ராஜ்ய பிரஸ்தாபிகளின் அறிக்கை
வீட்டிலும் பள்ளியிலும் சாட்சிகொடுத்தல் பலன் தருகிறது
ஒரு கிறிஸ்தவனுடைய வாழ்க்கையில் மற்றவர்களுக்கு நன்மை செய்வது உட்பட்டிருக்கிறது, விசேஷமாக கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை அவர்களோடு பகிர்ந்துகொள்வது அதில் உட்பட்டிருக்கிறது. நீதிமொழிகள் 3:27 சொல்கிறது: “நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதைச் செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே.” அர்ஜன்டினாவில் உள்ள ஒரு இளம் சாட்சி உயர்நிலைப் பள்ளியில் மூன்றாவது ஆண்டில் இருக்கையில், ராஜ்யத்தின் நற்செய்தியை ஒரு பள்ளி நண்பனோடு பகிர்ந்துகொள்ள விரும்பினான். அவன் அவ்வாறு செய்தது மிகுந்த பலன்களைக் கொண்டு வந்தது.
எல்லா மதங்களுமே நல்ல மதங்கள் அல்ல என்று ஒரு நாள் அந்த இளம் சாட்சி தன் நண்பனிடம் கூறினான். தான் எந்தக் கெட்ட காரியமும் செய்யவில்லை என்று அந்த இளம் மனிதன் சொன்னபோது, அந்த சாட்சி சொன்னான்: “நீங்கள் கடவுளுக்கும்கூட எதுவும் செய்வதில்லை.” இது அந்த இளைஞனை சிந்தித்துப் பார்க்கும்படி செய்வித்தது. இவை கடைசி நாட்கள் என்றும் கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெறுவதற்கு ஒருவர் திருத்தமான பைபிள் அறிவைப் பெற்று அதைப் பொருத்த வேண்டும் என்றும் அந்த சாட்சி பின்னர் விளக்கினான். அவனுடைய பள்ளி நண்பன் ஒத்துக்கொண்டான். ஆனால் ஒரு பைபிள் படிப்பைக் கொண்டிருப்பதற்கு அவனுடைய குடும்பம் அனுமதிக்குமா? தன் நண்பன் சில விஷயங்களை சிந்தித்துப் பார்ப்பதற்காக, நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகத்தை வாசித்துப் பார்க்கும்படி அந்த சாட்சி அவனிடம் சொன்னான்.
காலம் கடந்து சென்றது, அந்த நண்பன் பள்ளியை விட்டுச் சென்று விட்டான். ஒரு வருடத்துக்கும் மேலாக அவனிடமிருந்து எந்த செய்தியும் இல்லை. பிறகு ஒரு நாள் அந்த நண்பன் இளம் சாட்சியிடம் தொலைபேசியின் மூலம் பேசியபோது அந்தச் சாட்சி ஆச்சரியமடைந்தான், பைபிள் தீர்க்கதரிசனங்கள் உண்மையிலேயே நிறைவேற்றமடைந்து கொண்டு வருவதை தான் பார்த்துக் கொண்டிருப்பதாக அவன் கூறினான். உடனடியாக அந்த சாட்சி அவனோடு பைபிளைப் படிப்பதற்காக ஏற்பாடு செய்தான்.
அவன் அவனுடைய முன்னாள் பள்ளி நண்பனின் வீட்டுக்குச் சென்றபோது, அந்த நண்பனின் பெற்றோர் தங்கள் மகன் ஈடுபாடு கொண்டிருக்கும் விஷயத்தைக் குறித்து அதிகக் கவலையுள்ளவர்களாய் இருந்தனர். அவன் மனமாறாட்டம் அடைந்து கொண்டிருக்கிறான் என்று அந்த நண்பனின் இளைய சகோதரனும்கூட நினைத்தான். ஆகையால் அடுத்த படிப்பில் அந்த இளைய சகோதரனும் உட்காரும்படி பெற்றோர் ஏற்பாடு செய்தனர். அதற்குப் பிறகு, தன் மூத்த சகோதரன் மனமாறாட்டம் உள்ளவன் அல்ல என்று இந்த இளம் மனிதன், கண்களில் கண்ணீரோடு தன் பெற்றோரிடம் கூறினான். அதற்கு அவனுடைய தாய், “ஒரு பிரச்சினைக்குப் பதிலாக, எனக்கு இப்போது இரண்டு பிரச்சினைகள் உள்ளன!” என்று கூறினார்கள்.
எனவே, அடுத்த படிப்புக்கு அந்தத் தாயாரே ஆஜரானார்கள், அந்த மகன்கள் மனமாறாட்டம் அடையவில்லை என்று அவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டியதாயிருந்தது. பின்பு அவர்களோடும் அவர்களுடைய கணவரோடும் ஒரு பைபிள் படிப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. விரைவில் முழுக் குடும்பமும் ராஜ்ய மன்றத்தில் சபைக்கூட்டங்களுக்கு ஆஜராக ஆரம்பித்தது. கடைசியில் தாத்தாவும் பாட்டியும்கூட பைபிளைப் படிக்க ஆரம்பித்து, கூட்டங்களுக்குச் செல்ல ஆரம்பித்தனர். அது முதற்கொண்டு, அந்த முதல் இளம் மனிதர் முழுக்காட்டுதல் பெற்றிருக்கிறார். அவர் திருமணம் செய்துகொண்டார், அவரும் அவருடைய மனைவியும் வைராக்கியமான பிரஸ்தாபிகளாய் இருக்கின்றனர்.
கூடுதலாக, பள்ளியில் சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதன் மூலம் அந்த இளம் சாட்சி மற்ற இரண்டு பள்ளித்தோழர்களுக்கும் உதவி செய்திருக்கிறான். அந்த இரண்டு பேரில் ஒருவருடைய அம்மாவும் சகோதரியும் பைபிளைப் படிக்க ஆரம்பிப்பதற்கு உதவியிருக்கிறான். அந்த இளம் சாட்சி தன் பள்ளித்தோழர்களுக்கு நன்மை செய்வதை நிறுத்திக்கொள்ளாமல் இருந்ததன் காரணமாக மொத்தம் 11 நபர்கள் பைபிள் சத்தியத்தைக் கற்றுக்கொண்டனர். என்னே ஒரு சந்தோஷமான விளைவு! மெய்யாகவே, “கர்த்தரைத் [“யெகோவாவைத்,” NW] தெய்வமாகக் கொண்டிருக்கிற ஜனம் பாக்கியமுள்ளது”!—சங்கீதம் 144:15.