ஏழைகள் இன்னும் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும்?
“சுயாதீனமுள்ள ஒரு சமுதாயம் ஏழைகளாயிருக்கும் அநேகருக்கு உதவிசெய்ய முடியவில்லையென்றால், செல்வந்தராயிருக்கும் சிலரை அது பாதுகாக்க முடியாது.”—ஜான் எஃப். கென்னடி.
“அனைவருக்கும் எதிர்காலம் பிரகாசமாயிருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்—ஏழ்மையின்றி, வீடில்லாத ஜனங்களின்றி ஒரு பரதீஸ்!” பிரேஸில், சாவோ பாலோ என்ற இடத்திலுள்ள ஒரு 12-வயது சிறுவன் இவ்வாறு பேசினான். ஆனால் ஏழ்மையை நீக்குவது கூடியகாரியமா? ஏழைகள் இன்னும் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும்?
சிலர் தாங்கள் விரும்பும் பொருட்களை வாங்க முடியாததன் காரணமாக தங்களையே ஏழைகளாக கருதிக்கொள்கின்றனர். ஆனால், உண்மையிலேயே ஏழ்மையால் பீடிக்கப்பட்டிருப்பவர்களின் வருந்தத்தக்க நிலையை சிந்தித்துப் பாருங்கள். அப்படிப்பட்ட ஜனங்களின் கடுமையான வறுமையையும் மகிழ்ச்சியற்ற நிலையையும் நீங்கள் கற்பனை செய்து பார்க்கமுடியுமா? சிலர், குப்பைக் குவியலைக் கிளறி உணவுக்காகத் தேடுகையில், காகங்களோடும் எலிகளோடும் போட்டியிட வேண்டிய நிலையில் உள்ளனர்! இப்படிப்பட்ட ஏழ்மை இன்னும் எவ்வளவு காலம் மனிதவர்க்கத்தை அல்லற்படுத்தும்? ஐக்கிய நாட்டு சங்கத்தின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பின் (UNESCO) பிரதான இயக்குநர் ஃபெடரீக்கோ மேயரின் வேண்டுகோள் பொருத்தமானதாக உள்ளது: “வறுமை, பசி, இலட்சக்கணக்கான மானிடர்களின் வேதனை போன்ற சகித்துக்கொள்ள முடியாதவற்றை சகித்துக்கொள்ள வைக்கும் நம்முடைய இந்த இரண்டகமான சகிப்புத்தன்மையை நாம் விட்டுவிடுவோமாக.”
சர்வலோகமும் நலம்பெற வேண்டும் என்ற கனவு நிறைவேற்றமடையுமா? ஏழைகளுக்கு என்ன நம்பிக்கை இருக்கிறது?
ஏழைகளுக்கு என்ன வாய்ப்புகள் இருக்கின்றன?
நல்லெண்ணமுள்ள தலைவர்கள் கூடுதலான வேலைகள், கூடுதலான ஊதியங்கள், மேம்பட்ட சமூகநலத் திட்டங்கள், நில சீர்திருத்தங்கள் ஆகியவற்றை பரிந்துரைக்கின்றனர். அவர்கள் முன்னாள் ஐ.மா. ஜனாதிபதியாகிய ஜான் எஃப். கென்னடியோடு ஒத்துப்போகலாம்: “சுயாதீனமுள்ள ஒரு சமுதாயம் ஏழைகளாயிருக்கும் அநேகருக்கு உதவிசெய்ய முடியவில்லையென்றால், செல்வந்தராயிருக்கும் சிலரை அது பாதுகாக்க முடியாது.” ஏழ்மையை அடியோடு நீக்குவதற்கு நல்ல உள்ளெண்ணங்கள் மட்டுமே போதாது. உதாரணமாக, பொருளாதார வளர்ச்சி ஏழைகளுக்குப் பொதுவாக உதவி செய்யுமா? அப்படிச் செய்ய வேண்டிய அவசியமில்லை. முன்னாள் இந்திய தலைவர் ஜவஹர்லால் நேரு இவ்வாறு கூறினார்: “முதலாளித்துவ சமுதாயத்தின் சக்திகளைத் தடுக்காமல் விட்டுவிட்டால், அது செல்வந்தர்களை இன்னும் செல்வந்தர்களாகவும் ஏழைகளை இன்னும் ஏழைகளாகவும் ஆக்குகிறது.” என்றபோதிலும், இன்னல் மற்றும் வறுமை மட்டுமன்றி, ஒரு மதிப்பில்லாத உணர்வு ஏழைகளின் பாரத்தை அதிகரிக்கிறது. ஏழைகள் தங்கள் உதவியற்ற மற்றும் நம்பிக்கையற்ற உணர்ச்சிகளை மேற்கொள்ள மனிதத் தலைவர்கள் அவர்களுக்கு உதவக்கூடுமா?
உண்மையில், அதிக மோசமான நிலையிலிருக்கும் ஏழைகளில் அநேகர், அதி உயர்வான பணவீக்கம், வேலையின்மை போன்ற பெருங்கஷ்டங்களை எதிர்ப்படுகையில், ஏழ்மையை சமாளிக்கவும் தாழ்ந்த சுய-மரியாதையுள்ள உணர்ச்சிகளை மேற்கொள்ளவும் கற்றுக்கொண்டிருக்கின்றனர். மேலும், நிச்சயமாய் பஞ்சம், வீடில்லா நிலைமை, துயரம் ஆகியவை முழுவதுமாக நீக்கப்படும். இது உங்களுக்கு ஆச்சரியமாய் இருக்கிறதா? நீங்கள் அடுத்த கட்டுரையை வாசிக்கும்படி நாங்கள் உங்களை அழைக்கிறோம்: “விரைவில், எவருமே ஏழையாக இரார்!”