இன்பத்திலும் துன்பத்திலும் கடவுளின் சேவையில் ஒன்றுபட்டிருத்தல்
மிஷலும் பபெட் முல்லரும் சொன்னபடி
“உங்களுக்கு நான் ஒரு கெட்ட செய்தியைக் கொண்டிருக்கிறேன். ஆப்பிரிக்காவில் உங்களுடைய மிஷனரி வாழ்க்கையைப்பற்றி இனி மறந்துவிடுங்கள்,” என்று டாக்டர் கூறினார். அவர் என் மனைவி பபெட்டைப் பார்த்து, “உங்களுக்கு மார்பகப் புற்றுநோயிருக்கிறது,” என்றார்.
வார்த்தையில் விவரிக்கமுடியாத அளவுக்கு அதிர்ச்சியில் உறைந்துபோனோம் நாங்கள். பல காரியங்கள் எங்கள் மனதில் வந்துபோயின. டாக்டரிடம் வந்த எங்களின் இந்த விஜயம் வெறுமனே ஒரு இறுதியான மருத்துவ பரிசோதனை என்று நாங்கள் நினைத்திருந்தோம். மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள பெனினுக்குத் திரும்பிச்செல்ல பயணச்சீட்டுகளும் வாங்கியாகிவிட்டது. அந்த வாரத்திற்குள் திரும்பிவிடுவோம் என நினைத்திருந்தோம். 23 ஆண்டுக் காலத் தாம்பத்தியத்தில் நாங்கள் இன்பமான நேரங்களையும் துன்பமான நேரங்களையும் அனுபவித்தோம். குழப்பமடைந்தும் திகிலுடனும், புற்றுநோயை எதிர்த்து போராட நாங்கள் இப்போது தயாராகிவிட்டோம்.
முதலிலிருந்து சொல்கிறோம். மிஷல் 1947 செப்டம்பரில் பிறந்தார், பபெட் 1945 ஆகஸ்ட்டில் பிறந்தாள். நாங்கள் பிரான்ஸில் வளர்ந்தோம், 1967-ல் மணம் புரிந்தோம். பாரிஸில் வாழ்க்கை நடத்தினோம் நாங்கள். 1968-ன் ஆரம்பத்தில், ஒருநாள் காலையில் பபெட்டுக்கு வேலைக்குச்செல்ல தாமதமாகிவிட்டது. ஒரு பெண் கதவருகே வந்து மத சம்பந்தமான சிற்றேடு ஒன்றை அவளிடம் அளித்தார், அவள் அதை பெற்றுக்கொண்டாள். பிறகு அந்தப் பெண் கூறினார்: “உங்களுடனும் உங்கள் கணவருடனும் பேசுவதற்காக நான் என் கணவருடன் திரும்பவும் வரலாமா?”
பபெட் தன் வேலையைப்பற்றியே நினைத்துக்கொண்டிருந்தாள். அந்தப் பெண் போனால் போதும் என்று நினைத்ததனால், “சரி, சரி” என்று கூறினாள்.
மிஷல் விவரிக்கிறார்: “மதத்தில் எனக்கு ஆர்வம் இருந்ததில்லை, ஆனால் அந்தச் சிற்றேடு என் கண்களை ஈர்த்தது, அதை நான் வாசித்தேன். சில நாட்களுக்குப்பின் அந்தப் பெண் ஜாஸ்லன் லம்வன் தன் கணவர் க்லோடுடன் திரும்பவும் வந்தார். அவர் பைபிளை உபயோகிப்பதில் மிகவும் திறம்பட்டவராக இருந்தார். என்னுடைய எல்லா கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார். நான் கவரப்பட்டேன்.
“பபெட் ஒரு நல்ல கத்தோலிக்கராய் இருந்தாள்; ஆனால் பைபிள் இல்லாதிருந்தாள்; கத்தோலிக்கருக்கு இது ஒன்றும் வழக்கத்துக்கு மாறானதல்ல. கடவுளுடைய வார்த்தையைப் பார்ப்பதிலும் படிப்பதிலும் அவள் மிகவும் கிளர்ச்சியடைந்தாள். நாங்கள் போதிக்கப்பட்டிருந்த மத கருத்துக்கள் பல பொய்யானவை என்பதை எங்களுடைய படிப்பிலிருந்து கற்றுக்கொண்டோம். நாங்கள் கற்றுக்கொண்டிருந்த காரியங்களை எங்கள் உறவினர்களிடத்திலும் நண்பர்களிடத்திலும் பேச ஆரம்பித்தோம். 1969, ஜனவரியில் முழுக்காட்டப்பட்ட யெகோவாவின் சாட்சிகளாக ஆனோம். அதற்குப்பின் வெகுவிரைவிலேயே, எங்களுடைய ஒன்பது உறவினர்களும் நண்பர்களும் முழுக்காட்டப்பட்டார்கள்.”
பிரசங்கிப்போர் எங்குத் தேவையோ அங்கே சேவித்தல்
முழுக்காட்டப்பட்ட உடனேயே நாங்கள் சிந்தித்தோம்: ‘நமக்குத்தான் பிள்ளைகள் இல்லையே, ஏன் முழுநேர ஊழியத்தை ஏற்கக்கூடாது?’ ஆகவே, 1970-ல் எங்களுடைய வேலைகளை விட்டுவிட்டோம், ஒழுங்கான பயனியர்களாகச் சேர்ந்துகொண்டு, மத்திய பிரான்ஸிலுள்ள நவருக்கு அருகே மன்யிலார்ம் என்னும் சிறிய நகரத்தில் குடியேறினோம்.
அது கடினமான ஒரு நியமிப்பாக இருந்தது. பைபிள் படிக்க விரும்பும் ஆட்களைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக இருந்தது. எங்களுக்கு வெளியிடத்தில் வேலையும் கிடைக்கவில்லை, எனவே எங்களிடத்தில் கொஞ்சம் பணம்தான் இருந்தது. சில நேரங்களில் சாப்பிடுவதற்கு வெறும் உருளைக்கிழங்குகள் மாத்திரம் இருந்தன. குளிர் காலங்களில், 22 டிகிரி பூஜ்யம் செல்சியஸுக்கும் குறைவாக வெப்பநிலை இறங்கிவிடும். அங்கே நாங்கள் கழித்தக் காலத்தை ஏழு மெலிந்த பசுக்களின் காலம் என்று அழைத்தோம்.—ஆதியாகமம் 41:3.
ஆனால் யெகோவா எங்களைப் போஷித்தார். ஒரு நாள் எங்களுடைய உணவு கிட்டத்தட்ட தீர்ந்துவிட்டது, பபெட்டுனுடைய சகோதரியிடமிருந்து வந்த ஒரு பெரிய பெட்டி நிறைய பாலாடைக்கட்டியைத் தபால்காரர் தந்துவிட்டு போனார். இன்னொரு நாள், பிரசங்கிப்பு செய்துவிட்டு வீடு திரும்பியபோது, 500 கிலோமீட்டர் தூரத்திலிருந்து சில நண்பர்கள் எங்களைப் பார்க்க வந்திருந்ததைக் கண்டோம். எங்களுக்குக் காரியங்கள் எவ்வளவு கஷ்டமாக இருக்கின்றன என்பதை இந்தச் சகோதரர்கள் கேள்விப்பட்டதினால் தங்களுடைய இரண்டு கார்களை உணவு பொருட்களால் நிறைத்து வந்திருந்தார்கள்.
ஒன்றரை வருடத்திற்குப்பின், சங்கம் எங்களை விசேஷ பயனியர்களாக நியமித்தது. அடுத்துவந்த நான்கு வருடங்களில் நாங்கள் நவரிலும் அதன் பிறகு ட்ரவாவிலும் கடைசியாக மோன்டின்யீ லேமெட்ஸிலும் ஊழியம் செய்தோம். 1976-ல், தென்மேற்கு பிரான்ஸில் வட்டாரக் கண்காணியாக ஊழியம் செய்ய மிஷல் நியமிக்கப்பட்டார்.
இரண்டு வருடங்களுக்குப்பிறகு, வட்டாரக் கண்காணிகளுக்கு நடந்த பள்ளியில், வெளியூருக்கு மிஷனரிகளாகச் செல்ல அழைப்புவிடுத்து உவாட்ச் டவர் சொஸைட்டியிடமிருந்து ஒரு கடிதத்தைப் பெற்றோம் நாங்கள்; சாத் அல்லது பர்கினா ஃபாஸோ (அப்போதைய வோல்டாவின் மேற்பகுதி) என இவ்விரண்டில் ஒன்றை நாங்கள் தெரிவுசெய்யலாம் என்று அந்தக் கடிதம் கூறியது. நாங்கள் சாத்தை தெரிவுசெய்தோம். டஹிடி கிளையின் கீழ் வேலை செய்யும்படி எங்களை நியமித்து விரைவிலேயே மற்றொரு கடிதம் எங்களுக்குக் கிடைத்தது. நாங்கள் மிகப்பெரிய கண்டமாகிய ஆப்பிரிக்காவை கேட்டோம், ஆனால் விரைவில் ஒரு சிறிய தீவுக்குச் செல்ல நேர்ந்தது!
தென் பசிபிக்கில் ஊழியம் செய்தல்
தென் பசிபிக்கிலுள்ள ஓர் அழகிய வெப்பமண்டல தீவு டஹிடி. நாங்கள் அங்கே சென்றடைந்ததும், நூற்றுக்கும் அதிகமான சகோதரர்கள் எங்களை வரவேற்க விமானநிலையத்தில் இருந்தார்கள். அவர்கள் எங்களை மலர்மாலைகளுடன் வரவேற்றார்கள், பிரான்ஸிலிருந்து வந்த நீண்ட பயணத்திற்குப்பின் களைப்பாக இருந்தபோதிலும் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம்.
டஹிடிக்கு வந்து நான்கு மாதங்களுக்குப்பின் கொப்பரை தேங்காய்களை நிறைத்த ஒரு சிறிய படகில் ஏறிக்கொண்டோம். நாங்கள் புதிதாக நியமிக்கப்பட்ட, மார்கியூசஸ் தீவுகளிலுள்ள நுகெஹிவ என்னும் தீவுக்கு ஐந்து நாட்களுக்குப் பிறகு சென்றடைந்தோம். அந்தத் தீவில் 1,500 மக்கள் வசித்தார்கள், ஆனால் சகோதரர்கள் இல்லை. நாங்கள் மாத்திரம் இருந்தோம்.
அந்தக் காலத்தில் நிலைமைகள் பழம்பாணியில் இருந்தன. காரையாலும் மூங்கிலாலும் கட்டப்பட்ட ஒரு சிறிய வீட்டில் வசித்தோம். அங்கு மின்சாரம் கிடையாது. தண்ணீர் குழாய் இருந்தது, அதில் எப்போதாவது தண்ணீர் வரும், ஆனால் தண்ணீர் மிகவும் கலங்கலாய் இருக்கும். நாங்கள் நீர்த்தொட்டியில் சேகரமான மழைத்தண்ணீரையே பெரும்பாலும் பயன்படுத்தினோம். அங்கு ஒழுங்காகப் போடப்பட்ட சாலைகள் கிடையாது, வெறுமனே அழுக்குப் பாதைகளே இருந்தன.
அந்தத் தீவில் தொலைவான இடங்களைச் சென்றெட்ட நாங்கள் குதிரைகளை வாடகைக்கு அமர்த்த வேண்டியிருந்தது. சேணங்கள் மரத்தால் ஆனவை—மிகவும் வசதியற்றிருந்தன, முன்பின் குதிரை சவாரி செய்திராத பபெட்டுக்கு விசேஷமாக கடினமாயிருந்தது. அவர் வழியில் விழுந்துகிடக்கும் மூங்கிலை வெட்டுவதற்காகக் கூடவே ஒரு வெட்டுக்கத்தியையும் தூக்கிச்சென்றோம். பிரான்ஸில் இருந்த வாழ்க்கையிலிருந்து மிகப் பெரிய மாற்றமாக அது இருந்தது.
நாங்கள் இருவர் மாத்திரமே ஆஜராகியபோதிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டங்களை நடத்தினோம். இருவர் மாத்திரமே இருந்ததால் ஆரம்பத்தில் மற்ற கூட்டங்களை நாங்கள் நடத்தவில்லை. அதற்கு மாறாக கூட்டத்திற்குரிய பகுதிகளை இருவருமாகப் படித்தோம்.
சில மாதங்களுக்குப்பின், அவ்விதம் தொடர்ந்திருப்பது நல்லதல்ல என நாங்கள் முடிவுசெய்தோம். மிஷல் விவரிக்கிறார்: “நான் பபெட்டுவிடம் கூறினேன், ‘நாம் ஒழுங்காக உடை உடுக்கவேண்டும். நீ அங்கே கீழே உட்காரு, நான் இங்கே உட்காருகிறேன். நான் ஜெபத்துடன் துவங்குகிறேன், அதற்குப்பின் நாம் தேவராஜ்ய ஊழியப் பள்ளியையும் ஊழியக்கூட்டத்தையும் வைத்துக்கொள்ளலாம். நான் கேள்விகளைக் கேட்பேன், நீ ஒருத்தி மாத்திரம் இந்த அறையில் இருந்தாலும் நீ பதில் சொல்வாயாக.’ நாங்கள் அவ்வாறு செய்தது நல்லதற்கே, ஏனென்றால் சபை இல்லையெனில் ஆவிக்குரிய தளர்ச்சிக்குச் சுலபமாக ஆளாக நேரும்.”
நமது கிறிஸ்தவ கூட்டங்களுக்கு வருவதற்கு ஆட்கள் கிடைக்க காலம் எடுத்தது. முதல் எட்டு மாதங்களுக்கு நாங்கள் இருவர் மாத்திரம் இருந்தோம். பிறகு, எங்களுடன் ஒருவரோ இருவரோ, சிலநேரங்களில் வேறு மூன்று பேரோ சேர்ந்துகொள்வார்கள். ஒரு வருடம், கர்த்தரின் வருடாந்தர இராப்போஜனத்தின் அனுசரிப்பை நாங்கள் இருவர் மாத்திரம் துவங்கினோம். பத்து நிமிடங்களுக்குப்பின் சில ஆட்கள் வந்தார்கள், எனவே நான் பேச்சை நிறுத்திவிட்டு மறுபடியுமாக ஆரம்பித்தேன்.
இன்று, மார்கியூசஸ் தீவுகளில் 42 பிரஸ்தாபிகள் இருக்கிறார்கள் மற்றும் 3 சபைகள் இருக்கின்றன. வேலையின் மிகப் பெரும்பகுதி எங்களுக்குப்பின் வந்தவர்களால் செய்யப்பட்டபோதிலும், நாங்கள் முன்பு சந்தித்த சில ஆட்கள் இப்பொழுது முழுக்காட்டப்பட்டுள்ளனர்.
நம் சகோதரர்கள் அருமையானவர்கள்
நுகெஹிவவில் பொறுமையைக் கற்றுக்கொண்டோம். மிக அத்தியாவசிய தேவைகளைத் தவிர எல்லாவற்றிற்காகவும் நாங்கள் காத்திருக்கவேண்டியிருந்தது. உதாரணத்திற்கு, உங்களுக்கு ஒரு புத்தகம் வேண்டுமென்றால், அதற்காக எழுதி கேட்கவேண்டும், அதன்பின் அது வந்துசேர இரண்டு அல்லது மூன்று மாதங்கள் காத்திருக்கவேண்டும்.
நாங்கள் கற்றுக்கொண்ட மற்றொரு பாடமானது நம் சகோதரர்கள் அருமையானவர்கள். நாங்கள் டஹிடிக்கு வந்தபோது கூட்டத்திற்கு சென்றோம், அங்கே சகோதரர்கள் பாடக்கேட்டது எங்களை கண்ணீர் வடிக்கவைத்தது. சில சகோதரர்களுடன் ஒத்துப்போக கடினமாக இருப்பது உண்மையாக இருக்கலாம், ஆனால் சகோதரர்களுடன் இருப்பது எவ்வளவு நன்றாக உள்ளது என்பதை நீங்கள் தனியாக இருக்கையில்தான் உணருவீர்கள். 1980-ல் நாங்கள் மறுபடியும் டஹிடி திரும்பி, வட்டார ஊழியத்தைச் செய்யவேண்டும் என்று சங்கம் தீர்மானித்தது. நம் சகோதரர்களின் அனலான உபசரிப்பாலும் அன்பாலும் பிரசங்க வேலைக்கு அதிகமாக நாங்கள் உற்சாகப்படுத்தப்பட்டோம். டஹிடியில் வட்டார ஊழியத்தில் மூன்று வருடங்களைச் செலவிட்டோம்.
தீவுக்குத் தீவு
அடுத்ததாக, மற்றொரு பசிபிக் தீவான ரையடேயாவிலுள்ள மிஷனரி இல்லத்திற்கு நாங்கள் நியமிக்கப்பட்டோம், அங்கு சுமார் இரண்டு வருடங்கள் தங்கினோம். ரையடேயாவிற்குப்பின், தீவுக்கூட்டமான டூயமோட்டுவுக்கு வட்டார ஊழியத்திற்காக நாங்கள் நியமிக்கப்பட்டோம். 80 தீவுகளில் 25-ஐ நாங்கள் படகில் சென்று விஜயம் செய்தோம். பபெட்டுக்கு அது கஷ்டமாக இருந்தது. படகில் பிரயாணம் செய்த ஒவ்வொரு தடவையும் அவளுக்குக் கடற்பயணநோய் வந்தது.
பபெட் சொல்கிறாள்: “அது பயங்கரமாக இருந்தது. நாங்கள் படகில் இருந்த நேரத்திலெல்லாம் நான் அசௌக்கியமாக இருந்தேன். ஐந்து நாட்கள் கடலில் இருக்க நேர்ந்தால், அந்த ஐந்து நாட்களும் நான் அசௌக்கியமாக இருந்தேன். எந்த மருந்தும் எனக்கு வேலைசெய்யவில்லை. இருப்பினும், என்னுடைய அசௌக்கியத்தின் மத்தியிலும், மகா சமுத்திரம் அழகாக இருக்கிறது என நான் நினைத்தேன். அது பிரமாதமான ஒரு காட்சி. படகுடன் போட்டி போட்டுக்கொண்டு டால்ஃபின்கள் ஓடும். நீங்கள் கைகளைத் தட்டினால், அவை பெரும்பாலும் தண்ணீருக்கு மேலே குதிக்கும்!”
ஐந்து வருட வட்டார ஊழியத்திற்குப்பின், மறுபடியுமாக இரண்டு வருடங்களுக்கு டஹிடிக்கு நியமிக்கப்பட்டோம், பிரசங்கிப்பில் மீண்டும் மகிழ்ச்சியான நேரத்தைக் கொண்டிருந்தோம். ஒன்றரை வருடத்தில் எங்கள் சபை, 35 பிரஸ்தாபிகளிலிருந்து 70 பேராக உயர்ந்து இரட்டிப்பானது. நாங்கள் பைபிள் படிப்பு நடத்தியவர்களுள் பன்னிரண்டு பேர் நாங்கள் புறப்படுவதற்கு சற்று முன் முழுக்காட்டப்பட்டார்கள். அவர்களில் சிலர் இன்று சபையில் மூப்பர்களாக இருக்கிறார்கள்.
தென் பசிபிக்கில் ஒட்டுமொத்தமாக 12 வருடங்களைச் செலவிட்டோம். அதன்பிறகு, சங்கத்திடமிருந்து ஒரு கடிதத்தைப் பெற்றோம், சபைகள் ஸ்திரமாக இருப்பதனால் இனியும் தீவுகளில் மிஷனரிகள் அவசியமில்லை என்று அதில் கூறப்பட்டிருந்தது. நாங்கள் டஹிடிக்கு வந்தபோது, அங்கே சுமார் 450 பிரஸ்தாபிகள் இருந்தார்கள், நாங்கள் விட்டுவரும்போது 1000-க்கும் அதிகமானோர் இருந்தார்கள்.
ஒருவழியாக ஆப்பிரிக்காவுக்கு!
நாங்கள் பிரான்ஸுக்குத் திரும்பினோம், ஒன்றரை மாதத்திற்குப்பின், சங்கம் புதிய நியமிப்பை—மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள பெனின் செல்வதற்குக்—கொடுத்தது. 13 வருடங்களுக்கு முன்னரே நாங்கள் ஆப்பிரிக்காவுக்குச் செல்ல விரும்பினோம், அதனால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம்.
நவம்பர் 3, 1990-ல் பெனின் வந்தடைந்தோம், 14 வருட ராஜ்ய பிரசங்கிப்பு வேலையின் தடை உத்தரவு நீக்கப்பட்டதும் சென்ற முதல் மிஷனரிகளுள் நாங்களும் இருந்தோம். அது மிகவும் குஷியாக இருந்தது. பசிபிக் தீவுகளில் இருந்ததை போன்றே வாழ்க்கை இருப்பதால், குடி அமருவதில் ஒரு சிரமமும் எங்களுக்கு இருக்கவில்லை. மக்கள் அதிக நட்புடையவர்களாகவும் உபசரிப்பவர்களாகவும் இருக்கிறார்கள். தெருவில் யாரை வேண்டுமென்றாலும் நிறுத்தி உங்களால் பேசமுடியும்.
நாங்கள் பெனின் வந்துசேர்ந்த ஒருசில வாரங்களுக்குப்பின், பபெட் தன் மார்பகத்தில் ஒரு கட்டி இருந்ததைக் கவனித்தாள். புதிதாக நிறுவப்பட்ட கிளை அலுவலகத்திற்கு அருகிலிருந்த ஒரு சிறிய கிளினிக்கிற்கு சென்றோம். டாக்டர் அவளைப் பரிசோதித்துவிட்டு, அவளுக்கு உடனடியாக அறுவை சிகிச்சைத் தேவை என்று கூறினார். மறுநாள் நாங்கள் மற்றொரு கிளினிக்கிற்கு சென்றோம், அங்கே ஐரோப்பிய டாக்டரை பார்த்தோம், அவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு மகளிர் நோய் மருத்துவர். பபெட்டுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக உடனே பிரான்ஸுக்கு நாங்கள் போகவேண்டும் என்று அவரும் கூறினார். இரண்டு நாட்களுக்குப்பின், பிரான்ஸுக்குச் செல்லும் விமானத்தில் இருந்தோம் நாங்கள்.
பெனினை விட்டுவர மிகவும் வருத்தப்பட்டோம். அந்த நாட்டில் கிடைத்த புதுப்பிக்கப்பட்ட மத சம்பந்தமான சுதந்திரத்துடன், புதிய மிஷனரிகளைக் கொண்டிருப்பதில் சகோதரர்கள் கிளர்ச்சியடைந்தார்கள், நாங்களும் அங்கிருப்பதில் கிளர்ச்சியடைந்தோம். ஆகவே, அந்த நாட்டிற்கு வந்து ஒருசில வாரங்களில் திரும்பவேண்டியிருந்ததால், எங்களுக்கு மனசங்கடமாக இருந்தது.
நாங்கள் பிரான்ஸ் வந்துசேர்ந்ததும், அறுவை மருத்துவர் பபெட்டைச் சோதனை செய்துவிட்டு, அவளுக்கு அறுவை சிகிச்சை தேவை என்பதை உறுதிப்படுத்தினார். மருத்துவர்கள் உடனடியாகச் செயல்பட்டார்கள், ஒரு சிறிய அறுவை சிகிச்சையைச் செய்துவிட்டு, மறுநாள் பபெட்டை மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அனுப்பிவிட்டார்கள். இத்துடன் முடிந்துவிட்டது என்று நாங்கள் நினைத்தோம்.
எட்டு நாட்களுக்குப் பிறகு அந்த அறுவை மருத்துவரைப் போய் சந்தித்தோம். அச்சமயத்தில்தான் அவர் பபெட்டுக்கு மார்பகப் புற்றுநோய் இருக்கும் விஷயத்தைப் போட்டுடைத்தார்.
அந்த நேரத்தில்தான் எவ்வாறு உணர்ந்தார் என்பதை நினைவுகூர்ந்து பபெட் கூறுகிறாள்: “முதலில் மிஷலைக்காட்டிலும் நான் குறைவாகவே கலவரமடைந்தேன். ஆனால், அந்தக் கெட்ட செய்தி கிடைத்த அடுத்த நாள், நான் ஒரு உணர்ச்சியும் அற்றவளாக இருந்தேன். என்னால் அழ முடியவில்லை. என்னால் சிரிக்க முடியவில்லை. நான் செத்துவிடுவேன் என்று நினைத்தேன். என்னை பொறுத்தமட்டில், புற்றுநோய் மரணத்திற்குச் சமானம். என்ன செய்யவேண்டுமோ அதை செய்தாக வேண்டும் என்பதே என்னுடைய மனப்பான்மையாக இருந்தது.”
புற்றுநோயுடன் போராட்டம்
அந்தக் கெட்ட செய்தியை வெள்ளிக்கிழமையன்று கேட்டோம், பபெட்டுக்கு இரண்டாவது அறுவை சிகிச்சை செவ்வாய்க்கிழமையன்று செய்ய காலம் குறிக்கப்பட்டது. நாங்கள் பபெட்டுனுடைய அக்கா வீட்டில் தங்கியிருந்தோம், ஆனால் அவர்களும் நோய்வாய்ப்பட்டிருந்ததால், அவர்களுடைய சிறிய அப்பார்ட்மென்ட்டில் எங்களால் தொடர்ந்து தங்க முடியவில்லை.
எங்கே போவதென்று புரியாமல் விழித்துக்கொண்டிருந்தோம். அப்போது ஈவ் மற்றும் பிரீஜிட் மெர்ட என்ற ஒரு தம்பதியினரின் நினைவுவந்தது, முன்பு அவர்களுடன் நாங்கள் தங்கினோம். எங்களிடத்தில் அதிக உபசரணையுடன் இந்தத் தம்பதியினர் இருந்திருக்கிறார்கள். ஆகவே ஈவ்வை தொலைபேசியில் அழைத்து, பபெட்டுக்கு அறுவை சிகிச்சை செய்யவேண்டியிருக்கிறது என்றும், நாங்கள் எங்கே தங்குவதென்று தெரியவில்லை என்றும் அவரிடத்தில் சொன்னோம். மிஷலுக்கு ஒரு வேலை வேண்டும் என்பதையும் கூறினோம்.
ஈவ் மிஷலுக்குத் தன் வீட்டிலேயே வேலைபோட்டுக் கொடுத்தார். சகோதரர்கள் எங்களைத் தயவான செயல்கள் பலவற்றால் ஆதரித்தார்கள், உற்சாகப்படுத்தினார்கள். பணசம்பந்தமாகவும்கூட அவர்கள் எங்களுக்கு உதவினார்கள். பபெட்டுனுடைய மருத்துவ செலவை சங்கம் ஏற்றது.
பெரிய அறுவை சிகிச்சையாக இருந்தது. நிணநீர்க்கணுக்களையும் அந்த மார்பகத்தையும் டாக்டர்கள் அகற்ற வேண்டியதாயிற்று. உடனடியாக வேதியியல் மருந்து சிகிச்சையை அவர்கள் ஆரம்பித்தார்கள். ஒரு வாரத்திற்குப் பின் மருத்துவமனையிலிருந்து பபெட் வெளிவர முடிந்தது, ஆனால் தொடர்ந்து சிகிச்சை பெறுவதற்காக மூன்று வாரங்களுக்கு ஒருமுறை அவர் செல்லவேண்டியிருந்தது.
பபெட் சிகிச்சைப் பெற்றுக்கொண்டிருந்த சமயத்தில், சபையிலுள்ள சகோதரர்கள் அதிக உதவியாக இருந்தார்கள். ஒரு சகோதரி, அவருக்கும் மார்பகப் புற்றுநோய் முன்பு இருந்தது, அவர் அதிக உற்சாகமளிப்பவராய் இருந்தார். எதை எதிர்பார்க்கவேண்டும் என்று கூறுவதன் மூலம் அவர் பபெட்டுக்கு அதிக ஆறுதலைக் கொடுத்தார்.
இருந்தபோதிலும், எங்களுடைய எதிர்காலத்தைப்பற்றி கவலையுள்ளவர்களாக இருந்தோம். இதை கணித்தவர்களாக மிஷலும் ஜானட் செல்லரியும் எங்களை ஒரு உணவு விடுதிக்குச் சாப்பாட்டிற்காக அழைத்து சென்றார்கள்.
நாங்கள் மிஷனரி சேவையை விட்டுவிலக வேண்டியதாயிருக்கும், எங்களால் மறுபடியும் ஆப்பிரிக்காவுக்குப் போகவே முடியாது என்று அவர்களிடத்தில் கூறினோம். இருப்பினும், சகோதரர் செல்லரி கூறினார்: “என்ன? யார் சொன்னது நீங்கள் விட்டுவிலக வேண்டும் என்று? ஆளும் குழுவா? பிரான்ஸில் இருக்கும் சகோதரர்களா? யார் சொன்னது?”
“யாரும் சொல்லவில்லை, நானாகவே சொல்கிறேன்,” என்று பதிலளித்தேன்.
“இல்லவே இல்லை! நீங்கள் கட்டாயம் திரும்பிச்செல்வீர்கள்!” என்று சகோதரர் செல்லரி கூறினார்.
வேதியியல் மருந்து சிகிச்சையைத் தொடர்ந்து, கதிர்வீச்சு அளிக்கப்பட்டது, அது 1991 ஆகஸ்ட் இறுதியில் முடிவடைந்தது. தொடர்ச்சியான மருத்துவ பரிசோதனைகளுக்காக பபெட் பிரான்ஸுக்கு வந்துபோவார்களேயானால், நாங்கள் ஆப்பிரிக்காவுக்குத் திரும்பி செல்வதில் ஒரு பிரச்சினையும் இல்லை என்று டாக்டர்கள் கூறினார்கள்.
பெனினுக்குத் திரும்புதல்
மிஷனரி சேவைக்கு மறுபடியும் திரும்புவதற்காக அனுமதி கேட்டு, புருக்லினிலுள்ள தலைமை அலுவலகத்திற்கு எழுதினோம். அவர்களின் பதிலை பெறுவதற்காக ஆவலோடு காத்திருந்தோம். நாட்கள் மெல்ல ஊர்ந்தன. கடைசியாக, மிஷலால் மேற்கொண்டும் காத்திருக்க பொறுமை இல்லை, எனவே அவர் புருக்லினுக்குத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, எங்களுடைய கடிதம் அவர்களுக்குக் கிடைத்ததா என்று கேட்டார். அதை அவர்கள் கலந்தாலோசித்ததாகக் கூறினார்கள்—எங்களால் பெனினுக்குத் திரும்ப முடிந்ததே! யெகோவாவுக்கு நாங்கள் எவ்வளவாய் நன்றிகடன்பட்டவர்கள்!
இந்தச் செய்தியைக் கொண்டாடும் விதத்தில், மெரிடாவின் குடும்பம் பெரியளவில் விழா நடத்தினார்கள். நவம்பர் 1991-ல் பெனின் திரும்பினோம், சகோதரர்கள் எங்களை விருந்துடன் வரவேற்றார்கள்!
இப்போது பபெட் நன்றாய் இருப்பதாகத் தெரிகிறது. காலம்தவறாமல் முழுமையான மருத்துவ பரிசோதனைக்காகப் பிரான்ஸுக்குப் போய்வந்துகொண்டிருக்கிறோம், புற்றுநோயின் தடையத்தைக் கொஞ்சம்கூட டாக்டர்கள் காணவில்லை. எங்களுடைய மிஷனரி நியமிப்பில் திரும்பவும் வந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். பெனினில் நாங்கள் தேவைப்படுவதாக உணருகிறோம், யெகோவா எங்களுடைய வேலையை ஆசீர்வதித்துவருகிறார். நாங்கள் திரும்பி வந்ததிலிருந்து 14 பேர் முழுக்காட்டப்பட உதவியுள்ளோம். இப்போது அவர்களில் ஐந்து பேர் ஒழுங்கான பயனியர்கள், ஒருவர் உதவி ஊழியராக நியமிக்கப்பட்டுள்ளார். எங்களுடைய சிறிய சபை பெரிதாக வளர்ச்சியடைந்து, அதன்பின் இரண்டு சபைகளாகப் பிரிக்கப்பட்டதையும் கண்டோம்.
பல வருடங்களாக, யெகோவாவை கணவனும் மனைவியுமாகச் சேவித்துள்ளோம், பல ஆசீர்வாதங்களை மகிழ்ந்து அனுபவித்துள்ளோம், பல அருமையான ஆட்களைப்பற்றியும் தெரியவந்தோம். ஆனால், கஷ்டங்களை வெற்றிகரமாகச் சகித்திருப்பதற்கு யெகோவாவினால் பயிற்றுவிக்கவும் பலப்படுத்தவும் பட்டோம். யோபுவைப்போல், காரியங்கள் ஏன் அவ்விதம் நடந்தேறின என்பதை எல்லா நேரங்களிலும் புரிந்துகொள்ளவில்லை, ஆனால், எங்களுக்கு உதவுவதற்காக யெகோவா எப்போதும் இருந்தார் என்பதை நிச்சயமாகவே அறிந்திருந்தோம். கடவுளின் வார்த்தைச் சொல்கிறவிதமாகவே: “இதோ, இரட்சிக்கக்கூடாதபடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை; கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை.”—ஏசாயா 59:1.
[பக்கம் 23-ன் படம்]
பெனினில் உள்ளூர் உடையணிந்து மிஷலும் பபெட் முல்லரும்
[பக்கம் 25-ன் படங்கள்]
வெப்பமண்டல டஹிடியில் பாலிநேஷியர்கள் மத்தியில் மிஷனரி ஊழியம்