ராஜ்ய பிரஸ்தாபிகளின் அறிக்கை
“தேவன் பட்சபாதமுள்ளவரல்ல”
பத்தொன்பது நூற்றாண்டுகளுக்கு முன்பு, ஆவியினால் ஏவப்பட்ட அப்போஸ்தலன் பவுல் சொன்னார்: ‘தேவன் பட்சபாதமுள்ளவரல்ல. எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன்.’ (அப்போஸ்தலர் 10:34, 35) எல்லா இனங்களிலிருந்தும் மத பின்னணிகளிலிருந்தும் வந்த மக்களை யெகோவாவின் சாட்சிகள் மத்தியில் காணலாம். அவர்கள் நீதியை நேசிக்கின்றனர். மேலும் அவர்கள் தேவனுக்குப் பயப்படுகின்றனர். யெகோவா அவர்கள் அனைவரையும் புதிய உலக சமுதாயத்துக்குள், உதாரணமாக சாத்திலுள்ள ஒரு பெண்ணுக்குச் செய்ததுபோல, வரவேற்கிறார்.
இந்தப் பெண் தன்னுடைய மதத்தில் திருப்தி பெறவில்லை. வருடங்களுக்கு முன்பாக, அவள் யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட, உன் இளமை—அதை மிக நன்றாய்ப் பயன்படுத்துதல் புத்தகத்தின் ஒரு பிரதியைப் பெற்றிருந்தாள். அந்தப் புத்தகத்தில் இருந்த நல்ல ஆலோசனைகளைப் போற்றினாள். ஒரு பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது, அவள் படிப்பிற்கு ஒருபோதும் தவறியதில்லை. எனினும், ராஜ்யமன்றக் கூட்டங்களுக்கு வரும்படி உற்சாகப்படுத்தப்பட்டபோது, அவள் வரவில்லை. ஏன்? அவளுடைய கணவன் அவள் படிப்பதை எதிர்க்காவிட்டாலும், ராஜ்ய மன்றத்தில் கூட்டங்களுக்குப் போக அனுமதிதர மறுத்தார்.
மனைவி வட்டார அசெம்பிளிக்குப் போக விரும்பியபோது, படிப்பை நடத்திவந்த சாட்சி அந்தக் கணவரிடம் நிகழ்ச்சிநிரலைக் காண்பித்து, கொடுக்கப்படப்போகும் அருமையான புத்திமதியை விளக்கிக் காண்பித்தார். அவர் தன் மனைவி “ஒருமுறை மட்டும்” போவதற்குச் சம்மதித்தார். அவள் போய், நிகழ்ச்சிநிரலை முற்றிலுமாக அனுபவித்தாள். அவள் என்ன கற்றுக்கொண்டாள் என்பதை தன்னுடைய கணவனுடன் சொன்னபோது, அவள் மற்ற கூட்டங்களுக்குப் போய்வருவதற்கு அவர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஒருவருக்கொருவர் ஆழமான அக்கறைகாண்பித்த வித்தியாசமான இனத்தைச் சேர்ந்த மக்களை உடையதாய் சபை இருந்தது என்ற உண்மையினால் அவள் கவரப்பட்டாள். பின்னர் மாவட்ட மாநாட்டிற்கு வந்திருந்தாள். அவளுடைய பிள்ளைகள்தாமே மற்ற நாடுகளிலிருந்து வந்திருந்த சாட்சிகளின் மடிகளில் உட்கார்ந்திருப்பதைக் கண்டு பூரித்துப்போனாள். அந்தப் பிள்ளைகளோடு சாட்சிகள் உணவுகளைப் பகிர்ந்துண்டனர். குடும்பத்தினர்போல் அவர்களை நடத்தினர். இது அவளுக்கு ஒரு திருப்புக்கட்டமாக இருந்தது.
ஆனால் எதிர்ப்பு பின்தொடர்ந்தது. இயற்கையாகவே பயந்த சுபாவமுடையவளாக இருந்தபோதிலும், அவள் கூட்டங்களில் குறிப்புகள் சொல்லவும், சொந்தக்காரர்களும் அயலகத்தாரும் எதிர்மறையான குறிப்புகளைக் கூறுகையில் தைரியமாக மேற்கொள்ளவும் ஆரம்பித்தாள். அவள் தன்னுடைய கணவனோடு பல வருடங்கள் வாழ்ந்திருந்த போதிலும், அவர்கள் பாரம்பரியத்திற்கு ஒத்துப்போகும் திருமண வாழ்க்கையையே வாழ்ந்து வந்தனர். சட்டப்படி திருமணஞ்செய்து கொள்ளும் பேச்சை அவள் எப்படித் துவக்குவது? யெகோவா தேவனிடம் உண்மையுடன் ஜெபித்தப் பிறகு, அவள் தன்னுடைய கணவனிடம் பேசினாள். முடியுமா என்று பார்க்கிறேன் என்று அவர் சொன்னார். இறுதியில் அவர் அதைச் செய்தார். அந்தத் தம்பதியினர் சட்டப்பிரகாரம் திருமணம் செய்துகொண்டனர்.
அவர்களோடு வாழ்ந்து வந்த கணவனின் சகோதரி, பல பிரச்னைகளை உருவாக்கினாள். ஆனால் அந்தக் கணவன் தன்னுடைய மனைவியின் சார்பாக நிலைநிற்கை எடுத்தார். பிறகு, கணவனின் அப்பா பார்க்க வந்திருந்தார். அவர் தன் மகன் அவனுடைய மனைவியை, அவள் மதம் மாறியிருப்பதால், விவாகரத்துச் செய்யவேண்டும் என்று கட்டளையிட்டார். அந்தத் தகப்பன் மகனிடம், “இவளைவிட நல்ல மனைவிக்கு” மணமகள்-விலை தருவதாக சொன்னார். மகனுடைய பதில்: “இல்லை, நான் அப்படிச் செய்ய மாட்டேன். அவள் நல்ல மனைவி. அவள் போக விரும்பினாள், அது வேறுவிஷயம். ஆனால் நான் அவளைப் போகும்படி சொல்ல மாட்டேன்,” என்பதாக இருந்தது. அந்த மனைவி மாமனாரிடம் மிகவும் அடக்கத்துடன் நடந்துகொண்டாள். அவர் தன் நடத்தையைக் குறித்து வெட்கப்பட்டார். எனினும், அவர் தன்னுடைய கிராமத்திற்கு திரும்பிப் போன பிறகு, தன் மகனுக்கு இறுதி வரம்பு நாள் குறித்து எழுதினார். அவர் சொன்னதாவது, அவருடைய மகன் அவனுடைய மனைவியை வெளியே துரத்திவிட மறுத்தால், அவன் இனிமேலும் மகன் அல்ல என்பதாகும். மீண்டும் மகன் தன்னுடைய மனைவிக்குச் சாதகமாக நிலைநிற்கை எடுத்தார். கணவன் இப்படிப்பட்ட தீர்மானமான நிலைநிற்கை எடுப்பதைக் காணும் மனைவியின் மகிழ்ச்சியை நீங்கள் கற்பனை செய்து பாருங்கள்.
இப்போது அவர்களுடைய இரண்டு குட்டிப் பையன்கள் தங்களுடைய அம்மாவோடு ராஜ்ய மன்றத்திற்குப் போக ஆவலாய் இருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய அப்பாவிடம் கழுத்து டைகளுக்காகவும் கேட்டார்கள். ஏனென்றால், பேச்சுக் கொடுக்கிற சகோதரர்கள் அனைவரும் அவற்றை அணிந்திருப்பதைக் கண்டார்கள். இன்று, இந்தப் பெண் ஒரு முழுக்காட்டுதல் எடுத்த சகோதரியாக இருக்கிறாள்.
சாத்தில் யெகோவாவின் ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியைப் பிரஸ்தாபப்படுத்தி, “தேவன் பட்சபாதமுள்ளவரல்ல” என்பதை உண்மையில் போற்றும் 345 மகிழ்ச்சிமிக்க சாட்சிகளில் அவள் ஒருத்தி.