உலக மதங்களின் பேரவை அது வெற்றியடையுமா?
நூற்றுக்கணக்கான மதத் தலைவர்கள், 1993-ன் கோடையில், அ.ஐ.மா.-விலுள்ள இல்லினாய்ஸ், சிகாகோவில் நடத்தப்பட்ட உலக மதங்களின் இரண்டாவது பேரவையில் கூடிவந்திருந்தனர். புத்த, கிறிஸ்தவமண்டல, இந்து, யூத மற்றும் இஸ்லாமிய மதங்கள் அனைத்தும் பிரதிநிதித்துவம் செய்யப்பட்டன. சூனியக்காரிகளும், பெண்தெய்வத்தை வணங்குபவர்களும்கூட வந்திருந்தனர். போருக்கு முடிவைக் கொண்டுவருவதில் அவர்களுடைய பங்கைப் பற்றி அவர்கள் கலந்துரையாடினர். பேரவையின் அக்கிராசனர், “இன்று உலகில் நடக்கும் பெரிய மோதல்களில் மூன்றில் ஒரு பங்கு மதம் சார்ந்தவையாக இருக்கின்றன” என்று ஒத்துக்கொண்டார்.
நூறாண்டுகளுக்கு முன்பு
அந்தப் பேரவைக் கூட்டம் வெற்றியடைந்ததா? நூறாண்டுகளுக்கு முன்பு, உலக மதங்களின் முதல் பேரவையில் என்ன நடந்தது என்பதை ஒரு பார்வையிடுங்கள். அதுவும் 1893 கோடையில், சிகாகோவில் நடத்தப்பட்டது. 40-க்கு மேற்பட்ட மதங்கள் பிரதிநிதித்துவம்செய்யப்பட்டன. உலக மதங்களின் பேரவைக் குழு இவ்வாறு ஒத்துக்கொண்டது: 1893-ல் வந்திருந்தோர், “ஒத்துணர்வு, சமாதானம், முன்னேற்றம் ஆகியவற்றிற்கு உதவும் சர்வதேச கலப்புவிசுவாசக் கூட்டங்களின் தொடர்வரிசைக்கு இதுவே முதலாவது என்று நம்பினர். அது அவ்வாறு இருக்கவில்லை. மத சகிப்புத்தன்மையும் வன்முறையும் கடந்த 100 ஆண்டுகளின் போர்களுடன் சம்பந்தப்பட்டிருக்கின்றன, இன்றும் அவ்வாறு தொடர்கின்றன.” தோல்வி ஏன்? ஏனென்றால், கலப்புவிசுவாசமென்ற முழுக் கருத்தும் கடவுளால் அங்கீகரிக்கப்படவில்லை. பைபிள் சொல்கிறது: “அவிசுவாசிகளுடன் பொருத்தமின்றி ஒரே நுகத்தடியிலே இணைந்திருக்காதீர்கள்.”—2 கொரிந்தியர் 6:14-17, NW.
தெளிவாகவே, சீயோனின் காவற்கோபுரம் (Zion’s Watch Tower), செப்டம்பர் 1893 வெளியீடு, உலக மதங்களின் பேரவைக்கு வேதப்பூர்வமான சான்று இல்லை என்பதை பின்வருமாறு சொன்னபோது சிறிது கிண்டலாக வெளிப்படுத்திக் காட்டியது: “பாபிலோன் மற்றும் மற்ற பூர்வீக நகரங்களின் இடிபாடுகளிலிருந்து பல அதிசயமான சுட்ட களிமண் உருளைகளை அவர்கள் தோண்டி எடுத்திருக்கின்றனர். ஆனால் சில இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. . . . மோவாபியர்கள், அம்மோனியர்கள், ஏதோமியர்கள் ஆகியோருடைய ‘மதங்களின் பேரவையை’ மோசேயும் யோசுவாவும் ஒன்று கூட்டினார்கள் என்று சொல்லும் எதையும் அவர்கள் கண்டுபிடித்திருக்கவில்லை . . . தாகோன் பூசாரிகளின் பிரதிநிதிக் குழுவை சீலோவிற்கு வரவழைத்து யெகோவாவின் ஆசாரியர்களோடு ஒரு மாநாட்டை நடத்தும்படி, வலிமைமிக்க முதிர்வயதான சாமுவேல், காத் மற்றும் எக்ரோனுக்கு செய்தியனுப்பினதைப் பற்றி சொல்லும் எதையும் அவர்கள் கண்டுபிடித்திருக்கவில்லை . . . ஒருவருக்கொருவரின் மதத்திற்கு பரஸ்பர மரியாதையை மேம்படுத்தும் நோக்கத்தோடு, பாகால் மற்றும் மோளோகின் பூசாரிகளுடன் அவரவர்களுடைய விசுவாசங்களின் தத்துவக்கூறுகளைப் பற்றி ஒருவார கலந்துரையாடல் செய்வதற்காக ஒரு ‘மாநாடு’ நடத்துவதற்கு இடைக்கச்சை அணிந்த முதிர்வயதான எலியா முன்மொழிந்தார் என்று சொல்லும் எதையும் அவர்கள் கண்டுபிடித்திருக்கவில்லை.”
கடவுளுடைய ராஜ்யம்—ஒரே நம்பிக்கை
உலக மதங்களின் பேரவை வெற்றியடையாது. செய்தித்தாள்களும் ஆஜரானவர்களும் பேரவையைப் பற்றி “ஒழுங்கின்மை,” “கலவரம்,” “பெருங்குழப்பம்” போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தினர். ஓர் அறிக்கையின் பிரகாரம், அரசியல் பாகுபாடுகளினால் உண்டான இரண்டு கிளர்ச்சிகளை அமைதிப்படுத்துவதற்கு போலீஸும்கூட தலையிடவேண்டியதிருந்தது. 1952-ன் பதிவு ஒன்றில், பேரவை அதன் குறிக்கோள்களில் ஒன்றாக இவ்வாறு பட்டியலிட்டிருந்தது: “எல்லா மக்கள் மத்தியிலும் உலக சமாதானம் மற்றும் ஒத்துணர்வை நிலைநாட்டுவதில் ஐக்கிய நாடுகளோடு சேர்ந்து செயல்படுவதற்கு மதங்களின் ஒரு நிரந்தரமான பேரவையை நிறுவுதல்.” மாறாக, இயேசு தம்முடைய ராஜ்யம் இந்த உலகத்தின் பாகமாய் இல்லை என்று சொன்னார். மனிதகுலத்தின் பிரச்னைகளுக்கு ஒரே தீர்வு கடவுளுடைய ராஜ்யம் என்று பைபிள் குறிப்பிடுகிறது.—தானியேல் 2:44; யோவான் 18:36. ◆