ராஜ்ய பிரஸ்தாபிகளின் அறிக்கை
“பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்”
முதல் நூற்றாண்டில், எபேசுவிலிருந்த “மாயவித்தை” பக்தர்களின் ஒரு தொகுதியினர், மாயமந்திரம் சம்பந்தமான தங்கள் புத்தகங்களை வெளிப்படையாக எரித்துவிடுவதன்மூலம் கிறிஸ்தவ செய்திக்குப் பிரதிபலித்தனர். (அப்போஸ்தலர் 19:19) இந்தப் புத்தகங்களின் விலையாகக் கணக்கிடப்பட்ட தொகை 50,000 வெள்ளிக்காசாக இருந்தது. பண்டைய ரோம வெள்ளி நாணயமாக இருந்த பணத்தை பைபிள் பதிவு குறிப்பிட்டுப் பேசியது என்றால், அதன் தொகை குறைந்தது 37,000 டாலராக இருந்திருக்கும்!
மாயமந்திரத்துடன் தொடர்புடைய பிரசுரங்களை ஒருகாலத்தில் கைவசம் வைத்திருந்து, ஆனால் பண்டைய எபேசியரை ஒத்த உறுதியான தீர்மானத்தை வெளிக்காட்டிய பலர் இன்றும் இருக்கின்றனர். கனடாவிலிருந்து வரும் கீழ்க்காணும் ஒரு அனுபவத்தைக் கவனியுங்கள்.
சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னர், யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் வீட்டுக்குவீடு சென்று பிரசங்கித்துக்கொண்டு இருக்கையில், ஒரு வீட்டில் நோரா என்ற ஒரு பெண் அவர்களை சொல்லர்த்தமாகவே வீட்டிற்குள் இழுத்தாள். பல வருடங்களான ஆவிக்குரிய தேடுதலில், நோரா நூற்றுக்கணக்கான மதம் சார்ந்த மற்றும் ஆவியுலகம் சார்ந்த புத்தகங்களைச் சேகரித்து வைத்திருந்தாள்; ஆனால் மரித்தவர்களுக்கான நம்பிக்கையைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள அவள் விரும்பினாள். மரித்த அன்பானவர்களுக்கு என்ன நம்பிக்கை? என்ற துண்டுப்பிரதியை அந்தச் சாட்சி அவளுக்குக் கொடுத்தார்கள். நோராவின் கேள்விகள் பதிலளிக்கப்பட்டன; அவள் காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளுக்கு சந்தாக்களை ஏற்றுக்கொண்டாள்.
பின்னர் அவள் குடிபெயர்ந்து சென்றாள்; யெகோவாவின் சாட்சிகளுடன் தொடர்பு இல்லாமல் போய்விட்டது. என்றபோதிலும், அவள் தொடர்ந்து தன் புதிய விலாசத்திற்கு அந்தப் பத்திரிகைகளைப் பெற்றுக்கொண்டிருந்தாள். பத்திரிகைகளில் குறிப்பிடப்பட்டிருந்த பைபிள் அடிப்படையிலான சில பிரசுரங்களையும் அவள் தருவித்துக்கொண்டாள். சில காலத்திற்குப்பின், யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் அவருடைய வீட்டிற்கு வந்தார். கேள்விகளுக்கு பதிலளிக்கும்போது, அந்தச் சாட்சி நேரடியாக பைபிளைப் பயன்படுத்தியதால் கவரப்பட்டு, நோரா அவர்களை வரவேற்று, மேலுமான கலந்தாலோசிப்புகளுக்கு திரும்பவும் வரும்படி அழைப்பு விடுத்தாள்.
என்றாலும், அந்தச் சாட்சிக்கு மீண்டும் நோராவுடன் தொடர்புகொள்வது கஷ்டமாக இருந்தது. ஒரு நாளின் வெவ்வேறு சமயங்களிலும், வாரத்தில் வித்தியாசமான நேரங்களிலும் திரும்பவும் திரும்பவும் சந்திக்க முயன்றதெல்லாம் வீணாகவே போயிற்று. இருந்தாலும், காலப்போக்கில், விடாமுயற்சி பலனளித்தது; அவர்கள் நல்ல பலன்களை அறுவடை செய்தார்கள். ஒரு ஒழுங்கான பைபிள் படிப்பு தொடங்கப்பட்டது; நோராவின் வற்புறுத்தலால், பெரும்பாலும் ஒரு வாரத்தில் மூன்றுமுறைகள் படிப்பு நடத்தப்பட்டது. அவள் கற்றுக்கொண்டிருந்த காரியங்கள் தன் நண்பர்களிடமும் குடும்ப அங்கத்தினர்களிடமும் அதைப்பற்றி பேசும்படி தூண்டுவித்தன; அதன் பலனாக அவர்களில் மூவர் யெகோவாவின் சாட்சிகளைத் தங்களுடன் பைபிள் படிப்புகளைக் கொண்டிருக்கும்படி வேண்டிக்கொண்டார்கள்.
அநேக பொய் மதங்கள் இருக்கின்றன, அநேக பொய் தீர்க்கதரிசிகள் இருக்கிறார்கள் என்றும், ஆனால் ஒரு பாதை மட்டுமே ஜீவனுக்கு வழிநடத்துகிறது என்றும் நோரா தன் படிப்பின்மூலமாக மதித்துணரத் தொடங்கினாள். அவள் பல வருடங்களாக தன் கேள்விகளின் பதில்களுக்காக, பொய் மதங்களை நோக்கிக்கொண்டிருந்தாள்; ஆனால் பேய்களைக் குறித்து பைபிள் என்ன சொல்கிறது என்பதைக் கற்றுக்கொண்டபின், அப்போஸ்தலர் 19:19-ல் சொல்லப்பட்ட பண்டைய எபேசியர்களைப் போலவே அவள் செயல்பட்டாள். அவள் தன்னுடைய நூலகத்தைச் சுத்தம் செய்தாள்; பல நாட்களடங்கிய காலப்பகுதியில், மாயமந்திரம் மற்றும் பொய் மதப் போதனைகள் சம்பந்தமான ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை அவள் அழித்துவிட்டாள். அவள் அழித்துப்போட்ட பிரசுரங்களுக்குள், $800-க்கும் அதிகமான விலையுள்ள நான்கு புத்தகங்களடங்கிய ஒரு தொகுதியும் இருந்தது!
தெளிவாகவே, நோராவின் செயல்களால் கோபப்படுத்தப்பட்டு, சுமார் இரண்டு வாரங்களுக்கு அந்தப் பேய்கள் அவளை அலைக்கழித்தன. என்றபோதிலும், தன்னுடைய பைபிள் படிப்பைத் தொடர்வதிலிருந்தோ யெகோவாவின் நவீன-நாளைய அமைப்புடன் கூட்டுறவு கொண்டிருப்பதிலிருந்தோ இந்தப் பொல்லாத ஆவிகளால் அவளைத் திருப்ப முடியவில்லை.
இப்படிப்பட்ட அனுபவங்கள் பின்வரும் பைபிள் வார்த்தைகளின் உண்மையை நன்கு சித்தரிக்கின்றன: “தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்.”—யாக்கோபு 4:7.