தற்பெருமைகுறித்து எச்சரிக்கையாயிருங்கள்
இன்று அநேகர் தற்பெருமையை ஒரு நற்பண்பாகக் கருதுகின்றனர். ஒருவருடைய சொந்த பலங்களை, திறமைகளை, சாதனைகளைப் பகட்டாரவாரம் செய்வது இப்போதைய பாணியாகி இருக்கிறது. செயல்களில் வெற்றிகாண்பதற்கு தற்பெருமை தேவை என்பதாகச் சிலர் நம்புகின்றனர். அது ஒருவருடைய சுயமதிப்பை அதிகரிப்பதாக மற்றவர்கள் நினைக்கிறார்கள். டைம் பத்திரிகை இவ்வாறு குறிப்பிடுகிறது: “அடக்கத்தின் சிறப்பு இல்லாமல் போய்விடவில்லை என்றாலும், ஏறக்குறைய பழம்பாணியானதாகத் தோன்ற ஆரம்பித்துவிட்டது.” எழுத்தாளர் ஜோடி கேலின் குறிப்பிடுகிறார்: “கவலைக்குரியவிதத்தில், துணிந்து தற்பெருமையடிப்பது . . . நவீன பாணியாக இருக்கிறது. ஒரு சிநேகிதரிடம் அல்லது பழக்கமானவரிடம் கொண்டுள்ள உரையாடலில் ஒரு புதிய அம்சமும் சேர்ந்திருக்கிறது: தற்பெருமையடித்தல்.”
மாதிரியான மாடல்கள் தராதரத்தை அமைத்து வைத்திருக்கிறார்கள். முன்னாள் குத்துச்சண்டை வீரருடைய வார்த்தைகளை நீங்கள் கேட்டிருக்கக்கூடும்: “வரலாற்றில் இந்தச் சமயத்தில் நான் உலகின் மிகப் பெரிய மனிதனாக இருப்பது ஒரு விபத்து அல்ல.” பீட்டில்ஸ் என்னும் இசைக்குழுவைச் சேர்ந்த ஒரு அங்கத்தினரின் பின்வரும் கூற்றும் நன்கு அறியப்பட்டதே: “நாங்கள் இப்போது இயேசு கிறிஸ்துவைவிட அதிக பிரபலமானவர்கள்.” அப்படிப்பட்ட குறிப்புகளை, களங்கமின்றி சொல்லப்பட்டவையாக சிலர் கருதினாலும், பின்பற்றுவதற்குத் தகுதிவாய்ந்த சுய-முன்னேற்றுவிப்பின் மாதிரியான மாடல்களாக அவ்வாறு சொன்னவர்களை மற்றவர்கள் நோக்கினார்கள்.
தற்பெருமையடித்தல் பரவலாக இருப்பது இந்தக் கேள்வியை எழுப்புகிறது: ஒருவர் தன் சொந்த உடைமைகளையும் திறமைகளையும் பற்றி பெருமைபாராட்டுவது ஆரோக்கியமானதாக இருக்கிறதா? நிச்சயமாக, ஒருவருடைய சாதனைகளைக் குறித்து பெருமிதம் கொள்வதும், நெருங்கிய நண்பர்களிடமும் உறவினர்களிடமும் இவற்றைப் பகிர்ந்துகொள்வதும்கூட இயல்பானதாகவே இருக்கிறது. ஆனால், “உங்களிடம் ஒன்று இருக்கிறதென்றால், அதைக் குறித்து பெருமையடியுங்கள்,” என்ற கூற்றிற்கு ஏற்றார்போல் வாழ்கிறவர்களைப் பற்றியதென்ன? மேலுமாக, வெளிப்படையாக தற்பெருமை பேசாமல், தங்களுடைய பலங்களும் சாதனைகளும் மற்றவர்களுக்கு தெரியவருவதை மறைமுகமாக நிச்சயப்படுத்திக்கொள்ளுகிறவர்களைப் பற்றியதென்ன? சிலர் வலியுறுத்துவதுபோல், அப்படிப்பட்ட சுய-விளம்பரம், ஆரோக்கியமானதா, தேவையானதுகூடவா?
உறவுகளின் மீதான பாதிப்புகள்
மற்றவர்களுடைய தற்பெருமையடிப்பு உங்கள்மீது என்ன பாதிப்பைக் கொண்டிருக்கிறது என்பதை யோசித்துப்பாருங்கள். உதாரணமாக, பின்வரும் கூற்றுகளுக்கு நீங்கள் எவ்வாறு பிரதிபலிக்கிறீர்கள்?
“நான் எழுதியிருக்காத புத்தகங்கள், மற்ற மக்கள் எழுதியிருக்கும் புத்தகங்களைவிட சிறந்தவை.”—நன்கு அறியப்பட்ட நூலாசிரியர்.
“சிருஷ்டிப்பின் சமயத்தில் நான் இருந்திருந்தால், பிரபஞ்சம் சிறப்பாக இயங்குவதற்கு சில பயனுள்ள குறிப்புகளைக் கொடுத்திருப்பேன்.”—இடைக்கால அரசன்.
“கடவுள் ஒருவர் இருக்க முடியாது, ஏனென்றால், அப்படி ஒருவர் இருந்தால், நான் அவர் அல்ல என்று என்னால் நம்பாமல் இருக்க முடியாது.”—19-ம் நூற்றாண்டு தத்துவ அறிஞர்.
அவர்களுடைய குறிப்புகளால் நீங்கள் அவர்களிடமாக ஈர்க்கப்படுகிறீர்களா? அவர்களுடைய கூட்டுறவை நீங்கள் அனுபவித்துக் களிப்பீர்கள் என்று நினைக்கிறீர்களா? பெரும்பாலும் இல்லை. பொதுவாக, தற்பெருமையடித்தல்—மனமார செய்யப்பட்டாலோ விளையாட்டாகச் செய்யப்பட்டாலோகூட—மற்றவர்களைக் கடுப்பாக, கோபமாக, ஒருவேளை பொறாமையாகவும் உணர வைக்கிறது. சங்கீதக்காரனாகிய ஆசாவின் மீது அது இந்தப் பாதிப்பையே கொண்டிருந்தது; அவர் இவ்வாறு ஒப்புக்கொண்டார்: “[தற்பெருமைக்காரராகிய, NW] அவர்கள்மேல் பொறாமைகொண்டேன்.” (சங்கீதம் 73:3) நிச்சயமாக, நம்முடைய நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளின் கெட்ட உணர்வுகளுக்குக் காரணமாக இருக்க நம்மில் எவரும் விரும்புவதில்லை! ஒன்று கொரிந்தியர் 13:4 குறிப்பிடுகிறது: “அன்பு தன்னைப் புகழாது.” தெய்வீக அன்பும் மற்றவர்களுடைய உணர்வுகளைக் குறித்து உணர்வுள்ளவர்களாய் இருப்பதும், நமக்கு இருப்பதாகக் கருதும் திறமைகளையும் உடைமைகளையும் பற்றி வீண்பெருமையடிக்காமல் இருக்க நம்மை உந்துவிக்கும்.
ஒருவர் தன்னை அடக்கிக்கொண்டு அடக்கமாகப் பேசும்போது, அவர் தன்னைச் சுற்றியிருக்கும் மற்றவர்களை எளிதாகவும் தங்களைப் பற்றி நல்லபடி உணரவும் வைக்கிறார். இது ஒரு விலைமதிக்க முடியாத திறமை. பிரிட்டிஷ் அரசியல்மேதகையான செஸ்டர்ஃபீல்ட் பிரபு, தன் மகனுக்கு புத்திமதி சொல்லுகையில் ஒருவேளை இதையே மனதில் வைத்திருந்திருக்கலாம்: “உன்னால் முடிந்தால், மற்றவர்களைவிட ஞானவானாக இரு; ஆனால் அவ்வாறிருப்பதாக அவர்களிடம் சொல்லாதே.”
மக்கள் ஒரேவிதமான வரங்களைக் கொண்டில்லை. ஒருவருக்கு ஓரளவு எளிதாக இருக்கும் ஒன்று மற்றவரின் பலமாக இருப்பதில்லை. தனக்குத் திறமைகளிருக்கும் அம்சங்களில் திறமைகளைக் கொண்டிராதவர்களிடமாக ஒருவர் பரிவுணர்வுடன் நடந்துகொள்ளும்படி அன்பு அவரைத் தூண்டுவிக்கும். பெரும்பாலும், அந்த மற்ற நபர் வேறு அம்சங்களில் வரங்களளிக்கப்பட்டிருப்பார். அப்போஸ்தலன் பவுல் நமக்குச் சொன்னார்: “எனக்கு அருளப்பட்ட கிருபையினாலே நான் சொல்லுகிறதாவது; உங்களில் எவனானாலும் தன்னைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், அவனவனுக்குத் தேவன் பகிர்ந்த விசுவாச அளவின்படியே, தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ணவேண்டும்.”—ரோமர் 12:3.
பலவீனத்திலிருந்து தற்பெருமை எழும்புகிறது
வீண்பெருமையடிப்பவர்களின் மத்தியில் இருக்கும்போது, தாழ்வாக உணருவதன் காரணமாக சிலர் அவர்களைவிட்டு விலகிச்செல்லக்கூடும் என்றாலும், மற்றவர்கள் வித்தியாசமாகப் பிரதிபலிக்கின்றனர். தற்பெருமையடிப்பவர்கள் பாதுகாப்பற்றவர்களாக உணருகின்றனர் என்று அவர்கள் முடிவு செய்கின்றனர். தன் சொந்த பெருமையை பீத்திக்கொண்டிருக்கும் ஒருவர் நினைப்பதற்கு முரணாக மற்றவர்களின் நோக்குநிலையில் தன் மதிப்பை ஏன் குறைத்துக்கொள்ளக்கூடும் என்று எழுத்தாளர் ஃப்ராங்க் டிரிப்பெட் விளக்குகிறார்: “தற்பெருமையடித்தல், பொதுவாக சில கவலைக்குரிய சொந்த பலவீனங்களை உணர்த்துகின்றன என்று தன் உள்மனதில் ஒவ்வொருவரும் அறிந்திருக்கின்றனர்.” தற்பெருமை பேசுகிறவரின் முகமூடிக்குள்ளாக அநேகர் தெளிவாகக் காண்பதால், வீணான தற்புகழ்ச்சியிலிருந்து விலகியிருப்பது அதிக ஞானமானதாக இருக்கும் அல்லவா?
“ஆனால் அது உண்மை!”
இவ்வாறே சிலர் சுய மகிமைப்படுத்தலை நியாயப்படுத்த முயலுகின்றனர். குறிப்பிட்ட வழிகளில் அவர்கள் உண்மையிலேயே வரம்பெற்றவர்களாக உணருவதால், அவை இல்லாததுபோல் நடிப்பது மாய்மாலமானதாக இருக்கும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
ஆனால் அவர்களுடைய தற்பெருமை பேசுதல் உண்மையானதா? சுய-மதிப்பீடு தனிப்பட்ட கருத்துக்களுக்கேற்ப மாறுபடுவதாய் இருக்கிறது. நம்மிடத்தில் மேலோங்கி நிற்கும் பலமான பண்பாக நம்மில் நாம் காணும் ஒன்று மற்றவர்களுக்கு சாதாரணமானதாகத் தோன்றக்கூடும். ஒருவர் தன்னுடைய திறமையைக் குறித்து தம்பட்டமடித்தே ஆகவேண்டும் என்று உணருகிறார் என்ற உண்மை, அது விளம்பரமின்றி, தானாகத் தெரியக்கூடிய அளவிற்கு அவ்வளவு பலமான ஒன்று அல்ல என்றுங்கூட நினைக்க வைக்கிறது. பைபிள் பின்வருமாறு அறிவுரை கொடுக்கையில், தன்னையே ஏய்த்துக்கொள்ளும் மனித மனச்சாய்வை ஒத்துக்கொள்கிறது: “தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்.”—1 கொரிந்தியர் 10:12.
ஒரு குறிப்பிட்ட அம்சத்தில், ஒருவருக்கு வழக்கத்திற்கு மாறான தனித்திறமை இருந்தாலும்கூட, தற்பெருமை பேசுவதை இது நியாயப்படுத்துகிறதா? இல்லை, ஏனென்றால் தற்பெருமை பேசுவது மனிதரை மகிமைப்படுத்துகிறது, ஆனால் நமக்கிருக்கும் எந்தத் தனித்திறமைகளும் கடவுளிடமிருந்து வந்திருக்கின்றன. அவரே மகிமையைப் பெற வேண்டும். பிறப்பில் நாம் பெற்றுக்கொண்ட ஏதோவொன்றிற்கான மதிப்பை நாம் ஏன் பெற வேண்டும்? (1 கொரிந்தியர் 4:7) மேலும், நமக்கு பலமான குணங்கள் இருப்பதுபோலவே, பலவீனங்களும் இருக்கின்றன. நம்முடைய குற்றங்கள், குறைகளிடமாகவும் கவனத்தை ஈர்க்கவேண்டும் என்பதை நேர்மை தேவைப்படுத்துகிறதா? தற்பெருமை பேசும் ஒருசிலரே அவ்வாறு நினைப்பதாகத் தோன்றுகிறது. அரசனாகிய ஏரோது அகிரிப்பா I உண்மையிலேயே திறமையான ஒரு பேச்சாளராக இருந்திருக்கக்கூடும். இருந்தாலும் அவருடைய அடக்கமற்ற தன்மை, மிக வருத்தகரமான ஒரு மரணத்திற்கு வழிநடத்தியது. அநேக மனிதருக்கு இருப்பதைப் போலவே கடவுளுக்கும் வீண்பெருமை எவ்வளவு வெறுக்கத்தக்கதாக இருக்கிறது என்று அந்தக் கோரமான சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.—அப்போஸ்தலர் 12:21-23.
பொதுவாக தனித்திறமைகளும் பலங்களும் தேவையற்ற சுய விளம்பரமின்றி அறியப்பட்டுவிடும். ஒருவருடைய குணங்களை அல்லது சாதனைகளை மற்றவர்கள் கண்டுணர்ந்து பாராட்டும்போது, அதைப் பெறுபவர் மீது அதிக மதிப்பைப் பிரதிபலிக்கிறது. நீதிமொழிகள் 27:2 ஞானமாகச் சொல்லுகிறது: “உன் வாய் அல்ல, புறத்தியானே உன்னைப் புகழட்டும்; உன் உதடு அல்ல, அந்நியனே உன்னைப் புகழட்டும்.”
சாதனைக்குத் தேவையா?
போட்டிமிக்க இன்றைய சமுதாயத்தில் காரியங்களில் சாதனை அடைய சுய முன்னேற்றுவிப்பு தேவை என்று சிலர் உறுதியாக நம்புகிறார்கள். அவர்கள் தங்களுடைய பலங்களைக் குறித்துப் பேசி, விளம்பரப்படுத்தாவிட்டால், அவை கவனிக்கப்படாமல், பாராட்டப்படாமல் விட்டுவிடப்படும் என்று கவலைப்படுகிறார்கள். வோக் பத்திரிகையிலுள்ள இந்தக் குறிப்பு அவர்களுடைய அக்கறையை எடுத்துக்காண்பிக்கும் ஓர் உதாரணமாகும்: “அடக்கமானது ஒரு நற்பண்பு என்று ஒருகாலத்தில் நமக்குப் போதிக்கப்பட்டிருக்க, இப்போது அவ்வாறு சொல்லாமல் இருத்தல் ஒரு முட்டுக்கட்டையாக இருக்கலாம் என்று நாம் கற்றுக்கொள்கிறோம்.”
உலகத்தின் தராதரங்களுக்கேற்ப முன்னேற்றமடைய விரும்புகிறவர்களுக்கு இந்த அக்கறை நியாயமான ஒன்றாகத் தோன்றக்கூடும். ஆனால் கிறிஸ்தவனுடைய நிலைமை வித்தியாசப்பட்டதாக இருக்கிறது. பெருமை உள்ளவர்களாக அல்ல, மனத்தாழ்மை உள்ளவர்களாக இருப்பவர்களையே கடவுள் கவனிக்கிறார் என்றும் அவர்களுடைய திறமைகளைப் பயன்படுத்துவதையே தெரிந்துகொள்கிறார் என்றும் அவன் அறிந்திருக்கிறான். ஆகவே, ஒரு கிறிஸ்தவன் சுயநலமான போக்குமுறைகளை நாடுவதற்கு எந்தத் தேவையுமில்லை. மட்டுமீறிய தன்னம்பிக்கை உடைய ஒருவர், பிடித்த பிடியை வலியுறுத்துகிறவராகவோ சூழ்ச்சி திறமுடையவராகவோ இருப்பதன்மூலம் தற்காலிகமான பெருமையைத் தேடிக்கொள்ளக்கூடும். இருந்தாலும் காலப்போக்கில் அவர் வெளிப்படுத்தப்பட்டு, தாழ்வுபடுத்தப்பட்டு, தன்மானம் கெடுக்கப்படும்படிகூட செய்யப்படுகிறார். அது இயேசு கிறிஸ்து குறிப்பிட்டவிதமாக இருக்கிறது: “தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.”—மத்தேயு 23:12; நீதிமொழிகள் 8:13; லூக்கா 9:48.
தன்னடக்கத்தின் பயன்கள்
ரால்ஃப் உவால்டோ எமர்ஸன் எழுதினார்: “நான் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும் ஏதோவொரு விதத்தில் எனக்கு மேம்பட்டவராக இருக்கிறார். அதில், நான் அவரிடத்தில் கற்றுக்கொள்கிறேன்.” அவருடைய குறிப்பு, அப்போஸ்தலன் பவுல் கொடுத்த கடவுளால் ஏவப்பட்ட புத்திமதிக்கு இசைவானதாக இருக்கிறது; கிறிஸ்தவர்கள் “ஒன்றையும் வாதினாலாவது வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ண” வேண்டும் என்று அது சொல்லுகிறது. (பிலிப்பியர் 2:3) இந்த அடக்கமான நோக்குநிலை ஒருவரை மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் நிலையில் வைக்கிறது.
ஆகவே உங்களுடைய பலம் உங்களுடைய பலவீனம் ஆகிவிடாதபடிக்குக் கவனமாக இருங்கள். தற்பெருமையினால் உங்களுடைய திறமைகள் மற்றும் சாதனைகளின் மதிப்பைக் குலைத்துவிடாதீர்கள். உங்களுடைய நற்பண்புகளுடன் தன்னடக்கம் என்ற பண்பையும் சேர்த்துக்கொள்ளுங்கள். இதுதானே மற்றவர்களுடைய பார்வையில் ஒருவருடைய மதிப்பை உண்மையில் உயர்த்துகிறது. ஒருவர் உடன் மனிதர்களோடு சிறந்த உறவுகளை அனுபவிக்கவும் யெகோவா தேவனின் அங்கீகாரத்தைக் கொண்டுவரவும் இதுவே உதவுகிறது.—மீகா 6:8; 2 கொரிந்தியர் 10:18.