தற்காலத்தில் யெகோவாவின் மீட்புச் செயல்கள்
யெகோவாவைக் குறித்துப் பைபிள் இதையே நமக்குச் சொல்கிறது: “நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும்; கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்” மற்றும், “கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்க . . . அறிந்திருக்கிறார்.”—சங்கீதம் 34:19; 2 பேதுரு 2:9.
தம்முடைய மக்கள் இடுக்கணில் இருக்கையில், யெகோவா எப்படி அவர்களுக்குச் சகாயஞ்செய்கிறார்? அற்புதரீதியில் இயற்கை சக்திகளை முற்றிலும் மாற்றுவதன் மூலமாகவோ வேறு ஏதோவொரு இயற்கை கடந்த செயலின் மூலமாகவோ அவர் உதவவேண்டும் என்றநேகர் நினைக்கிற விதமாக அவர் சகாயஞ்செய்யாமல், பெரும்பான்மையர் உண்மையில் புரிந்துகொள்ள முடியாத வேறொரு சக்தியின் மூலம், அன்பின் மூலம் அவர் சகாயஞ்செய்கிறார். ஆம், யெகோவா தம்முடைய மக்களை நேசிக்கிறார். மேலும் அவர்கள் மத்தியில் அந்தளவுக்கு ஒருவரிலொருவர் பலமான அன்பை வளர்த்திருப்பதினிமித்தம், அவர்களுக்கு பெரும்பாலும் அற்புதமாகத் தோன்றுமொன்றை நிறைவேற்றக்கூடியவராக இருக்கிறார்.—1 யோவான் 4:10-12, 21.
அவசரகாலத்தில், அன்பல்ல, உணவு, மருந்து, சாதனங்களே தேவையெனச் சிலர் வாதிடலாம். நிச்சயமாகவே, உணவும் மருந்தும் சாதனங்களும் முக்கியந்தான். ஆனால், பவுல் அப்போஸ்தலன் இவ்வாறு வாதிடுகிறார்: “மலைகளைப் பேர்க்கத்தக்கதாகச் சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை. எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம்பண்ணினாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை.”—1 கொரிந்தியர் 13:2, 3.
தேவையிலிருக்கும் மக்கள் நோயினாலும் பட்டினியினாலும் மாண்டுக்கொண்டிருக்கையில், நிவாரண உணவுப்பொருட்கள் துறைமுக மேடைகளில் அழுகிக்கொண்டும் அல்லது அவற்றை எலிகள் கொறித்துத் தின்றுகொண்டிருப்பதையும் குறித்து நாம் அடிக்கடி வாசிக்கிறோம். அல்லது இன்னும் மோசமான காரியம் என்னவெனில், அதிலிருந்து தனிப்பட்ட லாபம் சம்பாதிக்கும் பேராசைப்பிடித்த பொல்லாத ஆட்களின் கைவசத்தில் அப்பேர்ப்பட்ட பொருட்கள் சிக்கியிருக்கக்கூடும். இவ்வாறு, பொருட்களைக் கிடைக்கச்செய்வது ஒரு பக்கமிருக்க, இடுக்கணிலுள்ள ஆட்கள் அதிலிருந்து பயனடைவதைக் காண்பது முற்றிலும் வித்தியாசப்பட்ட ஒரு காரியமாக இருக்கிறது. மெய்யன்பும் அக்கறையும் வித்தியாசத்தை உண்டுபண்ணக்கூடும்.
செயலில் காட்டப்படும் அன்பு
செப்டம்பர் 1992-ல், 55,000 மக்கள்தொகை அடங்கிய ஹவாய் தீவிலுள்ள கவாயை இனீகி புயல் தாக்கிற்று. மணிக்கு 210 கிலோமீட்டர் வேகத்தில் அடிப்பதாய், மணிக்கு 260 கிலோமீட்டர் வீச்சலை வரை சென்று, 2 பேரை மாய்த்து, 98 பேரைக் காயப்படுத்தி, 75 சதமான வீடுகளைச் சேதப்படுத்தி, 8,000 பேரை வீடிழக்கச் செய்து, 100 கோடி டாலர் மதிப்புள்ள சேதத்தை உண்டுபண்ணியது. இச்சிறு தீவில் வாழ்ந்துவரும் மக்களில், யெகோவாவின் சாட்சிகள் ஆறு சபைகளில் சுமார் 800 பேர் இருந்தனர். அவர்கள் எப்படிச் சமாளித்தனர்?
இனீகி தாக்குவதற்கு முன், பயணக் கண்காணியின் வழிநடத்துதலினால் சபை மூப்பர்கள், சபைகளிலுள்ள எல்லா உறுப்பினர்களும் கடுந்தாக்குதலுக்கு ஆயத்தமாக, பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் இருக்கின்றனரா என்பதை நிச்சயிக்க, அவர்களை முன்னமே சென்று சந்தித்திருந்தனர். இத்தகைய அன்புகலந்த அக்கறை சாட்சிகளிடையே படுகாயமோ இறப்போ ஏற்படுவதிலிருந்து தடுப்பதற்கு ஏதுவாக இருந்தது.—ஏசாயா 32:1, 2 ஒத்துப்பாருங்கள், திருத்திய மொழிபெயர்ப்பு.
பேச்சுத்தொடர்பும் போக்குவரத்தும் வெகுவாகப் பாதிக்கப்பட்டாலுங்கூட, புயலுக்குப் பின்னர், ஹானலுலுவில் உள்ள உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸையிட்டி கிளை அலுவலகத்தின் மூன்று பிரதிநிதிகள் புயல் தாக்கிய இடத்திற்கு முதலாவதாக வந்தடைந்தனர். இவர்களுக்கு இராணுவமல்லாத பாதுகாப்பு ஏற்பாட்டைச் சேர்ந்த ஆட்கள் கவாய்-க்கு விமானத்தில் பறந்துவர விசேஷ அனுமதி கொடுத்தனர். வந்தவுடன், இவர்கள் உள்ளூரில் உள்ள சாட்சிகளைச் சென்று சந்தித்து, நிவாரணப்பணிக்கான திட்டம் தீட்ட, கூட்டம் ஒன்றை மறுநாள் காலையில் ஏற்பாடு செய்தனர். தேவைகளை உய்த்தறிந்து ஹானலுலுவிலுள்ள கிளை அலுவலகத்தின் மூலம் தேவையான பொருட்களைப் பெற நிவாரண ஆலோசனை குழு ஒன்று அமைக்கப்பட்டது. இவர்கள் இடையறாமல் உழைத்து, தேவையிலிருப்பவர்களுக்குப் பொருட்களைக் கொடுக்கவும் சேதமடைந்த வீடுகளைத் துப்புரவுசெய்து செப்பனிடும் வேலையையும் முன்னின்று செய்தனர்.
பிற தீவுகளிலுள்ள சாட்சிகள் தேவையிலிருந்த தங்கள் சகோதரர்களுக்கு உடனடியாகப் பிரதிபலித்தனர். கவாயிலிருந்த விமான நிலையம் திறந்தவுடன், உதவிபுரிய 70 சாட்சிகள் விமானத்தில் வந்தனர். மின் ஆக்கிகள், சிறு ஸ்டவ்கள், விளக்குகள், மேலும் ஆகாரம் ஆகியவை உட்பட 1,00,000 டாலர் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன. அத்தீவிலிருந்த ஒரு ராஜ்ய மன்றம் டெப்போவாகப் பயன்படுத்தப்பட்டது. என்றாலும், அதிலுள்ளவற்றைக் களவாடிக்கொண்டு போய்விடுவார்களோ என்ற ஒருவித கிலி இருந்தது. அப்போது, ராஜ்ய மன்ற வாகன நிறுத்துமிடத்திற்கு ஒருசில இராணுவ லாரிகள் வந்தன, டிரைவர்கள் தங்கள் லாரிகளை அங்கு நிறுத்தலாமா என்று விசாரித்தனர். அந்த லாரிகளைப் பார்த்துக்கொள்ள நிறுத்தப்பட்ட இராணுவ வீரர்களால், நிவாரணப் பொருட்கள் களவாடும் பிரச்னையும் இல்லாமற்போயிற்று.
சகோதரர்கள் மின் ஆக்கிகளை வீடு வீடாய் எடுத்துச் சென்று, மக்கள் தங்கள் குளிர்பதனப் பெட்டிகளைப் பயன்படுத்த, ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு, மூன்று மணிநேரங்கள் அவற்றை ஓடவிட்டனர். அநேக வீடுகளுக்குச் சென்று துப்புரவு செய்யவும் சிதைவைச் செப்பனிடவும் சகோதரர்கள் தொகுதிகளாக அனுப்பப்பட்டனர். இவர்கள், முன்பு பயங்கரமாக எதிர்த்த ஒரு கணவரைக் கொண்ட சகோதரியின் வீட்டில் வேலைசெய்தபோது, அக்கணவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு இவற்றையெல்லாம் பார்த்து ஒன்றும் செய்ய இயலாமல் அழுதபடி நின்றார். அந்தப் பெருநிலப் பகுதியிலிருந்து விஜயம் செய்த ஒரு நபர் வேலைசெய்து கொண்டிருந்த இன்னொரு சாட்சித் தொகுதியைக் கண்டதும் அவர்களுடைய நடத்தையினாலும் ஒழுங்கமைப்பினாலும் பெரிதும் ஈர்க்கப்பட்டு அவர்களை அணுகி, தங்களை எது இவ்வளவு வித்தியாசப்பட்ட ஆட்களாக இருக்கச் செய்ததெனக் கேட்டார். கடவுளிடமும் சக கிறிஸ்தவர்களிடமும் உள்ள தங்களுடைய அன்புதானே அவ்வாறு இருக்கச்செய்ததென ஒரு சகோதரர் விளக்கிச் சொன்னபோது, அவர் “நான் எப்படிக் கடவுளை அறிந்துகொள்ள முடியும்?” என மாறுத்தரமாகக் கேட்டார். (மத்தேயு 22:37-40) பிறகு கூடுதலாக, “நீங்கள் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்டிருப்பதால், நான் ஃப்ளாரிடா திரும்பியவுடன் ஒருவேளை என்னுடைய வீட்டில் யாராவது ஒருவர் எனக்காகக் காத்திருக்கும்படி செய்வீர்கள்!” என அவர் சொன்னார்.
ஆக, யெகோவாவின் சாட்சிகள் கவாயிலுள்ள 295 வீடுகளைத் துப்புரவு செய்வதிலும் செப்பனிடுவதிலும் உதவிபுரிந்தனர். இவற்றில், 207 வீடுகளில் சொற்ப செப்பனிடும் வேலைகள் இருந்தன. ஆனால் 54 வீடுகள் வெகுவாகச் சேதமடைந்தும், 19 வீடுகள் முற்றிலுமாக நாசப்படுத்தப்பட்டும் இருந்தன. ஒவ்வொருவரும் கவனிக்கப்பட்டனரா என்பதை நிச்சயிக்க அத்தீவில் தெரிந்த ஒவ்வொரு சாட்சியையும் சென்று பார்ப்பதும் அவர்களுடைய பணியில் உட்பட்டிருந்தது. ஒரு சகோதரிக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டபோது புத்த மதத்தைச் சேர்ந்த அவளுடைய அயலார் ஒருவர், தன் மதத்தொகுதியிலிருந்து தனக்கு ஒரு டீ பைகூட பெறவில்லை எனத் தெரிவித்தார். இன்னொரு பெண், தன்னுடைய வீட்டைச் சாட்சியணி ஒன்று துப்புரவு செய்தப்பிறகு சொன்னாள்: “நீங்கள் என்னுடைய வீட்டிற்கு நெடுங்காலமாக வந்துகொண்டிருக்கிறீர்கள். நான் உங்களை நல்ல அயலாரெனத்தான் எண்ணினேன். ஆனால் அயலார்பேரில் உள்ள அன்பை இவ்வாறு நீங்கள் வெளிக்காட்டுவது, உங்கள் அமைப்பைப் பற்றி பேசுகிறது. உங்களுடைய சகல அயரா உழைப்புக்கும் நன்றி.”
நிவாரணப் பொறுப்பிலிருந்தவர்கள் தங்களுடைய அனைத்து சக கிறிஸ்தவர்களின் பொருளாதார தேவைகளைக் கவனிக்கும்போதே, அவர்களுடைய ஆவிக்குரிய நலனின்பேரிலும் அக்கறையுள்ளவர்களாயிருந்தனர். புயலுக்குப் பின்னர், சுமார் இரண்டே நாட்களில், பல்வேறு சபைகள் தங்கள் கூட்டங்களை நடத்த ஆரம்பித்துவிட்டனர். விரைவில், திரும்பவும் சிறிய புத்தகப் படிப்புத் தொகுதிகள் நடக்க ஆரம்பித்தன. இதர தீவுகளிலிருந்து வந்த பத்து மூப்பர்கள், அத்தீவிலுள்ள ஒவ்வொரு சாட்சியையும் போய் பார்த்து, மேய்ப்புச் சந்திப்புகளைச் செய்ய, உள்ளூர் மூப்பர்களுக்கு உதவ கவாய்-க்கு வந்தனர். அடுத்த ஞாயிறு, எல்லா ஆறு சபைகளும் சேர்ந்து காவற்கோபுர படிப்பைப் கொண்டிருந்தன, நிவாரண ஆலோசனை குழு உறுப்பினர் ஒருவர் நிவாரண முறைகளின் பேரில் ஒரு 30-நிமிட சொற்பொழிவாற்றினார், முடிவு சொற்பொழிவு ஆற்ற ஹானலுலுவிலிருந்து வந்திருந்த கிளை அலுவலக குழு உறுப்பினர் ஒருவர், 30-நிமிடத்திற்குப் பேசினார். நிகழ்ச்சிகளை நேரில் கண்ட ஒருவர் கொடுத்த ஓர் அறிக்கை கூறுகிறது: “கொடுக்கப்பட்ட சிறந்த வழிநடத்துதலினால் எல்லாரும் ஆறுதலடைந்தனர். மேலும் தங்களுடைய இதர பிரச்னைகளைச் சமாளிக்க ஆவிக்குரிய ரீதியில் தயாராக இருந்ததாக உணர்ந்தனர். நிகழ்ச்சி முடிந்ததும் கூடியிருந்த அநேகருடைய கண்களிலிருந்தும் நீர் சொரிந்தது, மேலும் அவர்கள் தாங்களாகக் கைதட்ட தொடங்கினர்.”
உலகளாவிய சகோதரத்துவம்
அத்தகைய அன்பும் கரிசனையும் உலக முழுவதிலுமுள்ள யெகோவாவுடைய மக்களின் அடையாளக் குறியாக இருக்கிறது. ஓராண்டுக்கு முன்பு வால் என்னப்பட்ட சூறாவளி, மேற்கு சமோவாவில் அடித்தபோது, அது பெரும் நாசத்தை உண்டாக்கியது. ஆனால் உலகின் மற்றப் பாகங்களிலுள்ள யெகோவாவின் சாட்சிகள் வெள்ளத்துக்கு பலியான ஆட்களுக்கு உதவிசெய்ய உடனே அங்கு விரைந்தனர். பின்னர், தங்கள் வீடுகளைச் செப்பனிடுவதற்கு, யெகோவாவின் சாட்சிகள் உட்பட எல்லா மதங்களுக்கும் அரசாங்கம் உதவித்தொகை அளித்தபோது, சாட்சிகள் கிடைத்த உதவித்தொகைகளை அவர்களிடம் திரும்பக் கொடுத்து, சேதமடைந்த எல்லாமே ஏற்கெனவே சரிசெய்யப்பட்டன எனவும் இந்த உதவித்தொகைகளைக் கொண்டு சில அரசு கட்டிடங்களைச் செப்பனிட பயன்படுத்துமாறும் கோரி ஒரு கடிதத்தை எழுதிக்கொடுத்தனர். அவர்கள் செய்த காரியம் உள்ளூர் செய்தித்தாளில் அறிக்கையிடப்பட்டது. இதை அரசதிகாரி ஒருவர் கவனித்து, தன்னுடைய சொந்த சர்ச்சை நினைத்துத் தனக்கு மிகவும் கேவலமாக இருக்கிறதென ஒரு சாட்சியிடம் கூறினார். ஏனெனில், சூறாவளியின்போது சேதமடைந்த எல்லா கட்டிடங்களையும் காப்பீட்டுத்தொகையைக் கொண்டு செப்பனிட்டபோதிலும் அரசிடமிருந்து அவர்கள் பணம் வாங்கினர்.
அதேவிதமாகவே, செப்டம்பர் 1992-ல், தென்கிழக்குப் பிரான்ஸிலுள்ள யூவாஸ் ஆறு நீர்ப்பெருக்கெடுத்து வாஸான்லேராமெணையும் அதைச் சுற்றியிருந்த 15 இடங்களையும் சேதப்படுத்தியபோது சாட்சிகள் உடனடியாகப் பிரதிபலித்தனர். ஒரே இரவில், அவ்வெள்ளத்தால் 40 பேர் மாய்ந்து, 400 வீடுகள் அழிக்கப்பட்டு, இன்னும் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்து, ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நீரோ மின்சாரமோ இல்லாமற்போகும்படி செய்யப்பட்டன. மறுநாள் அதிகாலையில், உள்ளூர் சபைகளிலிருந்த சாட்சிகள் தங்களுடைய சகோதரர்களுக்கு உதவ முதலாவது வந்தனர். அப்பகுதியிலுள்ள சாட்சிக் குடும்பங்கள், தங்க இடம் தேவைப்பட்டவர்களுக்கு அன்போடு தங்கள் வீடுகளில் இடங்கொடுத்தனர். நூற்றுக்கணக்கான சாட்சிகள் எல்லா இடத்திலுமிருந்தும் உதவ வந்தனர். அண்மையிலிருந்த ஆரின்ஜ் நகரில் நிவாரண ஆலோசனை குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இது நான்கு வாலன்டியர் தொகுதிகளின் முயற்சிகளை ஒருங்கிணைத்துச் செயல்படுத்துவதற்கென ஸ்தாபிக்கப்பட்டது. இவர்கள் பாதிக்கப்பட்ட எல்லா இடங்களிலும் வீடுகளில் சேற்றை அப்புறப்படுத்தி, வீடுகளைத் துப்புரவுசெய்து, சேற்றில் ஊறிக்கிடந்த ஏராளமான துணிமணிகளை எடுத்துத் துவைத்துப்போட்டு, உணவு தயாரித்துக் கொடுத்து குடிநீருக்கும் ஏற்பாடுசெய்தனர். உள்ளூரிலிருந்த ஒரு பள்ளியையும் பல்வேறு நகராட்சிக் கட்டிடங்களையுங்கூட துப்புரவு செய்ய அவர்கள் முன்வந்தனர். அவர்களுடைய அயரா முயற்சிகளுக்குத் தங்களுடைய சகோதரர்களும் அங்கிருந்த மக்களும் ஒரே மாதிரியாகப் போற்றுதல் தெரிவித்தனர்.
யெகோவாவின் சாட்சிகள், வேறநேக இடங்களில், மற்ற எல்லாரையும் போல வெள்ளங்கள், புயல்கள், பூகம்பங்கள் போன்ற சேதங்களினால் அல்லற்பட்டிருக்கின்றனர். இவை எதிர்பார்க்காத அல்லது தடுக்கமுடியாத நிலைமைகளின் விளைவுகளாக இருக்கின்றன என்றறிந்தவர்களாக, அவர்கள் கடவுளையோ வேறு எவரையோ குற்றஞ்சாட்டுவது கிடையாது. (பிரசங்கி 9:11, NW) மாறாக, எவ்வித கஷ்டமான நிலைமைகள் ஏற்பட்டாலும், தங்கள் சக விசுவாசிகளின் சுய-தியாகமுள்ள அன்பு, ஆபத்திலிருந்து விடுவிக்க கைகொடுக்குமென அவர்கள் நம்புகின்றனர். இத்தகைய அன்புகனிந்த செயல்கள், அவர்கள் எல்லாருக்கும் பொதுவாக இருக்கும் மதத்தின் விளைபயனாகவே இருக்கின்றன. சீஷன் யாக்கோபு விளக்கிக் காட்டுகிறார்: “ஒரு சகோதரனாவது சகோதரியாவது வஸ்திரமில்லாமலும் அநுதின ஆகாரமில்லாமலும் இருக்கும்போது, உங்களில் ஒருவன் அவர்களை நோக்கி: நீங்கள் சமாதானத்தோடே போங்கள், குளிர்காய்ந்து பசியாறுங்கள் என்று சொல்லியும், சரீரத்திற்கு வேண்டியவைகளை அவர்களுக்குக் கொடாவிட்டால் பிரயோஜனமென்ன? அப்படியே விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும்.”—யாக்கோபு 2:15-17.
உண்மையான பாதுகாப்பின் மூலக்காரணர்
யெகோவாவின் சாட்சிகள், கடவுள் இடைமறித்து ஏதோவொரு விதத்தில் அற்புதங்களைச் செய்வாரென எதிர்நோக்கியிருப்பதற்கு மாறாக, தங்களுடைய உலகளாவிய கிறிஸ்தவ சகோதரத்துவத்தில் பாதுகாப்புக் காணப்படுகிறது என்பதை அறிந்தவர்களாக இருக்கின்றனர். உண்மையில், இன்னல் காலங்களில் அச்சகோதரத்துவம் சாதிப்பது, பெரும்பாலும் அற்புதமாகவே இருக்கிறது. அவர்கள் மத்தேயு 17:20-ல் காணப்படும் இயேசுவின் வார்த்தைகளை ஞாபகப்படுத்திக் கொள்கின்றனர்: “கடுகு விதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்; உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது.” ஆம், அன்புகலந்த மெய்யான கிறிஸ்தவ விசுவாசம் செயலில் காட்டப்படும்போது, மிகப் பெரிய இடர்களும் மறைந்துவிடுகின்றன.
இந்த நிலையற்ற, நெருக்கடியான காலங்களில் உலகம் முழுவதிலுமுள்ள யெகோவாவின் மக்கள் தங்கள் கடவுள் கைகொடுத்து உதவுவதை உணருகின்றனர். சங்கீதக்காரனைப் போல அவர்கள் உணருகின்றனர்: “சமாதானத்தோடே படுத்துக்கொண்டு நித்திரைசெய்வேன்; கர்த்தாவே, நீர் ஒருவரே என்னைச் சுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர்.” (சங்கீதம் 4:8) நம்பிக்கையோடு, அதிவிரைவில் செய்துமுடிக்க வேண்டிய இவ்வேலையின்மீது தங்கள் கவனத்தை ஒருமுகப்படுத்துகின்றனர்: “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.” (மத்தேயு 24:14) மேலும், சமாதானமான, நீதியுள்ள புதிய உலகைப் பற்றி யெகோவா கொடுத்த வாக்கு கைகூடுமென நம்பிக்கையோடு அவர்கள் எதிர்நோக்கியிருக்கின்றனர். இவ்வுலகில், மனிதனாலோ இயற்கையாலோ உண்டாகும் எவ்வித சேதங்களையும் இனிமேலும் அனுபவிக்கமாட்டார்கள்.—மீகா 4:4.
[பக்கம் 12-ன் படங்கள்]
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆட்களுக்கு உதவிசெய்ய சாட்சிகள் எல்லா இடங்களிலுமிருந்து வந்தனர்