இந்த நற்செய்தி முதலில் பிரசங்கிக்கப்படவேண்டும்
“நற்செய்தி சகல தேசத்தாருக்கும் முதலில் பிரசங்கிக்கப்படவேண்டும்.”—மாற்கு 13:10, NW.
1, 2. சாட்சிகளின் அடையாளச் சின்னம் என்ன, ஏன்?
யெகோவாவின் சாட்சிகள் ஏன் விடாது பிரசங்கித்து வருகின்றனர்? நிச்சயமாகவே, பொது ஊழியத்தை நாம் வீடு வீடாகவோ, தெருக்களிலோ, சந்தர்ப்பம் வாய்க்கும்போதோ செய்தாலுஞ்சரி, அதற்காக நாம் உலகம் முழுவதும் அறியப்பட்டிருக்கிறோம். தகுந்த எல்லா சந்தர்ப்பங்களிலும், நாம் நம்மையே சாட்சிகளாக அடையாளம் காட்டி, பொக்கிஷப்படுத்தி வைத்திருக்கும் நற்செய்தியை சாதுரியமாக அறிவிக்க முயற்சி செய்கிறோம். உண்மையில், இந்த ஊழியம் நம்முடைய அடையாளச் சின்னமாக இருக்கிறது என்று நாம் சொல்லக்கூடும்!—கொலோசெயர் 4:6.
2 இதைக் குறித்து சற்று யோசித்துப் பாருங்கள்: மக்கள் தங்களுடைய சுற்றுப்புறத்தில் நேர்த்தியாக உடுத்தியிருக்கும் ஆண்களும் பெண்களும் பிள்ளைகளும் அடங்கிய ஒரு தொகுதியை பிரீஃப்கேஸ்களுடன் பார்க்கையில், சாதாரணமாக அவர்களை யாரென்று முதலில் நினைக்கிறார்கள்? ‘இதோ பாருங்கள், கத்தோலிக்கர்கள் (அல்லது ஆர்த்தடாக்ஸ் மதப்பிரிவைச் சேர்ந்தவர்கள்) திரும்பவும் வருகிறார்கள்!’ அல்லது, ‘பாருங்கள், பெந்தெகொஸ்தே ஆட்கள் (அல்லது பாப்டிஸ்ட் மதப்பிரிவைச் சேர்ந்தவர்கள்) திரும்பவும் வருகிறார்கள்!’ என்பதாக நினைக்கிறார்களா? இல்லை. அப்படிப்பட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் முழுக் குடும்பங்களாக சேர்ந்து வீடு வீடாய் ஊழியஞ்செய்வது கிடையாது என்பதை மக்கள் அறிந்திருக்கின்றனர். ஒருவேளை சில மதத் தொகுதிகள் ஒருசில “மிஷனரிகளை” குறிப்பிட்ட சில இடங்களுக்குச் சென்று திட்டவட்டமாக இரண்டு வருடத்திற்கு ஊழியம் செய்யுமாறு அனுப்புகின்றன. ஆனால் அத்தொகுதிகளிலுள்ள பொதுநிலை ஆட்கள் அப்படிப்பட்ட யாதொரு ஊழியத்திலும் ஈடுபடுவது கிடையாது. தகுதியான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வைராக்கியத்துடன் பிறருக்குத் தங்களுடைய செய்தியை அறிவிப்பதற்காக உலகம் முழுவதும் யெகோவாவின் சாட்சிகள் மாத்திரம் அறியப்பட்டிருக்கின்றனர். தங்களுடைய காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளுக்காகவும் அவர்கள் அறியப்பட்டிருக்கின்றனர்.—ஏசாயா 43:10-12; அப்போஸ்தலர் 1:8.
கிறிஸ்தவமண்டல குருமாருக்கு எதிர்மாறாயிருக்கின்றனர்
3, 4. கிறிஸ்தவமண்டல குருமார் எவ்வாறு அடிக்கடி செய்தித்துறையில் விவரித்துக் காட்டப்படுகின்றனர்?
3 நேர் எதிர்மாறாக, செய்தி அறிக்கைகள் அடிக்கடி என்ன காட்டுகின்றனவென்றால் சில நாடுகளிலிருக்கிற பல மத குருமார் சிறார் புணர்ச்சிக்காரர்களாகவும் ஒழுக்கக்கேடான மோசடி செய்யும் ஆட்களாகவும் ஏமாற்றுபவர்களாகவும் இருக்கின்றனர். அவர்களுடைய மாம்ச கிரியைகளும் ஆடம்பரமான வாழ்க்கை பாணிகளும் எல்லாரும் காணும்படி தெளிவாக தெரிகின்றன. ஒரு பிரபலமான பாடல் எழுத்தாளர், “இயேசு தம்முடைய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரு ரோலெக்ஸை [அதிக விலையுயர்ந்த கோல்டு உவாட்சை] அணிவாரா?” என்று தலைப்பிடப்பட்ட பாட்டில் இதை நன்றாக எடுத்துக்காட்டினார். அவர் என்ன கேட்கிறாரென்றால், “இயேசு திரும்ப பூமிக்கு வந்தால் அரசியலில் ஈடுபடுவாரா? ப்பாம் ஸ்பிரிங்ஸ் [வளமான கலிபோர்னிய சமுதாயம்] என்னும் இடத்தில் தம்முடைய இரண்டாவது வீட்டை உடையவராக, தம்மிடம் இருக்கும் செல்வ வளத்தை மறைக்கப் பார்ப்பாரா?” யாக்கோபு சொன்ன சொற்கள் எவ்வளவு பொருத்தமாயிருக்கின்றன: “பூமியிலே நீங்கள் சம்பிரமமாய் வாழ்ந்து, சுகபோகத்தில் உழன்றீர்கள்; கொழுத்தவைகளை அடிக்கும் நாளில் நடக்கிறதுபோல உங்கள் இருதயங்களைப் போஷித்தீர்கள்.”—யாக்கோபு 5:5; கலாத்தியர் 5:19-21.
4 குருமார் அரசியல்வாதிகளோடு கூடிக்குலாவுவதும் அரசியல் வேட்பாளர்களாக தேர்தல்களில் பங்குகொள்வதுங்கூட, நவீன நாளைய வேதபாரகராகவும் பரிசேயராகவும் அவர்களை அம்பலப்படுத்துகின்றன. அதே சமயத்தில், ஐக்கிய மாகாணங்கள், கனடா போன்ற நாடுகளில் குருமார் பிள்ளைகளோடும் வயதுவந்தவர்களோடும் ஒழுக்கங்கெட்ட நடத்தையில் ஈடுபடுவதன் காரணமாக அவர்களுக்கு எதிராகத் தொடரப்படும் வழக்குகளுக்கும் தீர்ப்புகளுக்கும் அதிக பணம் செலவழிக்கப்பட்டு, மதக் கருவூலங்களில் பணமானது கரைந்துகொண்டே வருகிறது.—மத்தேயு 23:1-3.
5 சரியாகவே, தம்முடைய நாளில் வாழ்ந்த குருமாரை நோக்கி: “மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாயிருக்கிறீர்கள், அவைகள் புறம்பே அலங்காரமாய்க் காணப்படும், உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினாலும் சகல அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும். அப்படியே நீங்களும் மனுஷருக்கு நீதிமான்கள் என்று புறம்பே காணப்படுகிறீர்கள்; உள்ளத்திலோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள்,” என்று இயேசுவால் சொல்ல முடிந்தது. இதன் காரணமாகவே, கத்தோலிக்கராகவோ புராட்டஸ்டன்டினராகவோ, ஆர்த்தடாக்ஸ் மதப்பிரிவைச் சேர்ந்தவராகவோ எந்தவொரு மதப்பிரிவையும் சாராதவராகவோ கிறிஸ்தவமண்டல குருமார் இருந்தபோதிலும் அவர்களிடம் நற்செய்தியைப் பிரசங்கிக்கும் வேலையைக் கொடுக்கவில்லை. அவர்கள் முன்னுரைக்கப்பட்ட ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமையாக’ நிரூபிக்கவில்லை.—மத்தேயு 23:27, 28; 24:45-47.
நற்செய்தியை ஏன் முதலில் பிரசங்கிக்கவேண்டும்?
6. என்ன சம்பவங்கள் சீக்கிரத்தில் நடக்கவிருக்கின்றன?
6 சகல தேசத்தாருக்கும் நற்செய்தியைப் பிரசங்கிப்பதன் சம்பந்தமாக இயேசு கொடுத்த கட்டளையின் சுருக்கக் கூற்றில், மாற்கு மாத்திரமே “முதலில்” என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். (மாற்கு 13:10, NW; ஒத்துப்பாருங்கள்: மத்தேயு 24:14.) J. B. ஃபிலிப்ஸ் மொழிபெயர்ப்பு வாசிக்கிறது: “ஏனெனில் முடிவு வருவதற்கு முன்பு, சுவிசேஷத்தை சகல தேசத்தாருக்கும் அறிவிக்கவேண்டும்.” “முதலில்” என்ற வினையடையானது இதர சம்பவங்கள் உலகளாவிய சுவிசேஷ வேலைக்குப் பின் நடக்கும் என்பதை மறைமுகமாகக் குறிப்பிடுகிறது. அச்சம்பவங்கள் வாக்குப்பண்ணப்பட்ட மிகுந்த உபத்திரவத்தையும் புதிய உலகத்தின் மீதான இயேசுவின் நீதியான ஆட்சியையும் உள்ளடக்கும்.—மத்தேயு 24:21-31; வெளிப்படுத்துதல் 16:14-16; 21:1-4.
7. கடவுள் ஏன் நற்செய்தியை முதலில் பிரசங்கிக்குமாறு விரும்புகிறார்?
7 ஆகவே, கடவுள் ஏன் நற்செய்தியை முதலில் பிரசங்கிக்குமாறு விரும்புகிறார்? ஒரு காரணம் என்னவென்றால், அவர் அன்பு, நீதி, ஞானம், வல்லமையுடைய கடவுளாயிருக்கிறார். மத்தேயு 24:14-லும் மாற்கு 13:10-லும் பதிவுசெய்யப்பட்டுள்ள இயேசுவின் கூற்றுகளுடைய நிறைவேற்றத்தில், யெகோவாவின் இந்தப் பண்புகள் மனதில் பதியும் அளவுக்கு வெளிக்காட்டப்படுவதை நாம் காணலாம். இவை ஒவ்வொன்றையும் சுருக்கமாக ஆராய்ச்சி செய்து, நற்செய்தியைப் பிரசங்கிப்பதோடு எவ்வாறு தொடர்புடையவையாக இருக்கின்றன என்று பார்ப்போம்.
நற்செய்தியும் யெகோவாவின் அன்பும்
8. நற்செய்தியைப் பிரசங்கிப்பது எவ்வாறு கடவுளுடைய அன்பின் வெளிக்காட்டாக இருக்கிறது? (1 யோவான் 4:7-16)
8 நற்செய்தியைப் பிரசங்கிப்பது எவ்வாறு கடவுளுடைய அன்பை காட்டுகிறது? முதன் முதலான காரணம் என்னவென்றால், இது தனிப்பட ஒரு இனத்தினருக்காகவோ பிரிவினருக்காகவோ சொல்லப்படும் செய்தியாக இல்லை. ‘சகல தேசத்தாருக்குமுரிய’ செய்தியாக இது இருக்கிறது. மனித குடும்பத்தை கடவுள் மிகவும் நேசிப்பதால்தான் அவர் தம்முடைய ஒரேபேறான குமாரனை ஒரு இனத்தினருக்காக மட்டுமல்ல, முழு மனிதவர்க்கத்தின் பாவங்களுக்காக மீட்கும் பலியாக ஆகும் பொருட்டு இந்தப் பூமிக்கு அனுப்பினார். யோவான் அப்போஸ்தலன் எழுதினார்: “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.” (யோவான் 3:16, 17) நிச்சயமாகவே, சமாதானத்தையும் இணக்கத்தையும் நீதியையும் உடைய ஒரு புதிய உலகை வாக்குப்பண்ணும் செய்தியாகிய இந்த நற்செய்தியானது, கடவுள் வைத்திருக்கிற அன்பிற்கான அத்தாட்சியாகும்.—2 பேதுரு 3:13.
நற்செய்தியும் யெகோவாவின் வல்லமையும்
9. யெகோவா ஏன் நற்செய்தியைப் பிரசங்கிக்க கிறிஸ்தவமண்டலத்தின் வல்லமைவாய்ந்த மதங்களைப் பயன்படுத்தவில்லை?
9 நற்செய்தியைப் பிரசங்கிப்பதன் மூலம் யெகோவாவின் வல்லமை எவ்வாறு காட்டப்படுகிறது? இந்தக் கட்டளையை நிறைவேற்றுவதற்கு யாரை அவர் பயன்படுத்தியிருக்கிறார் என்று யோசித்துப் பாருங்கள். ரோமன் கத்தோலிக்க சர்ச் அல்லது பெயர்பெற்ற புராட்டஸ்டன்ட் மதப்பிரிவுகள் போன்ற கிறிஸ்தவமண்டலத்தின் அதிக வல்லமைவாய்ந்த மத அமைப்புகளைப் பயன்படுத்தியிருக்கிறாரா? இல்லை, அரசியலில் ஈடுபட்டிருப்பது இந்த வேலைக்கு இவர்களைத் தகுதியற்றவர்களாக செய்கிறது. (யோவான் 15:19; 17:14; யாக்கோபு 4:4) இவர்களிடத்தில் இருக்கும் ஓரளவான செல்வமும் உயர்ந்தோர் அடங்கிய ஆளும் வகுப்போடு கொண்டிருக்கும் இவர்களுடைய தொடர்புகளும் செல்வாக்கும், சம்பிரதாய கட்டுக்குள் இருக்கும் இவர்களுடைய இறையியலுங்கூட யெகோவா தேவனுடைய கவனத்தை ஈர்க்கவில்லை. கடவுளின் சித்தத்தைச் செய்ய மனித வல்லமை அவசியமாயிருந்ததில்லை.—சகரியா 4:6.
10. பிரசங்க வேலையைச் செய்ய கடவுள் யாரைத் தெரிந்தெடுத்திருக்கிறார்?
10 கொரிந்து சபைக்கு எழுதிய நிருபத்தில் பவுல் அப்போஸ்தலன் சொன்னதைப் போலவே அது இருக்கிறது: “சகோதரரே, நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்பைப் பாருங்கள்; மாம்சத்தின்படி ஞானிகள் அநேகரில்லை, வல்லவர்கள் அநேகரில்லை, பிரபுக்கள் அநேகரில்லை. ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார். உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார். மாம்சமான எவனும் தேவனுக்கு முன்பாகப் பெருமைபாராட்டாதபடிக்கு அப்படிச் செய்தார்.”—1 கொரிந்தியர் 1:26-29.
11. சாட்சிகளைப் பற்றிய என்ன உண்மைகள் அவர்களைத் தனிப்படுத்திக் காட்டியிருக்கின்றன?
11 யெகோவாவின் சாட்சிகளுடைய அமைப்பில் வெகுசில பணக்காரர்களே இருக்கின்றனர்; அரசியல் அதிகாரம் பெற்றவர்கள் யாருமேயில்லை. அரசியல் விவகாரங்களில் அவர்களுடைய கண்டிப்பான நடுநிலை வகிப்பு, அவர்கள் எந்தவித அரசியல் செல்வாக்கையும் பயன்படுத்த முடியாது என்பதை அர்த்தப்படுத்துகிறது. நேர்மாறாக, இந்த 20-ம் நூற்றாண்டில் மதத் தலைவர்கள் மூலமாகவும் அரசியல் தலைவர்கள் மூலமாகவும் தூண்டுவிக்கப்பட்ட மோசமான துன்புறுத்துதலுக்கு அவர்கள் அடிக்கடி பலியாகியிருக்கின்றனர். எனினும், நாஸிச, ஃபாஸிச, கம்யூனிஸ, தேசியவாத, பொய் மதக் கொள்கைகளைப் பின்பற்றும் ஆட்களால் அவர்களுக்கெதிராக தூண்டுவிக்கப்படும் கடுமையான எதிர்ப்பு இருந்தபோதிலும், சாட்சிகள் உலகமுழுவதும் நற்செய்தியைப் பிரசங்கிப்பது மட்டுமல்லாமல், பிரமிக்கத்தக்க வகையில் அவர்கள் எண்ணிக்கையிலும் அதிகரித்திருக்கின்றனர்.—ஏசாயா 60:22.
12. சாட்சிகள் ஏன் வெற்றிகரமாக இருந்திருக்கின்றனர்?
12 சாட்சிகள் தங்களுடைய வெற்றிக்கு எதைக் காரணமாகக் காட்டுகிறார்கள்? இயேசு தம்முடைய சீஷர்களிடம் வாக்குப்பண்ணினார்: “பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்.” ஆகவே, இவர்களுடைய வெற்றிக்கு உண்மையில் மூலமாயிருப்பதென்ன? “பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடை”வீர்கள் என்று இயேசு சொன்னார். அதேவிதமாக இன்று, மனித திறமையில்லாமல் கடவுளிடமிருந்து வரும் வல்லமையானது சாட்சிகளின் உலகளாவிய ஊழிய வெற்றிக்கு திறவுகோலாயிருந்திருக்கிறது. பார்ப்பதற்கு பலவீனராயிருக்கும் ஆட்களைப் பயன்படுத்தி, சரித்திரத்திலேயே மகத்தான கல்விபுகட்டும் வேலையைக் கடவுள் செய்துவருகிறார்.—அப்போஸ்தலர் 1:8; ஏசாயா 54:13.
நற்செய்தியும் யெகோவாவின் ஞானமும்
13. (அ) சாட்சிகள் ஏன் மனமுவந்தும் ஊதியம் பெறாமலும் சேவை செய்கின்றனர்? (ஆ) சாத்தானின் நிந்தனைக்கு யெகோவா எவ்வாறு உத்தரவு கொடுத்திருக்கிறார்?
13 நற்செய்தி விருப்பார்வ ஊழியர்களால் பிரசங்கிக்கப்பட்டு வருகிறது. “இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்,” என்று இயேசு சொன்னார். (மத்தேயு 10:8) ஆகவே, யெகோவாவின் சாட்சிகள் யாருமே கடவுளைச் சேவிப்பதற்கு ஊதியம் பெறுவது கிடையாது, அதை அவர்கள் நாடுவதும் கிடையாது. தங்கள் கூட்டங்களில் அவர்கள் உண்மையில் பணம் திரட்டுவதுங்கூட கிடையாது. கடவுளைக் குற்றஞ்சாட்டுபவனாகிய பிசாசான சாத்தானுக்கு உத்தரவு கொடுக்கத்தக்கதாக, அவருக்குப் பக்தியான தன்னலமற்ற சேவையை செய்வதன் மூலம் அவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள். கடவுளுடைய எதிராளியாகிய இந்த ஆவி ஆள், இவ்வாறு, மனிதர்கள் கடவுளைத் தன்னலமற்ற நோக்கத்தோடு சேவிக்கமாட்டார்கள் என்று சொன்னான். யெகோவா தம்முடைய ஞானத்தை கொண்டு, சாத்தானின் நிந்தனைக்கு எதிர்வாதமிட முடியாத உத்தரவைக் கொடுத்திருக்கிறார். இலட்சக்கணக்கான உண்மைப்பற்றுறுதியுள்ள கிறிஸ்தவ சாட்சிகள், வீடு வீடாகவும் தெருக்களிலும் சந்தர்ப்பம் வாய்க்கும்போதும் நற்செய்தியைப் பிரசங்கிப்பதன் மூலம் இவ்வுத்தரவைக் கொடுக்கின்றனர்.—யோபு 1:8-11; 2:3-5; நீதிமொழிகள் 27:11.
14. பவுல் குறிப்பிடுகிற அந்த ‘மறைக்கப்பட்ட ஞானம்’ என்ன?
14 இராஜ்ய வாக்குத்தத்தம்தானே நற்செய்தியைப் பிரசங்கிப்பதில் கடவுளுடைய ஞானத்தின் மற்றொரு வெளிக்காட்டாகும். பவுல் அப்போஸ்தலன் எழுதினார்: “தேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இப்பிரபஞ்சத்தின் ஞானத்தையல்ல, அழிந்துபோகிறவர்களாகிய இப்பிரபஞ்சத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல, உலகத்தோற்றத்திற்குமுன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த [பரிசுத்த, NW] இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம்.” அந்த ‘மறைக்கப்பட்ட ஞானம்’ ஏதேனில் தொடங்கிய கலகத்தனத்தை முடிவடையச் செய்யும் கடவுளுடைய ஞானமான வழிவகையைக் குறிக்கிறது. அந்தப் பரிசுத்த இரகசியத்தின் ஞானம் இயேசு கிறிஸ்துவில் வெளிப்பட்டது, அவரே கடவுளுடைய ராஜ்ய நற்செய்திக்கு மிக முக்கியமான நபராயிருக்கிறார்.a—1 கொரிந்தியர் 2:6, 7; கொலோசெயர் 1:25, 27, 28.
நற்செய்தியும் கடவுளின் நீதியும்
15. யெகோவா நீதியான கடவுள் என்று நமக்கு எவ்வாறு தெரியும்? (உபாகமம் 32:4; சங்கீதம் 33:5)
15 மாற்கு 13:10-ல் உள்ள “முதலில்” என்ற சொல்லிற்கான முக்கியத்துவத்தை விசேஷமாக நாம் நீதி சம்பந்தமாக பார்க்கிறோம். யெகோவா நீதியுள்ள கடவுளாக இருக்கிறார்; இந்த நீதி கிருபையால் மிதப்படுத்தப்படுகிறது. தம்முடைய தீர்க்கதரிசியாகிய எரேமியாவின் மூலம் அவர் கூறுகிறார்: “மேன்மைபாராட்டுகிறவன் பூமியிலே கிருபையையும் நியாயத்தையும் நீதியையும் செய்கிற கர்த்தர் நான் என்று என்னை அறிந்து உணர்ந்திருக்கிறதைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; இவைகளின்மேல் பிரியமாயிருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.”—எரேமியா 9:24.
16. நீதியானது முதலில் எச்சரிப்பு கொடுப்பதை அவசியப்படுத்துகிறது என்பதை எவ்வாறு உதாரணத்தோடு விளக்கலாம்?
16 நற்செய்தியைப் பிரசங்கிப்பது சம்பந்தமாக யெகோவாவின் நீதி எவ்வாறு காட்டப்பட்டுள்ளது? இதை நாம் உதாரணத்தோடு விளக்கலாம்: தாயானவள் சாயங்காலம் விருந்தாளிகளோடு சேர்ந்து சாப்பிடுவதற்காக சுவையான சாக்லெட் கேக் ஒன்றைச் செய்துவைத்திருக்கிறாள். பிள்ளைகளிடம் அந்தக் கேக்கை எப்பொழுது சாப்பிடவேண்டும் என்று ஒரு வார்த்தையும் சொல்லாமலே சமையலறை மேசையில் வைத்துவிட்டு செல்வாளேயானால், சாதாரணமாக பிள்ளைகளுடைய சுபாவம் என்னவாயிருக்கும்? ஒரு சமயத்தில் நாம் அனைவரும் பிள்ளைகளாயிருந்தோம்! பிள்ளைகள் யாராவது அந்தக் கேக் எப்படியிருக்கிறதென்று பார்க்க விரும்புவார்கள்! இப்போது தாயானவள் தேவையான எச்சரிப்பைக் கொடுக்கவில்லையென்றால், சிட்சிப்பதற்கு அவளுக்கு ஆதாரமிருக்காது. மறுபட்சத்தில், விருந்தாளிகள் வந்த பிறகு கேக்கை சாப்பிடுவதற்காக அதைத் தொடவேண்டாம் என்று அவள் தெளிவாக கூறியிருந்தால், அவள் தெளிவாக எச்சரிக்கைக் கொடுத்திருக்கிறாள். கீழ்ப்படியாமையைக் காட்டினால், உறுதியாகவும் நியாயமாகவும் நடவடிக்கையெடுக்க அவளுக்கு அதிகாரமுண்டு.—நீதிமொழிகள் 29:15.
17. 1919 முதல் யெகோவா எவ்வாறு விசேஷித்த முறையில் நீதியை விளங்கப்பண்ணியிருக்கிறார்?
17 யெகோவா தம்முடைய நீதியினிமித்தம், முதலில் தேவையான எச்சரிப்பைக் கொடுக்காமல் இந்தப் பொல்லாத காரிய ஒழுங்குமுறைக்கு எதிராக நியாயத்தீர்ப்பைக் கொண்டுவர மாட்டார். ஆகவே, விசேஷமாக 1919 முதற்கொண்டு, முதல் உலகப் போர் ‘வேதனைகளை’ கொண்டுவந்த பிறகு, யெகோவா தம்முடைய சாட்சிகள் பூமி முழுவதும் சென்று வைராக்கியத்துடன் நற்செய்தியை அறிவிக்கும்படி செய்திருக்கிறார். (மத்தேயு 24:7, 8, 14) இந்த விசேஷ எச்சரிப்பை அறியாதிருப்பதாக தேசங்கள் பாசாங்கு செய்யவே முடியாது.
உலகம் முழுவதும் எவ்வளவு விரிவாக பிரசங்கிக்கப்பட்டிருக்கிறது?
18. (அ) ஒதுக்கமாயுள்ள பிராந்தியங்களிலும் சாட்சிகள் ஊழியஞ்செய்கிறார்கள் என்பதற்கு என்ன சான்று இருக்கிறது? (ஆ) உங்களுக்குத் தெரிந்த வேறு உதாரணங்கள் யாவை?
18 இந்த உலகளாவிய கல்விபுகட்டும் வேலையின் திறனை, கடைசி இடங்கள்—வடக்குப் பிரயாணம் (Last Places—A Journey in the North) என்ற புத்தகத்திலிருந்து பார்க்கலாம். ஸ்காட்லாந்திற்கு வடக்கே இருக்கிற ஷெட்லாந்து தீவுகளிலுள்ள ஃபூலா என்ற ஒதுக்கமான தீவிற்கான கடல் படத்தை ஆய்வுசெய்கையில், “தீவைச் சுற்றிலும் சேதங்களும் பாறைகளும் நீரடி பாறை விளிம்புகளும் முட்டுக்கட்டைகளும்” இருந்ததாக அந்த வரைபடங்கள் காட்டின என்று அதன் ஆசிரியர் சொல்கிறார். இவை “வரவிருந்த மாலுமியை வராமலிருக்க எச்சரிப்பு விடுத்தன. ஃபூலாவைச் சுற்றியுள்ள சமுத்திரம் அச்சமூட்டும் சுரங்கப்பகுதியாயிருந்தது. இதனால் படகுவாணர்களும் பகல்நேர பிரயாணிகளும் இங்கிலாந்து ராணியின் பொதுநலத் துறை பணியாளர்களுங்கூட அந்தத் தீவிற்கு செல்லமுடியாதபடி செய்தது. என்றாலும் இந்தத் தடைகள் யெகோவாவின் சாட்சிகளை நிறுத்தவில்லை என்று நான் ஒருசில நாட்களுக்குள் அறிந்துகொண்டேன்.” அவர் தொடர்ந்து சொன்னார்: “மதம் மாறுபவர்களுக்காக அவர்கள் பெரிய நகரத்து குடிசைப்பகுதிகளையும் சிறுபான்மைப் பகுதிகளையும் முற்றுமுழுமையாக தேடியதுபோலவே, ஒதுக்கமாயுள்ள ஃபூலாவிலும் தங்கள் நம்பிக்கைக்காக மதம் மாற்றம் செய்தார்கள்.” ஆண்ட்ரு என்ற உள்ளூர்வாசியுடைய வீட்டண்டையில் சில மாதங்களுக்கு முன்பாக காவற்கோபுர பிரதி கிடந்ததை அவர் ஒப்புக்கொண்டார். பிறகு அவர் கூடுதலாக சொன்னார்: “ஒரு வாரத்திற்கு பின் ஃபேரோஸில் [வடக் கடல் தீவில்] [டேனிஷ் மொழியில் விழித்தெழு!] பிரதியை நான் பார்ப்பேன், இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிரீன்லாந்திலுள்ள நுக்கில் [டேனிஷ் மொழியில் காவற்கோபுரம்] பிரதியை நான் பார்ப்பேன்.” அந்த வடக்கத்திய பிராந்தியங்களில் யெகோவாவின் சாட்சிகளுடைய வைராக்கியமுள்ள ஊழியத்திற்கு என்னே ஒரு பலமான சான்று!
பிரசங்க வேலையில் தொடர்ந்திருக்க எது சாட்சிகளைத் தூண்டுவிக்கிறது?
19, 20. (அ) பிரசங்க வேலையில் தொடர்ந்திருக்க எது யெகோவாவின் சாட்சிகளைத் தூண்டுவிக்கிறது? (ஆ) என்ன கேள்விகளை அடுத்த கட்டுரை பதிலளிக்கும்?
19 நிச்சயமாகவே, ஒருவர் எவ்வளவு ஆண்டுகள் ஒரு சாட்சியாக இருந்தாலுஞ்சரி, வீடு வீடாய் சென்று முன்பின் தெரியாத ஆட்களிடம் பிரசங்கிப்பது ஒரு சுலபமான காரியம் அல்ல. அப்படியானால், பிரசங்க வேலையில் தொடர்ந்திருக்க எது இந்தக் கிறிஸ்தவர்களைத் தூண்டுவிக்கிறது? அவர்களுடைய கிறிஸ்தவ ஒப்புக்கொடுத்தலும் பொறுப்புணர்ச்சியும் ஆகும். பவுல் எழுதினார்: “சுவிசேஷத்தை நான் பிரசங்கித்து வந்தும், மேன்மைபாராட்ட எனக்கு இடமில்லை; அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது; சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ.” மெய் கிறிஸ்தவர்கள் ஜீவனை உட்படுத்தும் செய்தியைக் கொண்டிருக்கிறார்கள், ஆக, அவர்களால் எவ்வாறு அதை மற்றவர்களிடம் சொல்லாமலிருக்க முடியும்? ஆபத்து காலத்தில் எச்சரிப்புக் கொடுக்க தவறுவதனால் வரும் இரத்தப்பழி சம்பந்தப்பட்ட நியமந்தானே நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கு தூண்டுவிக்கும் காரணமாயிருக்கிறது.—1 கொரிந்தியர் 9:16; எசேக்கியேல் 3:17-21.
20 அப்படியானால், நற்செய்தி எவ்வாறு பிரசங்கிக்கப்பட்டு வருகிறது? சாட்சிகளின் வெற்றிக்கு திறவுகோல் என்ன? அவர்களுடைய ஊழியத்திலும் அமைப்பிலும் உள்ள என்ன அம்சங்கள் அவர்களுடையதை மெய் மதமாக அடையாளப்படுத்த உதவுகின்றன? இந்தக் கேள்விகளை எமது அடுத்த கட்டுரை பதிலளிக்கும்.
[அடிக்குறிப்புகள்]
a கடவுளுடைய ஞானத்தைக் குறித்தும் ‘பரிசுத்த இரகசியத்தைக்’ குறித்தும் மேலுமான விளக்கத்தைப் பெற உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸையிட்டி பிரசுரித்த வேதாகமங்களின்பேரில் உட்பார்வை (Insight on the Scriptures), 2-ம் தொகுதியில் 1190-ம் பக்கத்தைப் பாருங்கள்.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ யெகோவாவின் சாட்சிகளைக் குருமாரிலிருந்து வித்தியாசப்படுத்துவது எது?
◻ பிரசங்க வேலை எவ்வாறு கடவுளுடைய அன்பையும் வல்லமையையும் ஞானத்தையும் எடுத்துக்காட்டுகிறது?
◻ நற்செய்தியைப் பிரசங்கிப்பது எவ்வாறு கடவுளுடைய நீதியைக் காட்டுகிறது?
◻ யெகோவாவின் சாட்சிகள் தங்கள் ஊழியத்தில் தொடர்ந்திருக்க எது தூண்டுவிக்கிறது?
5. கிறிஸ்தவமண்டல குருமார் ஏன் ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமையாக’ நிரூபிக்கவில்லை?
[பக்கம் 15-ன் படங்கள்]
மக்கள் எவ்வளவு ஒதுக்கமாய் வாழ்ந்தாலும், யெகோவாவின் சாட்சிகள் அவர்களைச் சென்றெட்ட விரும்புகின்றனர்