உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w96 3/1 பக். 8-13
  • “எனக்குக் காத்திருங்கள்”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “எனக்குக் காத்திருங்கள்”
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1996
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • செப்பனியா —தைரியமுள்ள ஒரு சாட்சி
  • யெகோவாவின் சினமாகிய உக்கிரகோபத்திற்கான காரணங்கள்
  • யெகோவாவின் நாளைக் குறித்த சந்தேகங்கள்
  • “யெகோவாவின் மகா நாள் சமீபித்திருக்கிறது”
  • மற்ற தேசங்கள் நியாயந்தீர்க்கப்படுதல்
  • “எனக்குக் காத்திருங்கள்”
  • பைபிள் புத்தக எண் 36—செப்பனியா
    ‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’
  • “உன் கைகளைத் தளரவிடாதே”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1996
  • யெகோவாவின் நியாயத்தீர்ப்பு நாள் சமீபம்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
  • யெகோவாவுடைய கோபத்தின் நாள் வருமுன்னே அவரைத் தேடுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1996
w96 3/1 பக். 8-13

“எனக்குக் காத்திருங்கள்”

“ஆகையால் . . . எனக்குக் காத்திருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.” —செப்பனியா 3:8.

1. தீர்க்கதரிசியாகிய செப்பனியாவினால் கொடுக்கப்பட்ட எச்சரிக்கை என்ன, இன்று வாழும் ஜனங்களுக்கு இது எவ்வாறு அக்கறைக்குரிய ஒன்றாயிருக்கிறது?

“யெகோவாவின் மகா நாள் சமீபித்திருக்கிறது.” இந்த எச்சரிக்கையூட்டும் அறிக்கை பொ.ச.மு. ஏழாவது நூற்றாண்டின் மத்தியில் தீர்க்கதரிசியாகிய செப்பனியாவால் கொடுக்கப்பட்டது. (செப்பனியா 1:14, NW) 40 அல்லது 50 வருடங்களுக்குள்ளாக, எருசலேமின்மீதும் யெகோவாவின் ஜனங்களை மோசமாக நடத்துவதன் மூலம் அவருடைய உன்னத அரசதிகாரத்தைப் புறக்கணித்த தேசங்களின்மீதும் யெகோவாவின் நியாயத்தீர்ப்புகளை நிறைவேற்றும் அந்த நாள் வந்தபோது இந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேறியது. 20-ம் நூற்றாண்டின் முடிவில் வாழ்ந்துவரும் ஜனங்களுக்கு இது ஏன் அக்கறைக்குரிய ஒன்றாயிருக்கிறது? யெகோவாவின் முடிவான “மகா நாள்” வேகமாக நெருங்கி வந்துகொண்டிருக்கும் காலத்தில் நாம் வாழ்ந்துவருகிறோம். செப்பனியாவின் காலத்தில் இருந்ததைப் போலவே, நவீன-நாளைய எருசலேமான கிறிஸ்தவமண்டலத்தின்மீதும் யெகோவாவின் ஜனங்களை மோசமாக நடத்தி அவருடைய சர்வலோக உன்னத அரசதிகாரத்தைப் புறக்கணிக்கும் எல்லா தேசங்களின்மீதும் யெகோவாவின் ‘சினமாகிய உக்கிரகோபம்’ பற்றியெரியப் போகிறது.—செப்பனியா 1:4, 6; 2:4, 8, 12, 13; 3:8; 2 பேதுரு 3:12, 13.

செப்பனியா —தைரியமுள்ள ஒரு சாட்சி

2, 3. (அ) செப்பனியாவைக் குறித்து நமக்கு என்ன தெரியும், அவர் யெகோவாவின் ஒரு தைரியமான சாட்சியாயிருந்தார் என்பதை எது காட்டுகிறது? (ஆ) செப்பனியா தீர்க்கதரிசனம் உரைத்த நேரத்தையும் இடத்தையும் கண்டுகொள்ள எந்தத் தகவல்கள் நமக்கு உதவிசெய்கின்றன?

2 “யெகோவா மறைத்திருக்கிறார் (பொக்கிஷமாக வைத்திருக்கிறார்),” என்று அர்த்தப்படுத்தும் பெயரைக்கொண்ட (எபிரெயுவில், ஸெஃபன்யா) தீர்க்கதரிசியாகிய செப்பனியாவைப் பற்றி அதிகமான தகவல் இல்லை. எனினும், மற்ற தீர்க்கதரிசிகளோடு வேறுபடும் விதத்தில், நான்காவது தலைமுறையான “எசேக்கியா” வரையாக, செப்பனியா தன்னுடைய வம்சவரலாற்றை கொடுத்தார். (செப்பனியா 1:1, திருத்திய மொழிபெயர்ப்பு; ஒப்பிடுக: ஏசாயா 1:1; எரேமியா 1:1; எசேக்கியேல் 1:3.) இது அவ்வளவு இயற்கைக்கு மாறானதாக இருப்பதன் காரணமாக, பெரும்பான்மையான விமர்சிப்பாளர்கள் அவருடைய முப்பாட்டன் உண்மையுள்ள ராஜாவாகிய எசேக்கியா என்பதாக அடையாளம் காட்டுகின்றனர். அது அவராகத்தான் இருந்திருந்தால், செப்பனியா ஒரு ராஜ பரம்பரையிலிருந்து வந்தவர். ஆகவே இது யூதாவின் பிரபுக்களைக் குறித்த அவருடைய கடுமையான கண்டனத்தை இன்னும் அதிக அர்த்தமுள்ளதாயும் செல்வாக்குள்ளதாயும் ஆக்கி, அவரை யெகோவாவின் தைரியமுள்ள ஒரு சாட்சியாகவும் தீர்க்கதரிசியாகவும் காண்பித்திருக்கும். எருசலேமின் இட அமைப்பைக் குறித்தும் அரசவையில் நடந்துகொண்டிருந்ததைக் குறித்தும் அவருக்கிருந்த அனுபவ அறிவு, தலைநகரத்திலேயே அவர் யெகோவாவின் நியாயத்தீர்ப்புகளை அறிவித்திருக்கலாம் என்பதை தெரிவிக்கிறது.—செப்பனியா 1:8-11, NW, அடிக்குறிப்புகளை காண்க.

3 யூதாவின் சமுதாய “பிரபுக்களுக்கு” (உயர்குடியினருக்கு, அல்லது கோத்திரத் தலைவர்களுக்கு) எதிராகவும் “ராஜகுமாரர்களுக்கு” எதிராகவும் தெய்வீக நியாயத்தீர்ப்புகளை செப்பனியா அறிவித்தபோது, அவருடைய குறைகூறுதலில் ராஜாவைத்தானே அவர் ஒருபோதும் குறிப்பிடவில்லை என்ற உண்மை குறிப்பிடத்தக்க ஒன்று.a (செப்பனியா 1:8; 3:3; NW) செப்பனியாவால் கடுமையாக கண்டனம் செய்யப்பட்ட அந்தச் சூழ்நிலையைப் பார்க்கையில், சந்தேகமில்லாமல் இளம் ராஜாவாகிய யோசியா தன்னுடைய மத சீர்திருத்தத்தை அது வரையாக ஆரம்பிக்காதபோதிலும், அவர் தூய்மையான வணக்கத்திற்கு ஏற்கெனவே ஒரு மனச்சாய்வை காண்பித்திருந்தார் என்பதை இது காண்பிக்கிறது. பொ.ச.மு. 659-லிருந்து 629 வரையாக ஆட்சிசெய்த யோசியாவின் ஆரம்ப வருடங்களின்போது யூதாவில் செப்பனியா தீர்க்கதரிசனம் உரைத்தார் என்பதை இவையெல்லாம் தெரிவிக்கின்றன. செப்பனியா சுறுசுறுப்பாக தீர்க்கதரிசனம் உரைத்தது, அந்தச் சமயத்தில் யூதாவில் காணப்பட்ட விக்கிரகாராதனை, வன்முறை, ஊழல் ஆகியவற்றைக் குறித்த இளம் யோசியாவின் விழிப்புணர்ச்சியை சந்தேகமில்லாமல் அதிகப்படுத்தியது; விக்கிரகாராதனைக்கு எதிராக பிற்காலத்தில் எடுக்கப்பட்ட அவருடைய நடவடிக்கைக்கும் ஊக்கமளித்தது.—2 நாளாகமம் 34:1-3.

யெகோவாவின் சினமாகிய உக்கிரகோபத்திற்கான காரணங்கள்

4. யூதாவிற்கும் எருசலேமிற்கும் விரோதமாக யெகோவா தம்முடைய கோபத்தை என்ன வார்த்தைகளில் வெளிப்படுத்தினார்?

4 யூதாவின் தலைவர்கள்மீதும் அதனுடைய தலைநகரமான எருசலேமின் தலைவர்கள்மீதும் அவற்றின் குடிமக்கள்மீதும் கோபப்பட யெகோவாவிற்கு நல்ல காரணமிருந்தது. அவருடைய தீர்க்கதரிசியாகிய செப்பனியாவின் மூலமாக இவ்வாறு குறிப்பிட்டார்: “நான் யூதாவின்மேலும், எருசலேமிலுள்ள எல்லாக் குடிகளின்மேலும் என் கையை நீட்டி, பாகாலில் மீதியாயிருக்கிறதையும், ஆசாரியர்களோடேகூடக் கெம்மரீம் என்பவர்களின் பேரையும், வீடுகளின்மேல் வானசேனையைப் பணிகிறவர்களையும், கர்த்தர்பேரில் ஆணையிட்டு, மல்காம்மின்பேரிலும் ஆணையிட்டுப் பணிகிறவர்களையும் . . . இவ்விடத்தில் இராதபடிக்குச் சங்காரம்பண்ணுவேன்.”—செப்பனியா 1:4, 5, 6.

5, 6. (அ) செப்பனியாவின் காலத்தில் யூதாவின் மதசம்பந்தமான நிலை என்ன? (ஆ) யூதாவின் பிரபுக்கள், நியாயாதிபதிகள் மற்றும் அவர்களுடைய கீழ்ப்பணியாளர்களின் நிலை என்ன?

5 பாகால் வணக்கத்தின் தரக்குறைவான கருவள வழிபாட்டுமுறைகளாலும் பேய்த்தனமான சோதிடத்தாலும் புறஜாதி கடவுளான மில்கோம் வணக்கத்தாலும் யூதா கறைபடுத்தப்பட்டிருந்தது. சிலர் சொல்வதைப்போல் மில்கோமும் மோளோகும் ஒன்றாயிருந்தால், அப்போது யூதாவின் பொய் வணக்கம் பிள்ளைகளை பலிகொடுக்கும் வெறுக்கத்தக்க காரியத்தையும் உட்படுத்தியது. அப்படிப்பட்ட மத பழக்கங்கள் யெகோவாவின் பார்வையில் அருவருப்பானதாயிருந்தன. (1 இராஜாக்கள் 11:5, 7; 14:23, 24; 2 இராஜாக்கள் 17:16, 17) அந்த விக்கிரகாராதனையாளர்கள் இன்னும் யெகோவாவின் பெயரில் ஆணையிட்டுக்கொண்டிருந்ததன் காரணமாக அவருடைய அதிகப்படியான கோபத்திற்கு உள்ளானார்கள். அவர் அதற்கு மேலும் அப்படிப்பட்ட மத அசுத்தத்தை சகிக்கப்போவதுமில்லை, புறஜாதி ஆசாரியர்களையும் விசுவாசதுரோக ஆசாரியர்களையும் ஒரே விதமாக அழிக்கவும்போகிறார்.

6 மேலுமாக, யூதாவின் பிரபுக்களும் நியாயாதிபதிகளும் ஊழல் நிறைந்தவர்களாயிருந்தனர். அவளுடைய பிரபுக்கள் உயிர்வேட்டையாடுகிற “கெர்ச்சிக்கிற சிங்கங்கள்” போலவும், அவளுடைய நியாயாதிபதிகள் கடும்பசியுள்ள ‘ஓநாய்களுக்கு’ ஒப்பானவர்களாகவும் இருந்தனர். (செப்பனியா 3:3) அவர்களுடைய கீழ்ப்பணியாளர்கள் ‘கொடுமையினாலும் வஞ்சகத்தினாலும் தங்கள் எஜமான்களின் வீடுகளை நிரப்புகிறதாக’ குற்றஞ்சாட்டப்பட்டனர். (செப்பனியா 1:9) பொருளாசை மிதமிஞ்சியிருந்தது. ஆஸ்தியைக் குவிப்பதற்காக இந்தச் சூழ்நிலையை அநேகர் பயன்படுத்திக் கொண்டிருந்தனர்.—செப்பனியா 1:13.

யெகோவாவின் நாளைக் குறித்த சந்தேகங்கள்

7. ‘யெகோவாவின் பெரிய நாளிற்கு’ எவ்வளவு காலத்திற்கு முன்பு செப்பனியா தீர்க்கதரிசனம் உரைத்தார், அநேக யூதர்களுடைய ஆவிக்குரிய நிலைமை என்னவாயிருந்தது?

7 நாம் ஏற்கெனவே பார்த்திருக்கும் வண்ணமாக, செப்பனியாவின் காலத்தில் காணப்பட்ட நாசகரமான மத சூழ்நிலை, கிட்டத்தட்ட பொ.ச.மு. 648-ல் யோசியா ராஜா விக்கிரகாராதனைக்கு எதிராக தன்னுடைய நடவடிக்கையை ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே செப்பனியா ஒரு சாட்சியாகவும் தீர்க்கதரிசியாகவும் தன்னுடைய வேலையை செய்தார் என்பதைக் காண்பிக்கிறது. (2 நாளாகமம் 34:4, 5) அப்படியானால், அநேகமாய் யூதா ராஜ்யத்தின்மீது “யெகோவாவின் மகா நாள்” வருவதற்கு குறைந்தபட்சம் 40 வருடங்களுக்கு முன்பாகவே செப்பனியா தீர்க்கதரிசனம் உரைத்தார். அந்தக் கால இடைவெளியில், அநேக யூதர்கள் சந்தேகத்திற்கு இடம்கொடுத்து யெகோவாவைச் சேவிப்பதிலிருந்து ‘பின்வாங்கி’ இவ்வாறு அக்கறையற்றவர்களானார்கள். “கர்த்தரைத் தேடாமலும், அவரைக்குறித்து விசாரியாமலுமிருக்கிறவர்களை” குறித்து செப்பனியா பேசுகிறார். (செப்பனியா 1:6) தெளிவாகவே, யூதாவிலிருந்த நபர்கள் அக்கறையற்றவர்களாக கடவுளைக் குறித்து கவலைப்படாதவர்களாக இருந்தனர்.

8, 9. (அ) ‘வண்டல்போல் உறைந்திருக்கிறவர்களை’ யெகோவா ஏன் சோதிப்பார்? (ஆ) யூதாவின் குடிமக்களுக்கும் அவர்களுடைய சமுதாய மற்றும் மதத்தலைவர்களுக்கும் எந்த விதங்களில் யெகோவா கவனத்தை செலுத்துவார்?

8 யெகோவா, தம்முடைய ஜனம் என்று உரிமைபாராட்டிக்கொள்பவர்களை சோதிப்பதற்கான தம்முடைய நோக்கத்தை தெரியப்படுத்தினார். அவருடைய வணக்கத்தார் என்று உரிமைபாராட்டிக்கொண்டவர்களில், மனித விவகாரங்களில் தலையிடப்போவதற்கான அவருடைய திறமையை அல்லது அவருடைய நோக்கத்தைக் குறித்து தங்கள் இருதயங்களில் சந்தேக உணர்ச்சியை வளர்த்துக்கொண்டவர்களை அவர் தேடி கண்டுபிடிப்பார். அவர் குறிப்பிட்டார்: “அக்காலத்திலே நான் எருசலேமை விளக்குக்கொளுத்திச் சோதித்து, வண்டல்போலக் குழம்பியிருக்கிறவர்களும், [“உறைந்திருக்கிறவர்களும்,” NW] கர்த்தர் நன்மை செய்வதும் இல்லை தீமைசெய்வதும் இல்லையென்று தங்கள் இருதயத்தில் சொல்லுகிறவர்களுமான மனுஷரைத் தண்டிப்பேன்.” (செப்பனியா 1:12) “வண்டல்போல உறைந்திருக்கிறவர்கள்,” என்ற சொற்றொடர் (திராட்சைரசம் தயாரிப்பைப் பற்றியது) ஒரு திராட்சைரசத் தொட்டியின் அடியிலுள்ள வண்டல்போல படிந்திருப்பவர்களையும், மனிதவர்க்கத்தின் விவகாரங்களில் உடனடியாக நிகழப்போகிற தெய்வீகத் தலையீட்டைக் குறித்த எந்த அறிவிப்பினாலும் தொந்தரவு செய்யப்பட விரும்பாதவர்களையும் குறிப்பிடுகிறது.

9 யூதா மற்றும் எருசலேமின் குடிமக்களிடமும் தம்முடைய வணக்கத்தை புறஜாதி வணக்கத்தோடு கலந்திருந்த அவற்றின் ஆசாரியர்களிடமும் யெகோவா கவனத்தை செலுத்துவார். இரவின் இருளில் இருப்பதுபோல் எருசலேமின் மதில்களுக்குள் பாதுகாப்பாய் இருப்பதாக அவர்கள் உணர்ந்தார்களேயானால், அவர்கள் அடைக்கலம் புகுந்திருக்கும் ஆவிக்குரிய இருளை ஊடுருவிச் செல்லும் பிரகாசமான விளக்கைக் கொளுத்தி தேடுவதைப் போல யெகோவா அவர்களை தேடி கண்டுபிடிப்பார். அவர்களுடைய மதப்பற்றின்மையை முதலாவதாக நியாயத்தீர்ப்பின் பயமூட்டும் செய்திகளின் மூலமாகவும் பின்பு அந்த நியாயத்தீர்ப்புகளை நிறைவேற்றுவதன் மூலமாகவும் நிலைகுலையச் செய்வார்.

“யெகோவாவின் மகா நாள் சமீபித்திருக்கிறது”

10. ‘யெகோவாவின் பெரிய நாளை’ செப்பனியா எவ்வாறு விளக்கினார்?

10 செப்பனியா இவ்வாறு அறிவிக்குமாறு யெகோவா அவரை ஏவினார்: “யெகோவாவின் மகா நாள் சமீபித்திருக்கிறது. அது கிட்டிச்சேர்ந்து மிகவும் தீவிரித்துவருகிறது. யெகோவாவுடைய நாளின் சப்தம் கசப்பானது.” (செப்பனியா 1:14, NW) எச்சரிக்கைக்கு செவிகொடுத்து, உண்மை வணக்கத்திற்கு திரும்ப மறுத்த ஆசாரியர்கள், பிரபுக்கள், ஜனங்கள் ஆகிய அனைவருக்கும் உண்மையில் கசப்பான நாட்கள் முன்னோக்கியிருந்தன. நியாயத்தீர்ப்பை நிறைவேற்றும் அந்த நாளை விவரிப்பதாய், அந்தத் தீர்க்கதரிசனம் தொடர்கிறது: “அந்த நாள் உக்கிரத்தின் நாள்; அது இக்கட்டும் இடுக்கமுமான நாள்; அது அழிவும் பாழ்க்கடிப்புமான நாள்; அது இருளும் அந்தகாரமுமான நாள்; அது மப்பும் மந்தாரமுமான நாள்; அது அரணிப்பான நகரங்களுக்கும், உயரமான கொத்தளங்களுக்கும் விரோதமாக எக்காளம் ஊதுகிறதும் ஆர்ப்பரிக்கிறதுமான நாள்.”—செப்பனியா 1:15, 16.

11, 12. (அ) எருசலேமிற்கு விரோதமாய் என்ன நியாயத்தீர்ப்பு செய்தி அறிவிக்கப்பட்டது? (ஆ) பொருள் சம்பந்தமான செழுமை யூதர்களை பாதுகாக்குமா?

11 விரைவில் செல்லவிருந்த ஒருசில பத்தாண்டுகளுக்குள்ளே, பாபிலோனிய சேனை யூதாவை படையெடுத்துத் தாக்கும். எருசலேம் தப்பிக்காது. அதனுடைய குடியிருப்பு மற்றும் வியாபாரப் பகுதிகள் பாழாக்கப்படும். “அந்நாளிலே மீன்வாசலிலிருந்து கூக்குரலின் சத்தமும், நகரத்தின் இரண்டாம் பாகத்திலிருந்து அலறுதலும், மேடுகளிலிருந்து மகா சங்காரத்தின் இரைச்சலும் உண்டாகுமென்று கர்த்தர் சொல்லுகிறார். மக்தேஷின் [“எருசலேமின் ஒரு பகுதி,” NW, அடிக்குறிப்பு] குடிகளே அலறுங்கள்; வர்த்தகரெல்லாரும் சங்காரமானார்கள்; காசுக்காரர் யாவரும் வெட்டுண்டுபோனார்கள்.”—செப்பனியா 1:10, 11.

12 யெகோவாவின் நாள் சமீபித்திருப்பதை நம்ப மறுத்தவர்களாக, ஆதாயம் தருகிற வர்த்தகத்தில் அநேக யூதர்கள் துணிகர முயற்சியோடு முழுமையாக ஈடுபட்டிருந்தனர். ஆனால் தம்முடைய உண்மையுள்ள தீர்க்கதரிசியாகிய செப்பனியாவின் மூலமாக, அவர்களுடைய ஆஸ்தி “கொள்ளையாகும்; அவர்களுடைய வீடுகள் பாழாய்ப்போகும்,” என்பதாக யெகோவா முன்னறிவித்தார். அவர்கள் தயாரித்த பழரசத்தை அவர்கள் குடிக்கமாட்டார்கள், மேலுமாக “கர்த்தருடைய உக்கிரத்தின் நாளிலே அவர்கள் வெள்ளியும் அவர்கள் பொன்னும் அவர்களைத் தப்புவிக்கமாட்டாது.”—செப்பனியா 1:13, 18.

மற்ற தேசங்கள் நியாயந்தீர்க்கப்படுதல்

13. மோவாப், அம்மோன், அசீரியா ஆகியவற்றிற்கு எதிராக என்ன நியாயத்தீர்ப்பு செய்தியை செப்பனியா அறிவித்தார்?

13 தம்முடைய தீர்க்கதரிசியாகிய செப்பனியாவின் மூலமாக, தம்முடைய ஜனங்களை மோசமாக நடத்தியிருந்த தேசங்களுக்கு எதிராக கோபத்தையும்கூட யெகோவா வெளிப்படுத்தினார். அவர் அறிவித்தார்: “மோவாப் செய்த நிந்தனையையும், அம்மோன் புத்திரர் என் ஜனத்தை நிந்தித்து, அவர்கள் எல்லையைக் கடந்து பெருமைபாராட்டிச் சொன்ன தூஷணங்களையும் கேட்டேன். ஆகையால் மோவாப் சோதோமைப்போலும், அம்மோன் புத்திரரின் தேசம் கொமோராவைப்போலுமாகி, காஞ்சொறி படரும் இடமும், உப்புப்பள்ளமும், நித்திய பாழுமாயிருக்கும் . . . என்பதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார். அவர் தமது கையை வடதேசத்துக்கு விரோதமாய் நீட்டி, அசீரியாவை அழித்து, நினிவேயைப் பாழும் வனாந்தரத்துக்கொத்த வறட்சியுமான ஸ்தலமாக்குவார்.”—செப்பனியா 2:8, 9, 13.

14. அந்நிய தேசத்தார் இஸ்ரவேலர்களுக்கு எதிராகவும் அவர்களுடைய கடவுளாகிய யெகோவாவிற்கு எதிராகவும் ‘பெருமைபாராட்டினர்’ என்பதற்கு என்ன அத்தாட்சி இருக்கிறது?

14 மோவாபும் அம்மோனும் இஸ்ரவேலின் பரம்பரை விரோதிகளாக இருந்தனர். (ஒப்பிடுக: நியாயாதிபதிகள் 3:12-14.) பாரிஸிலுள்ள லூவர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் மோவாபியக் கல்லில், மோவாபிய ராஜாவாகிய மேஷாவின் தற்புகழ்ச்சியான கூற்று பொறிக்கப்பட்டிருக்கிறது. அவருடைய கடவுளாகிய காமோசின் உதவியைக் கொண்டு அநேக இஸ்ரவேல் நகரங்களை கைப்பற்றிக்கொண்டதைக் குறித்து அவர் செருக்குடன் விவரிக்கிறார். (2 இராஜாக்கள் 1:1) இஸ்ரவேலரின் பிராந்தியமாகிய காத் தேசத்தை தங்கள் கடவுளாகிய மில்கோமின் பேரிலே அம்மோனியர்கள் சுதந்தரித்துக்கொண்டதைக் குறித்து செப்பனியாவின் காலத்தில் வாழ்ந்த எரேமியா கூறினார். (எரேமியா 49:1, NW) அசீரியாவைப் பொறுத்தவரை, செப்பனியாவின் நாளுக்கு கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன்பாகவே ராஜாவாகிய சல்மனாசார் V சமாரியாவை முற்றிகையிட்டுக் கைப்பற்றினார். (2 இராஜாக்கள் 17:1-6) சிறிது காலத்திற்குப் பின்பு, ராஜாவாகிய சனகெரிப் யூதாவை தாக்கி, அதனுடைய அரணான அநேக பட்டணங்களையும் கைப்பற்றி, எருசலேமைக்கூட பயமுறுத்தினான். (ஏசாயா 36:1, 2) அசீரிய ராஜாவின் பிரதிநிதி எருசலேம் சரணடையவேண்டும் என்று கோரிக்கை விடுத்தபோது உண்மையில் யெகோவாவிற்கு விரோதமாய் அதிகமாக பெருமைபாராட்டினான்.—ஏசாயா 36:4-20.

15. தம்முடைய ஜனங்களுக்கு எதிராக பெருமைபாராட்டின தேசங்களின் கடவுட்களை யெகோவா எவ்வாறு அவமானப்படுத்துவார்?

15 மோவாப், அம்மோன், அசீரியா ஆகியவற்றை உள்ளிட்ட அநேக தேசங்களை சங்கீதம் 83 குறிப்பிடுகிறது. அவர்கள் இஸ்ரவேலுக்கு எதிராக அதிகமாய் பெருமைபாராட்டி, தற்பெருமையுடன் இவ்வாறு குறிப்பிட்டனர்: “அவர்கள் இனி ஒரு ஜாதியாராயிராமலும், இஸ்ரவேலின் பேர் இனி நினைக்கப்படாமலும் போவதற்காக, அவர்களை அதம்பண்ணுவோம் வாருங்கள்.” (சங்கீதம் 83:4) சேனைகளின் யெகோவாவால் இந்த எல்லா அகந்தையுள்ள தேசங்களும் அவற்றின் கடவுட்களும் அவமானப்படுத்தப்படப் போவதாக தீர்க்கதரிசியாகிய செப்பனியா தைரியமாக அறிவித்தார். “அவர்கள் சேனைகளுடைய கர்த்தரின் ஜனத்துக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டி அவர்களை நிந்தித்தபடியினால், இது அவர்கள் அகங்காரத்துக்குப் பதிலாக அவர்களுக்குக் கிடைக்கும். கர்த்தர் அவர்கள்மேல் கெடியாயிருப்பார்; பூமியிலுள்ள தேவர்களையெல்லாம் மெலிந்துபோகப்பண்ணுவார்; அப்பொழுது தீவுகளிலுள்ள சகல புறஜாதிகளும் அவரவர் தங்கள் தங்கள் ஸ்தானத்திலிருந்து அவரைப் பணிந்துகொள்வார்கள்.”—செப்பனியா 2:10, 11.

“எனக்குக் காத்திருங்கள்”

16. (அ) யெகோவாவின் நாள் நெருங்கிவருவது யாருக்கு சந்தோஷத்தின் ஒரு ஊற்றுமூலமாக இருந்தது, ஏன்? (ஆ) உண்மையுள்ள இந்த மீதியானோருக்கு தூண்டியெழுப்பக்கூடிய என்ன கட்டளை சென்றது?

16 யூதா மற்றும் எருசலேமின் தலைவர்களுக்கும் அநேக குடிமக்களுக்கும் மத்தியில் ஆவிக்குரிய மந்தமும், அடிப்படை மத நியமங்களில் உறுதிப்பாடின்மையும், விக்கிரகாராதனையும், ஊழலும் பொருளாசையும் நிலவியபோதிலும், தெளிவாகவே, சில உண்மையுள்ள யூதர்கள் செப்பனியாவின் எச்சரிக்கையூட்டும் தீர்க்கதரிசனங்களுக்கு செவிகொடுத்தார்கள். யூதாவின் பிரபுக்கள், நியாயாதிபதிகள் மற்றும் ஆசாரியர்களின் அருவருக்கத்தக்க பழக்கவழக்கங்களைக் குறித்து அவர்கள் கவலையுற்றிருந்தார்கள். செப்பனியாவின் அறிவிப்புகள், உத்தமமுள்ள இந்த நபர்களுக்கு ஆறுதலின் ஒரு ஊற்றுமூலமாக இருந்தன. யெகோவாவின் நாள் நெருங்கிவருவது அவர்களுக்கு வேதனைக்குக் காரணமாயிருப்பதற்கு மாறாக, சந்தோஷத்தின் ஒரு ஊற்றுமூலமாக இருந்தது, ஏனென்றால் இப்படிப்பட்ட அருவருப்பான பழக்கவழக்கங்களுக்கு அது ஒரு நிறுத்தத்தை கொண்டுவரும். உண்மையுள்ள இந்த மீதியானோர் யெகோவாவின் தூண்டியெழுப்பும் கட்டளைக்கு செவிகொடுத்தனர்: “ஆகையால் நான் கொள்ளையாட எழும்பும் நாள்மட்டும் எனக்குக் காத்திருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; என் சினமாகிய உக்கிரகோபத்தையெல்லாம் அவர்கள்மேல் சொரியும்படி ஜாதிகளைச் சேர்க்கவும், ராஜ்யங்களைக் கூட்டவும் நான் தீர்மானம்பண்ணினேன்.”—செப்பனியா 3:8.

17. எப்போது, எப்படி செப்பனியாவின் நியாயத்தீர்ப்பு செய்திகள் தேசங்களின்மீது நிறைவேற ஆரம்பித்தன?

17 அந்த எச்சரிக்கைக்கு செவிகொடுத்தவர்கள் ஆச்சரியமடையவில்லை. செப்பனியாவுடைய தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்தைப் பார்க்க அநேகர் உயிருடனிருந்தனர். பொ.ச.மு. 632-ல், பாபிலோனியர்கள், மேதியர்கள், மேலும் வடக்கிலிருந்து வந்த படைகள், ஒருவேளை ஸ்கைதியர்கள், ஆகியோரின் கூட்டிணைப்பினால் நினிவே கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது. வில் டுயூரன்ட் என்ற சரித்திராசிரியர் விவரிக்கிறார்: “நெபோபொலாஸரின் தலைமையில் பாபிலோனியர்களின் சேனையும், சையாக்சரிஸின் தலைமையில் மேதியர்களின் சேனையும், காகசஸ்ஸிலிருந்து ஸ்கைதியர்களின் நாடோடிக் கூட்டமும் ஒருங்கிணைக்கப்பட்டவையாய் திகைப்பூட்டும் சௌகரியத்துடனும் வேகத்துடனும் வடதிசையின் அரணை கைப்பற்றின. . . . ஒரே வீச்சில் அசீரியா சரித்திரத்திலிருந்து மறைந்துபோயிற்று.” செப்பனியா தீர்க்கதரிசனம் உரைத்தது சரியாகவே இதுதான்.—செப்பனியா 2:13-15.

18. (அ) எருசலேமின்மீது தெய்வீக நியாயத்தீர்ப்பு எவ்வாறு நிறைவேற்றப்பட்டது, ஏன்? (ஆ) மோவாப் மற்றும் அம்மோனைக் குறித்த செப்பனியாவின் தீர்க்கதரிசனம் எவ்வாறு நிறைவேறியது?

18 யெகோவாவிற்கு காத்திருந்தவர்களாக தங்களை வைத்துக்கொண்ட அநேக யூதர்கள் யூதாவின்மீதும் எருசலேமின்மீதும் நிறைவேற்றப்பட்ட நியாயத்தீர்ப்புகளை பார்க்கும்படிக்கு உயிருடனும் இருந்தனர். எருசலேமைக் குறித்து செப்பனியா இவ்வாறு தீர்க்கதரிசனம் உரைத்திருந்தார்: “இடுக்கண் செய்து, ஊத்தையும் அழுக்குமாயிருக்கிற நகரத்துக்கு ஐயோ! அது சத்தத்துக்குச் செவிகொடுக்கவில்லை; அது கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளவில்லை; அது கர்த்தரை நம்பவில்லை; அது தன் தேவனிடத்தில் சேரவில்லை.” (செப்பனியா 3:1, 2) அவளுடைய உண்மையற்ற தன்மையின் காரணமாக, எருசலேம் பாபிலோனியர்களால் இரண்டுமுறை முற்றுகையிடப்பட்டு கடைசியாக பொ.ச.மு. 607-ல் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது. (2 நாளாகமம் 36:5, 6, 11-21) மோவாப் மற்றும் அம்மோனைக் குறித்ததில், யூத சரித்திராசிரியர் ஜோசிஃபஸின்படி, எருசலேமின் வீழ்ச்சிக்கு பிறகு ஐந்தாவது வருடத்தில், பாபிலோனியர்கள் அவர்கள்மீது போர் செய்து அவர்களை வெற்றிகொண்டனர். தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்ட விதமாக, அவை அதற்கு பிறகு மறைந்து போயின.

19, 20. (அ) தமக்காக காத்திருந்தவர்களுக்கு எவ்வாறு யெகோவா வெகுமதி அளித்தார்? (ஆ) இந்த சம்பவங்கள் நமக்கு ஏன் அக்கறையூட்டுவதாக இருக்கின்றன, அடுத்த கட்டுரையில் என்ன சிந்திக்கப்படும்?

19 யெகோவாவிற்கு காத்திருந்தவர்களாக தங்களை வைத்துக்கொண்ட யூதர்களுக்கும் யூதர்களல்லாதவர்களுக்கும் செப்பனியாவுடைய தீர்க்கதரிசனத்தின் இந்த விவரங்களின் நிறைவேற்றமும் மற்ற விவரங்களின் நிறைவேற்றமும் விசுவாசத்தைப் பலப்படுத்தும் ஒரு அனுபவமாக இருந்தது. எரேமியா, எத்தியோப்பியனாகிய எபெத்மெலேக், யோனதாபின் குடும்பத்தாராகிய ரேகாபியர் ஆகியோர் யூதாவிற்கும் எருசலேமிற்கும் நிகழ்ந்த அழிவிலிருந்து தப்பிப்பிழைத்தவர்களில் சிலர். (எரேமியா 35:18, 19; 39:11, 12, 16-18) யெகோவாவிற்கு தொடர்ந்து காத்துக்கொண்டிருந்த, சிறையிருப்பிலிருந்த உண்மையுள்ள யூதர்களும் அவர்களுடைய பிள்ளைகளும், பொ.ச.மு. 537-ல் பாபிலோனிலிருந்து விடுதலையாக்கப்பட்டு உண்மை வணக்கத்தை மறுபடியுமாக நிலைநாட்ட யூதாவிற்கு திரும்பிய சந்தோஷமுள்ள மீதியானோரின் ஒரு பாகமானார்கள்.—எஸ்றா 2:1, 2; செப்பனியா 3:14, 15, 20.

20 இவையெல்லாம் நம்முடைய காலத்திற்கு எதை அர்த்தப்படுத்துகின்றன? செப்பனியாவின் நாளிலிருந்த நிலைமை இன்று கிறிஸ்தவமண்டலத்தில் நடந்துகொண்டிருக்கும் அருவருப்பான காரியங்களோடு அநேக வழிகளில் ஒத்திருக்கிறது. மேலுமாக, அந்தக் காலங்களில் யூதர்களுக்கிருந்த பல்வேறு விதமான மனப்பான்மைகள், சில சமயங்களில் யெகோவாவின் ஜனங்களுக்கு மத்தியில்கூட, இன்று காணப்படும் மனப்பான்மைகளோடு ஒத்திருக்கின்றன. அடுத்த கட்டுரையில் இந்தக் காரியங்கள்தான் சிந்திக்கப்படும்.

[அடிக்குறிப்பு]

a யோசியாவின் சொந்த குமாரர்கள் அந்தச் சமயத்தில் மிகவும் சிறியவர்களாக இருந்ததன் காரணமாக, ‘ராஜகுமாரர்கள்’ என்ற பதம் எல்லா ராஜரீக பிரபுக்களையும் குறிப்பிடுவதாகத் தோன்றுகிறது.

மறுகலந்தாலோசிப்பு

◻ செப்பனியாவின் நாட்களில் யூதாவில் மதசம்பந்தமான நிலை என்ன?

◻ பிரபுக்கள் மற்றும் நியாயாதிபதிகளுக்கிடையே என்ன பிரச்சினைகள் காணப்பட்டன, அநேக ஜனங்களுடைய மனப்பான்மை என்னவாயிருந்தது?

◻ யெகோவாவின் ஜனங்களுக்கு எதிராக எவ்வாறு தேசங்கள் பெருமைபாராட்டின?

◻ யூதாவிற்கும் மற்ற தேசங்களுக்கும் என்ன எச்சரிக்கையை செப்பனியா கொடுத்தார்?

◻ யெகோவாவிற்கு காத்திருந்தவர்களாக தங்களை வைத்துக்கொண்டவர்கள் எவ்வாறு வெகுமதி அளிக்கப்பட்டார்கள்?

[பக்கம் 9-ன் படம்]

பூர்வீக இஸ்ரவேலுக்கு எதிராக கேவலமான வார்த்தைகளை மோவாபிய ராஜாவாகிய மேஷா பேசினார் என்பதை மோவாபியக் கல் உறுதிசெய்கிறது

[படத்திற்கான நன்றி]

Moabite Stone: Musée du Louvre, Paris

[பக்கம் 10-ன் படம்]

செப்பனியாவின் தீர்க்கதரிசனத்தை ஆதரிப்பதாய், காலவரிசையில் எழுதப்பட்ட பாபிலோனிய வரலாற்றையுடைய ஆப்பு வடிவமுள்ள பலகை, கூட்டிணைக்கப்பட்ட சேனையினால் நினிவே அழிக்கப்பட்டதை பதிவு செய்கிறது

[படத்திற்கான நன்றி]

Cuneiform tablet: Courtesy of The British Museum

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்