உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w93 11/15 பக். 28-30
  • தவறை ஏன் ஒப்புக்கொள்ள வேண்டும்?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • தவறை ஏன் ஒப்புக்கொள்ள வேண்டும்?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • மனமுறிவுறுவதற்குக் காரணமில்லை
  • மனத்தாழ்மை இன்றியமையாத ஒரு பண்பு
  • தவறுகளை அவர்கள் ஒப்புக்கொண்டார்கள்
  • நம் தவறுகளைப்பற்றி ஏதாவது செய்தல்
  • மூப்பர் ஒருவர் தவறு செய்கையில்
  • தவறுகளை ஒப்புக்கொள்வதற்கு விரைவுபடுங்கள்
  • தவறுகளை ஒப்புக்கொள்வதற்குச் சந்தோஷப்படுதல்
  • என் தவறுகளை எப்படிச் சரி செய்யலாம்?
    இளைஞர்கள் கேட்கும் 10 கேள்விகளும் பதில்களும்
  • நான் தப்பு செய்தால் என்ன பண்ணுவது?
    இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்
  • நீங்கள் தவறு செய்துவிட்டீர்களா?
    காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2017
  • மன்னிப்பு கேட்பது சமரசமாவதற்கு திறவுகோல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
w93 11/15 பக். 28-30

தவறை ஏன் ஒப்புக்கொள்ள வேண்டும்?

இராணுவ சரித்திரத்தில் அது வழக்கத்துக்கு மிக மாறான எதிர்ச் சந்திப்புகளில் ஒன்றாக இருந்தது. அவமதிப்பு செய்யப்பட்டதைப் பழித்தீர்ப்பதன்பேரில் திடத்தீர்மானமாயிருந்த முரட்டு மனப்பான்மையுடைய 400 போர்வீரர்களை, ஆயுதந்தரியாத ஒரு தூதுவப் பெண் திரும்பிச்செல்ல வைத்தாள். தைரியமுள்ள ஒரே ஒரு பெண்ணின் வேண்டுகோள்களைக் கேட்ட பின்பு, அந்த ஆண்களின் தலைவர் தான் மேற்கொண்ட திட்டத்தை நிறைவேற்றாமல் விட்டார்.

அந்தத் தலைவர் தாவீதே, பின்னால் அவர் இஸ்ரவேலின் அரசரானார். கடவுளைப் பிரியப்படுத்த அவர் விரும்பினதால் அந்தப் பெண் அபிகாயிலுக்குச் செவிகொடுத்தார். தன் கணவன் நாபாலின்மீது பழிவாங்குவது, இரத்தப்பழியில் விளைவுறுமென அவள் சாதுரியத்துடன் அவருக்குக் காட்டினபோது, தாவீது பின்வருமாறு கூறினார்: “எனக்கு எதிர்ப்படும்படி உன்னை இன்றையதினம் அனுப்பின இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவாவுக்கு ஸ்தோத்திரம்; உனது விவேகத்தினிமித்தம் ஸ்தோத்திரம்; நான் இரத்தம் சிந்தும் குற்றத்திற்கு ஆளாகாதபடிக்கும் என் கையினாலேயே நான் பழிவாங்காதபடிக்கும் நீ இன்றையதினம் என்னைத் தடுத்துவிட்டபடியினால் உன்நிமித்தமும் யெகோவாவுக்கு ஸ்தோத்திரம்.” படுமோசமான தவறுசெய்வதிலிருந்து தன்னைத் தடுத்துவைப்பதற்குக் கடவுள் அபிகாயிலைப் பயன்படுத்தினதற்காக தாவீது நன்றியுள்ளவராக இருந்தார்.—1 சாமுவேல் 25:9-35, தி.மொ.

ஒரு சங்கீதத்தில், தாவீது பின்வருமாறு கேட்டார்: “தன் பிழைகளை உணருகிறவன் யார்?” (சங்கீதம் 19:12) அவரைப்போல், நம் தவறுகளை எவராவது நமக்குக் குறிப்பிட்டுக் காட்டினால் தவிர, அவற்றைப்பற்றி நாம் ஒருவேளை உணர்வற்றிருக்கக்கூடும். மற்றச் சந்தர்ப்பங்களில் சஞ்சலமுண்டாக்குகிற விளைவுகள், நாம் தவறுசெய்துவிட்டோம், ஞானமற்றோராக, அல்லது தயவற்றவராக இருந்துவிட்டோமென்று உணரும்படி நம்மை வற்புறுத்துகின்றன.

மனமுறிவுறுவதற்குக் காரணமில்லை

நாம் எல்லாரும் தவறுசெய்கிறபோதிலும், இது மனமுறிவுறுவதற்குக் காரணமாக இருக்கத் தேவையில்லை. அரசியல் நிபுணர் எட்வர்ட் ஜான் ஃபெல்ப்ஸ் குறிப்பிட்டதாவது: “தவறுகளே செய்யாத மனிதன் பொதுவாய் எதையும் செய்கிறதில்லை.” மேலும் கிறிஸ்தவ சீஷனாகிய யாக்கோபு பின்வருமாறு கூறினார்: “நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம்.” (யாக்கோபு 3:2) ஒரு குழந்தை ஒருபோதுமே தடுமாறாமல் நடக்கக் கற்றுக்கொள்ளுமா? இல்லை, ஏனெனில் தவறுகளிலிருந்தே குழந்தை கற்றுக்கொண்டு, சமநிலையை அடையும் வரையில் விடாது தொடர்ந்து முயற்சி செய்கிறது.

சமநிலையான வாழ்க்கையை நடத்த, நாமுங்கூட நம்முடைய மற்றும் மற்றவர்களுடைய தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. நம்முடைய சொந்த சூழ்நிலைமைகளைப் பிரதிபலித்துக் காட்டக்கூடிய பலருடைய அனுபவங்களை பைபிள் கூறுவதால், அவர்கள் செய்த அதே தவறுகளைச் செய்வதை நாம் தவிர்க்க அவை நமக்கு உதவிசெய்யக்கூடும். அவ்வாறெனில், அவர்களுடைய தவறுகளிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

மனத்தாழ்மை இன்றியமையாத ஒரு பண்பு

ஒரு பாடமானது, தவறுகளைச் செய்யும் எல்லாரையும் கடவுள் கண்டனம் செய்கிறதில்லை, கூடுமானால் அவற்றைத் திருத்திக்கொள்ள மறுப்போரை மாத்திரமே அவர் நியாயந்தீர்க்கிறார். இஸ்ரவேலின் அரசன் சவுல், அமலேக்கியரை முற்றிலும் அழிக்கும்படியான யெகோவாவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமற்போனான். தீர்க்கதரிசியாகிய சாமுவேல் நேருக்குநேர் எதிர்ப்பட்டு பேசினபோது, சவுல் முதலில் காரியங்களை அற்பமானதாகக் காட்டி பின்பு மற்றவர்கள்மீது குற்றத்தைப் போட முயன்றான். தவறைத் திருத்துவதைப் பார்க்கிலும் மனிதருக்கு முன்பாகத் தன் மதிப்பை இழப்பதைப்பற்றியே அவன் அதிக அக்கறையுடையவனாக இருந்தான். ஆகவே, ‘யெகோவா அவனை அரசனாக இராதபடி தள்ளிவிட்டார்.’—1 சாமுவேல் 15:20-23, 30.

சவுலின் பதவியைப் பின்தொடர்ந்த தாவீது, வினைமையான தவறுகளைச் செய்தபோதிலும், அறிவுரையையும் சிட்சையையும் மனத்தாழ்மையுடன் ஏற்றதனால் மன்னிக்கப்பட்டார். தாவீதின் மனத்தாழ்மை அபிகாயிலின் வார்த்தைகளுக்குச் செவிகொடுக்கும்படி அவரைத் தூண்டிசெய்வித்தது. அவருடைய படைவீரர்கள் போருக்குத் தயாராக இருந்தனர். எனினும், தான் முன்பின் யோசியாமல் தீர்மானித்ததைத் தாவீது, தன் படைவீரர்களுக்கு முன்பாக ஒப்புக்கொண்டார். இத்தகைய மனத்தாழ்மை, தாவீதின் வாழ்க்கை முழுவதிலும், மன்னிப்பை நாடித்தேடவும் தன் நடைகளைத் திருத்திக்கொள்ளவும் அவருக்கு உதவிசெய்தது.

யோசியாமல் சொல்லிவிடும் சொற்களைத் திருத்தி சரிசெய்யும்படியும் மனத்தாழ்மை யெகோவாவின் ஊழியர்களை இயக்குவிக்கிறது. யூத ஆலோசனை சங்கத்துக்கு முன்பாக விசாரணை நடந்துகொண்டிருந்தபோது, பவுலை வாயில் அடிக்கும்படி பிரதான ஆசாரியன் கட்டளையிட்டார். அப்போது இந்த அப்போஸ்தலன்: “வெள்ளையடிக்கப்பட்ட சுவரே, தேவன் உம்மை அடிப்பார்,” என்று எதிர்த்துரைத்தார். (அப்போஸ்தலர் 23:3) ஒருவேளை கண்பார்வை சரியாக இராததனால், அருகில் நின்றவர்கள்: “தேவனுடைய பிரதான ஆசாரியரை வைகிறாயா?” என்று கேட்கும் வரையில், தான் யாரைப் பார்த்துப் பேசினாரென பவுல் அறியாமல் இருந்திருக்கலாம். அதன்பேரில், பவுல் உடனடியாகத் தன் தவறை ஒப்புக்கொண்டு: “சகோதரரே, இவர் பிரதான ஆசாரியரென்று எனக்குத் தெரியாது; உன் ஜனத்தின் அதிபதியைத் தீதுசொல்லாயாக என்று எழுதியிருக்கிறதே,” என்று சொன்னார். (அப்போஸ்தலர் 23:4, 5; யாத்திராகமம் 22:28) ஆம், பவுல் மனத்தாழ்மையுடன் தன் தவறை ஒப்புக்கொண்டார்.

தவறுகளை அவர்கள் ஒப்புக்கொண்டார்கள்

சிலர் தங்கள் தவறான சிந்திக்கும் முறையை மாற்றிக்கொண்டார்களென்றும் பைபிள் காட்டுகிறது. உதாரணமாக, சங்கீதக்காரனான ஆசாப்பைக் கவனியுங்கள். பொல்லாத ஆட்கள் சுகபோகத்துடன் வாழ்வதாகத் தோன்றினதால், அவர்: “நான் விருதாவாகவே என் இருதயத்தைச் சுத்தம்பண்ணினேன்” என்று கூறினார். ஆனால், யெகோவாவின் ஆலயத்துக்குச் சென்று தூய்மையான வணக்கத்தின் நன்மைகளின்பேரில் ஆழ்ந்து சிந்தித்தப் பின்பு ஆசாப் தன்னுடைய உணர்வுகளுக்கு வந்தார். மேலும், சங்கீதம் 73-ல் அவர் தன் தவறை ஒப்புக்கொண்டார்.

யோனாவுங்கூட தன் தவறான சிந்தனை தன் நோக்குநிலையைத் தெளிவற்றதாக்குவதற்கு அனுமதித்தார். நினிவே பட்டணத்தில் பிரசங்கித்தப் பின்பு, அந்த நகரத்தின் குடிமக்கள் அழியாமல் விடப்படுவதைப் பார்க்கிலும் தான் மெய்ப்பிக்கப்படுவதைப் பற்றியதிலேயே அக்கறை மிகுந்தவராய் இருந்தார். நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினபோதிலும், யெகோவா அவர்களைத் தண்டியாமல் விட்டபோது யோனா கோபமடைந்தார். ஆனால் கடவுள் அவரை திருத்தினார். தன்னுடைய நோக்குநிலை தவறானதென்று யோனா உணரலானார், அவருடைய பெயரைக்கொண்ட பைபிள் புத்தகம் நேர்மையுடன் அவருடைய தவறுகளை ஒப்புக்கொள்ளுகிறது.—யோனா 3:10–4:11.

பிசாசான சாத்தான் அல்ல, யெகோவா தேவனே தனக்குத் துயரத்தை உண்டுபண்ணினாரென தவறாக கருதிக்கொண்டு, அந்த மனிதர் யோபு தன் துன்பங்களுக்குத் தான் பாத்திரனல்லவென்று நிரூபிப்பதற்கு முயற்சி செய்தார். சோதனையின்கீழ் கடவுளுடைய ஊழியர்கள் அவருக்கு உண்மைத்தவறாதவர்களாய் நிலைத்திருப்பார்களா? என்ற இந்த மிகப் பெரிய விவாதத்தைப்பற்றி அவர் அறியாதிருந்தார். (யோபு 1:9-12) யோபு தன்னுடைய தவறைக் காணும்படி, எலிகூவும் யெகோவாவும் அவருக்கு உதவிசெய்த பின்பு, அவர் பின்வருமாறு ஒப்புக்கொண்டார்: “நான் பேசினேன், ஆனால் நான் புரிந்துகொள்ளாதிருந்தேன் . . . அதனிமித்தமே நான் சொன்னது தவறென்று ஒப்புக்கொண்டு, தூசியிலும் சாம்பலிலும் மனந்திரும்புகிறேன்.”—யோபு 42:3, 6, NW.

தவறுகளை ஒப்புக்கொள்வது கடவுளுடன் நல்ல உறவைக் காத்துக்கொள்ள நமக்கு உதவிசெய்கிறது. முன் குறிப்பிடப்பட்ட உதாரணங்கள் காட்டுவதுபோல், நம் தவறுகளை நாம் ஒப்புக்கொண்டு தவறான சிந்தனையை, யோசனையற்ற சொற்களை, அல்லது முட்டாள்தனமான செயல்களைத் திருத்தி சரிசெய்வதற்கு நம்மால் கூடியதைச் செய்தால், அவற்றிற்காக அவர் நம்மைக் கண்டனம் செய்ய மாட்டார். இந்த அறிவை நாம் எவ்வாறு பொருத்திப் பயன்படுத்தலாம்?

நம் தவறுகளைப்பற்றி ஏதாவது செய்தல்

ஒரு தவறை மனத்தாழ்மையுடன் ஒப்புக்கொண்டு அதைப்பற்றி ஏதாவது செய்வது குடும்ப இணைப்புகளைப் பலப்படுத்தக்கூடும். உதாரணமாக, ஒருவேளை களைப்பினால் அல்லது தொல்லைப்படுத்தப்பட்டதனால், பெற்றோர் ஒருவர் தன் பிள்ளைக்குச் சிட்சை கொடுப்பதில் சிறிது கடுமையாயிருந்திருக்கலாம். இந்தத் தவறைத் திருத்திக்கொள்ள மறுப்பது கெட்ட விளைவுகளைக் கொண்டுவரக்கூடும். இதற்கொத்தவாறு, அப்போஸ்தலன் பவுல் எழுதினார்: “தகப்பன்மாரே, உங்கள் பிள்ளைகளைப் புண்படுத்தாதீர்கள், ஆனால் யெகோவாவின் சிட்சையிலும் மனக் கட்டுப்பாட்டிலும் தொடர்ந்து அவர்களை வளர்த்துவருவீர்களாக.”—எபேசியர் 6:4, NW.

பால் என்ற பெயருடைய ஓர் இளம் கிறிஸ்தவன் பின்வருமாறு அன்போடு நினைவுபடுத்திக் கூறுகிறான்: “அப்பா, தான் மட்டுக்குமீறி நடந்துகொண்டதாக உணர்ந்தால் எப்பொழுதும் வருத்தந்தெரிவிப்பார். அது அவரை மதிக்கும்படி எனக்கு உதவிசெய்தது.” வருத்தந்தெரிவிப்பது ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்ப நிலைமையில் தேவையா இல்லையா என்பது அவரவரே தீர்மானிக்க வேண்டியதொன்றாகும். இருப்பினும், வருத்தத்தெரிவிப்புகள் எதிர்காலத்தில் அதைப்போன்ற தவறுகளைத் தவிர்க்கும் ஊக்கமான முயற்சிகளால் பின்தொடரப்படுவது அவசியம்.

ஒரு கணவர் அல்லது மனைவி, துயரந்தரும் ஒரு தவறைச் செய்தால் என்ன செய்வது? மனம்விட்டுக்கூறி ஒப்புக்கொள்வதும், இருதயப்பூர்வமாய் வருத்தந்தெரிவிப்பதும் மன்னிக்கும் மனநிலையும், தங்கள் அன்புள்ள உறவைக் காத்துவர உதவிசெய்யும். (எபேசியர் 5:33; கொலோசெயர் 3:13) கேஸூஸ் என்பவரான, கடுங்கோப மனப்பான்மையுள்ளவரும் 50-க்கு மேற்பட்ட வயதுடையவருமான ஸ்பானிய மனிதர் ஒருவர் தன் மனைவி, அல்பீனாவிடம் வருத்தத்துடன் குற்றத்தை ஒப்புக்கொள்வதற்கு மீறிய அகந்தையுடையவராக இல்லை. “நாங்கள் ஒருவரையொருவர் புண்படுத்திவிடுகையில் வருத்தந்தெரிவிக்கும் பழக்கம் எங்களுக்கு உண்டு, இது அன்பில் ஒருவரையொருவர் பொறுத்துக்கொள்ள எங்களுக்கு உதவிசெய்கிறது” என்று அவள் சொல்கிறாள்.

மூப்பர் ஒருவர் தவறு செய்கையில்

தவறுகளை ஒப்புக்கொண்டு உள்ளப்பூர்வமாக வருத்தந்தெரிவிப்பது, கிறிஸ்தவ மூப்பர்களுக்குங்கூட, அவர்கள் ஒத்திசைவுடன் ஒன்றாக உழைப்பதற்கும் ‘ஒருவரையொருவர் கனம்பண்ணுவதற்கும்’ உதவிசெய்யும். (ரோமர் 12:10) மூப்பர் ஒருவர் ஒரு தவறை ஒப்புக்கொள்வதற்குத் தயங்கலாம், ஏனெனில் அது, சபையில் தன் அதிகாரத்துக்குக் கேடுண்டாக்குமென அவர் பயப்படலாம். எனினும், தான் சரியென்று காட்டுவதற்கோ கவனியாமல் இருந்துவிடுவதற்கோ ஒரு தவறை அற்பமாகக் காட்டுவதற்கோ முயற்சி செய்வது அதைப்பார்க்கிலும் அதிகமாக, அவருடைய கண்காணிப்பில் நம்பிக்கை இழக்கும்படி மற்றவர்களைச் செய்விக்கக்கூடும். ஒருவேளை யோசியாமல் சொல்லிவிட்ட ஏதோ கூற்றுக்காக, மனத்தாழ்மையுடன் வருத்தந்தெரிவிக்கும் முதிர்ச்சியுள்ள ஒரு சகோதரன், மற்றவர்களின் மதிப்பைச் சம்பாதிக்கிறார்.

ஸ்பெய்னில் ஒரு மூப்பரான, ஃபெர்னான்டோ, ஒரு சம்பவத்தை நினைவுபடுத்திக் கூறுகிறார். அந்தச் சந்தர்ப்பத்தில் ஒரு வட்டார கண்காணி, மூப்பர்களாலாகிய ஒரு பெருங்கூட்டத்தின்மீது தலைமைவகித்து நடத்துகையில், கூட்டம் எவ்வாறு நடத்தப்படவேண்டும் என்பதைப்பற்றி பிழையான ஒன்றை சொல்லிவிட்டார். மரியாதையுடன் ஒரு சகோதரன் அவர் சொன்னதைத் திருத்தினபோது, அந்த வட்டார கண்காணி தான் பிழைசெய்துவிட்டதாக உடனடியாய் ஒப்புக்கொண்டார். ஃபெர்னான்டோ நினைவுபடுத்திச் சொல்வதாவது: “அந்த எல்லா மூப்பர்களுக்கும் முன்பாக அவர் தன் தவறை ஒப்புக்கொண்டதை நான் கண்டபோது, அது வெகுவாய் என் மனதைப் பாதித்தது. அந்த வருத்தந்தெரிவிப்புக்குப் பின்பு நான் அவரை மேலும் மிக அதிகமாக மதித்தேன். அவருடைய முன்மாதிரி, என் சொந்த குறைபாடுகளை நான் தெரிந்துகொள்வது எவ்வளவு முக்கியமென்று எனக்குக் கற்பித்தது.”

தவறுகளை ஒப்புக்கொள்வதற்கு விரைவுபடுங்கள்

ஒரு வருத்தந்தெரிவிப்பு, முக்கியமாய்ச் சீக்கிரத்தில் செய்யப்படுகையில், பொதுவாய் மதிக்கப்படுகிறது. உண்மையில், எவ்வளவு சீக்கிரம் நாம் ஒரு தவறை ஒப்புக்கொள்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு அது நல்லது. உதாரணமாக விளக்கிக் கூற: அக்டோபர் 31, 1992-ல், போப் ஜான் பால் II, 360 ஆண்டுகளுக்கு முன்னால் கத்தோலிக்கக் கடுமுறை விசாரணை மன்றம், கலிலியோவை, பூமி சர்வலோகத்தின் மையம் அல்லவென்று உறுதியாய்க் கூறினதற்காகத் தண்டித்ததில் “தவறாகச்” செயல்பட்டதென ஒப்புக்கொண்டார். எனினும், ஒரு வருத்தந்தெரிவிப்பை இவ்வளவு நீடித்தக் காலமாகத் தள்ளி வைப்பது அதன் மதிப்பைக் குறையச் செய்வதாயுள்ளது.

தனிப்பட்ட உறவுகளிலும் இது உண்மையாயுள்ளது. விரைவாய் வருத்தந்தெரிவிப்பது, அன்பற்ற சொல்லால் அல்லது செயலால் உண்டுபண்ணப்பட்ட மனப்புண்ணை ஆற்றிவிடக்கூடும். சமாதானம் செய்துகொள்வதில் தாமதம் செய்ய வேண்டாமென இயேசு நமக்குப் பின்வருமாறு வற்புறுத்திக் கூறினார்: “பலிபீடத்தின்மீது உன் காணிக்கையைச் செலுத்த வந்திருக்கும்போது உன் சகோதரனுக்கு உன்மேல் மனவருத்தம் உண்டென்று அங்கே நினைத்துக்கொண்டால் அவ்விடத்தில் பலிபீடத்தின் முன்னேயே உன் காணிக்கையை வைத்துவிட்டுப்போய் முதலில் உன் சகோதரனோடு சமாதானஞ் செய்துகொண்டு பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து.” (மத்தேயு 5:23, 24, தி.மொ.) நாம் காரியங்களைத் தவறாகக் கையாண்டோமென்று ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்பதுதானே, அடிக்கடி, சமாதான உறவுகளைத் திரும்ப நிலைநாட்டுவதற்குத் தேவைப்படுவதாக உள்ளது. இதைச் செய்வதற்கு எவ்வளவு நீடித்தக் காலம் நாம் காத்திருக்கிறோமோ அவ்வளவு அதிகமாக அது கடினமாகிறது.

தவறுகளை ஒப்புக்கொள்வதற்குச் சந்தோஷப்படுதல்

சவுலின் மற்றும் தாவீதின் உதாரணங்கள் விளக்கிக் காட்டுகிறபடி, நம்முடைய தவறுகளை நாம் கையாளும் முறை நம் வாழ்க்கையைப் பாதிக்கக்கூடும். சவுல் அறிவுரையைப் பிடிவாதமாய் எதிர்த்தான், அவனுடைய தவறுகள் பெருகி, முடிவில் கடவுளுடைய தயவை இழந்து அவன் மரிப்பதில் முடிவடைந்தது. தாவீது தவறுகளும் பாவங்களும் செய்திருந்தபோதிலும், திருத்தப்படுதலை அவர் மனந்திரும்புதலுடன் ஏற்று, யெகோவாவுக்கு உண்மையுள்ளவராக நிலைத்திருந்தார். (சங்கீதம் 32:3-5-ஐ ஒத்துப்பாருங்கள்.) நம்முடைய விருப்பமும் அதுவேயல்லவா?

தவறை ஒப்புக்கொண்டு திருத்திக்கொள்வதற்கான அல்லது பாவத்தைவிட்டு மனந்திரும்புவதற்கான மிகப் பெரிய நேர்பயன், கடவுள் அதை மன்னித்துவிட்டாரென அறிவதே. “எவனுடைய பாவம் மூடப்பட்டதோ . . . அவன் மகிழ்ச்சியுள்ளவன்” என்று தாவீது சொன்னார். “எவனுடைய கணக்கில் யெகோவா அக்கிரமத்தை வைப்பதில்லையோ அந்த மனிதன் மகிழ்ச்சியுள்ளவன்.” (சங்கீதம் 32:1, 2, NW) அவ்வாறெனில், தவறை ஒப்புக்கொள்வது எவ்வளவு ஞானமுள்ளது!

[பக்கம் 29-ன் படம்]

ஒரு குழந்தை ஒருபோதுமே தடுமாறாமல் நடக்கக் கற்றுக்கொள்ளுமா?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்