உங்களுடைய மரித்த அன்பானவர்கள்—அவர்களை மீண்டும் நீங்கள் பார்ப்பீர்களா?
ஜானுடைய அம்மா மரித்தபோது அவனுக்கு ஒன்பதே வயதுதான். சவ அடக்க அறையில் என்ன நடந்தது என்பதை அவன் பின்னர் நினைவிற்கு கொண்டுவந்தான்: “அவர்களுக்காக நான் ஒரு படம் வரைந்தேன். அதில் எங்களுக்காகப் பரலோகத்தில் காத்திருக்கும்படி அவர்களைக் கேட்கும் ஒரு சிறிய வாசகத்தை எழுதினேன். அவர்களுடைய சவப் பெட்டிக்குள் அவர்களோடு வைக்கும்படி அப்பாவிடம் அதைக் கொடுத்தேன். அவர்கள் மரித்திருந்தபோதிலும், என்னிடமிருந்து அந்தக் கடைசியான செய்தியை அவர்கள் பெற்றார்கள் என்று உணர நான் விரும்புகிறேன்.”—ஒரு பெற்றோர் மரிக்கையில் எப்படி உணர்கிறோம், (How It Feels When a Parent Dies) ஜில் கிரமென்ட்ஸ் எழுதியது.
ஜான் தன் அம்மாவை அதிகமாக நேசித்தான் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அம்மாவின் நல்ல குணங்களை விவரித்த பிறகு, அவன் சொன்னான்: “கெட்ட காரியங்களை ஞாபகப்படுத்தாமல் இருக்க ஒருவேளை நான் விரும்பியிருக்கலாம். ஆனால் அம்மாவைப் பற்றி கெட்டது எதையும் நான் சிந்திக்க முடியவில்லை. என் வாழ்நாளில் நான் கண்ட மிகச் சிறந்த பெண்ணாக அம்மா இருந்தாங்க.”
ஜானைப் போலவே, பலர் தங்களுடைய மரித்த அன்பானவர்களின் நல்ல நினைவுகளைக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை மீண்டும் பார்க்கும் உணர்ச்சிப்பூர்வ தேவையையும் ஒத்துக்கொள்கிறார்கள். இடித், புற்றுநோயால் தன் 26 வயது மகனை இழந்தவள், சொன்னாள்: “என் மகன் எங்கோ இருக்கிறான் என்று நான் அவசியம் நம்பவேண்டும். ஆனால் அவன் எங்கே இருக்கிறான் என்று எனக்குத் தெரியவில்லை. நான் அவனை மீண்டும் பார்ப்பேனா? எனக்குத் தெரியவில்லை. ஆனால் பார்ப்பேன் என்று நம்புகிறேன்.”
நிச்சயமாகவே, இந்த இயல்பான மனித விருப்பத்துக்கு உணர்ச்சியற்றவிதத்தில் மனிதனுடைய அன்பான சிருஷ்டிகர் பிரதிபலிக்கமாட்டார். எனவேதான், அவர் வரப்போகும் ஒரு காலத்தில் மரித்த அன்பானவர்களோடு லட்சக்கணக்கானோர் மீண்டும் ஒன்றுசேர்ந்து வாழ்வார்கள் என்று வாக்குக் கொடுத்திருக்கிறார். சீக்கிரத்தில் நடக்கப்போகும் மரித்தோர் உயிர்த்தெழுதல் பற்றிய இந்த வாக்குறுதியைக் குறித்து, கடவுளுடைய வார்த்தை எண்ணற்ற மேற்கோள்களை உடையதாக இருக்கிறது.—ஏசாயா 26:19; தானியேல் 12:2, 13; ஓசியா 13:14; யோவான் 5:28, 29; வெளிப்படுத்துதல் 20:12, 13.
பரலோகத்துக்கு உயிர்த்தெழுப்பப்படுபவர்கள் யார்?
ஜானின் பிரியமுள்ள அம்மா அவனுக்காக பரலோகத்தில் காத்துக்கொண்டிருந்தார்கள் என்ற ஜானின் நம்பிக்கையை நாம் சிந்திக்கலாம். சர்ச்சுக்குப்போகும் பலர் இந்த நம்பிக்கையை அல்லது கோட்பாட்டை உடையவர்களாக இருக்கின்றனர். அப்படிப்பட்ட கருத்துக்களை ஆதரிக்கும் முயற்சியில், மதகுருக்களும் சமூக பணியாளர்களும் பைபிளிலிருந்து வசனங்களைத் தவறாகப் பொருத்திக் காட்டுகின்றனர்.
உதாரணமாக, அன்பானவர்களை இழந்தோருக்கு உதவும்பணியில் வல்லுநராகிய டாக்டர் எலிசபத் குயுப்லர் ராஸ், குழந்தைகளும் மரணமும் பற்றி (On Children and Death) என்ற தன்னுடைய புத்தகத்தில் இவ்வாறு சொன்னார்: “மரிப்பது என்பது நம்முடைய பழைய கிழிந்துபோன மேற்சட்டையை எடுத்து நீக்குவதுபோல, அல்லது ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்குள் நுழைவதுபோல நாம் நம் உடலை நீக்கிவிடுவதை அர்த்தப்படுத்துகிறது. பிரசங்கி 12:7-ல் இவ்வாறு நாம் வாசிக்கிறோம்: ‘இவ்விதமாய் மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகும்.’ இயேசு சொன்னார்: ‘நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன்.’ கழுமரத்தில் இருந்த திருடனிடம் இயேசு இவ்வாறு சொன்னார்: ‘இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய்.’”
மேற்குறிப்பிடப்பட்ட வசனங்கள் நம்முடைய மரித்த அன்பானவர்கள் உயிரோடிருந்து, நமக்காகப் பரலோகத்தில் காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை உண்மையில் அர்த்தப்படுத்துகின்றனவா? அந்த வசனங்களை நாம் மிகவும் கூர்ந்து ஆராய்ந்துபார்க்கலாம். பிரசங்கி 12:7-லிருந்து ஆரம்பிக்கலாம். அந்த வார்த்தைகளை எழுதின ஞானி அதே பைபிள் புத்தகத்தில் அவர் ஏற்கெனவே பின்வருமாறு சொல்லியிருந்ததுக்கு முரணாக எழுத விரும்பவில்லை: “உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்.” (பிரசங்கி 9:5) அவர் மனிதகுலத்தின் மரணத்தைப் பற்றிப் பொதுவாகப் பேசிக்கொண்டிருந்தார். கடவுள் இல்லையென்று வெளிப்படையாக அறிவிக்கும் எல்லா நாத்திகர்களும் கடினப்பட்டுபோன குற்றவாளிகளும் சாகும்போது அவர்கள் கடவுளிடம் திரும்புகின்றனர் என்று நாம் நம்புவது சரியானதா? நிச்சயமாகவே இல்லை. உண்மையில், நம்மில் யாரைக் குறித்தும் அவ்வாறு சொல்லப்படமுடியாது; நாம் நம்மை நல்லவர்கள் என்றோ கெட்டவர்கள் என்றோ கருதினாலும் அப்படித்தான். நம்மில் யாருமே கடவுளோடு பரலோகத்தில் இருந்திருக்கவில்லையாகையால், நாம் அவரிடம் திரும்பிப்போகிறோம் என்று எப்படிச் சொல்லப்படலாம்?
அப்படியானால், மரணத்தில் ‘ஆவி தன்னைத் தந்த மெய்த் தேவனிடத்திற்குப் போகிறது’ என்று பைபிள் எழுத்தாளர் சொன்னபோது அர்த்தப்படுத்தியது என்ன? “ஆவி” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள எபிரெய வார்த்தையைப் பயன்படுத்தும்போது, ஒரு மனிதனை மற்றொருவனிடமிருந்து வித்தியாசப்படுத்திக் காண்பிக்கும் ஒருவித பிரத்தியேகமான ஒன்றை அவர் குறிப்பிட்டுக் கொண்டில்லை. பதிலாக, பிரசங்கி 3:19-ல், அதே ஏவப்பட்ட பைபிள் எழுத்தாளர், மனித, மிருக “ஜீவன்களுக்கெல்லாம் [ஆவி, NW] ஒன்றே,” என்று விளக்குகிறார். தெளிவாகவே, மனித மற்றும் மிருகங்களின் மாம்ச சரீரங்களை உருவாக்கும் உயிரணுக்களில் உள்ள உயிர் சக்தியைக் குறிப்பதாக “ஆவி” இருக்கிறது என்று அவர் அர்த்தப்படுத்தினார். இந்த ஆவியை நாம் கடவுளிடமிருந்து நேரடியாக பெறவில்லை. கருவுற்று, பின்னர் நாம் பிறந்தபோது, அது நம் மனித பெற்றோரின்மூலம் நமக்குக் கடத்தப்பட்டது. மேலுமாக, இந்த ஆவி மரணத்தின்போது வெளிமண்டலம் வழியாக சொல்லர்த்தமாகப் பயணம்செய்து, கடவுளிடம் திரும்புவதில்லை. ‘ஆவி மெய்த் தேவனிடம் திரும்புகிறது’ என்ற வாக்கியம் உருவக அணியாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அது மரித்த நபரின் எதிர்கால வாழ்க்கைக்குரிய எதிர்பார்ப்புகள் கடவுளிடம் இப்போது இருக்கின்றன என்பதை அர்த்தப்படுத்துகிறது. யாரை அவர் ஞாபகப்படுத்தி, இறுதியில் உயிர்த்தெழுப்புவார் என்பதைத் தீர்மானிப்பது அவரிடத்தில் இருக்கிறது. இதை பைபிள் சங்கீதம் 104:29, 30-ல் எவ்வளவு தெளிவாகக் காண்பிக்கிறது என்பதை நீங்களே கவனியுங்கள்.
கிறிஸ்துவை உண்மையாகப் பின்பற்றுவோரில் வரம்புக்குட்பட்ட எண்ணிக்கையினராகிய மொத்தம் 1,44,000 பேர் மட்டுமே, பரலோக வாழ்க்கைக்கு, கடவுளின் ஆவிக்குரிய குமாரர்களாக உயிர்த்தெழுப்பப்பட யெகோவா தேவன் நோக்கம் கொண்டிருக்கிறார். (வெளிப்படுத்துதல் 14:1, 3) பூமியிலுள்ள மனிதகுலத்தின் ஆசீர்வாதத்துக்காக இவர்கள் கிறிஸ்துவோடு ஒரு பரலோக அரசாங்கத்தை உருவாக்குகிறார்கள்.
முதன்முதலில் இதைப் பற்றி கற்றுக்கொண்டவர்களாகிய இயேசுவின் உண்மையுள்ள அப்போஸ்தலரிடம், அவர் சொன்னார்: “என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன். நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.” (யோவான் 14:2, 3) அந்த அப்போஸ்தலரும் மற்ற ஆரம்ப கால கிறிஸ்தவர்களும் இறந்த பின்பு, அவர்கள் மரணத்தில் உணர்வற்ற நிலையில் காத்திருக்கவேண்டியதிருந்தது. இயேசு மீண்டும் வந்து அவர்களைப் பரலோக உயிர்த்தெழுதலால் ஆசீர்வதிக்கும்வரை அவர்கள் அவ்வாறு காத்திருக்கவேண்டியதிருந்தது. எனவேதான், முதல் கிறிஸ்தவ உயிர்த் தியாகியாகிய ஸ்தேவான், “நித்திரையடைந்தான்” என்று நாம் வாசிக்கிறோம்.—அப்போஸ்தலர் 7:60; 1 தெசலோனிக்கேயர் 4:13.
பூமியில் வாழ்க்கைக்காக உயிர்த்தெழுதல்
ஆனால் இயேசுவோடு சேர்ந்து மரித்த அந்தக் குற்றவாளியிடம் இயேசு கொடுத்த வாக்குறுதியைப் பற்றியென்ன? அக்காலத்து யூதர்கள் பலர்போல, கடவுள் ஒரு மேசியாவை அனுப்புவார் என்றும், அவர் பூமியில் ராஜ்யத்தை நிறுவி, யூத தேசத்துக்குச் சமாதானத்தையும் பாதுகாப்பையும் மீண்டும் நிலைநாட்டுவார் என்றும் இந்த மனிதன் நம்பினான். (1 இராஜாக்கள் 4:20-25-ஐ லூக்கா 19:11; 24:21 மற்றும் அப்போஸ்தலர் 1:6-உடன் தொடர்புபடுத்திப் பார்க்கவும்.) மேலுமாக, கடவுளால் ராஜாவாக இருக்கும்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த நபராகவே இயேசு இருந்தார் என்று அந்தப் பொல்லாதவன் விசுவாசத்தை வெளிப்படுத்தினான். எனினும், அந்தச் சமயத்தில், குற்றஞ்சாட்டப்பட்ட மனிதராக சீக்கிரத்தில் நிறைவேற இருந்த இயேசுவின் மரணம் இதை சாத்தியமற்றதாக ஆக்கியது. எனவேதான், இயேசு தன்னுடைய வாக்குறுதியை பின்வரும் இந்த வார்த்தைகளின்மூலம் அறிமுகப்படுத்தி குற்றவாளிக்கு உறுதிசொன்னார்: “உண்மையிலேயே நான் உன்னிடத்தில் சொல்கிறேன் இன்று, நீ பரதீஸில் என்னோடேகூட இருப்பாய்.”—லூக்கா 23:42, 43, NW.
இயேசுவின் வார்த்தைகளைப் புரிந்துகொள்ள விரும்பும் மக்களுக்குப் பிரச்னையை உண்டுபண்ண பைபிள் மொழிபெயர்ப்புகள் “இன்று” என்ற வார்த்தைக்கு முன்பாக ஒரு காற்புள்ளியை இடையே போடுகின்றன. இயேசு எந்தப் பரதீஸுக்கும் அந்த நாளிலேயே போகவில்லை. பதிலாக, கடவுள் அவரை உயிர்த்தெழுப்பும்வரை அவர் மரணத்தில் மூன்று நாட்களுக்கு உணர்வற்ற நிலையில் இருந்தார். இயேசு உயிர்த்தெழுப்பப்பட்டு, பரலோகத்துக்குப் போனப் பின்பும்கூட அவர் பிதாவின் வலது பாரிசத்தில் காத்திருக்க வேண்டியதிருந்தது. மனிதகுலத்தின்மீது ராஜாவாக அவர் ஆளுகையைப் பெறும்வரை அவ்வாறு அவர் காத்திருக்க வேண்டியதிருந்தது. (எபிரெயர் 10:12, 13) சீக்கிரத்திலேயே, இயேசுவின் ராஜ்ய ஆட்சி மனிதகுலத்தின் துயர்தீர்த்து, முழு பூமியையும் ஒரு பரதீஸாக மாற்றும். (லூக்கா 21:10, 11, 25-31) அப்போது, அந்தக் குற்றவாளிக்கு அவர் கொடுத்த வாக்குறுதியை, அவனைப் பூமியில் உயிர்த்தெழுப்புவதன்மூலம் நிறைவேற்றுவார். அவனுடைய வாழ்க்கைப் பாணியை கடவுளுடைய நீதியான சட்டங்களுக்கு இசைவாகக் கொண்டுவரும் தேவையையும் உட்பட, அந்த மனிதனின் எல்லா தேவைகளையும் பூர்த்திசெய்வதில் இயேசு உதவிசெய்வதன்மூலம் அவனோடுகூட இருப்பார்.
பலரின் உயிர்த்தெழுதல்
அந்த மனந்திரும்பிய குற்றவாளிக்கு நடக்கப்போவதுபோல, பல மனிதர்களின் உயிர்த்தெழுதலும் இங்கே பூமியில் நடக்கும். இது மனிதனைப் படைத்ததில் கடவுளுடைய நோக்கத்தோடு ஒத்திருக்கிறது. முதல் மனிதனும் மனுஷியும் பரதீஸான தோட்டத்தில் வைக்கப்பட்டு, பூமியைக் கீழ்ப்படுத்தும்படி சொல்லப்பட்டனர். அவர்கள் கடவுளுக்குத் தொடர்ந்து கீழ்ப்படிந்திருந்தார்கள் என்றால், அவர்கள் ஒருபோதும் வயதாகி மரித்திருக்க மாட்டார்கள். கடவுளுடைய நியமிக்கப்பட்ட காலத்தில், முழு பூமியும் கீழ்ப்படுத்தப்பட்டு, ஆதாம் மற்றும் அவனுடைய பரிபூரண வம்சத்தினரால் ஓர் உலகளாவிய பரதீஸாக மாற்றப்பட்டிருக்கும்.—ஆதியாகமம் 1:28; 2:8, 9.
எனினும், ஆதாமும் ஏவாளும் தெரிந்தே பாவம்செய்ததால், தங்கள்மீதும் தங்களுடைய எதிர்கால சந்ததிமீதும் மரணத்தைக் கொண்டுவந்தனர். (ஆதியாகமம் 2:16, 17; 3:17-19) எனவே, பைபிள் சொல்கிறது: “ஒரே மனுஷனாலே [ஆதாமாலே] பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று.”—ரோமர் 5:12.
சுதந்தரிக்கப்பட்ட பாவத்திலிருந்து விடுபட்டவராக பிறந்தவர் ஒரேயொரு மனிதர்தான். அவர் கடவுளுடைய பரிபூரண குமாரனாகிய இயேசு கிறிஸ்து. இவருடைய உயிர் பரலோகத்திலிருந்து, ஒரு யூத கன்னியின் கருப்பைக்கு மாற்றப்பட்டது. இயேசு பாவமில்லாமல் இருந்தார், மரிக்கவேண்டிய அவசியமில்லாதவராக இருந்தார். எனவே, அவருடைய மரணம், “உலகத்தின் பாவத்தை” நீக்கும் மீட்பின் கிரயத்தை உடையதாக இருக்கிறது. (யோவான் 1:29; மத்தேயு 20:28) எனவே இயேசு இவ்வாறு சொல்ல முடிந்தது: “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்.”—யோவான் 11:25.
ஆதலால், ஆம், மரித்துப்போன உங்களுக்குப் பிரியமானவர்களோடு நீங்கள் மறுபடியும் ஒன்றுசேர்ந்து வாழும் எதிர்பார்ப்பை எதிர்நோக்கியிருக்கலாம். ஆனால் இது நீங்கள் உங்கள் மீட்பராக இயேசுவில் விசுவாசம் வைத்து, கடவுள் நியமித்த அரசராக அவருக்குக் கீழ்ப்படிவதைத் தேவைப்படுத்துகிறது. சீக்கிரத்தில், கடவுளுடைய ராஜ்யம் இந்தப் பூமியிலுள்ள எல்லா கேட்டையும் முற்றிலுமாக நீக்கும். அதனுடைய ஆட்சிக்குக் கீழ்ப்படிய மறுக்கும் மனிதர்கள் அனைவரும் அழிக்கப்படுவார்கள். ஆனாலும், கடவுளுடைய ஆட்சியின் பிரஜைகள், தப்பிப்பிழைத்து, இந்தப் பூமியை ஒரு பரதீஸாக மாற்றும் வேலையில் தங்களை மிகவும் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்வார்கள்.—சங்கீதம் 37:10, 11; வெளிப்படுத்துதல் 21:3-5.
பின்பு, உயிர்த்தெழுதல் ஆரம்பிப்பதற்கான கிளர்ச்சியூட்டும் சமயம் வரும். மரித்தோரை வரவேற்க நீங்கள் அங்கு இருப்பீர்களா? இவையெல்லாம் நீங்கள் இப்போது என்ன செய்கிறீர்கள் என்பதன்பேரில் சார்ந்திருக்கிறது. யெகோவாவின் மகனாகிய இயேசு கிறிஸ்துவின்மூலம் செய்யப்படும் யெகோவாவின் ராஜ்ய அரசாட்சிக்கு இப்போது கீழ்ப்படியும் அனைவருக்கும் ஆச்சரியமான ஆசீர்வாதங்கள் காத்துக்கொண்டிருக்கின்றன.