உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w94 3/1 பக். 24-27
  • என் வாழ்வில் “யெகோவாவின் கை”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • என் வாழ்வில் “யெகோவாவின் கை”
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1994
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ஆரம்ப பிரசங்க ஊழியம்
  • கனடாவில் எங்களுடைய வேலை தடைசெய்யப்பட்டது
  • முழுநேர சேவையின் பல அம்சங்கள்
  • பிரேஸிலில் எங்களுடைய பிள்ளைகளை வளர்த்தல்
  • கனடாவுக்குத் திரும்புதல்
  • நல்ல தெரிவுகளால் நீடித்த ஆசீர்வாதம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
  • ஒன்றுபட்ட குடும்பமாக யெகோவாவை சேவித்தல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1996
  • கடவுளுடைய அளவற்ற கருணையை நிறைய வழிகளில் ருசித்திருக்கிறோம்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2017
  • ஆறு வயதில் தீர்மானித்த இலக்கை பின்தொடருதல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1994
w94 3/1 பக். 24-27

என் வாழ்வில் “யெகோவாவின் கை”

லாரன்ஸ் தாம்ஸன் கூறியபடி

ஓர் இரவு, 1946-ல், என் அப்பாவும் நானும் காரில் உட்கார்ந்து, வடதுருவ விண்ணொளிகள் வானில் நடனமாடிக்கொண்டிருப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தோம். நாங்கள் யெகோவாவின் மேன்மையையும் எங்கள் சிறுமையையும் குறித்துப் பேசினோம். கனடாவில் யெகோவாவின் சாட்சிகளுடைய வேலை தடைசெய்யப்பட்ட வருடங்களிலிருந்து சம்பவித்தக் கதைகளைத் திரும்பவும் நினைத்துப் பார்த்தோம். அந்த வருடங்களினூடே யெகோவா எப்படி தம்முடைய மக்களை ஆதரித்து வழிநடத்தி வந்திருக்கிறார் என்பதை அப்பா என் மனதில் பதிய வைத்தார்.

எனக்கு வயது வெறும் 13-ஆக இருந்தபோதிலும், அப்பா சொன்னதன் உண்மையை என்னால் போற்ற முடிந்தது. இன்னும் செய்யப்பட வேண்டியதாய் இருந்த பிரசங்க வேலையின் அவசரத்தன்மையையும் பெரிய அளவையும் அவர் என்னில் பதிய வைத்தார். அப்பா, எண்ணாகமம் 11:23-ஐ மேற்கோள்காட்டி, உண்மையில், யெகோவாவுடைய கை ஒருபோதும் குறுகியதாய் இல்லை என்பதை அழுத்திக் காண்பித்தார். அவர்மீதான நம்முடைய விசுவாசக் குறைவும் நம்பிக்கைக் குறைவுமே அவர் நமக்குச் செய்யக் கூடியவற்றை மட்டுப்படுத்துகிறது. அது ஒரு சிறந்த அப்பா-மகன் சம்பாஷணையாக இருந்தது, என்னால் ஒருபோதும் மறக்க முடியாத ஒன்று.

உவாட்ச் டவர் பிரசுரங்களைப் படிப்பது, குறிப்பாக 1939-ல் பிரசுரிக்கப்பட்ட இரட்சிப்பு (Salvation) என்ற புத்தகம் என்னுடைய ஆரம்ப வாழ்க்கையில் பெரிதும் செல்வாக்குச் செலுத்தியது. அதன் தொடக்கத்திலுள்ள பதியவைக்கத்தக்க உதாரணத்தை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது: “பயணிகள் நிறைந்ததாக காணப்பட்ட விரைவு ரயில், ஒரு மணி நேரத்திற்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருந்தது. ரயிலின் பின் பெட்டியிலுள்ள ஆட்கள் எஞ்சினை பார்க்கக்கூடிய அளவிற்கு, ஏறக்குறைய ஐம்பது சதவீத வளைவை உண்டுபண்ணிய ஒரு பாலத்தில், அது ஆற்றைக் கடக்க வேண்டும் . . . பின் பெட்டியில் பயணம் செய்துகொண்டிருந்த இருவர், . . . பாலத்தின் தூரத்து முனையிலுள்ள ஒரு பகுதி தீப்பற்றி எரிந்து ஆற்றினுள் விழுவதைக் கண்டனர். அவர்கள் பேராபத்தை எதிர்ப்படுவதை உணர்ந்தனர். அது ஓர் உண்மையான அவசர நிலை. பயணம் செய்யும் அநேகருடைய உயிர்களைக் காப்பாற்றும்படி, சரியான நேரத்தில் ரயிலை நிறுத்தக் கூடுமா?”

அந்த உதாரணத்தைப் பொருத்தி, அந்தப் புத்தகம் பின்வருமாறு முடித்தது: “அதேவிதமாகவே இன்று, பூமியிலுள்ள எல்லா தேசங்களும் மக்களும் மிக அவசரமான நிலையை நேருக்கு நேர் எதிர்ப்படுகின்றனர். அர்மகெதோனின் பேரழிவு சற்றே முன்னர் இருக்கிறது என்று கடவுள் கட்டளையிடுகிறபடி அவர்கள் எச்சரிக்கை செய்யப்பட்டு வருகின்றனர். . . . எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கையில், அவ்வாறு எச்சரிக்கை செய்யப்பட்ட ஒவ்வொருவரும் தாங்கள் எந்தப் போக்கை மேற்கொள்வர் என்று இப்போது தெரிவு செய்ய வேண்டும்.”

விரைந்து வரும் ரயில், எரிந்துகொண்டிருக்கும் பாலம், பிரசங்க வேலையின் அவசரத் தன்மை ஆகியவை துடைத்தழிக்க முடியாதபடி என் மனதில் பொறிக்கப்பட்டன.

ஆரம்ப பிரசங்க ஊழியம்

எனக்கு ஐந்து வயதாக இருந்தபோது, 1938-ல் நான் பிரசங்க வேலையில் பங்கெடுக்கத் துவங்கினேன். ஹென்றி, ஆலஸ் ட்வீட் என்ற இரண்டு பயனியர்கள் (முழுநேர ஊழியர்கள்), என்னை அவர்களுடன் கூட்டிக்கொண்டு போவார்கள்; நாங்கள் ஒரு நாளைக்கு 10-லிருந்து 12 மணிநேரங்கள் மக்களுடன் பேசுவதில் செலவிடுவோம். யெகோவாவின் சேவையில் அந்த முழு நாட்களை நான் முழுமையாக அனுபவித்துக் களித்தேன். ஆகவே அதைப் பின்தொடர்ந்த வருடம் நான் ஒரு பிரஸ்தாபியாகி, என்னுடைய ஊழியத்தை உண்மையில் அறிக்கை செய்வதற்கு அப்பாவும் அம்மாவும் அனுமதித்தபோது நான் கிளர்ச்சி அடைந்தேன்.

அந்த ஆரம்ப காலங்களில், நாங்கள் தகவல் அணிவகுப்புகளில் பங்கெடுத்தோம்; பொய் மதத்தை அம்பலப்படுத்தி கடவுளுடைய ராஜ்யத்தை அறிவிக்கும் வாசகங்களை உடைய அட்டைகளை அணிந்து கொண்டு நகரங்களின் முக்கிய தெருக்களில் நடந்து சென்றோம். கையில் எடுத்துச் செல்லக்கூடிய ஃபோனோகிராஃப்களையும் பயன்படுத்தி, பைபிள் அடிப்படையிலான செய்திகளை வீட்டுக்காரர்களின் வீடுகளிலேயே போட்டுக் காண்பித்தோம். உவாட்ச் டவர் சொஸையிட்டியின் தலைவரான J. F. ரதர்ஃபோர்டின் பேச்சுகளைப் போட்டுக் காண்பிப்போம்; அவற்றில் சிலவற்றை நான் மனப்பாடமாக அறிந்திருந்தேன். அவர் சொன்னது இன்னும் என் நினைவில் உள்ளது: “அடிக்கடி இவ்வாறு சொல்லப்படுகிறது, மதம் ஒரு கண்ணியும் மோசடியும்!”

கனடாவில் எங்களுடைய வேலை தடைசெய்யப்பட்டது

இரண்டாம் உலகப் போரின்போது, நாசி ஜெர்மனியிலும் மற்ற இடங்களிலும் செய்யப்பட்டது போலவே, கனடாவிலும் யெகோவாவின் சாட்சிகளின் வேலை தடைசெய்யப்பட்டது. ஆகையால், நாங்கள் பைபிளை மட்டுமே உபயோகித்தோம்; ஆனால் பைபிள் போதனைகளுக்குக் கீழ்ப்படிபவர்களாக கடவுளால் அங்கீகரிக்கப்பட்ட வேலையைத் தொடர்ந்தோம். (மத்தேயு 28:19, 20; அப்போஸ்தலர் 5:29) எங்களுடைய கூட்டங்களிலும் வீடுகளிலும் போலீஸின் திடீர்சோதனைகளுடன் சமாளிக்க நாங்கள் கற்றுக்கொண்டோம். நீதிபதிகள் முன் சான்றளிப்பதிலும், குறுக்கு விசாரணையாளர்களுக்குப் பதிலளிப்பதிலும் அனுபவமுள்ளவர்களானோம்.

என் அண்ணன் ஜிம்மும் நானும் ஊர்ந்துசெல்லும் வாகனங்களிலிருந்து வாசற்படிகளிலும் முற்றங்களிலும் சிறு புத்தகங்களை எறிவதில் கைதேர்ந்தவர்களானோம். இதோடுகூட, தூதுவர்களாகவும், சில நேரங்களில், ஐக்கிய மாகாணங்களில் மாநாடுகளுக்குச் செல்லும்படி எல்லையைக் கடப்பவர்களுக்குக் காவலாளராகவும் செயல்பட்டோம்.

எங்கள் வீடு, ஒன்டாரியோவிலுள்ள போர்ட் ஆர்தரின் (இப்போது தண்டர் பே) எல்லைப்புறங்களில், மரங்களாலும் புதர்களாலும் சூழப்பட்ட சுமார் ஒரு ஹெக்டேர் நிலத்தில் இருந்தது. நாங்கள் ஒரு பசு, ஒரு கன்றுக்குட்டி, பன்றிகள், கோழிகள் ஆகியவற்றைக் கொண்டிருந்தோம்—இவை யாவும், கடவுளுடைய ராஜ்யத்தைப் பிரசங்கிப்பதற்காகச் சிறையிலிடும்படி தேடப்படும் இளம் உடன் கிறிஸ்தவர்களுக்கு உதவும் எங்கள் வேலைக்கு நல்ல மறைவாகச் செயல்பட்டன.

இரவில், இளம் கிறிஸ்தவர்களைக் கொண்டுவரும் கார்கள், டிரக்குகள், டிரெய்லர்கள் எங்களுடைய ஒதுக்குப்புறத்திலுள்ள இடத்தில் நுழைவதும் போவதுமாக இருக்கும். நாங்கள் இந்த இளைஞரைத் தங்கச்செய்து, மறைத்துவைத்து, அடையாளம் காணப்படாதபடிச் செய்து, உணவளித்து அவர்களுடைய வழியில் அனுப்பி வைப்போம். என்னுடைய தகப்பனும், தாயும், அந்த ஆரம்ப கால மற்ற ஊழியர்களும், யெகோவா தேவனை நேசிக்கவும் சேவிக்கவும் என் இளம் இதயத்தை உருவமைத்த முழுமனதான ஊழியர்களாவர்.

ஆகஸ்ட் 1941-ல், நான் என் வாழ்க்கையை யெகோவாவுக்கென்று ஒப்புக்கொடுத்து, காட்டுப்பகுதியினுள் இருந்த ஒரு சிறிய ஏரியில் முழுக்காட்டப்பட்டேன். இந்தச் சம்பவத்திற்காக எங்களில் அநேகர் ஒரு விளக்கு பொருத்தப்பட்ட அறையில், பிந்திய இரவு நேரத்தில் கூடிவந்திருந்தோம். சந்தேகம் தோன்றியதால், போலீஸ் ரோந்து வந்தனர்; முழுநேரமும் நீடொளி விளக்குகளை வைத்து கவனமாக ஏரியைத் துழாவினர்; ஆனால் எங்களைக் கண்டுபிடிக்கவில்லை.

முழுநேர சேவையின் பல அம்சங்கள்

நான் 1951-ல், மேல்நிலைப் பள்ளி படிப்பை முடித்துவிட்டு, சுமார் 1,600 கிலோமீட்டர் பயணம் செய்து, ஒன்டாரியோவிலுள்ள கோபெர்க்கில் ஒரு பயனியர் நியமிப்பை ஏற்கச் சென்றேன். அங்கு சபை சிறியதாக இருந்தது; எனக்கு பயனியர் துணையாக ஒருவரும் இல்லை. ஆனால் யெகோவாவின் கை குறுகியதாக இல்லை என்பதை ஞாபகத்தில் கொண்டு, நான் ஓர் அறையை வாடகைக்கு எடுத்து, சொந்த சமையல் செய்து, யெகோவாவைச் சேவிப்பதில் மகிழ்ச்சியாக இருந்தேன். அதற்கடுத்த வருடம் டோரன்டோவிலுள்ள உவாட்ச் டவர் சொஸையிட்டியின் கிளை அலுவலகத்தில் சேவிக்கும்படி நான் அழைக்கப்பட்டேன். எதிர்கால ராஜ்ய ஊழியத்திற்கு என்னைப் பண்படுத்திய பல மதிப்பு வாய்ந்த பாடங்களை நான் அங்குக் கற்றுக்கொண்டேன்.

டோரன்டோவில் ஒரு வருடம் சேவித்த பிறகு, லூஸி ட்ரூடியுவும் நானும் திருமணம் செய்து கொண்டோம்; 1954-ன் குளிர்காலத்தில், க்யுபெக்கிலுள்ள லிவெஸில் ஒரு பயனியர் நியமிப்பைப் பெற்றோம். வானிலை மிகக் குளிராக இருந்தது; கலகக் கும்பல்களும் போலீஸ் தாக்குதல்களும் அச்சுறுத்துவதாக இருந்தது; பிரஞ்சு கற்றுக்கொள்வதும் ஒரு சவாலாக இருந்தது. இவை எல்லாவற்றிலும், யெகோவாவின் கை ஒருபோதும் குறுகியதாக இருக்கவில்லை; ஆகவே, கஷ்டமான காலங்கள் இருந்தபோதிலும், கூடவே பல ஆசீர்வாதங்களும் இருந்தன.

உதாரணமாக, 1955-ல் பெரிய சர்வதேச ஐரோப்பிய மாநாடுகளுக்குப் பிரதிநிதிகளைக் கொண்டுச் செல்லுவதற்குப் பயன்படுத்தும்படி சொஸையிட்டி திட்டமிட்டிருந்த இரண்டு கப்பல்களை (எரோஸா ஸ்டார் மற்றும் எரோஸா குல்ம்) பரிசோதிக்கும்படி நாங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டோம். சொஸையிட்டியின் வாடிக்கை ஆதரவைப் பெற விழைந்து, கப்பல் கம்பெனி அதிகாரிகள் அவ்வப்போது எங்களை உபசரித்தனர்; அந்தச் சமயத்தில் க்யுபெக்கிலிருந்த அழுத்தம் நிறைந்த ஊழியத்திலிருந்து ஓர் இன்பமான இடை ஓய்வாக அது இருந்தது.

நான் 1955-ன் கடைசியில், பயணக் கண்காணியாகச் சேவிக்கும்படி அழைக்கப்பட்டேன்; கடுங்குளிர் நிறைந்த வட ஒன்டாரியோவிலுள்ள தொலைதூரத்து சபைகளைச் சந்தித்து அந்தக் குளிர்காலத்தைக் கழித்தோம். அதற்கடுத்த வருடம், ஐக்கிய மாகாணங்களில் உவாட்ச்டவர் பைபிள் ஸ்கூல் ஆஃப் கிலியடிற்குச் சென்றோம்; அதன் பின்னர் தென் அமெரிக்காவிலுள்ள பிரேஸிலில் நாங்கள் மிஷனரிகளாக நியமிக்கப்பட்டோம்.

எங்கள் புதிய நியமிப்பில் நாங்கள் முழுமூச்சாக இறங்கிவிட்டோம்; விரைவில் போர்ச்சுகீஸிய மொழியில் பிரசங்கிக்கவும் கற்பிக்கவும் முடிந்தது. திரும்பவும், 1957-ன் ஆரம்பத்தில், பயணக் கண்காணியாக வேலை செய்யும்படி நியமிக்கப்பட்டேன். இப்போது, தெற்கின் கடுங்குளிருக்குப் பதிலாக, கொப்புளிக்கும் வெயிலை சமாளிக்க வேண்டியதாய் இருந்தது. பல தடவைகள் நாங்கள் நின்று, சுடும் மணலை எங்கள் ஷூக்களிலிருந்து தட்ட அல்லது எங்களுக்கு புத்துணர்வூட்ட கரும்பை வெட்டி சவைக்க வேண்டியதாய் இருந்தது. ஆனால் ஆசீர்வாதங்கள் இருந்தன.

ரேசென்டி ஃபேசூ என்ற நகரில், நான் தலைமை போலீஸ் அதிகாரியிடம் பேசினேன்; அவர் எல்லா கடைகளையும் அடைக்கும்படி உத்தரவிட்டு எல்லாரையும் நகர சதுக்கத்திற்கு வரும்படி சொன்னார். அகன்ற இலைகளையுடைய பூக்கும் மரத்தின் நிழலின்கீழ், நகர மக்கள் அனைவருக்கும் நான் ஒரு பைபிள் பேச்சைக் கொடுத்தேன். இன்று அங்கு சாட்சிகளாலான ஒரு சபை இருக்கிறது.

பிரேஸிலில் எங்களுடைய பிள்ளைகளை வளர்த்தல்

லூஸி கர்ப்பமாக இருந்தபோது, 1958-ல், நாங்கள் ஸ்வீஸ் டீ ஃபோராவில் தங்கி விசேஷித்த பயனியர்களாகச் சேவித்தோம். அடுத்த இரண்டு வருடங்களில், எங்கள் மகள்களாகிய சூசனும் கிம்மும் பிறந்தனர். அவர்கள் நகரில் ஒரு புதுமையாகத் திகழ்ந்து, ஊழியத்தில் எங்களுக்கு ஓர் உண்மையான ஆசீர்வாதமாக இருந்தனர். தளம் பாவப்பட்ட தெருக்கள் வழியாக நாங்கள் அவர்களைத் தள்ளுவண்டியில் தள்ளிக்கொண்டு செல்கையில், அவர்களைப் பார்க்கும்படி மக்கள் வெளியே வருவார்கள். நிலநடுக்கோட்டிற்கு சற்று தெற்கில், ரசீஃபாவில் ராஜ்ய பிரஸ்தாபிகளுக்கான தேவை அதிகமாக இருந்ததால் நாங்கள் அந்தக் கடுஞ்சூடான இடத்திற்கு மாறிச்சென்றோம்.

பின்னர், 1961-ல், சாவோ போலோவிலுள்ள மாநாட்டுக்குச் செல்லும் சாட்சிகளுக்கு விமான போக்குவரத்தை ஏற்பாடு செய்ய உதவுவது மட்டுமல்லாமல், நான் தானே அந்த மறக்கமுடியாத மாநாட்டில் ஆஜராயிருக்கவும் முடிந்தது. சுமார் 20 நிமிடங்கள் விமானத்தில் சென்றபின், அது திடீரென்று நிலத்தினிடமாகச் சுற்றிக்கொண்டு, பயணிகளை அவ்வறையில் அங்குமிங்குமாக தூக்கிப்போட்டது. விமானத்தின் உட்புறம் சிதைவுற்றது; இருக்கைகள் அவற்றின் பிணைப்புகளிலிருந்து பிடுங்கப்பட்டன; பயணிகள் காயப்பட்டு, இரத்தக் கசிவுகளுடன் இருந்தனர். மகிழ்ச்சிக்குரியவிதத்தில், அந்த விமானியால் விமானம் விழாமல் பார்த்துக் கொள்ள முடிந்தது; நாங்கள் பத்திரமாக தரை இறங்கினோம். மற்றொரு விமானத்தில் சாவோ பாலோவுக்கு செல்ல முடியாத அளவிற்கு எங்களில் எவரும் அவ்வளவு பலத்த காயமுடையவர்களாயில்லை. நாங்கள் ஒரு நல்ல மாநாட்டை அனுபவித்து மகிழ்ந்தோம்; ஆனால் இனி ஒருபோதும் விமானத்தில் செல்லமாட்டேன் என்று நான் சொன்னேன்!

இருந்தாலும், நான் மாநாட்டிலிருந்து வீடு திரும்பியபோது, மற்றொரு நியமிப்பு எனக்காகக் காத்திருந்தது. காட்டுப்பகுதியினுள் பியாயூ மாநிலத்தில் டெரிஸினா என்ற இடத்தில் ஒரு மாநாட்டை நான் கவனிக்க வேண்டும். நான் அங்கு விமானத்தில் செல்ல வேண்டும். பயமாக இருந்தாலும், யெகோவாவின் கையில் சார்ந்துகொண்டு, அந்த நியமிப்பை ஏற்றுக்கொண்டேன்.

ரசீஃபாவில், 1962-ல் எங்கள் மகனாகிய க்ரேக் பிறந்தான். நான் இப்போது ஒரு வளரும் குடும்பத்தைக் கொண்டிருந்தபடியால் என்னால் அதற்குமேலும் பயனியர் செய்ய முடியாதபோதிலும், அந்தச் சிறிய சபையின்மேல் ஒரு நல்ல விளைவை ஏற்படுத்த முடிந்தது. பிள்ளைகள் எப்போதும் ஊழியத்தில் எங்களுடன் சேர்ந்துகொள்ள விரும்பினர், ஏனென்றால் நாங்கள் அதை அவர்களுக்கு இன்பகரமானதாக ஆக்கினோம். ஒவ்வொருவராலும் மூன்று வயதிலிருந்தே வீடுகளில் தங்களுடைய பிரசங்கத்தை அளிக்க முடிந்தது. கூட்டங்களுக்குச் செல்வதையோ வெளி ஊழியத்தில் பங்கெடுப்பதையோ தவறவிடாமல் இருப்பதை நாங்கள் ஒரு பழக்கமாக்கிக்கொண்டோம். குடும்பத்தில் ஒருவர் நோய்வாய்ப்பட்டிருக்கையில்கூட, மற்றொருவர் அவருடன் வீட்டில் இருப்பார்; மற்றவர்கள் கூட்டங்களில் கலந்துகொள்ள அல்லது வெளி ஊழியத்தில் பங்கெடுக்க செல்வர்.

வருடங்களினூடே, நாங்கள் ஒரு குடும்பமாக, பிள்ளைகளின் பள்ளி பாடத்திட்டங்களையும் வாழ்க்கையில் அவர்களுடைய இலக்குகளையும் குறித்து ஒழுங்காகக் கலந்தாலோசித்து, யெகோவாவின் அமைப்போடு தங்கள் வாழ்க்கைத் தொழிலைக் கொண்டிருக்கும்படி தயார் செய்தோம். தொலைக்காட்சி போன்ற பலவீனப்படுத்தும் செல்வாக்குகளுக்கு அவர்கள் வெளிப்படுத்தப்படாமல் கவனித்துக் கொண்டோம். பிள்ளைகள் இளைஞராக வளரும் வரையில் எங்கள் வீட்டில் நாங்கள் டிவி-யைக் கொண்டிருக்கவில்லை. பொருளாதார காரியங்களுக்கான மூலங்கள் இருந்தபோதிலும் அவற்றால் நாங்கள் அவர்களைக் கெடுக்கவில்லை. உதாரணமாக, நாங்கள் ஒரே ஒரு சைக்கிளை வாங்கி, மூவரும் அதைப் பயன்படுத்தச் செய்தோம்.

எங்களால் முடிந்தவரை காரியங்களைச் சேர்ந்து செய்தோம், கூடைப்பந்தாட்டம், நீச்சல், குடும்பப் பயணங்களை மேற்கொள்ளுதல் ஆகியவை. எங்களுடைய பயணங்கள் கிறிஸ்தவ மாநாடுகளுக்குச் செல்லுதல் தொடர்பாக அல்லது பல்வேறு நாடுகளிலுள்ள பெத்தேல் வீடுகளைப் பார்க்கச் செல்வதற்காக செய்யப்பட்டன. இந்தப் பயணங்கள், லூஸியும் நானும் எங்கள் பிள்ளைகளின் இருதயத்தில் என்ன இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கு, மனந்திறந்து பேசுவதற்குரிய வாய்ப்புகளாக இருந்தன. அந்த மகிழ்ச்சியான வருடங்களுக்காக நாங்கள் யெகோவாவுக்கு மிகவும் நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம்!

காலப்போக்கில், நிலநடுக்கோட்டின் அருகே வெப்பமண்டலப் பகுதிகளில் பத்து வருடங்கள் தங்கியது, லூஸியின் உடல்நலத்தின்மீது ஒரு கெடுதலான பாதிப்பைக் கொண்டிருந்தது. ஆகவே, அதிக மிதமான சீதோஷண நிலையை உடைய தெற்கில், பரானா மாநிலத்திலுள்ள குரிடிபாவுக்கு கிடைத்த மாற்றல் நியமிப்பை நாங்கள் வரவேற்றோம்.

கனடாவுக்குத் திரும்புதல்

சுமார் 20 வருடங்கள் பிரேஸிலில் இருந்த பிறகு, 1977-ல், நோய்வாய்ப்பட்டிருக்கும் என் தந்தையைக் கவனிப்பதற்காக, லூஸியும் நானும் எங்களுடைய பிள்ளைகளுடன் கனடாவுக்குத் திரும்பினோம். அது எங்கள் குடும்பத்திற்கு எவ்வளவு வேறுபட்ட ஒரு கலாச்சார சூழல்! ஆனால் ஆவிக்குரிய விதத்தில் அது எந்த வேறுபாட்டையும் உண்டாக்கவில்லை, ஏனென்றால் அன்பான கிறிஸ்தவ சகோதரத்துவத்துடன் நாங்கள் அதே வழக்கத்தைக் காத்துக்கொண்டோம்.

கனடாவில் முழுநேர ஊழியம் எங்கள் முழு குடும்பத்தையும் உட்படுத்தியது; ஏனென்றால் எங்கள் மகள்கள் முறையே முழுநேர ஊழியத்திற்குள் நுழைந்தனர். எங்கள் குடும்ப முயற்சியில் நாங்கள் எல்லாரும் பாகம் வகித்தோம். பகுதிநேர வேலையிலிருந்து கிடைக்கும் எந்த வருவாயும் செலவு நிதியில் சேர்க்கப்பட்டு, வீட்டையும் எங்களுடைய சிதறியிருக்கும் பிராந்தியத்திற்குச் செல்வதற்குத் தேவைப்படும் மூன்று வாகனங்களையும் பராமரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டது. ஒவ்வொரு வாரமும் எங்களுடைய குடும்ப பைபிள் படிப்பிற்குப் பின், எங்கள் குடும்பத் திட்டங்களை நாங்கள் கலந்தாலோசித்தோம். நாங்கள் எங்கு போகிறோம், வாழ்க்கையைக் கொண்டு என்ன செய்கிறோம் என்பதை எல்லாருக்கும் தெளிவுபடுத்த இந்தக் கலந்தாலோசிப்புகள் உதவி செய்தன.

எங்கள் மகன் க்ரேக்கும், தன் மூத்த சகோதரிகளைப் போலவே, முழுநேர ஊழியத்தைத் தன் இலக்காகக் கொண்டிருந்தான். அவன் ஐந்து வயதாக இருந்தது முதற்கொண்டே, பெத்தேல் என்றழைக்கப்பட்ட சொஸையிட்டியின் கிளை அலுவலகம் ஒன்றில் வேலை செய்ய விருப்பம் தெரிவித்தான். அவன் ஒருபோதும் அந்த இலக்கிலிருந்து விலகவில்லை; மேல்நிலைப் பள்ளி படிப்பை முடித்ததும், அவனுடைய தாயையும் என்னையும் பார்த்துக் கேட்டான்: “நான் பெத்தேலுக்கு விண்ணப்பிக்கவேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?”

எங்கள் மகன் எங்களைவிட்டுப் போவதை அனுமதிப்பது எங்களுடைய உணர்ச்சிகளைத் தொட்டபோதும், நாங்கள் தயக்கமின்றி பதிலளித்தோம்: “பெத்தேலில் உணருவதுபோல் வேறெங்கும் அந்த அளவிற்கு யெகோவாவின் கையை நீ உணர முடியாது—அது யெகோவாவின் அமைப்பின் மையம்.” இரண்டே மாதங்களில் அவன் கனடா பெத்தேலுக்குப் போய்விட்டான். அது 1980-ல்; அப்போது முதற்கொண்டு அவன் அங்கே சேவித்துவருகிறான்.

லூஸிக்கும் எனக்கும் 1980-கள் புதிய சவால்களைக் கொண்டுவந்தது. நாங்கள் எங்கு ஆரம்பித்தோமோ அங்கே வந்துவிட்டோம்—நாங்கள் இருவர் மட்டும். அந்தச் சமயத்திற்குள், சூசன் திருமணம் செய்து தன் கணவனுடன் பயனியர் செய்து கொண்டிருக்கிறாள்; கிம் மற்றும் க்ரேக் இருவரும் பெத்தேலில் சேவித்துக்கொண்டிருக்கிறார்கள். நாங்கள் என்ன செய்வோம்? அந்தக் கேள்வி சீக்கிரத்தில், 1981-ல், நாங்கள் ஒரு போர்ச்சுகீஸிய வட்டாரத்தைச் சேவிக்கும்படி அழைக்கப்பட்டபோது பதிலளிக்கப்பட்டது; அது கனடாவின் சுமார் 2,000 கிலோமீட்டருக்குப் பரந்ததாய் இருந்தது. நாங்கள் இன்னும் பயண வேலையை அனுபவித்துக் களிக்கிறோம்.

பின்னர் கிம் திருமணம் செய்து, கிலியடுக்குச் சென்று, இப்போது பிரேஸிலில் தன் கணவனுடன் வட்டார வேலையில் சேவிக்கிறாள். சூசனும் அவள் கணவனும் இன்னும் கனடாவில், தங்கள் இரு பிள்ளைகளையும் வளர்த்துக்கொண்டு இருக்கிறார்கள்; சூசனின் கணவர் பயனியர் செய்கிறார். சமீப வருடங்களில், முழுநேர ஊழிய நியமிப்புகள் காரணமாக, எங்கள் குடும்பம் சொல்லர்த்தத்தில் பிரிக்கப்பட்டிருந்தாலும் நாங்கள் ஆவிக்குரிய வகையிலும் உணர்ச்சிப்பூர்வமாகவும் நெருங்கியவர்களாய் நிலைத்திருக்கிறோம்.

சுத்திகரிக்கப்பட்ட பூமியில் லூஸியும் நானும் எங்கள் குடும்பத்துடன் ஓர் ஒளிமயமான எதிர்காலத்தை எதிர்நோக்கி இருக்கிறோம். (2 பேதுரு 3:13) பண்டைய காலத்தில் மோசேயைப் போலவே, எண்ணாகமம் 11:23-ல் (NW) உள்ள உணர்ச்சிக் குறிப்புவினாவுக்கான பதிலின் உண்மையை நேரடியாக அனுபவித்திருக்கிறோம்: “யெகோவாவின் கை குறுகியிருக்கிறதோ? நான் சொல்லுகிறது உனக்கு நடக்குமோ நடக்காதோ என்று நீ இப்போது காண்பாய்.” உண்மையில், தங்களுடைய முழு இருதயத்தோடான சேவைக்காக யெகோவா தம்முடைய ஊழியர்களை ஆசீர்வதிப்பதிலிருந்து எதுவும் அவரைத் தடுக்க முடியாது.

[பக்கம் 25-ன் படம்]

என்னுடைய மனைவி லூஸியுடன்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்