உலகெங்குமுள்ள யெகோவாவின் சாட்சிகள்—தாய்லாந்து
“விடுதலையானவர்களின் நாடு.” தாய்லாந்து என்ற பெயரின் அர்த்தம் அதுவே. அங்குக் குடியிருக்கும் 5,70,00,000-க்கும் மேலான ஆட்கள், வெவ்வேறான மதக் கொள்கைகளை கடைப்பிடிக்கிறார்கள்; அன்புள்ளவர்களாகவும் கடினமாக உழைக்கிறவர்களாகவும் இருக்கிறார்கள் இம்மக்கள். புத்தமதம் தழைத்தோங்கினாலும், இந்தத் தென்கிழக்கு ஆசிய நாட்டில் கிறிஸ்தவமண்டல மதங்களும் பின்பற்றப்படுகின்றன. இவர்களெல்லாரும் கடவுளுடைய ராஜ்யத்தைப்பற்றிய நற்செய்தியைக் கேட்கவேண்டும்.—மத்தேயு 24:14.a
அகதிகள் நற்செய்தியைக் கேட்கிறார்கள்
மயன்மார் எல்லைப்பகுதியினூடே உள்ள தாய்லாந்து மலைகள் எங்கும் சிதறி காணப்படுகிற முகாம்களில் வசித்துவரும் 10,000-க்கும் அதிகமான கரன் அகதிகள் மத்தியில் பைபிள் சத்தியம் சூடுபிடித்து வருகிறது. அப்பகுதியில் வசிக்கும் கரன் குடும்பத்தினர்களில் ஒரு குடும்பத்தினர் யெகோவாவின் சாட்சிகளாயிருக்கிறார்கள். இவர்கள் அகதிகளுக்கு நற்செய்தியை பிரஸ்தாபித்து வந்திருக்கிறார்கள். அவர்களுடைய வேலை எவ்வாறு துவங்கியது?
பல வருஷங்களுக்கு முன்பு, ஒரு பருவவயது பையன் ஆங்கிலிக்கன் சர்ச்சோடு தொடர்பறுத்துக்கொண்டு, யெகோவாவின் சாட்சியாக மாறினான். சொந்தக்காரர்கள், தங்களுடைய பாதிரியின் தூண்டுதலினால் அவனை எதிர்க்கத் துவங்கினார்கள். எனினும், அவன் பொறுமையோடே சகித்ததினால், அவனுடைய குடும்பத்திலிருந்து வந்த எதிர்ப்பு மெதுவாகக் குறைந்தது. அந்த ஆங்கிலிக்கன் சர்ச்சைச் சேர்ந்த மதகுருக்கள் தொடர்ந்து அவனைக் கேலிசெய்து வந்தார்கள்; ஒழுக்கக்கேடான நடத்தையின் காரணமாக சுமார் இரண்டு வருஷத்துக்கு முன்பு தாங்கள் பதவியிலிருந்து நீக்கப்படும்வரையாக அவனைக் கேலி செய்தார்கள். இதனால் அப்போது சர்ச்சில் மேய்ப்பனில்லாததால், இந்தச் சாட்சியினுடைய சொந்த குடும்பமும் மற்றச் சொந்தக்காரர்களும் திடுக்கிட்ட நிலையில் உதவியற்றவர்களாய் தங்களைக் கண்டனர். பதினோரு பேர் சர்ச்சை விட்டு விலகி, சாட்சிகள் தங்களோடு வந்து படிப்பு நடத்தும்படி கேட்டுக்கொண்டனர்.
இந்தப் படிப்பு நன்றாகத் தொடர்ந்தது. மற்ற அகதிகளும் இதில் கலந்துகொண்டனர். சத்தியம் வேகமாக பரவத் துவங்கியது. இதனால் அகதி முகாமினூடே பாயும் ஆற்றில் 17 புதிய சாட்சிகள் முழுக்காட்டப்பட்டனர். அவர்களோடு சேர்ந்து 88 வயதுள்ள ஒரு பாட்டியம்மா முழுக்காட்டுதல் பெற்றது, என்னே ஓர் கண்ணுக்கினிய காட்சி!
வீடியோ அக்கறையைத் தூண்டிவிடுகிறது
அகதிகளுக்கிடையில் முன்னேற்றத்திற்கான சாத்தியம் அதிகமாயிருக்கிறது. 1993-ல் நடைபெற்ற நினைவு ஆசரிப்பு நிகழ்ச்சிக்கு 57 பேர் வந்திருந்தார்கள். அவ்வருடம் மே மாதத்தில் நடைபெற்ற வட்டாரக் கண்காணியின் சந்திப்பின்போது, அவர் கொடுத்த ஒரு பேச்சுக்கு 67 பேர் கூடிவந்திருந்தார்கள். யெகோவாவின் சாட்சிகள்—அந்தப் பெயருக்குப் பின்னாலிருக்கும் அமைப்பு (Jehovah’s Witnesses—The Organization Behind the Name) என்ற உவாட்ச்டவர் சங்கத்தின் வீடியோவைப் பார்ப்பதற்கு சுமார் 250 பேர் ஒன்றுகூடியிருந்தார்கள்.
அகதி முகாமிலிருந்த பாப்டிஸ்ட் மதப்பிரிவைச்சேர்ந்த பாஸ்டரின் மனைவி, சாட்சிகள் ஏற்பாடுசெய்த ஒரு பைபிள் பொதுப் பேச்சைக் கேட்கச் சென்று, அங்குப் பேசப்பட்ட பைபிள் வசனங்களை எழுதிக்கொண்டாள். தங்களுடைய சர்ச்சில் அதே பிரசங்கங்களைக் கேட்டுக் கேட்டு வெறுத்துவிட்டதாக அவள் தன்னுடைய கணவனிடம் சொன்னாள். அவள் யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களுக்கு செல்வாளாகில், அப்பகுதியில் வசிக்கும் சர்ச் ஆட்கள் எல்லாரும் அவளைப் பின்தொடருவார்கள் என்று சொல்லி, அவளைப் போகவேண்டாமென்று அவர் சொன்னார். அவள் திரும்பவும் கூட்டங்களுக்கு சென்றபோது, அவளுடைய கணவன் கத்தியோடு அவளைத் துரத்திப்பிடித்து, கூட்டங்களுக்கு எடுத்துச்சென்ற குறிப்பேட்டையும் பைபிள் பிரசுரங்களையும் கொளுத்திப்போட்டார். அப்படியிருந்தும், அவள் அந்த வீடியோ காட்சி காட்டப்படுகையில், திரும்பவும் சென்றாள். அதற்குப் பிறகு இந்தப் பெண் தான் பார்த்ததைப் பற்றி தன் கணவனிடம் சொன்னாள். மனமாற்றப்பட்டவராக, அவரும் வீடியோவைப் பார்க்கவேண்டுமென்று ஆசைப்பட்டார். பின்னர், அவளுடைய குறிப்பேட்டையும் பைபிள் பிரசுரங்களையும் கொளுத்திப்போட்டதற்காக வருத்தப்பட்டார்.
இப்படியாக தாய்லாந்திலும் மக்கள் நற்செய்தியைக் கேட்கிறார்கள். இவ்வாறு, “விடுதலையானவர்களின் நாட்”டில் அவர்கள் ஆவிக்குரிய விடுவிப்பைப் பெற்று வருகிறார்கள்.—யோவான் 8:32.
[அடிக்குறிப்புகள்]
a கூடுதலாக விஷயங்களுக்கு, 1994 யெகோவாவின் சாட்சிகளுடைய நாட்காட்டியைப் பாருங்கள்.
[பக்கம் 24-ன் பெட்டி]
நாட்டு விவரம் 1993 ஊழிய ஆண்டு
சாட்சிகொடுப்பவரின் உச்ச எண்ணிக்கை: 1,434
விகிதம்: 40,299-க்கு 1 சாட்சி
நினைவு ஆசரிப்பிற்கு வந்திருந்தோர்: 3,342
சராசரி பயனியர் பிரஸ்தாபிகள்: 232
சராசரி பைபிள் படிப்புகள்: 1,489
முழுக்காட்டப்பட்டவர்களின் எண்ணிக்கை: 92
சபைகளின் எண்ணிக்கை: 39
கிளை அலுவலகம்: பாங்காக்
[பக்கம் 25-ன் படம்]
ராஜ்ய பிரஸ்தாபிகள் வைராக்கியத்துடன் நற்செய்தியைப் பிரசங்கிக்கிறார்கள்
[பக்கம் 25-ன் படம்]
முதல் கிளை அலுவலகம், 1947
[பக்கம் 25-ன் படம்]
பிப்ரவரி 8, 1992-ல் பிரதிஷ்டை செய்யப்பட்ட பாங்காக்-ல் உள்ள புதிய கிளை அலுவலகத்திற்கு முன்பு நிற்கும் பெத்தேல் குடும்பம்