உண்மையான பாதுகாப்பு அடைவதற்கு அரிய ஓர் இலக்கு
அர்னால்டு என்னும் சிறுவன், மெத்தென்ற பொருட்களால் அடைத்து செய்யப்பட்ட தன்னுடைய புலி பொம்மையை நேசித்தான். அவன் செல்லும் இடங்களுக்கெல்லாம் அதைத் தன்னோடு—விளையாடும்போது, சாப்பாட்டு மேசைக்கு, அவன் படுக்கைக்கு—இழுத்துக்கொண்டு போனான். அந்தப் புலி அவனுக்கு ஆறுதலையும் பாதுகாப்பையும் அளித்தது. ஒரு நாள் ஒரு நெருக்கடி நிலை ஏற்பட்டது. புலி தொலைந்துவிட்டது!
அர்னால்டு அழுதுகொண்டிருக்கையில், புலியைக் கண்டுபிடிப்பதற்காக அவனுடைய அம்மாவும் அப்பாவும் மூன்று அண்ணன்களும் தங்களுடைய பெரிய வீடு முழுவதும் தேடினார்கள். கடைசியாக அவர்களில் ஒருவர் அதனை மேசை அறை ஒன்றில் கண்டெடுத்தார். அர்னால்டு அதை அங்குப் போட்டுவிட்டு, பிறகு அது எங்கிருக்கிறது என்பதை உடனே மறந்துவிட்டிருக்க வேண்டும். அந்தப் புலியைத் திரும்பவும் கொடுத்தப்பின், அர்னால்டு தன் கண்ணீரை துடைத்துக் கொண்டான். அவன் மறுபடியும் மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் உணர்ந்தான்.
ஒரு புலி பொம்மையை மேசை அறையில் கண்டடைவதைப்போல் அவ்வளவு எளிதில் எல்லா பிரச்சினைகளும் தீர்க்கப்படுமானால் எவ்வளவு நன்றாயிருக்கும்! ஆயினும், பெரும்பாலான ஆட்களுக்குப் பாதுகாப்பைப்பற்றிய கேள்விகள் அதைக்காட்டிலும் இன்னும் அதிக தீவிரமானதாயும் சிக்கலானதாயும் இருக்கின்றன. வெறுமனே எங்குப்பார்த்தாலும் ஆட்கள், ‘குற்றச்செயலுக்கோ வன்முறைக்கோ நான் இலக்காவேனா? நான் என் வேலையை இழந்துவிடும் ஆபத்திலிருக்கிறேனா? என் குடும்பத்தினர் போதுமான உணவை நிச்சயம் பெறுவார்களா? என்னுடைய மதத்தின் அல்லது இனத்தின் பின்னணியால் மற்றவர்கள் என்னை விட்டு விலகிவிடுவார்களா?’ என்று வியக்கின்றனர்.
பாதுகாப்பில்லாமல் இருக்கும் ஆட்களின் எண்ணிக்கைத் திரளாக உள்ளது. ஐக்கிய நாடுகளின் பிரகாரம், கிட்டத்தட்ட 300 கோடி ஆட்கள் சாதாரண நோய்களுக்கான சிகிச்சை மட்டுமல்ல, ஆனால் அத்தியாவசியமான மருந்து கிடைக்கப்பெறுவதிலும் குறைவுபடுகிறார்கள். நூறு கோடிக்கும் மேலான ஆட்கள், மிதமிஞ்சிய வறுமையில் நலிந்துள்ளனர். கிட்டத்தட்ட நூறு கோடி ஆட்கள் வேலை செய்தபோதிலும், உற்பத்தித்திறனுக்கேற்ப வேலைக்கு அமர்த்தப்படவில்லை. அகதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. 1994-ன் இறுதிக்குள் பூமியிலுள்ள மக்களில் சுமார் 115 பேரில் ஒருவர் தங்கள் தாயகங்களிலிருந்து ஓடிவிட கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். ஆண்டொன்றுக்கு $50,000 கோடி மர மரப்பிகள் (narcotics) வியாபாரம் செய்வதானது, எண்ணற்ற குற்றச்செயலையும் வன்முறைச்செயலையும் பெருகச்செய்வதனால் கோடிக்கணக்கானோரின் வாழ்க்கைப் பாழாக்கப்படுகிறது. போரானது கோடிக்கணக்கானோரின் உயிர்களை அழிக்கிறது. 1993-ல் மட்டும் 42 நாடுகள் பெரும் போர்களில் ஈடுபட்டன, மற்ற 37 நாடுகள் அரசியல் வன்முறையை எதிர்ப்பட்டன.
போர், வறுமை, குற்றச்செயல், மனிதனின் பாதுகாப்பை அச்சுறுத்தும் மற்ற காரியங்கள் அனைத்தும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்துள்ளன, அவை எண்ணிக்கையிலும் வளர்ந்து வருகின்றன. அத்தகைய பிரச்சினைகளைத் தீர்க்க மேசை அறையிலே புலி கிடையாது. உண்மையில் மனிதர்களால் அவற்றைத் தீர்க்கவே முடியாது.
“பிரபுக்களையும், இரட்சிக்கத்திராணியில்லாத மனுபுத்திரனையும் நம்பாதேயுங்கள்” என்று கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள் எச்சரிக்கிறது. அப்படியானால், யாரில் நாம் நம்பிக்கை வைக்கலாம்? இந்த வேதவசனம் தொடர்ந்து கூறுகிறது: “யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து, தன் தேவனாகிய கர்த்தர்மேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான். அவர் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவையும் உண்டாக்கினவர்.”—சங்கீதம் 146:3-6.
இந்தப் பூமிக்கு பாதுகாப்பைக் கொண்டுவர ஏன் நாம் யெகோவாவை நம்பலாம்? இப்போதே பாதுகாப்பான, மகிழ்ச்சியான வாழ்க்கையை அனுபவிப்பது சாத்தியமா? மனித பாதுகாப்புக்கு எதிரான முட்டுக்கட்டைகளை கடவுள் எவ்வாறு நீக்குவார்?