உங்கள் மதம் ஒருபோதும் கைவிடப்படக்கூடாத ஒரு கப்பலா?
ஒரு கப்பல் கடும் புயல் நடுவே இருக்கிறது. தங்கள் கப்பலைப் பாதுகாக்க வேண்டும் என்று இறுதிக்கட்டத்தில் போராடிக் கொண்டிருக்கும் கப்பலோட்டிகள் திடீரென்று தீர்மானம் செய்யவேண்டிய நிலையை எதிர்ப்படுகின்றனர்: கப்பலுக்குள்ளே இருப்பதா அல்லது கப்பலை விட்டுவிட்டு தங்களைக் காப்பாற்றிக்கொள்வதா. இந்தத் திகிலூட்டும் காட்சி மதசம்பந்தமான உவமையாக பயன்படுத்தப்பட்டிருப்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?
இறையியலார், விசேஷமாக கத்தோலிக்க கல்விமான்கள், ஒரு புயலைச் சமாளித்து முன்னேறிக் கொண்டிருக்கும் ஒரு கப்பலுக்குத் தங்கள் சர்ச்-ஐ அடிக்கடி ஒப்பிடுகின்றனர். இயேசுவை அல்லது பேதுருவை தலைமை ஸ்தானத்தில் கொண்டிருக்கும் இந்தக் கப்பல் இரட்சிப்புக்கான ஒரே வழியைப் பிரதிநிதித்துவம் செய்கிறது என்று அவர்கள் சொல்கின்றனர். குருமார்களின் நிலை: ‘கப்பலை ஒருபோதும் கைவிட்டு விடாதீர்கள். இதற்கு முன்பு சர்ச் கவலைக்குரிய நெருக்கடியான நிலைமைகளை அனுபவித்திருக்கிறது, ஆனால் அது சரித்திரத்தின் எல்லா கடுங் கொந்தளிப்புகளிலிருந்தும் தப்பியிருக்கிறது.’ சிலர் சொல்கின்றனர்: ‘கத்தோலிக்க சர்ச்சை ஏன் கைவிட வேண்டும்? வேறு என்ன வழிகள் இருக்கின்றன? அதிலேயே தங்கியிருந்து அமைதலான தண்ணீர்களுக்குள் அதை செலுத்த ஏன் உதவக்கூடாது?’
இந்த அடையாள மொழிக்கு இசைவாக, எல்லா வகையான மதங்களைச் சேர்ந்த அநேக மக்கள் இவ்வாறு விவாதிக்கின்றனர்: ‘என்னுடைய மதம் அநேக விஷயங்களில் தவறாக இருக்கிறது என்பதை நான் அறிந்திருக்கிறேன், ஆனால் அது மாறிவிடும் என்று நம்பிக்கையாயிருக்கிறேன். நான் அதை கைவிட்டுவிட விரும்பவில்லை. அதன் கஷ்டங்களை அது மேற்கொள்வதற்கு உதவுவதில் நான் ஒரு பங்கைக் கொண்டிருக்க விரும்புகிறேன்.’ இவ்விதமாய் காரணங்காட்டிப் பேசுவது ஒருவருடைய முன்னோர்களின் மதத்தின் பேரில் கொண்டுள்ள உண்மைமனதோடு கூடிய பாசத்தின் காரணத்தாலும் அல்லது அதைக் ‘காட்டிக்கொடுத்து விடுவோம்’ என்ற பயத்தாலும்கூட உந்தப்பட்டிருக்கலாம்.
கத்தோலிக்க சர்ச்சிலிருந்து பிரிந்து சென்ற பிரபல இறையியலர் ஹான்ஸ் குன் என்பவரின் பொருத்தமான உதாரணம் உள்ளது. அவர் ஆழ்ந்த சிந்தனையுடன் சொன்னார்: “புயலின் போது இன்றுவரை என்னோடு பயணம் செய்துகொண்டிருந்தவர்களிடம் காற்றையும் ஒழுக்கலையும் எதிர்ப்பதற்கு, தப்பிப்பிழைப்பதற்காக ஒருவேளை போராடுவதையும் விட்டுவிட்டு நான் கப்பலைக் கைவிட வேண்டுமா?” அவர் பதிலளித்தார்: “சர்ச்சுக்கு உள்ளேயே நான் திறம்பட்ட விதத்தில் செயல்பட்டுவருவதை விட்டுக்கொடுக்க மாட்டேன்.” மற்றொரு வழி, “உயர்ந்த மதிப்பீடுகளை நேசிப்பதன் காரணமாகவும், இன்னுமதிக மெய்யான கிறிஸ்தவர்களாக ஆவதற்கும், சர்ச் கடமை தவறியதன் காரணமாக நான் அதை விட்டுப் பிரிந்து செல்வதாகும்.”—டை ஹேஃப்நங் பிவாரன்.
எல்லா மதங்களும் சீர்திருத்தம் செய்துகொள்வதற்கு வரையறையற்ற காலப்பகுதியைக் கடவுள் தன் இரக்கத்தின் காரணமாக அனுமதிப்பார் என்ற நம்பிக்கையுடன் ஒரு நபர் தன் சொந்த சர்ச் என்ற படகுக்குள் தங்கியிருக்கலாமா? அது ஒரு கருத்தார்ந்த கேள்வி. உவமை குறிப்பிட்டுக் காட்டுகிறபடி, அபாயத்திலிருக்கும் கப்பலை விட்டு விரைவாக வெளியேறி பாதுகாப்பற்ற உயிர்காப்புப் படகுக்குள் செல்வது, மூழ்கிக்கொண்டிருக்கும் ஒரு கப்பலுக்குள் இருப்பதைப் போன்றே அபாயகரமானதாக இருக்கும். சர்ச்சின் நிலைமை என்னவாக இருந்தாலும் அதற்குள் இருப்பது ஞானமான காரியமா? இன்றைய மதங்கள் என்ன சீர்திருத்த எதிர்பார்ப்புகளை அளிக்கின்றன? கடவுளுடைய சித்தத்துக்கு எதிராக அவர்கள் வேலை செய்வதற்கு அவர் இன்னும் எவ்வளவு காலம் அவர்களை அனுமதிப்பார்?
[பக்கம் 3-ன் படத்திற்கான நன்றி]
Chesnot/Sipa Press