ராஜ்ய பிரஸ்தாபிகளின் அறிக்கை
“யெகோவாவின் நாமம் ஒரு பலத்த கோட்டை”
நிலையற்ற காலங்களில் நாம் வாழ்கிறோம். நிலையானதுபோல் தோன்றுகிற நம்முடைய வாழ்க்கை, எச்சரிப்பே இல்லாமல் ஒரே இரவிலே மாறிவிடலாம். சிலர் அதை உணருவதற்கு முன்பே பேராபத்தில் இருப்பதாகத் தங்களைக் கண்டிருக்கிறார்கள். அரசியல் கிளர்ச்சி, மூர்க்கத்தனமான எதிரி, இயற்கைப் பெருஞ்சேதம், அல்லது மோசமான வியாதியிலிருந்தோ ஆபத்து வரலாம். காரியம் எதுவானாலும்சரி, தன்னுடைய வாழ்க்கை ஆபத்திலிருக்கையில் ஒரு கிறிஸ்தவன் எங்கே திரும்பவேண்டும்?
உவாட்ச் டவர் சொஸையிட்டியின் கிளையலுவலகங்கள் ஒன்றில் வசித்துவருகிற டேவிட் என்ற ஒரு மிஷனரி, அந்தக் கேள்விக்கான பதிலை திகிலூட்டும் ஓர் அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்டார். நியமிக்கப்பட்ட ஓட்டுநராக, வெளியில் தங்கி வேலைசெய்யும் பெத்தேல் ஊழியர்கள் (கிளையலுவலகத்திற்கு வெளியில் வசிக்கும் வாலண்டியர்கள்) சிலரை ஏற்றிச்செல்வதற்காக ஓர் அதிகாலை நேரத்தில் கிளம்பினார். இன்னும் இருட்டாக இருந்தது. அவர் ரோஸாலியாவை ஏற்றிக்கொண்டு ஒரு காவல் நிலையத்தைக் கடந்துகொண்டிருந்தபோது, முதல் துப்பாக்கிச் சூட்டை கேட்டார்.
பிறகு காரியங்கள் வேகமாக சம்பவித்தன. ஒரு பெரிய பட்டாசு வெடிப்பதைப்போன்ற ஒரு சத்தத்தை அவர் கேட்டார். டயர்கள் ஒன்றிலிருந்து காற்று உஸ் என்ற ஒலியெழுப்பிக்கொண்டு வருவதை உணர்ந்தார். ஒரு படைவீரன் சாலையின் நடுவில் நின்றுகொண்டு அவரைநோக்கி நேராக சுழல் துப்பாக்கியால் குறிவைத்துக்கொண்டிருப்பதை அவர் திடீரெனப் பார்த்தார். கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் மூன்று காரியங்கள் நிகழ்ந்தன: சரமாரியான துப்பாக்கிக் குண்டுகள் ஜீப்பின் பக்கத்தை துளைத்து, ஜன்னல்களைச் சின்னாபின்னமாக்கின; டேவிட்டும் ரோஸாலியாவும் குனிந்துகொண்டனர்; அந்தப் படைவீரன் காற்றுத் தடுப்பு வழியாக கண் உயரத்தில் சுட்டான்.
திரும்பத் திரும்ப குண்டுகளினால் ஜீப் தாக்கப்பட்டதால், இன்னும் கீழே சாய்ந்துகொண்டிருக்கையிலேயே தன்னால் முடிந்தளவுக்கு டேவிட் மிக நன்றாக பிரேக் போட்டார். டேவிட், ரோஸாலியா ஆகிய இருவரும் தாங்கள் மரிக்கப்போவதாக எண்ணினர். யெகோவாவிடம் சத்தமாக அவர்கள் ஜெபித்து, தங்களை அவர் காக்கும்படி வேண்டினர். குடும்பத்தினர் அவளுடைய மரணத்தைக்குறித்து கேள்விப்படும்போது எப்படிப் பிரதிபலிப்பார்கள் என்று அந்தச் சமயங்களில் அவள் நினைத்ததாக ரோஸாலியா பிறகு சொன்னாள்!
இன்னும் உயிருடனிருக்கிறார்கள்!
துப்பாக்கிச் சூட்டின் சத்தமும் கண்ணாடி நொறுங்குவதும் கடைசியாக முடிவுக்குவந்தன. டேவிட் ரோஸாலியாவைப் பார்த்தார். அவளுடைய முதுகின்மீது ஒரு சிறிய, வட்டமான இரத்தக்கறையை அவர் பார்த்தபோது, ஏறக்குறைய அவருடைய இருதயமே நின்றுவிட்டது. குண்டு அல்ல, ஆனால் பறந்துவந்த கண்ணாடித் துண்டுதானே அங்கு பதிந்திருந்தது. நொறுங்கிவிழுந்த கண்ணாடியால் ஏற்பட்ட கீறல்களினால் அவளுடைய முழங்கால்களிலிருந்து இரத்தம் வடிந்துகொண்டிருந்தது, மற்றபடி அவள் நன்றாகத் தோன்றினாள்.
வெள்ளைக் கைப்பட்டைகளுடன் இராணுவச் சீருடையணிந்த ஆட்கள் ஜீப்பிடம் வந்து, கைகளை உயர்த்திக்கொண்டு வெளியே வரும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டனர். உயர் பதவி வகிப்பவராகத் தோன்றிய ஒருவர், படைவீரனிடம் திரும்பி இவ்வாறு சொன்னார்: “பொதுமக்களைச் சுட வேண்டாம் என்று உங்களிடம் சொன்னோம்.” அந்தப் படைவீரன் தான் துப்பாக்கிச் சூடுகளைக் கேட்டதாகவும் அவை ஜீப்பிலிருந்து வந்தவை என்று நினைத்ததாகவும் வாதாடிக்கொண்டு சாக்குப்போக்குகள் சொன்னார்.
டேவிட், ரோஸாலியாவையும் தன்னையும் யெகோவாவின் சாட்சிகளாக அடையாளங்காட்டியபோது, பிரதிபலிப்பு சாதகமாய் இருந்தது. தான் என்ன செய்துகொண்டிருந்தார் என்பதை அவர் விளக்கினார், ஆனால் படைவீரர்கள் அவர்களை இன்னும் காவலில் வைக்க விரும்பினர். அதிகாலை நேரத்தில், சுயநாட்டமுள்ள இராணுவக் கூட்டத்தினர் அரசாங்கத்தைக் கவிழ்க்கத் திட்டமிட்டிருந்ததாகவும் டேவிட்டும் ரோஸாலியாவும் ஜீப்பில் கடந்துபோனபோது, இந்தப் படைவீரர்கள் காவல் நிலையத்தைக் கைப்பற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாகவும் தோன்றுகிறது.
ரோஸாலியா அதிகமாக நிலைகுலைந்து போய்விட்டாள், ஆனால் தாங்கள் விடுவிக்கப்படுவதற்கு டேவிட் மன்றாடினபோது அமைதலுடன் தைரியமாய் இருந்தாள். கடைசியில் அவர்கள் போகும்படி அனுமதிக்கப்பட்டனர்—ஜீப் இல்லாமல். அருகிலுள்ள ஒரு சாலைக்கு அவர்கள் வந்து கிளையலுவலகத்திற்குச் செல்ல பஸ் பிடிக்க வேண்டியதாயிருந்தது. அங்குள்ள மருத்துவமனை ரோஸாலியாவைக் கவனித்துக்கொண்டது.
ஜெபத்தின் வல்லமை
இந்த அனுபவத்திலிருந்து டேவிட் ஒன்றைக் கற்றுக்கொண்டார்—ஊக்கமான ஜெபத்தின் வல்லமையை ஒருபோதும் குறைவாக மதிப்பிடக்கூடாது, யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் என்று தைரியத்துடன் அடையாளங்காட்டுவது அடிக்கடி பாதுகாப்பாய் இருக்கிறது என்பதை ஒருபோதும் மறக்கக்கூடாது. “யெகோவாவின் நாமம் ஒரு பலத்த கோட்டை. நீதிமான் அதற்குள் ஓடி அடைக்கலம் பெறுகிறான்,” என்பது சொல்லர்த்தமாகவே உண்மையாய் இருக்கலாம்.—நீதிமொழிகள் 15:29; 18:10, NW; பிலிப்பியர் 4:6.