உங்களுடைய பரிசுத்த சேவையை உயர்வாய் மதியுங்கள்
ஒரு பயனுள்ள இலக்கை அடைவதற்கு, நாம் தியாகங்களைச் செய்ய தயாராக இருக்கவேண்டும். ஒரு மருத்துவராவதற்கு, பல வருட படிப்பும், மன உறுதியும், பணமும் தேவைப்படுகின்றன. வெற்றிகரமான ஒரு உடற்பயிற்சியாளர் பரிபூரணத்தை நாடும் தளராத முயற்சியில், படிப்படியாக அதிக கடுமையான வழக்கமுறைகளைப் பயிற்றுவித்துக்கொள்வதில் தன்னுடைய இளமையின் பெரும்பாகத்தைச் செலவிட்டு வருகிறார். அதேவிதமாக, பியானோ வாசிப்பதில் திறம்பட்ட ஒருவர், பல வருடங்களாக ஈடுபாட்டுடன் கொண்டிருந்த பயிற்சியை நினைத்துப்பார்க்க முடியும்.
என்றபோதிலும், செய்யக்கூடிய எந்தத் தியாகத்திற்கும் ஈடுசெய்ய முடியாத அளவிற்கு பலன்களைக் கொண்டுவரும் இலக்கு ஒன்று இருக்கிறது. அது என்ன? அது என்னவென்றால், மகா உன்னதராகிய யெகோவா தேவனின் ஒரு ஊழியராக இருக்கும் சிலாக்கியமாகும். நேரம், பணம், அல்லது சக்தி என்ற முறையில் நாம் எவ்வளவு தியாகங்களைச் செய்தாலும், நம்முடைய சிருஷ்டிகருக்குப் பரிசுத்த சேவை செய்யும் சிலாக்கியம் ஒப்பிடப்பட முடியாத பலன்களைக் கொண்டுவருகிறது. அப்போஸ்தலன் பவுலின் வார்த்தைகள் உண்மையாக இருக்கின்றன: “தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது.” (1 தீமோத்தேயு 4:8) அது எவ்வாறு உண்மையாக இருக்கிறது என்று நாம் காண்போம்.
நாம் கடவுளைப் பற்றி முதன்முதலாகக் கற்றுக்கொள்ளும்போது
நற்செய்திக்குச் சாதகமாகப் பிரதிபலித்து, பைபிளைப் படிக்கத் தொடங்குகிறவர்களில் அநேகர், தங்களுடைய வாழ்க்கையில் எந்தளவிற்கு மாற்றங்கள் ஏற்படும் என்பதைப் பெரும்பாலும் உணருவதில்லை. முதலாவதாக, கடவுளுக்கு அவமரியாதையைக் கொண்டுவருவதாக அந்தப் புதிய பைபிள் மாணாக்கர் இப்போது உணரக்கூடிய நாட்டங்களில் இனிமேலும் ஒத்துழைக்க மறுப்பதைப் புரிந்துகொள்ள முடியாத சில நண்பர்களை அவர் இழக்கக்கூடும். (1 பேதுரு 4:4) சிலர் குடும்பத்தில் எதிர்ப்பை அனுபவிக்கக்கூடும்; அவர்களுக்குப் பிரியமானவர்கள் யெகோவாவுக்கு விருப்பமின்மையையும், ஒரு வெறுப்பையும்கூட வெளிக்காட்டுவதால் வருத்தமடையவும்கூடும். (மத்தேயு 10:36) அது ஒரு கஷ்டமான தியாகமாக இருக்கலாம்.
வேலையிலோ பள்ளியிலோ, தியாகத்தைச் செய்ய வேண்டியும் இருக்கும். காலப்போக்கில் அந்தப் புதிய பைபிள் மாணாக்கர், உலகப்பிரகாரமான விருந்துகளிலும் மற்ற கொண்டாட்டங்களிலும் கலந்துகொள்வதை நிறுத்திவிடுவார். தன்னுடன் வேலைசெய்பவர்கள் அல்லது பள்ளி சகாக்களின் அசுத்தமான பேச்சுக்களை அவர் இனிமேல் கேட்கவும் மாட்டார்; அவர்களுடன் அசிங்கமான வேடிக்கைப் பேச்சுக்களைப் பரிமாறிக்கொள்ளவும் மாட்டார். மாறாக, எபேசியர் 5:3, 4-ல் காணப்படும் புத்திமதியை நடைமுறையில் அப்பியாசிக்க முயலுவார்: “பரிசுத்தவான்களுக்கு ஏற்றபடி, வேசித்தனமும், மற்றெந்த அசுத்தமும், பொருளாசையும் ஆகிய இவைகளின் பேர்முதலாய் உங்களுக்குள்ளே சொல்லப்படவுங்கூடாது. அப்படியே வம்பும், புத்தியீனமான பேச்சும், பரியாசமும் தகாதவைகள்; ஸ்தோத்திரஞ்செய்தலே தகும்.”
அப்படிப்பட்ட மாற்றங்கள் அந்த பைபிள் மாணாக்கரை புறம்பானவராக வைக்கக்கூடும். குறிப்பாக இன்னும் பள்ளியில் இருக்கும் ஒரு இளைஞருக்கு அது கஷ்டமாக இருக்கலாம். ஒரு பண்டிகை நாளைத் தொடர்ந்து மற்றொன்றை எதிர்ப்படுதல், பரிணாமம் போன்ற கடவுளுக்கு எதிரான போதனைகள், கும்பலோடு சேர்ந்து செல்லவேண்டும் என்பதற்கான நிலையான அழுத்தம் ஆகிய இவை அனைத்தின் மத்தியிலும், இளம் கிறிஸ்தவர்கள் விசுவாசத்திற்காக நிலையாக போராட வேண்டும். கடவுளுடைய வழிகளைப் பின்பற்றுவது அவர்களை வித்தியாசப்பட்டவர்களாக்கி, வகுப்புச் சகாக்கள் மற்றும் ஆசிரியர்கள் பரியாசிப்பதில் விளைவடையக்கூடும். உணர்ச்சிவசப்படக் கூடிய பருவ வயதில் இதை ஏற்றுக்கொள்வது குறிப்பாகக் கடினமாக இருக்கிறது; ஆனால் செய்யப்படும் அந்தத் தியாகம் கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெறுவதற்கு தகுதியானதாக இருக்கிறது!
அவை நிஜமாகவே தியாகங்களா?
தியாகங்களாக முதலில் தோன்றக்கூடிய மற்ற காரியங்களும் ஆசீர்வாதங்களாக மாறிவிடுகின்றன. சிலர் புகையிலை பழக்கத்தை விட்டொழிக்க வேண்டியிருக்கும். (2 கொரிந்தியர் 7:1) இது ஒரு போராட்டமாக இருக்கலாம்; ஆனால் கடைசியாக அந்த வெறுக்கத்தக்க தீயப்பழக்கம் மேற்கொள்ளப்படுகையில் என்னே ஓர் ஆசீர்வாதம்! மற்ற போதைப்பொருட்கள் அல்லது மதுபான பழக்கங்களுக்கு அடிமையாகி இருத்தலை மேற்கொள்வதைக் குறித்தும் அவ்வாறே சொல்லப்படலாம். அப்பேர்ப்பட்ட அழிவுக்குரிய பழக்கங்களின்றி வாழ்க்கை எவ்வளவு மேம்பட்டதாக இருக்கிறது! மற்றவர்கள் தங்கள் திருமண விவகாரங்களைச் சரிப்படுத்த வேண்டியுள்ளது. திருமணத்தின் பந்தமின்றி சேர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் திருமணம் செய்யவேண்டும் அல்லது சேர்ந்து வாழ்வதை நிறுத்திவிடவேண்டும். (எபிரெயர் 13:4) பல மனைவிகளுடன் வாழ்கிறவர்கள் தங்கள் இளவயதின் மனைவியை மட்டுமே வைத்திருக்கவேண்டும். (நீதிமொழிகள் 5:18) அப்படிப்பட்ட சரிப்படுத்துதல்கள் தியாகத்தை உட்படுத்துகின்றன; ஆனால் அவை வீட்டில் சமாதானத்தைக் கொண்டுவருகின்றன.
பலன்களைக் குறித்து சிந்தியுங்கள்
நிச்சயமாக, யெகோவாவின் சட்டங்களுக்குக் கீழ்ப்படியும் எவரும் உண்மையிலேயே பயனடைகிறார். அந்த பைபிள் மாணாக்கர், வாழ்க்கையில் முதல் முறையாக தன்னுடைய சிருஷ்டிகரை, யெகோவா என்ற அவருடைய பெயரால் அழைக்கத் தொடங்குகிறார். (சங்கீதம் 83:17) அவர் மனிதகுலத்திற்காகச் செய்திருக்கும், இன்னும் செய்யப்போகும் அதிசயிக்கத்தக்க காரியங்களைப் பற்றி கற்றுக்கொள்கையில் அந்த மாணாக்கர் யெகோவாவை அன்புகூர ஆரம்பிக்கிறார். மரித்தோரைப் பற்றிய பயம் பொதுவானதாக இருக்கும் நாடுகளில், இந்த மூடநம்பிக்கைச் சார்ந்த பயம் அவருக்கு இருப்பதில்லை; ஏனென்றால் மரித்தோர் நித்திரையிலிருந்து ஒரு உயிர்த்தெழுதலுக்காகக் காத்திருக்கிறார்கள் என்று அவர் அறிந்திருக்கிறார். (பிரசங்கி 9:5, 10) மேலும் யெகோவா என்றென்றைக்குமாக மக்களை நரகத்தில் வாதிப்பதில்லை என்பதை அறிவதில் என்னே ஓர் நிம்மதி! ஆம், நிஜமாக சத்தியம் அவரை விடுதலையாக்குகிறது.—யோவான் 8:32.
அந்த மாணாக்கர் தன்னுடைய வாழ்க்கையை அதிகதிகமாக யெகோவாவின் தராதரங்களுக்கு இசைவானதாக ஆக்குகையில், அவர் சுத்தமான மனச்சாட்சியையும் தன்மதிப்பையும் பெறுகிறார். ஒரு உண்மை கிறிஸ்தவனாக வாழ கற்றுக்கொள்வது, தன்னுடைய குடும்பத்தைச் சிறந்த முறையில் பராமரிக்க உதவிசெய்கிறது; இது அதிக திருப்தியையும் சந்தோஷத்தையும் கொண்டுவருகிறது. மேலும், ராஜ்ய மன்றங்களில் கூட்டங்களுக்குச் செல்வது இன்னொரு காரியம். என்னே ஒரு இன்பகரமான அனுபவம்! கடவுளுடைய மக்களை அடையாளங்காட்டவேண்டும் என்று பைபிள் சொல்லுகிற கனிவான அன்பை நிஜமாகவே நடைமுறைப்படுத்தும் மக்கள் இங்கு இருக்கிறார்கள். (சங்கீதம் 133:1; யோவான் 13:35) இவர்கள் “தேவனுடைய மகத்துவங்களை” பேசுவதால் அவர்களுடைய பேச்சு சுத்தமானதாகவும் கட்டியெழுப்புவதாகவும் இருக்கிறது. (அப்போஸ்தலர் 2:11) ஆம், ‘சகோதரர்களின் முழு கூட்டுறவோடும்’ தொடர்பு கொள்வது மகிழ்ச்சிக்குரிய ஒரு காரணமாக இருக்கிறது. (1 பேதுரு 2:17) “மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளு”வதற்கு அப்படிப்பட்ட நல்ல கூட்டுறவு அந்த பைபிள் மாணாக்கருக்கு உதவுகிறது.—எபேசியர் 4:24.
ஒப்புக்கொடுக்கும் படி
ஒருவர் அறிவில் முன்னேறிக்கொண்டிருக்கையில், முடிவாக அவர் யெகோவாவுக்காகத் தன்னுடைய வாழ்க்கையை ஒப்புக்கொடுக்கவும் இந்த ஒப்புக்கொடுத்தலை தண்ணீர் முழுக்காட்டுதல் மூலமாக வெளிக்காட்டும்படியும் அவருக்கான அன்பால் தூண்டப்படுகிறார். (மத்தேயு 28:19, 20) இயேசுவின் அறிவுரை என்னவென்றால், இந்தப் படியை எடுக்கும் முன்னர், அவருடைய சீஷர்கள் செல்லுஞ்செலவைக் கணக்குப் பார்க்கவேண்டும் என்பதாகும். (லூக்கா 14:28, 30) ஒரு ஒப்புக்கொடுக்கப்பட்ட கிறிஸ்தவன், யெகோவாவின் சித்தத்தை முதலில் வைத்து, மாம்சப்பிரகாரமான காரியங்களை வெறுத்தொதுக்குவார் என்பதை நினைவில் வையுங்கள். ‘மாம்சத்தின் கிரியைகளை’ விட்டுவிட்டு, ‘ஆவியின் கனிகளை’ வளர்ப்பதற்கு அவர் கடுமையாக உழைக்கிறார். (கலாத்தியர் 5:19-24) ரோமர் 12:2-ல் காணப்படும் அறிவுரை இப்போது அவருடைய வாழ்க்கையில் முழுமையான அர்த்தமுடையதாக இருக்கிறது: “நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.” இவ்வாறு, ஒரு ஒப்புக்கொடுக்கப்பட்ட கிறிஸ்தவன், நோக்கமுள்ள ஒரு புதுப்பிக்கப்பட்ட உணர்வுடன் தன் வாழ்கையை வாழ்கிறார்.
என்றாலும், அவர் எதைப் பெறுகிறார் என்பதைக் கவனியுங்கள். ஒரு காரியம் என்னவென்றால், பிரபஞ்சத்தின் சிருஷ்டிகருடன் அவர் இப்போது ஒரு தனிப்பட்ட உறவில் இருக்கிறார். கடவுளுக்கு சிநேகிதராக இருக்கும் நோக்கிலிருந்து அவர் நீதியுள்ளவராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்! (யாக்கோபு 2:23) மிக ஆழமான அர்த்தத்துடன், அவர் கடவுளை “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே” என்று அழைக்கிறார். (மத்தேயு 6:9) புதிதாக ஒப்புக்கொடுத்திருக்கிறவருக்கு மற்றொரு ஆசீர்வாதம் என்னவென்றால், வாழ்க்கைக்கு உண்மையிலேயே ஒரு நோக்கம் இருக்கிறது என்பதை அறிவதும் அவர் அந்த நோக்கத்திற்கு இசைவாக தன் வாழ்க்கையை வாழ்கிறார் என்பதுமாகும். (பிரசங்கி 12:13) இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றி, உண்மையாக நிலைத்திருப்பதன்மூலம் பிசாசை ஒரு பொய்யனாக அவர் நிரூபிக்கலாம். அது யெகோவாவின் இருதயத்திற்கு என்னே ஓர் சந்தோஷத்தைக் கொண்டுவருகிறது!—நீதிமொழிகள் 27:11.
நிச்சயமாகவே, ஒரு கிறிஸ்தவன் உண்மையின் பாதையில் சகித்து நிலைத்திருக்கையில் செய்வதற்கு இன்னுமதிகமான தியாகங்கள் இருக்கின்றன. கடவுளுடைய வார்த்தையின் தனிப்பட்ட மற்றும் சபைசார்ந்த அர்த்தமுள்ள படிப்பில் ஈடுபடுவதற்கு நேரம் தேவைப்படுகிறது. (சங்கீதம் 1:1-3; எபிரெயர் 10:25) வெளி ஊழியத்திற்கான சமயம் மற்ற காரியங்களிலிருந்து வாங்கப்படவேண்டும். (எபேசியர் 5:16, NW) யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களுக்குச் செல்வதற்கும், அவர்களுடைய மாநாடுகளுக்குப் பயணம் செய்வதற்கும் நேரமும் முயற்சியும் தேவைப்படுகின்றன. இராஜ்ய மன்றத்திற்கும் உலகளாவிய பிரசங்க வேலைக்கும் பொருளாதார உதவி செய்வது சுயதியாகத்தை உட்படுத்தக்கூடும். என்றபோதிலும், லட்சக்கணக்கான கிறிஸ்தவர்கள் சான்றளிக்கக்கூடியபடி, அப்படிப்பட்ட காரியங்களில் முழு இருதயத்தோடு கலந்துகொள்வது மகிழ்ச்சியைக் கொண்டுவருகிறது. இயேசு சொன்னார்: “வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுக்கிறதில் அதிக மகிழ்ச்சி இருக்கிறது.”—அப்போஸ்தலர் 20:35, NW.
யெகோவாவின் வேலையை ஆதரிப்பதன் பலன்கள் அதற்காகச் செய்யப்படும் தியாகங்களைவிட மிகவும் மேம்பட்டு நிற்கின்றன. நாம் முதிர்ச்சியடைந்து வருகையில், நம்முடைய ஊழியம் அதிக பலன்தருவதாகவும் சந்தோஷமுள்ளதாகவும் ஆகிறது. உண்மையில், யாராவது ஒருவருக்கு பைபிள் சத்தியத்தைப் போதித்து, அவர் யெகோவாவின் வணக்கத்தை ஏற்றுக்கொள்வதைப் பார்ப்பதைவிட அதிக திருப்தியை வேறு எதுவும் கொண்டுவர முடியாது. மேலும் அந்தப் புதிய வணக்கத்தார் ஒரு குடும்ப அங்கத்தினராக இருந்தால், ஒருவேளை ‘யெகோவாவுடைய சிட்சையிலும் போதனையிலும்’ பயிற்றுவிக்கப்பட்ட பிள்ளையாக இருந்தால், அது ஒரு விசேஷித்த சந்தோஷத்தைக் கொண்டுவருகிறது. (எபேசியர் 6:4) கடவுளுடைய ‘உடன் வேலையாட்களாக’ இருப்பதற்கான நம்முடைய முயற்சிகளில் அவருடைய செழுமையான ஆசீர்வாதங்களை நாம் காண்கிறோம்.—1 கொரிந்தியர் 3:9.
உண்மையுள்ள சேவைக்கான மற்ற பலன்கள்
இந்தக் காரிய ஒழுங்குமுறை நிலைக்கும்வரையாக நமக்கு மற்ற பிரச்சினைகள் இருக்கும் என்பது உண்மைதான். பிசாசின் காலம் குறுகிக்கொண்டு செல்கையில், பிரச்சினைகள் அதிக கடினமாகும் சாத்தியம் இருக்கிறது. நாம் துன்புறுத்தலை அனுபவிக்கவோ சோதனையைச் சகிக்கவோ வேண்டியதாக இருக்கக்கூடும். ஆனால் கடவுள் நம்முடன் இருக்கிறார் என்ற அறிவு நமக்கு ஆறுதலளித்து, சகித்திருப்பதற்கான பலத்தை நமக்குத் தருகிறது. (1 கொரிந்தியர் 10:13; 2 தீமோத்தேயு 3:12) உடன் கிறிஸ்தவர்களில் சிலர், கடுமையாக நடத்தப்பட்டிருப்பதை பல வருடங்களுக்குச் சகித்திருக்கிறார்கள்; ஆனால் அவர்கள் கடவுளுக்கான தங்களுடைய அன்பின் காரணமாக விடாமல் நிலைத்திருக்கிறார்கள். பல்வகையான பிரச்சினைகளை வெற்றிகரமாக சகித்திருப்பவர்கள், அப்போஸ்தலர் அடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டபோது உணர்ந்தவிதமாகவே உணருகின்றனர். அப்போஸ்தலர் 5:41 இவ்வாறு குறிப்பிடுகிறது: ‘அவருடைய நாமத்துக்காகத் தாங்கள் அவமானமடைவதற்குப் பாத்திரராக எண்ணப்பட்டபடியினால், சந்தோஷமாய் ஆலோசனைச் சங்கத்தைவிட்டுப் புறப்பட்டுப் போனார்கள்.’
இப்போதும்கூட சகித்து நிலைத்திருப்பதற்கான பலன், செய்யப்படும் எந்தத் தியாகத்தையும்விட மேம்பட்டு நிற்கிறது. ஆனால் தேவபக்தியானது “இந்த ஜீவனுக்கு” மட்டுமல்லாமல் “பின்வரும் ஜீவனுக்கும்” ‘வாக்குத்தத்தமுள்ளது’ என்பதை நினைவில் வையுங்கள். (1 தீமோத்தேயு 4:8) சகித்து நிலைத்திருக்கும் ஒருவரின் எதிர்நோக்குகள் எவ்வளவு மகத்தானவை! நீங்கள் உண்மையுள்ளவர்களாக இருந்தால், இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவைக் குறிக்கும் மகா உபத்திரவத்தை நீங்கள் தப்பிப் பிழைப்பீர்கள். அல்லது திருப்பத்தைக் குறிக்கும் அந்தச் சம்பவத்திற்கு முன்னரே நீங்கள் மரித்துவிட்டால், அதைப் பின்தொடரும் புதிய உலகிற்குள் நீங்கள் உயிர்த்தெழுப்பப்படுவீர்கள். (தானியேல் 12:1; யோவான் 11:23-25) பின்வருமாறு உங்களால் சொல்ல முடியும் சமயத்தில் நீங்கள் கொண்டிருக்கப்போகும் களிகூரும் உணர்ச்சியை யோசித்துப் பாருங்கள்: “யெகோவாவின் உதவியால் என்னால் முடிந்தது!” “சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல்,” ‘யெகோவாவை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்’ பூமியில் ஒரு பாகத்தைச் சுதந்தரிப்பது எவ்வளவு கிளர்ச்சியூட்டுவதாக இருக்கும்.—ஏசாயா 11:9.
ஆம், கடவுளைச் சேவிப்பது தியாகத்தை உட்படுத்துகிறது. ஆனால் பலன்களுடன் ஒப்பிடுகையில், செய்யப்படும் தியாகம் மிகக் குறைவானதே. (பிலிப்பியர் 3:7, 8, 11) கடவுள் தம்முடைய ஊழியர்களுக்காக இப்போது செய்யும் எல்லாவற்றையும் எதிர்காலத்தில் செய்யப்போகும் எல்லாவற்றையும் கருதுகையில், நாமும் சங்கீதக்காரனுடைய வார்த்தையை எதிரொலிக்கிறோம்: “கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன்”?—சங்கீதம் 116:12.