உண்மையான பாதுகாப்பு—இப்போதும் எப்போதும்
யெகோவா தேவனால் தம்முடைய மக்களுக்குப் பாதுகாப்பை அளிக்க முடியுமா என்ற கேள்விக்கே இடமில்லை. அவர் “சர்வவல்லவர்.” (சங்கீதம் 68:14) அவருடைய தனித்தன்மைவாய்ந்த பெயரின் அர்த்தம் “ஆகும்படி செய்கிறவர்.” இது அவரை, இப்பிரபஞ்சத்திலேயே, தம்முடைய வாக்குறுதிகளை நிறைவேற்ற, தம்முடைய சித்தத்தை சாதிக்க எத்தகைய இடையூறுகளையும் மேற்கொள்ள வல்ல ஒரே நபராக அடையாளம் காட்டுகிறது. கடவுள்தாமே குறிப்பிடுகிறார்: “அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும்; அது வெறுமையாய் என்னிடத்திற்குத்திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச் செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்.”—ஏசாயா 55:11.
கடவுள் தம்மில் நம்பிக்கை வைப்போருக்குப் பாதுகாப்பை அளிக்கிறார். இதற்கு அவருடைய வார்த்தை உத்தரவாதமளிக்கிறது. “யெகோவாவின் திருநாமம் பலத்த கோபுரம், நீதிமான் அதற்குள் ஓடி அடைக்கலம் பெறுவான்” என்று ஞானமுள்ள அரசனாகிய சாலொமோன் தெய்வீக ஏவுதலினால் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது: “கர்த்தரை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான்.”—நீதிமொழிகள் 18:10, திருத்திய மொழிபெயர்ப்பு; 29:25.
கடவுளுடைய ஊழியர்களுக்குப் பாதுகாப்பு
யெகோவா தம்மீது சார்ந்திருப்போருக்கு எப்போதும் பாதுகாப்பு அளித்தவராக இருக்கிறார். உதாரணத்திற்கு, எரேமியா தீர்க்கதரிசி கடவுளின் பாதுகாப்பை அனுபவித்தார். விசுவாசதுரோக எருசலேமைப் பாபிலோனின் சேனைகள் முற்றுகையிட்டபோது, மக்கள் ‘அப்பத்தை எடைபார்த்து, கவலைதோய்ந்த கவனத்துடன் சாப்பிடவேண்டியவர்களாக’ இருந்தார்கள். (எசேக்கியேல் 4:16, NW) நிலைமை அவ்வளவு மோசமாக ஆனதால், சில பெண்கள் தங்களுடைய சொந்தப் பிள்ளைகளை வேகவைத்து சாப்பிட்டார்கள். (புலம்பல் 2:20; 4:10) பயமின்றி பிரசங்கித்ததற்காக எரேமியா சிறைகாப்பில் வைக்கப்பட்டபோதிலும், ‘நகரத்திலே அப்பமிருக்குமட்டும், அப்பஞ்சுடுகிறவர்களின் வீதியிலிருந்து தினம் ஒரு அப்பம் அவனுக்கு’ கிடைக்கும்படி யெகோவா பார்த்துக்கொண்டார்.—எரேமியா 37:21, NW.
எருசலேம் பாபிலோனியர்களிடத்தில் விழுந்தபோது, எரேமியா கொல்லப்படவோ ஒரு கைதியாக பாபிலோனுக்கு இழுத்துச் செல்லப்படவோயில்லை. அதற்கு மாறாக, “அந்த [பாபிலோனிய] மெய்காவலர் அதிபதி அவருக்கு உணவுக்கான ஊதியத்தையும் பரிசு பொருளையும் கொடுத்து, அவரை போகவிட்டார்.”—எரேமியா 40:5, NW.
நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குப்பின், கடவுளுடைய ஊழியர்களுக்கு இயேசு கிறிஸ்து உறுதியளித்தார்: “என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று, கவலைப்படாதிருங்கள். இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார். முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.”—மத்தேயு 6:31-33.
இன்றைய அனைத்து பேராபத்திலிருந்தும் யெகோவாவின் ஊழியர்கள் தெய்வீகப் பாதுகாப்பை அனுபவிப்பார்கள் என்பது இதன் அர்த்தமா? இல்லை, அப்படி அல்ல. உத்தமர்கள் ஆபத்துக்கு விதிவிலக்கானவர் அல்லர். உண்மை கிறிஸ்தவர்கள், வியாதிப்படுகின்றனர், துன்புறுத்தலை எதிர்ப்படுகின்றனர், வன்முறைக்குப் பலியாகின்றனர், விபத்துகளில் இறக்கின்றனர், மற்ற வழிகளிலும் கஷ்டப்படுகின்றனர்.
யெகோவா, ஆபத்திலிருந்து முழுமையான பாதுகாப்பை இன்னும் அளிக்காதபோதிலும், தமது ஊழியர்களைப் பேணவும் பாதுகாக்கவும் தம்முடைய சக்தியை உபயோகிக்கிறார் என்பதை அறிக்கைகள் காட்டுகின்றன. கிறிஸ்தவர்கள் தங்கள் வாழ்க்கையில் பைபிள் நியமங்களைப் பொருத்துவதன் காரணமாகவும்கூட பல பிரச்சினைகளிலிருந்து பாதுகாக்கப்படுகிறார்கள். (நீதிமொழிகள் 22:3) மேலுமாக, தேவையான நேரங்களில் ஒருவருக்கொருவர் உதவிசெய்யும் ஆவிக்குரிய சகோதர சகோதரிகளின் உலகளாவிய அன்பான கூட்டுறவின் பாதுகாப்பையும் அவர்கள் அனுபவிக்கிறார்கள். (யோவான் 13:34, 35; ரோமர் 8:28) உதாரணமாக, போரால் பாதிக்கப்பட்ட ருவாண்டாவிலிருந்த சகோதரர்களுடைய இக்கட்டான அவலநிலைக்குப் பிரதிபலிப்பாக, ஐரோப்பாவில் இருந்த யெகோவாவின் சாட்சிகள் உடனடியாக நன்கொடை அளித்து, 65 டன் துணிமணிகளையும் $16,00,000 மதிப்புள்ள மருந்து, உணவு, மற்றும் இதரப் பொருட்களையும் அவர்களுக்கு அனுப்பி வைத்தனர்.—அப்போஸ்தலர் 11:28, 29-ஐ ஒப்பிடுக.
உண்மை கிறிஸ்தவர்கள் மீது சோதனைகள் வர யெகோவா அனுமதிக்கிறபோதிலும், அவர்களுக்கு பலத்தையும் உதவியையும் சகிப்பதற்கான ஞானத்தையும் அவர் கொடுப்பார் என்ற உறுதியுடையவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். தன்னுடைய உடன் விசுவாசிகளுக்கு அப்போஸ்தலனாகிய பவுல் எழுதுகையில் கூறினார்: “மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்.”—1 கொரிந்தியர் 10:13.
கடவுள் தம்முடைய மக்களுக்குச் செய்வன
இன்று, லட்சக்கணக்கான மக்கள் கடவுளின் சித்தத்தைச் செய்வதில் ஆனந்தம் கொள்கிறார்கள். கடவுளைச் சேவிக்கும்படி அவர்கள் வற்புறுத்தப்படவில்லை; அவர்கள் அவரை அறிந்திருப்பதாலும் நேசிப்பதாலும் அவ்விதம் செய்கிறார்கள். மறுபட்சத்தில், யெகோவா தம்முடைய உண்மைப் பற்றுறுதியுள்ள ஊழியர்களை நேசிப்பதன் காரணமாக, இந்தப் பூமியை ஒரு பரதீஸாக மாற்றி, அதில் கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கம் சமாதானத்தையும், ஆரோக்கியத்தையும், பாதுகாப்பையும் என்றென்றும் அனுபவிக்கவேண்டும் என நோக்கம் கொண்டுள்ளார்.—லூக்கா 23:43.
கடவுள், இதைத் தம்முடைய நியமிக்கப்பட்ட அரசராகிய இயேசு கிறிஸ்துவை அதன் ஆட்சியாளராகக் கொண்டிருக்கும் ஒரு பரலோக அரசாங்கத்தின் வாயிலாகச் செய்வார். (தானியேல் 7:13, 14) இந்த அரசாங்கத்தை பைபிள் ‘கடவுளுடைய ராஜ்யம்,’ “பரலோகராஜ்யம்” என குறிப்பிடுகிறது. (1 கொரிந்தியர் 15:50, NW; மத்தேயு 13:44) கடவுளுடைய ராஜ்யம், எல்லா மனித அரசாங்கங்களையும் மாற்றீடு செய்திடும். இந்தப் பூமியிலே பல அரசாங்கங்களைக் கொண்டிருப்பதற்கு மாறாக, ஒரே ஒரு அரசாங்கம் மாத்திரம் இருக்கும். இது பூமி முழுவதையும் நீதியின்படி ஆளுகை செய்யும்.—சங்கீதம் 72:7, 8; தானியேல் 2:44.
அந்த ராஜ்யத்தின் கீழ் வாழ்வதற்கான அழைப்பை அனைவரிடமும் யெகோவா நீட்டுகிறார். இதனை அவர் செய்யும் ஒரு வழியானது, மனிதவர்க்கத்திற்கு அந்த அரசாங்கம் என்ன செய்யும் என்பதை விளக்கும் புத்தகமாகிய பைபிளைப் பரந்தளவில் விநியோகிப்பதாகும். பைபிளானது, உலகிலேயே மிகவும் பரந்தளவில் விநியோகிக்கப்படும் புத்தகமாக இருக்கிறது, இது இப்போது, முழுமையாக அல்லது பகுதியாக 2,000-க்கும் அதிகமான மொழிகளில் கிடைக்கிறது.
ராஜ்யத்தைப் பற்றி பைபிள் என்ன போதிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள மக்களுக்கு யெகோவா தேவன் அன்பாக உதவுகிறார். வேதவசனங்களை மற்றவர்களுக்கு விளக்குவதற்காக, ஆட்களைப் போதித்து அனுப்புவதன் மூலம் இதனைச் செய்கிறார். 230-க்கும் அதிகமான தேசங்களில், ஐம்பது லட்சத்துக்கும் அதிகமான யெகோவாவின் சாட்சிகள், இப்போது கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியை அறிவிக்கிறார்கள்.
உண்மையான பாதுகாப்பு அனைவருக்குமா?
அவருடைய நீதியான தராதரங்களுக்கு இணங்கி செல்வதன் மூலம் கடவுளுடைய ராஜ்யத்தின் குடிமக்களாக ஆவதற்கான அழைப்பை அனைவரும் ஏற்பார்களா? இல்லை, ஏனென்றால், பலருக்கு கடவுளுடைய சித்தத்தைச் செய்வதில் ஆர்வமில்லை. அவர்களுடைய வாழ்க்கையை மேம்பட்டதாக மாற்ற உதவிசெய்வதற்காக எடுக்கப்படும் முயற்சிகளைத் தள்ளிவிடுகின்றனர். உண்மையில், “இந்த ஜனங்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமலும், [கடவுள்] அவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படியாக, அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது; காதால் மந்தமாய்க் கேட்டு, தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள்” என்று இயேசு சொல்லியவர்களுக்கு ஒப்பாக அவர்கள் தங்களைத்தாங்களே காட்டியுள்ளனர்.—மத்தேயு 13:15.
கடவுளுடைய நீதியான வழிகளுக்கு இசைவாக வாழ மறுப்போரின் மத்தியில் உண்மையான பாதுகாப்பு இந்தப் பூமியில் எப்போதாவது இருக்க முடியுமா என்ன? இருக்கவே முடியாது. யெகோவாவை சேவிக்க விரும்புவோரின் பாதுகாப்பை கடவுள் பக்தியற்ற ஆட்கள் அச்சுறுத்துகிறார்கள்.
மாறவேண்டும் என்று எவரையும் கடவுள் கட்டாயப்படுத்துவதில்லை, மறுபட்சத்தில், பொல்லாத்தனத்தை என்றுமாக அவர் பொறுத்திருக்கவும் போவதில்லை. மக்களுக்கு அவருடைய வழிகளையும் நோக்கங்களையும் போதிப்பதற்காகத் தம்முடைய சாட்சிகளைத் தொடர்ந்து பொறுமையாக யெகோவா அனுப்பிக்கொண்டிருந்தாலும், இன்னும் அவ்வளவதிக காலம் அவ்வாறு தொடர்ந்து செய்யப்போவதில்லை. இயேசு கிறிஸ்து முன்னறிவித்தார்: “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.”—மத்தேயு 24:14.
கடவுளுடைய தராதரங்களைப் புறக்கணிப்போருக்கு “முடிவு” எதை அர்த்தப்படுத்தும்? சாதகமற்ற நியாயத்தீர்ப்பையும் அழிவையும் இது அர்த்தப்படுத்தும். ‘தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் . . . ஆக்கினையை’ கொண்டுவருவதைப்பற்றியும், ‘அவர்கள் . . . நித்திய அழிவாகிய தண்டனையை அடைவதைப் பற்றியும்’ பைபிள் சொல்கிறது.—2 தெசலோனிக்கேயர் 1:6-10.
ஒருவழியாக—உண்மையான பாதுகாப்பு என்றென்றுமாக!
யெகோவாவினுடைய சமாதான வழிகளைப் புறக்கணிப்போரின் அழிவைப் பின்தொடர்ந்து, இந்தப் பூமியிலே நீதிமான்களின் நன்மைக்கென்று, பாதுகாப்பு என்னும் ஒரு மகிமையான சகாப்தத்தை கடவுளுடைய ராஜ்யம் தொடங்கி வைக்கும். (சங்கீதம் 37:10, 11) நாம் இன்று வாழ்ந்துகொண்டிருக்கும் உலகிற்கும் புதிய உலகிற்கும் எத்தகையதோர் வித்தியாசம்!—2 பேதுரு 3:13.
பஞ்சம், பசி இனிமேலும் இராது. அனைவருக்கும் சாப்பிட ஏராளமாக இருக்கும். பைபிள் சொல்கிறது: “எல்லா மக்களும் கொழுமையான பதார்த்தங்கள் அடங்கிய ஒரு விருந்தை அனுபவிப்பார்கள்.” (ஏசாயா 25:6, NW) அங்கு உணவு பற்றாக்குறை இருக்காது, ஏனெனில், “பூமியிலே திரளான தானியம் இருக்கும்; மலைகளின் உச்சியில் ஏராளமாக வழிந்தோடும்.”—சங்கீதம் 72:16, NW.
மக்கள் இனிமேலும் சிறிய குடிசைகளிலும் குச்சுவீடுகளிலும் குடியிருக்க மாட்டார்கள். கடவுளுடைய ராஜ்யத்தின் கீழ், அனைவரும் நல்ல வீடுகளைக் கொண்டிருப்பர், தங்கள் சொந்த கரங்களால் உற்பத்திசெய்த உணவை உட்கொள்வார்கள். பைபிள் வாக்களிக்கிறது: “வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைப் புசிப்பார்கள்.”—ஏசாயா 65:21.
பரந்துகிடக்கும் வேலையில்லா திண்டாட்டத்திற்கு மாறாக, அங்கே ஆக்கத்திறமுள்ள வேலை இருக்கும், அதிலிருந்து நல்ல பலன்களை மக்கள் காண்பர். கடவுளுடைய வார்த்தை சொல்கிறது: “நான் தெரிந்துகொண்டவர்கள் தங்கள் கைகளின் கிரியைகளை நெடுநாளாய் அநுபவிப்பார்கள். அவர்கள் விருதாவாக உழைப்பதில்லை.”—ஏசாயா 65:22, 23.
ராஜ்ய ஆட்சியின் கீழ், மக்கள் வியாதியினால் துன்புற்று, மரிக்கமாட்டார்கள். கடவுளுடைய வார்த்தை நமக்கு உறுதியளிக்கிறது: “வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்வதில்லை.”—ஏசாயா 33:24.
விரைவில் நிஜமாகவிருக்கும் பூமிக்குரிய பரதீஸில் துன்பமும், வலியும், கண்ணீரும், மரணமும் ஒழிக்கப்பட்டிருக்கும். ஆம், மரணமும்கூடத்தான்! மக்கள் பரதீஸில் என்றென்றும் வாழ்வார்கள்! பைபிள் நமக்குச் சொல்கிறது: “கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை, முந்தினவைகள் ஒழிந்துபோயின.”—வெளிப்படுத்துதல் 21:4.
ஒருவழியாக, ‘சமாதானப்பிரபுவாகிய’ இயேசு கிறிஸ்துவின் ஆளுகையின் கீழ், இந்தப் பூமியில் வாழ்க்கையானது உண்மையில் பாதுகாப்பானதாக இருக்கும். உண்மையில், கடவுளுடைய ராஜ்யத்தின்கீழ்—நீதியான, அன்பான ஆட்சியின் ஒரே அரசாங்கத்தின்கீழ்—உலக அளவில் பாதுகாப்பு நிலவும்.—ஏசாயா 9:6, 7; வெளிப்படுத்துதல் 7:9, 17.
[பக்கம் 4-ன் சிறு குறிப்பு]
“மனித பாதுகாப்பானது, நாளைய தினத்தில் நம்பிக்கையையும், . . . அரசியலின் நிலையானத்தன்மையில், பொருளாதார நிலைமையில் [நம்பிக்கையையும்] சுட்டிக்காட்டுகிறது.”—ஆசியாவில் வாழும் ஒரு பெண்மணி
[பக்கம் 5-ன் சிறு குறிப்பு]
“வேறு எதைக் காட்டிலும் உங்களை பாதுகாப்பற்றவராக உணரச்செய்வது வன்முறையும் சிறார் குற்றமிழைத்தலும் ஆகும்.”—தென் அமெரிக்காவில் வாழும் ஒரு மனிதர்
[பக்கம் 6-ன் சிறு குறிப்பு]
“படையெடுப்பு . . . நடக்கும்போது நான் பாதுகாப்பாக உணருவதில்லை. நாடானது போரிடும்போது, மக்கள் பாதுகாப்பாக உணர்ந்தே ஆகவேண்டும் என்றால் எப்படி?”—மத்திய கிழக்கில், துவக்கப்பள்ளி மாணாக்கர் ஒருவர்
[பக்கம் 7-ன் சிறு குறிப்பு]
“இரவில், கற்பழிக்கப்படாமல் தெருக்களில் நடக்கமுடியும் என்று தெரியவரும்போதுதான் நான் பாதுகாப்பாக உணருவேன்.”—ஆப்பிரிக்காவில் ஒரு பள்ளி மாணவி