“நீங்கள் வரியைச் செலுத்தவேண்டியிருந்தால், வரியைச் செலுத்துங்கள்”
“இந்த உலகில் சாவையும் வரிகளையும் தவிர எதுவுமே நிச்சயமில்லை.” இவ்வாறாக 18-வது நூற்றாண்டைச் சேர்ந்த அரசியல் மேதையும் கண்டுபிடிப்பாளருமான பென்ஜமின் ஃப்ராங்லின் சொன்னார். அடிக்கடி மேற்கோள் காண்பிக்கப்படும் இவருடைய வார்த்தைகள் வரிகள் தவிர்க்கமுடியாதவை என்பதை மட்டுமல்லாமல் அவை உண்டுபண்ணும் திகிலையும்கூட பிரதிபலிக்கின்றன. அநேகருக்கு, வரிகளைச் செலுத்துவது சாவைப் போன்று அத்தனை விரும்பத்தகாததாக இருக்கிறது.
வரிகளைச் செலுத்துவது விரும்பத்தகாத ஒன்றாக இருந்தபோதிலும், இது உண்மைக் கிறிஸ்தவர்கள் மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் எடுத்துக்கொள்ளவேண்டிய ஒரு கடமையாகும். அப்போஸ்தலன் பவுல் ரோமாபுரியிலிருந்த கிறிஸ்தவ சபைக்கு இவ்வாறு எழுதினார்: “யாவருக்கும் செலுத்தவேண்டியதைச் செலுத்துங்கள்: நீங்கள் வரியைச் செலுத்தவேண்டியிருந்தால் வரியைச் செலுத்துங்கள்; தீர்வையானால், தீர்வையை; மரியாதையானால் மரியாதையை; கனமானால், அப்போது கனத்தைச் செலுத்துங்கள்.” (ரோமர் 13:7, நியூ இன்டர்நேஷனல் வர்ஷன்) இயேசு கிறிஸ்துவும்கூட பின்வருமாறு சொன்னபோது, குறிப்பாக வரியைப்பற்றி சொல்லிக்கொண்டிருந்தார்: “இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள்.”—மாற்கு 12:14, 17.
யெகோவா அரசு சம்பந்தமான ‘மேலான அதிகாரங்கள்’ இருப்பதற்கு அவற்றை அனுமதித்திருக்கிறார், அவருடைய ஊழியர்கள் அவற்றுக்குச் சம்பந்தப்பட்ட விதத்தில் கீழ்ப்பட்டிருக்க வேண்டும் என்று தேவைப்படுத்துகிறார். அப்படியென்றால், அவருடைய வணக்கத்தார் வரிகளைச் செலுத்தும்படியாக கடவுள் ஏன் வலியுறுத்துகிறார்? பவுல் மூன்று அடிப்படைக் காரணங்களைக் குறிப்பிடுகிறார்: (1) சட்டத்தை மீறுகிறவர்களைத் தண்டிப்பதில் “மேலான அதிகாரமுள்ளவர்க”ளின் “கோபாக்கினை;” (2) தன்னுடைய வரிகளைச் செலுத்துவதில் ஏமாற்றினால் சுத்தமாயிருக்க முடியாத ஒரு கிறிஸ்தவனின் மனச்சாட்சி; (3) இந்தப் ‘பொது ஊழியர்கள்’ அவர்கள் செய்யும் சேவைகளுக்காகவும் ஓரளவு ஒழுங்கைக் காத்துவருவதற்காகவும் இவர்களுக்குச் சம்பளம் கொடுக்க வேண்டிய அவசியம். (ரோமர் 13:1-7) அநேகர் வரிகளைச் செலுத்த விரும்பாமல் இருக்கலாம். என்றபோதிலும், நிச்சயமாகவே அவர்கள் போலீஸ் அல்லது தீக்காப்பு இல்லாத, சாலைப் பராமரிப்பு இல்லாத அல்லது பொதுப்பள்ளிக்கூடங்கள் மற்றும் அஞ்சல் அமைப்பு முறை இல்லாத ஒரு தேசத்தில் அவ்வளவாக வாழ விரும்பமாட்டார்கள். அமெரிக்க சட்டநிபுணர் ஆலிவர் வென்டல் ஹோம்ஸ் ஒரு சமயம் இவ்விதமாக அதைச் சொன்னார்: “நாகரீகமுள்ள ஒரு சமுதாயத்துக்காக நாம் செலுத்துவதே வரிகளாகும்.”
வரிகளைச் செலுத்துவது கடவுளுடைய ஊழியர்களுக்கு புதியதொன்றல்ல. பண்டைய இஸ்ரவேலில் குடியிருந்தவர்கள் தங்களுடைய அரசர்களை ஆதரிப்பதற்காக வரிகளைச் செலுத்தினர், இந்த ஆட்சியாளர்களில் சிலர் நியாயமற்ற வரிகளை விதிப்பதன் மூலம் மக்களை வெகுவாக சுமைக்குள்ளாக்கினர். யூதர்களும்கூட தங்கள் மீது ஆதிக்கம் செலுத்திய எகிப்து, பெர்சியா மற்றும் ரோமாபுரி போன்ற அந்நிய அரசுகளுக்குத் தீர்வைகளையும் வரிகளையும் செலுத்தினர். ஆகவே பவுல் வரிகளைச் செலுத்துவதைப் பற்றி குறிப்பிட்டபோது அவருடைய நாட்களிலிருந்த கிறிஸ்தவர்கள் அவர் எதைப்பற்றி பேசிக்கொண்டிருந்தார் என்பதை நன்றாக அறிந்திருந்தார்கள். வரிகள் நியாயமாக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, மற்றும் இந்தப் பணத்தை அரசாங்கம் எப்படி செலவழித்தாலும் சரி, அவர்கள் செலுத்த வேண்டிய வரியைச் செலுத்தியே ஆக வேண்டும் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். இதுவே இன்றும் கிறிஸ்தவர்களுக்குப் பொருந்துகிறது. என்றபோதிலும், சிக்கலான இந்தக் காலங்களில் நம்முடைய வரிகளைச் செலுத்துகையில், என்ன நியமங்கள் நமக்கு வழிநடத்துதலைக் கொடுக்கமுடியும்?
வழிகாட்டும் ஐந்து நியமங்கள்
ஒழுங்காக இருங்கள். ‘ஒழுங்கின்மைக்குக் கடவுளாக இல்லாமல், சமாதானத்துக்குக் கடவுளாக இருக்கும்,’ யெகோவாவை நாம் சேவித்து அவரை பின்பற்ற விரும்புகிறோம். (1 கொரிந்தியர் 14:33, NW; எபேசியர் 5:1) வரிகளைச் செலுத்துவது என்பதைப் பற்றியதில் ஒழுங்காக இருப்பது என்பது முக்கியமாகும். உங்களுடைய பதிவேடுகள் முழுமையாக, திருத்தமாக மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கின்றனவா? பொதுவாக, பதிவுகளை வைக்க விலையுயர்ந்த உபகரணங்கள் எதுவும் தேவையில்லை. உங்களுடைய (பல்வேறு செலவுகளை வகைப்படுத்தி ரசீதுகள்) ஒவ்வொரு வகையான பதிவுக்கும் லேபல் செய்யப்பட்ட ஒரு பெரிய உறையை நீங்கள் வைத்திருக்கலாம். ஒவ்வொரு ஆண்டுக்கும் பெரிய உறைகளில் இவற்றைச் சேர்த்து வைப்பது போதுமானதாக இருக்கலாம். அநேக நாடுகளில், அரசாங்கம் கடந்த காலப் பதிவுகளை ஒருவேளை பரிசோதனைச் செய்ய தீர்மானிக்க கூடுமாதலால், இப்படிப்பட்ட கோப்புகளை பல ஆண்டுகள் வைத்திருப்பது அவசியமாக இருக்கிறது. ஆகவே அது இனிமேலும் தேவைப்படாது என்பதைக் குறித்து நீங்கள் நிச்சயமாயிருக்கும்வரையாக எதையும் தூக்கி எறிந்துவிடாதீர்கள்.
நேர்மையுள்ளவராயிருங்கள். பவுல் எழுதினார்: “எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்; நாங்கள் நல்மனச்சாட்சியுள்ளவர்களாய் எல்லாவற்றிலும் [நேர்மையாய், NW] நடக்க விரும்புகிறோமென்று நிச்சயித்திருக்கிறோம்.” (எபிரெயர் 13:18) நம்முடைய வரிகளைச் செலுத்தும்போது நேர்மையாய் இருக்கவேண்டும் என்ற இருதயப்பூர்வமான ஓர் ஆசை நம்முடைய ஒவ்வொரு தீர்மானத்தையும் வழிநடத்தவேண்டும். முதலாவது, அறிக்கைசெய்யப்படவேண்டிய வருமானத்துக்கு செலுத்தும் வரிகளைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். அநேக நாடுகளில், கூடுதலான வருமானம்—சேவைகளுக்காக கொடுக்கப்படும் சிறிய இனாம், கணக்கில் சேராத வேலைகள், விற்பனை—குறிப்பிட்ட ஒரு தொகையைத் தாண்டியவுடன் வரிவிதிப்புக்குரியதாகிறது. ‘நேர்மையான மனச்சாட்சியுடைய’ ஒரு கிறிஸ்தவன் தான் வாழும் இடத்தில் வரிவிதிப்புக்கு உட்படும் வருமானம் எது என்பதைக் கண்டுபிடித்து பொருத்தமான வரியைச் செலுத்துவான்.
இரண்டாவதாக, கழித்தல்கள் விஷயம் இருக்கிறது. வரி செலுத்துபவர்கள் வரிவிதிப்புக்குட்பட்ட வருமானத்திலிருந்து ஒரு சில செலவீனங்களைக் கழிப்பதற்கு பொதுவாக அரசாங்கங்கள் அனுமதிக்கின்றன. நேர்மையற்ற இந்த உலகில், இப்படிப்பட்ட கழித்தல்களுக்கு உரிமை கோரும்போது “தோற்றுவிப்பதில்” அல்லது “கற்பனைச் செய்வதில்” அநேகர் எந்தத் தீங்கையும் காண்பதில்லை. ஐக்கிய மாகாணங்களில் ஒரு மனிதன் தன்னுடைய மனைவிக்கு விலையுயர்ந்த மயிர்த்தோல் மேற்சட்டை ஒன்றை வாங்கிவிட்டு பின்னர் வேலைசெய்யுமிடத்திற்கு “அலங்காரம்” என்பதாக அதை கழித்துவிடும்பொருட்டு தன் வியாபார ஸ்தலத்தில் ஒரு நாள் அதை தொங்க வைத்திருந்ததாகச் சொல்லப்படுகிறது! மற்றொரு மனிதன் தன் மகளின் திருமணத்துக்கு ஆன செலவுகளை வியாபார கழித்தல்களாக உரிமைக் கோரினார். இன்னுமொரு மனிதன் மாதக் கணக்கில் தூரக்கிழக்கு நாடுகளுக்குத் தன்னுடைய மனைவியைத் தன்னோடு பிரயாணத்தில் அழைத்துச்செல்வதன் மூலம் செலவுகளைக் கழிக்க முற்பட்டார். அவள் உண்மையில் சமூக மற்றும் பொழுதுபோக்கு நோக்கங்களுக்காகவே முக்கியமாக அங்கு சென்றபோதிலும் அவர் அவ்விதமாகச் செய்தார். இப்படிப்பட்ட உதாரணங்களுக்கு முடிவே இருப்பதாக தெரியவில்லை. எளிமையாகச் சொன்னால், ஒரு வியாபார கழித்தல் உண்மையில் அவ்விதமாக இல்லாதபோது அதை அவ்விதமாக அழைப்பது ஒரு வகையான பொய்யாகும்—நம்முடைய கடவுளாகிய யெகோவா அறவே வெறுக்கும் ஒரு காரியமாகும்.—நீதிமொழிகள் 6:16-19.
எச்சரிக்கையாயிருங்கள். இயேசு தம்மைப் பின்பற்றுவோரை “சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப்போலக் கபடற்றவர்களுமாய்” இருக்கும்படியாகத் துரிதப்படுத்தினார். (மத்தேயு 10:16) அந்த ஆலோசனை வரிசெலுத்தும் நம்முடைய பழக்கங்களுக்கு வெகுவாகப் பொருந்தக்கூடும். குறிப்பாக பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்துள்ள தேசங்களில், அதிகதிகமான ஆட்கள் இந்நாட்களில் கணக்குவைப்பு நிறுவனம் அல்லது வாழ்க்கைத் தொழிலாக இதைச் செய்பவருக்குப் பணம்கொடுத்து அவர்கள் செலுத்த வேண்டிய வரிகளைத் தீர்மானிக்கின்றனர். பின்னர் அவர்கள் வெறுமனே படிவங்களில் கையொப்பமிட்டு காசோலையை அனுப்பிவிடுகின்றனர். நீதிமொழிகள் 14:15-ல் பதிவுசெய்யப்பட்டுள்ள எச்சரிக்கையைக் கருத்தில்கொள்வதற்கு இது ஒரு நல்ல சமயமாக இருக்கும்: “பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்; விவேகியோ தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான்.”
மனச்சாட்சியில்லாத ஒரு கணக்கர் அல்லது அனுபவமில்லாத வரி தயாரிப்பாளரின் ‘எந்த வார்த்தையையும் நம்பினதன்’ காரணமாக அநேகர் அரசாங்கத்தோடு தொந்தரவுக்குள்ளாகியிருக்கின்றனர். விவேகமுள்ளவராய் இருப்பது எத்தனை மேலானது! நீங்கள் கையொப்பமிடுவதற்கு முன்பு எந்த ஒரு ஆவணத்தையும் கவனமாக வாசிப்பதன் மூலம் எச்சரிக்கையாயிருங்கள். ஏதேனும் ஒரு பதிவு, விடுபாடு அல்லது கழித்தல் உங்களுக்கு விநோதமாகத் தோன்றினால், விளக்கங்கேளுங்கள்—தேவையானால் திரும்பத் திரும்ப கேளுங்கள்—காரியம் நேர்மையாகவும் சட்டத்துக்கு உட்பட்டும் இருப்பதைக் குறித்து நீங்கள் திருப்தியடையும்வரை அதைச் செய்யுங்கள். அநேக தேசங்களில் வரி சம்பந்தப்பட்ட சட்டங்கள் அளவுக்கு அதிகமாக சிக்கலானவையாக இருப்பது உண்மைதான், ஆனாலும் முடிந்தவரை நீங்கள் கையொப்பமிடும் எதையும் புரிந்துகொள்வது ஞானமான போக்காகும். சிலருடைய விஷயத்தில், வரி சம்பந்தப்பட்ட சட்டங்களை நன்கு அறிந்த ஓர் உடன் கிறிஸ்தவன் ஓரளவு உட்பார்வையை அளிக்கமுடியும். வழக்கறிஞராக வரி சம்பந்தப்பட்ட விஷயங்களைக் கையாளும் ஒரு கிறிஸ்தவ மூப்பர் சுருக்கமாக பின்வருமாறு சொன்னார்: “உண்மையாயிருப்பதற்கு அளவுக்கு அதிகமாக நல்லதாக தோன்றும் ஏதோவொன்றை உங்கள் கணக்கர் எடுத்துரைப்பாரேயானால், அது ஒருவேளை நேர்மையாக இராது!”
பொறுப்புள்ளவராயிருங்கள். “அவனவன் தன்தன் பாரத்தைச் சுமப்பானே,” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (கலாத்தியர் 6:5) வரிகளைச் செலுத்துவதற்கு வருகையில், ஒவ்வொரு கிறிஸ்தவனும் நேர்மையாயும் சட்டத்துக்குக் கீழ்ப்படிகிறவராயும் இருக்கும் பொறுப்பைச் சுமக்கவேண்டும். சபை மூப்பர்கள் தங்களுடைய பராமரிப்பின்கீழ் இருக்கும் மந்தையைக் கண்காணிக்கும் விஷயமாக இது இல்லை. (2 கொரிந்தியர் 1:24-ஐ ஒப்பிடவும்.) அவர்கள் வரி சம்பந்தப்பட்ட விஷயங்களில் தங்களை உட்படுத்திக்கொள்வதில்லை. ஒருவேளை வினைமையான ஒரு குற்றத்தில், சமுதாயத்தில் நிகழும் ஒரு மோசடியில் உட்பட்டு இது அவர்களுடைய கவனத்துக்கு வந்தாலொழிய அவர்கள் அதில் உட்படுவதில்லை. பொதுவாக, தனிப்பட்ட ஒரு கிறிஸ்தவன் வேதப்பூர்வமான நியமங்களைப் பொருத்திப் பின்பற்றுவதில் பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட தன்னுடைய மனச்சாட்சியைப் பயன்படுத்த பொறுப்புள்ளவராயிருக்கும் ஒரு விஷயமாக இது இருக்கிறது. (எபிரெயர் 5:14) வரி ஆவணத்தில் கையொப்பமிடுகையில்—அதைத் தயார் செய்தவர் எவராக இருந்தாலும்—அந்த ஆவணத்தை நீங்கள் வாசித்து அதில் அடங்கியிருப்பவை உண்மை என்பதை நீங்கள் நம்பும் ஒரு சட்டப்பூர்வமான வாக்குமூலமாக அது இருப்பதை நீங்கள் அறிந்திருப்பதை உட்படுத்துகிறது.a
குற்றஞ்சாட்டப்படாதவர்களாயிருங்கள். கிறிஸ்தவ கண்காணிகள் தங்களுடைய ஸ்தானத்துக்குத் தகுதிபெறும்பொருட்டு “குற்றஞ்சாட்டப்படாதவ”ராக இருக்கவேண்டும். அதேவிதமாகவே, முழு சபையும் கடவுளுடைய பார்வையில் குற்றஞ்சாட்டப்படாததாக இருக்கவேண்டும். (1 தீமோத்தேயு 3:2; எபேசியர் 5:27-ஐ ஒப்பிடவும்.) ஆகவே அவர்கள் வரிகளைச் செலுத்துவது என்பதற்கு வருகையிலும்கூட, சமுதாயத்தில் ஒரு நல்ல பெயரைக் காத்துக்கொள்ள முயற்சி செய்கின்றனர். இயேசு கிறிஸ்து தாமே இந்த விஷயத்தில் ஒரு சிறந்த முன்மாதிரியை வைத்தார். இரண்டே வெள்ளிக்காசுகளை உட்படுத்தும் சிறிய காரியமாகிய ஆலய வரியை இயேசு செலுத்தினாரா என்று அவருடைய சீஷனாகிய பேதுருவிடம் கேட்கப்பட்டது. உண்மையில் இயேசு இந்த வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டவராக இருந்தார், ஏனென்றால் ஆலயம் அவருடைய தகப்பனுடைய வீடாக இருந்தது, எந்த அரசனும் தன்னுடைய சொந்த மகனுக்கு வரிவிதிப்பதில்லை. இயேசு இதைச் சொன்னார்; என்றபோதிலும் அவர் வரியைச் செலுத்தினார். உண்மையில், தேவைப்பட்ட பணத்தைப் பெறுவதற்காக ஓர் அற்புதத்தையும்கூட செய்தார்! சரியானபடி விலக்களிக்கப்பட்டிருந்த ஒரு வரியை அவர் ஏன் செலுத்தவேண்டும்? இயேசுதாமே சொன்னவிதமாக, ‘அவர்களுக்கு இடறலாயிராதபடிக்கே’ ஆகும்.—மத்தேயு 17:24-27.b
கடவுளை கனப்படுத்தும் நற்பெயரைக் காத்துக்கொள்ளுங்கள்
யெகோவாவின் சாட்சிகள் இன்று அதேவிதமாகவே மற்றவர்களை இடறலடையச் செய்யாதிருப்பதைக் குறித்து அக்கறையுள்ளவர்களாக இருக்கின்றனர். அப்படியென்றால், நேர்மையாக, வரிசெலுத்தும் குடிமக்கள் என்ற நற்பெயரை ஒரு தொகுதியாக, உலகம் முழுவதிலும் அவர்கள் அனுபவித்துவருவதைக் குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை. உதாரணமாக, எல் டியரியோ வாஸ்கோ என்ற ஸ்பானிய மொழி செய்தித்தாள், ஸ்பெய்னில் வரி ஏய்ப்பு பரவலாக இருப்பதைக் குறித்து கூறிவிட்டு இவ்விதமாகச் சொன்னது: “ஒரே விதிவிலக்கு யெகோவாவின் சாட்சிகளே. அவர்கள் சொத்துக்களை வாங்குகையில் அல்லது விற்கையில் அவர்கள் குறிப்பிடும் மதிப்பு முற்றிலும் உண்மையாக இருக்கிறது.” அதேவிதமாகவே, ஐ.மா. செய்தித்தாள் சான் ஃபிரான்ஸிஸ்கோ எக்ஸாமினர் சில வருடங்களுக்கு முன்பாக இவ்விதமாக குறிப்பிட்டது: “நீங்கள் [யெகோவாவின் சாட்சிகளை] முன்மாதிரியான குடிமக்களாக கருதலாம். அவர்கள் ஊக்கமாக வரி செலுத்துகிறார்கள், நோயுற்றவர்களைக் கவனிக்கிறார்கள், எழுத்தறிவின்மையை ஒழிக்கப் பாடுபடுகிறார்கள்.”
எந்த ஒரு மெய்க்கிறிஸ்தவனும், ஊக்கமான முயற்சியினால் பெறப்பட்ட இந்த நற்பெயரைக் களங்கப்படுத்தக்கூடிய எதையும் செய்ய விரும்பமாட்டான். நீங்கள் ஒரு தெரிவுசெய்ய வேண்டியிருந்தால், கொஞ்சம் பணத்தை சேமிப்பதற்காக, வரியை ஏமாற்றியவன் என்பதாக அறியப்படும் அபாயத்தை ஏற்பீர்களா? இல்லை. நிச்சயமாகவே, உங்கள் நற்யெரைக் கெடுத்து உங்களுடைய மதிப்பீடுகள் மற்றும் யெகோவாவின் வணக்கத்தின் மீதும்கூட சாதகமற்ற எண்ணத்தைத் தோற்றுவிப்பதற்குப் பதிலாக பணத்தை இழக்கவே நீங்கள் விரும்புவீர்கள்.
உண்மையில், நியாயமான, நேர்மையான ஒரு நபர் என்ற ஒரு நற்பெயரைக் காத்துக்கொள்வது சில சமயங்களில் பணச்செலவை உட்படுத்தலாம். பண்டைய கிரேக்க தத்துவஞானி பிளேட்டோ சுமார் 24 நூற்றாண்டுகளுக்கு முன்பாக குறிப்பிட்டது போலவே: “வருமான வரி செலுத்தவேண்டியிருக்கையில், ஒரே அளவு வருமானத்துக்கு நியாயமான மனிதன் அதிகமாகவும் அநியாயமான மனிதன் குறைவாகவும் செலுத்துவான்.” நியாயமாக இருப்பதற்கு ஆகும் செலவுக்காக நியாயமான மனிதன் ஒருபோதும் வருந்துவதில்லை என்றும்கூட அவர் சேர்த்திருக்கலாம். அப்படிப்பட்ட ஒரு நற்பெயரைக் கொண்டிருப்பதே செலவுக்குத் தகுதியுள்ளதாக இருக்கிறது. இது கிறிஸ்தவர்களின் விஷயத்தில் உண்மையாக இருக்கிறது. அவர்களுடைய நற்பெயர் அவர்களுக்கு விலைமதிப்புள்ளதாக இருக்கிறது, ஏனென்றால் அது அவர்களுடைய பரம தந்தையைக் கனப்படுத்தி மற்றவர்களைத் தங்களுடைய வாழ்க்கை முறைக்கும் தங்களுடைய கடவுளாகிய யெகோவாவிடமாகவும் கவர்ந்திழுக்க உதவிசெய்கிறது.—நீதிமொழிகள் 11:30; 1 பேதுரு 3:1.
ஆனால், எல்லாவற்றுக்கும் மேலாக, மெய்க் கிறிஸ்தவர்கள் யெகோவாவோடு தங்களுடைய சொந்த உறவை மதிக்கிறார்கள். அவர்கள் செய்யும் எல்லாவற்றையும் கடவுள் பார்க்கிறார், அவரைப் பிரியப்படுத்த அவர்கள் விரும்புகிறார்கள். (எபிரெயர் 4:13) ஆகவே, அரசாங்கத்தை ஏமாற்றும் அந்தச் சோதனையை அவர்கள் எதிர்க்கிறார்கள். கடவுள் நேர்மையான, செம்மையான நடத்தையில் மகிழ்ச்சியைக் காண்கிறார் என்பதை அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். (சங்கீதம் 15:1-3) அவர்கள் யெகோவாவின் இருதயத்தைச் சந்தோஷப்படுத்த விரும்புவதால், அவர்கள் செலுத்தவேண்டிய எல்லா வரிகளையும் செலுத்துகிறார்கள்.—நீதிமொழிகள் 27:11; ரோமர் 13:7.
[அடிக்குறிப்புகள்]
a அவிசுவாசியாக இருக்கும் ஒரு துணைவரோடு கூட்டு வரி அறிக்கையைச் சமர்ப்பிக்கும் கிறிஸ்தவர்களுக்கு இது ஒரு சவாலாக இருக்கக்கூடும். ஒரு கிறிஸ்தவ மனைவி தலைமைத்துவ நியமத்தை இராயனுடைய வரி சம்பந்தப்பட்ட சட்டங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டிய அவசியத்தோடு சமநிலைப்படுத்த மனச்சாட்சிப்பூர்வமான முயற்சியை எடுப்பாள். உண்மைக்குப் புறம்பான ஆவணத்தில் அறிந்தே கையொப்பமிடுவதால் வரக்கூடிய சட்டப்பூர்வமான பின்விளைவுகளைக் குறித்து அவள் அறிந்தவளாக இருக்கவேண்டும்.—ரோமர் 13:1; 1 கொரிந்தியர் 11:3-ஐ ஒப்பிடுக.
b அக்கறையூட்டும்விதமாக, மத்தேயு சுவிசேஷம் மாத்திரமே இயேசுவின் பூமிக்குரிய வாழ்க்கையில் நடந்த இந்தச் சம்பவத்தைப் பதிவுசெய்கிறது. முன்னாள் வரிவசூலிப்பவனாக இருந்த மத்தேயுதானே, இந்த விஷயத்தில் இயேசுவின் மனநிலையைக் குறித்து மனம் கவரப்பட்டிருந்தார் என்பதில் சந்தேகமில்லை.