எப்போது அவர்கள் அதை வாசிக்கின்றனர், எவ்வாறு அவர்கள் பயனடைகின்றனர்
விடியற்காலையில்:
வீட்டுக்கு வெளியே வேலை செய்யும் ஒரு திருமணமான தம்பதி, வெளியே செல்வதற்கு முன் ஒவ்வொரு நாளும் காலையில் பத்து நிமிடங்களுக்கு முன் எழும்பி அந்த நேரத்தில் பைபிளை ஒன்றாக சேர்ந்து வாசிக்க தீர்மானித்தனர். அவர்கள் வெளியே சென்ற பின்பு அவர்கள் வாசித்த விஷயங்கள் ஆரோக்கியமான சம்பாஷணைக்கு ஒரு அடிப்படையை அளிக்கிறது.
நைஜீரியாவில் ஒரு மூப்பர் தேவராஜ்ய ஊழியப்பள்ளிக்கென்று திட்டமிடப்பட்டிருக்கும் நிகழ்ச்சிநிரலை குடும்ப பைபிள் வாசிப்புக்கு அடிப்படையாக தன்னுடைய வீட்டில் பயன்படுத்துகிறார். பொதுவாக காலையில், தினந்தோறும் தினவாக்கியத்தைக் கலந்தாலோசித்த பின்பு அவர்கள் அதில் ஒரு பகுதியை ஒவ்வொரு நாளும் வாசிக்கின்றனர். நியமிக்கப்பட்டிருக்கும் பகுதிகள் சிலவற்றை வாசிப்பதில் பிள்ளைகள் மாறி மாறி வாசிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். பின்பு வாசித்த வசனங்களின் பேரில் கேள்விகள் கேட்கும்படி அழைக்கப்படுகின்றனர்.
ஜப்பானில் ஒரு குடும்பத்தலைவி முழு பைபிளையும் வருடத்துக்கு ஒருமுறை 1985 முதற்கொண்டு வாசித்திருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் காலை 5:00 மணிக்கு ஆரம்பித்து 20 முதல் 30 நிமிடங்கள் வரை வாசிப்பது அவர்களுடைய திட்டமாக இருந்தது. அதன் பயன்களைக் குறித்து அவர்கள் சொல்கிறார்கள்: “என் விசுவாசம் பலப்படுத்தப்பட்டிருக்கிறது. என்னுடைய வியாதியை மறந்து பரதீஸிய நம்பிக்கையில் என் கவனத்தை ஒருமுகப்படுத்த அது எனக்கு உதவுகிறது.”
யெகோவாவின் சாட்சியாய் இல்லாத கணவரையுடைய ஒரு சகோதரி 30 வருடங்கள் பயனியராய் இருக்கிறார்கள், அவர்கள் தங்கள் பைபிள் வாசிப்பை செய்வதற்கு ஒவ்வொரு நாளும் காலை ஐந்து மணிக்கு எழுந்துவிடுகிறார்கள். எபிரெய வேதாகமத்திலிருந்து நான்கு பக்கங்களும், கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்திலிருந்து ஒரு அதிகாரமும், நீதிமொழிகளிலிருந்து ஒரு வசனமும் வாசிப்பதை அவர்களுடைய அட்டவணை தேவைப்படுத்துகிறது. அவர்கள் 1959 முதற்கொண்டு முழு பைபிளையும் ஒவ்வொரு வருடமும் வாசித்து வருகிறார்கள். அவர்கள் சொல்கிறார்கள்: “அவ்வாறு வாசித்ததன் விளைவாக, யெகோவா என்னை நேசிப்பதாக உணருகிறேன் . . . உற்சாகம், ஆறுதல், திருத்துதல் ஆகியவற்றை பெற்றுக்கொள்கிறேன்.” கூடுதலாக அவர்கள் சொல்கிறார்கள்: “பைபிளை வாசிப்பது, யெகோவா ஒவ்வொரு நாளும் எனக்கு உயிர்ப்பூட்டுவதைப் போன்று உள்ளது.”
யெகோவாவின் சாட்சிகளுடைய வேலை தடைசெய்யப்பட்டிருந்த ஒரு நாட்டில் ஒரு சகோதரி சத்தியத்தைக் கற்றுக்கொண்டார்கள், அவர்களுடைய நம்பிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் கணவனை அவர்கள் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தன் பைபிள் வாசிப்பை திங்கட்கிழமையிலிருந்து வெள்ளிக்கிழமை வரை, காலை 6:00 மணியிலிருந்து 7:00 மணிவரை செய்கிறார்கள். இது அவர்களுக்கு உள்ளான பலத்தைக் கொடுத்திருக்கிறது. அவர்களுடைய வாசிப்பு எவ்வாறு அவர்களைப் பாதித்திருக்கிறது என்பதை நினைத்துப் பார்த்து அவர்கள் இவ்வாறு சொல்கிறார்கள்: “யெகோவாவின் வாக்குறுதிகள் தவறிப்போகாது என்பதை அறிந்து, பிரச்சினைகள் மற்றும் கஷ்டங்கள் மத்தியிலும் யெகோவாவையும் இயேசுவையும் நேசித்து சந்தோஷமாக வாழ நாம் கற்றுக்கொள்கிறோம்.”
பயனியர் சேவை பள்ளிக்கு ஆஜராயிருந்த ஒரு சகோதரி, பைபிள் வாசிப்பை தினந்தோறும் செய்வதை பழக்கமாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்று அங்கு கொடுக்கப்பட்ட புத்திமதியைப் பின்பற்ற தீர்மானமாயிருந்தார்கள். முதலில், காலை 5:00 மணியிலிருந்து 6:00 மணிவரை அவர்களால் செய்ய முடிந்தது. வேலையில் ஏற்பட்ட மாற்றம் அதோடு குறுக்கிட்டதன் காரணமாக, அவர்கள் இரவு 9:00 மணியிலிருந்து 10:00 மணிவரை அதைச் செய்வதற்கு மாற்றிக்கொண்டார்கள். சவாலாக அமைந்த மற்ற சந்தர்ப்பங்கள் எழும்பியபோது, “சூழ்நிலைமைகளுக்கு ஏற்றபடி நான் என் அட்டவணையை மாற்றிக்கொண்டே இருந்தேன்.”
நாளின் பிற்பகுதியில்:
பிரேஸில் பெத்தேல் குடும்பத்தில் அங்கத்தினர்களாக இருக்கிற இரண்டு உடன்பிறந்த சகோதரிகள் மதிய உணவுக்குப் பின்பு ஒவ்வொரு நாளும் சுமார் 20 நிமிடங்களுக்கு ஒன்றாக சேர்ந்து பைபிளை வாசிக்கும் பழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் முழு பைபிளையும் சுமார் 25 தடவைகள் வாசித்திருக்கின்றனர்; இருப்பினும் அவர்கள் இவ்வாறு எழுதுகிறார்கள்: “நாங்கள் எப்போதும் ஏதோ ஒரு புதிய காரியத்தைக் கண்டுபிடிக்கிறோம், ஆகையால் பைபிள் வாசிப்பு சலிப்பூட்டுவதாய் ஆவதே கிடையாது.”
ஜப்பானில் ஒரு மணமாகாத சகோதரி சாட்சியாக வளர்க்கப்பட்டபோதிலும், வேதாகமத்தை நன்கு அறிந்திருக்கவில்லை என்பதாக உணர்ந்தாள்; அவள் ஒரு பயனியராக ஆனபோது, பைபிளை ஒழுங்காக வாசிக்க தீர்மானமாயிருந்தாள். அவள் இப்போது தேவராஜ்ய ஊழியப்பள்ளிக்கான வாசிப்பை வாரத்தில் ஒரு நாள் மருத்துவமனைக்குப் பிரயாணம் செய்கையில் செய்கிறாள். பின்னர், வீட்டில் கூடுதலான ஆராய்ச்சி செய்கிறாள். வார இறுதியில் அவள் இன்னுமதிக பைபிள் வாசிப்பை செய்கிறாள், புத்தகங்கள் எழுதப்பட்டிருக்கும் வரிசையின்படியே அவள் அதைத் தேர்ந்தெடுக்கிறாள்.
ஏற்கெனவே முழு பைபிளையும் மூன்று முறைகள் வாசித்திருக்கும் ஒரு 13-வயது சிறுவன் இப்போது பள்ளியிலிருந்து வீட்டுக்குத் திரும்பி வரும்போது ஒவ்வொரு நாளும் ஒரு அதிகாரத்தை வாசிக்கிறான். இது “யெகோவாவிடமாக கூடுதலான அன்பை உணரும்படி” அவனுக்கு உதவியிருக்கிறது என்று அவன் சொல்கிறான்.
வேலை செய்யும் ஒரு மனிதனாக, ஒரு மூப்பராக, ஒரு கணவனாக, ஒரு தகப்பனாக அதிக வேலை நிறைந்த அட்டவணையைக் கொண்டிருக்கும் ஒரு சாட்சி இரயிலில் வேலைக்குப் பிரயாணம் செய்கையில் பைபிள் ஆடியோகேசட்டுகளை செவிகொடுத்துக் கேட்கிறார். பிறகு வீட்டில் அதே விஷயங்களைத் தனிப்பட்ட விதமாக வாசிக்கிறார்.
பிரான்ஸில் ஒரு பயனியர் தனிப்பட்ட விதமாய் வாசிப்பதோடுகூட, உணவு தயார் செய்யும்போது, வாகனம் ஓட்டிச்செல்லும்போது, கடினமான சூழ்நிலைமைகளைச் சகித்துக்கொண்டிருக்கும்போது, அல்லது வெறும் சந்தோஷத்துக்கென்று பைபிள் ஆடியோகேசட்டுகளை செவிகொடுத்துக் கேட்கிறார்.
ஜப்பானில் ஒரு 21-வயது பயனியரின் தாய் அவர் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஆவிக்குரிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தியதாக நினைவுபடுத்தி கூறுகிறார், அவர் எப்போதும் பைபிளை அதே சமயத்தில் வாசிக்காவிட்டாலும்கூட தினந்தோறும் மூன்று வயது முதற்கொண்டு வாசித்து வருகிறார். அந்நாளுக்குரிய பகுதியைத் தேர்ந்தெடுத்து வாசித்த பிறகு, முக்கிய வசனங்களை மறுபடியுமாக வாசிக்க வேண்டும் என்று நிச்சயப்படுத்திக்கொள்கிறார், பின்னர் அவர் வாசித்த காரியங்களை மனதில் மறுபடியும் சிந்திப்பதற்கு சில நிமிடங்களை எடுத்துக்கொள்கிறார்.
மற்றொரு சாட்சி, ஒரு பயனியர், கடந்த 12 வருடங்களில் முழு பைபிளையும் சுமார் பத்து தடவைகள் வாசித்து முடித்திருக்கிறார்கள். அவர்களுடைய கணவர் விசுவாசத்தில் இல்லாதவர், ஆகையால் அவர்கள் தன் வாசிப்பைப் பிற்பகல் நேரத்தில் செய்வதற்குத் திட்டமிடுகிறார்கள்.
மாலையில்:
ஜப்பானில் மூப்பராகவும் ஒழுங்கான பயனியராகவும் இருக்கும் ஒரு சகோதரர் தன்னுடைய பைபிளிலிருந்து ஒவ்வொரு நாள் இரவும் படுக்கைக்குச் செல்லுமுன் வாசிக்கிறார், அவர் இதை கடந்த எட்டு வருடங்களாக செய்து வந்திருக்கிறார். அவர் சொல்கிறார்: “யெகோவா எவ்வாறு யோசிக்கிறார், அவர் விஷயங்களைக் குறித்து எவ்வாறு உணருகிறார், அவர் எவ்வாறு சூழ்நிலைகளைக் கையாளுகிறார் போன்றவற்றை எடுத்துக்காட்டும் வேதவசனங்கள் எனக்கு மிகவும் விருப்பம். இப்படிப்பட்ட வசனங்களின் பேரில் சிந்திப்பதன் மூலம், யெகோவாவின் சிந்தனையை என்னுடைய சொந்த சிந்தனையாக ஆக்கிக்கொள்ளவும், என்னுடைய கிறிஸ்தவ சகோதரர்கள், சகோதரிகள் மற்றும் குடும்ப அங்கத்தினர்களுக்கு உதவிசெய்யவும் நான் உதவப்பட்டேன்.”
பிரான்ஸில் ஒரு மூப்பர் 1979-ஆம் வருடம் முதற்கொண்டு ஒவ்வொரு நாள் மாலையும் ஒரு மணிநேரம் பைபிளை வாசித்து வருகிறார். அவர் ஒப்பிட்டு வாசித்துப் பார்ப்பதற்காக அவருக்கு முன் ஐந்து அல்லது ஆறு மொழிபெயர்ப்புகளை பெரும்பாலும் வைத்துக்கொள்வார். “எவ்வாறு பைபிள் அறிவை அன்றாடக சூழ்நிலைகளில் பொருத்துவது” என்பதை அவருடைய கவனமான வாசிப்பு பகுத்தறிய உதவியிருக்கிறது என்று அவர் சொல்கிறார். வேதாகமத்திலிருந்து ஆலோசனை கொடுக்கும்போது அதிக திறம்பட்டவிதமாய் கொடுக்கவும்கூட இது அவருக்கு உதவியிருக்கிறது.
கடந்த 28 வருடங்களாக நைஜீரியாவில் உள்ள ஒரு சகோதரர், தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்தல் புத்தகத்தில் உள்ள அடுத்த நாள் கலந்தாலோசிப்பதற்கான வேதவசனத்தை அன்று மாலையில் வாசிப்பதை பழக்கமாக ஆக்கிக்கொண்டிருக்கிறார். அதோடுகூட, அந்த வசனம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் முழு பைபிள் அதிகாரத்தையும் அவர் வாசிக்கிறார். அவர் மணம் செய்துகொண்ட பின்பு, இப்பழக்கத்தைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார், தன் மனைவியோடு சேர்ந்து வாசித்து கலந்தாலோசிக்கிறார்.
சாட்சிகளாய் இல்லாத பெற்றோரைக் கொண்டிருக்கும் ஒரு பருவவயதினள், உறங்கச் செல்வதற்குமுன் ஒவ்வொரு நாள் இரவும் ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வாசிக்க வேண்டும் என்பதை பழக்கமாக ஆக்கிக்கொண்டிருக்கிறாள். அந்த நிமிடங்கள் அவளுக்கு மிகவும் அருமையானவை, வாசிப்பதற்கு முன்பும் பின்பும் அவள் ஜெபம் செய்கிறாள். பைபிள் எழுத்தாளர்கள் ஒவ்வொருவரும் பதிவு செய்வதற்கென்று யெகோவா ஏவிய செய்தியை அறிந்துகொள்வதுதான் அவளுடைய இலக்கு.
பெத்தேல் சேவையிலிருக்கும் ஒரு மணமான சகோதரர் கடந்த எட்டு வருடங்களாக பைபிளை வருடத்துக்கு ஒருமுறை வாசிப்பதாக சொல்கிறார். இரவில் உறங்க செல்வதற்கு முன் 20 முதல் 30 நிமிடங்கள் வரை வாசிக்கிறார். அவர் அதிக களைப்பாக இருந்தபோதிலும்கூட, பைபிளை வாசிக்காமல் படுக்கைக்குச் சென்றார் என்றால் அவருக்கு உறக்கம் வராது. அவர் படுக்கையிலிருந்து எழுந்து அந்த ஆவிக்குரிய தேவையைக் கவனிக்க வேண்டும்.