ராஜ்ய பிரஸ்தாபிகளின் அறிக்கை
“ஒத்துழைக்கும் மனப்பான்மைக்கான நினைவுச் சின்னம்”
ஸ்பெய்னின் தென் கடைமுனைக்கு அருகாமையில் ஜிப்ரால்டர் பாறை என்றழைக்கப்படும் பெரிய சுண்ணாம்புக்கல் சிற்பம் மேலோங்கி நிற்கிறது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக, இந்தப் பாறை அரசியல் வாக்குவாதத்துக்கும் சர்வதேச பூசலுக்கும் மெளன சான்றாக இருந்திருக்கிறது. எதிர்மறையாக, சமீபத்தில் இந்த ஜிப்ரால்டர் பாறை, இன்று உலகில் அரிதாக காணப்படும் ஒத்துழைப்பு மற்றும் ஐக்கியத்திற்கான திரையாக ஆனது.
அப்பாறையிலிருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில்தானே ஸ்பெய்னிலுள்ள லா லைனியா என்ற நகரம் இருக்கிறது. யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்ற கட்டுவிப்பு வேலையானது, தங்கள் நேரத்தையும் சக்தியையும் செலவழிக்க ஆவலாயிருந்த நூற்றுக்கணக்கான விருப்பார்வ ஆட்களைத் திரட்டியது. சிருஷ்டிகரான யெகோவா தேவனை வணங்குவதற்கு தகுந்த இடத்தைக் கட்ட அவர்கள் உழைக்கையில், ஜிப்ரால்டர் பாறையின் பின்புற ஓவியத்திரையும் கட்டுமான வேலையோடு ஒப்பிடுகையில் அதன் தனிச்சிறப்பை இழந்தது.
உலகில் அந்தப் பகுதியில் வாழும் ராஜ்ய பிரஸ்தாபிகள் இவ்வாறு அறிக்கை செய்கின்றனர்:
“செப்டம்பர் 24, 1993, வெள்ளிக்கிழமை மதியம் தொடங்கி தொள்ளாயிரம் உற்சாகமுள்ள, விருப்பார்வ ஊழியர்கள் முழுக்கமுழுக்க வேலைசெய்தனர். ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் ஏழு மணிக்குள்ளாக யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றமாக அந்தக் கட்டிடத்தை அடையாளப்படுத்தி, ஒரு புதிய அடையாளப் பலகையானது எழுதிப்போடப்பட்டது; இந்த அழகான புதிய கட்டிடத்தில் முதன்முதலான பொதுப் பேச்சுக் கூட்டமானது நடந்தது.
“ஜிப்ரால்டருக்கு அருகேயுள்ள அநேக சாட்சிகள் நாட்டெல்லையைக் கடந்து தங்கள் ஸ்பானிய சகோதரர்களுக்கு உதவிசெய்ய வந்தனர். ‘அரசியல் பிணக்கங்கள் நம்முடைய சர்வதேச சகோதரத்துவ மனப்பான்மையைக் குன்றச்செய்யவில்லை’ என்று ஜிப்ரால்டரில் வசிக்கும் விருப்பார்வ ஊழியர் ஒருவர் விவரித்துச் சொன்னார். கூடுதலாக அவர் சொன்னார்: ‘பல ஆண்டுகளுக்கு முன்பாக, ஜிப்ரால்டரில் நம்முடைய ராஜ்ய மன்றத்தைக் கட்டுவிப்பதற்கு லா லைனியாவைச் சேர்ந்த நண்பர்கள் வந்தனர்; ஆகவே நாங்கள் இப்போது தயவைப் பரிமாறிக்கொள்வதில் சந்தோஷப்படுகிறோம்.’
“யெகோவாவின் சாட்சிகளுடைய அந்த இரு சபைகளின் பெருமுயற்சிகளையும், ஆன்டலூஷிய பகுதியிலிருந்து வந்த நூற்றுக்கணக்கான திறம்பட்ட உதவியாளர்களின் பெருமுயற்சிகளையும் நிறைவுபடுத்துவதற்கு லா லைனியா நகரம், அவர்களுக்குத் தேவையான மனையை இலவசமாக அளிக்க முடிவு செய்தது. ‘மரபுமுறைப்படி, உள்ளூர் ஸ்பானிய அதிகாரிகள் கத்தோலிக்க சர்ச்சுகளைக் கட்ட எப்போதும் மனையை அளித்திருக்கின்றனர்,’ என்று கட்டுமான இடத்தை விஜயம்செய்தபோது லா லைனியாவின் மேயர் விளக்கினார். ‘மற்ற மதப் பிரிவினருக்கும் அவ்வாறே ஏன் செய்யக்கூடாது? இந்த விருப்பார்வ ஊழியர்களின் தன்னலமற்ற மனப்பான்மை, என்னை மிகவும் கவர்ந்திழுப்பதாக இருக்கிறது. இவர்களுக்கு நம்முடைய ஒத்தாசை தகுதியானது என்று நான் நினைக்கிறேன். இன்றைய பிளவுபட்ட உலகிலே இம்மாதிரியான மனப்பான்மை நமக்கு அதிகமாய் தேவையாக இருக்கிறது.’
“அந்த ராஜ்ய மன்றத்தை அவர் ‘ஒத்துழைக்கும் மனப்பான்மைக்கான நினைவுச் சின்னம்’ என்று குறிப்பிட்டார். நிச்சயமாகவே, கட்டுமான அமைப்போ கட்டிட அளவோ அதிகமாக கவனத்தைக் கவரவில்லை. மாறாக, அந்தச் சமூகத்திலுள்ள பெரும்பான்மையரை எது கவர்ந்ததென்றால் அது முழுமையாக விருப்பார்வ ஊழியர்களாலும், வெறும் 48 மணிநேரத்திலும் கட்டப்பட்டதுமே!”
லா லைனியாவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதியிலும் வசிக்கும் யெகோவாவின் சாட்சிகள் கலாத்தியர் 6:10-ல் உள்ள வார்த்தைகளை உண்மையென காட்டுகின்றனர். அந்த வசனத்தில் பவுல் அப்போஸ்தலன், “ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்யக்கடவோம்,” என்று உடன் விசுவாசிகளை அறிவுறுத்தினார்.