உச்ச உயர்நிலை முன்மாதிரியை வைத்தார். அவர் தம்முடைய ஆத்துமாவை, அல்லது உயிரையே, பாவப்பட்ட மனிதகுலத்திற்கு ஒப்புவிக்க விருப்பமுள்ளவராய் இருந்தார். அவருடைய பொது ஊழியத்தின்போது, தம்முடைய நாட்டினருக்காக—யூதருக்காக—தம்மையே அர்ப்பணித்தார், அதன்மூலம் தம்முடைய கிரய பலியின் பலனைப் பெறுவதில் எவ்வளவு பேரை முடியுமோ அவ்வளவு பேரையும் கொண்டிருப்பதற்காக அதைச் செய்தார். (மாற்கு 6:30-34) அவர்களுடைய பிரதிபலிப்பற்றத் தன்மை, ரட்சிப்பின் செய்திக்கு எதிர்ப்பு ஆகியவை யூத மக்களின்மீது இயேசு கொண்டிருந்த அன்பான அக்கறையை ஒருபோதும் குறைக்கவில்லை. (மத்தேயு 23:37) மேலும் அவர் ‘தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி நமக்கு மாதிரியைப்’ பின்வைத்துப்போனார்.—1 பேதுரு 2:21.
அபூரண மனிதர்கள் இயேசுவினுடைய அன்பின் மாதிரியைப் பின்பற்ற முடியுமா? ஆம், இதன் ஓர் உதாரணத்தை நாம், அப்போஸ்தலன் பவுலில் காணமுடியும். அவர் உடன் யூதர்களைப்பற்றி அவ்வளவு அக்கறையுடையவராய் இருந்ததால், அவர்கள்மீதான அன்பின் காரணமாக, தான்தானே ‘கிறிஸ்துவைவிட்டுச் சபிக்கப்பட்டவனாக பிரிக்கப்படவேண்டுமென்று’ விரும்புவதாகச் சொன்னார்.
பவுல் அங்கு உயர்வுநவிற்சி அணியை அல்லது மிகைப்படுத்திச் சொல்வதைத் தம்முடைய குறிப்பைத் தெளிவுபடுத்துவதற்காகப் பயன்படுத்தினார். “வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்துபோகாது,” என்று இயேசு சொன்னபோது, அவர் இதைப்போன்ற மிகைப்படுத்துதலையே மத்தேயு 5:18-ல் பயன்படுத்தினார். வானமும் பூமியும் ஒழிந்துபோகாதென்று இயேசுவுக்குத் தெரியும். பவுல் சாபக்கேடாகப் பேசுவதுமில்லை; எல்லா யூதர்களும் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொள்ளப்போவதும் இல்லை. இயேசு கிறிஸ்துவின்மூலம் வரும் கடவுளுடைய ரட்சிப்பின் ஏற்பாடுகளை யூதர்கள் பயன்படுத்திக்கொள்வதற்கு உண்மையில் தான் எதையும் செய்வார் என்பதே பவுலின் குறிப்பாக இருந்தது. அப்போஸ்தலன் உடன் கிறிஸ்தவர்களை இவ்வாறு உற்சாகப்படுத்த முடிந்தது எந்தவித ஆச்சரியமுமில்லை: “நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறதுபோல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள்”!—1 கொரிந்தியர் 11:1.
இன்று, இயேசுவும் பவுலும் கொண்டிருந்த அதே அக்கறையுணர்வைக் கிறிஸ்தவர்களும் அவிசுவாசிகளிடமாகக் கொண்டிருக்கவேண்டும். நம்முடைய ஊழிய பிராந்தியத்திலுள்ள மக்களின் அக்கறையின்மை அல்லது வெளிப்படையான எதிர்ப்பு, நம் அயலகத்தாரிடம் நம்முடைய அன்பையும், ரட்சிப்பின் வழியை அவர்கள் அறிந்துகொள்வதற்கு உதவிசெய்யும் நம்முடைய ஆவலையும் ஒருபோதும் குறைப்பதற்கு நாம் அனுமதிக்கக்கூடாது.—மத்தேயு 22:39.