என் ஜீவனைக் கொண்டு நான் செய்யக்கூடிய மிகச்சிறந்த காரியம்
பாப் ஆன்டர்சன் சொன்னபடி
சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு, சில நண்பர்கள் என்னைக் கேட்டார்கள்: “ஒரு பயனியராக நீங்கள் ஏன் இவ்வளவு காலம் தொடர்ந்து சேவை செய்து வருகிறீர்கள் பாப்?” நான் புன்னகை புரிந்துவிட்டு சொன்னேன், “பயனியர் செய்வதைக் காட்டிலும் சிறந்தது வேறு ஏதாவதை நீங்கள் யோசித்துப் பார்க்கமுடியுமா?”
நான் 1931-ல் பயனியர் சேவை செய்ய ஆரம்பித்த போது எனக்கு வயது 23. நான் இப்போது என் 87-வது வயதில் இருக்கிறேன், இன்னும் பயனியர் செய்துகொண்டிருக்கிறேன். என் வாழ்க்கையில் இதைக் காட்டிலும் மேலானதை நான் செய்திருக்க முடியாது என்பதை அறிந்திருக்கிறேன். ஏன் என்பதை நான் விளக்குகிறேன்.
1914-ல் எங்கள் வீட்டில் ஒரு துண்டுப்பிரதி விட்டுச்செல்லப்பட்டது. அது சர்வதேச பைபிள் மாணாக்கர்களால் பிரசுரிக்கப்பட்டிருந்தது, யெகோவாவின் சாட்சிகள் அப்போது அவ்வாறு தான் அழைக்கப்பட்டனர். அந்தச் சாட்சி திரும்பி வந்த போது, என்னுடைய தாய் நரக அக்கினியைப் பற்றி அவரை அதிக நுணுக்கமான கேள்வி கேட்டார்கள். அவர்கள் வெஸ்லியன் மெத்தடிஸ்ட் பிரிவைச் சேர்ந்தவராக அதிக கண்டிப்பான முறையில் வளர்க்கப்பட்டிருந்தார்கள், ஆனால் ஒரு அன்பான கடவுள் என்றென்றுமாக வதைப்பார் என்ற இந்தக் கோட்பாட்டை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவேயில்லை. அவ்விஷயத்தைப் பற்றிய சத்தியத்தைக் கற்றறிந்தவுடனேயே, அவர்கள் சொன்னார்கள்: “என் வாழ்க்கையில் எப்போதும் இருப்பதைக் காட்டிலும் அதிக சந்தோஷமாக உணருகிறேன்!”
மெத்தடிஸ்ட் சர்ச்சின் சண்டே ஸ்கூலில் கற்பிப்பதை என் அம்மா உடனே நிறுத்திவிட்டு, சிறிய தொகுதியாயிருந்த பைபிள் மாணாக்கர்களோடு சேர்ந்து கொண்டார்கள். அவர்கள் எங்களுடைய பட்டணமாகிய பெர்க்கன்ஹெடில் பிரசங்கிக்க ஆரம்பித்தார்கள், அது மெர்சி நதிக்கு குறுக்கே உள்ள லிவர்பூல் துறைமுகத்துக்கு எதிராக இருக்கிறது. விரைவில் அவர்கள் அருகிலிருந்த பட்டணங்களுக்குச் சைக்கிளில் ஒழுங்காக செல்ல ஆரம்பித்தார்கள். அவர்கள் இந்த விரிவான பிராந்தியத்தில் தன் வாழ்க்கையின் எஞ்சிய காலமெல்லாம் சாட்சி கொடுத்தார்கள், தன் பிள்ளைகளுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியை வைத்தார்கள். அவர்கள் 1971-ல் அதிக முதிர்ந்த 97-வது வயதில் இறந்தார்கள், இறுதிவரை ஒரு சுறுசுறுப்பான சாட்சியாக இருந்தார்கள்.
பைபிள் மாணாக்கர்களின் கூட்டத்துக்கு எங்கள் அம்மாவோடு செல்வதற்காக, மூத்த சகோதரி காத்லெனையும் என்னையும் மெத்தடிஸ்ட் சண்டே ஸ்கூலிலிருந்து என் அம்மா மாற்றிவிட்டார்கள். பின்னர் என் அப்பா எங்களோடு வந்ததனால், என் பெற்றோர் தி ஹார்ப் ஆஃப் காட் என்ற புத்தகத்தில் ஒரு ஒழுங்கான குடும்ப பைபிள் படிப்பை ஏற்பாடு செய்தார்கள். அந்த நாட்களில் அப்படிப்பட்ட ஒரு படிப்பு புதிய பழக்கமாக இருந்தது, ஆனால் அடிப்படை பைபிள் சத்தியத்தில் இந்த ஆரம்பகால அஸ்திவாரம் போடப்பட்டதானது மிகுதியான பலனைத் தந்தது, ஏனென்றால் காலப்போக்கில் என் சகோதரியும் நானும் பயனியர் சேவை செய்ய ஆரம்பித்தோம்.
லிவர்பூலில் 1920-ல் “படைப்பைப் பற்றிய நிழற்பட நாடகம்” (ஆங்கிலம்) ஒன்றை பார்த்தது பிள்ளைகளாகிய எங்களுக்கு ஆவிக்குரியவிதத்தில் திருப்புமுனையாக இருந்தது என்று என் அம்மா நினைத்தார்கள், அவர்கள் நினைத்தது சரியாகவே இருந்தது. நான் இளைஞனாக இருந்தபடியால், அப்படக்காட்சி என் மனதில் தெளிவான பதிவுகளை விட்டுச் சென்றது. இயேசுவின் வாழ்க்கையை சித்தரித்துக் காட்டிய பகுதி, விசேஷமாக மரிப்பதற்கு நடந்து சென்றதைக் காட்டிய பகுதி, என் நினைவில் அதிக தெளிவாக இருந்தது. அந்த முழு அனுபவமும் வாழ்க்கையில் அதிமுக்கியமான வேலையின்மீது என் கவனத்தை ஒருமுகப்படுத்த எனக்கு உதவியது—பிரசங்க வேலை!
1920-களின் ஆரம்பத்தில், நான் என் அம்மாவோடு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்களில் துண்டுப்பிரதிகளை விநியோகிக்க ஆரம்பித்தேன். துண்டுப்பிரதிகளை வீடுகளில் விட்டுவரும்படி முதலில் எங்களுக்குச் சொல்லப்பட்டது; வீட்டுக்காரர்களிடம் அவற்றைக் கொடுத்து விட்டு பின்னர் அக்கறையாயிருப்போரை மறுபடியும் சந்திக்கும்படி அதற்குப் பிறகு எங்களுக்குச் சொல்லப்பட்டது. இன்று அதிக பலன் தரும் நம்முடைய மறுசந்திப்பு மற்றும் பைபிள் படிப்பு வேலைக்கு ஆரம்ப காலத்தில் அது ஒரு அடிப்படையாக இருந்தது என்று நான் எப்போதும் இதை எண்ணினேன்.
பயனியர் சேவைக்குள் பிரவேசித்தேன்!
காத்லெனும் நானும் 1927-ல் முழுக்காட்டப்பட்டோம். நான் லிவர்பூலில் ஆராய்ச்சி செய்யும் பகுப்பாய்வு முறை வேதியியலராக வேலை செய்து கொண்டிருந்தேன், அப்போது 1931-ல் யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயரைத் தழுவிக்கொள்ளும்படி செய்த தீர்மானத்தை கேட்டேன். லிவர்பூலில் சொஸைட்டியின் கோல்போர்ட்டர்கள் (தற்போது பயனியர்கள் என அழைக்கப்படுவோர்) வியாபார பிராந்தியங்களில் வேலை செய்வதை அடிக்கடி பார்த்திருக்கிறேன், அவர்களுடைய முன்மாதிரி என்னை அதிகமாகக் கவர்ந்தது. உலகப்பிரகாரமான கூட்டுறவிலிருந்து விடுபட்டு, யெகோவாவின் சேவையில் என் வாழ்க்கையை செலவழிப்பதற்கு எவ்வளவு வாஞ்சையாயிருந்தேன்!
அந்த வருட கோடைகாலத்தின் போது, என் நண்பர் ஜெரி கரார்ட், உவாட்ச்டவர் சொஸைட்டியின் இரண்டாவது பிரஸிடென்ட்டாயிருந்த ஜோசப் எஃப். ரதர்ஃபர்டு என்பவரிடமிருந்து இந்தியாவில் பிரசங்கிப்பதற்கு ஒரு நியமிப்பை ஏற்றுக்கொண்டிருப்பதாக என்னிடம் சொன்னார். கப்பலில் பிரயாணப்படுவதற்கு முன்பு, அவர் என்னை வந்து சந்தித்து முழுநேர ஊழிய சிலாக்கியத்தைப் பற்றி பேசினார். அவர் விடைபெற்றுச் செல்வதற்கு சற்றுமுன் இவ்வாறு சொல்லி என்னை அதிகமாக உற்சாகப்படுத்தினார்: “நீங்கள் சீக்கிரத்தில் ஒரு பயனியராக ஆவீர்கள் என்று நான் நிச்சயமாயிருக்கிறேன், பாப்.” அது தான் நடந்தது. நான் அந்த அக்டோபர் 1931-ல் பயனியராக ஆனேன். நாட்டுப்புற சந்துகளின் வழியாய் சைக்கிளில் சென்றது, ஒதுக்குப்புற ஜனசமுதாயங்களிடம் பிரசங்கித்தது எவ்வளவு சந்தோஷமும் சுயாதீனமுமாய் இருந்தது! நான் அதிக முக்கியமான வேலையில் இறங்கினேன் என்பதை அப்போது அறிந்திருந்தேன்.
என்னுடைய முதல் பயனியர் நியமிப்பு சௌத் வேல்ஸில் இருந்தது, நான் அங்கு சிரில் ஸ்டென்ட்டிஃபர்டு என்பவரோடு சேர்ந்து கொண்டேன். சிரில் பின்பு காத்லெனை மணந்துகொண்டார், அவர்கள் இருவரும் அநேக வருடங்கள் ஒன்றாக பயனியர் செய்தனர். அவர்களுடைய மகள், ரூத் பயனியர் சேவையில் சேர்ந்து கொண்டாள். 1937-க்குள் நான் ஃபீலீட்வுட், லான்க்கஷெர் என்ற இடத்தில் இருந்தேன்—எரிக் குக் என்னுடைய பயனியர் கூட்டாளியாக இருந்தார். அந்தச் சமயம் வரை, சபை பிராந்தியத்துக்கு வெளியே பயனியர்கள் பிரிட்டனின் கிராமிய பகுதிகளில் மட்டும் வேலை செய்து கொண்டிருந்தார்கள். சொஸைட்டியின் லண்டன் கிளைக்காரியாலய வேலைக்கு அப்போது உத்தரவாதமுள்ளவராயிருந்த ஆல்பர்ட் டி. ஷ்ரோடர் என்பவர், யார்க்ஷெரில் உள்ள பிராட்ஃபர்டு நகரத்துக்கு எங்களை அனுப்ப தீர்மானம் செய்தார். பிரிட்டனில் உள்ள பயனியர்கள் ஒரு குறிப்பிட்ட சபைக்கு உதவி செய்ய முதல் முறையாக நியமிக்கப்பட்டது இதுவே முதல் சமயம்.
உவாட்ச்டவர் கிலியட் பைபிள் பள்ளிக்கு 1946-ல் எரிக் சென்றார், இப்போது ஜிம்பாப்வி என்றழைக்கப்படும் தென் ரோடீஷியாவுக்கு அவர்கள் அனுப்பப்பட்டனர், தென் ஆப்பிரிக்காவிலுள்ள டர்பனில் அவரும் அவருடைய மனைவியும் மிஷனரிகளாக உண்மையோடு இன்னும் சேவித்துக் கொண்டிருக்கின்றனர்.
1938-ஆம் ஆண்டு நான் மற்றொரு நியமிப்பைப் பெற்றுக்கொண்டேன், இந்தச் சமயம் வடமேற்கு லான்க்கஷெர் மற்றும் அழகான ஏரி மாவட்டத்துக்கு மண்டல ஊழியனாக (தற்போது வட்டாரக் கண்காணி என அழைக்கப்படுகிறது) சென்றேன். அங்கு நான் ஆலிவ் டெக்கட்-ஐ சந்தித்தேன், நாங்கள் திருமணம் செய்துகொண்ட பிறகு, அவள் உடனடியாக என்னோடு வட்டார வேலையில் சேர்ந்துகொண்டாள்.
போர் வருடங்களின் போது அயர்லாந்து
செப்டம்பர் 1939-ல் ஜெர்மனிக்கு எதிராக பிரிட்டன் போரிடப் போவதாக அறிவித்தபோது, என்னுடைய நியமிப்பு அயர்லாந்துக்கு மாற்றப்பட்டது. இராணுவப்படையில் கட்டாயமாகச் சேர்க்கப்படுதல் பிரிட்டனில் ஆரம்பமாகியிருந்தது, ஆனால் அயர்லாந்தின் தெற்கு குடியரசில் அவ்வாறில்லை, அது போர் சமயத்தின்போது ஒரு நடுநிலைமை வகிக்கும் தேசமாக நிலைத்திருந்தது. அயர்லாந்து குடியரசும் வடக்கு அயர்லாந்தும் ஒரு வட்டாரமாக மாற இருந்தது. தடைகள் அமலில் இருந்தன, எனினும் பிரிட்டனை விட்டு அயர்லாந்தின் எந்தப் பகுதிக்குள்ளும் செல்ல பிரயாண அனுமதிகள் பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாயிருந்தது. நான் போகலாம் என்று அதிகாரிகள் என்னிடம் கூறினர், ஆனால் இராணுவப்படையில் ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்தவுடன் இங்கிலாந்துக்கு உடனடியாக திரும்புவதற்கு ஒத்துக்கொள்ள வேண்டியிருந்தது. நான் வாய்மொழியாக ஒப்புக்கொண்டேன், ஆனால் ஆச்சரியப்படும்விதத்தில் எனக்கு அனுமதி வழங்கப்பட்டபோது, எந்த நிபந்தனைகளும் அதோடு சேர்க்கப்படவில்லை!
அந்தச் சமயத்தில் அயர்லாந்து முழுவதும் 100 சாட்சிகளுக்கு மேல் இருந்தனர். நவம்பர் 1939-ல் நாங்கள் டப்ளினுக்கு வந்து சேர்ந்தபோது, நீண்டகாலமாக பயனியராக இருந்த ஜாக் கார் என்பவர் எங்களை சந்தித்தார். பக்கத்து பட்டணம் ஒன்றில் இரண்டு கூடுதலான பயனியர்களும், டப்ளினில் சில அக்கறையுள்ள நபர்களும் சேர்த்து மொத்தம் சுமார் 20 பேர் இருக்கின்றனர் என்று எங்களிடம் சொன்னார். டப்ளினில் கூட்டத்துக்காக ஒரு அறையை ஜாக் வாடகைக்கு எடுத்தார், அதில் எல்லாரும் ஒவ்வொரு ஞாயிறும் ஒழுங்காக கூடிவர ஒத்துக்கொண்டனர். அங்கு 1940-ல் சபை ஸ்தாபிக்கப்படும் வரை இந்த ஏற்பாடு தொடர்ந்து இருந்தது.
ஐக்கிய மாகாணங்களின் பாகமாயிருந்த வட அயர்லாந்து ஜெர்மனியோடு போரில் ஈடுபட்டிருந்தது, ஆகையால் நாங்கள் வடக்கே பெல்ஃபாஸ்ட்டுக்கு சென்றபோது, உணவு பங்கீட்டுப் புத்தகங்களை நாங்கள் கொண்டிருந்தோம், இரவில் இருட்டடிப்போடு போராட வேண்டியிருந்தது. நாசி விமானங்கள் பெல்ஃபாஸ்ட்டுக்கும், ஐரோப்பாவில் உள்ள தங்கள் தங்குமிடங்களுக்குத் திரும்புவதற்கும் 1,600 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் பறக்கவேண்டியிருந்தாலும், அவர்கள் திறம்பட்ட விதத்தில் பட்டணத்தை வெடிகுண்டால் தாக்கினர். முதல் தாக்குதலின்போது, எங்களுடைய ராஜ்ய மன்றம் சேதமடைந்தது, நகரத்தின் மற்றொரு பகுதியிலிருந்த சகோதரர்களைச் சந்தித்துக்கொண்டிருக்கையில் எங்களுடைய வீடு அழிக்கப்பட்டது, ஆகையால் நாங்கள் அற்புதமான விதத்தில் தப்பித்துக்கொண்டோம். அதே இரவு, ஒரு சாட்சி குடும்பம் குண்டுவீச்சு மறைவிடத்துக்குச் சென்றனர். அவர்கள் அங்கு சென்றபோது, அது நிரம்பியிருந்ததைக் கண்டனர், ஆகையால் அவர்கள் தங்கள் வீட்டுக்குத் திரும்பிவர வேண்டியிருந்தது. அந்த மறைவிடம் குண்டுவீச்சால் நேரடியாக தாக்கப்பட்டது, அதிலிருந்த அனைவரும் கொல்லப்பட்டனர், ஆனால் நம்முடைய சகோதரர்கள் சில வெட்டுகளோடும் காயங்களோடும் உயிர்த்தப்பினர். இப்படிப்பட்ட கடினமான போர் வருடங்களின்போது, நம்முடைய சகோதரர்களில் ஒருவர்கூட அதிக மோசமாக காயமடையவில்லை, அதற்காக நாங்கள் யெகோவாவுக்கு நன்றி கூறினோம்.
ஆவிக்குரிய உணவு வழங்குதல்
போர் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கையில், தடைகள் அதிக கண்டிப்பாக ஆனது, இறுதியில் தபால் முன்தணிக்கை செய்யப்பட்டது. காவற்கோபுர பத்திரிகையை தேசத்துக்குள் அனுமதிக்க தடைசெய்யப்படுவதை இது அர்த்தப்படுத்தியது. என்ன செய்வது என்று நாங்கள் சிந்தித்துக்கொண்டிருந்த போதிலும், யெகோவாவின் கரம் குறுகியதாய் இல்லை. ஒரு நாள் காலையில் கனடாவிலிருந்து குடும்ப விஷயங்களைப் பற்றி எனக்கு எழுதிக்கொண்டிருந்த ஒரு “சொந்தக்காரரிடமிருந்து” எனக்கு ஒரு கடிதம் வந்தது. அவர் யார் என்று எனக்கு எதுவும் தெரியாது, ஆனால் ஒரு பிற்சேர்க்கையில் அவர் நான் வாசிப்பதற்கு “ஒரு அக்கறையூட்டும் பைபிள் கட்டுரையை” வைத்திருப்பதாக எழுதியிருந்தார். அது காவற்கோபுர பத்திரிகையின் ஒரு பிரதியாக இருந்தது, அதன் அட்டை ஒழுங்காக பிரசுரிக்கப்படும் காவற்கோபுரம் போல் இல்லாமல் இருந்ததால், முன்தணிக்கை செய்பவர் அதை எடுக்கவில்லை.
உடனடியாக நானும் என் மனைவியும் உள்ளூர் சாட்சிகளின் உதவியோடு, “நிழற்பட நாடக” வேலையிலிருந்த மாகி கூப்பர் உட்பட, கட்டுரைகளை நகல்கள் எடுக்க ஆரம்பித்தோம். காவற்கோபுர பத்திரிகை அட்டை இல்லாமல் கனடா, ஆஸ்திரேலியா, ஐக்கிய மாகாணங்கள் போன்ற இடங்களிலிருந்த அநேக புதிய நண்பர்களிடமிருந்து ஒழுங்காக வர ஆரம்பிக்கையில், நாங்கள் தேசம் முழுவதும் 120 பிரதிகளை அனுப்ப எங்களையே விரைவில் ஒழுங்கமைத்துக் கொண்டோம். அவர்கள் ஊக்கமாகவும் தயவாகவும் இருந்ததன் காரணமாக நாங்கள் போர் காலப்பகுதி முழுவதும் ஒரு பிரதிகூட தவறாமல் பெற்றுக்கொண்டோம்.
நாங்கள் மாநாடுகளையும்கூட கொண்டிருந்தோம். அதில் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது 1941-ஆம் ஆண்டு நடந்த மாநாடு, அதில் பிள்ளைகள் என்ற புதிய ஆங்கிலப் பிரசுரம் வெளியிடப்பட்டது. முன்தணிக்கை செய்பவர் பிள்ளைகளைப் பற்றிய புத்தகம் என்பதாக அதை நினைத்ததால் தடைசெய்யவில்லை எனத் தோன்றியது, ஆகையால் புத்தகங்களை எந்தவித கஷ்டமுமின்றி தேசத்துக்குள் கொண்டுவர எங்களால் முடிந்தது! மற்றொரு சமயம், சமாதானம்—அது நீடித்திருக்குமா? என்ற ஆங்கில சிறு புத்தகத்தை உள்ளூரில் அச்சிட்டோம், ஏனென்றால் லண்டனிலிருந்து பிரதிகளை இறக்குமதி செய்வது கூடாதகாரியமாயிருந்தது. எங்கள்மீது சுமத்தப்பட்ட எல்லா தடைகளின் மத்தியிலும், நாங்கள் ஆவிக்குரியப் பிரகாரமாய் நன்கு கவனிக்கப்பட்டிருந்தோம்.
எதிர்ப்பை மேற்கொள்ளுதல்
பெல்ஃபாஸ்ட்டில் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் நடத்திக்கொண்டிருந்த மருத்துவமனை ஒன்றில் ஒரு குருமார் தங்கியிருந்தார். அவர் இங்கிலாந்தில் இருந்த அவருடைய மனைவிக்கு செல்வங்கள் என்ற ஆங்கிலப் புத்தகத்தின் பிரதி ஒன்றை அனுப்பினார். அவள் சத்தியத்துக்கு எதிர்ப்பைத் தெரிவித்தாள், அவள் எழுதியிருந்த பதிலில் அந்தக் குறிப்பை தெளிவாக ஆக்கியிருந்தாள். அவள் நம்முடைய அமைப்பு “நாட்டுப்பற்று அற்ற ஒரு அமைப்பு” என்றும்கூட உறுதிப்படுத்தியிருந்தாள். தபால் முன்தணிக்கை செய்பவர் இதைக் கவனித்து, குற்றங்களைப் புலன் விசாரிக்கும் துறைக்கு இவ்விஷயத்தை அறிக்கை செய்தார். அதன் விளைவாக, என்னைக் காவலர் வசிக்குமிடத்துக்கு அழைத்து விளக்கம் கொடுக்கும்படியாக கேட்டுக்கொண்டார்கள், செல்வங்கள் என்ற புத்தகத்தின் ஒரு பிரதியைக் கொண்டுவரும்படி சொன்னார்கள். அக்கறைக்குரியவிதமாக, அந்தப் புத்தகத்தை இறுதியில் திருப்பிக்கொடுத்த போது, கீழே கோடிட்டிருந்த பகுதிகள் எல்லாம் ரோமன் கத்தோலிக்க சர்ச்சைப் பற்றியிருந்தன. இது குறிப்பிடத்தக்கதாய் இருந்ததை நான் உணர்ந்தேன், ஏனென்றால் அயர்லாந்து குடியரசு இராணுவ வேலைக்கு எதிராக போலீசார் காவல் காத்துக்கொண்டிருந்தனர்.
போர்க் காலங்களின் போது நம்முடைய நடுநிலைமையைப் பற்றி நான் அதிக விவரமாகக் கேள்வி கேட்கப்பட்டேன், ஏனென்றால் நம்முடைய நிலையைப் புரிந்துகொள்வதற்கு போலீசாருக்கு அதிக கடினமாயிருந்தது. ஆனால் அதிகாரிகள் எங்களுக்கு விரோதமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பின்னர், ஒரு மாநாட்டை நடத்துவதற்கு அனுமதி கேட்டபோது, இரண்டு போலீஸ் நிருபர்களை அனுப்பப் போவதாக வற்புறுத்தினார்கள். நான் சொன்னேன், “நாங்கள் அவர்களை வரவேற்போம்!” ஆகையால் அவர்கள் வந்து பிற்பகல் கூட்டத்துக்கு ஆஜராகி சுருக்கெழுத்தில் குறிப்புகள் எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சிநிரல் முடிவில் அவர்கள் இவ்வாறு கேட்டனர், “நாங்கள் ஏன் இங்கு அனுப்பப்பட்டோம்? இவையனைத்தையும் நாங்கள் அனுபவிக்கிறோம்!” அவர்கள் அடுத்த நாளும் மறுபடியும் வந்து, சமாதானம்—அது நீடித்திருக்குமா? என்ற நம்முடைய சிறுபுத்தகத்தின் இலவச பிரதி ஒன்றை சந்தோஷமாக பெற்றுக்கொண்டனர். மாநாட்டின் எஞ்சியிருந்த பகுதியும் எந்தவித அசம்பாவிதமுமின்றி நடைபெற்றது.
போர் முடிந்தவுடனேயும், பிரயாண தடைகள் தளர்த்தப்பட்டவுடனேயும், லண்டன் பெத்தேலிலிருந்து பிரிஸ் ஹக்ஸ் என்பவர் பெல்ஃபாஸ்ட்டுக்கு வந்தார். அவரோடு ஹாரல்ட் கிங் என்பவர் வந்தார், பின்பு அவர் சீனாவுக்கு மிஷனரியாக அனுப்பப்பட்டார். லண்டன் கிளைக்காரியாலயத்திலிருந்து ஆறு வருடங்கள் தனியே இருந்த பிறகு, இந்தச் சகோதரர்கள் கொடுத்த பேச்சுக்களின் மூலம் நாங்கள் அனைவரும் அதிகமாக உற்சாகப்படுத்தப்பட்டோம். அதற்கு சிறிது காலத்துக்குப் பிறகு, ஹாரல்ட் ட்யூர்டென் என்ற மற்றொரு உண்மையான பயனியர் பெல்ஃபாஸ்ட்டில் ராஜ்ய வேலையை பலப்படுத்த இங்கிலாந்திலிருந்து அனுப்பப்பட்டார்.
இங்கிலாந்துக்குத் திரும்பி வருதல்
அயர்லாந்து சகோதரர்களிடமாக நாங்கள் ஆழமான அன்பை வளர்த்துக்கொண்டதன் காரணமாக, இங்கிலாந்துக்குத் திரும்பி வருவது கடினமாய் இருந்தது. ஆனால் நானும் என் மனைவியும் திரும்பவும் மான்செஸ்டருக்கு அனுப்பப்பட்டோம், அதற்குப் பின்பு தேவை அதிகமாயிருந்த மற்றொரு லான்க்கஷெர் பட்டணமாகிய நியுட்டன்-லி-வில்லோஸ்-க்கு நாங்கள் சென்றோம். லாயெஸ், எங்களுடைய மகள், 1953-ல் பிறந்தாள், அவள் தன் 16-ஆம் வயதில் பயனியர் சேவை செய்ய ஆரம்பித்ததைக் கண்டபோது, அது இருதயத்துக்கு அனலூட்டுவதாய் இருந்தது. அவள் டேவிட் பார்க்கின்சன் என்ற பயனியரை மணம் செய்துகொண்ட பிறகு, அவர்கள் தங்கள் முழுநேர சேவையை வட அயர்லாந்தில் தொடர்ந்து செய்தனர், அநேக வழிகளில் நானும் ஆலிவும் எடுத்திருந்த படிகளைப் பின்பற்றினர். இப்போது, தங்களுடைய பிள்ளைகளோடு, அவர்கள் இங்கிலாந்தில் இருக்கின்றனர், நாங்கள் அனைவரும் ஒரே சபையில் சேவித்துக் கொண்டிருக்கிறோம்.
எங்களுடைய சூழ்நிலைமைகளில் மாற்றங்கள் இருந்தபோதிலும், நான் பயனியர் செய்வதை நிறுத்தவேயில்லை—ஆலிவுக்கும் எனக்கும் அது விருப்பமில்லாமல் இருந்தது. பயனியர் ஊழியத்தில் என்னுடன் எப்போதும் என் மனைவியும் இருப்பதை நிச்சயித்துக்கொண்டேன், ஏனென்றால் எப்போதும் அவளுடைய அன்பான ஆதரவின்றி முழுநேர சேவையில் தொடர்ந்து இருந்திருக்க முடியாது. நாங்கள் இருவரும் இப்போது விரைவில் களைப்படைந்து விடுகிறோம், ஆனால் சாட்சி கொடுப்பது, விசேஷமாக நாங்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து எங்களுடைய அயலாரோடு பைபிள் படிப்புகளை நடத்தும் போது இன்னும் சந்தோஷமான காரியமாக இருக்கிறது. கடந்த வருடங்களில் சுமார் நூறு பேர் ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெற்ற நபர்களாக ஆவதற்கு நாங்கள் உதவி செய்யும் சிலாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம். அது பெரும் மகிழ்ச்சியாய் இருந்திருக்கிறது! இந்த எண்ணிக்கையை இப்போது அநேக தடவைகள் பெருக்க வேண்டும் என நினைக்கிறேன், ஏனென்றால் குடும்பங்களில் மூன்றாம், நான்காம் தலைமுறையில் இருப்பவர்களும்கூட சாட்சிகளாக ஆகியிருக்கின்றனர்.
கடந்து சென்ற ஆண்டுகளில் நாங்கள் கொண்டிருந்த சிலாக்கியங்களையும் அனுபவங்களையும் பற்றி நானும் ஆலிவும் அடிக்கடி பேசுவோம். அவை எப்படிப்பட்ட சந்தோஷமான வருடங்களாக இருந்திருக்கின்றன, எவ்வளவு சீக்கிரமாய் கடந்துவிட்டன! என் ஜீவனைக் கொண்டு என் கடவுளாகிய யெகோவாவை இந்த எல்லா ஆண்டுகளும் ஒரு பயனியராக சேவித்ததைக் காட்டிலும் நான் செய்திருக்கக்கூடிய மேலான காரியம் வேறு எதுவுமிருந்திருக்காது. இப்போது, கடந்து சென்ற காலத்தை நன்றியோடு நினைத்துப் பார்த்தாலோ அல்லது எதிர்காலத்தை ஆவலோடு எதிர்நோக்கியிருந்தாலோ, எரேமியாவின் வார்த்தைகள் அதிக அர்த்தத்தை உடையதாயிருப்பதைக் காண்கிறேன்: “நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்; . . . ஆகையால் அவரிடத்தில் நம்பிக்கைகொண்டிருப்பேன்.”—புலம்பல் 3:22-24.
[பக்கம் 26-ன் படம்]
பாப் மற்றும் ஆலிவ் ஆன்டர்சன்