தனிமை உங்கள் வாழ்க்கையை நிலைகுலைவிக்க அனுமதிக்காதீர்கள்
தனிமை, வயதானவர்கள் மற்றும் இளைஞரின் வாழ்க்கையையும் ஒருங்கே நிலைகுலையச் செய்யலாம். ரெட்புக் பத்திரிகையில் எழுத்தாளர் ஜூடித் வியார்ஸ்ட் சொல்கிறார்: “தனிமையானது இருதயத்தில் பாரமாக அழுத்தும் கல்லைப் போல கிடக்கிறது. . . . தனிமை நம்மை வெறுமையாகவும் நம்பிக்கையற்றவர்களாகவும் விட்டுச்செல்கிறது. தனிமை நம்மை தாயில்லா பிள்ளை போல, வழிதப்பிச் சென்ற ஆட்டைப் போல, அவ்வளவு பிரமாண்டமான அக்கறையற்ற உலகில் அவ்வளவு சிறுமையாகவும் கைவிடப்பட்டவர்களாகவும் உணரச் செய்கிறது.”—செப்டம்பர் 1991.
நண்பர்களிடமிருந்து பிரிவு, பழக்கமற்ற சூழல்கள், மணவிலக்கு, அன்பானவரை இழத்தல் அல்லது பேச்சுத்தொடர்பில் முறிவு—எல்லா வகையான காரியங்களும் உங்களைத் தனிமையாக உணர வைக்கலாம். மற்ற மனிதர்களால் சூழப்பட்டிருக்கையில்கூட, சிலர் மிகவும் தனிமையாக உணருகிறார்கள்.
நீங்கள் என்ன செய்யலாம்?
தனிமை உங்களைத் தாக்கினால், நீங்கள் வெறுமனே உதவியற்ற ஒரு பலியாளாக இருக்கவேண்டுமா? தனிமை படிப்படியாக உங்களை அழிப்பதையோ வாழ்வதற்கான உங்கள் மன உறுதியை இழக்கச் செய்வதையோ தவிர்ப்பதற்கு நீங்கள் ஏதாவது செய்ய முடியுமா? நிச்சயமாக முடியும். அதிகப்படியான உதவியளிக்கும் புத்திமதி கிடைக்கக்கூடியதாய் இருக்கிறது. மேலும் மிக நல்ல ஆலோசனை கடவுளால் ஏவப்பட்ட வார்த்தையாகிய பைபிளில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட உற்சாகமே, தனிமையை எதிர்த்துப் போராடுவதற்கு உங்களுக்குச் சரியாகத் தேவைப்படுவதாக இருக்கக்கூடும்.—மத்தேயு 11:28, 29.
உதாரணமாக, சுமார் 3,000 வருடங்களுக்கு முன்னர், மத்திய கிழக்கில் வாழ்ந்த ஒரு இளம் பெண்ணாகிய ரூத்தைப் பற்றி வாசிப்பதை நீங்கள் உற்சாகமளிப்பதாய்க் காணக்கூடும். அவள் தனிமையை அனுபவிப்பதற்கு அதிக சாத்தியத்தைக் கொண்டிருந்த ஒருத்தி. அவளுடைய கணவன் மரித்தபோது, இஸ்ரவேலின் பழக்கமற்ற சூழல்களில் வாழ்வதற்காகத் தன்னுடைய மாமியாருடன் சென்றாள். (ரூத் 2:11) தன்னுடைய குடும்பம் மற்றும் முன்னாள் நண்பர்களின்றி, ஓர் அந்நிய பெண்ணாக புறதேசம் ஒன்றில் அவள் இருந்தபோதிலும், தனிமை தன்னை அமிழ்த்தும்படி அவள் அனுமதித்ததாக பைபிளில் எந்தக் குறிப்புமில்லை. அவளுடைய கதையை பைபிள் புத்தகமாகிய ரூத்தில் நீங்கள் வாசிக்கலாம்.
ரூத்தைப் போலவே நீங்களும் ஒரு சாதகமான மனநிலையை கொண்டிருப்பது அவசியம். நீங்கள் காரியங்களையும் சம்பவங்களையும் பற்றி யோசிக்கும் விதம் தனிமைக்கு இடமளிக்க முடியும். தளர்ச்சியினால் பாதிக்கப்பட்டிருந்த தந்தையை நான்கு வருடங்களாக கவனித்துவந்த ஆன் இதற்குச் சான்றளிக்கிறாள். அவர் மரித்தபோது அவள் மட்டுமீறிய தனிமையை உணர்ந்தாள். “நான் வெறுமையில், முழுமையாக தகுதியற்ற ஒரு நிலையில்—யாருக்கும் நான் இனிமேலும் தேவையில்லை—என்பதுபோல் உணர்ந்தேன். ஆனால் இப்போது என் வாழ்க்கை மாறியிருந்தது என்ற உண்மையை நான் எதிர்ப்பட்டேன்; என்னுடைய தனிமையுடன் எதிர்த்துப் போராடுவதற்கு, இப்போது எனக்கிருக்கிற சூழ்நிலைமைகளை நான் நல்ல விதத்தில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று உணர்ந்தேன்,” என்று அவள் சொல்கிறாள். சிலசமயங்களில், உங்களுடைய சூழ்நிலைமைகளை உங்களால் மாற்றியமைக்க முடியாது; ஆனால் அவற்றினிடமாக உங்களுடைய மனநிலையை நீங்கள் மாற்றியமைப்பது சாத்தியமாக இருக்கிறது.
தனிமையுடன் எதிர்த்துப் போராடுவதற்கு பலன்தரும் வேலையில் தொடர்ந்து சுறுசுறுப்பாக வைத்துக்கொள்வது முழு பதிலாக இல்லையென்றாலும், அது உதவியாக இருக்கிறது. திருமணமாகி ஆறே மாதங்களில் விதவையான ஐரீன் இதைத் தன்னுடைய காரியத்தில் உண்மையானதாகக் கண்டாள். “நான் குறைந்த வேலையைக் கொண்டிருந்த சமயத்தில் தனிமை என்னை மிக அதிகமாக வாட்டியது; ஆகவே நான் மற்றவர்களுடன் ஈடுபடுவதிலும் அவர்களுடைய பிரச்சினைகளைச் சமாளிக்க உதவுவதிலும் கவனம் செலுத்தினேன்,” என்று அவள் சொல்கிறாள். மற்றவர்களுக்கு உதவுவது மகிழ்ச்சியைக் கொண்டுவருகிறது; மேலும் தனிமையிலிருக்கும் கிறிஸ்தவர்கள் கர்த்தருடைய வேலையில் செய்வதற்கு அதிகத்தைக் காணலாம்.—அப்போஸ்தலர் 20:35; 1 கொரிந்தியர் 15:58.
நண்பர்கள் உதவிசெய்யும்படி அனுமதியுங்கள்
தனிமையை அனுபவிக்கும் பிள்ளைகள் “நட்பற்ற தன்மையின் காயங்களால்” காயப்படுத்தப்பட்டிருப்பதாக தி நியூ யார்க் டைம்ஸ் மாகஸின் விவரிக்கிறது. (ஏப்ரல் 28, 1991) தனிமையை அனுபவிக்கும் அநேக மக்கள், வயதானோரும் இளைஞரும், நட்பற்றவர்களாக உணருகிறார்கள். ஆகவே, அக்கறையுள்ள கிறிஸ்தவ சபை அளிக்கிற உண்மையான நட்பைக் கொண்டிருப்பது ஒரு உண்மையான பயனாக இருக்கிறது. சபையினுள் உங்களுடைய நண்பர்கள் தொகுதியை விரிவாக்க கடினமாக உழையுங்கள்; அவர்கள் தங்களால் முடிந்த வழிகளிலெல்லாம் உங்களுக்கு உதவ அனுமதியுங்கள். அந்த ஒரு காரணத்திற்காகவும்—கஷ்டத்தின் சமயங்களில் ஆதரவளிப்பதற்காகவும்—நண்பர்கள் இருக்கிறார்கள்.—நீதிமொழிகள் 17:17; 18:24.
உங்களுடைய உணர்ச்சிப்பூர்வ வேதனையின் காரணமாக, நண்பர்கள் உங்களுக்கு உதவிசெய்வதை நீங்கள் உண்மையில் கடினமானதாக்கக்கூடும் என்பதைக் குறித்தும் உணர்வுள்ளவர்களாய் இருங்கள். எப்படி? எழுத்தாளர் ஜெஃப்ரீ யங் விவரிக்கிறார்: “தனிமையை அனுபவிக்கும் சில மக்கள் . . . உரையாடலை ஆதிக்கம் செலுத்துவதன் மூலமாகவோ வெறுக்கத்தக்க அல்லது பொருத்தமற்ற காரியங்களைச் சொல்வதன் மூலமாகவோ நண்பர்களாகும் சாத்தியமுள்ளவர்களை வெறுப்படையச் செய்கிறார்கள். ஒருவிதத்திலோ மற்றொன்றிலோ, தனிமையை அனுபவிப்பவர்களில் நாட்பட்டவர்கள் நெருக்கமான உறவுகளைக் கெடுத்துக்கொள்கிறார்கள்.”—ஐ.மா.செய்தி மற்றும் உலக அறிக்கை (U.S.News & World Report), செப்டம்பர் 17, 1984.
சில நேரங்களில், உங்களை மற்றவர்களிடமிருந்து பிரித்து வைத்துக்கொள்வதன் மூலம் நீங்கள் காரியங்களை மோசமாக்கிவிடக்கூடும். தன்னுடைய 50-களிலிருந்த பீட்டர் என்பவர் அவ்வாறு செய்தார். தன்னுடைய மனைவி மரித்தபின், அவர் தன் உள்ளான உணர்வுகளில் மற்றவர்களுடைய உதவியை விரும்பினாலும்கூட, மற்றவர்களிடமிருந்து ஒதுங்கிக்கொண்டு இருப்பதாகத் தன்னைக் கண்டார். “சில நாட்கள், என்னால் மற்றவர்களுடன் இருப்பதை வெறுமனே எதிர்ப்பட முடியவில்லை; காலப்போக்கில் மற்றவர்களுடைய பார்வையில் படாமல் இருப்பவனாக என்னைக் கண்டேன்,” என்று அவர் சொல்கிறார். இது அபாயகரமானதாக இருக்கலாம். தனிமையான நேரங்கள் பயனுள்ளவையாக இருக்கின்றன என்றாலும், தனிமைப்படுத்தியே பிரிந்திருப்பது அபாயகரமானதாக இருக்கிறது. (நீதிமொழிகள் 18:1) பீட்டர் இதை உணர்ந்தார். அவர் சொன்னார்: “முடிவில் நான் இதைச் சமாளித்தேன்; என் நிலைமையை எதிர்ப்பட்டேன்; என்னுடைய நண்பர்களின் உதவியுடன் என் வாழ்க்கையை திரும்பவும் கட்டியமைத்துக்கொண்டேன்.”
என்றாலும், மற்றவர்கள் உங்களுக்கு உதவி செய்யவேண்டிய ஏதோவொரு வகையான கட்டாயத்தில் இருக்கிறார்கள் என்று நீங்கள் ஊகித்துக்கொள்ளாதீர்கள். அதிகத்தைக் கேட்பவர்களாக முயலாதீர்கள். காண்பிக்கப்படும் எந்தத் தயவையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு, அதற்காகப் போற்றுதலை வெளிக்காட்டுங்கள். ஆனால், நீதிமொழிகள் 25:17-ல் காணப்படும் இந்த நல்ல புத்திமதியையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்: “உன் அயலான் சலித்து உன்னை வெறுக்காதபடிக்கு, அடிக்கடி அவன் வீட்டில் கால்வைக்காதே.” திருமணத்திற்கு 35 வருடங்களுக்குப் பின் கணவன் மரித்தபோது, ஆழ்ந்த தனிமையை உணர்ந்த ஃபிரான்ஸெஸ், இந்த எச்சரிக்கை முக்கியமானது என்று நினைக்கிறாள். “நீங்கள் எதிர்பார்ப்பவற்றைக் குறித்து நியாயத்தன்மை உள்ளவர்களாய் இருங்கள்; மற்றவர்களிடமிருந்து அதிகத்தைக் கேட்காதீர்கள். எப்போதும் உதவியை நாடுகிறவர்களாய் இன்னொருவருடைய வீட்டிற்குச் சென்றுகொண்டு இருக்காதீர்கள்.”
யெகோவா அக்கறையுள்ளவராய் இருக்கிறார்
சில நேரங்களில், மனித நண்பர்கள் உங்களை ஏமாற்றினாலும், நீங்கள் இன்னும் யெகோவா தேவனை உங்கள் நண்பராகக் கொண்டிருக்கலாம். அவர் உங்கள்மீது அக்கறையுள்ளவராய் இருக்கிறார் என்பதைக் குறித்து உறுதியாயிருங்கள். அவர் மீதுள்ள உங்கள் நம்பிக்கையை பலமாக வையுங்கள்; தொடர்ந்து அவருடைய பாதுகாப்பான ஆதரவில் அடைக்கலத்தை நாடுங்கள். (சங்கீதம் 27:10; 91:1, 2; நீதிமொழிகள் 3:5, 6) மோவாபிய பெண்ணாகிய ரூத் இதைச் செய்தாள்; பெரிதும் ஆசீர்வதிக்கப்பட்டாள். ஏன், அவள் இயேசு கிறிஸ்துவுக்கு ஒரு மூதாதையராக ஆனாள்!—ரூத் 2:12; 4:17; மத்தேயு 1:5, 16.
தொடர்ந்து யெகோவாவிடம் ஜெபியுங்கள். (சங்கீதம் 34:4 62:7, 8) தனிமையை சமாளிப்பதற்கு ஜெபத்தை மிகுந்த பலத்தின் ஒரு ஊற்றுமூலமாகக் கண்டாள் மார்க்ரெட். இன்னும் வாலிபராக இருந்த தன் கணவன் மரிக்கும் வரையாக, அவள் முழுநேர ஊழியத்தை அவரோடு சேர்ந்து செய்துவந்தாள். “யெகோவாவிடம் சத்தமாக ஜெபித்து, என்னுடைய எல்லா பயங்களையும் கவலைகளையும் அவரிடம் சொல்வதை நான் எப்போதும் நல்லதாகக் கண்டேன். தனிமை தாக்கியபோது சரியான நோக்கில் காரியங்களைச் செய்வதற்கு அது எனக்கு உதவியது. மேலும் யெகோவா அந்த ஜெபங்களுக்கு பதிலளிப்பதைக் காண்பது எனக்கு நம்பிக்கை அளித்தது,” என்று அவள் சொல்கிறாள். அப்போஸ்தலன் பேதுருவின் புத்திமதியைப் பின்பற்றுவதில் அவள் அதிக பயனை உணருகிறாள்: “ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள். அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.”—1 பேதுரு 5:6, 7; சங்கீதம் 55:22.
பெரும்பாலும் தனிமையிலிருப்பவர்களால் இழக்கப்படும் ஒன்றை—சுயமதிப்பை—காத்துக்கொள்வதற்கு, யெகோவாவோடுள்ள ஒரு நல்ல உறவு உதவிசெய்யும். இதழாசிரியையான ஜனட் குப்ஃபர்மானின் கணவர் புற்றுநோயால் மரித்தபோது, “தாழ்வான சுயமதிப்பு மற்றும் பயனற்றவராக இருக்கும் உணர்ச்சிகளை” பற்றி எழுதினாள். அவள் சொன்னாள்: “பயனற்றிருப்பதாக உணரும் இந்த உணர்ச்சிதானே அத்தனை அநேக விதவைகளை ஏறக்குறைய தற்கொலை செய்வதற்கேற்ற மனச்சோர்வுக்கு வழிநடத்துகிறது.”
யெகோவா உங்களை அதிக மதிப்புள்ளவராகக் கருதுகிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் பயனற்றவர்கள் என்று அவர் நினைப்பதில்லை. (யோவான் 3:16) கடந்த காலங்களில் அவருடைய மக்களாகிய இஸ்ரவேலரை கடவுள் ஆதரித்தது போலவே உங்களையும் ஆதரிப்பார். அவர் அவர்களிடம் சொன்னார்: “நான் உன்னை வெறுத்துவிடவில்லை . . . நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.”—ஏசாயா 41:9, 10.
கடவுளைக் குற்றஞ்சாட்டாதீர்கள்
மிக முக்கியமாக, உங்களுடைய தனிமைக்காக கடவுளைக் குற்றஞ்சாட்டாதீர்கள். யெகோவா அதற்கு பொறுப்பானவர் அல்ல. நீங்களும் முழு மனிதகுலமும் நன்மையும் திருப்திகரமுமான தோழமையை அனுபவிப்பதே எப்போதும் அவருடைய நோக்கமாக இருந்திருக்கிறது. கடவுள் ஆதாமைப் படைத்தபோது, அவர் சொன்னார்: “மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன்.” (ஆதியாகமம் 2:18) முதல் மனுஷியாகிய ஏவாளை உண்டாக்கியபோது கடவுள் அதையே செய்தார். சாத்தானிய கலகம் நிகழாமல் இருந்திருந்தால், மனுஷனும் மனுஷியும் அவர்கள் பிறப்பித்த பிள்ளைகளும் ஒருபோதும் தனிமையை அனுபவித்திருக்கமாட்டார்கள்.
நிச்சயமாகவே, துன்மார்க்கத்தை யெகோவா தற்காலிகமாக அனுமதித்திருப்பது, தனிமை வளரவும் மற்ற துன்ப நிகழ்வுகள் ஏற்படவும் செய்திருக்கிறது. என்றபோதிலும், இது தற்காலிகமானது என்பதைத் தெளிவாக மனதில் வையுங்கள். உங்களுக்காகக் கடவுள் புதிய உலகில் என்ன செய்வார் என்பதைக் கருத்தில் கொள்கையில், தனிமையின் சோதனைகள் சகிப்பதற்குக் குறைந்தளவு கடினமாகத் தோன்றுகின்றன. அதேநேரத்தில் அவர் உங்களை ஆதரித்து ஆறுதலளிப்பார்.—சங்கீதம் 18:2; பிலிப்பியர் 4:6, 7.
இதை அறிந்திருப்பது உங்களுக்குப் பலத்தை அளிக்க முடியும். (முன்னர் குறிப்பிடப்பட்ட) ஃபிரான்ஸெஸ் விதவையானபோது, சங்கீதம் 4:8-ன் வார்த்தைகளில், குறிப்பாக இரவில், அதிக ஆறுதலைப் பெற்றாள்: “சமாதானத்தோடே படுத்துக்கொண்டு நித்திரைசெய்வேன்; கர்த்தாவே, நீர் ஒருவரே என்னைச் சுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர்.” சங்கீதப் புத்தகத்தில் காணப்படுவதைப்போன்ற உணர்ச்சிகளின் பேரில் தியானியுங்கள். சங்கீதம் 23:1-3-ல் வெளிக்காட்டப்பட்டபடி, கடவுள் எப்படி உங்கள்மீது அக்கறை உள்ளவராய் இருக்கிறார் என்பதைக் குறித்து ஆழ்ந்து சிந்தியுங்கள்.
தனிமையிலிருப்பவர்களுக்கு எப்படி உதவலாம்?
தனிமையிலிருப்பவர்களுக்கு உதவுவதற்கான ஒரு முக்கியமான வழி அவர்களுக்கு அன்பு காட்டுவதாகும். ஒருவருக்கொருவர் அன்பு காண்பிக்கும்படி கடவுளுடைய மக்களை பைபிள் அடிக்கடி உற்சாகப்படுத்துகிறது; குறிப்பாக சோதனையின் காலங்களில் அவ்வாறு செய்ய வேண்டும். “சகோதரசிநேகத்திலே ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள்,” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (ரோமர் 12:10) உண்மையில், கடவுளால் ஏவப்பட்ட வார்த்தை சொல்கிறது: “அன்பு ஒருக்காலும் ஒழியாது.” (1 கொரிந்தியர் 13:8) தனிமையிலிருப்பவர்களுக்கு நீங்கள் எவ்வாறு அன்புகாட்ட முடியும்?
தனிமையிலிருப்பவர்களை ஒதுக்கிவைப்பதற்கோ அசட்டைசெய்வதற்கோ மாறாக, அக்கறையுள்ள நபர்கள் முடிந்தபோதெல்லாம் அவர்களுக்கு உதவிசெய்வதன்மூலம் தங்களுடைய கனிவான பாசத்தைக் காண்பிக்கலாம். பின்வருமாறு சொன்ன மனிதனாகிய யோபைப் போல் அவர்கள் இருக்கலாம்: “முறையிடுகிற ஏழையையும், திக்கற்ற பிள்ளையையும், உதவியற்றவனையும் இரட்சித்தேன். . . . விதவையின் இருதயத்தைக் கெம்பீரிக்கப்பண்ணினேன்.” (யோபு 29:12, 13) கிறிஸ்தவ சபையின் மூப்பர்களும் பரிவுள்ள நண்பர்களும் அதேவிதமான கரிசனையுள்ள முறையில் செயல்படலாம்; புரிந்துகொள்ளுதல், கனிவு, ஆறுதல் ஆகிய அடிப்படை மனித தேவைகளைக் கொடுப்பதன்மூலம் அவ்வாறு செய்யலாம். அவர்கள் ஒற்றுணர்வைக் காட்டலாம்; சில சமயங்களில் நம்பிக்கைக்குரிய விதத்தில் பேசுவதற்கான ஒரு தேவையைப் பூர்த்தி செய்யலாம்.—1 பேதுரு 3:8.
பெரும்பாலும், தனிமையிலிருப்பவர்களுக்காக நண்பர்கள் செய்யும் சிறுசிறு காரியங்களே அத்தியாவசியமானவையாக இருக்கின்றன. உதாரணமாக, ஒரு உடன் விசுவாசி அன்பான ஒருவரை மரணத்தில் இழந்தால், உண்மையான நட்பின் தயவான செயல்களால் அதிக நன்மையை அடையப்பெறலாம். ஒரு விருந்துக்கு அழைப்பது, பரிவுடன் செவிகொடுப்பது, அல்லது உற்சாகமூட்டும் உரையாடல் போன்ற சிறுசிறு தயவான காரியங்களின் மதிப்பைக் குறைத்துவிடாதீர்கள். ஒருவர் தனிமையை எதிர்த்துப் போராடுவதில் உதவுவதற்கு இந்தக் காரியங்கள் அதிக பயனுள்ளவையாய் இருக்கின்றன.—எபிரெயர் 13:16.
அவ்வப்போது நாம் எல்லாருமே தனிமை உணர்ச்சிகளின் எழுச்சிகளை அனுபவிப்போம். இருந்தாலும், தனிமை நம்மை அலைக்கழிக்கவேண்டிய அவசியமில்லை. அர்த்தமுள்ள, பயனுள்ள செயல்களால் உங்கள் வாழ்க்கையை நிரப்புங்கள். முடிந்தபோதெல்லாம் நண்பர்கள் உதவி செய்யட்டும். யெகோவா தேவனில் நம்பிக்கையைக் கொண்டிருங்கள். சங்கீதம் 34:19-ல் பதிவு செய்யப்பட்டுள்ள உற்சாகமூட்டும் வாக்குறுதியை எப்போதும் மனதில் கொண்டிருங்கள்: “நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும்; கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்.” உதவிக்காக யெகோவாவிடம் திரும்புங்கள்; தனிமை உங்கள் வாழ்க்கையை நிலைகுலையச் செய்ய அனுமதிக்காதீர்கள்.
[பக்கம் 24-ன் பெட்டி]
தனிமையை எதிர்த்துப் போராடுவதற்கான சில வழிகள்
▪ யெகோவாவோடு நெருங்கி இருங்கள்
▪ பைபிளை வாசிப்பதன்மூலம் ஆறுதலை நாடுங்கள்
▪ சாதகமான கிறிஸ்தவ மனநிலையைக் காத்துக்கொள்ளுங்கள்
▪ அர்த்தமுள்ள செயல்களைச் செய்வதில் தொடர்ந்து சுறுசுறுப்பாய் இருங்கள்
▪ உங்கள் நண்பர்கள் தொகுதியை விரிவாக்குங்கள்
▪ உதவிசெய்வதை நண்பர்களுக்கு எளிதாக்குங்கள்
▪ உங்களைத் தனிமைப்படுத்தி வைத்துக்கொள்ளாதீர்கள், ஆனால் சிநேகப்பான்மையாக பழகும் அன்பை வளர்த்துக்கொள்ளுங்கள்
▪ யெகோவா உங்களில் அக்கறை உள்ளவராக இருக்கிறார் என்று நம்பிக்கை கொண்டிருங்கள்
[பக்கம் 24-ன் பெட்டி]
தனிமையிலிருப்பவர்களுக்கு நீங்கள் எப்படி உதவக்கூடும்
▪ புரிந்துகொள்ளுதல், கனிவு, மற்றும் ஆறுதலை அளியுங்கள்
▪ நம்பிக்கைக்குரிய விதத்தில் பேசுவதற்கான ஒரு தேவையைப் பூர்த்தி செய்யுங்கள்
▪ உதவக்கூடிய சிறுசிறு காரியங்களை செய்வதில் தொடர்ந்திருங்கள்
[பக்கம் 23-ன் படம்]
ரூத் கடினமான சூழ்நிலைகளின் மத்தியிலும், தனிமை தன்னுடைய வாழ்க்கையை நிலைகுலையச் செய்ய அனுமதித்ததாக எவ்வித குறிப்பும் இல்லை