உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w94 10/15 பக். 27-30
  • பேதுருவின் கல்லறை—வத்திக்கனிலா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பேதுருவின் கல்லறை—வத்திக்கனிலா?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1994
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • புதைப்பொருள் ஆய்வுசார்ந்த ஒரு புதிர்
  • கண்டுபிடிப்புகளுக்கு விளக்கம்
  • ‘நம்பமுடியாத ஒரு பாரம்பரியம்’
  • பேதுரு ரோமாபுரியில் மரித்தாரா?
  • நம்முடைய அருமையான விசுவாசத்தை உறுதியாய்ப் பற்றியிருப்போமாக!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
  • மன்னிக்கக் கற்றுக்கொண்டார்
    இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்
  • எஜமானரிடமிருந்து மன்னிக்க கற்றுக்கொண்டார்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2010
  • பேதுருவை போலவே எப்போதும் உறுதியாக நில்லுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2023
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1994
w94 10/15 பக். 27-30

பேதுருவின் கல்லறை—வத்திக்கனிலா?

“அப்போஸ்தலர்களில் இளவரசனின் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது.” வத்திக்கன் வானொலி போப் பயஸ் XII செய்த இந்த வெற்றிக்களிப்பான அறிவிப்பை ஒலிபரப்பியது. அது 1950-ன் முடிவாக இருந்தது, செயின்ட் பீட்டர்ஸ் பாசலிக்காவின் கீழ் ஒன்றன் பின் ஒன்றாகச் செய்யப்பட்ட சிக்கலான நில அகழ்வாய்வு அண்மையில் முடிவுக்கு வந்தது. ஒரு சிலரின் கருத்துப்படி, பேதுரு உண்மையில் வத்திக்கனில்தான் அடக்கம் செய்யப்பட்டார் என்பதை இந்தப் புதைப்பொருள் ஆய்வின் முடிவுகள் நிரூபித்தது. என்றபோதிலும், எல்லாரும் இதை ஒப்புக்கொள்ளவில்லை.

கத்தோலிக்கர்களுக்கு வத்திக்கனிலுள்ள செய்ன்ட் பீட்டர்ஸ் சர்ச் விசேஷித்த முக்கியத்துவமுடையதாய் இருக்கிறது. “ரோமாபுரிக்கு புனித யாத்திரை மேற்கொள்வதிலுள்ள முக்கிய நோக்கம் பேதுருவின் வாரிசை சந்திப்பதும் அவருடைய ஆசியைப் பெறுவதுமாகும்,” என்று ஒரு கத்தோலிக்க துணைநூல் குறிப்பிடுகிறது. “ஏனென்றால் பேதுரு ரோமாபுரிக்கு வந்தார், அங்கே அடக்கம் செய்யப்பட்டார்.” ஆனால் பேதுரு உண்மையில் ரோமாபுரியில் அடக்கம் செய்யப்பட்டாரா? அவருடைய கல்லறை வத்திக்கனில் இருக்கிறதா? அவருடைய எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றனவா?

புதைப்பொருள் ஆய்வுசார்ந்த ஒரு புதிர்

சுமார் 1940-ல் ஆரம்பித்து ஏறக்குறைய பத்து வருடங்கள் நீடித்த நில அகழ்வாய்வுகள் அதிகமான கருத்துப்பேதங்களுக்குப் பொருளாக இருந்திருக்கின்றன. போப் நியமனம் செய்த புதைப்பொருள் ஆய்வாளர்கள் என்ன கண்டுபிடித்தார்கள்? ஒரு காரியம், எண்ணற்ற கல்லறைகளைக் கொண்ட ஒரு புறமத இடுகாடு. அவற்றின் மத்தியில், தற்போதுள்ள போப்பின் பீடத்துக்கு கீழே, அவர்கள் இடிக்குலாவை, இரண்டு பக்கச்சுவர்களால் சூழப்பட்டு சிவப்பு சாந்து பூசப்பட்ட ஒரு சுவருக்கு எதிராக ஒரு சிலை அல்லது உருவத்தை வைப்பதற்குரிய தனிமாடத்தை கண்டுபிடித்தார்கள். கடைசியாக, மிகவும் மர்மமாக, இரண்டு பக்கச் சுவர்களில் ஒன்றிலிருந்து வந்ததாகச் சொல்லப்பட்ட மனித உடலின் எஞ்சிய பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இங்குதானே பல விளக்கங்கள் கொடுக்கப்படுவது ஆரம்பமானது. பல கத்தோலிக்க கல்விமான்களின்படி, ஒருவேளை பொ.ச. 64-ல் ஏற்பட்ட துன்புறுத்தலின் சமயத்தில் நீரோவின் ஆட்சிகாலத்தில் பேதுரு ரோமாபுரியில் வாழ்ந்தார் மற்றும் அங்கே உயிர்தியாக மரணம் அடைந்தார் என்ற பாரம்பரியத்தை கண்டுபிடிப்புகள் உறுதிசெய்கிறது. உடலின் எஞ்சிய பாகங்கள் அப்போஸ்தலனின் நினைவுச்சின்னங்கள் என்பதாகவும்கூட சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு விளக்கத்தின்படி, “பேதுரு இங்கே இருக்கிறார்,” என்ற எழுத்துப்பொறிப்புகளிலிருந்து இதை அடையாளம் காணமுடியும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. போப் பால் VI “நம்முடைய எல்லா பக்திக்கும் வணக்கத்துக்கும் பாத்திரமான செய்ன்ட் பீட்டரின் மனித உடலின் எஞ்சிய பாகங்கள்” கண்டுபிடிக்கப்பட்டிருப்பதைப் பற்றி 1968-ல் அறிவித்தபோது, ஆதாரமற்ற இந்த அநுமானத்துக்கு புகழாரம் சூட்டிக்கொண்டிருந்ததாகத் தெரிகிறது.

இந்த விளக்கங்களோடுகூட எதிர்விவாதங்களும்கூட இருந்தன. வத்திக்கன் நில அகழ்வாய்வில் பங்குகொண்ட ஒரு ஜெஸ்யுட் ஆக இருந்த, கத்தோலிக்க புதைப்பொருள் ஆய்வாளர் அன்டோனியோ ஃபெருவா இந்தப் பொருளின்பேரில் தனக்கு ‘தெரிந்த அனைத்தையும்’ அதாவது பேதுருவின் நினைவுச்சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டன என்ற உரிமைப்பாராட்டலுக்கு முரணாகத் தோன்றக்கூடிய எந்த விஷயத்தையும் பிரசுரிக்க ‘அனுமதிக்கப்படவில்லை,’ என்பதை ஒன்றுக்கும் மேற்பட்ட தடவைகள் உறுதியாக சொல்லியிருக்கிறார். இன்னும் கூடுதலாக, கத்தோலிக்க கார்டினல் பூப்பார் என்பவரால் பதிப்பிக்கப்பட்டு 1991-ல் பிரசுரிக்கப்பட்ட ரோமாபுரிக்கு பயண வழி விளக்க நூல், “சிவப்பு சுவரின் அஸ்திவாரங்களுக்குக் கீழே கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புகளின் அறிவியல்பூர்வமான ஆய்வு அப்போஸ்தலனாகிய பேதுருவோடு சம்பந்தப்பட்டிருப்பதாக தோன்றவில்லை,” என்று சொன்னது. அடுத்த பதிப்பில் (1991-ல் பிற்பகுதியில்) அந்தச் சொற்றொடர் விநோதமாக மறைந்துவிட்டிருந்தது, “பீட்டர் செய்ன்ட் பீட்டர்ஸில்—உறுதி” என்ற தலைப்புள்ள ஒரு புதிய அத்தியாயம் சேர்க்கப்பட்டிருந்தது.

கண்டுபிடிப்புகளுக்கு விளக்கம்

கண்டுபிடிப்புகள் விளக்கங்களுக்கு உட்பட்டிருப்பதும் அவை வித்தியாசமான ஆட்களுக்கு வித்தியாசமான காரியங்களைச் சொல்வதும் தெளிவாக உள்ளது. ஆம், மிகுந்த தகுதியுடைய கத்தோலிக்க சரித்திராசிரியர்கள் “ரோமாபுரியில் பேதுரு உண்மையில் உயிர்தியாக மரணம் அடைந்து அங்கே அவர் அடக்கம் செய்யப்பட்டது சம்பந்தப்பட்ட சரித்திரப்பூர்வமான பிரச்னைகள் இன்னும் கேள்விக்குரியவையாக உள்ளன,” என்பதை ஒப்புக்கொள்கிறார்கள். கண்டுபிடிப்புகள் வெளிப்படுத்துவது என்ன?

கத்தோலிக்க பாரம்பரியத்தை உறுதியாக கடைப்பிடிக்க நாடுகிறவர்களின்படி, இடிக்குலா நினைவுமண்டபம், மூன்றாவது நூற்றாண்டின் ஆரம்பத்தில் வாழ்ந்துவந்த கேயஸ் என்ற ஒரு மதகுரு குறிப்பிடும் “வெற்றிச்சின்னமாக” இருக்கிறது. நான்காவது நூற்றாண்டைச் சேர்ந்த திருக்கோயில் வரலாற்றாசிரியரான செசரியாவின் யூஸிபஸின் பிரகாரம், ‘வத்திக்கன் குன்றின் மீது பேதுருவின் வெற்றிச்சின்னத்தை காட்ட’முடியும் என்பதாக கேயஸ் சொல்லியிருக்கிறார். பாரம்பரிய ஆதரவாளர்கள் “கேயஸின் வெற்றிச்சின்னம்” என்பதாக அழைக்கப்படலான நினைவுமண்டபத்தின் கீழே அப்போஸ்தலன் அடக்கம் செய்யப்பட்டார் என்பதாக உரிமைப்பாராட்டுகின்றனர். என்றாலும் மற்றவர்கள் நில அகழ்வாய்வின் முடிவுகளுக்கு முற்றிலும் வித்தியாசமான விளக்கமளிக்கிறார்கள். முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் தங்கள் மரித்தோரை அடக்கம்செய்வதைக் குறித்து மிதமிஞ்சிய அக்கறையுள்ளவர்களாக இல்லை என்றும் பேதுரு அங்கே மரணத்திற்குட்படுத்தப்பட்டிருந்தாலும்கூட, அவருடைய உடலைத் தேடிக்கண்டுபிடிப்பது வெகுவாக உண்மையாயிருக்க முடியாத ஒன்று என்பதாகவும் சுட்டிக்காண்பிக்கிறார்கள். (பக்கம் 29-ல் பெட்டியை காண்க.)

“கேயஸின் வெற்றிச்சின்னம்” (கண்டுபிடிக்கப்பட்டது அதுவாக இருந்தால்) ஒரு கல்லறை என்பதை ஒப்புக்கொள்ளாதவர்கள் இருக்கிறார்கள். பேதுருவுக்கு மரியாதைச் செய்வதற்காக இரண்டாம் நூற்றாண்டின் முடிவில் கட்டப்பட்ட ஒரு நினைவுமண்டபம் என்றும் பின்னால் அது “கல்லறை நினைவுமண்டபமாக கருதப்படலானது” என்றும் அவர்கள் உறுதியாகச் சொல்கிறார்கள். என்றாலும், இறையியலர் ஆஸ்கர் குல்மேனின் பிரகாரம், “வத்திக்கன் நில அகழ்வாய்வுகள் பேதுருவின் கல்லறையை அடையாளங்காண்பிக்கவே இல்லை.”

எலும்புகளைப் பற்றியதென்ன? எலும்புகள் எங்கிருந்து உண்மையில் வந்தன என்பது இன்னும் புதிராகவே இருப்பது சொல்லப்பட வேண்டும். இப்பொழுது வத்திக்கன் குன்றாக இருப்பதன் மீதுதான் முதல் நூற்றாண்டு முதற்கொண்டு புறமத இடுகாடு ஒன்று இருந்தது, அப்பகுதியில் எண்ணற்ற மனித உடலின் எஞ்சிய பகுதிகள் புதைக்கப்பட்டிருந்தன, அவற்றில் பல ஏற்கெனவே மீட்கப்பட்டிருக்கின்றன. நினைவுச்சின்னங்கள் கண்டெடுக்கப்பட்ட இடம் அப்போஸ்தலனின் கல்லறையே என்பதாக முற்றுப்பெறாத எழுத்துப்பொறிப்பு, (ஒருவேளை நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தது) அடையாளப்படுத்துகிறது என்பதாக சிலர் சொல்லுவது, பெரும்பாலும், “பேதுருவின் எலும்புகளாக நம்பப்பட்டவற்றையே” குறிக்கலாம். இன்னும் கூடுதலாக, “பேதுரு இங்கில்லை” என்பதையும்கூட எழுத்துப்பொறிப்பு அர்த்தப்படுத்தலாம் என்பது கல்வெட்டு எழுத்தாளர்கள் பலரின் கருத்தாகும்.

‘நம்பமுடியாத ஒரு பாரம்பரியம்’

“பண்டைய மற்றும் அதிக நம்பத்தக்க மூலங்கள் [பேதுரு] தியாக மரணமடைந்த இடத்தைக் குறிப்பிடுவதில்லை, ஆனால் பிற்காலத்திய மற்றும் அதிக நம்பமுடியாத மூலங்களில், அது வத்திக்கன் பகுதிதான் என்பதில் உண்மையில் கருத்து ஒற்றுமைக் காணப்படுகிறது,” என்பதாக சரித்திராசிரியர் D. W. ஓக்கானர் குறிப்பிடுகிறார். நம்பமுடியாத பாரம்பரியங்களின் அடிப்படையில்தானே வத்திக்கனில் பேதுருவின் கல்லறைக்காக தேடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. “நினைவுச்சின்னங்கள் அதிக முக்கியத்துவமுள்ளதானபோது, பேதுருவின் [வெற்றிச்சின்னம்] உண்மையில் அவருடைய கல்லறை இருந்த இடத்தைச் சரியாக சுட்டிக்காண்பித்தது என்பதாக நம்ப ஆரம்பித்தார்கள்,” என்பதாக ஓக்கானர் உறுதிசெய்கிறார்.

இந்தப் பாரம்பரியங்கள், நினைவுச்சின்னங்களை வழிபடும் வேத ஆதாரமற்ற பழக்கத்தோடு இணையாக வளர்ந்தன. மூன்றாவது மற்றும் நான்காவது நூற்றாண்டுகள் முதற்கொண்டு, பல்வேறு திருக்கோயில் தொடர்பான மையங்கள் நினைவுச்சின்னங்களை, உண்மையானவற்றையும் போலியானவற்றையும், பயன்படுத்தின—பொருளாதார இலாபத்துக்காகவும் “ஆவிக்குரிய” உச்ச உயர்நிலையை முயன்று அடைந்து தங்களுடைய சொந்த அதிகாரத்தை வளர்த்துக்கொள்ளவும் அவ்விதமாகச் செய்தன. இதன் காரணமாக, பேதுருவின் உடலின் எஞ்சிய பகுதிகளுக்கு அற்புதமான வல்லமை இருப்பதாக உறுதியாக நம்பிய புனித யாத்திரீகர்கள், அவருடைய கல்லறை என்று நம்பப்பட்ட இடத்திற்கு பயணப்பட்டார்கள். ஆறாவது நூற்றாண்டின் முடிவில், கவனமாக நிறுக்கப்பட்ட துண்டுத்துணிகளை “கல்லறை”யின் மீது விசுவாசிகள் தூக்கியெறிவது வழக்கமாக இருந்தது. “குறிப்பிடத்தக்கவிதமாக, வேண்டிக்கொள்பவரின் விசுவாசம் உறுதியாக இருந்தால், கல்லறையிலிருந்து துணி எடுக்கப்படுகையில், அது தெய்வீக சிறப்பு மிக்கதாயும் அதற்கு முன்பிருந்ததைவிட எடை கூடுதலாகவும் இருக்கும்,” என்பதாக சமகாலத்திய பதிவு ஒன்று சொல்கிறது. அக்காலத்திலிருந்த பேதமையின் அளவை இது சுட்டிக்காட்டுகிறது.

நூற்றாண்டுகளினூடாக, இதுபோன்ற கட்டுக்கதைகளும் சிறிதும் ஆதாரமில்லாத பாரம்பரியங்களும் வத்திக்கன் பாசலிக்காவின் கீர்த்தியின் வளர்ச்சிக்கு கணிசமாக உதவின. என்றபோதிலும் கருத்துவேறுபாடுகள் எழத்தான் செய்தன. 12-வது மற்றும் 13-வது நூற்றாண்டுகளில், வால்டென்ஸஸ் என்ற கிறிஸ்தவ மத பிரிவு வரம்புக்கடந்த இந்தச் செயல்களைக் கண்டனம்செய்து பேதுரு ஒருபோதும் ரோமுக்குச் சென்றது கிடையாது என்பதை பைபிளிலிருந்து விளக்கினார்கள். பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர், புராட்டஸ்டன்டு சீர்திருத்தத்தை விளக்குபவர்கள் அதேவிதமாகவே விவாதித்தார்கள். 18-வது நூற்றாண்டில், பிரபலமான தத்துவஞானிகள் சரித்திரப்பூர்வமாகவும் வேதப்பூர்வமாகவும் இந்தப் பாரம்பரியத்தை ஆதாரமற்றதாக கருதினார்கள். தகுதிப்பெற்ற கல்விமான்கள், கத்தோலிக்கர்களும் மற்றவர்களும், இன்று வரையாக இதே கருத்தை உடையவர்களாக இருக்கிறார்கள்.

பேதுரு ரோமாபுரியில் மரித்தாரா?

மனத்தாழ்மையுள்ள கலிலேய மீனவரான பேதுரு நிச்சயமாகவே முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சபையில் இருந்த மூப்பர்களில் தான் முதன்மை ஸ்தானத்தைக் கொண்டிருக்கவேண்டும் என்ற எண்ணமுடையவராக இருக்கவில்லை. மாறாக, அவர் தன்னை ‘உடன் மூப்பன்’ என்பதாக விவரிக்கிறார். (1 பேதுரு 5:1-6) மனத்தாழ்மையுள்ள பேதுருவின் தோற்றம் அவருடைய கல்லறை என்பதாக நம்பப்படுகிறதைச் சுற்றியுள்ள ஆடம்பரத்தோடு ஒப்பிடுகையில் முரணாக இருப்பதை வத்திக்கன் பாசலிக்காவுக்குச் செல்லும் எந்த ஒரு பார்வையாளரும் காணமுடியும்.

மற்ற கிறிஸ்தவ மதப் பிரிவுகளுக்கு மேலாக தன்னுடைய உச்ச உயர்நிலையை வலியுறுத்தும் பொருட்டு, கத்தோலிக்க சர்ச் பேதுரு கொஞ்ச காலம் ரோமாபுரியில் வாழ்ந்துவந்தார் என்பதாகச் சொல்லும் ‘பிற்காலத்திய மற்றும் குறைந்தளவே நம்பத்தக்க’ பாரம்பரியத்தை முறைப்படி ஒப்புக்கொள்ள முற்பட்டிருக்கிறது. பண்டைய மற்ற பாரம்பரியங்கள் பேதுரு அடக்கம் செய்யப்பட்ட இடத்தை வத்திக்கனில் அல்ல, ஆனால் ரோமாபுரியில் வேறிடத்தில் இருந்ததாக கருதுவது விநோதமாக உள்ளது. என்றபோதிலும், பேதுருவைப் பற்றிய நேரடியான தகவலுக்கு ஒரே மூலமாகிய பைபிளில் பதிவுசெய்யப்பட்ட உண்மைகளை ஏன் பற்றிக்கொள்ளக்கூடாது? எருசலேமிலிருந்த கிறிஸ்தவ சபையின் ஆளும் குழுவிடமிருந்து பெற்றுக்கொண்ட அறிவுரைகளுக்கு கீழ்ப்படிந்து பேதுரு பாபிலோன் உட்பட பூர்வ உலகின் கிழக்குப் பகுதியில் தன்னுடைய ஊழியத்தை நிறைவேற்றினார் என்பது கடவுளுடைய வார்த்தையிலிருந்து தெளிவாக இருக்கிறது.—கலாத்தியர் 2:1-9; 1 பேதுரு 5:13; அப்போஸ்தலர் 8:14-ஐ ஒப்பிடவும்.

சுமார் பொ.ச. 56-ல் ரோமாபுரியிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு எழுதுகையில் பவுல் அப்போஸ்தலன் அந்தச் சபையிலுள்ள சுமார் 30 உறுப்பினர்களுக்கு வாழ்த்துதல் சொல்லும்போது பேதுருவைப் பற்றி குறிப்பிடவுங்கூட இல்லை. (ரோமர் 1:1, 7; 16:3-23) பின்னர் பொ.ச. 60 மற்றும் 65-க்கு இடையே பவுல் ரோமாபுரியிலிருந்து ஆறு கடிதங்களை எழுதினார், ஆனால் பேதுரு அவற்றில் குறிப்பிடப்படவில்லை—இது பேதுரு அங்கே இருக்கவில்லை என்பதற்கு சூழ்நிலையிலிருந்து அநுமானிக்கப்படும் பலத்த சான்றாகும்.a (2 தீமோத்தேயு 1:15-17; 4:11-ஐ ஒப்பிடவும்.) ரோமாபுரியில் பவுலினுடைய ஊழியம் அப்போஸ்தலர் புத்தகத்தின் முடிவில் விவரிக்கப்பட்டுள்ளது, ஆனால், மீண்டுமாக, பேதுருவைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. (அப்போஸ்தலர் 28:16, 30, 31) முன்கூட்டியே கொள்ளப்படும் எந்த அபிப்பிராயங்களும் இல்லாமல், பைபிள் அத்தாட்சியை நடுநிலையிலிருந்து ஆய்வுசெய்வது, பேதுரு ரோமாபுரியில் பிரசங்கிக்கவில்லை என்ற முடிவுக்கு மாத்திரமே வழிநடத்தமுடியும்.b

போப்பின் “முதன்மை ஸ்தானம்” நம்பமுடியாத பாரம்பரியங்களையும் வேதவாக்கியங்களைப் புரட்டிப் பொருத்துவதையும் அடிப்படையாக கொண்டுள்ளது. கிறிஸ்தவத்தின் அஸ்திவாரம் இயேசுவே, பேதுரு அல்ல. ‘கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறார்,’ என்று பவுல் சொல்கிறார். (எபேசியர் 2:20-22; 5:23) விசுவாசமுள்ள யாவரையும் ஆசீர்வதித்து இரட்சிப்பதற்கு யெகோவா அனுப்பியது இயேசு கிறிஸ்துவையே.—யோவான் 3:16; அப்போஸ்தலர் 4:12; அதோடு ரோமர் 15:29; 1 பேதுரு 2:4-8-ஐயும் பார்க்கவும்.

ஆகவே, ‘பேதுருவின் வாரிசை’ சந்திப்பதற்காக தாங்கள் உண்மையிலேயே பேதுருவின் கல்லறை என்பதாக நம்புமிடத்துக்கு செல்லுகிறவர்கள் ‘நம்பமுடியாத பாரம்பரியங்களை’ ஏற்பதா அல்லது கடவுளுடைய நம்பத்தகுந்த வார்த்தையை நம்புவதா என்ற பிரச்னையை எதிர்ப்படுகின்றனர். கிறிஸ்தவர்கள் தங்களுடைய வணக்கம் கடவுளுக்கு ஏற்கத்தகுந்ததாக இருக்கவேண்டும் என்று விரும்புவதால், அவர்கள் ‘தங்களுடைய விசுவாசத்தைப் பூரணப்படுத்துகிறவராகிய இயேசுவையும்’ பின்பற்றுவதற்கு அவர் நமக்காக விட்டுச்சென்ற பரிபூரண மாதிரியையும் ‘உற்றுநோக்குவார்கள்.’—எபிரெயர் 12:2; 1 பேதுரு 2:21.

[அடிக்குறிப்புகள்]

a சுமார் பொ.ச. 60-61-ம் ஆண்டில், பவுல், எபேசியர், பிலிப்பியர், கொலோசெயர், பிலேமோன், மற்றும் எபிரெயர்களுக்கு தன்னுடைய கடிதங்களை எழுதினார்; சுமார் பொ.ச. 65-ல் அவர் தீமோத்தேயுவுக்கு தன்னுடைய இரண்டாவது கடிதத்தை எழுதினார்.

b  “பேதுரு ரோமாபுரியில் எக்காலத்திலாவது இருந்தாரா?” என்ற கேள்வி ஆங்கில காவற்கோபுரம், நவம்பர் 1, 1972, பக்கங்கள் 669-71-ல் சிந்திக்கப்பட்டது.

[பக்கம் 29-ன் பெட்டி]

“நில அகழ்வாய்வுகள் இடிக்குலாவின் கீழ் ஒரு கல்லறையின் நிச்சயமான தடயங்களை வெளிப்படுத்தவுமில்லை; அல்லது அடக்கம் செய்வதற்காக கிறிஸ்தவ சமுதாயம் புனித பேதுருவின் உடலை கொலையாளிகளிடமிருந்து மீட்டுக்கொண்டது என்பதற்கும் எந்த நிச்சயமுமில்லை. பொது முறையாக, அந்நியனாக (பெரிகிரினஸ்) இருந்த ஒருவரின் உடல், சட்டத்தின் பார்வையில் ஒரு சாதாரண குற்றவாளியாக இருந்தவரின் உடல், டைபருக்குள் தூக்கி எறியப்பட்டிருக்கலாம். . . . மேலுமாக, உடலின் எஞ்சிய பாகங்களை நினைவுச்சின்னங்களாக பாதுகாப்பதில் பிற்பட்ட காலங்களில் உலகத்தின் முடிவைக் குறித்த நம்பிக்கை குறைந்து உயிர்தியாகிகளை வழிபடுவது தோன்ற ஆரம்பித்திருந்த காலங்களில், இருந்த அதே அக்கறை இந்தத் தொடக்க காலத்தில் இருந்திருக்க முடியாது. ஆகவே புனித பேதுருவின் உடல், உண்மையில் அடக்கம் செய்வதற்காக மீட்கப்படவில்லை என்பதே உண்மையாக இருக்கமுடியும்.”—ஜேஸ்லின் டாயன்பீ மற்றும் ஜான் வார்ட் பெர்க்கின்ஸ் எழுதிய புனித பேதுருவின் கோயிலும் வத்திக்கன் நில அகழ்வாய்வும்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்