நீங்கள் சரியான மதத்தைக் கண்டடைந்தீர்களா?
“நமது கடவுளும் பிதாவுமானவரின் முன்னிலையில் மாசற்ற சுத்தமான தெய்வவழிபாடு இதுவே.”—யாக்கோபு 1:27, தி.மொ.
1, 2. (அ) பல ஆட்களின் சிந்தனையில் தங்களுடையது சரியான மதமா என்பதை எது தீர்மானிக்கிறது? (ஆ) மதத்தைத் தீர்மானிப்பதில் எதைக் கருத்தார்ந்த முறையில் கவனிக்க வேண்டும்?
மதத்திற்குப் பலர் தங்கள் வாழ்க்கையில் சிறிய பாகமே கொடுப்பதில் திருப்தியடையும் ஒரு சகாப்தத்தில் நாம் வாழ்கிறோம். அவர்கள் ஒருவேளை ஏதாவது மத ஆராதனைகளுக்குச் செல்லலாம், ஆனால் சிலரே அவ்வாறு ஒழுங்காகச் செல்கின்றனர். மற்ற எல்லா மதங்களும் தவறானவை தங்களுடையதே சரியானதென்ற கருத்தை உடையோராகப் பெரும்பான்மையர் இல்லை. தங்கள் மதம் தங்களுக்குச் சரியானதென்று மாத்திரமே அவர்கள் உணரக்கூடும்.
2 இதைக் கவனிக்கையில், நீங்கள் சரியான மதத்தைக் கண்டடைந்தீர்களா என்ற கேள்வி, உங்களுக்கு விருப்பமான ஒரு மதத்தை நீங்கள் கண்டடைந்தீர்களா என்றுதானே பொருள்படுகிறதா? உங்களுக்கு விருப்பமானதை எது தீர்மானிக்கிறது? உங்கள் குடும்பமா? உங்கள் கூட்டாளிகளா? உங்கள் சொந்த உணர்ச்சிகளா? இந்தக் காரியத்தில் கடவுளுடைய கருத்துக்கு எவ்வளவு கவனமாய் நீங்கள் சிந்தனை செலுத்தியிருக்கிறீர்கள்?
கடவுளுடைய நோக்குநிலையை நாம் எவ்வாறு அறியலாம்?
3. (அ) கடவுளுடைய நோக்குநிலையை நாம் அறியவேண்டுமானால், எது நமக்குக் கிடைக்கக்கூடியதாக இருக்க வேண்டும்? (ஆ) பைபிள் கடவுளால் அருளப்பட்டதென்று நாம்தாமே ஏன் நம்புகிறோமென்பதற்கு என்ன கேள்விகளை நாம் கேட்டுக்கொள்ள வேண்டும்?
3 கடவுள்தாமே என்ன நினைக்கிறாரென நாம் அறியவேண்டுமென்றால், அவரிடமிருந்து ஏதாவது வெளிப்படுத்துதல் இருக்க வேண்டும். பைபிள் கடவுளால் ஏவப்பட்டெழுதப்பட்டதென நிச்சயமாய்ச் சொல்லப்படுகிற மிகப் பூர்வ புத்தகம். (2 தீமோத்தேயு 3:16, 17) ஆனால், மற்ற எல்லாவற்றிற்கும் மாறுபட்டதாக, இந்தப் புத்தகம் மனிதகுலம் முழுவதற்குமுரிய கடவுளுடைய செய்தி அடங்கியதாக உள்ளதென உண்மையாய்ச் சொல்லக்கூடுமா? இந்தக் கேள்விக்கு நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள், ஏன்? உங்கள் பெற்றோர் அவ்வாறு எண்ணினதனிமித்தமா? உங்கள் கூட்டாளிகளின் மனப்பான்மையினிமித்தமா? அதற்கான அத்தாட்சியை நீங்கள்தாமே ஆராய்ந்து பார்த்திருக்கிறீர்களா? பின்வரும் நான்கு வழிகளான அத்தாட்சிகளைப் பயன்படுத்தி அதை இப்பொழுது செய்யலாமல்லவா?
4. கிடைக்கக்கூடியத் தன்மையைக் குறித்ததில், வேறு எந்தப் புத்தகமுமல்ல, பைபிளே கடவுளால் அருளப்பட்டதென எது குறிப்பிட்டுக் காட்டுகிறது?
4 கிடைக்கக்கூடியத் தன்மை: உண்மையில் கடவுளிடமிருந்து வருவதும் மனிதகுலம் முழுவதற்குரியதுமான ஒரு செய்தி அவர்களுக்கு எளிதில் கிடைக்கக்கூடியதாக இருக்க வேண்டும். பைபிளைக் குறித்து இது உண்மையாக உள்ளதா? இதைக் கவனியுங்கள்: பைபிள், முழுமையாக அல்லது சில பாகங்களாக, 2,000-த்துக்கும் மேலான மொழிகளில் இப்பொழுது பிரசுரிக்கப்படுகிறது. அமெரிக்கன் பைபிள் சொஸையிட்டி சொல்லுகிறபடி, ஏறக்குறைய பத்தாண்டுகளுக்கு முன்பாக பைபிள் அச்சடிக்கப்பட்ட மொழிகளில் அதை உலக ஜனத்தொகையில் ஏறக்குறைய 98 சதவீதமானோருக்கு கிடைக்கக்கூடியதாக்கிற்று. கினஸ் புக் ஆஃப் உவார்ல்ட் ரெக்கார்ட்ஸ் என்ற பிரசுரம் குறிப்பிட்டுக் காட்டினபடி, பைபிள் சந்தேகத்துக்கு இடமில்லாமல் “உலகத்திலேயே மிக விரிவாய் வினியோகம் செய்யப்பட்ட புத்தகம்.” எல்லா குலத்தாரும் தேசத்தாரும் மொழித் தொகுதியாருமான ஜனங்களுக்குக் கருதப்பட்ட கடவுளுடைய ஒரு செய்தியைக் குறித்து இதையே நாம் எதிர்பார்ப்போம். (வெளிப்படுத்துதல் 14:6-ஐ ஒத்துப்பாருங்கள்.) இதைப்போன்ற ஓர் பதிவையுடைய புத்தகம் இந்த உலகத்தில் வேறு எதுவும் இல்லை.
5. பைபிளின் சரித்திரப்பூர்வ ஆதாரம் ஏன் குறிப்பிடத்தக்கதாக உள்ளது?
5 சரித்திர மெய்ம்மை: பைபிள் நிகழ்ச்சியுரைகளைக் கவனமாய் ஆராய்வது, பரிசுத்த புத்தகங்களாக உரிமை கொண்டாடும் மற்ற புத்தகங்களிலிருந்து பைபிள் மற்றொரு முறையில் தனிப்பட்டதாயிருப்பதை வெளிப்படுத்துகிறது. பைபிள், நிரூபிக்க முடியாத புராணக் கதைகளல்ல, சரித்திரப்பூர்வ உண்மை நிகழ்ச்சிகளே அடங்கியதாக உள்ளது. நீதிமன்றத்தில் நிரூபணமாகத் தேவைப்படுவதை நுட்பமாய்ப் பகுத்தாராய்வதில் பழக்கப்பட்ட வழக்கறிஞராக இருந்த இர்வின் லின்ட்டன் பின்வருமாறு எழுதினார்: “கற்பனை இலக்கியங்கள், புராணக் கதைகள், பொய்சாட்சியம் ஆகியவை எடுத்துரைக்கும் சம்பவங்களை தொலைவான ஏதோவொரு இடத்திலும் திட்டமில்லாத ஏதோவொரு காலத்திலும் வைக்கக் கவனமாக இருக்கையில், . . . பைபிள் நிகழ்ச்சியுரைகள், கூறப்படும் காரியங்களுக்குரிய தேதியையும் இடத்தையும் வெகு துல்லியமாக நமக்குக் கொடுக்கின்றன.” (உதாரணங்களுக்கு 1 இராஜாக்கள் 14:25; ஏசாயா 36:1; லூக்கா 3:1, 2 ஆகியவற்றைப் பாருங்கள்.) மெய்ம்மை நிலையிலிருந்து தப்பிக்கொள்வதற்காக அல்ல, ஆனால் சத்தியத்துக்காக மதத்தினிடமாகத் திரும்பும் ஆட்களுக்கு இது முக்கியமான கவனிப்புக்குரியது.
6. (அ) வாழ்க்கையின் பிரச்னைகளில் பைபிள் எவ்வாறு ஒருவருக்கு உண்மையில் உதவிசெய்கிறது? (ஆ) வாழ்க்கையின் கடுமையான மெய்ம்மைகளைச் சமாளிக்க என்ன மூன்று வழிகளில் பைபிள் ஒருவருக்கு உதவிசெய்கிறது?
6 நடைமுறைக்குரிய தன்மை: பைபிளைக் கருத்துடன் ஆராய்வோர், அதன் கட்டளைகளும் நியமங்களும் அவர்களைத் தன்னலத்துக்காகப் பயன்படுத்திக்கொள்வதற்கு அல்லவென விரைவில் உணர்வர். மாறாக, இவற்றைக் கவனமாகக் கடைப்பிடிப்போருக்கு இவை நன்மையைக் கொண்டுவரும் ஒரு வாழ்க்கை முறையைச் சுருக்கமாகக் குறிப்பிடுகின்றன. (ஏசாயா 48:17, 18) துயரத்தில் இருப்போருக்கு அது அளிக்கும் ஆறுதல் போலியானதாக, வெறுமையான தத்துவங்களில் ஆதாரங்கொள்ள செய்யப்பட்டதாக இல்லை. மாறாக, வாழ்க்கையின் கடுமையான மெய்ம்மைகளைச் சமாளிக்க ஆட்களுக்கு உதவிசெய்கிறது. எவ்வாறு? மூன்று வழிகளில்: (1) இக்கட்டுகளைக் கையாளுவது எவ்வாறென்பதன்பேரில் நல்ல ஆலோசனையைக் கொடுப்பதன்மூலம், (2) கடவுள் தம்முடைய ஊழியர்களுக்கு இப்பொழுது கொடுக்கும் அன்புள்ள ஆதரவைப் பெறுவது எவ்வாறென விளக்குவதன்மூலம், (3) தம்மைச் சேவிப்போருக்காக கடவுள் முன்வைத்துள்ள அந்த அதிசயமான எதிர்காலத்தை வெளிப்படுத்தி, தம்முடைய வாக்குகளில் திடநம்பிக்கை வைப்பதற்கு நல்ல காரணங்களை அவர்களுக்கு கொடுப்பதன்மூலம் உதவிசெய்கிறது.
7. (அ) அடிக்குறிப்பில் கொடுத்துள்ள வேதவசனங்களைப் பயன்படுத்தி, இன்று ஆட்களுக்குக் கவலைக்குரியவையாயுள்ள பெரும்படியான சிக்கல்களில் ஒன்றுக்கு பைபிள் அளிக்கும் பதிலை விளக்குங்கள். (ஆ) பைபிளின் அறிவுரை நம்மை எவ்வாறு பாதுகாக்கிறது அல்லது கடும் நெருக்கடியான ஒரு சூழ்நிலைமையைச் சமாளிக்க நமக்கு உதவிசெய்கிறது என்பதைக் காட்டுங்கள்.
7 அதிகாரத்துக்குக் கீழ்ப்பட மறுத்து தற்கட்டுப்பாடற்ற இன்ப நுகர்வுக்குரிய வாழ்க்கையைத் தொடர்வோருக்குள் பைபிளின் அறிவுரை அடிக்கடி விரும்பப்படாதபோதிலும், அத்தகைய ஒரு வாழ்க்கை மெய்யான மகிழ்ச்சியைத் தங்களுக்குக் கொண்டுவரவில்லையென பின்னால் பலர் உணர்ந்துள்ளனர். (கலாத்தியர் 6:7, 8) கருச்சிதைவு, மணவிலக்கு, ஒத்தப் பாலினத்தவர் புணர்ச்சி ஆகியவற்றைப்பற்றிய கேள்விகளுக்கு ஒளிவுமறைவற்ற பதில்களை பைபிள் அளிக்கிறது. அதன் அறிவுரை, போதைப்பொருள் மற்றும் மதுபான துர்ப்பிரயோகத்துக்கும், கிருமி தொற்றிய இரத்தத்தின்மூலம் அல்லது ஒழுக்கக்கேடான பாலுறவின்மூலம் எய்ட்ஸ் நோய் பற்றிக்கொள்வதற்கும் எதிராக ஒரு பாதுகாப்பாக உள்ளது. மகிழ்ச்சியுள்ள குடும்பங்களை உடையோராக இருப்பது எவ்வாறென அது காட்டுகிறது. நெருங்கிய குடும்ப உறுப்பினர் வெறுத்தொதுக்குவது, கடும் இயல்பான நோய், அன்பானவரின் மரணம் ஆகியவை உட்பட, வாழ்க்கையில் மிகக் கடும் நெருக்கடியான சூழ்நிலைமைகளை ஒருவர் சமாளிக்கக்கூடும்படி உதவிசெய்கிற பதில்களை அது அளிக்கிறது. நம்முடைய வாழ்க்கை மனவிசாரத்தால் அல்லாமல் நோக்கமுள்ளதாக நிரம்பியிருக்கும்படி நம்முடைய முன்னுரிமைகளைத் தெரிந்துணரும்படி அது நமக்கு உதவிசெய்கிறது.a
8, 9. (அ) பைபிள் தேவாவியால் ஏவப்பட்டெழுதப்பட்டதன் நிரூபணமாக எந்தத் தீர்க்கதரிசனம் தனிப்பட்டவராக உங்கள் மனதைக் கவருகிறது? (ஆ) பைபிளிலுள்ள தீர்க்கதரிசனங்கள் அவற்றின் மூலத்தொடக்கத்தைக் குறித்து என்ன நிரூபிக்கின்றன?
8 தீர்க்கதரிசனம்: தீர்க்கதரிசன புத்தகமாக பைபிள் ஈடிணையற்றது, எதிர்காலத்தில் நடக்கவிருப்பதைச் சொல்லும் ஒரு புத்தகம் மற்றும் அதை நுட்பவிவரமாய்க் கூறுகிறது. பூர்வ தீருவின் அழிவு, பாபிலோனின் வீழ்ச்சி, எருசலேம் திரும்பக் கட்டப்படுவது, மேதிய-பெர்சியா மற்றும் கிரேக்க அரசர்கள் உயர்வதும் வீழ்வதும், இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையில் நிகழவிருந்த பல சம்பவங்கள் ஆகியவற்றை அது முன்னறிவித்தது. இந்த நூற்றாண்டில் படிப்படியாகத் தோன்றிய உலக நிலைமைகளையும் நுட்பவிவரமாய் முன்னறிவித்தது, அவற்றின் உட்பொருளையும் விளக்கிக் கூறினது. மனித அரசர்களை மூழ்கடிக்கும் பிரச்னைகள் எவ்வாறு தீர்க்கப்படும் என்பதைக் காட்டுகிறது, நிலையான சமாதானத்தையும் மெய்யான பாதுகாப்பையும் மனிதகுலத்துக்குக் கொண்டுவரவிருக்கும் அந்த அரசரையும் அடையாளங்காட்டுகிறது.b—ஏசாயா 9:6, 7; 11:1-5, 9; 53:4-6.
9 குறிப்பிடத்தக்கதாய், தேவத்துவத்தின் நிரூபணமாக, பைபிள் எதிர்காலத்தைத் திருத்தமாக முன்னறிவிக்கும் திறமையைக் காட்டுகிறது. (ஏசாயா 41:1–46:13) இதைச் செய்யக் கூடியவர் அல்லது இதைச் செய்யும்படி மற்றவர்களை ஏவக் கூடியவர் உயிரற்ற வெறும் விக்கிரகம் அல்லர். அவர் பக்தியுள்ள வெறும் மனிதர் அல்லர். அவர் உண்மையான கடவுள், அத்தகைய தீர்க்கதரிசனத்தைக் கொண்டுள்ள புத்தகம் அவருடைய வார்த்தை.—1 தெசலோனிக்கேயர் 2:13.
பைபிளைப் பயன்படுத்துவோர் யாவரும் சரியானதைப் போதிக்கிறார்களா?
10, 11. இயேசு காட்டினபடி, மதகுரு ஒருவர் பைபிளைப் பயன்படுத்தினாலும், அவர் சிபாரிசு செய்யும் அந்த மதத்தை எது பயனற்றதாக்கலாம்?
10 பைபிளைப் பயன்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் எல்லா மதத் தொகுதிகளும் உண்மையான மதத்தையே கற்பிக்கின்றனவென்ற முடிவுக்கு வருவது நியாயமாக உள்ளதா? மேலும் முக்கியமாக, அது வேதப்பூர்வமானதா? பைபிளைச் சுமந்துசெல்வோர் அல்லது அதிலிருந்து மேற்கோள்கள் எடுத்துக் கூறுவோர் ஒவ்வொருவரும் சரியான மதத்தை கடைப்பிடிக்கிறார்களா?
11 மதகுருக்கள் பலர், பைபிளை உடையோராக இருக்கிறபோதிலும், தங்களை மகிமைப்படுத்திக்கொள்வதற்கு ஒரு வழிவகையாகவே மதத்தைப் பயன்படுத்துகின்றனர். தூய்மையான சத்தியங்களைப் பாரம்பரியங்களையும் மனித தத்துவஞானங்களையும் கொண்டு கலப்படம் செய்கின்றனர். அவர்களுடைய வணக்கம் கடவுளுக்கு ஏற்கத்தகுந்ததாக இருக்கிறதா? அதையே செய்துகொண்டிருந்த முதல் நூற்றாண்டு எருசலேமிலிருந்த மதத் தலைவர்களுக்கு, தீர்க்கதரிசி ஏசாயாவின் மூலம் கூறின கடவுளுடைய அறிவிப்பை சரியாகவே பொருத்திப் பயன்படுத்தி இயேசு கிறிஸ்து பின்வருமாறு கூறினார்: “இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது; மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள்.” (மத்தேயு 15:8, 9; 23:5-10) தெளிவாகவே, அந்த வகையான மதம் மெய்யான மதம் அல்ல.
12, 13. (அ) எவ்வாறு சர்ச் உறுப்பினரின் நடத்தை அவர்களுடையது சரியான மதமாவென்பதைத் தீர்மானிக்க ஒருவருக்கு உதவிசெய்யக்கூடும்? (ஆ) கடவுள் ஏற்காமல் தள்ளிவிடுவோரை நாம் கூட்டாளிகளாகத் தெரிந்துகொண்டால் நம்முடைய வணக்கத்தை அவர் எவ்வாறு கருதுவார்? (2 நாளாகமம் 19:2)
12 குறிப்பிட்ட மதங்களின் போதனைகளால் விளைவிக்கப்படுகிற கனிகள், அவற்றின் மதிப்பு வாய்ந்த நிலையிலுள்ள உறுப்பினருடைய வாழ்க்கையில் வெளிப்படுத்துகிறபடி, கெட்டழிந்ததாக இருக்கிறதென்றால் எவ்வாறு? இயேசு தம்முடைய மலைப் பிரசங்கத்தில் பின்வருமாறு எச்சரித்தார்: “கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; . . . அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்; . . . நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்; கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும்.” (மத்தேயு 7:15-17) தனியாட்கள் தவறு செய்து அவர்களுக்குத் திருத்தம் தேவைப்படலாமென்பது உண்மையே. ஆனால் சர்ச் உறுப்பினர், குருமாருங்கூட, வேசித்தனமும் விபசாரமும், சண்டை, குடிவெறி, பேராசை, பொய் சொல்லுதல், ஆவிக்கொள்கை, விக்கிரக வணக்கம்—இவற்றில் ஏதாவதொன்றில் அல்லது எல்லாவற்றிலுமே—ஈடுபட்டு, எனினும் சிட்சை அளிக்கப்படாமலும், இந்தப் போக்கில் தொடர்ந்துகொண்டிருப்போர் சபையிலிருந்து விலக்கப்படாமலும் இருக்கையில் நிலைமை வேறுபட்டதாயுள்ளது. இத்தகைய காரியங்களைப் பழக்கமாய்ச் செய்துவருவோர் சபையிலிருந்து நீக்கப்பட வேண்டுமென பைபிள் தெளிவாகக் கூறுகிறது; கடவுளுடைய ராஜ்யத்தில் அவர்களுக்கு இடமிராது. (கலாத்தியர் 5:19-21) அவர்களுடைய வணக்கம் கடவுளுக்குப் பிரியமானதாக இல்லை, அவர் தள்ளிவிடுவோரை கூட்டாளிகளாக நாம் தெரிந்துகொண்டால் நம்முடைய வணக்கமும் கடவுளுக்குப் பிரியமாக இராது.—1 கொரிந்தியர் 5:11-13; 6:9, 10; வெளிப்படுத்துதல் 21:8.
13 பைபிளைப் பயன்படுத்துவதாக உரிமைபாராட்டும் எல்லா தொகுதிகளும் அது விவரிக்கிற உண்மையான மதத்தை கடைப்பிடிப்போராக இல்லையென்பது தெளிவாயுள்ளது. அவ்வாறெனில். மெய்யான மதத்தின் அடையாளக் குறிகளாக பைபிள் குறிப்பிடுபவை யாவை?
உண்மையான மதத்தின் அடையாளக் குறிகள்
14. (அ) உண்மையான மதத்தின் எல்லா போதனைகளும் எதில் ஆதாரங்கொண்டுள்ளன? (ஆ) கடவுளையும் ஆத்துமாவையும் பற்றிய கிறிஸ்தவமண்டலத்தின் போதனைகள் இந்தப் பரீட்சையில் எவ்வாறு விளங்குகின்றன?
14 தேவாவியால் ஏவப்பட்டெழுதப்பட்ட வேதவாக்கியங்களின்பேரில் அதன் போதனைகள் உறுதியாய் ஆதாரங்கொள்ள செய்யப்படுகின்றன. “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; . . . அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், . . . பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.” (2 தீமோத்தேயு 3:16, 17) ஆனால் கிறிஸ்தவமண்டலத்தின் திரித்துவத்தைப் பற்றி பரிசுத்த பைபிள் எங்கே பேசுகிறது? மனிதருக்கு ஓர் ஆத்துமா உள்ளதெனவும், அது மாம்ச உடலின் மரணத்துக்குப்பின் பிழைத்திருக்கிறதெனவும் மத குருமார் கற்பிப்பதுபோல், பைபிள் எங்கே கற்பிக்கிறது? அந்தப் போதனைகளை உங்கள் பைபிளில் உங்களுக்குக் காண்பிக்கும்படி மதகுரு ஒருவரை நீங்கள் எப்போதாவது கேட்டதுண்டா? தி நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா பின்வருமாறு கூறுகிறது: “திரித்துவம் என்ற சொல்லோ அதைப்போன்ற திட்டவட்டமான ஏதோ கோட்பாடோ புதிய ஏற்பாட்டில் காணப்படுகிறதில்லை.” (1992, மைக்ரோப்பீடியா புத்தகம் 11, பக்கம் 928) மேலும் நியூ கத்தோலிக் என்ஸைக்ளோப்பீடியா பின்வருமாறு ஒப்புக்கொள்கிறது: “அப்போஸ்தல பிரமுகர்களுக்குள், இத்தகைய மனப்போக்கை அல்லது மனத்தோற்றத்தைச் சிறிதாயினும் ஒத்திருக்கும் எதுவும் இல்லை.” (1967, புத்தகம் XIV, பக்கம் 299) மரணத்தில் உடலிலிருந்து பிரிகிற ஓர் ஆத்துமா என்பதைப்பற்றிய கிறிஸ்தவமண்டலத்தின் கருத்தைப்பற்றியதில், இந்த எண்ணத்தை கிரேக்கத் தத்துவஞானத்திலிருந்து தாங்கள் கடன்வாங்கினதாக சர்ச் நிபுணர்கள் ஒப்புக்கொள்கின்றனர். எனினும், மெய்யான மதம் மனித தத்துவஞானத்திற்காக பைபிளின் சத்தியத்தைப் புறக்கணிப்பதில்லை.—ஆதியாகமம் 2:7; உபாகமம் 6:4; எசேக்கியேல் 18:4; யோவான் 14:28.
15. (அ) வணங்கவேண்டிய அந்த ஒரே ஒருவரை பைபிள் எவ்வாறு அடையாளம் காட்டுகிறது? (ஆ) யெகோவாவிடம் நெருங்கிவருவதைக் குறித்து உண்மையான வணக்கத்தார் எவ்வாறு உணருகின்றனர்?
15 உண்மையான மதம் ஒரே உண்மையான கடவுளாகிய யெகோவாவை மாத்திரமே வணங்குவதை சிபாரிசு செய்கிறது. (உபாகமம் 4:35; யோவான் 17:3) உபாகமம் 5:9 மற்றும் 6:13-ஐ விவரித்து இயேசு கிறிஸ்து பின்வருமாறு உறுதியாய்க் கூறினார்: “உன் கடவுளாகிய யெகோவாவையே நீ வணங்க வேண்டும், அவர் ஒருவருக்கே நீ பரிசுத்த சேவை செலுத்த வேண்டும்.” (மத்தேயு 4:10, NW) இதற்கு ஒத்திசைவாக, இயேசு தம்முடைய பிதாவின் பெயரைத் தம்முடைய சீஷர்களுக்குத் தெரியப்படுத்தினார். (யோவான் 17:26) யெகோவாவை வணங்கும்படி உங்கள் மதம் உங்களுக்குக் கற்பித்திருக்கிறதா? நீங்கள் நம்பிக்கையுடன் அவரிடம் நெருங்கிவர முடியுமென உணரும்படிக்கு, அந்தப் பெயரால்—தம்முடைய நோக்கங்களை, தம்முடைய செயல்களை, தம்முடைய பண்புகளை—அடையாளங்காட்டப்படுகிறவரை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? உங்களுடையது உண்மையான மதம் என்றால், இதற்குப் பதில் ஆம் என்பதே.—லூக்கா 10:22; 1 யோவான் 5:14.
16. கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பதானது, உண்மையான மதத்தைக் கடைப்பிடிப்போருக்கு எதைக் குறிக்கிறது?
16 கடவுளுக்குப் பிரியமான வணக்கத்தின் ஒரு முக்கிய பாகமானது அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பதாகும். (யோவான் 3:36; அப்போஸ்தலர் 4:12) இது, அவர் வாழ்ந்தார் அல்லது அவர் ஒரு முதன்மையான ஆளாக இருந்தார் என்று மாத்திரமே நம்புவதைக் குறிக்கிறதில்லை. இயேசுவின் பரிபூரண மனித உயிரின் பலிக்குரிய விலைமதிப்பைக் குறித்து பைபிள் கற்பிப்பவற்றிற்கு மதித்துணர்வைக் காட்டுவதையும் பரலோக அரசராக இன்று இருக்கும் அவருடைய பதவியை ஒப்புக்கொள்வதையும் உட்படுத்துகிறது. (சங்கீதம் 2:6-8; யோவான் 3:16; வெளிப்படுத்துதல் 12:10) உண்மையான மதத்தைக் கடைப்பிடிப்போருடன் நீங்கள் கூட்டுறவு கொண்டிருக்கிறீர்களென்றால், அன்றாட வாழ்க்கையில் இயேசுவுக்குக் கீழ்ப்படியவும், அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றவும், தம்முடைய சீஷர்களுக்கு அவர் நியமித்த ஊழியத்தில் தாங்கள்தாமே ஆர்வத்துடன் பங்குகொள்ளவும் அவர்கள் மனச்சாட்சியோடு முயற்சி செய்வதை அறிந்திருக்கிறீர்கள். (மத்தேயு 28:19, 20; யோவான் 15:14; 1 பேதுரு 2:21) நீங்கள் கூடி வணங்குவோரைக் குறித்ததில் இது உண்மையாயிராவிடில், வேறு எங்கேயாவது நீங்கள் நோக்க வேண்டும்.
17. ஏன் உண்மையான வணக்கத்தார், உலகத்தால் கறைபடாதபடி தங்களை வைத்துக்கொள்ள கவனமுள்ளோராக இருக்கின்றனர், இது எதை உட்படுத்துகிறது?
17 உண்மையான மதம் அரசியலிலும் உலகப்பிரகாரமான சண்டைகளிலும் உட்பட்டு தன்னைக் கறைபடுத்துகிறதில்லை. (யாக்கோபு 1:27) ஏன் அவ்வாறில்லை? ஏனெனில் இயேசு தம்மைப் பின்பற்றுவோரைக் குறித்து பின்வருமாறு கூறினார்: “நான் இந்த உலகத்தின் பாகமல்லாததுபோல் அவர்களும் இந்த உலகத்தின் பாகமானோர் அல்லர்.” (யோவான் 17:16, NW) இயேசு அரசியலில் தலையிடவில்லை, மாம்சப்பிரகாரமான போராயுதங்களை எடுப்பதிலிருந்து தம்மைப் பின்பற்றினோரை அவர் தடுத்து வைத்தார். (மத்தேயு 26:52) கடவுளுடைய வார்த்தை சொல்வதை இருதயத்தில் ஏற்றிருக்கிறவர்கள் “இனி யுத்தத்தைக் கற்பதுமில்லை.” (ஏசாயா 2:2-4) நீங்கள் பெயரளவிலாவது இணைப்புடைய எந்த மதமாவது இந்த விவரிப்புக்குப் பொருந்துகிறதில்லையெனில், அதோடு தொடர்பறுத்துக்கொள்வதற்கு இது சமயமாயுள்ளது.—யாக்கோபு 4:4; வெளிப்படுத்துதல் 18:4, 5.
18. (அ) எதை உண்மையான மதத்தின் முனைப்பான ஒரு தனிப் பண்பாக யோவான் 13:35 அடையாளம் காட்டுகிறது? (ஆ) இந்த விவரிப்பு எந்தத் தொகுதிக்கு உண்மையில் பொருந்துகிறதென்பதை ஒருவர் தீர்மானிக்க நீங்கள் எவ்வாறு உதவிசெய்யலாம்?
18 உண்மையான மதம் தன்னலமற்ற அன்பைக் கற்பித்தும் கடைப்பிடித்தும் வருகிறது. (யோவான் 13:35; 1 யோவான் 3:10-12) இத்தகைய அன்பு, பிரசங்கங்களில் மட்டும் பேசப்படுவது அல்ல. இது எல்லா இனத்தவரையும், எல்லா பொருளாதார நிலையிலுள்ள தொகுதியினரையும், எல்லா மொழியினரையும், எல்லா தேசத்தினரையும் சேர்ந்த ஆட்களை உண்மையான சகோதரத்துவத்தில் உண்மையில் ஒன்றுசேர்க்கிறது. (வெளிப்படுத்துதல் 7:9, 10) இது உண்மையான கிறிஸ்தவர்களை, சுற்றியுள்ள உலகத்திலிருந்து தனியே ஒதுக்கி வைக்கிறது. நீங்கள் ஏற்கெனவே அவ்வாறு செய்யாவிடில், யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றத்தில் நடக்கும் கூட்டங்களுக்கும் அதோடுகூட அவர்களுடைய பெரும் மாநாடுகளுக்கும் ஆஜராகுங்கள். அவர்கள் தங்கள் ராஜ்ய மன்றங்களில் ஒன்றைக் கட்டுவதற்கு ஒன்றாகச் சேர்ந்து உழைக்கையில் அவர்களைக் கவனித்துப் பாருங்கள். (விதவைகள் உட்பட) முதியோரையும் (பெற்றோர் ஒருவரை மாத்திரமே உடைய அல்லது பெற்றோரில்லாத) இளைஞரையும் அவர்கள் நடத்தும் விதத்தைக் கவனியுங்கள். (யாக்கோபு 1:27) கவனிப்பதை வேறு எந்த மதத்திலாவது நீங்கள் கண்டவற்றோடு ஒத்துப் பாருங்கள். பின்பு, ‘உண்மையான மதத்தை நடைமுறையில் கடைப்பிடிப்போர் யார்?’ என உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.
19. (அ) மனிதகுலத்தின் பிரச்னைகளுக்கு எதைப் பரிகாரமாக உண்மையான மதம் குறிப்பிட்டுக் காட்டுகிறது? (ஆ) உண்மையான மதத்தைக் கடைப்பிடிக்கும் தொகுதியின் உறுப்பினர் என்ன செய்துகொண்டிருக்க வேண்டும்?
19 உண்மையான மதம் மனிதவர்க்கத்தின் பிரச்னைகளுக்கு நிலையான பரிகாரமாகக் கடவுளுடைய ராஜ்யத்தை குறிப்பிட்டுக் காட்டுகிறது. (தானியேல் 2:44; 7:13, 14; 2 பேதுரு 3:13; வெளிப்படுத்துதல் 21:4, 5) கிறிஸ்தவமண்டல சர்ச்சுகள் எவையாவது அவ்வாறு செய்கின்றனவா? கடவுளுடைய ராஜ்யத்தையும் அது நிறைவேற்றவிருப்பவற்றைக் குறித்து வேதவாக்கியங்கள் காட்டுபவற்றையும் ஒரு மதகுரு விளக்குவதை நீங்கள் கேட்ட கடைசி தடவை எப்போது? நீங்கள் சேர்ந்துள்ள அமைப்பு கடவுளுடைய ராஜ்யத்தைப்பற்றி மற்றவர்களிடம் பேசும்படி உங்களுக்கு ஊக்கமளிக்கிறதா, அளிக்கிறதெனில், முழுமையாக அதன் உறுப்பினர் யாவரும் அதைச் செய்வதில் பங்குகொள்கின்றனரா? இயேசு அத்தகைய சாட்சி கொடுத்தார்; அவருடைய பூர்வ சீஷர்கள் அவ்வாறு செய்தனர். இந்த நடவடிக்கையில் பங்குகொள்ளும் சிலாக்கியத்தை நீங்களும் கொண்டிருக்கலாம். இன்று பூமியின்மீது செய்யப்பட்டுவரும் எல்லாவற்றையும் விட மிக முக்கியமான ஊழியம் இதுவே.—மத்தேயு 24:14.
20. சரியான மதத்தை அடையாளம் கண்டுகொள்வதோடுகூட வேறு எதையும் நாம் செய்ய வேண்டும்?
20 ஆயிரக்கணக்கான மதங்கள் இருக்கிறபோதிலும் உண்மையான மதத்தை அடையாளம் கண்டுகொள்ளும்படி அந்தக் குழப்பத்தை நீக்கி விளக்கமளிக்க பைபிள் விரைவில் நமக்கு உதவிசெய்கிறது. ஆனால் அதை அடையாளம் கண்டுகொள்வதைப் பார்க்கிலும் அதிகத்தை நாம் செய்ய வேண்டும். அதை நடைமுறையில் கடைப்பிடிப்பது இன்றியமையாதது. இது உட்படுத்துவது என்னவென்பது நம்முடைய அடுத்தக் கட்டுரையில் விரிவாக ஆலோசிக்கப்படும்.
[அடிக்குறிப்புகள்]
a கருச்சிதைவு: அப்போஸ்தலர் 17:28; சங்கீதம் 139:1, 16; யாத்திராகமம் 21:22, 23. மணவிலக்கு: மத்தேயு 19:8, 9; ரோமர் 7:2, 3. ஒத்தப் பாலினத்தவர் புணர்ச்சி: ரோமர் 1:24-27; 1 கொரிந்தியர் 6:9-11. போதைப்பொருள் மற்றும் மதுபான துர்ப்பிரயோகம்: 2 கொரிந்தியர் 7:1; லூக்கா 10:25-27; நீதிமொழிகள் 23:20, 21; கலாத்தியர் 5:19-21. இரத்தம் மற்றும் ஒழுக்கக்கேடான பாலுறவு: அப்போஸ்தலர் 15:28, 29; நீதிமொழிகள் 5:15-23; எரேமியா 5:7-9. குடும்பம்: எபேசியர் 5:22–6:4; கொலோசெயர் 3:18-21. வெறுத்தொதுக்கப்படுவது: சங்கீதம் 27:10; மல்கியா 2:13-16; ரோமர் 8:35-39. நோய்: வெளிப்படுத்துதல் 21:4, 5; 22:1, 2; தீத்து 1:3; சங்கீதம் 23:1-4. மரணம்: ஏசாயா 25:8; அப்போஸ்தலர் 24:15. முன்னுரிமைகள்: மத்தேயு 6:19-34; லூக்கா 12:16-21; 1 தீமோத்தேயு 6:6-12.
b இத்தகைய தீர்க்கதரிசன மாதிரிகளுக்கும் அவற்றின் நிறைவேற்றங்களுக்கும், பைபிள்—கடவுளுடைய வார்த்தையா மனிதனுடையதா?, பக்கங்கள் 117-61; வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல், பக்கங்கள் 60-2, 225-32, 234-40-ஐப் பாருங்கள். இரண்டும் உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸையிட்டி பிரசுரித்தது.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ சரியான மதத்தை அடையாளம் கண்டுகொள்வதில் யாருடைய நோக்குநிலை மிக அதிக முக்கியமானது?
◻ எந்த நான்கு வழிகளான அத்தாட்சிகள் பைபிளைக் கடவுளுடைய வார்த்தை எனக் குறிப்பிட்டுக் காட்டுகின்றன?
◻ ஏன் பைபிளைப் பயன்படுத்தும் எல்லா மதங்களும் கடவுள் அங்கீகரிக்கத்தக்கவையாக இல்லை?
◻ ஒரே சரியான மதத்தின் ஆறு அடையாளக் குறிகள் யாவை?
[பக்கம் 10-ன் பெட்டி]
யெகோவாவின் சாட்சிகள் . . .
◆ தங்கள் எல்லா போதகங்களையும் பைபிளில் ஆதாரம் கொள்ளச் செய்கின்றனர்.
◆ ஒரே உண்மையான கடவுளாகிய யெகோவாவை வணங்குகின்றனர்.
◆ இயேசு கிறிஸ்துவில் வைத்துள்ள தங்கள் விசுவாசத்திற்கு ஒத்திசைவாக வாழ்கின்றனர்.
◆ அரசியலிலும் உலக சண்டைகளிலும் உட்படுகிறதில்லை.
◆ அன்றாட வாழ்க்கையில் தன்னலமற்ற அன்பைக் காட்டுவதற்கு நாடுகின்றனர்.
◆ மனிதகுலத்தின் பிரச்னைகளுக்கு நிலையான பரிகாரமாக கடவுளுடைய ராஜ்யத்தைக் குறிப்பிட்டுக் காட்டுகின்றனர்.
[பக்கம் 9-ன் படம்]
பைபிள்—இது மனிதகுலம் முழுவதற்கும் கடவுளுடைய செய்தியைக் கொண்டுள்ளதென எது காட்டுகிறது?