அதிகாரத்தைப்பற்றிய கிறிஸ்தவ நோக்கு
“தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை.”—ரோமர் 13:1.
1. யெகோவாவே மிக உயர்வான அதிகாரமுள்ளவர் என்று ஏன் சொல்லப்படலாம்?
அதிகாரம் சிருஷ்டிகர்த்தத்துவத்துடன் தொடர்புடையது. எல்லா சிருஷ்டிப்பும், உயிருள்ளவையும் உயிரற்றவையும் உண்டாகி நிலைத்திருக்கும்படிச் செய்த மிக உயர்வானவர் யெகோவா தேவனே. மறுக்கமுடியாத வகையில் அவரே மிக உயர்வான அதிகாரமுள்ளவராக இருக்கிறார். பின்வருமாறு அறிவிக்கிற பரலோக சிருஷ்டிகளுடைய உணர்ச்சிகளை உண்மை கிறிஸ்தவர்கள் பகிர்ந்துகொள்கின்றனர்: “கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர்; நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர். உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது என்றார்கள்.”—வெளிப்படுத்துதல் 4:11.
2. ஆரம்ப கால மனித ஆட்சியாளர்கள் தங்கள் உடன் மனிதர்மீது ஆதிக்கம் செலுத்துவதற்கு தங்களுக்கு இயல்பான உரிமை இல்லை என்பதை எவ்வாறு ஒருவிதத்தில் ஒத்துக்கொண்டார்கள், இயேசு பொந்தியு பிலாத்துவிடம் என்ன சொன்னார்?
2 மிக ஆரம்ப காலத்து மனித ஆட்சியாளர்களில் அநேகர் தங்களை கடவுள் என்றோ கடவுளுடைய பிரதிநிதி என்றோ உரிமைபாராட்டுவதன்மூலம் தங்களுடைய அதிகாரத்தைச் சட்டப்பூர்வ தகுதியுள்ளதாக்க முயன்றார்கள் என்ற உண்மைதானே, எந்த ஒரு மனிதனும் மற்ற மனிதர்மீது ஆட்சிசெலுத்துவதற்கான உள்ளியல்பான உரிமையை உடையவனாய் இல்லை என்பதை மெளனமாக ஏற்றுக்கொள்வதாய் இருந்தது.a (எரேமியா 10:23) அதிகாரத்திற்கான ஒரே சட்டப்பூர்வ தகுதியுள்ள ஊற்றுமூலம் யெகோவா தேவன். யூதேயாவின் ரோம அதிபதியாகிய பொந்தியு பிலாத்துவிடம் கிறிஸ்து சொன்னார்: “பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்படாதிருந்தால், என்மேல் உமக்கு ஒரு அதிகாரமுமிராது.”—யோவான் 19:11.
“தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை”
3. ‘மேலான அதிகாரங்களை’ பற்றி அப்போஸ்தலன் பவுல் என்ன சொன்னார், இயேசு மற்றும் பவுலின் கூற்றுகள் என்ன கேள்விகளை எழுப்புகின்றன?
3 ரோம பேரரசின் ஆதிக்கத்தின்கீழ் வாழ்ந்துவந்த கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் எழுதினார்: “எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்; ஏனென்றால், தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே [அவற்றிற்குரிய சம்பந்தப்பட்ட நிலைகளிலே, NW] நியமிக்கப்பட்டிருக்கிறது.” (ரோமர் 13:1) பிலாத்துவின் அதிகாரம் அவருக்குப் “பரத்திலிருந்து” கொடுக்கப்பட்டிருக்கிறது என்று குறிப்பிட்டபோது இயேசு எதை அர்த்தப்படுத்தினார்? பவுலின் நாளிலிருந்த அரசியல் அதிகாரங்கள் அவற்றிற்குரிய சம்பந்தப்பட்ட நிலைகளிலே கடவுளால் நியமிக்கப்பட்டிருந்தன என்று எந்த வகையில் அவர் கருதினார்? இந்த உலகின் ஒவ்வொரு தனி அரசியல் ஆட்சியாளரின் நியமனத்திற்கும் யெகோவா தனிப்பட்டவராக பொறுப்புள்ளவர் என்று அவை அர்த்தப்படுத்தினவா?
4. இயேசுவும் பவுலும் சாத்தானை எவ்வாறு அழைத்தனர், சாத்தானுடைய எந்த உரிமைபாராட்டலை இயேசு மறுக்கவில்லை?
4 இயேசு சாத்தானை “இந்த உலகத்தின் அதிபதி” என்று அழைத்து, அப்போஸ்தலன் பவுல் அவனை “இப்பிரபஞ்சத்தின் தேவனானவன்” என்றும் குறிப்பிட்டிருக்கையில், இது எவ்வாறு அப்படி இருக்கமுடியும்? (யோவான் 12:31; 16:11; 2 கொரிந்தியர் 4:4) மேலுமாக, இயேசுவைச் சோதிக்கையில், சாத்தான் ‘உலகத்தின் சகல ராஜ்யங்கள்’ மேலுமுள்ள அதிகாரம் அவனுக்குக் கொடுக்கப்பட்டிருந்ததாக உரிமைபாராட்டி, அந்த “அதிகாரத்தை” அவருக்குக் கொடுக்க முன்வந்தான். இயேசு இந்தப் பதவியளிப்பை மறுத்தார், ஆனால் அப்படிப்பட்ட அதிகாரத்தைக் கொடுப்பதற்கு அது சாத்தானுடையதாய் இருந்தது என்பதை அவர் மறுக்கவில்லை.—லூக்கா 4:5-8.
5. (அ) மனித அதிகாரத்தைப் பற்றிய இயேசு மற்றும் பவுலின் வார்த்தைகளை நாம் எவ்வாறு புரிந்துகொள்ளவேண்டும்? (ஆ) என்ன அர்த்தத்தில் மேலான அதிகாரங்கள் ‘தேவனாலே அவற்றிற்குரிய சம்பந்தப்பட்ட நிலைகளிலே நியமிக்கப்பட்டிருக்கின்றன’?
5 சாத்தானுடைய கலகத்திற்குப் பின்னும், ஆதாமையும் ஏவாளையும் அவன் சோதித்து, யெகோவாவின் அரசுரிமைக்கு எதிராக அவர்களைக் கலகம் செய்ய வைத்ததற்குப் பின்னும், அவனை வாழும்படி அனுமதித்ததன்மூலம் யெகோவா அவனுக்கு இந்த உலகின்மீதான ஆட்சியைக் கொடுத்திருக்கிறார். (ஆதியாகமம் 3:1-6; ஒப்பிடவும் யாத்திராகமம் 9:15, 16.) ஆகவே, ஏதேனில் முதல் மனித ஜோடி தேவாட்சியை, அல்லது கடவுளுடைய ஆட்சியை மறுத்தபின், யெகோவா, அந்த உறவை முறித்துக்கொண்ட மனிதர் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட சமுதாயத்தில் வாழும்படியாக அதிகார அமைப்புமுறைகளைத் தாங்கள் உருவாக்கிக்கொள்ளும்படி அனுமதித்தார் என்பதையே இயேசு மற்றும் பவுலின் வார்த்தைகள் அர்த்தப்படுத்தவேண்டும். சிலசமயங்களில், தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றும்படி, யெகோவா ஒருசில ஆட்சியாளர்களை அல்லது அரசாங்கங்களை விழச்செய்திருக்கிறார். (தானியேல் 2:19-21) மற்றவர்களை அதிகாரத்தில் நிலைத்திருக்கும்படி அனுமதித்திருக்கிறார். நிலைத்திருக்கும்படி யெகோவா அனுமதிக்கும் ஆட்சியாளர்களைப் பொறுத்தவரையில், அவர்கள் ‘தேவனாலே அவற்றிற்குரிய சம்பந்தப்பட்ட நிலைகளிலே நியமிக்கப்பட்டிருப்பதாகச்’ சொல்லப்படலாம்.
பூர்வ கிறிஸ்தவர்களும் ரோம அதிகாரங்களும்
6. பூர்வ கிறிஸ்தவர்கள் ரோம அதிகாரங்களை எவ்வாறு நோக்கினார்கள், ஏன்?
6 இஸ்ரவேலில் குடியிருந்த ரோமர்களுக்கு எதிராகத் திட்டமிட்டு போராடின யூத பிரிவுகளுடன் பூர்வ கிறிஸ்தவர்கள் கூட்டுச்சேரவில்லை. ரோம அதிகாரங்கள், தங்களுடைய சட்டத்தொகுப்போடுகூடிய சட்ட ஒழுங்குமுறையுடன், நிலத்திலும் கடலிலும் ஒழுங்கைக் காத்து, அநேக பயனுள்ள நீர்குழாய்கள், சாலைகள், பாலங்கள் ஆகியவற்றை அமைத்து, மொத்தத்தில் பொது நலனுக்காக செயல்பட்டவரைக்கும் கிறிஸ்தவர்கள் அவர்களை ‘தங்களுடைய நன்மைக்கேதுவான தேவ ஊழியராக’ [அல்லது, ‘வேலையாளாக,’ NW, அடிக்குறிப்பு] கருதினர். (ரோமர் 13:3, 4) இயேசுவால் கட்டளையிடப்பட்டபடி கிறிஸ்தவர்கள் நற்செய்தியை எங்கும் பிரசங்கிப்பதற்கான ஒரு சூழலை சட்டமும் ஒழுங்கும் உருவாக்கியது. (மத்தேயு 28:19, 20) ரோமர்களால் விதிக்கப்பட்ட வரிகளை, அவற்றில் கொஞ்சம் பணம் கடவுளால் அங்கீகரிக்கப்படாத நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டாலும்கூட, அவர்களால் நல்ல மனச்சாட்சியோடு செலுத்த முடிந்தது.—ரோமர் 13:5-7.
7, 8. (அ) ரோமர் 13:1-7-ஐ கவனமாக வாசிப்பது எதை வெளிப்படுத்துகிறது, சூழமைவு எதைக் காண்பிக்கிறது? (ஆ) எந்தச் சூழ்நிலைகளில் ரோம அதிகாரிகள் ‘தேவ ஊழியராக’ செயல்படவில்லை, அவ்வாறு இருக்கையில், பூர்வ கிறிஸ்தவர்கள் என்ன மனநிலையைக் கொண்டிருந்தார்கள்?
7 ரோமர் 13-ம் அதிகாரத்தின் முதல் ஏழு வசனங்களைக் கவனமாக வாசிப்பது, அரசியல்பூர்வமான ‘மேலான அதிகாரிகள்’ நன்மை செய்கிறவர்களைப் போற்றுவதற்கும் தீமையை நடப்பிக்கிறவர்களைத் தண்டிப்பதற்குமான ‘தேவ ஊழியர்’ என்பதை வெளிப்படுத்துகிறது. மேலான அதிகாரிகள் அல்ல, ஆனால் கடவுளே எது நல்லது, எது கெட்டது என்பதைத் தீர்மானிப்பதாக அதன் சூழமைவு காண்பிக்கிறது. ஆகையால், ரோம பேரரசரோ மற்றொரு அரசியல் அதிகாரியோ கடவுள் தடைசெய்திருக்கிற காரியங்களை தேவைப்படுத்தினாலோ மாறாக, கடவுள் தேவைப்படுத்தும் காரியங்களைத் தடைசெய்தாலோ, அவர் அதற்கு மேலும் கடவுளுடைய ஊழியராக செயல்படவில்லை. இயேசு குறிப்பிட்டார்: “இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதைத் தேவனுக்கும் செலுத்துங்கள்.” (மத்தேயு 22:21) ரோம அரசாட்சி, வணக்கம் அல்லது ஓர் ஆளின் உயிர் என்பதுபோன்ற கடவுளுக்குரிய காரியங்களைக் கேட்டால் உண்மைக் கிறிஸ்தவர்கள் அப்போஸ்தல அறிவுரையைப் பின்பற்றினார்கள்: “மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது.”—அப்போஸ்தலர் 5:29.
8 பேரரசர் வணக்கத்தையும், விக்கிரக ஆராதனையையும் அப்பியாசிக்கவும், கிறிஸ்தவ கூட்டங்களுக்குச் செல்வதை விட்டுவிடவும், நற்செய்தியைப் பிரசங்கிப்பதை நிறுத்திவிடவும் பூர்வ கிறிஸ்தவர்கள் மறுத்தது துன்புறுத்தலைக் கொண்டுவந்தது. அப்போஸ்தலன் பவுல், பேரரசர் நீரோவின் கட்டளையின்பேரில் கொலை செய்யப்பட்டதாகப் பொதுவாக நம்பப்படுகிறது. மற்ற பேரரசர்கள், குறிப்பாக டமிஷன், மார்க்கஸ் ஆரிலியஸ், ஸெப்டிமியுஸ், செவேருஸ், டிஷியஸ், டயக்லிஷன் ஆகியோரும் பூர்வ கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தினர். இந்தப் பேரரசர்களும் அவர்களுக்குக் கீழுள்ள அதிகாரிகளும் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தியபோது, அவர்கள் நிச்சயமாகவே ‘தேவ ஊழியராக’ செயல்படவில்லை.
9. (அ) அரசியல்பூர்வ மேலான அதிகாரங்களைக் குறித்ததில் எது உண்மையாக இருக்கிறது, யாரிடமிருந்து அரசியல் மிருகம் வல்லமையையும் அதிகாரத்தையும் பெறுகிறது? (ஆ) மேலான அதிகாரங்களுக்குக் கிறிஸ்தவர்கள் கீழ்ப்பட்டிருப்பதைப்பற்றி நியாயமாக என்ன சொல்லப்படலாம்?
9 அரசியல்பூர்வ மேலான அதிகாரங்கள் ஓர் ஒழுங்குள்ள மனித சமுதாயத்தைக் காத்துவர சில வழிகளில் ‘கடவுளுடைய ஏற்பாடாக’ சேவித்து வந்தாலும், சாத்தான் கடவுளாக இருக்கக்கூடிய இந்த உலகப்பிரகாரமான காரிய ஒழுங்குமுறையின் ஒரு பாகமாக அவை தொடர்ந்திருக்கின்றன. (1 யோவான் 5:19) அவை வெளிப்படுத்துதல் 13:1, 2-ல் ‘மூர்க்க மிருகத்தால்’ அடையாளங்காட்டப்பட்ட உலகளாவிய அரசியல் அமைப்பைச் சேர்ந்தவை. அந்த மிருகம் தன்னுடைய வல்லமையையும் அதிகாரத்தையும் பிசாசாகிய சாத்தானான ‘பெரிய வலுசர்ப்பத்திடமிருந்து’ பெறுகிறது. (வெளிப்படுத்துதல் 12:9) ஆகவே, நியாயமாகவே, அப்படிப்பட்ட அதிகாரங்களுக்குக் கிறிஸ்தவ கீழ்ப்படிதல் சம்பந்தப்பட்டதே, முழுமையானது அல்ல.—ஒப்பிடவும் தானியேல் 3:16-18.
அதிகாரத்திற்குச் சரியான மரியாதை
10, 11. (அ) அதிகாரத்திலிருக்கும் மனிதருக்கு நாம் மரியாதை காட்டவேண்டும் என்று பவுல் எவ்வாறு காண்பித்தார்? (ஆ) “ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும்” எப்படி மற்றும் ஏன் ஜெபங்கள் செய்யப்படலாம்?
10 என்றபோதிலும், கிறிஸ்தவர்கள் அரசியல்பூர்வ மேலான அதிகாரிகளிடமாக ஒரு கடுமையான, எதிர்க்கும் மனநிலையை உடையவர்களாய் இருக்கவேண்டும் என்று இது அர்த்தப்படுத்துவதில்லை. தங்களுடைய தனிப்பட்ட, அல்லது பொது வாழ்க்கையில்கூட இவர்களில் அநேக மனிதர் குறிப்பிடத்தக்க மதிப்பிற்குரியவர்களாக இல்லை என்பது உண்மைதான். இருந்தாலும், அப்போஸ்தலர் தங்களுடைய முன்மாதிரியாலும் தங்களுடைய அறிவுரையாலும், அதிகாரத்தில் இருக்கும் மனிதர் மரியாதையுடன் நடத்தப்படவேண்டும் என்று காண்பித்தனர். அரசனாகிய ஏரோது அகிரிப்பா II-க்கு முன் பவுல் நின்றபோது, தக்க மரியாதையுடன் அவரிடம் பேசினார்.—அப்போஸ்தலர் 26:2, 3, 25.
11 உலக அதிகாரிகளை, குறிப்பாக நம்முடைய வாழ்க்கையையும் கிறிஸ்தவ நடவடிக்கைகளையும் பாதிக்கும் தீர்மானங்களை அவர்கள் எடுக்கும்படி நாம் முறையிட்டிருக்கும்போது, நம்முடைய ஜெபங்களில் குறிப்பிடுவது தகுந்ததே என்றுகூட பவுல் குறிப்பிட்டார். அவர் எழுதினார்: “நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்; நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்யவேண்டும். நம்முடைய இரட்சகராகிய தேவனுக்குமுன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது. எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.” (1 தீமோத்தேயு 2:1-4) அப்படிப்பட்ட அதிகாரிகளிடமான நம்முடைய மரியாதையுள்ள நடத்தை, ‘எல்லா வகையான மனிதரையும்’ இரட்சிக்கும்படி முயலும் வேலையை நாம் அதிக தடங்கலின்றி செய்ய அவர்கள் அனுமதிப்பதற்கு வழிநடத்தக்கூடும்.
12, 13. (அ) அதிகாரத்தைப்பற்றி பேதுரு என்ன சமநிலையான அறிவுரையைக் கொடுத்தார்? (ஆ) யெகோவாவின் சாட்சிகளுக்கு விரோதமாக தப்பெண்ணத்தை உருவாக்கும் “புத்தியீன மனுஷருடைய அறியாமையுள்ள பேச்சை” நாம் எவ்வாறு ஈடுகட்டக்கூடும்?
12 அப்போஸ்தலன் பேதுரு எழுதினார்: “நீங்கள் மனுஷருடைய கட்டளைகள் யாவற்றிற்கும் கர்த்தர்நிமித்தம் கீழ்ப்படியுங்கள். மேலான அதிகாரமுள்ள ராஜாவுக்கானாலுஞ்சரி, தீமைசெய்கிறவர்களுக்கு ஆக்கினையும் நன்மைசெய்கிறவர்களுக்குப் புகழ்ச்சியும் உண்டாகும்படி அவனால் அனுப்பப்பட்ட அதிகாரிகளுக்கானாலுஞ்சரி, கீழ்ப்படியுங்கள். நீங்கள் நன்மைசெய்கிறதினாலே புத்தியீன மனுஷருடைய [அறியாமையுள்ள பேச்சை, NW] அடக்குவது தேவனுடைய சித்தமாயிருக்கிறது. சுயாதீனமுள்ளவர்களாயிருந்தும் உங்கள் சுயாதீனத்தைத் துர்க்குணத்திற்கு மூடலாகக் கொண்டிராமல், தேவனுக்கு அடிமைகளாயிருங்கள். எல்லாரையும் கனம்பண்ணுங்கள்; சகோதரரிடத்தில் அன்புகூருங்கள்; தேவனுக்குப் பயந்திருங்கள்; ராஜாவைக் கனம்பண்ணுங்கள்.” (1 பேதுரு 2:13-17) எவ்வளவு சமநிலையான அறிவுரை! கடவுளுக்கு அவருடைய அடிமைகளாக முழுமையாய் கீழ்ப்பட்டிருக்க நாம் கடமைப்பட்டிருக்கிறோம்; தீமை செய்கிறவர்களைத் தண்டிப்பதற்கு அனுப்பப்பட்ட அரசியல் அதிகாரிகளுக்கு சம்பந்தப்பட்ட மற்றும் மரியாதையுள்ள கீழ்ப்பட்டிருத்தலைக் காண்பிக்கிறோம்.
13 அநேக உலகப்பிரகாரமான அதிகாரிகள் யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி மிக விநோதமான தவறான கருத்துக்களைக் கொண்டிருப்பதாகக் காணப்பட்டிருக்கிறது. வழக்கமாக இது ஏனென்றால், கெட்ட நோக்கமுள்ள, கடவுளுடைய மக்களின் எதிரிகளால் அவர்கள் தவறான தகவல் அளிக்கப்பட்டிருக்கிறார்கள். அல்லது நம்மைப் பற்றி அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் தகவல் தொடர்பு சாதனங்கள் வழியாக அவர்கள் படித்தவையாக மட்டுமே இருக்கக்கூடும்; அவை எப்போதும் பட்சபாதமின்றி எல்லாவற்றையும் குறிப்பிடுவதில்லை. சிலசமயங்களில், நம்முடைய மரியாதையுள்ள நடத்தையின் மூலமாகவும், சாத்தியமாக இருக்கும்போது, அந்த அதிகாரிகளுக்கு யெகோவாவின் சாட்சிகளுடைய வேலையையும் நம்பிக்கைகளையும் பற்றிய ஒரு தெளிவான விளக்கத்தையும் அளிப்பதன்மூலமாகவும், இந்தத் தப்பெண்ணத்தை எடுத்துப்போட முடியும். அதிக வேலையாக இருக்கும் அதிகாரிகளுக்கு, இருபதாம் நூற்றாண்டில் யெகோவாவின் சாட்சிகள் (Jehovah’s Witnesses in the Twentieth Century) என்ற சிற்றேடு ஒரு சுருக்கமான விளக்கத்தை அளிக்கிறது. முழுமையான தகவலுக்கு, யெகோவாவின் சாட்சிகள்—கடவுளுடைய ராஜ்யத்தை அறிவிப்போர் (Jehovah’s Witnesses—Proclaimer’s of God’s Kingdom) என்ற புத்தகம் கொடுக்கப்படலாம்; உள்ளூர் மற்றும் தேசிய பொது நூலகங்களில் இடம்பெற தகுதியுள்ள ஒரு சிறந்த ஏதுவாக இருக்கிறது.
கிறிஸ்தவ வீடுகளுக்குள் அதிகாரம்
14, 15. (அ) ஒரு கிறிஸ்தவ வீட்டிற்குள் அதிகாரத்திற்கு என்ன அடிப்படை இருக்கிறது? (ஆ) கிறிஸ்தவ மனைவிகள் தங்களுடைய கணவர்களிடமாக என்ன மனநிலையைக் கொண்டிருக்கவேண்டும், ஏன்?
14 கிறிஸ்தவர்கள் உலகப்பிரகாரமான அதிகாரங்களுக்குத் தகுந்த மரியாதை காண்பிக்கவேண்டும் என்று கடவுளால் எதிர்பார்க்கப்பட்டால், அதேவிதமாகவே கிறிஸ்தவ வீடுகளுக்குள் கடவுளால் நிறுவப்பட்ட அதிகார அமைப்புமுறைக்கும் அவர்கள் மரியாதை காட்டவேண்டும் என்பது தெளிவாக இருக்கிறது. அப்போஸ்தலன் பவுல் யெகோவாவின் மக்கள் மத்தியில் நிலவும் தலைமைத்துவ நியமத்தைச் சுருக்கமான பதங்களில் வரையறுத்தார். அவர் எழுதினார்: “ஒவ்வொரு புருஷனுக்கும் கிறிஸ்து தலையாயிருக்கிறாரென்றும் ஸ்திரீக்குப் புருஷன் தலையாயிருக்கிறானென்றும், கிறிஸ்துவுக்குத் தேவன் தலையாயிருக்கிறாரென்றும், நீங்கள் அறியவேண்டுமென்று விரும்புகிறேன்.” (1 கொரிந்தியர் 11:3) இதுவே தேவாட்சி, அல்லது கடவுளுடைய ஆட்சியின் நியமமாக இருக்கிறது. இது எதை உட்படுத்துகிறது?
15 தேவாட்சிக்கான மரியாதை வீட்டில் தொடங்குகிறது. தன்னுடைய கணவனின் அதிகாரத்திற்கு—அவன் ஓர் உடன் விசுவாசியாக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி—தகுந்த மரியாதை காட்டாத ஒரு கிறிஸ்தவ மனைவி தேவாட்சிக்குரியவளாக இல்லை. பவுல் கிறிஸ்தவர்களுக்கு அறிவுரை கூறினார்: “தெய்வ பயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள். மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்கள் சொந்த புருஷருக்குக் கீழ்ப்படியுங்கள். கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்; அவரே சரீரத்திற்கும் இரட்சகராயிருக்கிறார். ஆகையால், சபையானது கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல மனைவிகளும் தங்கள் சொந்தப் புருஷர்களுக்கு எந்தக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்கவேண்டும்.” (எபேசியர் 5:21-24) கிறிஸ்தவ ஆண்கள் கிறிஸ்துவின் தலைமைக்குக் கீழ்ப்பட்டிருக்கவேண்டியதுபோல, கிறிஸ்தவ பெண்கள் தங்கள் கணவர்களுடைய கடவுளால்-கொடுக்கப்பட்ட அதிகாரத்தின் ஞானத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும். இது அவர்களுக்கு ஆழ்ந்த உள்ளான திருப்தியையும், மிக முக்கியமாக, யெகோவாவின் ஆசீர்வாதத்தையும் கொண்டுவரும்.
16, 17. (அ) கிறிஸ்தவ வீடுகளில் வளர்க்கப்பட்ட பிள்ளைகள் இன்றைய இளைஞர் பலரிலிருந்து எவ்வாறு தங்களை வித்தியாசப்பட்டவர்களாகக் காண்பிக்கலாம், அவர்களுக்கு அதற்காக என்ன உந்துவிப்பு இருக்கிறது? (ஆ) இன்றைய இளைஞருக்கு இயேசு எவ்வாறு ஒரு சிறந்த முன்மாதிரியாக இருந்தார், அவர்கள் என்ன செய்யும்படி உற்சாகப்படுத்தப்படுகின்றனர்?
16 தேவாட்சிக்குரிய பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்குத் தகுந்த மரியாதையைக் காண்பிப்பதில் மகிழ்ச்சி அடைகிறார்கள். கடைசி நாட்களிலுள்ள இளைய தலைமுறையைப் பற்றி அவர்கள் “தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும்” இருப்பார்கள், என்று முன்னறிவிக்கப்பட்டது. (2 தீமோத்தேயு 3:1, 2) ஆனால் கிறிஸ்தவ பிள்ளைகளிடம் கடவுளுடைய ஏவப்பட்ட வார்த்தை சொல்லுகிறது: “பிள்ளைகளே, உங்களைப் பெற்றாருக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படியுங்கள்; இது கர்த்தருக்குப் பிரியமானது.” (கொலோசெயர் 3:20) பெற்றோரின் அதிகாரத்திற்கு மரியாதை காட்டுவது யெகோவாவைப் பிரியப்படுத்துவதாயும், அவருடைய ஆசீர்வாதத்தைக் கொண்டுவருவதாயும் இருக்கிறது.
17 இது இயேசுவின் விஷயத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. லூக்காவின் பதிவு குறிப்பிடுகிறது: “அவர் அவர்களுடனே [அவருடைய பெற்றோருடனே] கூடப்போய், நாசரேத்தூரில் சேர்ந்து, அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார். . . . இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார்.” (லூக்கா 2:51, 52) அந்தச் சமயத்தில் இயேசு 12 வயதுள்ளவராய் இருந்தார்; இங்கு பயன்படுத்தப்பட்ட கிரேக்க வினைச்சொல், அவர் தம்முடைய பெற்றோருக்கு ‘தொடர்ந்து கீழ்ப்படிந்திருந்தார்’ என்று அழுத்திக் கூறுகிறது. ஆகவே அவருடைய கீழ்ப்பட்டிருத்தல் அவர் தன்னுடைய வளரிளமை பருவத்தைச் சென்றெட்டியதுடன் நின்றுவிடவில்லை. இளைஞராகிய நீங்கள் ஆவிக்குரிய தன்மையிலும், யெகோவாவுடனும் தெய்வீக மனிதருடனும் நற்பெயரிலும் முன்னேற்றமடைய விரும்பினால், நீங்கள் உங்கள் வீட்டிற்கு உள்ளும் வெளியிலும் அதிகாரத்திற்கு மரியாதை காட்டுவீர்கள்.
சபையினுள் அதிகாரம்
18. கிறிஸ்தவ சபையின் தலை யார், அவர் யாருக்கு அதிகாரப் பொறுப்பை பகிர்ந்து அளித்திருக்கிறார்?
18 கிறிஸ்தவ சபைக்குள் ஒழுங்கிற்கான தேவையைக் குறித்து பேசுபவராய், பவுல் எழுதினார்: “தேவன் கலகத்திற்குத் தேவனாயிராமல், சமாதானத்திற்குத் தேவனாயிருக்கிறார். . . . சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் [அல்லது, “ஒழுங்கின்படி,” NW, அடிக்குறிப்பு] செய்யப்படக்கடவது.” (1 கொரிந்தியர் 14:33, 40) ஒரு ஒழுங்கான முறையில் எல்லா காரியங்களும் நடப்பதற்கு, கிறிஸ்தவ சபையின் தலையாகிய கிறிஸ்து, உண்மையுள்ள ஆண்களுக்கு அதிகாரப் பொறுப்பை பகிர்ந்தளித்திருக்கிறார். நாம் வாசிக்கிறோம்: “பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், . . . அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும் போதகராகவும் ஏற்படுத்தினார். . . . அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு, தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக அப்படிச் செய்தார்.”—எபேசியர் 4:12, 13, 15.
19. (அ) கிறிஸ்து தம்முடைய பூமிக்குரிய ஆஸ்திகள் எல்லாவற்றின்மேலும் யாரை நியமித்திருக்கிறார், யாருக்கு விசேஷித்த அதிகாரத்தை அளித்திருக்கிறார்? (ஆ) கிறிஸ்தவ சபையில் என்ன வகையான அதிகார பகிர்ந்தளிப்பு இருக்கிறது, நம்முடைய பாகத்தில் இது எதைத் தேவைப்படுத்துகிறது?
19 இந்த முடிவின் காலத்திலே, மொத்தமான ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமையை,’ “தன் ஆஸ்திகள் எல்லாவற்றின்” மேல் அல்லது பூமியிலுள்ள ராஜ்ய அக்கறைகள் மேல் கிறிஸ்து நியமித்திருக்கிறார். (மத்தேயு 24:45-47) முதல் நூற்றாண்டில் இருந்ததைப்போலவே, தீர்மானங்களை எடுப்பதற்கும் மற்ற கண்காணிகளை நியமிப்பதற்கும் கிறிஸ்து அதிகாரமளித்திருக்கும் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவ ஆண்களாலாகிய ஒரு நிர்வாகக் குழுவால் இந்த அடிமை பிரதிநிதித்துவம் செய்யப்படுகிறது. (அப்போஸ்தலர் 6:2, 3; 15:2) நிர்வாகக் குழு, முறையாக, கிளை அலுவலக ஆலோசனைக் குழு, மாவட்ட மற்றும் வட்டார கண்காணிகள், உலகெங்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய 73,000-க்கும் மேற்பட்ட சபைகளிலிருக்கும் மூப்பர்கள் ஆகியோருக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கிறது. இந்தப் பற்றுறுதியுள்ள எல்லா கிறிஸ்தவ ஆண்களும் நம்முடைய ஆதரவையும் மரியாதையையும் பெற தகுதியுள்ளவர்கள்.—1 தீமோத்தேயு 5:17.
20. அதிகாரத்திலிருக்கும் உடன் கிறிஸ்தவர்களுக்கு மரியாதை காட்டாமல் இருப்பவர்களிடம் யெகோவா கோபப்படுகிறார் என்று என்ன உதாரணம் காண்பிக்கிறது?
20 கிறிஸ்தவ சபைக்குள் அதிகாரத்திலிருப்பவர்களுக்கு நாம் மரியாதை காண்பிக்க கடமைப்பட்டிருப்பதைக் குறித்ததில், நாம் உலகப்பிரகாரமான அதிகாரிகளுக்குக் காண்பிக்க கடமைப்பட்டிருக்கும் கீழ்ப்பட்டிருத்தலிலிருந்து ஒரு அருமையான ஒப்புமையைச் செய்யலாம். கடவுள் அங்கீகரிக்கக்கூடிய ஒரு மனித சட்டத்தை ஒருவர் மீறினால், “அதிகாரிகள்” வழங்கும் தண்டனை, உண்மையில், “தீமைசெய்கிறவன்மேல்” வரும் கடவுளுடைய கோபத்தின் மறைமுகமான வெளிக்காட்டாக இருக்கிறது. (ரோமர் 13:3, 4) ஒருவர் மனித சட்டங்களை மீறி, உலகப்பிரகாரமான அதிகாரிகளுக்கு சரியான மரியாதை காட்டாவிட்டால் யெகோவா கோபப்படுகிறார் என்றால், ஒரு ஒப்புக்கொடுக்கப்பட்ட கிறிஸ்தவன் பைபிள் நியமங்களைப் பழித்து, அதிகாரத்திலிருக்கும் உடன் கிறிஸ்தவர்களுக்கு அவமரியாதை காண்பித்தால் அவர் எவ்வளவு அதிகமாக கோபப்படவேண்டும்!
21. என்ன வேதப்பூர்வமான அறிவுரையைப் பின்பற்ற நாம் மகிழ்ச்சியுள்ளவர்களாய் இருப்போம், மேலும் பின்வரும் கட்டுரையில் என்ன சிந்திக்கப்படும்?
21 ஒரு எதிர்க்கும் அல்லது சுதந்திர மனப்பான்மையை கொண்டிருந்து கடவுளுடைய கோபத்தைச் சம்பாதித்துக்கொள்வதற்கு மாறாக, பிலிப்பியிலுள்ள கிறிஸ்தவர்களுக்கு பவுல் கொடுத்த அறிவுரையை நாம் பின்பற்றுவோம்: “ஆதலால், எனக்குப் பிரியமானவர்களே, நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிகிறபடியே, நான் உங்களுக்குச் சமீபமாயிருக்கும்பொழுது மாத்திரமல்ல, நான் தூரமாயிருக்கிற இப்பொழுதும், அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள். ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார். . . . உலகத்திலே சுடர்களைப்போலப் பிரகாசிக்கிற நீங்கள், கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமாயிருக்கும்படிக்கு, எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும் தர்க்கிப்பில்லாமலும் செய்யுங்கள்.” (பிலிப்பியர் 2:12-16) தன்மீது ஓர் அதிகார நெருக்கடியை வருவித்திருக்கும் தற்போதைய கோணலும் மாறுபாடுமுள்ள சந்ததியைப் போலில்லாமல், யெகோவாவின் மக்கள் உடனடியாக அதிகாரத்திற்குக் கீழ்ப்படிகின்றனர். நாம் பின்வரும் கட்டுரையில் பார்க்கப்போகிறபடி, இதனால் அவர்கள் அதிக பயன்களை அறுவடை செய்கின்றனர்.
[அடிக்குறிப்புகள்]
a முந்தின கட்டுரையைப் பாருங்கள்.
மறுபார்வையின் வாயிலாக
◻ மிக உயர்வான அதிகாரமுள்ளவர் யார், அவருடைய அதிகாரம் ஏன் சட்டப்பூர்வ தகுதியுள்ளது?
◻ என்ன அர்த்தத்தில் மேலான அதிகாரங்கள் ‘தேவனாலே அவற்றிற்குரிய சம்பந்தப்பட்ட நிலைகளிலே நியமிக்கப்பட்டிருக்கின்றன’?
◻ மேலான அதிகாரங்கள் எப்போது ‘தேவ ஊழியராக’ இருக்க தவறுகின்றன?
◻ கிறிஸ்தவ குடும்பங்களுக்குள் என்ன வகையான அதிகார அமைப்புமுறை இருக்கிறது?
◻ கிறிஸ்தவ சபைக்குள் என்ன அதிகார பகிர்ந்தளிப்பு உள்ளது?
[பக்கம் 18-ன் படங்கள்]
இயேசு குறிப்பிட்டார்: ‘இராயனுடையதை இராயனுக்கு செலுத்துங்கள்’