நியாயத்தன்மையை வளர்த்துக்கொள்ளுங்கள்
“உங்களுடைய நியாயத்தன்மை எல்லா மனிதருக்கும் தெரிந்திருப்பதாக. கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.”—பிலிப்பியர் 4:5, NW.
1. இன்றைய உலகில் நியாயத்தன்மையுடன் இருப்பது ஏன் ஒரு சவாலாக இருக்கிறது?
“நியாயத்தன்மையுள்ள மனிதன்”—அவன் ஒரு கற்பனையான பாத்திரம் என்பதாக சர் அலன் பாட்ரிக் ஹெர்பர்ட் அழைத்தார். உண்மையில், சச்சரவு நிறைந்த இந்த உலகில் நியாயத்தன்மையுள்ள மக்கள் எவருமே விட்டுவைக்கப்படவில்லை என்பதாக சிலவேளைகளில் தோன்றக்கூடும். இந்தக் கொடிய “கடைசிநாட்களில்” மக்கள் “கொடுமையுள்ளவர்களாயும்,” “துணிகரமுள்ளவர்களாயும்,” “இணங்காதவர்களாயும்”—வேறு வார்த்தைகளில் சொன்னால்—நியாயத்தன்மையற்றவர்களாகவே இருப்பார்கள் என்று பைபிள் முன்னுரைத்தது. (2 தீமோத்தேயு 3:1-5) என்றபோதிலும், உண்மை கிறிஸ்தவர்கள் நியாயத்தன்மை கடவுளுடைய ஞானத்தின் ஒரு அடையாளம் என்பதை அறிந்தவர்களாய், அதை உயர்ந்த மதிப்புள்ளதாக வைத்திருக்கின்றனர். (யாக்கோபு 3:17) நியாயத்தன்மையற்ற ஓர் உலகில் நியாயத்தன்மை உள்ளவர்களாக இருப்பது கூடியகாரியமல்ல என்று நாம் உணருவதில்லை. மாறாக, பிலிப்பியர் 4:5-ல் (NW) காணப்பட்டுள்ள அப்போஸ்தலன் பவுலின் ஏவப்பட்ட ஆலோசனையிலுள்ள இந்தச் சவாலை முழுமையாக நாம் ஏற்றுக்கொள்கிறோம்: “உங்களுடைய நியாயத்தன்மை எல்லா மனிதருக்கும் தெரிந்திருப்பதாக.”
2. நாம் நியாயத்தன்மையுள்ளவர்களாக இருக்கிறோமா என்பதைத் தீர்மானிக்க பிலிப்பியர் 4:5-லுள்ள அப்போஸ்தலன் பவுலின் வார்த்தைகள் எவ்வாறு நமக்கு உதவி செய்கின்றன?
2 நாம் நியாயத்தன்மை உள்ளவர்களாக இருக்கிறோமா என்பதைச் சோதிக்க பவுலின் வார்த்தைகள் எப்படி உதவும் என்பதைக் கவனியுங்கள். நாம் நம்மை எவ்வாறு நோக்குகிறோம் என்பது அவ்வளவாக கேள்வியில் இல்லை; மற்றவர்கள் நம்மை எவ்வாறு நோக்குகிறார்கள், நாம் எவ்வாறு அறியப்பட்டிருக்கிறோம் என்பதே கேள்வியாக இருக்கிறது. இந்த வசனத்தை பிலிப்ஸ் மொழிபெயர்ப்பு இவ்விதமாக மொழிபெயர்க்கிறது: “நியாயத்தன்மை உள்ளவர்களாய் இருப்பதற்காக நற்பெயர் பெற்றவர்களாய் இருங்கள்.” நாம் ஒவ்வொருவரும் பின்வருமாறு கேட்டுக்கொள்வது நல்லது: ‘நான் எவ்வாறு அறியப்பட்டிருக்கிறேன்? நியாயத்தன்மையுள்ளவனாய், வளைந்துகொடுப்பவனாய், கருணையுள்ளவனாய் இருப்பதற்கு நற்பெயர் பெற்றவனாய் நான் இருக்கிறேனா? அல்லது நான் கட்டுறுதியான, கடுமையான, அல்லது துணிகரமான ஒருவனாய் இருப்பதாக அறியப்பட்டிருக்கிறேனா?’
3. (அ) “நியாயத்தன்மை உள்ள” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை எதை அர்த்தப்படுத்துகிறது, இந்தக் குணம் ஏன் கவரத்தக்கதாக இருக்கிறது? (ஆ) ஒரு கிறிஸ்தவர் அதிக நியாயத்தன்மை உள்ளவராக இருப்பதற்கு எவ்வாறு கற்றுக்கொள்ளக்கூடும்?
3 இந்தக் காரியத்தில் நாம் கொண்டிருக்கும் நற்பெயரானது, நாம் எந்த அளவுக்கு இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுகிறோம் என்பதை அப்படியே பிரதிபலிக்கும். (1 கொரிந்தியர் 11:1) இயேசு, இங்கே பூமியில் இருந்தபோது, நியாயத்தன்மையில் தம் தந்தையின் மிகச் சிறந்த முன்மாதிரியைப் பரிபூரணமாகப் பிரதிபலித்தார். (யோவான் 14:9) உண்மையில், “கிறிஸ்துவின் சாந்தத்தையும் தயவையும்” பற்றி பவுல் எழுதியபோது, தயவு என்பதற்கு பவுல் பயன்படுத்திய கிரேக்க வார்த்தையாகிய (எப்பியய்கீயஸ் [e·pi·ei·kiʹas]), “நியாயத்தன்மை” அல்லது, சொல்லர்த்தமாக, “வளைந்துகொடுத்தல்” என்றும் அர்த்தப்படுகிறது. (2 கொரிந்தியர் 10:1) தி எக்ஸ்பாஸிட்டர்ஸ் பைபிள் கமன்டரி, “புதிய ஏற்பாட்டில், குணாதிசயங்களை விளக்கும் பெரிய வார்த்தைகளில் ஒன்று” என்பதாக இதை அழைக்கிறது. அவ்வளவு கவரத்தக்க ஒரு குணத்தை இது விவரிப்பதால், “இனிய நியாயத்தன்மை” என்பதாக ஒரு அறிஞர் இந்த வார்த்தையை மொழிபெயர்க்கிறார். ஆகவே, இயேசு தம்முடைய பிதாவாகிய யெகோவாவைப்போல நியாயத்தன்மையை வெளிக்காட்டிய மூன்று வழிகளை நாம் கலந்தாராய்வோம். இவ்வாறு, நாம்தாமே எவ்வாறு அதிக நியாயத்தன்மை உள்ளவர்கள் ஆகலாம் என்று கற்றுக்கொள்ளக்கூடும்.—1 பேதுரு 2:21.
“மன்னிப்பதற்குத் தயாராக” இருத்தல்
4. “மன்னிப்பதற்குத் தயாராக” இருப்பவராக எவ்வாறு இயேசு தம்மைக் காண்பித்தார்?
4 திரும்பவும் திரும்பவும் “மன்னிப்பதற்குத் தயாராக” இருப்பதன்மூலம் இயேசுவும் தம்முடைய பிதாவைப் போலவே நியாயத்தன்மையைக் காண்பித்தார். (சங்கீதம் 86:5, NW) இயேசுவைப் பிடித்து, விசாரணைசெய்த அந்த இரவில், ஒரு நெருங்கிய கூட்டாளியாகிய பேதுரு, இயேசுவை மூன்று முறைகள் மறுதலித்த சமயத்தை யோசித்துப் பாருங்கள். இயேசு தாமே முன்னர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்: “மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக மறுதலிப்பேன்.” (மத்தேயு 10:33) இயேசு கட்டுறுதியுடனும் இரக்கமற்றவிதத்திலும் பேதுருவுக்கு இந்த நியமத்தைப் பொருத்தினாரா? இல்லை; இயேசு தம்முடைய உயிர்த்தெழுதலுக்குப்பின், பேதுருவைத் தனிப்பட்டவராகச் சென்று சந்தித்தார்; சந்தேகமின்றி, இந்த மனந்திரும்பும் போக்குள்ள, மனமுடைந்த அப்போஸ்தலனுக்கு ஆறுதலளிக்கவும் மறுநம்பிக்கையளிக்கவும் சென்றிருக்கவேண்டும். (லூக்கா 24:34; 1 கொரிந்தியர் 15:5) அதற்கு பின்பு, கொஞ்ச காலத்திலேயே, பேதுரு பெரிய பொறுப்பைக் கொண்டிருக்கும்படி இயேசு அனுமதித்தார். (அப்போஸ்தலர் 2:1-41) இங்கே இனிய நியாயத்தன்மையின் மிகச் சிறந்த வெளிக்காட்டு! முழு மனிதகுலத்தின் மேலும் இயேசுவை நியாயாதிபதியாக யெகோவா நியமித்திருக்கிறார் என்பது நமக்கு ஆறுதலளிப்பதாய் இல்லையா?—ஏசாயா 11:1-4; யோவான் 5:22.
5. (அ) செம்மறியாடுகளின் மத்தியில் மூப்பர்கள் எவ்வாறு அறியப்பட்டிருக்க வேண்டும்? (ஆ) நியாயவிசாரணை வழக்குகளைக் கையாளுவதற்கு முன்னர் மூப்பர்கள் என்ன கட்டுரைகளை மறுபார்வை செய்யக்கூடும், ஏன்?
5 சபையில் மூப்பர்கள் நியாயாதிபதிகளாகச் செயல்படும்போது, அவர்கள் இயேசுவின் நியாயத்தன்மையைப் பின்பற்ற முயலுகிறார்கள். தண்டனைகொடுப்பவர்களாக அவர்களிடம் செம்மறியாடுகள் பயந்திருக்கவேண்டும் என்று அவர்கள் விரும்புவதில்லை. மாறாக, நல்ல மேய்ப்பர்களாக அவர்களிடம் பாதுகாப்பாக உணரும்படியாக அவர்கள் இயேசுவைப் பின்பற்ற நாடுகின்றனர். நியாயவிசாரணை வழக்குகளில், அவர்கள் நியாயத்தன்மையுள்ளவர்களாகவும், மன்னிப்பதற்குத் தயாராகவும் இருப்பதற்கு எல்லா முயற்சியையும் எடுக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு காரியத்தைக் கையாளுவதற்குமுன், அக்டோபர் 1, 1992 காவற்கோபுர கட்டுரைகளான “யெகோவா, பட்சபாதமில்லாத ‘சர்வலோக நியாயாதிபதி,’” “மூப்பர்களே, நீதியுடன் தீர்ப்புச்செய்யுங்கள்,” என்பவற்றை மறுபார்வை செய்வதை சில மூப்பர்கள் பயனுள்ளதாகக் கண்டிருக்கின்றனர். இவ்வாறு அவர்கள் யெகோவாவுடைய நியாயந்தீர்க்கும் முறையின் சுருக்கத்தை நினைவில் கொள்கிறார்கள்: “எங்கே தேவையோ அங்கே உறுதி, எங்கே சாத்தியமோ அங்கே இரக்கம்.” நியாயத்தீர்ப்பில் இரக்கத்தினிடமாகச் சாய்வைக் கொண்டிருப்பது, அவ்வாறு செய்வதற்கான நியாயமான அடிப்படை இருக்குமானால் அது தவறல்ல. (மத்தேயு 12:7) கடுமையாகவோ இரக்கமற்றோ இருப்பது ஒரு பெருந்தவறாகும். (எசேக்கியேல் 34:4) நியாயத்தின் வரம்புகளுக்குள் சாத்தியமாக இருக்கும் மிக அன்பான, இரக்கமான வழியைச் சுறுசுறுப்பாக நாடுவதன்மூலம் மூப்பர்கள் தவறுவதைத் தவிர்க்கிறார்கள்.—ஒப்பிடவும் மத்தேயு 23:23; யாக்கோபு 2:13.
மாறும் சூழ்நிலைகளை எதிர்ப்படுகையில் வளைந்துகொடுத்தல்
6. பேய்ப்பிடித்திருந்த மகளை உடைய புறஜாதிப் பெண்ணின் விஷயத்தில் எவ்வாறு இயேசு நியாயத்தன்மையை வெளிக்காட்டினார்?
6 வழியை மாற்றிக்கொள்ள அல்லது புதிய நிலைமைகள் எழும்பியபோது அவற்றிற்கு ஏற்றாற்போல மாற்றியமைத்துக்கொள்வதில் இயேசுவும் யெகோவாவைப்போல துரிதமாகச் செயல்படுபவராய் தம்மை நிரூபித்தார். ஒரு சமயத்தில், ஒரு புறஜாதிப் பெண், மோசமாகப் பேய்ப்பிடித்திருந்த தன் மகளைக் குணப்படுத்தும்படி அவரிடம் கெஞ்சினாள். இயேசு அவளுக்கு உதவிசெய்யப்போவதில்லை என்பதாக ஆரம்பத்தில் மூன்று வித்தியாசமான வழிகளில்—முதலாவதாக, அவளுக்குப் பதிலளிக்க மறுப்பதன்மூலம்; இரண்டாவதாக, அவர் புறஜாதிகளிடம் அல்ல, ஆனால் யூதர்களிடம் அனுப்பப்பட்டார் என்று நேரடியாகக் குறிப்பிடுவதன்மூலம்; மூன்றாவதாக, அதே குறிப்பை இயல்பாக உணர்த்தக்கூடிய ஒரு உவமையைச் சொல்வதன்மூலம் அவளிடம் குறிப்பிட்டார். என்றாலும், அந்தப் பெண் வழக்கத்திற்கு அதிகமான விசுவாசத்திற்கு சான்றளிப்பவளாய், இவை எல்லாவற்றிற்குப் பின்னும் விடாப்பிடியாகத் தொடர்ந்தாள். இந்த விதிவிலக்கான சூழ்நிலையைக் கவனத்தில் கொள்கையில், ஒரு பொதுவான சட்டத்தை அமல்படுத்துவதற்கு இது சமயம் அல்ல என்பதை இயேசுவால் காண முடிந்தது; மேலான நியமங்களுக்குப் பிரதிபலனாக வளைந்துகொடுப்பதற்கான சமயமாக இது இருந்தது.a இதன் காரணமாக, இயேசு மூன்று முறைகள் எதைச் செய்யமாட்டார் என்பதாகக் குறிப்பிட்டாரோ, சரியாக அதையே செய்தார். அந்தப் பெண்ணின் மகளைக் குணப்படுத்தினார்!—மத்தேயு 15:21-28.
7. என்ன வழிகளில் பெற்றோர் நியாயத்தன்மையைக் காண்பிக்கக்கூடும், ஏன்?
7 அதேவிதமாக, பொருத்தமான சமயங்களில் வளைந்துகொடுக்க மனமுள்ளவர்களாக இருப்பதாக நாம் அறியப்பட்டிருக்கிறோமா? அப்படிப்பட்ட நியாயத்தன்மையைப் பெற்றோர் அடிக்கடி காண்பிக்கவேண்டியவர்களாய் இருக்கின்றனர். ஒவ்வொரு பிள்ளையும் தனித்தன்மை உடையதாய் இருப்பதால், ஒரு பிள்ளையிடம் வெற்றிகரமாக இருக்கும் வழி மற்றொன்றிற்குப் பொருத்தமற்றதாக இருக்கக்கூடும். மேலுமாக, பிள்ளைகள் வளருகையில், அவர்களுடைய தேவைகள் மாறுகின்றன. அவர்கள் வீட்டிற்கு வரவேண்டிய நேரம் மாற்றியமைக்கப்பட வேண்டுமா? ஒரு சுவாரஸ்யமுள்ள அமைப்புமுறையினால் குடும்பப் படிப்பு பயனுள்ளதாக இருக்குமா? ஏதாவது சிறிய தவறைக்கண்டு பெற்றோர் ஒருவர் அளவுக்கு அதிகமாக பிரதிபலிக்கையில், அவர் அல்லது அவள் மனத்தாழ்மையாக இருக்கவும் காரியங்களைச் சரி செய்யவும் மனமுள்ளவராய் இருக்கிறாரா? அப்படிப்பட்ட வழிகளில் வளைந்துகொடுக்கும் பெற்றோர், பிள்ளைகளைத் தேவையின்றி கோபப்படுத்துவதையும் யெகோவாவைவிட்டு அவர்களைத் தூரமாகச் செல்ல வைப்பதையும் தவிர்க்கிறார்கள்.—எபேசியர் 6:4.
8. பிராந்தியத்தின் தேவைகளுக்கேற்ப மாற்றியமைத்துக்கொள்வதில் சபை மூப்பர்கள் எவ்வாறு முன்நின்று வழிநடத்தக்கூடும்?
8 மூப்பர்களும் புதிய சூழ்நிலைகள் எழும்புகையில், தங்களை மாற்றியமைத்துக்கொள்ளவேண்டும்; அதேநேரத்தில் கடவுளுடைய திட்டவட்டமான சட்டங்களில் ஒருபோதும் இணங்கிப்போய்விடக் கூடாது. பிரசங்க வேலையை மேற்பார்வையிடுகையில், பிராந்தியத்தில் உள்ள மாற்றங்களைக் குறித்து கவனமுள்ளவர்களாய் இருக்கிறீர்களா? சுற்றுவட்டாரத்தில் உள்ள வாழ்க்கைப் பாணிகள் மாறுகையில், ஒருவேளை மாலையில் சாட்சிபகருதல், தெருவில் சாட்சிபகருதல், அல்லது தொலைபேசி மூலம் சாட்சிபகருதல் ஆகியவை முன்னேற்றுவிக்கப்படவேண்டும். அப்படிப்பட்ட வழிகளில் மாற்றியமைத்துக் கொள்ளுதல், நமக்குக் கொடுக்கப்பட்ட பிரசங்கிக்கும் கட்டளையை அதிக திறம்பட்ட விதத்தில் நிறைவேற்ற நமக்கு உதவும். (மத்தேயு 28:19, 20; 1 கொரிந்தியர் 9:26) பவுலும் தன்னுடைய ஊழியத்தில் எல்லா வகைகளான மக்களுக்கும் ஏற்றவாறு மாற்றியமைத்துக்கொள்வதை நிச்சயப்படுத்திக்கொண்டார். நாமும் அவ்வாறு செய்கிறோமா? உதாரணமாக, மக்களுக்கு உதவிசெய்ய முடிவதற்காக, உள்ளூர் மதங்களையும் கலாச்சாரங்களையும் பற்றி போதுமான அளவு கற்றுக்கொள்கிறோமா?—1 கொரிந்தியர் 9:19-23.
9. ஒரு மூப்பர், முன்பு தான் பிரச்சினைகளைக் கையாண்ட விதத்திலேயே எப்போதும் செய்யவேண்டும் என்று ஏன் வற்புறுத்தக் கூடாது?
9 இந்தக் கடைசி நாட்கள் அதிக கொடியனவாகவே மாறிக்கொண்டிருக்கையில், மேய்ப்பர்கள் தங்களுடைய மந்தை தற்போது எதிர்ப்படும் பிரச்சினைகள் சிலவற்றின் குழப்பமூட்டும் சிக்கலானதும் கசப்பானதுமான தன்மைக்கு ஏற்ப மாற்றியமைத்துக்கொள்வதும் அவசியமாக இருக்கக்கூடும். (2 தீமோத்தேயு 3:1) மூப்பர்களே, கட்டுறுதியுடன் இருப்பதற்கான காலமல்ல இது! நிச்சயமாகவே, ஒரு மூப்பர் பிரச்சினைகளைக் கையாளுகையில் தான் முன்பு கையாண்டிருந்த முறைகள் திறம்பட்டவையாக இல்லாமற்போயிருக்கும்போது அல்லது ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமை’ அப்படிப்பட்ட பொருள்களின்பேரில் புதிய விஷயங்களைப் பிரசுரிப்பதை ஏற்றதாகக் கண்டிருக்கும்போது, அந்தப் பழைய முறைகளையே பயன்படுத்தும்படி வற்புறுத்தமாட்டார். (மத்தேயு 24:45; ஒப்பிடுங்கள் பிரசங்கி 7:10; 1 கொரிந்தியர் 7:31.) நன்கு செவிகொடுத்துக் கேட்கும் ஒருவர் தேவைப்பட்ட, மனச்சோர்விலிருந்த ஒரு சகோதரிக்கு உண்மையுள்ள மூப்பர் ஒருவர் நிஜமாகவே உதவி செய்ய முயன்றார். என்றாலும், அவளுடைய மனச்சோர்வை அவ்வளவு பெரிய காரியமாக அவர் உணராமல், எளிய தீர்வுகளை அளித்தார். பின்னர் உவாட்ச் டவர் சொஸையிட்டி, அவளுடைய அதே பிரச்சினையை கலந்தாலோசித்த பைபிள் அடிப்படையிலான தகவல்கள் சிலவற்றை பிரசுரித்தது. அந்த மூப்பர் திரும்பவும் அவளிடம் பேசுவதை நிச்சயப்படுத்திக்கொண்டார்; இந்த முறை இந்தப் புதிய விஷயத்தைப் பொருத்தி, அவளுடைய நிலைமைக்காக ஒற்றுணர்வைக் காண்பித்தார். (1 தெசலோனிக்கேயர் 5:14, 15-ஐ ஒப்பிடவும்.) நியாயத்தன்மைக்கு என்னே ஓர் சிறந்த எடுத்துக்காட்டு!
10. (அ) மூப்பர்கள் ஒருவருக்கொருவரும், மொத்தமாக மூப்பர் குழுவிடமாகவும் எப்படி ஒரு வளைந்துகொடுக்கும் தன்மையைக் காட்டவேண்டும்? (ஆ) தங்களை நியாயத்தன்மையற்றவர்களாகக் காண்பிப்பவர்களை மூப்பர் குழு எவ்வாறு நோக்க வேண்டும்?
10 மூப்பர்கள் ஒருவருக்கொருவர் வளைந்துகொடுக்கும் தன்மையைக் காண்பிப்பதும் அவசியம். மூப்பர் குழு ஒன்றுகூடும்போது, எந்த ஒரு மூப்பரும் அங்கு நடக்கும் காரியங்களில் ஆதிக்கம் செலுத்தாமலிருப்பது எவ்வளவு முக்கியமானது! (லூக்கா 9:48) இந்த விஷயத்தில், தலைமைதாங்கி நடத்துபவருக்குக் குறிப்பாகக் கட்டுப்பாடு தேவைப்படுகிறது. மேலும், மொத்த மூப்பர் குழுவின் தீர்மானத்தோடு ஒன்று அல்லது இரண்டு மூப்பர்கள் ஒத்துப்போகவில்லையென்றால், அவர்கள் தங்களுடைய வழியிலேயே காரியங்கள் செய்யப்படவேண்டும் என்று வற்புறுத்தக் கூடாது. மாறாக, எந்த வேதப்பூர்வ நியமமும் மீறப்படாத வரையிலும், நியாயத்தன்மையானது மூப்பர்களுக்குத் தேவை என்பதை நினைவில் கொண்டவர்களாக வளைந்துகொடுப்பார்கள். (1 தீமோத்தேயு 3:2, 3, NW) மறுபட்சத்தில், தங்களை ‘மகா பிரதான அப்போஸ்தலராக’ காண்பித்துக்கொண்ட ‘நியாயத்தன்மையற்ற ஆட்களைப் பொறுத்துக்கொண்டதற்காக’ பவுல் கொரிந்திய சபையைக் கடிந்துகொண்டார் என்பதை மூப்பர் குழு மனதில் வைத்திருக்கவேண்டும். (2 கொரிந்தியர் 11:5, 19, 20) ஆகவே, பிடிவாதமாக, நியாயமற்ற விதத்தில் நடந்துகொள்ளும் சக மூப்பருக்கு அறிவுரை கொடுக்க மனமுள்ளவர்களாய் அவர்கள் இருக்கவேண்டும், ஆனால் அவ்வாறு செய்கையில், அவர்கள்தாமே சாந்தமாகவும் தயவாகவும் இருக்கவேண்டும்.—கலாத்தியர் 6:1.
அதிகாரத்தைச் செலுத்துவதில் நியாயத்தன்மை
11. இயேசுவின் நாளில் இருந்த யூத மதத் தலைவர்கள் அதிகாரத்தைச் செலுத்தியதற்கும் இயேசு செலுத்தியதற்கும் என்ன வேறுபாடு இருந்தது?
11 இயேசு பூமியில் நடமாடியபோது, தமக்குக் கடவுளால் கொடுக்கப்பட்ட அதிகாரத்தை அவர் செலுத்தியவிதத்தில் அவருடைய நியாயத்தன்மை உண்மையிலேயே மேலோங்கி நின்றது. தம்முடைய நாளிலிருந்த மதத் தலைவர்களிலிருந்து அவர் எவ்வளவு வித்தியாசப்பட்டவராய் இருந்தார்! ஒரு உதாரணத்தைக் கவனியுங்கள். ஓய்வுநாளன்று எந்த வேலையும், விறகு பொறுக்குதல்கூட செய்யப்படக் கூடாது என்று கடவுளுடைய சட்டம் கட்டளையிட்டிருந்தது. (யாத்திராகமம் 20:10; எண்ணாகமம் 15:32-36) அந்தச் சட்டத்தை மக்கள் எவ்வாறு பொருத்திப் பிரயோகித்தார்கள் என்பதை மதத் தலைவர்கள் கட்டுப்படுத்த விரும்பினார்கள். ஆகவே, ஓய்வுநாளன்று ஒருவர் சரியாக, எதைத் தூக்க முடியும் என்று கட்டளையிடுவதைத் தங்கள் பொறுப்பாக எடுத்துக்கொண்டார்கள். அவர்கள் வரையறுத்தார்கள்: இரண்டு உலர்ந்த அத்திகளைவிட பாரமானது எதையும் தூக்கக் கூடாது. ஆணிகளை உடைய செருப்புகளுக்கு எதிராகக்கூட தடை விதித்தார்கள்; ஏனென்றால் ஆணிகளின் கூடுதலான பாரத்தைத் தூக்குவது வேலையை உட்படுத்தும் என்பதாக வாதாடினர்! ஓய்வுநாளைப் பற்றிய கடவுளுடைய சட்டத்துடன் ரபிகள் 39 கட்டளைகளைச் சேர்த்து, பின்னர் அந்தக் கட்டளைகளுக்கும் முடிவில்லாத பிற்சேர்க்கைகளைக் கூட்டினர். மறுபட்சத்தில், இயேசு, முடிவில்லாத கட்டுப்படுத்தும் கட்டளைகளையோ கட்டுறுதியான, சென்றெட்டமுடியாத தராதரங்களையோ ஏற்படுத்துவதன்மூலம் வெட்கத்தால் மக்களைக் கட்டுப்படுத்த நாடவில்லை.—மத்தேயு 23:2-4; யோவான் 7:47-49.
12. யெகோவாவின் நீதியான தராதரங்களைப் பொறுத்தவரையில் இயேசு தளர்வு காட்டுபவராக இருக்கவில்லை என்று நாம் ஏன் சொல்லலாம்?
12 கடவுளுடைய நீதியான தராதரங்களை இயேசு உறுதியாக ஆதரிக்கவில்லை என்று நாம் ஊகித்துக்கொள்ள வேண்டுமா? அவர் நிச்சயமாக ஆதரித்தார்! சட்டங்களுக்கு அடிப்படையாகவிருக்கும் நியமங்களை மனிதர் இருதயத்தில் எடுத்துக்கொள்ளும்போது, அந்தச் சட்டங்கள் மிகவும் பலன் தருபவையாக இருக்கின்றன என்பதை அவர் புரிந்துகொண்டார். எண்ணற்ற கட்டளைகள் மூலமாக மக்களைக் கட்டுப்படுத்த பரிசேயர்கள் அக்கறை உள்ளவர்களாய் இருந்தபோது, இயேசு இருதயங்களைச் சென்றெட்ட முயன்றார். உதாரணமாக, “வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள்” என்பது போன்ற தெய்வீக சட்டங்களுக்கு எந்தவிதமான வளைந்துகொடுத்தலும் இல்லை என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார். (1 கொரிந்தியர் 6:18) ஆகவே ஒழுக்கக்கேட்டிற்கு வழிநடத்தக்கூடிய எண்ணங்களைப் பற்றி அவர் மக்களுக்கு எச்சரித்தார். (மத்தேயு 5:28) அப்படிப்பட்ட போதனை, வெறுமனே உறுதியான, விதிமுறைசார்ந்த கட்டளைகளை வலியுறுத்துவதைக் காட்டிலும் மிக அதிக ஞானத்தையும் பகுத்துணர்வையும் உட்படுத்தியது.
13. (அ) வளைந்துகொடுக்காத சட்டங்களையும் கட்டளைகளையும் உருவாக்குவதை மூப்பர்கள் ஏன் தவிர்க்க வேண்டும்? (ஆ) ஒரு நபருடைய மனச்சாட்சியை மதிக்க வேண்டியது முக்கியமாக இருக்கும் சில அம்சங்கள் யாவை?
13 இன்றும் பொறுப்புள்ள சகோதரர்கள் இருதயங்களைச் சென்றெட்டுவதில் அதேவிதமான அக்கறையைக் கொண்டிருக்கின்றனர். அதன் காரணமாக, அவர்கள் இஷ்டப்பட்ட, வளைந்துகொடுக்காத கட்டளைகளை வலியுறுத்துவதையோ தங்களுடைய சொந்த நோக்குநிலைகளையும் கருத்துக்களையும் சட்டமாக மாற்றுவதையோ தவிர்க்கிறார்கள். (ஒப்பிடவும் தானியேல் 6:7-16.) உடை மற்றும் சிகை அலங்காரம் பற்றிய காரியங்களின்பேரில் தயவான நினைப்பூட்டுதல்கள் அவ்வப்போது பொருத்தமானவையாகவும் சமயோசிதமாகவும் இருக்கக்கூடும்; ஆனால் ஒரு மூப்பர், அந்த விஷயங்களைக் குறித்து இடைவிடாமல் சொல்லிக்கொண்டோ, முக்கியமாக தன்னுடைய சொந்த விருப்பங்களை வெளிப்படுத்தும் குறிப்புகளை வற்புறுத்த முயன்றுகொண்டோ இருந்தால், ஒரு நியாயத்தன்மையுள்ள மனிதராக அறியப்பட்டிருப்பதிலிருந்து அவருடைய பெயரைக் கெடுத்துக்கொள்ளக்கூடும். உண்மையில், சபையிலுள்ள அனைவரும் மற்றவர்களைக் கட்டுப்படுத்த முயற்சிப்பதைத் தவிர்க்கவேண்டும்.—ஒப்பிடவும் 2 கொரிந்தியர் 1:24; பிலிப்பியர் 2:12.
14. இயேசு மற்றவர்களிடம் எதை எதிர்பார்த்தார் என்பதைக் குறித்ததில் நியாயத்தன்மை உள்ளவராக இருந்தார் என்று எப்படிக் காண்பித்தார்?
14 மூப்பர்கள் மற்றொரு காரியத்திலும் தங்களைத் தாங்களே சோதித்தறிய விரும்பக்கூடும்: ‘நான் மற்றவர்களிடம் எதிர்பார்க்கும் காரியங்களில் நியாயத்தன்மை உள்ளவனாக இருக்கிறேனா?’ இயேசு நிச்சயமாகவே அவ்வாறிருந்தார். அவர் தம்மைப் பின்பற்றியவர்களிடம், அவர்களுடைய முழு ஆத்துமாவோடுகூடிய முயற்சிகளுக்கு அதிகமாக எதையும் எதிர்பார்க்கவில்லை என்றும் அவற்றை அவர் உயர்வாக மதிப்பிட்டார் என்றும் திரும்பவும் திரும்பவும் காண்பித்தார். அந்த ஏழை விதவை, மிகக் குறைவான மதிப்புள்ள அவளுடைய காசுகளைக் கொடுத்ததற்காக அவளைப் புகழ்ந்தார். (மாற்கு 12:42, 43) மரியாளின் விலையுயர்ந்த நன்கொடையை அவருடைய சீஷர்கள் குறைகூறியபோது, பின்வருமாறு சொல்லி, அவர்களைக் கடிந்துகொண்டார்: “அவளை விட்டுவிடுங்கள்; . . . இவள் தன்னால் இயன்றதைச் செய்தாள்.” (மாற்கு 14:6, 8) அவரைப் பின்பற்றியவர்கள், அவருடைய எதிர்பார்ப்பிற்கிணங்க செயல்படாதபோதுகூட அவர் நியாயத்தன்மை உள்ளவராக இருந்தார். எடுத்துக்காட்டாக, அவர் பிடிக்கப்படும் அன்று இரவு, தம்முடைய மூன்று மிக நெருக்கமான அப்போஸ்தலரை விழித்திருந்து, அவருடன் காவலிருக்கும்படி ஊக்குவித்தபோதும்கூட, அவர்கள் திரும்பவும் திரும்பவும் தூங்கியதன்மூலம் அவரை ஏமாற்றமடையச் செய்தனர். இருந்தாலும் அவர் பரிவுணர்ச்சியுடன் இவ்வாறு குறிப்பிட்டார்: “ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது.”—மாற்கு 14:34-38.
15, 16. (அ) மந்தையைக் கட்டாயப்படுத்தாமல் அல்லது கீழ்ப்படுத்தி அடக்காமல் இருக்கும்படி ஏன் மூப்பர்கள் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்? (ஆ) ஒரு உண்மையுள்ள சகோதரி, மற்றவர்களிடமிருந்து தான் எதை எதிர்பார்த்தாள் என்பதில் எவ்வாறு தன்னை மாற்றியமைத்துக்கொண்டாள்?
15 இயேசு தம்மைப் பின்பற்றியவர்களை ‘மும்முரமாகப் பிரயாசப்படும்படி’ உற்சாகப்படுத்தினார் என்பது உண்மைதான். (லூக்கா 13:24, NW) ஆனால் அவ்வாறு செய்யும்படி அவர் ஒருபோதும் அவர்களைக் கட்டாயப்படுத்தவில்லை! அவர்கள்மீது ஒரு உந்துவிக்கும் செல்வாக்கை அவர் கொண்டிருந்து, முன்மாதிரி வைத்து, முன்நின்று வழிநடத்தி, அவர்களுடைய இருதயங்களைச் சென்றெட்ட முயன்றார். மீதியைச் செய்வதற்கு யெகோவாவின் ஆவியுடைய வல்லமையை அவர் நம்பினார். அதேவிதமாகவே மூப்பர்களும், யெகோவாவை முழு இருதயத்தோடும் சேவிக்கும்படி மந்தையை உற்சாகப்படுத்த வேண்டும்; ஆனால் அவர்கள் தற்போது யெகோவாவுக்குச் செய்யும் சேவை ஏதோ ஒரு விதத்தில் போதுமானதாக இல்லை என்றோ ஏற்கத்தகாதது என்றோ அர்த்தப்படுத்தக்கூடியவிதத்தில் அவர்களை குற்ற உணர்வால் அல்லது வெட்கத்தால் கீழ்ப்படுத்தி அடக்குவதைத் தவிர்க்கவேண்டும். கட்டுறுதியான, “அதிகத்தைச் செய்யுங்கள், அதிகத்தைச் செய்யுங்கள், அதிகத்தைச் செய்யுங்கள்!” என்ற அணுகுமுறை, தங்களால் முடிந்தவற்றை எல்லாம் செய்பவர்களைச் சோர்வடையச் செய்யக்கூடும். “திருப்திப்படுத்த கடினமானவராக” இருப்பதாக ஒரு மூப்பர் பெயர் சம்பாதித்துக் கொண்டால் எவ்வளவு வருந்தத்தக்கதாக இருக்கும்—நியாயத்தன்மையிலிருந்து மிகவும் வேறுபட்டதாக இருக்கும்!—1 பேதுரு 2:18, NW.
16 நாம் மற்றவர்களிடம் எதிர்பார்க்கும் காரியத்தைக் குறித்ததில் நாம் அனைவருமே நியாயத்தன்மை உள்ளவர்களாக இருக்க வேண்டும்! ஒரு சகோதரி, நோய்வாய்ப்பட்டிருக்கும் தன் தாயைக் கவனிப்பதற்காக, தானும் தன் கணவனும் மிஷனரி நியமிப்பை விட்டுவிட்டு வந்தபின் இவ்வாறு எழுதினார்கள்: “இங்கு சபைகளில், இந்தக் காலங்கள் உண்மையிலே பிரஸ்தாபிகளாகிய எங்களுக்குக் கஷ்டமானவையாய் இருக்கின்றன. வட்டார மற்றும் மாவட்ட வேலையில், எத்தனையோ அழுத்தங்களிலிருந்து காக்கப்பட்டவர்களாய் இருந்துவிட்டு, திடீரென்றும் கவலைக்குரியவிதத்திலும் இதை நாங்கள் அறிந்துகொள்ள வைக்கப்பட்டோம். உதாரணமாக, நான் இவ்வாறு யோசித்துக் கொண்டதுண்டு, ‘இந்த மாதத்திற்கான சரியான பிரசுரத்தை ஏன் அந்தச் சகோதரி அளிக்கக்கூடாது? அவர்கள் ராஜ்ய ஊழியத்தை வாசிப்பதில்லையா?’ ஏனென்று இப்போது எனக்குத் தெரியும். சிலருக்கு [ஊழியத்திற்கு] செல்ல, அவர்களால் செய்ய முடிந்ததெல்லாம் அவ்வளவே.” நம் சகோதரர்கள் செய்யாமல் இருப்பவற்றைக் குறித்து நியாயந்தீர்ப்பதற்கு மாறாக அவர்கள் செய்பவற்றிற்காக பாராட்டைத் தெரிவிப்பது எவ்வளவு சிறந்ததாக இருக்கும்!
17. நியாயத்தன்மையைக் குறித்ததில் இயேசு எவ்வாறு நமக்கு ஒரு முன்மாதிரி வைத்தார்?
17 இயேசு தம்முடைய அதிகாரத்தை ஒரு நியாயமான முறையில் எவ்வாறு செலுத்துகிறார் என்பதற்குக் கடைசியாக ஒரு உதாரணத்தைக் கவனியுங்கள். அவருடைய பிதாவைப் போலவே, இயேசுவும் தம்முடைய அதிகாரத்தை, இழந்துவிடும் பயத்துடன் காத்துக்கொள்ளவில்லை. அவரும் அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பதில் தலைசிறந்தவராய் இருக்கிறார்; தம்முடைய உண்மையுள்ள அடிமை வகுப்பை, இங்கு பூமியிலுள்ள ‘தன் ஆஸ்திகள் எல்லாவற்றையும்’ கவனிக்கும்படி நியமித்திருக்கிறார். (மத்தேயு 24:45-47) மேலும் அவர் மற்றவர்களுடைய கருத்துக்களைச் செவிகொடுத்துக் கேட்பதற்குப் பயப்படுவதில்லை. அவர் அடிக்கடி தமக்குச் செவிகொடுத்துக் கேட்போரிடம் இவ்வாறு கேட்டார்: “உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது?” (மத்தேயு 17:25; 18:12; 21:28; 22:42) ஆகவே, இன்று கிறிஸ்துவைப் பின்பற்றுகிற எல்லாருக்குள்ளும் அப்படியே இருக்க வேண்டும். எந்தளவு அதிகாரமும் அவர்களைச் செவிகொடுத்துக் கேட்க மனமற்றவர்களாக ஆக்கிவிடக் கூடாது. பெற்றோரே செவிகொடுங்கள்! கணவன்மாரே செவிகொடுங்கள்! மூப்பர்களே செவிகொடுங்கள்!
18. (அ) நாம் நியாயத்தன்மை உள்ளவர்களாய் இருப்பதற்கு நற்பெயர் பெற்றவர்களாய் இருக்கிறோமா என்று எவ்வாறு கண்டுபிடிக்கக்கூடும்? (ஆ) நாம் எல்லாரும் என்ன தீர்மானத்தை எடுப்பது நலமானதாக இருக்கக்கூடும்?
18 தீர்மானமாக, நாம் ஒவ்வொருவரும் “நியாயத்தன்மை உள்ளவர்களாய் இருப்பதற்காக நற்பெயர் பெற்றவர்களாய்” இருக்க விரும்புகிறோம். (பிலிப்பியர் 4:5, பிலிப்ஸ்) நாம் அப்படிப்பட்ட பெயரைக் கொண்டிருக்கிறோம் என்று நமக்கு எப்படித் தெரியும்? மக்கள் தம்மைப் பற்றி என்ன சொல்லுகிறார்கள் என்பதை இயேசு அறிய ஆவலுள்ளவராய் இருந்தபோது, அவர் தமது நம்பகரமான கூட்டாளிகளிடம் கேட்டார். (மத்தேயு 16:13) நாம் ஏன் அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றக் கூடாது? நேர்மையானவர் என நீங்கள் நம்பக்கூடிய ஒருவரிடம், நியாயத்தன்மை உள்ளவராகவும், வளைந்துகொடுப்பவராகவும் இருப்பவராக நீங்கள் அறியப்பட்டிருக்கிறீர்களா என்று கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். நியாயத்தன்மையின் பரிபூரண முன்மாதிரியாகிய இயேசுவை மிக நெருங்கிய விதத்தில் பின்பற்ற நாம் அனைவரும் செய்வதற்கு நிச்சயமாகவே அதிகம் இருக்கிறது! விசேஷமாக, நாம் மற்றவர்கள்மீது, ஓரளவு அதிகாரத்தை செலுத்திக் கொண்டிருந்தோமானால், மன்னிப்பதற்கு தயாராகவும், விட்டுக்கொடுத்து, அல்லது பொருத்தமான சமயத்தில் வளைந்துகொடுத்து, எப்போதும் அதை ஒரு நியாயமுள்ள முறையில் செலுத்துவதன்மூலம், யெகோவா மற்றும் இயேசுவின் முன்மாதிரியை எப்போதும் பின்பற்றுவோமாக. உண்மையில், நம்மில் ஒவ்வொருவரும் “நியாயத்தன்மை உள்ளவர்களாக” இருக்க முயலுவோமாக!—தீத்து 3:2, NW.
[அடிக்குறிப்புகள்]
a நியூ டெஸ்டமன்ட் உவர்ட்ஸ் என்ற புத்தகம் குறிப்பிடுகிறது: “ஒரு காரியம் சட்டப்பூர்வமாக முழுமையாக நியாயப்படுத்தப்பட்டதாகவும் அதேநேரத்தில் ஒழுக்கப்பிரகாரமாய் முழுமையாக தவறானதாகவும் இருக்கும் சமயங்களும் உண்டு என்று எப்பியய்கிஸ்-ஆக [நியாயத்தன்மை உள்ளவராக] இருக்கும் ஒருவர் அறிந்திருக்கிறார். சட்டத்தைவிட உயர்ந்ததும் சிறந்ததுமான ஒரு சக்தியின் வற்புறுத்தலின்கீழ் சட்டத்தை எப்போது தளர்த்துவது என்பதை எப்பியய்கிஸ்-ஆக இருக்கும் ஒருவர் அறிந்திருக்கிறார்.”
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ கிறிஸ்தவர்கள் ஏன் நியாயத்தன்மையுள்ளவர்களாக இருக்க விரும்ப வேண்டும்?
◻ மன்னிப்பதற்குத் தயாராக இருப்பதில் மூப்பர்கள் எவ்வாறு இயேசுவைப் பின்பற்ற முடியும்?
◻ இயேசு இருந்ததுபோல நாம் எவ்வாறு வளைந்துகொடுப்பவர்களாய் இருக்க முயலவேண்டும்?
◻ நாம் அதிகாரத்தைச் செலுத்தும் விதத்தில், எவ்வாறு நியாயத்தன்மையை வெளிக்காட்ட முடியும்?
◻ நாம் உண்மையிலே நியாயத்தன்மை உள்ளவர்களாக இருக்கிறோமா என்று எவ்வாறு நம்மைநாமே சோதித்தறியலாம்?
[பக்கம் 15-ன் படம்]
மனந்திரும்பிய பேதுருவை இயேசு உடனடியாக மன்னித்தார்
[பக்கம் 16-ன் படம்]
ஒரு பெண் வழக்கத்திற்கு அதிகமான விசுவாசத்தைக் காண்பித்தபோது, ஒரு பொதுவான சட்டத்தை அமல்படுத்துவதற்கு அது சமயமல்ல என்று இயேசு கண்டார்
[பக்கம் 18-ன் படம்]
பெற்றோரே செவிகொடுங்கள்!
[பக்கம் 18-ன் படம்]
கணவன்மாரே செவிகொடுங்கள்!
[பக்கம் 18-ன் படம்]
மூப்பர்களே செவிகொடுங்கள்!