பாவமுள்ள மாம்சத்தின்மீதான பாவப்பிடியை எதிர்த்து போராடுவது
“மாம்சசிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம்.”—ரோமர் 8:6.
1. மனிதர்கள் எந்த நோக்கத்திற்காகப் படைக்கப்பட்டனர்?
“தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.” (ஆதியாகமம் 1:27) சாயல் என்பது ஒரு சாதனத்தின் அல்லது மூலத்தின் பிரதிபிம்பமாகும். இப்படி, மனிதர்கள் கடவுளுடைய மகிமையின் பிரதிபலிப்பாக இருக்கும்படி படைக்கப்பட்டனர். அன்பு, சற்குணம், நீதி, ஆவிக்குரிய தன்மை ஆகிய தெய்வீக குணங்களைத் தங்களுடைய சகல பிரயாசைகளிலும் வெளிப்படுத்திக் காட்டுவதன் மூலம், அவர்கள் சிருஷ்டிகருக்கு துதியையும் கனத்தையும் கொண்டுவந்து, தங்களுக்குத்தாமே சந்தோஷத்தையும் திருப்தியையும் பெறுகின்றனர்.—1 கொரிந்தியர் 11:7; 1 பேதுரு 2:12.
2. முதல் மனித ஜோடி எவ்வாறு குறியைத் தவறவிட்டனர்?
2 பரிபூரணமாகப் படைக்கப்பட்ட முதல் மனித ஜோடி இந்தப் பாகத்தை வகிப்பதற்கு நன்கு ஆயத்தப்பட்டிருந்தனர். பளபளக்குமளவுக்கு மெருகூட்டப்பட்ட கண்ணாடிகள்போல, அவர்கள் கடவுளுடைய மகிமையைப் பொலிவுடனும் துல்லியமாகவும் பிரதிபலிக்கத் திறமையுடையவர்களாக இருந்தனர். ஆனால், தங்களுடைய சிருஷ்டிகராகவும் கடவுளாகவும் இருந்தவருக்கு வேண்டுமென்றே கீழ்ப்படியாமையைக் காட்டத் தெரிவுசெய்தபோது அந்தப் பளபளப்பைக் குன்றச்செய்தனர். (ஆதியாகமம் 3:6) அதுமுதல், அவர்களால் கடவுளுடைய மகிமையைப் பூரணமாகப் பிரதிபலிக்கவே முடியவில்லை. கடவுளுடைய மகிமையில் குறைவுபட்டு, கடவுளுடைய சாயலில் படைக்கப்பட்டதன் நோக்கத்தைத் தவறவிட்டனர். வேறு வார்த்தைகளில் சொன்னால், அவர்கள் பாவம் செய்தனர்.a
3. பாவத்தின் மெய்யான இயல்பு என்ன?
3 கடவுளுடைய ரூபத்தையும் மகிமையையும் மனிதன் பிரதிபலிப்பதைக் கெடுத்துப்போடக்கூடிய பாவத்தின் மெய்யான இயல்பை புரிந்துகொள்வதற்கு நமக்கு இது உதவுகிறது. பாவம் மனிதனைப் பரிசுத்தமற்றவனாக செய்கிறது, அதாவது, ஆவிக்குரிய கருத்திலும் ஒழுக்க நோக்குநிலையிலும் அசுத்தப்படுத்தி, களங்கப்படுத்துகிறது. ஆதாம் ஏவாளின் சந்ததியாராக முழு மனிதவர்க்கமும் அந்தக் களங்கப்படுத்தப்பட்ட அசுத்தமான நிலையில் பிறந்து, கடவுளுடைய பிள்ளைகளாக இருக்கவேண்டும் என்ற அவருடைய எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்ய முடியாமல் இருக்கின்றனர். இதனால் வந்த விளைவு? பைபிள் விவரிக்கிறது: “ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று.”—ரோமர் 5:12; ஒத்துப்பாருங்கள்: ஏசாயா 64:6.
பாவமுள்ள மாம்சத்தின்மீதான பாவப்பிடி
4-6. (அ) இன்றுள்ள பெரும்பான்மையர் பாவத்தை எவ்வாறு கருதுகின்றனர்? (ஆ) பாவத்தின் நவீனகால கருத்துக்களின் விளைவு என்ன?
4 இன்றுள்ள பெரும்பான்மையர் தங்களை அசுத்தமான, களங்கப்படுத்தப்பட்ட, அல்லது பாவமுள்ள ஆட்களாக நினைப்பது கிடையாது. உண்மையாக சொன்னால், பெரும்பான்மையர், பாவம் என்ற சொல்லையே அரிதாகவே பயன்படுத்துகின்றனர். தப்பிதங்கள், முன்யோசனையின்றி செய்த காரியங்கள், தவறாகக் கணக்கிடக்கூடிய செயல்கள் ஆகியவற்றைக் குறித்து அவர்கள் பேசலாம், ஆனால் பாவத்தைப் பற்றியதில்? பேசுவதே அரிது! கடவுளை நம்புவதாக இன்னும் உரிமைபாராட்டுபவர்களுக்குங்கூட, “அவருடைய போதனைகள், ஒழுக்க நெறியாக இருப்பதைக் காட்டிலும், ஒழுக்க நம்பிக்கைகளின் தொகுப்பை உள்ளடக்குவதாகவும், 10 கட்டளைகளாக இருப்பதைக் காட்டிலும் ‘10 ஆலோசனை’களாகவும் இருந்தன” என சமூகவியல் பேராசிரியர் ஆலன் உல்ஃப் கூறுகிறார்.
5 இவ்விதமான சிந்தனாப் போக்கின் விளைவு என்ன? பாவத்தின் மெய்ம்மையை மறுப்பது அல்லது புறக்கணிக்கவாவது செய்வதாகும். இது சரி, தவறு பற்றிய மிகவும் திரித்த கருத்தையுடைய ஜன சந்ததியை உருவாக்கியிருக்கிறது. இவர்கள் நடத்தைக்கான தங்களுடைய சொந்த தராதரங்களை விருப்பப்படி உண்டாக்கிக்கொண்டு, தாங்கள் செய்ய தெரிந்துகொள்ளும் எந்தக் காரியத்துக்கும், எவருக்கும் பொறுப்புள்ளவர்களாக இல்லையென்று நினைக்கின்றனர். அத்தகைய மக்களுக்கு, குறிப்பிட்ட ஒரு செயல்போக்கு சரியா இல்லையா என்பதை சீர்தூக்கி பார்ப்பதற்குக் குற்றமற்ற உணர்வுதானே ஒரே அடிப்படையாக இருக்கிறது.—நீதிமொழிகள் 30:12, 13; ஒத்துப்பாருங்கள்: உபாகமம் 32:5, 20.
6 எடுத்துக்காட்டாக, ஒரு டெலிவிஷன் பேட்டியில், ஏழு பெரும்பாவங்கள் என்றழைக்கப்பட்டதைக் குறித்து தங்களுடைய கருத்துக்களைத் தெரிவிக்குமாறு இளவயதான ஆட்கள் அழைக்கப்பட்டனர்.b “செருக்கு ஒரு பாவமல்ல. உங்களைக் குறித்து நீங்களே குற்றமற்றவர்களாக உணரவேண்டும்” என்று அதில் பங்குகொண்ட ஒருவன் கூறினான். மடிமையைக் குறித்ததில், இன்னொருத்தி சொன்னாள்: “சிலசமயங்களில் அவ்வாறிருப்பது நல்லது. . . . அவ்வப்போது சாவகாசமாக உட்கார்ந்துகொண்டு உங்களுக்கென்று நேரத்தை செலவிடுவது நல்லது.” விரிவுரையாளருங்கூட இந்த மணிச்சுருக்கமான குறிப்பை சொன்னார்: ‘இந்த ஏழு பெரும்பாவங்களும் கெட்ட செயல்கள் அல்ல, ஆனால், மாறாக, தொல்லைப்படுத்தும், நன்கு அனுபவித்து களிக்கக்கூடிய எல்லாருக்குமிருக்கும் மனித உந்தல்களாகும்.’ ஆம், பாவத்தோடுகூட குற்றமுள்ள உணர்வும் மறைந்துவிட்டது; ஏனெனில், குற்றமற்ற உணர்வுக்கு நேரெதிரானதே குற்றமுள்ள உணர்வாகும்.—எபேசியர் 4:17-19.
7. பைபிளின் பிரகாரம், மனிதர்கள் எவ்வாறு பாவத்தினால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்?
7 இந்த எல்லாவற்றுக்கும் நேர் எதிரிடையாக, பைபிள் தெளிவாகக் குறிப்பிடுகிறது: “எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களா”யிருக்கிறார்கள். (ரோமர் 3:23) பவுல் அப்போஸ்தலனுங்கூட ஒத்துக்கொண்டார்: “என்னிடத்தில், அதாவது, என் மாம்சத்தில், நன்மை வாசமாயிருக்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன்; நன்மைசெய்ய வேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது, நன்மைசெய்வதோ என்னிடத்திலில்லை. ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன்.” (ரோமர் 7:18, 19) பவுல் இங்கு தன்னிரக்கத்தில் மூழ்கிவிடவில்லை. மாறாக, தேவமகிமையை விட்டு எவ்வளவு அதிகமாக மனிதவர்க்கம் குறைவுபட்டிருக்கிறது என்பதை முற்றிலும் அறிந்தவராக, பாவமுள்ள மாம்சத்தின்மீதான பாவப்பிடியைக் கடுமையான விதத்தில் உணர்ந்தார். “நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்?” என்று அவர் அறிவித்தார்.—ரோமர் 7:24.
8. நம்மைநாமே என்ன கேள்விகளைக் கேட்டுக்கொள்ளவேண்டும்? ஏன்?
8 இந்தக் காரியத்தைக் குறித்ததில் உங்களுடைய கருத்து என்ன? மற்ற எல்லாரையும்போல ஆதாமின் சந்ததியாராக நீங்களுங்கூட அபூரணர் என்று ஒத்துக்கொள்ளலாம். ஆனால் அதை அறிந்திருப்பதுதானே உங்களுடைய சிந்தனையையும் வாழ்க்கைமுறையையும் எவ்வாறு பாதிக்கிறது? அது இருக்கத்தான் செய்யும், இயல்பானதை வெறுமனே செய்துகொண்டு இருக்கலாம் என்று அதை நீங்கள் ஏற்கிறீர்களா? அல்லது எந்தக் காரியத்தைச் செய்தாலும் முடிந்தளவு தேவமகிமையைப் பொலிவோடு பிரதிபலிக்க கடுமுயற்சியெடுத்து, பாவமுள்ள மாம்சத்தின்மீதான பாவப்பிடியை எதிர்த்துப் போராட விடாமுயற்சி செய்கிறீர்களா? பவுல் சொன்னதைக் கருதுகையில், இது நம் ஒவ்வொருவருக்கும் அதிக அக்கறைக்குரியதாக இருக்கவேண்டும்: “மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்துக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்; ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கின்றார்கள். மாம்சசிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம்.”—ரோமர் 8:5, 6.
மாம்சசிந்தை
9. ஏன் “மாம்சசிந்தை மரணம்”?
9 “மாம்சசிந்தை மரணம்” என்று பவுல் சொன்னபோது எதை அர்த்தப்படுத்திப் பேசினார்? ‘மாம்சம்’ என்ற பதம், கலகக்கார ஆதாமின் சந்ததியில் வந்த மனிதன் ‘பாவத்தில் கர்ப்பந்தரிக்கப்பட்டதை,’ அவனுடைய அபூரண நிலையைக் குறிப்பதற்கு அடிக்கடி பைபிளில் பயன்படுத்தப்படுகிறது. (சங்கீதம் 51:5; யோபு 14:4) இவ்வாறு, பவுல் பாவமுள்ள சுபாவங்கள், உந்தல்கள், அபூரண பாவமுள்ள மாம்சத்தின் இச்சைகள் ஆகியவற்றில் தங்கள் மனங்களை ஊன்றவைக்காதபடி கிறிஸ்தவர்களை அறிவுறுத்திக்கொண்டிருந்தார். ஏன் அவ்வாறு செய்யக்கூடாது? வேறொரு இடத்தில் பவுல் மாம்சத்தின் கிரியைகள் யாவை என்று நமக்கு சொல்லிவிட்ட பிறகு, இந்த எச்சரிக்கையையும் விடுத்தார்: “இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.”—கலாத்தியர் 5:19-21.
10. “சிந்தை” என்றாலென்ன?
10 ஆனால் ஒரு காரியத்தைக் குறித்து சிந்திப்பதற்கும் அதை அப்பியாசிப்பதற்கும் மிகவும் வித்தியாசம் இருக்கிறதல்லவா? ஒன்றைக் குறித்து சிந்திப்பது அதை செய்வதற்கு எப்போதும் வழிநடத்துவது கிடையாது என்பது உண்மைதான். ஆனால் சிந்திப்பது, வெறும் கணநேரம் யோசிப்பதைவிட அதிகமாக இருக்கிறது. கிரேக்கில் பவுல் பயன்படுத்திய சொல் ஃப்ரோநிமா (phroʹne·ma) ஆகும்; அது “சிந்தனா முறை, நினைப்பு (ஊன்றப்பட்டிருப்பது), . . . உள்ளெண்ணம், அவா, நாட்டங்கொள்வது” என்பதைக் குறிக்கிறது. ஆகவே, “மாம்சசிந்தை” என்பது பாவமுள்ள மாம்ச இச்சைகளால் கட்டுப்பட்டிருப்பது, பீடிக்கப்பட்டிருப்பது, ஆட்கொள்ளப்பட்டிருப்பது, மேலும் உந்தப்பட்டிருப்பதை அர்த்தப்படுத்துகிறது.—1 யோவான் 2:16.
11. காயீன் எவ்வாறு மாம்சசிந்தை உடையவனாயிருந்தான், அதன் விளைவென்ன?
11 காயீன் பின்பற்றிய போக்கின் மூலம் அந்தக் குறிப்பு நன்றாக விளக்கப்பட்டிருக்கிறது. பொறாமையும் கோபமும் காயீனுடைய இருதயத்தில் குமுறியபோது, யெகோவா தேவன் அவனை எச்சரித்தார்: “நீ ஏன் கோபமாய் இருக்கிறாய்? உன் முகம் வாடியிருப்பது ஏன்? நீ நன்மை செய்தால் உனக்கு வெகுமதி கிடைக்கும்; தீமை செய்தால் உடனே பாவம் உன் வாயிலில் வந்து பதுங்கி நிற்குமன்றோ? அதன் ஆசை உன்மேல் இருக்கும்; நீயோ அதை அடக்கிக் கொள்ள வேண்டும்.” (ஆதியாகமம் 4:6, 7, தமிழ்க் கத்தோலிக்க பைபிள்) காயீனுக்கு முன்பாக ஒரு தெரிவு இருந்தது. அவன் “நன்மை செய்”வானா, அதாவது, நன்மையானதன்பேரில் தன்னுடைய நினைப்பையும், உள்ளெண்ணத்தையும், அவாவையும் வைப்பானா? அல்லது மாம்ச சிந்தையில் தொடர்ந்து, அவனுடைய இருதயத்தில் பதுங்கியிருக்கிற பொல்லாப்பான சுபாவங்களின்பேரில் தன் மனதை ஊன்றவைப்பானா? யெகோவா விளக்கிக் காட்டுவதுபோல, பாவம் “வாயிலில் வந்து பதுங்கி” நின்றுகொண்டிருந்தது; அதை அவன் அனுமதித்தானானால், அவன்மீது பாய்ந்து அவனை விழுங்கவிருந்தது. தன்னுடைய மாம்ச இச்சையை ‘அடக்கிக் கொண்டு’ எதிர்த்துப்போராடுவதற்கு மாறாக, அது தன்னை ஆட்கொள்ள, ஒரு நாசகரமான முடிவினிடம் வழிநடத்த காயீன் அனுமதித்தான்.
12. “காயீனுடைய வழியில்” நடக்காமலிருப்பதற்கு நாம் என்ன செய்யவேண்டும்?
12 இன்று இருக்கக்கூடிய நம்மைப் பற்றியென்ன? முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் மத்தியிலிருந்த ஒருசிலரைப் பற்றி யூதா புலம்பினதுபோல, நாம் “காயீனுடைய வழியில்” நடக்க விரும்புவது கிடையாது. (யூதா 11) சிறிய ஆசையை நிறைவுபடுத்துவதோ அவ்வப்போது தன்னிச்சையாக செயல்படுவதோ தீங்கு செய்வது கிடையாது என்று நாம் நியாயப்படுத்திக்கொண்டு சிந்திக்கவே கூடாது. நேர் எதிர்மாறாக, நம்முடைய இருதயத்திலும் மனதிலும் எழும்பியிருக்கக்கூடிய எந்தவொரு தேவபக்தியற்ற, களங்கப்படுத்தக்கூடிய பாதிப்பையும் கண்டுபிடித்து, அது வேர்கொள்வதற்கு முன்பே களைந்தெறிவதில் கவனமாயிருக்கவேண்டும். பாவமுள்ள மாம்சத்தின்மீதான பாவப்பிடியை எதிர்த்துப் போராடுவது உள்ளுக்குள்ளிருந்து ஆரம்பிக்கிறது.—மாற்கு 7:21.
13. ஒரு நபர் எவ்வாறு “சுய இச்சையினாலே இழுக்கப்ப”டலாம்?
13 உதாரணமாக, அதிர்ச்சி தரக்கூடிய அல்லது அகோரமான காட்சியோ அல்லது விசேஷமாய் ஆபாசமாக அல்லது காமவுணர்ச்சியூட்டுகிற ஒரு படமோ உங்கள் கண்ணில் தென்படலாம். ஒரு புத்தகத்தில் அல்லது பத்திரிகையில் உள்ள படமாகவோ, சினிமாவில் அல்லது டிவி திரையில் ஒரு காட்சியாகவோ, ஒட்டுவிளம்பரமாகவோ, நிஜ-வாழ்க்கை சூழ்நிலைமையாகவோகூட அது இருக்கக்கூடும். அதுதானே கலவரப்படுத்துவதாக இருக்கவேண்டிய அவசியமில்லை, ஏனென்றால் அது நடக்கக்கூடும், நடக்கவுஞ்செய்கிறது. ஆனால், இந்தப் படமோ காட்சியோ கணநேரமே நீடித்திருந்தபோதிலும், மனதில் அலைதிரிந்து அவ்வப்போது மீண்டும் தோன்றலாம். அப்படி ஏற்பட்டால், என்ன செய்வீர்கள்? அந்தச் சிந்தனையை எதிர்த்துப் போராடி உங்களுடைய மனதிலிருந்து அகற்றிவிடுவதற்கு நீங்கள் உடனடியாக செயல்படுகிறீர்களா? அல்லது உங்கள் மனதில் தக்கவைக்க விட்டு, அந்தச் சிந்தனை வரும்போதெல்லாம் ஒருவேளை அவ்வனுபவத்தை திரும்பவும் கற்பனைசெய்து மகிழ்கிறீர்களா? பின்கூறியிருக்கிற காரியத்தைச் செய்வது யாக்கோபு விளக்கிக் காட்டுகிற சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழக்கூடிய ஆபத்தில் விடக்கூடும்: “அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்.” ஆதலால்தான், “மாம்சசிந்தை மரணம்,” என்று பவுல் சொன்னார்.—யாக்கோபு 1:14, 15; ரோமர் 8:6.
14 பாலின ஒழுக்கக்கேடு, வன்முறை, பொருளாசை ஆகியவற்றை உயர்வாக கருதி, புத்தகங்களிலும், இதழ்களிலும், சினிமாக்களிலும், டெலிவிஷன் நிகழ்ச்சிகளிலும் மேலும் பிரபலமான இசைகளிலும் ஒளிவு மறைவின்றி ஏராளமாக வெளிப்படுத்திக் காட்டும் உலகில் வாழ்ந்துவருவதால், தினந்தோறும் தவறான சிந்தனைகளாலும் கருத்துக்களாலும் உண்மையில் கடுமையாக நாம் தாக்கப்படுகிறோம். உங்களுடைய பிரதிபலிப்பு என்ன? இவ்வெல்லாவற்றாலும் கிளர்ச்சியூட்டப்பட்டு, அனுபவித்து மகிழ்கிறீர்களா? அல்லது ‘அக்கிரமக்காரரால் வருத்தப்பட்டு; அவர்களுடைய அக்கிரமக்கிரியைகளால் நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்ட’ நீதிமானாகிய லோத்தைப்போல, நீங்களும் உணருகிறீர்களா? (2 பேதுரு 2:7, 8) பாவமுள்ள மாம்சத்தின்மீதான பாவப்பிடியை எதிர்த்துப் போராடுவதில் வெற்றிபெற, சங்கீதக்காரனைப்போல நாமும் திடத்தீர்மானம் செய்வது அவசியம்: “தீங்கான காரியத்தை என் கண்முன் வைக்கமாட்டேன்; வழி விலகுகிறவர்களின் செய்கையை வெறுக்கிறேன்; அது என்னைப் பற்றாது.”—சங்கீதம் 101:3.
ஆவியின் சிந்தை
15. நம்மீதான பாவப்பிடியை எதிர்த்துப்போராட நம்மிடமிருக்கும் உதவியென்ன?
15 பாவமுள்ள மாம்சத்தின்மீதான பாவப்பிடியை எதிர்த்துப் போராடுவதில் நமக்கு உதவிசெய்யக்கூடிய ஒரு காரியத்தைக் குறித்துத்தான் பவுல் தொடர்ந்து சொன்னார்: ‘ஆவியின் சிந்தை ஜீவனும் சமாதானமுமாம்.’ (ரோமர் 8:6) இவ்வாறு, மாம்சத்தினால் ஆட்கொள்ளப்படுவதற்கு மாறாக, ஆவியின் செல்வாக்கிற்கு நம்முடைய மனதை அனுமதித்து, ஆவியின் காரியங்களில் பெருகவேண்டும். அவையென்ன? பிலிப்பியர் 4:8-ல் பவுல் அவற்றைப் பட்டியலிடுகிறார்: “கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள்.” உன்னிப்பான கண்ணோட்டம் செலுத்தி, தொடர்ந்து சிந்திக்கவேண்டியவற்றைக் குறித்து நன்றாகப் புரிந்துகொள்வோமாக.
16. எந்தக் குணங்களை “சிந்தித்துக்கொண்டிருக்க” பவுல் நம்மை உற்சாகப்படுத்தினார், ஒவ்வொரு குணமும் எதை உட்படுத்துகிறது?
16 முதன்முதலாக, பவுல் எட்டு ஒழுக்கப் பண்புகளைப் பட்டியலிட்டார். நிச்சயமாகவே, கிறிஸ்தவர்கள் வெறுமனே வேதப்பூர்வமான அல்லது கொள்கை சார்புடைய காரியங்களை மட்டும் எல்லா சமயங்களிலும் சிந்திக்கவேண்டிய கட்டுப்பாட்டில் இல்லை என்பதை நாம் உணருகிறோம். நம்முடைய மனங்களை ஊன்றவைப்பதற்கு பலதரப்பட்ட பொருட்கள் அல்லது விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் முக்கியமான காரியமென்னவென்றால், பவுல் குறிப்பிட்ட ஒழுக்கப் பண்புகளின் தராதரத்திற்கு, அவை பொருந்தவேண்டும். பவுல் எடுத்துக்காட்டும் ‘காரியங்களின்’ (NW) பிரிவுகளில் ஒவ்வொன்றும், நாம் கவனஞ்செலுத்தவேண்டிய ஒன்றாகும். முறையாக அவற்றை சிந்திக்கலாம்.
◻ “உண்மை” என்பது, வெறுமனே சரியானதாக அல்லது தவறானதாக இருப்பதைக் காட்டிலும் அதிகத்தை உட்படுத்துகிறது. அதாவது, உண்மையுள்ளவர்களாகவும் நேர்மையுள்ளவர்களாகவும் நம்பத்தகுந்தவர்களாகவும் இருப்பதையும், வெறும் மெய்மையான பாவனையைக் கொடுப்பதாயிராமல் மெய்யானதாகவே இருக்கவேண்டும்.—1 தீமோத்தேயு 6:20.
◻ ‘ஒழுக்கமுள்ளது’ என்பது கண்ணியமான, மதிப்புமிகுந்த காரியங்களைக் குறிப்பிடுகிறது. பயபக்தியான உணர்வை உண்டாக்கி, மட்டரகமான, கீழ்த்தரமான உணர்வுக்குப் பதிலாக உயர்ந்த, மெச்சத்தகுந்த மரியாதைக்குரிய உணர்வை உண்டாக்கவேண்டும்.
◻ “நீதி” என்பது மனிதனுடைய தராதரத்தை அல்லாமல் கடவுளுடையதை பூர்த்திசெய்வதைக் குறிக்கிறது. உலகப்பிரகாரமான ஆட்கள் அநீதமான யோசனைகளால் தங்கள் மனதை நிரப்புகின்றனர், நாமோ கடவுளுடைய பார்வையில் நீதியான காரியங்களாக இருப்பதை சிந்தித்து அவற்றில் மகிழ்ச்சி காணவேண்டும்.—சங்கீதம் 26:4-ஐயும் ஆமோஸ் 8:4-6-ஐயும் ஒத்துப்பாருங்கள்.
◻ “கற்பு” என்பது நடத்தையில் (பாலுறவு அல்லது மற்றபடி) மட்டும் தூய்மையாகவும் பரிசுத்தமாகவும் இருப்பதையல்லாமல் சிந்தனையிலும் உள்ளெண்ணத்திலும் அவ்வாறிருப்பதைக் குறிக்கிறது. “பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது [கற்புள்ளதாயிருக்கிறது, NW]” என்று யாக்கோபு சொல்கிறார். “சுத்த”முள்ளவராகிய இயேசு நாம் சிந்திக்கவேண்டிய பரிபூரண முன்மாதிரியாயிருக்கிறார்.—யாக்கோபு 3:17; 1 யோவான் 3:3.
◻ ‘அன்புள்ளது’ என்பது பிறரில் அன்பைத் தூண்டி ஊக்குவிப்பதாக இருக்கிறது. கசப்பு, சச்சரவு போன்ற காரியங்கள்மீது நம்முடைய மனதை வைப்பதற்கு பதிலாக, “அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் . . . ஏவப்படும்படி ஒருவரையொருவர்” நாம் “கவனித்துக்” கொள்ளவேண்டும்.—எபிரெயர் 10:24.
◻ ‘நற்கீர்த்தியுள்ளது’ என்பது வெறுமனே “பெயர்பெற்ற”வராக அல்லது “புகழ்பெற்ற”வராக இருப்பதோடு மட்டுமல்லாமல், நடைமுறையான கருத்தில், கட்டியெழுப்புபவராகவும் பாராட்டப்படுபவராகவும் இருப்பதைக் குறிக்கிறது. நாம் தரக்குறைவான மற்றும் அவமதிப்பான காரியங்கள்மீது நம்முடைய மனதை ஊன்றவைக்காமல், பிரயோஜனமானதாகவும் கட்டியெழுப்புவதாகவும் இருக்கும் காரியங்கள்மீது நம்முடைய மனதை ஊன்றவைக்கவேண்டும்.—எபேசியர் 4:29.
◻ “புண்ணியம்” என்பது அடிப்படையாக “சற்குணம்” அல்லது “ஒழுக்கப்பிரகாரமான மேன்மை”யைக் குறிக்கிறது, ஆனால் எந்தவொரு வகையான மேன்மையையும் அது குறிக்கலாம். இவ்வாறு, கடவுளுடைய தராதரத்துக்கு இணக்கமாயிருக்கும் பிறருடைய அருமையான குணங்களையும் நற்பண்புகளையும் சாதனைகளையும் நாம் மதித்துணரலாம்.
◻ “புகழ்” தரும் காரியங்கள் உண்மையில் புகழ்ச்சிக்குரியவையாக இருக்கவேண்டுமென்றால், அந்தப் புகழ்ச்சியானது கடவுளிடமிருந்தோ அவர் உண்மையில் அங்கீகரித்திருக்கும் அதிகாரத்தினிடமிருந்தோ வரவேண்டும்.—1 கொரிந்தியர் 4:5; 1 பேதுரு 2:14.
ஜீவனுக்கான, சமாதானத்திற்கான வாக்குத்தத்தம்
17. “ஆவியின் சிந்தை”யின் பலனாக என்ன ஆசீர்வாதங்கள் கிட்டும்?
17 பவுல் கொடுத்த புத்திமதியைப் பின்பற்றி ‘இவைகளையே சிந்தித்துக்கொண்டிருந்தால்,’ “ஆவியின் சிந்தை”யில் நாம் வெற்றிபெறுவோம். இதனால் கிட்டும் பலன் ஜீவ ஆசீர்வாதமாக மட்டுமல்லாமல், அதாவது வாக்குத்தத்தம் செய்யப்பட்ட புதிய உலகில் நித்திய ஜீவன் மட்டும் கிட்டாமல் சமாதானமும் கிட்டும். (ரோமர் 8:6) ஏன்? ஏனென்றால், நம்முடைய மனங்கள் மாம்சப்பிரகாரமான காரியங்களின் பொல்லாப்பான செல்வாக்கிலிருந்து பாதுகாக்கப்படுகின்றன, மேலும் பவுல் விவரித்துக் காண்பித்த மாம்சத்துக்கும் ஆவிக்குமுரிய வேதனைமிக்க போராட்டத்தினால் இனிமேலும் அவ்வளவு அதிகமாக பாதிக்கப்படுவது கிடையாது. மாம்ச செல்வாக்கை எதிர்ப்பதன் மூலம், நாம் கடவுளோடு சமாதானத்தையும் பெறுகிறோம், “எப்படியென்றால், மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை”யாக இருக்கிறது.—ரோமர் 7:21-24; 8:7.
18. சாத்தான் எந்தப் போரை நடத்திவருகிறான், அதில் நாம் எவ்வாறு வெற்றிபெற முடியும்?
18 சாத்தானும் அவனைச் சேர்ந்த ஏஜென்டுகளும் தேவமகிமையை நாம் பிரதிபலிப்பதைக் களங்கப்படுத்த, தங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்துவருகின்றனர். நம்முடைய மனங்களை மாம்ச இச்சைகளால் கடுமையாகத் தாக்குவதன் மூலம் அவற்றைக் கட்டுப்படுத்த முயலுகின்றனர்; இது முடிவில் கடவுளுக்கு விரோதமான பகைமையிலும் இறப்பிலும் வழிநடத்தும் என்பதை அறிந்தவர்களாக அவ்வாறு செய்கின்றனர். நாமோ இந்தப் போரில் வெற்றிபெற்று வரமுடியும். பாவமுள்ள மாம்சத்தின்மீதான பாவப்பிடியை எதிர்த்துப் போராட உபாயத்தைக் கொடுத்ததற்காக, “நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துமூலமாய்த் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்,” என்று பவுலைப்போல நாமும் அறிவிக்கலாம்.—ரோமர் 7:25.
[அடிக்குறிப்புகள்]
a பொதுவாக, பைபிள் “பாவம்” என்பதைக் குறித்துக்காட்ட சடா (cha·taʼʹ) என்ற எபிரெய வினைச்சொல்லையும் ஹாமர்டேனோ (ha·mar·taʹno) என்ற கிரேக்க வினைச்சொல்லையும் பயன்படுத்துகிறது. இவ்விரண்டு சொற்களும் “தவறவிடுவது” என்று அர்த்தங்கொள்கின்றன; ஒரு இலக்கு, குறி, அல்லது குறிக்கோளைத் தவறவிடுவது அல்லது அடையாமலிருப்பது என்ற கருத்தைக் கொடுக்கின்றன.
b ஐதிகத்தின்படி, செருக்கு, வெஃகல், காமம், வெகுளி, பெருந்தீனி, அழுக்காறு, மடி ஆகியவை ஏழு பெரும்பாவங்களாகும்.
உங்களால் விளக்கம்தர முடியுமா?
◻ பாவம் என்றாலென்ன, பாவமுள்ள மாம்சத்தின்மீது அது எவ்வாறு பிடிகொள்ள ஆரம்பிக்கும்?
◻ “மாம்சசிந்தை”யை நாம் எவ்வாறு எதிர்த்துப் போராடலாம்?
◻ “ஆவியின் சிந்தை”யை வளர்க்க நாம் என்ன செய்யலாம்?
◻ “ஆவியின் சிந்தை” எவ்வாறு ஜீவனையும் சமாதானத்தையும் கொண்டுவரும்?
14. தினந்தோறும் நாம் எவற்றால் தாக்கப்படுகிறோம், அதற்கு நாம் எவ்வாறு பிரதிபலிக்கவேண்டும்?
[பக்கம் 15-ன் படம்]
காயீன் தன்னுடைய சொந்த கேட்டிற்கே மாம்ச சுபாவங்கள் தன்னை ஆட்கொள்ளுமாறு அனுமதித்தான்
[பக்கம் 16-ன் படம்]
ஆவியின் சிந்தை ஜீவனும் சமாதானமுமாம்