பொய்ப் போதகர்களுக்கெதிராக யெகோவாவின் நியாயத்தீர்ப்பு
“எருசலேமின் தீர்க்கதரிசிகளிலும் திடுக்கிடத்தக்க காரியத்தைக் காண்கிறேன்; விபசாரம்பண்ணி, [பொய்யில், NW] நடந்து, . . . அவர்கள் எல்லாரும் எனக்குச் சோதோமைப்போலும், அதின் குடிகள் கொமோராவைப்போலும் இருக்கிறார்கள்.”—எரேமியா 23:14.
1. தெய்வீக போதனையில் ஈடுபடும் ஒருவர் ஏன் அதிக பொறுப்புவாய்ந்த ஓர் உத்தரவாதத்தை ஏற்கிறார்?
தெய்வீக போதனையில் ஈடுபடுகிற எவரும் மிகவும் பொறுப்புவாய்ந்த ஓர் உத்தரவாதத்தை ஏற்கிறார்கள். யாக்கோபு 3:1 எச்சரிக்கிறது: “என் சகோதரரே, அதிக ஆக்கினையை அடைவோம் என்று அறிந்து, உங்களில் அநேகர் போதகராகாதிருப்பீர்களாக.” ஆம், பொதுவாகக் கிறிஸ்தவர்களாக இருப்பவர்களைவிட கடவுளுடைய வார்த்தையைக் கற்பிக்கும் போதகர்கள், ஏற்கத்தக்கக் கணக்குக் கொடுக்கும் அதிக பொறுப்புவாய்ந்த உத்தரவாதத்தின்கீழ் உள்ளனர். பொய்ப் போதகர்களாக நிரூபிப்பவர்களுக்கு இது எதைக் குறிக்கும்? எரேமியாவின் நாளிலிருந்த சூழ்நிலைமையை நாம் பார்க்கலாம். இன்று நடக்கிறதற்கு முன்நிழலாக அது எப்படி இருந்தது என்று நாம் பார்ப்போம்.
2, 3. எருசலேமின் பொய்ப் போதகர்களைக் குறித்து எரேமியாவின்மூலமாக என்ன தீர்ப்பை யெகோவா அளித்தார்?
2 பொ.ச.மு. 647-ல், யோசியா அரசனுடைய ஆட்சிக்காலத்தின் 13-ம் வருஷத்தில், எரேமியா யெகோவாவின் தீர்க்கதரிசியாக இருக்கும்படி பொறுப்பளிக்கப்பட்டார். யெகோவா யூதாவுக்கு விரோதமாக ஒரு குற்றச்சாட்டைக் கொண்டிருந்தார், ஆகவே அதை அறிவிக்க அவர் எரேமியாவை அனுப்பினார். எருசலேமின் பொய்த் தீர்க்கதரிசிகள், அல்லது போதகர்கள், கடவுளுடைய பார்வையில் ‘திடுக்கிடத்தக்க காரியங்களை’ செய்துகொண்டிருந்தார்கள். அவர்களுடைய பொல்லாப்பு அவ்வளவு அதிகமாக இருந்ததால், கடவுள் எருசலேமையும் யூதாவையும் சோதோம், கொமோராவுக்கு ஒப்பிட்டுப் பேசினார். எரேமியா 23-ம் அதிகாரம் இதைப்பற்றி நமக்குச் சொல்லுகிறது. வசனம் 14 சொல்கிறது:
3 “எருசலேமின் தீர்க்கதரிசிகளிலும் திடுக்கிடத்தக்க காரியத்தைக் காண்கிறேன்; விபசாரம்பண்ணி, [பொய்யில், NW] நடந்து, ஒருவனும் தன் பொல்லாப்பை விட்டுத் திரும்பாதபடிக்குப் பொல்லாதவர்களின் கைகளைத் திடப்படுத்துகிறார்கள்; அவர்கள் எல்லாரும் எனக்குச் சோதோமைப்போலும், அதின் குடிகள் கொமோராவைப்போலும் இருக்கிறார்கள்.”
4. எருசலேமின் போதகர்களுடைய ஒழுக்கரீதியிலான கெட்ட முன்மாதிரி இன்று எவ்வாறு கிறிஸ்தவமண்டலத்தில் இணைப்பொருத்தமுள்ளதாயிருக்கிறது?
4 ஆம், இந்தத் தீர்க்கதரிசிகள், அல்லது போதகர்கள்தாமே ஒழுக்கரீதியில் கெட்ட முன்மாதிரிகளாயிருந்து, இதன் பலனாக, மக்களையும் அவ்வாறே செய்யும்படி உற்சாகப்படுத்தினார்கள். இன்று கிறிஸ்தவமண்டலத்தில் உள்ள நிலைமைகளைப் பாருங்கள்! அவை எரேமியாவின் நாளில் இருந்ததைப்போலவே இருக்கின்றன அல்லவா? இன்று மதகுருமார் விபசாரம் செய்யும் ஆட்களையும் ஒத்தப்பாலினப் புணர்ச்சிக்காரர்களையும் அவர்களுடைய ஸ்தானங்களிலேயே இருக்கச்செய்வதோடு, சர்ச் ஊழியப்பணிகளில், அவர்கள் முன்னின்று வழிநடத்தவும் அனுமதிக்கின்றனர். சர்ச் அங்கத்தினர்களாய் சேர்ந்திருக்கிற பெரும்பான்மையரும் ஒழுக்கங்கெட்டவர்களாக இருக்கிறார்கள் என்பது எந்தவிதத்திலாவது ஆச்சரியமாக இருக்கிறதா?
5. கிறிஸ்தவமண்டலத்தின் ஒழுக்கக்கேடான நிலைமை ஏன் சோதோம், கொமோராவுடையதைவிட மோசமானதாக இருக்கிறது?
5 யெகோவா எருசலேமில் குடியிருந்தவர்களைச் சோதோம், கொமோராவிலுள்ளவர்களுக்கு ஒப்பிட்டுப்பேசினார். ஆனால் கிறிஸ்தவமண்டலத்தின் ஒழுக்கக்கேடான நிலைமை சோதோம், கொமோராவைக்காட்டிலும் மோசமாயிருக்கிறது. ஆம், அது யெகோவாவுடைய பார்வையில் இன்னும் அதிக குற்றஞ்சாட்டப்படத்தக்கதாய் இருக்கிறது. அவளுடைய போதகர்கள் கிறிஸ்தவ ஒழுக்க நியதிகளை அலட்சியம் செய்கிறார்கள். இதுதானே ஒழுக்கச் சீர்குலைவான ஒரு சூழ்நிலையை உருவாக்குகிறது; தீமை செய்வதற்கு வேண்டிய எல்லாவிதமான நயவஞ்சக ஆசைத்தூண்டுதல்களும் இதில் இருக்கின்றன. இந்த ஒழுக்கச் சூழ்நிலைமை அந்தளவுக்குப் பரவலாக நிலவியிருப்பதால், தீமை இன்று சர்வசாதாரணமானதாகக் கருதப்படுகிறது.
‘பொய்யில் நடத்தல்’
6. எருசலேமின் தீர்க்கதரிசிகளுடைய தீமையைக் குறித்து எரேமியா என்ன சொன்னார்?
6 இப்போது 14-ம் வசனம், எருசலேமின் தீர்க்கதரிசிகளைக் குறித்து என்ன சொல்லுகிறது என்று கவனியுங்கள். அவர்கள் ‘பொய்யில் நடந்துகொண்டிந்தார்கள்.’ மேலும் 15-ம் வசனத்தின் பிற்பகுதி சொல்லுகிறது: “எருசலேமின் தீர்க்கதரிசிகளிலிருந்து [விசுவாசத்துரோகமானது, NW] தேசமெங்கும் பரம்பிற்றே.” பிறகு, 16-ம் வசனம் மேலுமாகச் சொல்லுகிறது: “உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேளாதிருங்கள்; அவர்கள் உங்களை வீண்பெருமை கொள்ளும்படி செய்கிறார்கள்; கர்த்தருடைய வாக்கை அல்ல, தாங்கள் யூகித்த தரிசனத்தைச் சொல்லுகிறார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.”
7, 8. கிறிஸ்தவமண்டலத்தின் மதகுருமார் ஏன் எருசலேமின் பொய்த் தீர்க்கதரிசிகளைப்போல் இருக்கிறார்கள், இது சர்ச்சுக்குச் செல்பவர்களை எவ்வாறு பாதித்திருக்கிறது?
7 எருசலேமிலிருந்த பொய்த் தீர்க்கதரிசிகளைப்போலவே, கிறிஸ்தவமண்டல மதகுருமாரும் கடவுளுடைய வார்த்தையில் காணப்படாத போதனைகளை, விசுவாசத்துரோகக் கொள்கைகளைப் பரப்பி, பொய்யில் நடக்கிறார்கள். இத்தகைய பொய்ப் போதகங்களில் சில யாவை? ஆத்துமா அழியாமை, திரித்துவம், உத்தரிக்கும் ஸ்தலம், மேலும் மக்களை நித்தியகாலமாக வாதிக்கும் எரிநரகம். மக்கள் கேட்க விரும்புவதைப் பிரசங்கிப்பதன் மூலம் அவர்கள் கேட்பவர்களைச் செவித்தினவுள்ளவர்களாகவும் செய்கிறார்கள். கிறிஸ்தவமண்டலம் கடவுளுடைய சமாதானத்தை உடையதாயிருப்பதால், அவள் எந்த ஆபத்தையும் எதிர்ப்படமாட்டாள் என்று அவர்கள் திரும்பத் திரும்ப சொல்கிறார்கள். ஆனால் அந்த மதகுருமார் “தாங்கள் யூகித்த தரிசனத்தைச்” சொல்லிவருகிறார்கள். அது பொய். அப்படிப்பட்ட பொய்களை நம்புபவர்கள் ஆவிக்குரிய விதத்தில் விஷமளிக்கப்படுகிறார்கள். அவர்கள் தங்களுடைய அழிவுக்காகத் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள்!
8 இத்தகைய பொய்ப் போதகர்களைக் குறித்து 21-ம் வசனத்தில் யெகோவா என்ன சொல்லுகிறார் என்று கவனியுங்கள்: “அந்தத் தீர்க்கதரிசிகளை நான் அனுப்பாதிருந்தும் அவர்கள் ஓடினார்கள்; அவர்களோடே நான் பேசாதிருந்தும் அவர்கள் தீர்க்கதரிசனஞ்சொன்னார்கள்.” ஆகவே இன்று, இந்த மதகுருமார் கடவுளால் அனுப்பப்படவுமில்லை, அவருடைய சத்தியங்களைப் போதிக்கிறதுமில்லை. விளைவு? சர்ச்சுக்குச் செல்பவர்கள் மத்தியில் பைபிள் அறிவு திகைக்கவைக்கும் அளவில் குறைவுபடுகிறது, ஏனென்றால் அவர்களுடைய ஊழியர்கள் அவர்களுக்கு உலகத் தத்துவங்களைப் புகட்டுகின்றனர்.
9, 10. (அ) எருசலேமின் பொய்ப் போதகர்கள் என்ன வகையான சொப்பனங்களைக் கண்டனர்? (ஆ) கிறிஸ்தவமண்டலத்தின் மதகுருமார் எவ்வாறு அதேவிதமாக “பொய்ச் சொப்பனங்களை” போதித்திருக்கிறார்கள்?
9 மேலும், மதகுருமார் இன்று தவறான நம்பிக்கைகளை அறிவித்து வருகிறார்கள். வசனம் 25-ஐ கவனியுங்கள்: “சொப்பனங்கண்டேன், சொப்பனங்கண்டேன் என்று, என் நாமத்தைச் சொல்லிப் பொய்த்தீர்க்கதரிசனம் உரைக்கிற தீர்க்கதரிசிகள் சொல்லுகிறதைக் கேட்டேன்.” அவை என்ன வகையான சொப்பனங்கள்? வசனம் 32 நமக்குச் சொல்லுகிறது: “இதோ, பொய்ச்சொப்பனங்களைத் தீர்க்கதரிசனமாகச் சொல்லி, அவைகளை விவரித்து, என் ஜனத்தைத் தங்கள் பொய்களினாலும், தங்கள் வீம்புகளினாலும், மோசம்போக்குகிறவர்களுக்கு நான் விரோதி என்று கர்த்தர் சொல்கிறார்; நான் அவர்களை அனுப்பினதுமில்லை, அவர்களுக்குக் கற்பித்ததுமில்லை; அவர்கள் இந்த ஜனத்துக்கு ஒரு பிரயோஜனமாய் இருப்பதுமில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்.”
10 மதகுருமார் என்ன பொய்ச் சொப்பனங்களை, அல்லது நம்பிக்கைகளைப் போதித்திருக்கிறார்கள்? ஏன், இன்று சமாதானத்துக்கும் பாதுகாப்புக்கும் மனிதனுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை ஐக்கிய நாடுகள் என்ற நம்பிக்கையையே. சமீப வருடங்களில் ஐநா-வை “ஒத்திசைவுக்கும் சமாதானத்துக்கும் கடைசி நம்பிக்கை” என்றும் “சமாதானம் மற்றும் நீதியின் உயர்வான பொதுமன்றம்” என்றும் “உலக சமாதானத்துக்குத் தலையாய மதச்சார்பற்ற நம்பிக்கை” என்றும் அவர்கள் அழைத்திருக்கிறார்கள். என்னே ஓர் ஏமாற்றம்! மனிதவர்க்கத்துக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை கடவுளுடைய ராஜ்யம். ஆனால் மதகுருமார், இயேசுவுடைய பிரசங்கத்தின் மையப் பொருளாக இருந்த பரலோக அரசாங்கத்தைப் பற்றிய அந்தச் சத்தியத்தைப் பிரசங்கிப்பதுமில்லை, போதிப்பதுமில்லை.
11. (அ) எருசலேமின் பொய்ப் போதகர்கள் கடவுளுடைய சொந்த பெயரின்மேல் என்ன கெட்ட பாதிப்பைக் கொண்டிருந்தனர்? (ஆ) எரேமியா வகுப்பாருடன் ஒப்பிடுகையில் வேறுபட்டவர்களாக, இன்றைய பொய் மதப் போதகர்கள் கடவுளுடைய பெயரைக் குறித்ததில் என்ன செய்துவந்திருக்கிறார்கள்?
11 வசனம் 27 நமக்கு இன்னுமதிகம் சொல்லுகிறது. “என் ஜனத்தின் பிதாக்கள் பாகாலினிமித்தம் என் நாமத்தை மறந்ததுபோல, இவர்கள் தங்கள் அயலாருக்கு விவரிக்கிற தங்கள் சொப்பனங்களினாலே என் நாமத்தை அவர்கள் மறக்கும்படி செய்யப்பார்க்கிறார்கள்.” எருசலேமிலிருந்த பொய்த் தீர்க்கதரிசிகள், அந்த மக்கள் கடவுளுடைய பெயரை மறக்கும்படி செய்தார்கள். இன்றைய பொய் மதப் போதகர்களும் அதையே செய்திருக்கிறார்கள் அல்லவா? அதிலும் மோசமாக, கடவுளுடைய பெயர் யெகோவா என்பதை மறைத்துவைக்கிறார்கள். அதைப் பயன்படுத்த தேவையில்லை என்று போதித்து, தங்களுடைய பைபிள் மொழிபெயர்ப்புகளிலிருந்து அதை நீக்கிவிடுகிறார்கள். கடவுளுடைய பெயர் யெகோவா என்று மக்களுக்குப் போதிக்கிற எவரையும் அவர்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள். ஆனால் ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களில் மீதிபேராகிய எரேமியா வகுப்பார், தங்களுடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து இயேசு செய்ததைப் போலவே செய்துவந்திருக்கிறார்கள். கடவுளுடைய பெயரைக் குறித்து அவர்கள் இலட்சக்கணக்கானோருக்குப் போதித்திருக்கிறார்கள்.—யோவான் 17:6.
அவர்களுடைய குற்றத்தன்மையை அம்பலப்படுத்துதல்
12. (அ) பொய் மதப் போதகர்களின் பங்கில் ஏன் அதிக இரத்தப்பழி இருக்கிறது? (ஆ) இரண்டு உலகப் போர்களிலும் மதகுருமாரின் பங்கு என்னவாக இருந்திருக்கிறது?
12 அழிவுக்குச் செல்லும் அகலமானப் பாதையிலே தங்களுடைய மந்தைகளை நடத்திச்செல்லும் பொய்ப் போதகர்கள் என்று எரேமியா வகுப்பார் திரும்பத் திரும்ப மதகுருமாரை அம்பலப்படுத்தியிருக்கிறார்கள். ஆம், அந்தச் சொப்பனக்காரர்கள் ஏன் யெகோவாவின் அழிவுக்கேதுவான நியாயத்தீர்ப்புக்குப் பாத்திரராயிருக்கிறார்கள் என்பதை அந்த மீதியானோர் தெளிவாய் கூறியிருக்கிறார்கள். உதாரணமாக, யெகோவாவின் ஊழியர்கள் வெளிப்படுத்துதல் 18:24-ஐ அடிக்கடி குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்கள்; மகா பாபிலோனிடத்தில் “பூமியில் கொல்லப்பட்ட அனைவருடைய” இரத்தமும் காணப்பட்டது என்று அது சொல்லுகிறது. மத வேறுபாடுகளின் காரணமாகத் தொடுக்கப்பட்ட எல்லா போர்களையும் எண்ணிப்பாருங்கள். பொய் மதப் போதகர்களின்மீது இருக்கும் இரத்தப்பழி எவ்வளவு அதிகம்! அவர்களுடைய போதனைகள் பிரிவினை உண்டுபண்ணி, வித்தியாசப்பட்ட நம்பிக்கைகளையும் தேசத் தொகுதிகளையும் சேர்ந்தவர்களிடையே பகைமையை ஊக்குவித்திருக்கின்றன. முதல் உலக போர் சம்பந்தமாக, பிரசங்கிகள் ஆயுதங்களை அளிக்கிறார்கள் (Preachers Present Arms) புத்தகம் சொல்லுகிறது: “மதகுருமார், போருக்கு அதன் உணர்ச்சிப்பொங்கும் ஆவிக்குரிய உட்பொருளையும் ஊக்கத்தூண்டுதலையும் கொடுத்தார்கள். . . . இப்படியாக சர்ச், போர் ஏற்பாடுகளில் அதிகம் உட்பட்ட பாகமாக ஆனது.” இரண்டாம் உலக போரிலும் அதுவே உண்மையாக இருந்தது. மதகுருமார் போரிடும் தேசங்களுக்கு முழு ஆதரவை அளித்து அவர்களுடைய துருப்புகளை ஆசீர்வதித்தார்கள். இரண்டு உலக போர்கள் கிறிஸ்தவமண்டலத்தில் துவங்கின; அவற்றில் ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள் ஒருவரையொருவர் கொலைசெய்தனர். கிறிஸ்தவமண்டலத்துக்குள்ளே உள்ள மதச்சம்பந்தமற்ற, மேலும் மதவாதப் பிரிவுகள் தற்போதைய காலம் வரையாகத் தொடர்ந்து இரத்தத்தைச் சிந்திவருகின்றன. அவர்களுடைய பொய்ப் போதகங்கள் எவ்வளவு பயங்கரமான விளைவுகளைக் கொண்டிருந்திருக்கின்றன!
13. கிறிஸ்தவமண்டல மதகுருமார் யெகோவாவுடன் எந்த உறவையும் கொண்டிருக்கவில்லை என்று எரேமியா 23:22 எவ்வாறு நிரூபிக்கிறது?
13 எரேமியா 23-ம் அதிகாரம், 22-ம் வசனம் சொல்வதைத் தயவுசெய்து கவனியுங்கள்: “அவர்கள் என் [நெருக்கமானத் தொகுதியிலே, NW] நிலைத்திருந்தார்களேயாகில், அப்பொழுது அவர்கள் என் வார்த்தைகளை ஜனங்களுக்குத் தெரிவித்து, அவர்களைத் தங்கள் பொல்லாத வழிகளையும் தங்கள் செய்கைகளின் பொல்லாப்பையும் விட்டுத் திருப்புவார்கள்.” யெகோவாவின் நெருக்கமானத் தொகுதியில் கிறிஸ்தவமண்டல மதத் தீர்க்கதரிசிகள் நின்றிருந்தார்களானால், உண்மையும் விவேகமுமுள்ள ஓர் ஊழியனைப்போல அவரோடு நெருக்கமான உறவில் இருந்திருந்தார்களானால், அப்போது அவர்களும்கூட கடவுளுடைய தராதரங்களின்படி வாழ்ந்துகொண்டிருப்பார்கள். அவர்களும்கூட கிறிஸ்தவமண்டலத்தின் மக்கள் கடவுளுடைய சொந்த வார்த்தைகளைக் கேட்கும்படி செய்துகொண்டிருந்திருப்பார்கள். பதிலாக, நவீன நாளைய பொய்ப் போதகர்கள், தங்களைப் பின்பற்றுபவர்களைக் கடவுளுடைய எதிரியாகிய பிசாசான சாத்தானின் குருடாக்கப்பட்ட ஊழியர்களாகும்படி செய்திருக்கிறார்கள்.
14. கிறிஸ்தவமண்டல மதகுருமாரைக் குறித்து என்ன வல்லமையான அம்பலப்படுத்தல் 1958-ல் வெளியிடப்பட்டது?
14 எரேமியா வகுப்பாரால் மதகுருமார் அம்பலப்படுத்தப்படுவது மிகவும் வல்லமைவாய்ந்ததாக இருந்திருக்கிறது. உதாரணமாக, நியூ யார்க் நகரத்தில், 1958-ல் நடைபெற்ற யெகோவாவின் சாட்சிகளுடைய தெய்வீக சித்தம் சர்வதேச அசெம்பிளியில் உவாட்ச் டவர் சொஸையிட்டியின் துணைத் தலைவர், சொன்ன கூற்றின் ஒரு பகுதி: “எவ்விதமான இரட்டை பேச்சோ தயக்கமோ இல்லாமல் குற்றச்செயல், தீச்செயல், பகைமை, சச்சரவு, தப்பெண்ணம், . . . மற்றும் வெறித்தனமான குழப்பம் ஆகிய எல்லாவற்றிற்கும் மூலகாரணம் தவறான மதம், பொய் மதம் என்பதை நாங்கள் அறிவிக்கிறோம்; இதற்குப் பின்னால் இருப்பது மனிதனுடைய காணக்கூடாத சத்துருவாகிய பிசாசான சாத்தான். உலக நிலைமைக்கு மிகவும் பொறுப்புவாய்ந்தவர்களாயிருக்கும் மனிதர்கள் மதப் போதகர்களும் தலைவர்களுமே; மேலும் இதில் மிகவும் குற்றஞ்சாட்டப்படத்தக்கவர்கள் கிறிஸ்தவமண்டல மதகுருமாராவர். . . . முதல் உலகப் போர் முதல், இந்த எல்லா வருடங்களுக்கும் பின்பு, கிறிஸ்தவமண்டலம் கடவுளோடுள்ள தன் உறவில் எரேமியாவின் நாளிலிருந்த இஸ்ரவேலைப் போன்றே இருக்கிறது. ஆம், எரேமியா எருசலேமுக்குச் சம்பவிப்பதாகப் பார்த்த அழிவைக்காட்டிலும் கிறிஸ்தவமண்டலம் இன்னுமதிக அச்சுறுத்தும், பாழாக்கும் அழிவை எதிர்ப்படுகிறது.”
பொய்ப் போதகர்களின் நியாயத்தீர்ப்பு
15. மதகுருமார் சமாதானத்தின் என்ன தீர்க்கதரிசனங்களை தோற்றுவித்திருக்கின்றனர்? அவை நிறைவேற்றமடையுமா?
15 இந்த எச்சரிப்பு கொடுக்கப்பட்டபோதிலும், அதுமுதல் அந்த மதகுருமார் எப்படிச் செயல்பட்டிருக்கிறார்கள்? வசனம் 17 அறிக்கையிடுவதுபோலவே: “அவர்கள் என்னை அசட்டைபண்ணுகிறவர்களை நோக்கி: உங்களுக்குச் சமாதானம் இருக்குமென்று கர்த்தர் சொன்னாரென்று சொல்லுகிறதுமல்லாமல்; தங்கள் இருதயத்தின் கடினத்திலே நடக்கிற யாவரையும் நோக்கி: உங்கள்மேல் பொல்லாப்பு வராதென்றும் சொல்லுகிறார்கள்.” இது உண்மையா? இல்லை! மதகுருமாரின் இந்தத் தீர்க்கதரிசனங்களின் பொய்மையை யெகோவா வெளிப்படுத்துவார். அவருடைய பெயரில் அவர்கள் சொல்லுகிறதை அவர் நிறைவேற்றமாட்டார். என்றாலும், கடவுளோடுள்ள சமாதானத்தைப்பற்றிய மதகுருமாரின் பொய்யான உறுதியளிப்பு மிகவும் ஏமாற்றும் இயல்புடையது!
16. (அ) இந்த உலகின் ஒழுக்கச் சூழல் என்ன, அதற்கு யாரும் காரணமாக இருக்கிறார்கள்? (ஆ) இந்த உலகின் தரக்குறைவான ஒழுக்கம்பற்றிய கருத்துக்களைக் குறித்து எரேமியா வகுப்பார் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்?
16 ‘என்ன, மதகுருமாரின் பொய்ப் போதகங்களால் நான் ஏமாற்றப்படுவேனா? ஒருபோதும் ஏமாற்றப்படமாட்டேன்!’ என்று நீங்கள் யோசிக்கிறீர்களா? அவ்வளவு நிச்சயமாயிருக்காதீர்கள்! மதகுருமாரின் பொய்ப் போதகங்கள் நயவஞ்சகமான, பயங்கரமான ஒழுக்கச் சூழலை முன்னேற்றுவித்திருக்கிறது என்பதை ஞாபகத்தில் வையுங்கள். எவ்வளவு ஒழுக்கங்கெட்டதாய் இருந்தாலும், எதையும் அனுமதிக்கும் அவர்களுடைய போதனைகள் பெரும்பாலும் எதையும் நியாயப்படுத்துகின்றன. மேலும் பொழுதுபோக்கு, திரைப்படங்கள், டிவி, பத்திரிகைகள், இசை ஆகிய எல்லா துறைகளிலும் இந்தச் சீர்கேடான ஒழுக்கச் சூழல் ஊடுருவிப் பரவியிருக்கிறது. அப்படியானால், இந்தச் சீர்கெட்ட ஆனால் தந்திரமாகக் கவர்ச்சியூட்டும் ஒழுக்கச் சூழலின் செல்வாக்கின்கீழ் நாம் விழுந்துவிடாதபடி மிகவும் எச்சரிக்கையோடு இருப்பது அவசியம். இளைஞர் தரங்கெட்ட வீடியோக்களிலும் இசையிலும் சிக்கிக்கொள்ளக்கூடும். இன்று மக்களிடத்தில் காணப்படும், எல்லாமே அனுமதிக்கத்தக்கது என்ற இந்த மனநிலைமை, மதகுருமாரின் பொய்ப் போதகங்கள், மற்றும் அவர்கள் கடவுளுடைய நீதியானத் தராதரங்களை ஆதரிக்க தவறியதன் நேரடியான விளைவு என்பதை ஞாபகத்தில் வையுங்கள். எரேமியா வகுப்பார், இந்த ஒழுக்கங்கெட்ட கருத்துக்களை எதிர்த்துப் போராடிக்கொண்டும், கிறிஸ்தவமண்டலத்தை அமிழ்த்திக்கொண்டிருக்கும் பொல்லாப்பை நிராகரிக்க யெகோவாவின் ஊழியர்களுக்கு உதவிக்கொண்டும் இருக்கிறார்கள்.
17. (அ) எரேமியாவின்படி, பொல்லாத எருசலேமின்மீது என்ன நியாயத்தீர்ப்பு வரவிருந்தது? (ஆ) விரைவில் கிறிஸ்தவமண்டலத்திற்கு என்ன நேரிடும்?
17 பெரிய நியாயாதிபதியாகிய யெகோவாவிடமிருந்து கிறிஸ்தவமண்டல பொய்ப் போதகர்கள் என்ன நியாயத்தீர்ப்பைப் பெறுவார்கள்? வசனங்கள் 19, 20, 39, மேலும் 40 பதிலளிக்கின்றன: “இதோ, கர்த்தருடைய பெருங்காற்றாகிய கொடிய புசல் புறப்பட்டது: அது துன்மார்க்கருடைய தலையின்மேல் உக்கிரமாய் மோதும். கர்த்தர் தம்முடைய இருதயத்தின் நினைவுகளை நடப்பித்து நிறைவேற்றுமளவும், அவருடைய கோபம் தணியாது. . . . நான் உங்களை மறக்கவே மறந்து, உங்களையும், நான் உங்களுக்கும் உங்கள் பிதாக்களுக்கும் கொடுத்த நகரத்தையும், எனக்கு முன்பாக இராதபடிக்குக் கைவிட்டு, மறக்கப்படாத நித்திய நிந்தையையும், நித்திய இலச்சையையும் உங்கள்மேல் வரப்பண்ணுவேன்.” அவை யாவுமே பொல்லாத எருசலேமுக்கும் அதன் ஆலயத்துக்கும் நடைபெற்றது; மேலும் இப்போது பொல்லாத கிறிஸ்தவமண்டலத்துக்கு இதுபோன்ற ஒரு பேராபத்து விரைவில் நேரிடும்!
‘யெகோவாவால் சுமரும் பாரத்தை’ அறிவித்தல்
18, 19. எரேமியா யூதாவுக்கு அறிவித்த “யெகோவாவால் சுமரும் பாரம்” என்ன, குறிப்பாகச் சுட்டிக்காட்டப்பட்ட என்ன பொருளுடன்?
18 ஆகையால், எரேமியா வகுப்பாருக்கும் அவர்களுடைய தோழர்களுக்குமுள்ள பொறுப்பு என்ன? வசனம் 33, மற்றும் 34-ன் பிற்பகுதி நமக்குச் சொல்கிறது: “[யெகோவாவால், NW] சுமரும் பாரம் என்னவென்று இந்த ஜனமாகிலும் ஒரு தீர்க்கதரிசியாகிலும் ஒரு ஆசாரியனாகிலும் உன்னைக் கேட்டால், [மக்களாகிய நீங்களே—ஓ எப்பேர்ப்பட்ட பாரம்!, NW] உங்களைத் தள்ளிவிடுவேன் . . . என்று நீ அவர்களுடனே சொல்லவேண்டும் . . . என்று [யெகோவா, NW] சொல்லுகிறார்.”
19 “பாரம்” என்பதற்கான எபிரெய வார்த்தை இரண்டு அர்த்தத்தைக் கொண்டிருக்கிறது. அது மிக முக்கியமான தெய்வீக அறிவிப்பு அல்லது ஒருவரைத் தொய்ந்துபோகவும் களைப்படையவும் செய்யும் ஏதோவொன்றைக் குறிக்கலாம். “யெகோவாவால் சுமரும் பாரம்” என்ற கூற்று ஒரு முக்கியமான தீர்க்கதரிசனத்தை—எருசலேம் அழிவுக்காகத் தீர்க்கப்பட்டிருக்கிறது என்ற அறிவிப்பை—குறிக்கிறது. எரேமியா திரும்பத் திரும்ப உரைத்த, யெகோவாவிடமிருந்து வந்த அப்படிப்பட்ட கனமான தீர்க்கதரிசனங்களைக் கேட்க மக்கள் விரும்பினார்களா? இல்லை, அந்த மக்கள் எரேமியாவை இவ்வாறு பரிகாசம் செய்தார்கள்: ‘என்ன தீர்க்கதரிசனத்தை (பாரத்தை) நீ இப்போது வைத்திருக்கிறாய்? உன்னுடைய தீர்க்கதரிசனம் இன்னொரு களைப்புண்டாக்கும் பாரமாக இருக்குமென்பது நிச்சயம்!’ ஆனால் யெகோவா அவர்களிடம் என்ன சொன்னார்? இதையே: “மக்களாகிய நீங்களே—ஓ எப்பேர்ப்பட்ட பாரம்! உங்களைத் தள்ளிவிடுவேன்.” ஆம், இந்த மக்கள் யெகோவாவுக்குப் பாரமாயிருந்தார்கள்; மேலும் அவர்கள் இனிமேலும் பாரமாயிராதபடி அவர் அவர்களை நீக்கிவிடுவதாக இருந்தார்.
20. இன்று “யெகோவாவால் சுமரும் பாரம்” என்ன?
20 இன்று “யெகோவாவால் சுமரும் பாரம்” என்ன? கடவுளுடைய வார்த்தையிலிருந்து வரும் பாரமானத் தீர்க்கதரிசன செய்தியாக அது இருக்கிறது. அது கிறிஸ்தவமண்டலத்தின் விரைவில் வரப்போகும் அழிவை அறிவிக்கும் தண்டனைத்தீர்ப்பால் நிறைந்திருக்கிறது. யெகோவாவின் மக்களாகிய நாமோ, ‘யெகோவாவால் சுமரும் இந்த பாரத்தை’ அறிவிக்கும் அதிமுக்கியமானப் பொறுப்பை உடையவர்களாயிருக்கிறோம். முடிவு நெருங்கி வருகையில், கிறிஸ்தவமண்டலத்தின் சொற்கேளாத மக்கள் ஒரு ‘பாரமாக’ இருக்கிறார்கள்; ஆம், யெகோவா தேவனுக்கு “ஓ எப்பேர்ப்பட்ட பாரம்!” என்றும், அவர் கிறிஸ்தவமண்டலத்தை விரைவில் பேராபத்துக்குத் தள்ளிவிடுவதன் மூலம் இந்தப் ‘பாரத்தை’விட்டு சீக்கிரத்தில் தம்மைத்தாமே நீக்கிக்கொள்வார் என்றும் நாம் எல்லாரிடமும் சொல்லவேண்டும்.
21. (அ) பொ.ச.மு. 607-ல் ஏன் எருசலேம் அழிக்கப்பட்டது? (ஆ) எருசலேமின் அழிவிற்குப் பின், பொய்த் தீர்க்கதரிசிகளுக்கும் யெகோவாவின் உண்மை தீர்க்கதரிசிக்கும் என்ன நடந்தது, இது இன்று நமக்கு என்ன உறுதியளிப்பைக் கொடுக்கிறது?
21 பொ.ச.மு. 607-ல் பாபிலோனியர்கள் எருசலேமை அழித்தபோது எரேமியாவின் நாளில் யெகோவாவின் நியாயத்தீர்ப்பு நிறைவேற்றப்பட்டது. முன்னுரைக்கப்பட்டபடி, அந்த முரட்டாட்டமான, உண்மையற்ற இஸ்ரவேலர்களுக்கு அது ஒரு ‘நிந்தையும், இலச்சையுமாக’ இருந்தது. (எரேமியா 23:39, 40) அவர்கள் திரும்பத் திரும்ப அவமதித்திருந்த யெகோவா, அவர்கள் செய்த தீமைகளின் விளைவுகளுக்கு கடைசியில் அவர்களை விட்டுவிட்டார் என்பதை அது அவர்களுக்குக் காட்டியது. அவர்களுடைய அகந்தையானப் பொய்த் தீர்க்கதரிசிகளின் வாய்கள் கடைசியில் அடைக்கப்பட்டன. எரேமியாவின் வாயோ தொடர்ந்து தீர்க்கதரிசனமுரைத்தது. யெகோவா அவரைக் கைவிடவில்லை. இந்த மாதிரிக்கு உண்மையாக, யெகோவா கிறிஸ்தவமண்டல மதகுருமார்களின் மற்றும் அவர்களுடைய பொய்களை நம்புபவர்களின் ஜீவனை அழித்துப்போடுவதற்கு தம்முடைய பாரமானத் தீர்வு வழிநடத்துகையில், எரேமியா வகுப்பாரை அவர் கைவிடமாட்டார்.
22. யெகோவாவின் நியாயத்தீர்ப்புகளால் கிறிஸ்தவமண்டலம் என்ன நிலைமைக்குக் கொண்டுவரப்படும்?
22 ஆம், மதச்சார்பான கிறிஸ்தவமண்டலம், செல்வவளம் நீக்கப்பட்டு, அவமானப்படத்தக்கதாக அம்பலமாக்கப்பட்ட பிறகு, பொ.ச.மு. 607-ற்குப் பின்னிருந்த எருசலேமின் பாழாக்கப்பட்ட, குடியிருக்கப்படாத நிலை எப்படியிருந்ததோ அதேபோலவே அவள் காணப்படுவாள். பொய்ப் போதகர்களுக்கு விரோதமாக யெகோவா விதித்திருக்கிற தகுதியான நியாயத்தீர்ப்பு இதுவாகவே இருக்கிறது. அந்த நியாயத்தீர்ப்பு தவறாது. கடந்தகாலத்தில் எரேமியாவின் தேவ ஆவியால் ஏவப்பட்ட எச்சரிப்புச் செய்திகள் எவ்வாறு உண்மையில் நடந்தனவோ, அதேபோல அவற்றின் நவீனநாளைய நிறைவேற்றத்திலும் அவை உண்மையில் நடந்தேறும். ஆகவே, நாம் எரேமியாவைப்போல் இருப்போமாக. எல்லா பொய் மதப் போதகர்கள்மீதும் யெகோவாவுடைய நீதியான நியாயத்தீர்ப்பு ஏன் முழு அளவில் வருகிறது என்பதை மக்கள் அறிந்துகொள்ளும்படி, அவர்களுக்கு அவருடைய தீர்க்கதரிசன பாரத்தைப் பயமில்லாமல் அறிவிப்போமாக!
மறுபார்வை கேள்விகள்
◻ யெகோவாவின் நோக்குநிலையிலிருந்து பண்டைய எருசலேம் எவ்வளவு கெட்டதாக இருந்தது?
◻ கிறிஸ்தவமண்டலம் என்ன வழிகளில் ‘பொய்யில் நடந்துவருகிறது’?
◻ நவீன நாளைய மதகுருமாரின் குற்றத்தன்மை எவ்வாறு அம்பலமாக்கப்பட்டிருக்கிறது?
◻ இப்போது அறிவிக்கப்பட்டு வருகிற “யெகோவாவால் சுமரும் பாரம்” என்ன?
[பக்கம் 8-ன் படம்]
எரேமியா ‘திடுக்கிடத்தக்க காரியங்களை’ அம்பலப்படுத்தினார்
[பக்கம் 9-ன் படம்]
“தாங்கள் யூகித்த தரிசனத்தைச் சொல்லுகிறார்கள்”
[பக்கம் 10-ன் படம்]
அழிவுக்கு பிறகு எருசலேம், கிறிஸ்தவமண்டலத்தின் மாற்ற முடியாத முடிவைச் சித்தரிக்கிறது