உலகெங்குமுள்ள யெகோவாவின் சாட்சிகள்—பிரேஸில்
பிரேஸில் பல வழிகளில் ஒரு பெரிய நாடாக இருக்கிறது. அளவிலும் மக்கள்தொகையிலும், உலகிலேயே ஐந்தாவது பெரிய நாடாக அது இருக்கிறது. தென் அமெரிக்காவின் நிலப்பரப்பளவில் கிட்டத்தட்ட பாதியை அது நிரப்புகிறது; மேலும் அது அந்தக் கண்டத்திலுள்ள மற்ற எல்லா நாடுகளைச் சேர்த்தாலும் உள்ள மொத்த மக்கள்தொகையைவிட அதிகத்தைக் கொண்டிருக்கிறது. உலகிலேயே மிகப் பெரிய மழைக் காடுகளையும் பிரேஸில் கொண்டிருக்கிறது. பூமியிலேயே மாபெரும் நதியாகிய அமேசான் அந்தக் காட்டின் வழியாக பாய்கிறது.
மற்றொரு அர்த்தத்திலும் பிரேஸில் மிகப் பெரிய நாடாக இருக்கிறது. கடவுளுடைய ராஜ்ய நற்செய்தியைப் பிரஸ்தாபிக்கிறவர்களுடைய எண்ணிக்கை 4,00,000-ஐ நெருங்குகிறது; மேலும், கடந்த வருடம் 10,00,000-க்கும் அதிகமானோர் கிறிஸ்துவின் மரண நினைவு ஆசரிப்புக்கு வந்திருந்தார்கள். ஆகவே, ராஜ்ய பிரசங்கிப்பு வேலையைப் பொறுத்தவரையில் இந்த நாடு விசேஷமாக மேலோங்கி நிற்கிறது. சமீபத்திய அனுபவங்கள் இந்தக் குறிப்பை விளக்குகின்றன.
தேவை அதிகமிருக்கும் இடத்தில் சேவித்தல்
ஆன்டானியோவும் அவருடைய மனைவியும் தங்களுடைய உறவினர்களையும், சாவோ பாலோவில் அவர்களுக்கிருந்த பாதுகாப்பான, நல்ல வருவாய் தரும் வேலையையும் விட்டுவிட்டு, ராஜ்ய அறிவிப்பாளர்களுக்கான தேவை அதிகமிருந்த மினஸ் ஜெரைஸ் என்ற மாநிலத்தில் சேவிக்கச் செல்லும் கடினமான தீர்மானத்தை எடுத்தார்கள். சர்க்கரை சுத்திகரிப்பு ஆலை ஒன்றிலுள்ள தொழிலாளர்களுக்கான காலனி ஒன்று அவர்களுடைய பிராந்தியத்தில் இருந்தது. அவர்கள் அங்கு சாட்சி பகர்ந்த முதல் நாளில், ஒன்பது பைபிள் படிப்புகளைத் தொடங்கினார்கள். 18 மாதங்களுக்குள், 40-க்கும் மேற்பட்ட படிப்புகளை நடத்திக்கொண்டிருந்தார்கள்!
முதலில், கூட்டங்கள் அந்தச் சுத்திகரிப்பு ஆலையிலேயே நடத்தப்பட்டன. என்றபோதிலும், அந்தப் புதிய பிரஸ்தாபிகள் நிஜமான ராஜ்ய மன்றம் ஒன்றைக் காண விரும்பினர். எனவே, 75 பேரை அருகாமையிலுள்ள சபைக்குக் கொண்டுசெல்வதற்காக ஒரு பஸ் வாடகைக்கு அமர்த்தப்பட்டது. அதற்கு பின்னர் ஒரு மாநாடு வந்தது; புதிய பைபிள் மாணாக்கர்களில் 45 பேர் சென்றனர்; அவர்கள் பேட்டி காணப்பட்டனர். அவர்களில் பதினைந்து பேர் அச்சமயம் முழுக்காட்டப்பட்டனர். நிச்சயமாகவே, ஆனந்தக் கண்ணீர் தாராளமாய் பெருக்கெடுத்தது!
அதைப்போன்ற பயணங்களுக்கு அதே பஸ் கம்பனி பயன்படுத்தப்பட்டது; அந்த அதிகாரிகள் குறைந்த கட்டணங்களை வசூலித்தார்கள். அதற்குப் போற்றுதல் காண்பிப்பவராய், ஆன்டானியோ அந்தக் கம்பனி உரிமையாளருக்கு, பைபிள் படிப்பு உதவி புத்தகம் ஒன்றை அளித்தார். அன்று மாலையே அவர் பைபிளைப் படிக்க ஆரம்பிக்க ஒத்துக்கொண்டார்; பல மாதங்கள் ஊக்கமாகப் படித்தபின் முழுக்காட்டப்பட்டார். முதலில், அவருடைய மனைவி படிப்பதை எதிர்த்தார்கள்; ஆனால் போகப்போக அவர்களுடைய மனநிலையில் கடுமை தணிந்தது. இன்று அவர்களும் யெகோவாவின் முழுக்காட்டப்பட்ட சாட்சியாக இருக்கிறார்கள்.
பிப்ரவரி 1992-ல், 22 சுறுசுறுப்பான பிரஸ்தாபிகளை உடைய ஒரு சபை உருவாக்கப்பட்டது. 1994-ற்குள்ளாக, 4 ஒழுங்கான பயனியர்கள், அல்லது நற்செய்தியை முழுநேரம் பிரசங்கிக்கிறவர்களுடன் இந்த எண்ணிக்கை 42-ஆக அதிகரித்திருந்தது. அதன் விளைவாக, ஆன்டானியோ இவ்வாறு முடிக்கிறார்: “மல்கியா 3:10 (NW) சொல்கிறபடி, ‘நாம் யெகோவாவைச் சோதித்து பார்த்தோமானால்,’ அவர் ‘இடங்கொள்ளாமற்போகுமட்டும் ஆசீர்வாதத்தை வருஷிப்பார்’ என்பதை என் மனைவியும் நானும் கண்டிருக்கிறோம்.”
பைபிள் பிரசுரங்களை அளித்தல்
பிரேஸிலில், சாட்சிகள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பைபிள் பிரசுரத்தை அளிப்பதே, பிரசங்க வேலை அவ்வளவு அதிக முன்னேற்றத்தை அடைவதற்கான மற்றொரு காரணமாக ஒருவேளை இருக்கலாம். உதாரணமாக, இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள் என்ற புத்தகத்தின் 250 பிரதிகளைக் கேட்டு ஒரு சபை, உவாட்ச் டவர் சொஸைட்டியின் கிளை அலுவலகத்திற்கு எழுதியது. ஏன் அவ்வளவு பிரதிகளை ஆர்டர் செய்தது?
அந்தக் கடிதம் இவ்வாறு விவரித்தது: ‘நகரிலுள்ள ஒரு பள்ளி இந்தப் புத்தகத்தை அதன் வகுப்புகள் ஒன்றில் படிப்புப் புத்தகமாக பயன்படுத்தத் தீர்மானித்திருக்கிறது. யெகோவாவின் சாட்சிகளாக இருக்கும் மாணவர்களின் பெற்றோராலும் பள்ளி மேற்பார்வையாளர் ஒருவராலும் செய்யப்பட்ட சந்தர்ப்ப சாட்சியின் விளைவாக பள்ளி அதிகாரிகளால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. இந்தப் புத்தகத்தை வைத்துச் சிறந்த போதனை அளிக்கையில், யெகோவா தாமே அவருடைய ஊழியர்களைத் தொடர்ந்து ஆசீர்வதிப்பாராக.’ ஆம், பெரிய நாடாகிய பிரேஸிலில் ராஜ்ய பிரசங்க வேலையின் சிறந்த முன்னேற்றத்தையும் யெகோவா தொடர்ந்து ஆசீர்வதிப்பாராக.
[பக்கம் 8-ன் பெட்டி]
நாட்டு விவரங்கள்
1994 ஊழிய ஆண்டு
சாட்சிபகருவோரின் உச்ச எண்ணிக்கை: 3,85,099
வீதம்: 404-க்கு 1 சாட்சி
நினைவு ஆசரிப்புக்கு வந்திருந்தோர்: 10,18,210
சராசரி பயனியர் பிரஸ்தாபிகள்: 38,348
சராசரி பைபிள் படிப்புகள்: 4,61,343
முழுக்காட்டப்பட்டவர்களின் எண்ணிக்கை: 24,634
சபைகளின் எண்ணிக்கை: 5,928
கிளை அலுவலகம்: ஸிஸாரியொ லாங்ஷே
[பக்கம் 9-ன் படம்]
சாவோ பாலோவில் சுமார் 1940-ல் பயன்படுத்தப்பட்ட சவுண்ட் கார்
[பக்கம் 9-ன் படம்]
ரியோடி ஜனீரோவிலுள்ள தாவரவியல் பூங்காவில் சாட்சிபகருதல்
[பக்கம் 9-ன் படம்]
ஸிஸாரியொ லாங்ஷேயிலுள்ள கிளை அலுவலகம்