அதிகாரத்திற்கு மகிழ்ச்சியுள்ள கீழ்ப்பட்டிருத்தல்
‘நீங்கள் மனப்பூர்வமாய்க் கீழ்ப்படிந்தீர்கள்.’—ரோமர் 6:17.
1, 2. (அ) இன்றைய உலகில் என்ன ஆவி தெளிவாக இருக்கிறது, அதன் ஊற்றுமூலமும் அதன் பாதிப்பும் என்ன? (ஆ) யெகோவாவின் ஒப்புக்கொடுக்கப்பட்ட ஊழியர்கள் தாங்கள் வித்தியாசமாக இருப்பதை எவ்வாறு காண்பிக்கிறார்கள்?
“கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற . . . ஆவி” தற்போது அதிர்ச்சியூட்டும்விதத்தில் தெளிவாக இருக்கிறது. “[காற்றின், NW] அதிகாரப் பிரபுவாகிய” சாத்தானிடமிருந்து வருகிற, கட்டுப்பாடற்ற சுயாதீனத்தின் ஆவியாக அது இருக்கிறது. இந்த ஆவி, இந்தக் ‘காற்று’ அல்லது மேலோங்கி நிற்கும் சுயநலமான கீழ்ப்படியாமையின் மனநிலை, மனிதவர்க்கத்தின் பெரும்பாலானோரின் மீது ‘அதிகாரத்தை’ அல்லது வல்லமையைச் செலுத்துகிறது. அதிகாரத்திற்கான நெருக்கடி என்றழைக்கப்பட்டிருப்பதை இந்த உலகம் அனுபவித்துக்கொண்டிருப்பதற்கான ஒரு காரணம் இதுவே.—எபேசியர் 2:2.
2 மகிழ்ச்சிக்குரியவிதத்தில், யெகோவாவின் ஒப்புக்கொடுக்கப்பட்ட இன்றைய ஊழியர் தங்களுடைய ஆவிக்குரிய நுரையீரல்களை இந்த அசுத்தமான ‘காற்றினால்’ அல்லது கலகத்தின் ஆவியால் நிரப்புவதில்லை. ‘கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவகோபாக்கினை வரும்’ என்று அவர்கள் அறிந்திருக்கிறார்கள். அப்போஸ்தலன் பவுல் மேலுமாகச் சொல்லுகிறார்: “அவர்களுக்குப் பங்காளிகளாகாதிருங்கள்.” (எபேசியர் 5:6, 7) மாறாக, உண்மை கிறிஸ்தவர்கள் “[யெகோவாவின்] ஆவியினால் நிறைந்து” இருக்கும்படி முயலுகிறார்கள்; அவர்கள் ‘சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் நியாயத்தன்மையுள்ளதாயும், கீழ்ப்படியத் தயாராயும் இருக்கிற பரத்திலிருந்து வருகிற ஞானத்தை’ பருகுகின்றனர்.—எபேசியர் 5:17, 18; யாக்கோபு 3:17, NW.
யெகோவாவின் அரசாட்சிக்கு மனப்பூர்வமான கீழ்ப்பட்டிருத்தல்
3. மனப்பூர்வமான கீழ்ப்பட்டிருத்தலுக்கு அடிப்படை என்ன, சரித்திரம் நமக்கு என்ன பெரிய பாடத்தைக் கற்பிக்கிறது?
3 சட்டப்பூர்வ தகுதியுடைய அதிகாரத்தை ஏற்பதே மனப்பூர்வமான கீழ்ப்பட்டிருத்தலுக்கு அடிப்படையாக இருக்கிறது. யெகோவாவுடைய அரசாட்சியை மறுப்பது மகிழ்ச்சியைக் கொண்டுவருவதில்லை என்று மனிதவர்க்கத்தின் வரலாறு காண்பிக்கிறது. அப்படிப்பட்ட மறுப்பு ஆதாமுக்கும் ஏவாளுக்கும் மகிழ்ச்சியைக் கொண்டுவரவில்லை; அவர்களுடைய கலகத்தைத் தூண்டிவிட்ட பிசாசாகிய சாத்தானுக்கும் மகிழ்ச்சியைக் கொண்டுவரவில்லை. (ஆதியாகமம் 3:16-19) சாத்தான் தன்னுடைய தற்போதைய தாழ்த்தப்பட்ட நிலையில் “மிகுந்த கோப”முள்ளவனாய் இருக்கிறான், ஏனென்றால் அவனுடைய நாட்கள் குறுகியவையாய் இருக்கிறதை அவன் அறிந்திருக்கிறான். (வெளிப்படுத்துதல் 12:12) மனிதவர்க்கத்தின், ஆம், முழு பிரபஞ்சத்தின் சமாதானமும் மகிழ்ச்சியும் யெகோவாவின் நீதியான அரசாட்சியை எல்லாரும் ஏற்பதைச் சார்ந்தே இருக்கிறது.—சங்கீதம் 103:19-22.
4. (அ) என்ன வகையான கீழ்ப்பட்டிருத்தலையும் கீழ்ப்படிதலையும் தம்முடைய ஊழியர்கள் காட்டும்படி யெகோவா விரும்புகிறார்? (ஆ) நாம் எதைப் பற்றி உறுதியாக நம்புகிறவர்களாய் இருக்க வேண்டும், சங்கீதக்காரன் இதை எவ்வாறு வெளிப்படுத்திக் கூறுகிறார்?
4 இருந்தாலும், யெகோவா, மகத்தானவிதத்தில் சமநிலைப்படுத்தப்பட்ட அவருடைய குணங்கள் காரணமாக, உணர்ச்சியற்ற கீழ்ப்படிதலில் திருப்தியடைவதில்லை. அவர் நிச்சயமாகவே வல்லமையுள்ளவர்! ஆனால் அவர் ஒரு கொடுங்கோலனாக இல்லை. அவர் ஓர் அன்பான கடவுளாக இருக்கிறார், அவருடைய புத்திக்கூர்மையுள்ள சிருஷ்டிகள் மனப்பூர்வமாக, அன்பினால் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கவேண்டும் என்று அவர் விரும்புகிறார். அவருக்கு என்றென்றுமாகக் கீழ்ப்படிந்திருப்பதைவிட சிறந்தது வேறு எதுவும் இருக்கமுடியாது என்பதை உறுதியாக நம்புகிறவர்களாய், அவருடைய நீதியும் சட்டப்பூர்வ தகுதியுடையதுமான அதிகாரத்தின்கீழ் தங்களை வைத்துகொள்ளும்படி அவர்கள் முழு இருதயத்தோடும் தெரிவு செய்வதால், தம்முடைய அரசாட்சிக்கு அவர்கள் கீழ்ப்பட்டிருக்கும்படி அவர் விரும்புகிறார். யெகோவா, தம்முடைய பிரபஞ்சத்தில் இருக்கும்படி விரும்புகிற வகையான ஆள் பின்வருமாறு எழுதிய சங்கீதக்காரனின் உணர்ச்சிகளைப் பகிர்ந்துகொள்கிறார்: “கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது. கர்த்தருடைய நியாயங்கள் செம்மையும், இருதயத்தைச் சந்தோஷிப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாயிருக்கிறது. கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் சுத்தமும், என்றைக்கும் நிலைக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய நியாயங்கள் உண்மையும், அவைகள் அனைத்தும் நீதியுமாயிருக்கிறது.” (சங்கீதம் 19:7-9) யெகோவாவின் அரசாட்சியின் உரிமை மற்றும் நீதியானத்தன்மையில் மாறாத நம்பிக்கை—நாம் யெகோவாவின் புதிய உலகில் வாழ விரும்பினால், இதுவே நம்முடைய மனநிலையாக இருக்கவேண்டும்.
நம்முடைய அரசருக்கு சந்தோஷமுள்ள கீழ்ப்பட்டிருத்தல்
5. இயேசு தம்முடைய கீழ்ப்படிதலுக்காக எவ்வாறு வெகுமதியளிக்கப்பட்டார், நாம் மனப்பூர்வமாக எதை ஒப்புக்கொள்கிறோம்?
5 கிறிஸ்து இயேசு தாமே தம்முடைய பரலோக தந்தைக்குக் கீழ்ப்பட்டிருப்பதில் ஒரு மெச்சத்தக்க முன்மாதிரியாக இருக்கிறார். அவர் “சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி தம்மைத்தாமே தாழ்த்தினார்,” என்று நாம் வாசிக்கிறோம். பவுல் தொடர்ந்து சொல்கிறார்: “ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கு, எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.” (பிலிப்பியர் 2:8-11) ஆம், நம்முடைய தலைவரும் அரசாளுகிற அரசருமாகிய கிறிஸ்து இயேசுவின் முன் நாம் சந்தோஷமாக முழங்கால்படியிடுகிறோம்.—மத்தேயு 23:10.
6. ஜனக்கூட்டங்களுக்கு ஒரு சாட்சியாகவும் ஒரு தலைவராகவும் எவ்வாறு இயேசு இருந்திருக்கிறார், அவருடைய ‘கர்த்தத்துவம்’ எவ்வாறு மகா உபத்திரவத்திற்குப் பின்னும் தொடரும்?
6 நம்முடைய தலைவராயிருக்கும் கிறிஸ்துவைப்பற்றி, யெகோவா இவ்வாறு தீர்க்கதரிசனமுரைத்தார்: “இதோ, அவரை ஜனக்கூட்டங்களுக்குச் சாட்சியாகவும், ஜனங்களுக்குத் தலைவராகவும், அதிபதியாகவும் ஏற்படுத்தினேன்.” (ஏசாயா 55:4) தம்முடைய பூமிக்குரிய ஊழியத்தின் மூலமாகவும், தம்முடைய மரணம் மற்றும் உயிர்த்தெழுதலுக்குப்பின் பரலோகத்திலிருந்து பிரசங்க வேலையை இயக்குவதன்மூலமும், இயேசு தம்மை தம்முடைய பிதாவின் “உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சி”யாக எல்லா தேசங்களிலுமுள்ள மக்களிடமாகவும் காண்பித்திருக்கிறார். (வெளிப்படுத்துதல் 3:14; மத்தேயு 28:18-20) அப்படிப்பட்ட தேசத் தொகுதிகள் இப்போது அதிகரிக்கும் எண்ணிக்கையான ‘திரள் கூட்டத்தாரால்’ பிரதிநிதித்துவம் செய்யப்படுகின்றன; அவர்கள் கிறிஸ்துவின் தலைமையின்கீழ் ‘மகா உபத்திரவத்தை’ தப்பிப்பிழைப்பார்கள். (வெளிப்படுத்துதல் 7:9, 14) ஆனால் இயேசுவின் தலைமைத்துவம் அதோடு முடிவடைவதில்லை. அவருடைய ‘கர்த்தத்துவம்’ ஆயிரம் வருடங்களுக்கு நீடித்திருக்கும். கீழ்ப்படிதலுள்ள மனிதர்களுக்கு, “ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப் பிரபு,” என்ற தம்முடைய பெயருக்கு ஏற்றாற்போல் அவர் இருப்பார்.—ஏசாயா 9:6, 7; வெளிப்படுத்துதல் 20:6.
7. கிறிஸ்து இயேசு நம்மை ‘ஜீவத் தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு’ வழிநடத்தும்படி நாம் விரும்பினால், நாம் தாமதமின்றி என்ன செய்யவேண்டும், இயேசுவாலும் யெகோவாவாலும் நாம் நேசிக்கப்படும்படி நம்மை எது தூண்டுவிக்கும்?
7 ஆட்டுக்குட்டியானவராகிய கிறிஸ்து இயேசு, உண்மை இருதயமுள்ள மனிதரை வழிநடத்தும் ‘ஜீவத் தண்ணீருள்ள ஊற்றுகளிலிருந்து’ நாம் பயனடைய விரும்பினால், அரசராக அவருடைய அதிகாரத்திற்கு சந்தோஷத்துடன் கீழ்ப்படிகிறோம் என்பதை நம்முடைய நடத்தைப் போக்கின் மூலமாகத் தாமதமின்றி நிரூபிக்கவேண்டும். (வெளிப்படுத்துதல் 7:17; 22:1, 2; ஒப்பிடவும் சங்கீதம் 2:12.) இயேசு சொன்னார்: ‘நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள். என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்ளுகிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான்; நானும் அவனில் அன்பாயிருப்பேன்.’ (யோவான் 14:15, 21) இயேசுவாலும் அவருடைய பிதாவாலும் நேசிக்கப்படும்படி நீங்கள் விரும்புகிறீர்களா? அப்படியானால் அதிகாரத்திற்குக் கீழ்ப்பட்டிருங்கள்.
கண்காணிகள் சந்தோஷமாகக் கீழ்ப்படிகிறார்கள்
8, 9. (அ) சபையைக் கட்டியெழுப்புவதற்காக கிறிஸ்து என்ன ஏற்படுத்தியிருக்கிறார், என்ன வழியில் இந்த மனிதர் மந்தைக்கு மாதிரிகளாக இருக்கவேண்டும்? (ஆ) வெளிப்படுத்துதல் புத்தகத்தில் கிறிஸ்தவ கண்காணிகளுடைய கீழ்ப்பட்டிருத்தல் எவ்வாறு அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது, நியாய விசாரணைக்குரிய காரியங்களைக் கையாளுகையில் அவர்கள் எவ்வாறு ஒரு “கீழ்ப்படிதலுள்ள இருதயத்தை” நாட வேண்டும்?
8 “சபையானது கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறது.” அதன் கண்காணியாக, அவர் சபை “கட்டியெழுப்பப்படும்படி” “மனுஷர்களில் வரங்களை” அளித்திருக்கிறார். (எபேசியர் 4:8, 11, 12, NW; 5:24) ஆவிக்குரிய விதத்தில் முதிர்ந்த இந்த ஆண்கள் ‘தங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை மேய்க்கும்படி,’ “சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாக” இருக்கும்படி சொல்லப்பட்டிருக்கின்றனர். (1 பேதுரு 5:1-3) மந்தை யெகோவாவுடையது, கிறிஸ்து அதன் “நல்ல மேய்ப்பன்.” (யோவான் 10:14) யெகோவாவும் கிறிஸ்துவும் தங்களுடைய கவனிப்பில் ஒப்படைத்திருக்கும் செம்மறியாடுகளிடமிருந்து மனப்பூர்வமான ஒத்துழைப்பை கண்காணிகள் சரியாகவே எதிர்பார்ப்பதால், அவர்கள் தாமே கீழ்ப்படிதலின் சிறந்த மாதிரிகளாக இருக்கவேண்டும்.—அப்போஸ்தலர் 20:28.
9 முதல் நூற்றாண்டில், அபிஷேகம் செய்யப்பட்ட கண்காணிகள் அடையாள அர்த்தத்தில், கிறிஸ்துவின் “வலதுகரத்திலே” அல்லது “வலதுகரத்தில்” இருப்பதாக பிரதிநிதித்துவம் செய்யப்பட்டார்கள்; சபையின் தலையாக அவருக்குக் கீழ்ப்பட்டிருப்பதை இது அடையாளப்படுத்துகிறது. (வெளிப்படுத்துதல் 1:16, 20; 2:1) இன்று அது எவ்வளவும் குறைந்ததாய் இல்லை; யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளிலுள்ள கண்காணிகள் கிறிஸ்துவின் வழிநடத்துதலுக்குக் கீழ்ப்பட்டு, ‘கடவுளுடைய பலத்த கைக்குள் அடங்கியிருக்கவேண்டும்.’ (1 பேதுரு 5:6) நியாய விசாரணைக்குரிய காரியங்களைக் கையாளும்படி கேட்கப்படும்போது, சாலொமோன் உண்மையாக இருந்த வருடங்களில் செய்ததுபோலவே, அவர்கள் யெகோவாவிடம் ஜெபிக்கவேண்டும்: “உமது ஜனங்களை நியாயம் விசாரிக்கவும், நன்மைதீமை இன்னதென்று வகையறுக்கவும், அடியேனுக்கு [கீழ்ப்படிதலுள்ள, NW] இருதயத்தைத் தந்தருளும்.” (1 இராஜாக்கள் 3:9) பூமியில் செய்யப்பட்ட தீர்மானம் பரலோகத்தில் செய்யப்பட்டதைக் கூடியமட்டும் நெருக்கமாக ஒத்திருப்பதற்கு யெகோவாவும் கிறிஸ்து இயேசுவும் காரியங்களை நோக்கும்விதத்தில் நோக்கும்படி நாட ஒரு கீழ்ப்படிதலுள்ள இருதயம் ஒரு மூப்பரைத் தூண்டும்.—மத்தேயு 18:18-20.
10. இயேசு செம்மறியாடுகளை நடத்திய விதத்தில், எவ்வாறு எல்லா கண்காணிகளும் அவரைப் பின்பற்ற முயலவேண்டும்?
10 அதேவிதமாகவே பயணக் கண்காணிகளும் சபை மூப்பர்களும், செம்மறியாடுகளை கிறிஸ்து நடத்தியவிதத்தில், அவரைப் பின்பற்ற முயலுவார்கள். பரிசேயரைப் போலில்லாமல், இயேசு பின்பற்றுவதற்கு மிகவும் கடினமாக இருக்கும் பல சட்டங்களைச் சுமத்தவில்லை. (மத்தேயு 23:2-11) அவர் செம்மறியாடுகளைப் போன்றவர்களிடம் சொன்னார்: “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது.” (மத்தேயு 11:28-30) ஒவ்வொரு கிறிஸ்தவனும் ‘தன்தன் சுமையைச் சுமப்பான்’ என்பது உண்மை என்றாலும், கண்காணிகள் இயேசுவின் முன்மாதிரியை நினைவில்கொண்டு, தங்களுடைய சகோதரர்கள் தங்களுடைய கிறிஸ்தவ பொறுப்பை “மெதுவாயும்,” “இலகுவாயும்,” சுமப்பதற்கு சந்தோஷமானதாயும் உணரும்படி உதவவேண்டும்.—கலாத்தியர் 6:5, NW.
தேவாட்சிக்குரிய கீழ்ப்பட்டிருத்தல்
11. (அ) ஒருவர் தலைமையை மதிப்பவராக இருந்தாலும் உண்மையிலேயே தேவாட்சிக்குரியவராக இல்லாமல் எப்படி இருக்கமுடியும்? உதாரணத்துடன் விளக்குங்கள். (ஆ) உண்மையிலேயே தேவாட்சிக்குரியவராக இருப்பதன் அர்த்தமென்ன?
11 தேவாட்சி என்பது கடவுள் மூலமாக ஆட்சி. அது 1 கொரிந்தியர் 11:3-ல் கொடுக்கப்பட்டுள்ள தலைமைக்குரிய நியமத்தை உட்படுத்துகிறது. ஆனால் அது அதைவிட அதிகத்தை அர்த்தப்படுத்துகிறது. ஒரு நபர் தலைமைத்துவத்திற்கு மரியாதை காட்டுவதுபோலத் தோன்றலாம்; ஆனாலும் அந்த வார்த்தையின் முழுமையான அர்த்தத்தில் தேவாட்சிக்குரியவராக இல்லாமல் இருக்கலாம். இது எவ்வாறு இருக்க முடியும்? உதாரணமாக, மக்களாட்சி என்பது மக்கள் மூலமாக அரசாட்சியாகும்; மக்களாட்சியை ஆதரிப்பவர், “மக்களாட்சியின் கோட்பாடுகளை நம்பும் ஒருவர்,” என்பதாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. ஒருவர் மக்களாட்சிக்குரியவர் என்று உரிமைபாராட்டக்கூடும், தேர்தல்களில் பங்கெடுக்கக்கூடும், சுறுசுறுப்பான அரசியல்வாதியாகக்கூட இருக்கக்கூடும். ஆனால், அவருடைய பொதுவான நடத்தையில், அவர் மக்களாட்சியின் உணர்வையும் அது உட்படுத்தும் எல்லா நியமங்களையும் புறக்கணித்தால், அவர் உண்மையிலேயே மக்களாட்சிக்குரியவர் என்று சொல்லப்பட முடியுமா? அதைப்போலவே, உண்மையிலேயே தேவாட்சிக்குரியவராக இருப்பதற்கு, ஒருவர் பெயரளவில் தலைமைக்குக் கீழ்ப்படிவதைவிட அதிகத்தைச் செய்யவேண்டும். அவர் யெகோவாவின் வழிகளையும் குணங்களையும் பின்பற்றவேண்டும். அவர் நிஜமாக யெகோவாவால் ஒவ்வொரு வழியிலும் ஆட்கொள்ளப்படவேண்டும். மேலும் யெகோவா தம்முடைய மகனுக்கு முழு அதிகாரத்தையும் கொடுத்திருப்பதால், தேவாட்சிக்குரியவராக இருப்பது இயேசுவைப் பின்பற்றுவதையும் அர்த்தப்படுத்துகிறது.
12, 13. (அ) தேவாட்சிக்குரியவர்களாக இருப்பது, குறிப்பாக எதை உட்படுத்துகிறது? (ஆ) தேவாட்சிக்குரிய கீழ்ப்பட்டிருத்தல் என்பது பல சட்டங்களுக்குக் கீழ்ப்படிகிறதை உட்படுத்துகிறதா? உதாரணத்துடன் விளக்கவும்.
12 யெகோவா, அன்பால் தூண்டப்பட்ட மனப்பூர்வமான கீழ்ப்படிதலை விரும்புகிறார் என்பதை நினைவில் வையுங்கள். அதுவே பிரபஞ்சத்தை ஆளும் அவருடைய வழியாக இருக்கிறது. அவர் அன்பின் உருவாகவே இருக்கிறார். (1 யோவான் 4:8) கிறிஸ்து இயேசு ‘அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருக்கிறார்.’ (எபிரெயர் 1:3) அவர் தம்முடைய உண்மையான சீஷர்கள் ஒருவருக்கொருவர் அன்புள்ளவர்களாய் இருப்பதை எதிர்பார்க்கிறார். (யோவான் 15:17) ஆகவே தேவாட்சிக்குரியவர்களாய் இருப்பது கீழ்ப்பட்டிருப்பதை மட்டும் உட்படுத்தாமல் அன்பாக இருப்பதையும் உட்படுத்துகிறது. இந்தக் காரியத்தை இவ்வாறு தொகுத்துரைக்கலாம்: தேவாட்சி என்பது கடவுள் மூலமாக ஆட்சி; கடவுள் அன்புள்ளவராக இருக்கிறார்; ஆகவே தேவாட்சி என்பது அன்பின் மூலமாக ஆட்சி.
13 தேவாட்சிக்குரியவராக இருப்பதற்கு, சகோதரர்கள் எல்லா வகையான சட்டங்களுக்கும் கீழ்ப்படியவேண்டும் என்று ஒரு மூப்பர் நினைக்கலாம். அவ்வப்போது “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” மூலமாகக் கொடுக்கப்படும் ஆலோசனைகளை வைத்து சில மூப்பர்கள் சட்டங்களை அமைத்திருக்கிறார்கள். (மத்தேயு 24:45) எடுத்துக்காட்டாக, சபையிலுள்ள சகோதரர்களை மிகவும் எளிதாக அறிந்துகொள்ளுவதற்காக, ராஜ்ய மன்றத்தில் எப்போதும் ஒரே இருக்கையில் உட்காராமல் இருப்பது நல்லது என்பதாக ஒருமுறை ஆலோசனை கொடுக்கப்பட்டது. இது ஒரு நடைமுறையான ஆலோசனையாக இருக்கும்படி சொல்லப்பட்டது, ஒரு கண்டிப்பான சட்டமாக அல்ல. ஆனால் சில மூப்பர்கள் அதை ஒரு சட்டமாக மாற்றுவதற்கும், அதைப் பின்பற்றாதவர்கள் தேவாட்சிக்குரியவர்கள் அல்ல என்று நினைப்பதற்கும் ஒரு மனச்சாய்வைக் கொண்டிருக்கக்கூடும். என்றாலும், ஒரு சகோதரர் அல்லது ஒரு சகோதரி ஒரு குறிப்பிட்ட பகுதியில் உட்கார விரும்புவதற்கு அநேக நல்ல காரணங்கள் இருக்கக்கூடும். ஒரு மூப்பர் அன்பான முறையில், அப்படிப்பட்ட காரியங்களைக் கருத்தில் கொள்ளாவிட்டால், அவர்தாமே உண்மையாக தேவாட்சிக்குரியவராக இருக்கிறாரா? தேவாட்சிக்குரியவர்களாய் இருப்பதற்கு, “உங்கள் காரியங்களெல்லாம் அன்போடே செய்யப்படக்கடவது.”—1 கொரிந்தியர் 16:14.
சந்தோஷத்தோடே சேவித்தல்
14, 15. (அ) யெகோவாவைச் சேவிப்பதில் கிடைக்கும் சந்தோஷத்தை ஒருசில சகோதரர்கள் அல்லது சகோதரிகள் இழக்கும்படி எவ்வாறு ஒரு மூப்பர் செய்யலாம், இது ஏன் தேவாட்சிக்குரியதாக இருக்காது? (ஆ) நம்முடைய சேவையின் அளவைவிட நம்முடைய சேவையின்மூலம் வெளிப்படுத்தப்பட்ட அன்பைப் போற்றுவதை எவ்வாறு இயேசு காண்பித்தார்? (இ) மூப்பர்கள் எதைக் கருத்தில் கொள்ளவேண்டும்?
14 தேவாட்சிக்குரியவர்களாய் இருப்பது, யெகோவாவைச் சந்தோஷத்தோடே சேவிப்பதையும் அர்த்தப்படுத்தும். யெகோவா ‘நித்தியானந்த தேவன்.’ (1 தீமோத்தேயு 1:11) அவர் தம்முடைய வணக்கத்தார் தம்மைச் சந்தோஷத்தோடு சேவிக்கும்படி விரும்புகிறார். இஸ்ரவேலர் “கைக்கொண்டு நடக்கவேண்டிய” சட்டதிட்டங்களில் பின்வரும் கட்டளையும் உள்ளடங்கியிருந்தது என்பதைச் சட்டங்களுக்காக விடாப்பிடியாளராய் இருப்பவர்கள் நினைவில் வைக்கவேண்டும்: “நீ கையிட்டுச் செய்யும் எல்லாக் காரியத்திலும் உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் சந்தோஷப்படுவாயாக.” (உபாகமம் 12:1, 18) நாம் யெகோவாவின் சேவையில் செய்யும் எதுவும் ஒரு சந்தோஷமாக இருக்கவேண்டும், ஒரு பாரமாக இருக்கக்கூடாது. யெகோவாவைச் சேவிப்பதில் சகோதரர்கள் தங்களால் முடிந்ததைச் செய்வதற்கு மகிழ்ச்சியாக உணரும்படி கண்காணிகள் அதிகத்தைச் செய்யமுடியும். மாறாக, மூப்பர்கள் கவனமாக இல்லாவிட்டால், சில சகோதரர்கள் தங்கள் சந்தோஷத்தை இழக்கும்படி அவர்கள் செய்யலாம். உதாரணமாக, சாட்சிபகருவதில் செலவிட்டிருக்கும் சபையின் சராசரி மணிநேரங்களை எட்டியிருக்கிறவர்களை அல்லது அதற்கும்மேலாக செய்திருக்கிறவர்களைப் பாராட்டுவதன்மூலம், அந்த அளவிற்குச் செய்திராதவர்களை மறைமுகமாய் குறைகூறுவதுபோல், அவர்கள் ஒப்பிடுதல்களைச் செய்தால், மிக குறைவான அளவு நேரத்தை அறிக்கைசெய்திருப்பதற்கு ஒரு நியாயமான காரணத்தைக் கொண்டிருந்தவர்கள் எவ்வாறு உணருவார்கள்? இது அவர்களைத் தேவையற்றவிதத்தில் குற்ற உணர்வுள்ளவர்களாக உணரச்செய்து அவர்களுடைய சந்தோஷத்தை இழக்கச் செய்யும் அல்லவா?
15 சிலர் பொதுவான சாட்சிபகருதலுக்கென கொடுக்க முடிந்த ஒருசில மணிநேரங்கள், மற்றவர்களுடைய இளம் வயது, நல்ல உடல் நலம், இன்னும் மற்ற சூழ்நிலைகளைக் கருத்தில் கொள்கையில், அவர்கள் பிரசங்கிப்பதற்குச் செலவிட்ட பல மணிநேரங்களைவிட அதிக முயற்சியைக் குறிக்கக்கூடும். இந்த அம்சத்தில், மூப்பர்கள் அவர்களை நியாயந்தீர்க்கக்கூடாது. உண்மையில், இயேசுவுக்கே “நியாயத்தீர்ப்புச் செய்யும்படிக்கு அதிகாரத்தை” பிதா கொடுத்திருக்கிறார். (யோவான் 5:27) ஏழை விதவையின் காணிக்கை சராசரியைவிட குறைந்தது என்பதற்காக இயேசு அவளிடம் குற்றம் கண்டாரா? இல்லை, அந்த இரண்டு சிறிய காசுகள் உண்மையில் அவளுக்கு எவ்வளவை அர்த்தப்படுத்தின என்பதைக் குறித்து அவர் உணர்வுள்ளவராய் இருந்தார். “[அவளுடைய] ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம்” அவையே. அவை யெகோவாவுக்கு எவ்வளவு ஆழ்ந்த அன்பை குறித்துக்காட்டின! (மாற்கு 12:41-44) தங்களுடைய எல்லாம் என்பது எண்ணிக்கை வகையில் “சராசரிக்கு” கீழ் என்றிருப்பவர்களுடைய அன்பான முயற்சிகளைக்குறித்து மூப்பர்கள் எவ்வகையிலும் குறைந்த அளவு உணர்வுள்ளவர்களாக இருக்கவேண்டுமா? யெகோவாவுக்கான அன்பின் அடிப்படையில் நோக்கினால், அந்த முயற்சிகள் சராசரிக்கு மிகவும் அதிகமானவையாக இருக்கக்கூடும்!
16. (அ) கண்காணிகள் தங்கள் பேச்சுக்களில் எண்ணிக்கைகளைப் பயன்படுத்தினால், அவர்களுக்கு ஏன் பகுத்துணர்வும் நல்ல சமநிலையும் தேவைப்படுகிறது? (ஆ) சகோதரர்கள் தங்களுடைய சேவையை அதிகரிப்பதற்கு எவ்வளவு சிறந்தவிதத்தில் உதவப்படலாம்?
16 இப்படிப்பட்ட குறிப்புகள் இப்போது ஒரு புதிய “சட்டமாக,” அதாவது எண்ணிக்கைகள்—சராசரிகள்கூட—ஒருபோதும் சொல்லப்படக்கூடாது என்று மாற்றப்படவேண்டுமா? ஒருபோதும் இல்லை! குறிப்பு என்னவென்றால், சகோதரர்கள் தங்களுடைய ஊழியத்தை விரிவாக்கும்படி உற்சாகப்படுத்துவதற்கும் அவர்களால் செய்ய முடிந்ததை சந்தோஷத்துடன் செய்ய உதவுவதற்கும் இடையில் கண்காணிகள் சமநிலையைக் காத்துக்கொள்ளவேண்டும். (கலாத்தியர் 6:4) தாலந்துகளைப் பற்றிய இயேசுவின் உவமையில், எஜமான் தன்னுடைய ஆஸ்திகளை தன் ஊழியக்காரரிடம் “அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக” ஒப்படைத்தார். (மத்தேயு 25:14, 15) அதேவிதமாக, மூப்பர்கள் ஒவ்வொரு ராஜ்ய பிரஸ்தாபியாலும் செய்யமுடிந்தவற்றை கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும். இது பகுத்துணர்வைத் தேவைப்படுத்துகிறது. சிலருக்கு அதிகத்தைச் செய்வதற்கு உண்மையிலேயே உற்சாகம் தேவைப்படக்கூடும். அவர்கள் தங்கள் நடவடிக்கைகளைச் சிறந்த முறையில் ஒழுங்கமைப்பதற்கு உதவியை மதித்துணரக்கூடும். எப்படியிருந்தாலும் சரி, தங்களால் செய்யமுடிந்தவற்றை சந்தோஷத்தோடே செய்வதற்கு அவர்களுக்கு உதவி செய்யப்பட்டால், அந்தச் சந்தோஷம் தங்களுடைய கிறிஸ்தவ நடவடிக்கையை முடிந்தவரை விரிவாக்குவதற்கு அவர்களைப் பலப்படுத்தக்கூடும்.—நெகேமியா 8:10; சங்கீதம் 59:16; எரேமியா 20:9.
சந்தோஷமுள்ள கீழ்ப்பட்டிருத்தலிலிருந்து வரும் சமாதானம்
17, 18. (அ) சந்தோஷமுள்ள கீழ்ப்பட்டிருத்தல் நமக்கு எவ்வாறு சமாதானத்தையும் நீதியையும் கொண்டுவரலாம்? (ஆ) நாம் உண்மையிலேயே கடவுளுடைய கட்டளைகளுக்குக் கவனம்செலுத்தினால் எது நம்முடையதாக இருக்கும்?
17 யெகோவாவுடைய சட்டப்பூர்வ தகுதியுள்ள அரசாட்சிக்குச் சந்தோஷமுள்ள கீழ்ப்பட்டிருத்தல் நமக்கு அதிக சமாதானத்தைக் கொண்டுவருகிறது. யெகோவாவிடம் ஜெபத்தில் சங்கீதக்காரன் இவ்வாறு சொன்னார்: “உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலில்லை.” (சங்கீதம் 119:165) கடவுளுடைய சட்டத்திற்குக் கீழ்ப்படிவதன்மூலம், நாம்தாமே நன்மையடைகிறோம். யெகோவா இஸ்ரவேலிடம் சொன்னார்: “இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற உன் மீட்பரான கர்த்தர் சொல்லுகிறதாவது: பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே. ஆ, என் கற்பனைகளைக் கவனித்தாயானால் நலமாயிருக்கும்; அப்பொழுது உன் சமாதானம் நதியைப்போலும், உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப்போலும் இருக்கும்.”—ஏசாயா 48:17, 18.
18 கிறிஸ்துவின் கிரய பலி கடவுளோடு நமக்குச் சமாதானத்தைக் கொண்டுவருகிறது. (2 கொரிந்தியர் 5:18, 19) கிறிஸ்துவின் மீட்பின் இரத்தத்தில் நாம் விசுவாசம் வைத்திருந்து, நம்முடைய பலவீனங்களோடு மனச்சாட்சிப்பூர்வமாகப் போராட முயன்று, கடவுளுடைய சித்தத்தைச் செய்தால், நாம் குற்ற உணர்வுகளிலிருந்து விடுதலையைப் பெறுகிறோம். (1 யோவான் 3:19-23) செயல்களோடு கூடிய அப்படிப்பட்ட விசுவாசம், யெகோவாவுக்கு முன்பாக நமக்கு ஒரு நீதியான நிலைநிற்கையையும் ‘மகா உபத்திரவத்தை’ தப்பிப்பிழைத்து யெகோவாவுடைய புதிய உலகில் என்றென்றுமாக வாழும் அருமையான நம்பிக்கையையும் அளிக்கிறது. (வெளிப்படுத்துதல் 7:14-17; யோவான் 3:36; யாக்கோபு 2:22, 23) ‘நாம் மட்டும் உண்மையிலேயே கடவுளுடைய கட்டளைகளுக்குக் கவனம் செலுத்துவோமேயானால்’ இவை யாவும் நம்முடையதாக இருக்கலாம்.
19. நம்முடைய தற்போதைய மகிழ்ச்சியும் நித்திய ஜீவனுக்கான நம்பிக்கையும் எதன்மீது சார்ந்திருக்கிறது, நம்முடைய இருதயப்பூர்வமான உறுதியான நம்பிக்கையை தாவீது எவ்வாறு வெளிப்படுத்தினார்?
19 ஆம், நம்முடைய தற்போதைய மகிழ்ச்சியும் ஒரு பரதீஸான பூமியில் நித்திய ஜீவனுக்கான நம்முடைய நம்பிக்கையும், பிரபஞ்சத்தின் பேரரசராகிய கடவுளாக யெகோவாவின் அதிகாரத்திற்கு நாம் சந்தோஷத்துடன் கீழ்ப்பட்டிருப்பதைச் சுற்றியே அமைகின்றன. பின்வருமாறு கூறிய, தாவீதின் உணர்ச்சிகளை நாமும் எப்போதும் பகிர்ந்துகொள்வோமாக: “கர்த்தாவே, மாட்சிமையும் வல்லமையும் மகிமையும் ஜெயமும் மகத்துவமும் உம்முடையவைகள்; வானத்திலும் பூமியிலும் உள்ளவைகளெல்லாம் உம்முடையவைகள்; கர்த்தாவே, ராஜ்யமும் உம்முடையது; தேவரீர் எல்லாருக்கும் தலைவராய் உயர்ந்திருக்கிறீர். இப்போதும் எங்கள் தேவனே, நாங்கள் உமக்கு ஸ்தோத்திரம் செலுத்தி, உமது மகிமையுள்ள நாமத்தைத் துதிக்கிறோம்.”—1 நாளாகமம் 29:11, 13.
நினைவில் வைக்கவேண்டிய குறிப்புகள்
◻ என்ன வகையான கீழ்ப்பட்டிருத்தலையும் கீழ்ப்படிதலையும் தம்முடைய ஊழியர்கள் காட்டும்படி யெகோவா விரும்புகிறார்?
◻ இயேசு தம்முடைய கீழ்ப்படிதலுக்காக எவ்வாறு வெகுமதியளிக்கப்பட்டார், நம்முடைய நடத்தைப்போக்கின்மூலம் நாம் எதை நிரூபிக்கவேண்டும்?
◻ இயேசு செம்மறியாடுகளை நடத்திய விதத்தில், எவ்வாறு எல்லா கண்காணிகளும் அவரைப் பின்பற்றவேண்டும்?
◻ தேவாட்சிக்குரியவர்களாய் இருப்பதில் என்ன உட்பட்டிருக்கிறது?
◻ சந்தோஷமுள்ள கீழ்ப்பட்டிருத்தல் நமக்கு என்ன ஆசீர்வாதங்களைக் கொண்டுவருகிறது?
[பக்கம் 24-ன் படம்]
தங்களால் முடிந்தவற்றையெல்லாம் சந்தோஷத்துடன் செய்யும்படி மந்தையை மூப்பர்கள் உற்சாகப்படுத்துகிறார்கள்
[பக்கம் 26-ன் படம்]
இருதயப்பூர்வமாக யெகோவாவுக்குக் கீழ்ப்படிகிறவர்களிடம் அவர் பிரியமாய் இருக்கிறார்