“தேவபயம்” மாவட்ட மாநாட்டுக்கு வாருங்கள்
பூர்வ காலங்களில் யெகோவாவின் ஊழியர்கள் மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி ஒவ்வொரு வருடமும் மூன்றுமுறை ஒருசில பண்டிகைகளுக்காக கூடிவர வேண்டியிருந்தது. இவை மகிழ்ச்சியான, ஆவிக்குரிய விதத்தில் கட்டியெழுப்பும் சந்தர்ப்பங்களாக இருந்தன.—உபாகமம் 16:16.
அதேபோல நவீன காலங்களிலும் யெகோவாவின் ஊழியர்கள் ஒவ்வொரு வருடமும் மூன்றுமுறை கூடிவருகின்றனர்: விசேஷித்த அசெம்பிளி தினம், இரண்டு-நாள் வட்டார அசெம்பிளி மற்றும் மூன்று அல்லது நான்கு-நாள் மாவட்ட மாநாடு. 1994 ஊழிய ஆண்டின்போது, யெகோவாவின் சாட்சிகள் “தேவபயம்” மாவட்ட மாநாட்டுக்குக் கூடிவருவார்கள்.
தேவபயத்தின் முக்கியத்துவத்தைப்பற்றி கடவுளுடைய வார்த்தை எவ்வித சந்தேகத்திற்கும் இடமளிப்பதில்லை. அவ்வகையான பயம், சுமார் 200 தடவைகள் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. “கர்த்தருக்குப் பயப்படுகிறதினால் மனுஷர் தீமையை விட்டு விலகுவார்கள்,” என்று சொன்ன நீதிமொழிகள் 16:6-ல் காண்கிறபடி, தேவபயம் ஒரு பாதுகாப்பாக இருக்கிறது. ஏன், தேவபயமே ஞானத்தின் ஆரம்பம் என்று சங்கீதம் 111:10-ல் நாம் சொல்லப்படுகிறோம்!
தேவபயத்தில் இரண்டு அம்சங்கள் இருக்கின்றன என்று சொல்லப்படலாம். முதலாவதாக, அத்தகைய பயம் அன்பால் தூண்டப்படுகிறது. கடவுள் மீதுள்ள நம்முடைய பேரன்பின் காரணமாக அவரை மனவருத்தப்படுத்த நாம் பயப்படுகிறோம். (நீதிமொழிகள் 27:11) அடுத்தபடியாக, தவறு நடப்பிக்கிற அனைவருக்கும் கடவுள் ‘பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறார்,’ என்று நாம் அறிந்திருக்கிறோம்; ஆகவே நம்முடைய பாகத்தில் ஞானம் நம்மில் தேவபயத்தை வளர்க்க உதவிசெய்யும்.—எபிரெயர் 12:29.
நமது “தேவபயம்” மாவட்ட மாநாட்டில், நாம் தேவபயத்தில் வளர்வதற்கான அதிக அறிவுரையையும் உற்சாகமூட்டுதலையும் பெறவிருக்கிறோம். பேச்சுகள், நடிப்புகள், ஒரு நாடகம், மேலும் அனுபவங்களைக் கூறுதல் ஆகியவற்றின் வாயிலாக அத்தகைய போதனை கொடுக்கப்படும்.
தங்களுடைய பண்டிகைகளுக்குக் கூடிவருகையில் வெறுங்கையோடு வரவேண்டாம் என்று பூர்வ இஸ்ரவேலர்களுக்குக் கட்டளை கொடுக்கப்பட்டதைப் போலவே, நாமும் நம்முடைய மாநாடுகளின் மகிழ்ச்சிக்கும் வெற்றிக்கும் நம்முடைய பங்கையளிக்க விரும்பவேண்டும். (உபாகமம் 16:17) யெகோவாவின் பந்திக்கு மரியாதையை வெளிக்காட்டுவதன் மூலம் நாம் இதைச் செய்யலாம். எவ்வாறு? சரியான நேரத்திற்கு வருவது, மேடையிலிருந்து சொல்லப்படுபவற்றைக் கூர்ந்து கவனிப்பது, பாட்டுகள் பாடும்போது முழு இருதயத்தோடு சேர்ந்துபாடுவது ஆகியவற்றின் மூலமே. நாம் நிகழ்ச்சியின்போது பேசிக்கொண்டில்லாமல் அல்லது சுற்றித்திரியாமல் இருப்போம். நம்மால் முடிந்தளவு மனமுவந்து வேலைசெய்வதன்மூலமும் நாம் பங்களிக்க விரும்புவோம். மாநாட்டு ஒழுங்கமைப்பு பல இலாக்காக்களை உள்ளடக்குகிறது. அவை எல்லாவற்றையும் கவனித்துக்கொள்ள ஆட்கள் தேவைப்படுகின்றனர். யெகோவா நம்மை ஆசீர்வதித்திருக்கும் அளவுக்கு, பணவகையில் நன்கொடைகளைக் கொடுக்கவும் நாம் விரும்புவோம்.
யெகோவாவின் ஒவ்வொரு ஊழியரும் “தேவபயம்” மாவட்ட மாநாட்டின், எல்லா மூன்று நாட்களிலும், வெள்ளிக்கிழமை காலை தொடக்க பாட்டிலிருந்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முடிவு ஜெபம் வரை ஆஜராயிருக்க இப்போதிருந்தே திட்டமிடுவாராக.