உங்களால் இந்தத் தடைகளைத் தகர்த்து முன்னேற முடியும்!
பெரிய விமானம் ஒன்று நூற்றுக்கணக்கான பயணிகளையும் டன்கணக்கான சரக்குகளையும் ஏற்றிச் செல்லக்கூடும். அவ்வளவு கனமுள்ள விமானம் எப்படி நிலத்திலிருந்து மேலெழும்ப முடிகிறது? வெறுமனே, தூக்குவிசையின் மூலமாகவே.
ஓடுபாதையில் விமானம் வேகமாகச் செல்லும்போது, அதன் வளைந்திருக்கும் சிறகுகளுக்கு மேலும் கீழும் காற்று வேகமாகப் பாய்கிறது. இது தூக்குவிசை எனப்படும் மேல்நோக்கிச் செல்லும் சக்தியை உண்டாக்குகிறது. போதுமான தூக்குவிசை உருவாக்கப்பட்டதும், அந்த விமானம் புவியீர்ப்பு விசையை மேற்கொண்டு பறக்க முடிகிறது. நிச்சயமாக, அளவுக்கு அதிகமாக சுமை ஏற்றப்பட்ட விமானம், மேலெழும்புவதற்குத் தேவையான தூக்குவிசையை உருவாக்கமுடியாது.
நாமும்கூட அளவுக்கு அதிகமாக சுமையைச் சுமக்கிறவர்களாக முடியும். தாவீது அரசன், தன்னுடைய ‘அக்கிரமங்கள் பாரச் சுமையைப்போல அவரால் தாங்கக்கூடாத பாரமாயிற்று’ என்று நூற்றாண்டுகளுக்கு முன்னர் கூறினார். (சங்கீதம் 38:4) அதேவிதமாக, வாழ்க்கையின் கவலைகளைக் குறித்து பாரமடைவதற்கு எதிராக இயேசு கிறிஸ்து எச்சரித்தார். (லூக்கா 21:34) எதிர்மறையான எண்ணங்களும் உணர்ச்சிகளும் நாம் ‘மேலெழும்புவதை’ கடினமாகத் தோன்றவைக்கும் அளவிற்கு நம்மை பாரமடையச் செய்யக்கூடும். நீங்கள் அவ்விதமாக பாரமடைந்திருக்கிறீர்களா? அல்லது உங்களுடைய கூடுதலான ஆவிக்குரிய வளர்ச்சிக்கு ஏதாவது தடையை அனுபவித்திருக்கிறீர்களா? அப்படியானால், எது உதவியாக இருக்கக்கூடும்?
உங்களுக்குச் சலிப்பாக இருக்கிறதா?
இன்று ஒரு பொதுவான குறையாக இருக்கும் சலிப்பு, யெகோவாவின் மக்களில் சிலருக்குக்கூட மனஞ்சார்ந்த ஒரு தடையாக முடியும். குறிப்பாக இளைஞர்கள் சில செயல்களைச் சலிப்புத்தட்டுவதாக நினைத்துக்கொண்டு செய்யாமல் விட்டுவிடும் மனச்சாய்வைக் கொண்டிருக்கிறார்கள். கிறிஸ்தவ கூட்டங்களைக்குறித்து நீங்கள் சிலவேளைகளில் அவ்வாறு உணருகிறீர்களா? அப்படியானால், கூட்டங்களை உங்களுக்கு கிளர்ச்சியூட்டுவதாக ஆக்கிக்கொள்ள நீங்கள் என்ன செய்யலாம்?
அவற்றில் ஈடுபடுவதுதான் முக்கியமான காரியமாக இருக்கிறது. இளைஞனாகிய தீமோத்தேயுவுக்கு பவுல் இவ்வாறு எழுதினார்: “தேவபக்திக்கேதுவாக முயற்சிபண்ணு. சரீரமுயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது; தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது.” (1 தீமோத்தேயு 4:7, 8) உடற்பயிற்சி பற்றிய ஒரு புத்தகம், அதில் பரிந்துரைக்கப்பட்ட பயிற்சிகளை நாம் பின்பற்றவில்லை என்றால், சலிப்பூட்டுவதாகவும் மிகக் குறைந்த பயனுள்ளதாகவும் இருக்கும். கிறிஸ்தவக் கூட்டங்கள் நம் மனங்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக திட்டமைக்கப்பட்டிருக்கின்றன; நாம் தயாரித்து, அவற்றில் பங்கெடுப்போமானால் அவை அவ்வாறு பயிற்சி அளிக்கும். இந்த ஈடுபாடு கூட்டங்களை பயனுள்ளதாகவும் கவனத்தை ஈர்ப்பதாகவும் ஆக்கும்.
இதைக் குறித்து, ஓரிளம் பெண் மாரா இவ்வாறு சொன்னாள்: “நான் கூட்டங்களுக்குத் தயாரிக்கவில்லை என்றால், அவற்றை அனுபவிப்பதில்லை. என்றாலும், நான் முன்கூட்டியே தயாரித்திருந்தால், என் மனதும் இருதயமும் அதிகமாக அவற்றை ஏற்கும்நிலையில் இருக்கின்றன. கூட்டங்கள் அதிக அர்த்தமுடையதாகின்றன; குறிப்புகள் சொல்வதை நான் எதிர்நோக்கி இருக்கிறேன்.”
செவிகொடுப்பதற்குக் கற்றுக்கொள்வதும் உதவியாக இருக்கும். நல்ல இசைக்குச் செவிகொடுப்பது எளிதாகவும் உடனடியாக இன்பமளிப்பதாகவும் இருக்கிறது. ஆனால் எல்லா விதமான திருப்தியும் இப்படி உடனடியாகக் கிடைப்பதில்லை. கூட்டத்தின் நிகழ்ச்சிகளில், என்ன சொல்லப்படுகிறதோ அதற்குக் கவனமாகச் செவிகொடுத்து கேட்டால் மட்டுமே நமக்குத் திருப்தி கிடைக்கிறது. ரேச்சல் என்ற ஒரு கிறிஸ்தவள் இவ்வாறு குறிப்பிட்டாள்: “பேசுகிறவர் உற்சாகமாக இல்லையென்றால் நான் ரொம்ப கஷ்டப்பட்டுக் கவனத்தை ஒருமுகப்படுத்தவேண்டும். ‘பேச்சு எவ்வளவு குறைவாக கவனத்தை ஈர்ப்பதாக இருக்கிறதோ, அவ்வளவு அதிகமாக நான் கவனத்தை ஒருமுகப்படுத்த வேண்டும்,’ என்பது எனக்கு நானே வைத்திருக்கும் நியமம். . . . வேதவசனங்களுக்கு விசேஷித்த கவனத்தைச் செலுத்துகிறேன்; அவற்றிலிருந்து எவ்வளவு நன்மையைப் பெற முடியுமோ அவ்வளவையும் பெற முயற்சி செய்கிறேன்.” செவிகொடுத்துக் கேட்பதற்காக, ரேச்சலைப்போல நம்மைநாமே சிட்சித்துக்கொள்வது அவசியம். நீதிமொழிகள் புத்தகம் சொல்லுகிறது: “என் மகனே, என் ஞானத்தைக் கவனித்து, என் புத்திக்கு உன் செவியைச் சாய்.”—நீதிமொழிகள் 5:1.
கூட்டங்களில் அளிக்கப்படும் ஒருசில தகவல்கள் ஓரளவிற்கு திரும்பத்திரும்பச் சொல்லப்படுபவையாக இருக்கக்கூடும். அவசியமாகவே அவ்வாறிருக்கிறது! கடவுளுடைய ஊழியர்கள் எல்லாருக்கும் நினைப்பூட்டுதல்கள் அவசியம். அபூரண மாம்சம் அதன் ஏறுக்குமாறான மனச்சாய்வுகளுடனும் குறைவுள்ள ஞாபகசக்தியுடனும், அதற்குக் கிடைக்கக்கூடிய எல்லா உதவியையும் பெறவேண்டும். ‘உடன் விசுவாசிகள் அறிந்திருந்த சில காரியங்களை, அவர்கள் அவற்றை அறிந்திருந்தும், சத்தியத்தில் உறுதிப்பட்டும் இருந்தபோதிலும், அவர்களுக்கு அவற்றை நினைப்பூட்ட அசதியாயிராததாக’ அப்போஸ்தன் பேதுரு சொன்னார். (2 பேதுரு 1:12) “தேறின வேதபாரகன் எவனும் [“பொது போதனையாளர் ஒவ்வொருவரும்,” NW] தன் பொக்கிஷத்திலிருந்து புதியவைகளையும் பழையவைகளையும் எடுத்துக்கொடுக்கிற வீட்டெஜமானாகிய மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறான்” என்று இயேசு விளக்கினார். (மத்தேயு 13:52) இவ்வாறாக, நம் கூட்டங்கள் நன்குதெரிந்த வேதப்பூர்வ கருத்துக்களை, அல்லது ‘பழைய பொக்கிஷங்களை’ எடுத்துரைத்தாலும், நம்மை மகிழ்விக்கிற சில ‘புதிய பொக்கிஷங்களும்’ எப்போதும் இருக்கின்றன.
கூட்டங்களிலிருந்து முழு நன்மையையும் பெறும்படி தீர்மானமாக இருத்தல், நிஜமான ஆவிக்குரிய தூக்குவிசை ஒன்றை விளைவிக்கக்கூடும். “ஆவிக்குரிய தேவையைக்குறித்து உணர்வுடையோர் [ஆவிக்காக கெஞ்சி பிச்சை எடுப்பவர்கள்] மகிழ்ச்சியுள்ளவர்கள்,” என்று இயேசு சொன்னார். (மத்தேயு 5:3, NW அடிக்குறிப்பு) கூட்டங்களில் கொடுக்கப்படுகிற முழுநிறைவான ஆவிக்குரிய உணவிடமாக அப்படிப்பட்ட மனநிலையைக் கொண்டிருப்பது சலிப்புத்தட்டுவதை அகற்றிவிடும்.—மத்தேயு 24:45-47.
ஒரு கெட்ட உதாரணத்தால் சோர்வடைந்திருக்கிறீர்களா?
உங்கள் சபையிலுள்ள ஒருவருடைய நடத்தை உங்களை வருத்தமடைய வைத்திருக்கிறதா? ஒருவேளை நீங்கள் இவ்வாறு யோசித்திருக்கலாம், ‘ஒரு சகோதரர் அப்படியும் நடந்துகொண்டு இன்னும் ஒரு நல்ல பெயருடன் எப்படி இருக்க முடியும்?’ அப்படிப்பட்ட எண்ணங்கள், மனதில் ஒரு தடையாக அமைந்து, கடவுளுடைய மக்களுடன் நாம் வைத்துக்கொள்ளக்கூடிய இன்பமான தோழமையின் மதிப்பை நாம் புரிந்துகொள்ள முடியாமல் ஆக்கிவிடலாம்.—சங்கீதம் 133:1.
கொலோசே சபையின் அங்கத்தினர்கள் சிலருக்கு இதுபோன்ற ஒரு பிரச்சினை ஒருவேளை இருந்திருக்கலாம். பவுல் அவர்களுக்கு அறிவுறுத்தினார்: “ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், . . . ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.” (கொலோசெயர் 3:13) கொலோசேயிலுள்ள சில கிறிஸ்தவர்கள் மோசமாக நடந்திருப்பார்கள் என்றும் அதன் காரணமாக மற்றவர்கள் குறைகூறுவதற்கு உண்மையான காரணத்தை அளித்திருக்கக்கூடும் என்றும் பவுல் அறிந்திருந்தார். ஆகவே நம் சகோதர சகோதரிகளில் ஒருவர் ஏதாவதொரு கிறிஸ்தவப் பண்பில் சில சமயம் தவறும்போது நாம் அளவுக்கதிகமாக ஆச்சரியப்படக்கூடாது. கடுமையான பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கு இயேசு நல்ல ஆலோசனை வழங்கினார். (மத்தேயு 5:23, 24; 18:15-17) ஆனால், பெரும்பாலான சமயங்களில், நம் உடன்விசுவாசிகளுடைய குறைகளை நாம் வெறுமனே தாங்கி, மன்னித்துவிடலாம். (1 பேதுரு 4:8) உண்மையில், அப்படிப்பட்ட ஒரு அணுகுமுறை நம்முடைய சொந்த நன்மைக்கானதாகவும் மற்றவர்களுடைய நன்மைக்கானதாகவும் இருக்கும். இது ஏன் அவ்வாறு இருக்கிறது?
“மனுஷனுடைய விவேகம் அவன் கோபத்தை அடக்கும்; குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை,” என்று நீதிமொழிகள் 19:11 சொல்கிறது. சினத்தால் அல்லது கோபதாபத்தால் மனதைப் புண்ணாகவிடுவதைக்காட்டிலும் மன்னிப்பது எவ்வளவு மேலானது! அன்பான பாங்கை உடையவராக அறியப்பட்டிருந்த ஒரு மூப்பராகிய ஸால்வாடார் இவ்வாறு சொன்னார்: “ஒரு சகோதரர் என்னை மோசமாக நடத்தும்போது அல்லது தயவற்ற விதத்தில் ஏதாவது சொன்னால், என்னை நானே இவ்வாறு கேட்டுக்கொள்கிறேன்: ‘என்னுடைய சகோதரனுக்கு நான் எப்படி உதவி செய்யலாம்? அவரோடு உள்ள அருமையான உறவை இழப்பதை நான் எவ்வாறு தவிர்க்க முடியும்?’ தவறான காரியத்தைச் சொல்லிவிடுவது எவ்வளவு எளிதாக இருக்கிறது என்பதை நான் எப்போதும் உணருகிறேன். யாராவது ஒருவர் யோசனையின்றி பேசிவிட்டால், அவர் சொன்ன எல்லாவற்றையும் வாபஸ் பெற்றுக்கொண்டு மீண்டும் முழுவதையும் தொடங்குவதே சிறந்த தீர்வாக இருக்கும். ஆனால் அது செய்யமுடியாத ஒன்று; ஆகவே அடுத்த சிறந்த வழியை நான் மேற்கொண்டு, அந்தக் குறிப்பைப் பொருட்படுத்தாமல் விட்டுவிடுகிறேன். என் சகோதரனின் உண்மையான ஆளுமையின் பிரதிபலிப்பாக அதைக் கருதுவதற்கு மாறாக, வெறுமனே அபூரண மாம்சத்தின் ஒரு வெளிக்காட்டாக அதை நான் கருதுகிறேன்.”
இதைச் செய்வதைவிட சொல்லுவது மிக எளிது என்று நீங்கள் நினைக்கக்கூடும். ஆனால் நம்முடைய சிந்தனையை எவ்வழியில் செலுத்துகிறோம் என்பதில் அதிகம் சார்ந்திருக்கிறது. “அன்புள்ளவைகளெவைகளோ . . . அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள்,” என்று பவுல் ஆலோசனை கூறினார். (பிலிப்பியர் 4:8) “அன்புள்ளவை” என்றால் “பாசத்தைத் தூண்டுபவை” என்பது சொல்லர்த்தமான பொருள். மக்களிலுள்ள நல்லவற்றைக் குறித்து சிந்திக்கும்படி, கோபதாபத்திற்கு மாறாக பாசத்தைத் தூண்டுகிறவற்றில் கவனத்தைச் செலுத்தும்படி யெகோவா விரும்புகிறார். இந்த அம்சத்தில் அவர்தாமே உன்னதமான முன்மாதிரியை அளிக்கிறார். பின்வருமாறு சொல்வதன்மூலம் சங்கீதக்காரன் இதை நமக்கு நினைப்பூட்டினார்: “கர்த்தாவே, நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால், யார் நிலைநிற்பான், ஆண்டவரே.”—சங்கீதம் 103:12; 130:3.
சில சமயங்களில், ஒரு சகோதரனுடைய நடத்தை ஏமாற்றமளிப்பதாக இருக்கும் என்பது உண்மைதான்; ஆனால், நம் உடன் விசுவாசிகளில் பெரும்பான்மையானோர் கிறிஸ்தவ வாழ்க்கைக்கு மிகச் சிறந்த முன்மாதிரிகளாக இருக்கிறார்கள். இதை நாம் நினைவில் கொண்டோமானால், ‘யெகோவாவை அதிகமாக துதிப்பதற்கும், அநேகர் நடுவிலே அவரைப் புகழுவதற்கும்’ நாம் தாவீதைப் போலவே மகிழ்ச்சியாக இருப்போம்.—சங்கீதம் 109:30, NW.
ஒரு சாட்சியாக இருப்பது மிகவும் கடினமானதாகத் தோன்றுகிறதா?
வருந்தத்தக்கவிதத்தில், மனதில் ஏற்படும் மற்றொரு தடையின் காரணமாக, சிலர் இன்னும் யெகோவாவைத் துதிக்க ஆரம்பிக்கவில்லை. யெகோவாவின் சாட்சிகளாக இல்லாத அநேக ஆண்கள் தங்கள் குடும்பங்களைப் பராமரித்து, கிறிஸ்தவ ஊழியத்தில் தங்கள் மனைவிகளை ஆதரிக்கவும்கூட செய்கின்றனர். அவர்கள் சிநேகப்பான்மையாக இருக்கிறார்கள்; சபையில் அக்கறை கொள்ளவும்கூடும்; ஆனால் கடவுளுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட ஊழியர்களாவதைத் தவிர்க்கிறார்கள். அவர்களைத் தடைசெய்வது எது?
இந்தக் கணவன்மார் தங்கள் மனைவிகளின் சுறுசுறுப்பான தேவராஜ்ய நடவடிக்கையைக் கவனித்து, ஒரு சாட்சியாக இருப்பது மிக அதிகத்தைக் கேட்பதாக உணருவது ஒரு பிரச்சினையாக இருக்கக்கூடும். அல்லது தாங்கள் வீட்டுக்கு வீடு பிரசங்க வேலையில் ஈடுபடவே முடியாது என்று ஒருவேளை பயப்படலாம். அவர்களுடைய நோக்குநிலையின்படி, உத்தரவாதங்கள் ஆசீர்வாதங்களை மறையச்செய்வதாய் தோன்றுகின்றன. ஏன் அந்த மனத்தடை? பெரும்பாலான பைபிள் மாணாக்கர்கள் சத்தியத்தைப் படித்து அதைப் படிப்படியாகப் பொருத்துகிறார்கள். ஆனால் விசுவாசத்தில் இல்லாத கணவன்மார்கள், கிறிஸ்தவ உத்தரவாதங்களை ஏற்றுக்கொள்வதற்கான உந்துவிப்பை வளர்த்துக்கொள்வதற்கு முன்னரே, பெரும்பாலும் அவற்றைக் குறித்து நன்கு அறிந்தவர்களாய் இருக்கிறார்கள்.
இந்த நிலைமையில் இருந்த மான்வெல் இவ்வாறு விவரிக்கிறார்: “சுமார் பத்து வருடங்களாக, மாநாடுகளுக்கும் கூட்டங்களுக்கும் நான் என் மனைவியுடன் சென்றேன். நேர்மையாகச் சொல்லவேண்டுமானால், உலகப்பிரகாரமான ஆட்களுடையதைவிட சாட்சிகளுடைய கூட்டுறவு எனக்குப் பிடித்தது; என்னால் முடிந்தபோதெல்லாம் அவர்களுக்கு உதவிசெய்வதிலும் மகிழ்ச்சி அடைந்தேன். அவர்கள் மத்தியில் நிலவிய அன்பினால் நான் கவரப்பட்டேன். ஆனால் வீட்டுக்கு வீடு போகக்கூடிய காரியம் எனக்கு ஒரு பெரிய தடையாக இருந்தது; என்னுடன் வேலை செய்கிறவர்கள் என்னை கேலி செய்வார்கள் என்று பயப்பட்டேன்.
“என் மனைவி என்னுடன் மிகவும் பொறுமையாக இருந்தாள்; பைபிளைப் படிப்பதற்காக அவள் ஒருபோதும் என்னைக் கட்டாயப்படுத்த முயற்சிக்கவில்லை. அவளும் பிள்ளைகளும் முக்கியமாகத் தங்கள் நல்ல முன்மாதிரியின் மூலமாகப் ‘பிரசங்கித்தார்கள்.’ அந்தச் சபை மூப்பராகிய ஹோசே என்னில் விசேஷ அக்கறை காட்டினார். கடைசியாக, என்னை உண்மையில் படிக்க ஆரம்பிக்க வைத்தது அவருடைய உற்சாகமூட்டுதலே என்று நினைக்கிறேன். முழுக்காட்டப்பட்ட பிறகு, தடைகள் என்பது வேறு எதையும்விட என்னுடைய சொந்த மனதிலேயே இருந்தது என்பதை உணர்ந்தேன். நான் யெகோவாவைச் சேவிக்கும்படி தீர்மானித்ததும், என் பயங்களை மேற்கொள்வதற்கு அவருடைய உதவியை அனுபவித்தேன்.”
மான்வெலைப் போன்ற கணவன்மார் தங்கள் மனத்தடையை மேற்கொள்வதற்கு மனைவிகளும் கிறிஸ்தவ மூப்பர்களும் எப்படி உதவலாம்? போற்றுதலையும் கடவுளுடைய சித்தத்தைச் செய்வதற்கான விருப்பத்தையும் வளர்ப்பதற்கு ஒரு பைபிள் படிப்பு உதவக்கூடும். உண்மையில், விசுவாசத்தைக் கொண்டிருக்கவும் எதிர்கால நம்பிக்கையில் உறுதி கொண்டிருக்கவும் பரந்த வேதப்பூர்வ அறிவே அடிப்படையாக இருக்கிறது.—ரோமர் 15:13.
அப்படிப்பட்ட கணவன்மார் ஒரு பைபிள் படிப்பை ஏற்பதற்கு எது உற்சாகப்படுத்தும்? சபையிலுள்ள, புரிந்துகொள்ளும் சகோதரர் ஒருவருடன் நட்பு கொண்டிருப்பது, அடிக்கடி தீர்மானிக்க உதவுகிறது. ஒருவேளை ஒரு மூப்பர் அல்லது அனுபவம்வாய்ந்த மற்றொரு சகோதரர் அந்தக் கணவருடன் பழக்கப்படலாம். ஒரு நல்ல உறவு ஏற்பட்டதும், யாராவது ஒருவர் அவருடன் பைபிள் படிக்க முன்வருவதே அவருக்குத் தேவையானதாக இருக்கக்கூடும். (1 கொரிந்தியர் 9:19-23) அதேநேரத்தில், விசுவாசத்தில் இல்லாத தன் கணவர் வற்புறுத்தலுக்குப் பெரும்பாலும் இணங்கமாட்டார் என்பதை உணரும் விவேகமுள்ள கிறிஸ்தவ மனைவி, ஆவிக்குரிய துணுக்குகளை அவரிடம் பகிர்ந்துகொள்ளலாம்.—நீதிமொழிகள் 19:14.
அனுபவத்தின் மூலமாக மான்வெல் கற்றுக்கொண்டபடி, ஒருவர் ஆவிக்குரிய பலத்தைப் பெற்றதும், மலைபோன்ற தடைகள் மணல்மேடுகளைப்போல் ஆகிவிடுகின்றன. யெகோவா, தம்மைச் சேவிக்க விரும்புகிறவர்களுக்கு ஊக்கமளிக்கிறார். (ஏசாயா 40:29-31) கடவுளுடைய பலத்திலும், முதிர்ச்சிவாய்ந்த சாட்சிகளுடைய ஆதரவிலும், தடைகள் நீக்கப்படக்கூடும். இவ்வாறாக, வீட்டுக்கு வீடு ஊழியம் அவ்வளவு பயமூட்டுவதாயும் இருக்காது; உடன் வேலையாட்கள் அவ்வளவு அச்சுறுத்துவதாகவும் இருக்கமாட்டார்கள்; முழு ஆத்துமாவோடுகூடிய ஊழியம் மிகவும் விரும்பத்தக்கதாகும்.—ஏசாயா 51:12; ரோமர் 10:10.
வேகத்தைக் காத்துக்கொள்ளுதல்
நாம் சிந்தித்திருக்கிற மூன்று தடைகளைப்போன்றவற்றைத் தகர்த்து முன்னேறுதல் சாத்தியமாக இருக்கிறது. ஒரு விமானம் மேலெழும்பும்போது, மிக அதிகமான என்ஜின் சக்தியும், விமானப்பயண பணியாளர் தொகுதியின் சிதறாத கவனமும் பொதுவாகத் தேவைப்படுகிறது. பயணத்தில் வேறு எந்தப் பகுதியிலும் பயன்படுத்திக்கொள்வதைவிட, நிலத்திலிருந்து மேலெழும்பும்போதே என்ஜின்கள் அதிகமான எரிபொருளை பயன்படுத்திக்கொள்ளுகின்றன. இதேவிதமாக, எதிர்மறையான எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளிலிருந்து விடுபடுவதற்கு அதிகப்படியான முயற்சியும் ஒருமுகப்படுத்தப்பட்ட கவனமும் தேவை. தொடங்குவதே மிகக் கடினமான படியாக இருக்கக்கூடும்; வேகம் கிடைத்துவிட்டதென்றால் முன்னேற்றம் செய்வது எளிதாகவே இருக்கிறது.—2 பேதுரு 1:10-ஐ ஒப்பிடுக.
வேதப்பூர்வ உற்சாகமூட்டுதலுக்கு உடனடியாக கீழ்ப்படிவதன்மூலம் தொடர்ச்சியான முன்னேற்றம் காத்துக்கொள்ளப்படுகிறது. (சங்கீதம் 119:60) சபையும் உதவ விரும்புகிறது என்பதைக் குறித்து நாம் நிச்சயமாக இருக்கலாம். (கலாத்தியர் 6:2) என்றபோதிலும், எல்லாவற்றிலும் மிக முக்கியமாக, யெகோவா தேவனின் ஆதரவு இருக்கிறது. தாவீது சொல்வதுபோல, “ஒவ்வொரு நாளும் நம் சுமைகளை நமக்காகத் தூக்கிச்செல்கிற யெகோவா துதிக்கப்படுவாராக.” (சங்கீதம் 68:19, NW) ஜெபத்தில் நம் சுமையை இறக்கிவைக்கும்போது, நம் சுமை இலகுவாகிறது.
சிலசமயங்களில், மப்பும்மந்தாரமுமான ஓர் இடத்தைவிட்டு, மேகமூட்டத்தினூடே சென்று, முழுப் பிரகாசமான சூரியவொளியுள்ள வானில் ஒரு விமானம் பறக்கிறது. நாமும்கூட எதிர்மறையான எண்ணங்களை விட்டுவிடலாம். கடவுளுடைய உதவியுடன், அடையாளப்பூர்வமான மேகமூட்டத்தினூடே சென்று, யெகோவாவின் வணக்கத்தாரான உலகளாவிய குடும்பத்தின் பிரகாசமான, மகிழ்ச்சியான சூழலில் திளைக்கலாம்.
[பக்கம் 23-ன் படங்கள்]
யெகோவாவின் உதவியுடன், நாம் மனத்தடைகளைத் தகர்த்து முன்னேற முடியும்