உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w96 4/15 பக். 28-29
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1996
  • இதே தகவல்
  • ‘தொடர்ந்து ஒருவருக்கொருவர் தாராளமாய் மன்னியுங்கள்’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
  • மனசார மன்னியுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
  • ஏன் மன்னிப்பவராக இருக்க வேண்டும்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1994
  • யெகோவாவைப் போல நீங்களும் மன்னிக்கிறீர்களா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1994
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1996
w96 4/15 பக். 28-29

வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

“எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும், எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும்.” என்பதாக இயேசு கூறினார். கிறிஸ்தவர்கள் பாவங்களை மன்னிக்க முடியும் என்பதாக இந்த வார்த்தைகள் அர்த்தப்படுத்துகின்றனவா?

பொதுவில் கிறிஸ்தவர்கள் அல்லது சபையிலுள்ள நியமிக்கப்பட்ட மூப்பர்களும்கூட, பாவங்களை மன்னிப்பதற்கான தெய்வீக அதிகாரத்தைப் பெற்றிருக்கிறார்கள் என்று முடிவு செய்வதற்கு எந்த வேதப்பூர்வ அடிப்படையும் இல்லை. ஆயினும், மேலே மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் யோவான் 20:23-ல் இயேசு தம்முடைய சீஷர்களுக்கு சொன்னது, அப்போஸ்தலருக்கு இந்த விஷயத்தில் விசேஷ வல்லமைகளைக் கடவுள் கொடுத்திருந்தார் என்பதைக் காண்பிக்கிறது. அங்கேயுள்ள இயேசுவினுடைய வாக்கியம் மத்தேயு 18:18-ல் பரலோகத் தீர்மானங்களைக் குறித்து அவர் சொன்னதோடு சம்பந்தப்பட்டிருக்கலாம்.

எபேசியர் 4:32-ல் பதிவு செய்யப்பட்டிருக்கும் அப்போஸ்தலனாகிய பவுலின் ஆலோசனைக்கு இசைவாக சில குற்றங்களை கிறிஸ்தவர்கள் மன்னிக்கலாம்: “ஒருவருக்கொருவர் தயவாயும் மன உருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.” அஜாக்கிரதையான பேச்சைப் போன்று கிறிஸ்தவர்களுக்கு இடையே இருந்த தனிப்பட்ட பிரச்சினைகளைக் குறித்து பவுல் இங்கே பேசிக்கொண்டிருந்தார். ஒருவருக்கொருவர் மன்னித்து, இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள அவர்கள் முயற்சி செய்ய வேண்டும். இயேசுவின் வார்த்தைகளை நினைபடுத்திப் பாருங்கள்: “ஆகையால், நீ பலிபீடத்தின் முன் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவுகூருவாயாகில், அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப்போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து.”—மத்தேயு 5:23, 24; 1 பேதுரு 4:8.

எனினும், யோவான் 20:23-ன் சூழமைவு, இந்தக் குறிப்பிட்ட கேட்போர் கூட்டத்தாரிடம் அவர் அதற்கு பிறகு சொன்ன காரியங்கள் காண்பிக்கும் விதமாக, இயேசு அதிக வினைமையான பாவங்களைக் குறிப்பிட்டுக்கொண்டிருந்தார் என்பதைக் காண்பிக்கிறது. ஏன் என்பதை நாம் பார்க்கலாம்.

உயிர்த்தெழுப்பப்பட்ட அந்த நாளில், எருசலேமில் ஒரு பூட்டப்பட்ட அறைக்குள் தம்முடைய சீஷர்களுக்கு இயேசு தோன்றினார். பதிவு இவ்வாறு சொல்கிறது: “இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: உங்களுக்குச் சமாதானமுண்டாவதாக; பிதா என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன் என்று சொல்லி, அவர்கள்மேல் ஊதி: பரிசுத்தஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்; எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும், எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும் என்றார்.”—யோவான் 20:21-23.

அநேகமாக, அங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் சீஷர்கள் முக்கியமாக உண்மையுள்ள அப்போஸ்தலராவர். (வசனம் 24-ஐ ஒப்பிடுக.) அவர்கள்மேல் ஊதி, “பரிசுத்தஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.” என்று சொல்வதன் மூலமாக, விரைவில் பரிசுத்த ஆவி அவர்கள்மீது ஊற்றப்படும் என்பதை அடையாளப்பூர்வமாக அவர்களுக்கு இயேசு தெரிவித்தார். பாவமன்னிப்பைக் குறித்ததில் அவர்கள் அதிகாரத்தைப் பெற்றிருப்பார்கள் என்பதாக இயேசு தொடர்ந்து சொன்னார். நியாயமாகவே, அவருடைய இரண்டு வாக்கியங்களும் இணைக்கப்பட்டிருக்கின்றன, ஒன்று மற்றொன்றினிடம் வழிநடத்துகிறது.

அவருடைய உயிர்த்தெழுதலுக்கு ஐம்பது நாட்களுக்கு பிறகு, பெந்தெகொஸ்தே தினத்தன்று, இயேசு பரிசுத்த ஆவியை ஊற்றினார். அது எதை நிறைவேற்றியது? ஒன்று, பரிசுத்த ஆவியைப் பெற்றவர்கள் பரலோகத்தில் கிறிஸ்துவுடன் உடனரசர்களாக இருக்கப்போகும் நம்பிக்கையுடன் கடவுளுடைய ஆவி குமாரர்களாக மறுபடியும் பிறந்தனர். (யோவான் 3:3-5; ரோமர் 8:15-17; 2 கொரிந்தியர் 1:22) ஆனால் ஆவி ஊற்றப்பட்ட அந்தக் காரியம் இன்னும் அதிகத்தைச் செய்தது. அதைப் பெற்றுக்கொண்டவர்களில் சிலர் அற்புதமான வல்லமைகளை அடைந்தனர். அதன் மூலமாக தங்களுக்கு தெரியாத அந்நிய பாஷையில் சிலரால் பேச முடிந்தது. மற்றவர்களால் தீர்க்கதரிசனம் உரைக்க முடிந்தது. இன்னும் மற்றவர்களால் நோய்வாய்ப்பட்டவர்களை சுகப்படுத்தவும் மரித்தோரை உயிர்த்தெழுப்பவும் முடிந்தது.—1 கொரிந்தியர் 12:4-11.

யோவான் 20:22-ல் உள்ள இயேசுவின் வார்த்தைகள் தம்முடைய சீஷர்களின்மீது பரிசுத்த ஆவி ஊற்றப்படுவதை சுட்டிக்காண்பிப்பதன் காரணமாக, பாவங்களை மன்னிப்பதன் சம்பந்தப்பட்ட அவருடைய வார்த்தைகள், மன்னிப்பதா வேண்டாமா என்பதைக் குறித்த ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த அதிகாரத்தை ஆவியின் செயலாக்கத்தின் மூலமாக தெய்வீக விதத்தில் அப்போஸ்தலர் பெற்றிருந்தனர் என்று அர்த்தப்படுத்துவதாகத் தோன்றுகிறது.—காவற்கோபுரம் (ஆங்கிலம்), மார்ச் 1, 1949, பக்கம் 78-ஐ காண்க.

அப்போஸ்தலர் அப்படிப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்திய ஒவ்வொரு சந்தர்ப்பத்தைக் குறித்தும் ஒரு முழுமையான பதிவை பைபிள் நமக்கு அளிப்பதில்லை, ஆனால் அதே சமயத்தில் அந்நிய பாஷையில் பேசுவதற்கும், தீர்க்கதரிசனம் உரைப்பதற்கும், சுகப்படுத்துவதற்கும் ஒரு அற்புதமான ஈவை அவர்கள் பயன்படுத்தின ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும்கூட அது பதிவு செய்வதில்லை.—2 கொரிந்தியர் 12:12; கலாத்தியர் 3:5; எபிரெயர் 2:4.

பாவங்களை மன்னிப்பதா வேண்டாமா என்பதற்கான அப்போஸ்தல அதிகாரத்தை உட்படுத்திய ஒரு சந்தர்ப்பம், ஆவிக்கு விரோதமாக பொய் சொன்ன அனனியாவையும் சப்பீராளையும் உட்படுத்திய ஒன்றாகும். யோவான் 20:22, 23-ல் நாம் வாசிக்கும் வார்த்தைகளை இயேசு சொன்னபோது அதைக் கேட்டிருந்த பேதுரு அனனியாவையும் சப்பீராளையும் அம்பலப்படுத்தினார். பேதுரு முதலில் அனனியாவிடம் பேசினார், அவன் அந்த இடத்திலேயே மரித்தான். சப்பீராள் அதற்குப் பின் வந்து அதே பொய்யை சொன்னபோது, பேதுரு அவள்மீது நியாயத்தீர்ப்பை அறிவித்தார். பேதுரு அவளுடைய பாவத்தை மன்னிக்கவில்லை, அதற்குப் பதிலாக இவ்வாறு சொன்னார்: “இதோ, உன் புருஷனை அடக்கம்பண்ணினவர்களுடைய கால்கள் வாசற்படியிலே வந்திருக்கிறது, உன்னையும் வெளியே கொண்டுபோவார்கள்.” அவளும் அதே இடத்தில் மரித்துப்போனாள்.—அப்போஸ்தலர் 5:1-11.

இந்தச் சந்தர்ப்பத்தில் நிச்சயமாகவே பாவம் மன்னிக்கப்படவில்லை என்பதைத் தெரியப்படுத்த விசேஷித்த அதிகாரத்தை, அனனியா மற்றும் சப்பீராளின் பாவத்தை கடவுள் மன்னிக்கமாட்டார் என்பதைக் குறித்து ஒரு அற்புதமான அறிவை, அப்போஸ்தலனாகிய பேதுரு பயன்படுத்தினார். கிறிஸ்துவின் பலியின் அடிப்படையில் பாவங்கள் மன்னிக்கப்பட்டிருந்தன என்பதில் அவர்கள் நிச்சயமாயிருந்த அந்த சந்தர்ப்பங்களின்பேரில் மனிதத்தன்மைக்கு அப்பாற்பட்ட உட்பார்வையையும் அப்போஸ்தலர் பெற்றிருந்ததாகத் தோன்றுகிறது. ஆகவே அந்த ஆவியின் வல்லமையைப் பெற்றிருந்த அப்போஸ்தலர் பாவங்கள் மன்னிக்கப்படுவதைப் பற்றியோ அல்லது மன்னிக்கப்படாததைப் பற்றியோ அறிவிக்க முடிந்தது.a

இது, அப்போதிருந்த எல்லா ஆவியால்-அபிஷேகம் செய்யப்பட்ட மூப்பர்களும் அப்படிப்பட்ட அற்புதமான அதிகாரத்தைப் பெற்றிருந்தனர் என்று சொல்வதற்கில்லை. கொரிந்து சபையிலிருந்து சபைநீக்கம் செய்யப்பட்ட மனிதனைக் குறித்து அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னவற்றிலிருந்து நாம் அதைக் காணலாம். ‘நான் அந்த மனிதனின் பாவங்களை மன்னிக்கிறேன்’ என்பதாகவோ அல்லது ‘அந்த மனிதன் பரலோகத்தில் மன்னிக்கப்பட்டிருக்கிறான் என்று எனக்குத் தெரியும், ஆகவே அவனை மறுபடியும் ஏற்றுக்கொள்ளுங்கள்’ என்பதாகவோ பவுல் சொல்லவில்லை. மாறாக, மறுபடியுமாக சேர்க்கப்பட்டிருக்கும் இந்தக் கிறிஸ்தவனை மன்னித்து அவனுக்கு அன்பு காண்பிக்குமாறு முழு சபையையும் பவுல் துரிதப்படுத்தினார். “எவனுக்கு நீங்கள் மன்னிக்கிறீர்களோ, அவனுக்கு நானும் மன்னிக்கிறேன்,” என்பதாக பவுல் கூடுதலாக கூறினார்.—2 கொரிந்தியர் 2:5-11.

அந்த மனிதன் சபையிலே சேர்க்கப்பட்ட பிறகு, அவன் செய்தவற்றிற்காக அவனிடம் வெறுப்பை காண்பிக்காததன் அர்த்தத்தில் எல்லா கிறிஸ்தவ சகோதரர்களும் சகோதரிகளும் மன்னிக்க முடியும். ஆனால், முதலில் அவன் மனந்திரும்பி மறுபடியும் சேர்க்கப்பட வேண்டும். அது எவ்வாறு நிகழும்?

சபையின் மூப்பர்கள் கையாள வேண்டிய, திருடுதல், பொய் பேசுதல், படுமோசமான ஒழுக்கக்கேடு போன்ற வினைமையான பாவங்கள் இருக்கின்றன. அப்படிப்பட்ட குற்றஞ்செய்பவர்களைத் திருத்தவும் சிட்சிக்கவும் முயற்சி செய்து இவ்வாறு மனம்திரும்பும்படி அவர்களை உந்துவிக்கிறார்கள். ஆனால் எவராவது மனம்திரும்பாமல் வினைமையான பாவத்தைப் பழக்கமாக செய்துவந்தால், குற்றஞ்செய்யும் அந்த மனிதனை சபைநீக்கம் செய்வதற்கு தெய்வீக வழிநடத்துதலை இந்த மூப்பர்கள் உபயோகிப்பார்கள். (1 கொரிந்தியர் 5:1-5, 11-13) யோவான் 20:23-ல் இயேசு சொன்ன வார்த்தைகள் அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களுக்குப் பொருந்தாது. சரீரப்பிரகாரமாக நோய்வாய்ப்பட்டிருந்தவர்களைச் சுகப்படுத்துவது அல்லது மரித்தோரை எழுப்புவது போன்ற ஆவியின் அற்புதமான ஈவுகளை இந்த மூப்பர்கள் பெற்றிருக்கவில்லை; அந்த வரங்கள் முதல் நூற்றாண்டில் அதனுடைய நோக்கத்தை சேவித்தன, பின்பு முடிவடைந்தன. (1 கொரிந்தியர் 13:8-10) மேலுமாக, ஒரு வினைமையான பாவியை யெகோவாவின் பார்வையில் சுத்தமுள்ளவன் என்று அறிவிக்கும் அந்த அர்த்தத்தில் இன்றுள்ள மூப்பர்கள் வினைமையான குற்றத்தை மன்னிப்பதற்கான தெய்வீக அதிகாரத்தைப் பெற்றில்லை. இந்த விதமான மன்னிப்பு மீட்பின் கிரயபலியின் அடிப்படையில் இருக்க வேண்டும், மேலுமாக யெகோவா மட்டும்தான் அந்த அடிப்படையில் மன்னிக்க முடியும்.—சங்கீதம் 32:5; மத்தேயு 6:9, 12; 1 யோவான் 1:9.

பூர்வ கொரிந்துவிலிருந்த அந்த மனிதனுக்கு செய்யப்பட்டதைப் போலவே, ஒரு படுமோசமான பாவி மனம்திரும்ப மறுக்கும்போது அவன் சபைநீக்கம் செய்யப்பட வேண்டும். அவன் பிற்பாடு மனம்திரும்பி, மனந்திரும்புதலுக்கேற்ற கிரியைகளைச் செய்யும்போது, தெய்வீக மன்னிப்பு சாத்தியமாயிருக்கிறது. (அப்போஸ்தலர் 26:20) அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலைமையில், உண்மையில் யெகோவா குற்றஞ்செய்தவனை மன்னித்திருக்கிறார் என்று நம்புவதற்கான காரணங்களை வேதவசனங்கள் மூப்பர்களுக்குக் கொடுக்கின்றன. பின்பு, அந்த நபர் மறுபடியும் சேர்க்கப்பட்ட பிறகு, விசுவாசத்தில் உறுதியாய் ஆக மூப்பர்கள் அவனுக்கு ஆவிக்குரிய விதத்தில் உதவி செய்யலாம். சபைநீக்கம் செய்யப்பட்டு பின்பு மறுபடியும் சேர்த்துக்கொள்ளப்பட்ட அந்த மனிதனை கொரிந்து கிறிஸ்தவர்கள் எவ்வாறு மன்னித்தார்களோ அவ்வாறே சபையிலுள்ள மற்றவர்களும் மன்னிக்கலாம்.

காரியங்களை இவ்வாறு கையாளுவதன் மூலமாக, நியாயந்தீர்ப்பதற்கு தங்களுடைய சொந்த தராதரங்களை மூப்பர்கள் ஏற்படுத்துவதில்லை. அவர்கள் பைபிள் நியமங்களைப் பொருத்தி, யெகோவா ஏற்படுத்தும் வேதப்பூர்வமான செயற்படுமுறைகளை நெருக்கமாக பின்பற்றுகின்றனர். ஆகவே, மூப்பர்களின் பாகத்தில் எந்த விதமாக மன்னிப்பதோ அல்லது மன்னியாதிருப்பதோ, மத்தேயு 18:18-ல் உள்ள இயேசுவின் வார்த்தைகளின் அர்த்தத்தில் இருக்கும்: “பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டுவீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும்; பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டவிழ்ப்பீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.” பைபிளில் அளிக்கப்பட்டிருக்கும் பிரகாரமாக காரியங்களின்பேரில் உள்ள யெகோவாவின் கருத்தை அவர்களுடைய நடவடிக்கைகள் வெறுமனே பிரதிபலிக்கும்.

அதன் காரணமாக, யோவான் 20:23-ல் பதிவு செய்யப்பட்டிருக்கும் இயேசுவின் வார்த்தைகள், மற்ற வேதவசனங்களோடு முரண்படுவதாய் இருப்பதில்லை. ஆனால் கிறிஸ்தவ சபையின் ஆரம்ப நாட்களில் அவர்களுக்கிருந்த விசேஷித்த பங்கிற்கு இசைவாக, மன்னிப்பதைக் குறித்ததில் அப்போஸ்தலர் ஒரு விசேஷித்த அதிகாரத்தைப் பெற்றிருந்தனர் என்பதை அது காண்பிக்கிறது.

[அடிக்குறிப்பு]

a இயேசு மரித்து கிரயபலியைக் கொடுப்பதற்கு முன்பாகவே, எவருடைய பாவமும் மன்னிக்கப்பட்டிருக்கிறது என்பதை சொல்வதற்கு அவருக்கு அதிகாரம் இருந்தது.—மத்தேயு 9:2-6; காவற்கோபுரம், ஜூன் 1, 1995-ல் உள்ள “வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்” என்ற பகுதியை ஒப்பிடுக.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்