யானா கற்றுக்கொள்கிறார் யகோவாவின் இரக்கத்தை
யெகோவா தம்முடைய தீர்க்கதரிசியாகிய யோனாவுக்கு ஒரு ஊழிய நியமிப்பை வைத்திருக்கிறார். காலம், பொ.ச.மு. ஒன்பதாவது நூற்றாண்டு, இஸ்ரவேலில் இரண்டாம் யெரொபெயாம் ஆட்சிசெய்கிறார். யோனா, செபுலோனியரின் பட்டணமாகிய காத்தேப்பேரைச் சேர்ந்தவர். (யோசுவா 19:10, 13; 2 இராஜாக்கள் 14:25) கடவுள் யோனாவை அசீரிய தலைநகராகிய நினிவேக்கு அனுப்புகிறார். அது அவர் பிறந்த நகரத்துக்கு வடகிழக்கே 800-க்கும் மேற்பட்ட கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. நினிவே நகரத்தார் கடவுளால் அழிக்கப்படவிருப்பதை எதிர்ப்படுகிறார்கள் என்று இவர் அவர்களை எச்சரிக்க வேண்டும்.
யோனா ஒருவேளை இவ்வாறு சிந்தித்திருக்கலாம்: ‘அந்த நகரத்துக்கும் ஜனத்தினிடமும் நான் போக வேண்டுமா? அவர்கள் கடவுளிடமாக பக்தியுடையோராகவுங்கூட இல்லையே. கொலை வெறிகொண்ட அந்த அசீரியர்கள், இஸ்ரவேலர் செய்ததைப்போல் யெகோவாவுடன் உடன்படிக்கைக்குள் ஒருபோதும் உட்படவில்லையே. அந்தப் பொல்லாத தேச ஜனங்கள் என் எச்சரிக்கையை ஒரு பயமுறுத்தலாகக் கருதி, இஸ்ரவேலை வென்று கைப்பற்றக்கூடுமே! என்னால் முடியாது! நான் போகமாட்டேன். நான் யோப்பாவுக்கு ஓடி, எதிர் திசைக்குக் கப்பலேறி—நேரே மகா சமுத்திரத்துக்கு அடுத்த முனையிலுள்ள தர்ஷீசுக்கு—ஓடிப்போவேன். அதைத்தான் நான் செய்யப்போகிறேன்!’—யோனா 1:1-3.
கடலில் ஆபத்து!
சீக்கிரத்தில் யோனா மத்தியதரைக் கடற்கரை ஓரத்திலுள்ள யோப்பாவில் இருக்கிறார். அவர் தன் பயணக்கட்டணத்தைச் செலுத்தி, தர்ஷீசுக்குச் செல்லும் ஒரு கப்பலில் ஏறுகிறார். இது பொதுவாக ஸ்பெய்னோடு சம்பந்தப்படுத்தப்படுவது, நினிவேக்கு மேற்கே 3,500-க்கும் மேற்பட்ட கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது. கடற்பயணத்தைத் தொடங்கினவுடன், களைப்புற்றிருந்த இந்தத் தீர்க்கதரிசி, கப்பலின் கீழ்த்தளத்துக்குச் சென்று படுத்துத் தூங்கிவிடுகிறார். அதன்பின் சீக்கிரத்தில், கடலில் ஒரு பெருங்காற்று வீசும்படி யெகோவா செய்கிறார். திகிலடைந்த மாலுமிகள் ஒவ்வொருவரும் அவரவர் தன்தன் கடவுளை நோக்கி உதவிக்காக வேண்டுதல் செய்கின்றனர். கப்பல் அவ்வளவு அதிகமாய் அசைவாடி புரண்டுக்கொண்டிருப்பதால், அதன் பளுவைக் குறைப்பதற்கு சரக்குகள் கடலில் எறியப்படுகின்றன. எனினும், கப்பற்சேதம் நிச்சயமாக ஏற்படுமெனத் தோன்றுகிறது. பரபரப்புற்ற மாலுமி ஆச்சரியத்துடன் இவ்வாறு சொல்வதை யோனா கேட்கிறார்: “நீ நித்திரைபண்ணுகிறதென்ன? எழுந்திருந்து உன் தேவனை நோக்கி வேண்டிக்கொள்; நாம் அழிந்துபோகாதபடிக்குச் சுவாமி [“உண்மையான கடவுள்,” NW] ஒருவேளை நம்மை நினைத்தருளுவார்.” யோனா எழுந்து மேல்தளத்துக்குச் செல்கிறார்.—யோனா 1:4-6.
“யார் நிமித்தம் இந்த ஆபத்து நமக்கு நேரிட்டதென்று நாம் அறியும்படி சீட்டுப்போடுவோம் வாருங்கள்,” என்று மாலுமிகள் சொல்கின்றனர். அந்தச் சீட்டு யோனாவின் பேருக்கு விழுகிறது. மாலுமிகள் இவ்வாறு சொல்கிறபோது அவருடைய மனக்கலக்கத்தைக் கற்பனைசெய்து பாருங்கள்: “யார் நிமித்தம் இந்த ஆபத்து நமக்கு நேரிட்டதென்று நீ எங்களுக்குச் சொல்லவேண்டும்; உன் தொழிலென்ன? நீ எங்கேயிருந்து வருகிறாய்? உன் தேசம் எது? நீ எந்த ஜனத்தைச் சேர்ந்தவன்”? தான் ஓர் எபிரெயன், ‘பரலோகத்தின் கடவுளாகிய யெகோவாவை’ வணங்குபவன் என்றும், ‘சமுத்திரத்தையும் பூமியையும் உண்டாக்கினவரிடம்’ பயபக்தியுடையவன் என்றும் யோனா சொல்கிறார். கீழ்ப்படிதலுடன் கடவுளுடைய செய்தியை நினிவேக்குக் கொண்டுசெல்வதற்குப் பதிலாக யெகோவாவின் சமுகத்திலிருந்து தான் தப்பி ஓடிப்போவதால் இந்தப் புயல் அவர்கள்மீது வந்தது என்று சொல்கிறார்.—யோனா 1:7-10, தி.மொ.
அந்த மாலுமிகள் கேட்கின்றனர்: “சமுத்திரம் நமக்கு அமரும்படி நாங்கள் உனக்கு என்ன செய்யவேண்டும்”? கடல் மேலுமதிகமாகக் கொந்தளிக்கிறபோது, யோனா: “நீங்கள் என்னை எடுத்துச் சமுத்திரத்திலே எறிந்துவிடுங்கள், அப்பொழுது சமுத்திரம் உங்களுக்கு அமர்ந்திருக்கும்; என்னிமித்தமே இந்தப் பெரிய கொந்தளிப்பு உங்கள்மேல் வந்ததென்று எனக்குத் தெரியும்,” என்று சொல்கிறார். யெகோவாவின் ஊழியனைக் கடலுக்குள் எறிந்து நிச்சயமாய் மரணமடையும்படி செய்ய மனமில்லாமல், கப்பலை உலர்ந்த கரைக்குக் கொண்டுவரும்படி அந்த மனிதர்கள் முயற்சி செய்கின்றனர். முடியாமற்போகவே, மாலுமிகள் அபயமிட்டு: “ஐயோ, யெகோவாவே, இந்த மனுஷனுடைய ஜீவனிமித்தம் எங்களை அழித்துவிடாதேயும், குற்றமில்லாத இரத்தப்பழியை எங்கள்மேல் சுமத்தாதேயும், தேவரீரே யெகோவா; உம்முடைய சித்தப்படியே செய்கிறீர்,” என்று வேண்டுதல் செய்கின்றனர்.—யோனா 1:11-14, தி.மொ.
கடலுக்குள்!
அப்போது மாலுமிகள் யோனாவைக் கடலுக்குள் எறிகின்றனர். கொந்தளிக்கும் கடலுக்குள் அவர் அமிழ்கையில், அதன் மும்முரம் அமரத் தொடங்குகிறது. இதைக் கண்டு, ‘அந்த மனுஷர் யெகோவாவுக்கு மிகவும் பயந்தவர்களாய் யெகோவாவுக்குப் பலியிட்டுப் பொருத்தனைகளைப் பண்ணுகிறார்கள்.’—யோனா 1:15, 16, தி.மொ.
தண்ணீர் யோனாவை மூழ்க்குகையில், சந்தேகமில்லாமல் அவர் ஜெபிக்கிறார். பின்பு பெரிய உட்குழிவுக்குள் சறுக்கிச் செல்கையில் மென்மையான கால்வாய் வழியாகத் தான் வழுவிப் போவதை உணருகிறார். ஆச்சரியமுண்டாக, அவர் இன்னும் சுவாசிக்க முடிகிறது! தன் தலையைச் சுற்றியிருந்த கடற்பாசியை நீக்கின பின்பு யோனா, உண்மையில் தனித்தன்மைவாய்ந்த ஓர் இடத்தில் தன்னைக் காண்கிறார். இது ஏனென்றால், ‘யோனாவை விழுங்கும்படி ஒரு பெரிய மீனுக்கு யெகோவா கட்டளையிட்டிருந்தார்; அந்த மீன் வயிற்றிலே யோனா இராப்பகல் மூன்று நாள் இருந்தார்.’—யோனா 1:17, தி.மொ.
யோனாவின் ஊக்கமான ஜெபம்
அந்த மிகப் பெரிய மீனின் வயிற்றில், யோனாவுக்கு ஜெபிக்க நேரம் இருக்கிறது. சங்கீதங்கள் சிலவற்றுடன் அவருடைய வார்த்தைகளில் சில ஒத்திருக்கின்றன. பின்னால் யோனா, மனக்கசப்பு, மனஸ்தாபம் ஆகிய இரண்டையுமே வெளிப்படுத்தின தன் ஜெபங்களைப் பதிவுசெய்தார். உதாரணமாக, அந்த மீனின் வயிறு ஷியோலாக, தன் பிரேதக்குழியாக ஆகிவிடும் என்பதுபோல் அவருக்குத் தோன்றிற்று. ஆகவே அவர் இவ்வாறு ஜெபித்தார்: “என் நெருக்கத்திலே நான் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன் அவர் எனக்கு உத்தரவு அருளினார்; நான் பாதாளத்தின் ஆழத்திலிருந்து [“ஷியோலிலிருந்து,” NW] கூக்குரலிட்டேன் நீர் என் சத்தத்தைக் கேட்டீர்.” (யோனா 2:1, 2, தி.மொ.) இரு ஆரோகண (ஏறுகை) சங்கீதங்கள்—வருடாந்தர பண்டிகைகளுக்காக எருசலேமுக்குச் செல்கையில் இஸ்ரவேலரால் பெரும்பாலும் பாடப்பட்டவை—இதைப்போன்ற எண்ணத்தை வெளிப்படுத்துகின்றன.—சங்கீதம் 120:1; 130:1, 2.
கடலுக்குள் தான் கீழிறங்கினதை நினைவுபடுத்தி, யோனா இவ்வாறு ஜெபிக்கிறார்: “சமுத்திரத்தின் நடுமையமாகிய ஆழத்திலே நீர் [யெகோவா] என்னைத் தள்ளிவிட்டீர்; நீரோட்டம் என்னைச் சூழ்ந்துகொண்டது; உம்முடைய வெள்ளங்களும் அலைகளும் எல்லாம் என்மேல் புரண்டது.”—யோனா 2:3; ஒப்பிடுக: 42:7; சங்கீதம் 69:2.
தன்னுடைய கீழ்ப்படியாமை, கடவுளுடைய தயவை இழக்கும்படி செய்வித்துவிடுமோ என்றும், கடவுளுடைய ஆலயத்தைத் தான் மறுபடியும் ஒருபோதும் காணமாட்டாரோ என்றும் யோனா பயப்படுகிறார். அவர் ஜெபிக்கிறார்: “என்னைக் குறித்ததிலோ, நான் சொன்னேன், ‘நான் உம்முடைய கண்களின் முன்னின்று துரத்தப்பட்டிருக்கிறேன்! உம்முடைய பரிசுத்த ஆலயத்தின்மீது நான் மறுபடியும் எவ்வாறு நோக்குவேன்?’” (யோனா 2:4, NW; சங்கீதம் 31:22-ஐ ஒப்பிடுக.) யோனாவின் நிலைமை மிக மோசமாவதுபோல் தெரிகிறது, ஆகவே அவர் சொல்கிறார்: “தண்ணீர்கள் பிராணபரியந்தம் [அவருடைய உயிரை இடருக்குட்படுத்தி] என்னை நெருக்கினது; ஆழி என்னைச் சூழ்ந்தது; [கடலில்] கடற்பாசி என் தலையைச் சுற்றிக்கொண்டது.” (யோனா 2:5; சங்கீதம் 69:1-ஐ ஒப்பிடுக.) யோனாவின் நெருக்கடிநிலையைக் கற்பனை செய்து பாருங்கள், ஏனெனில் அவர் மேலும் சொல்கிறார்: “மலைகளின் அடிவாரங்கள் பரியந்தமும் [மீனுக்குள்] இறங்கிவிட்டேன், பூமியின் தாழ்ப்பாள்கள் [பிரேதக்குழியினுடையதைப் போன்றவை] என்றுமாக என்னை அடைத்தன; என் கடவுளாகிய யெகோவாவே, நீரோ, [மூன்றாம் நாளில்] என் பிராணனை அழிவுக்குத் தப்புவித்தீர் [“குழியிலிருந்து வெளியில் கொண்டுவந்தீர்,” NW].”—யோனா 2:6, தி.மொ.; சங்கீதம் 30:3-ஐ ஒப்பிடுக.
மீனின் வயிற்றுக்குள் அவர் இருக்கிறபோதிலும், ‘நான் மிக சோர்வுற்றிருக்கிறேன் என்னால் ஜெபிக்க முடியாது,’ என்று யோனா நினைக்கிறதில்லை. மாறாக, அவர் இவ்வாறு ஜெபிக்கிறார்: “என் ஆத்துமா [மரணத்தை எட்டியதாக] என்னில் தோய்ந்துபோகையில் யெகோவாவை [வல்லமையிலும் இரக்கத்திலும் ஒப்பற்றவராக, விசுவாசித்து] நினைத்தேன்; அப்பொழுது என் பிரார்த்தனை உமது பரிசுத்த ஆலயத்திலே உம்மிடம் வந்து சேர்ந்தது.” (யோனா 2:7, தி.மொ.) பரலோக ஆலயத்திலிருந்து, கடவுள் யோனாவின் ஜெபத்தைக் கேட்டு, அவரைக் காப்பாற்றினார்.
முடிவாக யோனா ஜெபிக்கிறார்: “பொய்யான விக்கிரகங்களைப் பற்றிக்கொள்ளுகிறவர்கள் [பொய்க் கடவுட்களின் உயிரற்ற உருவங்களில் நம்பிக்கை வைப்பதன்மூலம்] தங்களுக்குக் கிருபைபாராட்டுகிறவரை விட்டுவிடுகிறார்கள். நானோ நன்றிசெலுத்தும் சத்தத்தோடே உமக்குப் [யெகோவா தேவனுக்கு] பலியிடுவேன்; [இந்த அனுபவத்தின்போது அல்லது மற்ற சந்தர்ப்பங்களில்] நான் பண்ணின பொருத்தனையைச் செலுத்துவேன்; யெகோவாவினிடமே ரட்சிப்பு.” (யோனா 2:8, 9, தி.மொ.; சங்கீதம் 31:6; 50:14-ஐ ஒப்பிடுக.) மனந்திரும்பின இந்தத் தீர்க்கதரிசி, கடவுளால் மாத்திரமே தன்னை மரணத்திலிருந்து தப்புவிக்க முடியுமென்று தெரிந்தவராக, (தனக்கு முன்பாக அரசர்களான தாவீதும் சாலொமோனும் செய்ததைப் போல்) இரட்சிப்பு யெகோவாவுக்கே உரியது என்று குறிப்பிடுகிறார்.—சங்கீதம் 3:8; நீதிமொழிகள் 21:31.
யோனா கீழ்ப்படிகிறார்
மிகுந்த சிந்தனைக்கும் ஊக்கமான ஜெபத்துக்கும் பின், யோனா, தான் அதனூடே உள்வந்த அந்தக் கால்வாயின் வழியாக, வலிந்து வெளியே தள்ளப்படுவதாக உணருகிறார். முடிவில் உலர்ந்த தரையின்மீது அவர் வெளியில் எறியப்படுகிறார். (யோனா 2:10) விடுதலைக்காக நன்றியுள்ளவராக, யோனா: “நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், நான் உனக்குக் கற்பிக்கும் வார்த்தையை அதற்கு விரோதமாய்ப் பிரசங்கி,” என்று சொன்ன கடவுளுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிகிறார். (யோனா 3:1, 2) யோனா அசீரிய தலைநகருக்குப் போகத் தொடங்குகிறார். அது என்ன நாள் என்று அவர் அறிந்துகொள்கையில், மீன் வயிற்றில் தான் மூன்று நாட்கள் இருந்தார் என்பதைத் தெரிந்துகொள்கிறார். இந்தத் தீர்க்கதரிசி ஐபிராத் நதியை அதன் பெரிய மேற்கு வளைவில் கடந்து, கிழக்கே வட மெசொப்பொத்தாமியாவினூடே கிழக்கே பயணப்பட்டு, டைகிரீஸ் நதிக்கு வந்து, முடிவில் அந்த மகா நகரத்துக்குப் போய்ச் சேருகிறார்.—யோனா 3:3.
பெரிய நகரமாகிய நினிவேக்குள் யோனா பிரவேசிக்கிறார். அதனூடே ஒரு நாள் முழுவதும் நடந்து: “இன்னும் நாற்பதுநாள் உண்டு, அப்பொழுது நினிவே கவிழ்க்கப்பட்டுப்போம்,” என்று அறிவிக்கிறார். அசீரிய மொழியைப் பற்றிய அறிவு யோனாவுக்கு அற்புதமாக அளிக்கப்பட்டதா? நமக்குச் சொல்லப்பட்டில்லை. ஆனால் அவர் எபிரெயுவில் பேசி எவராவது பொருள் கூறினாலும், அவருடைய அறிவிப்பு பலன்களை உண்டுபண்ணுகிறது. நினிவேயின் மக்கள் கடவுளில் விசுவாசம் வைக்கத் தொடங்குகின்றனர். அவர்கள் உபவாசம் இருக்கும்படி அறிவித்து, பெரியோரிலிருந்து சிறியோர் வரையாக இரட்டுடுத்திக் கொள்கின்றனர். இந்தச் செய்தி நினிவேயின் அரசனுக்கு எட்டுகிறபோது, அவர் தன் சிங்காசனத்திலிருந்து எழும்பி, தன் பதவிக்குரிய அங்கியைக் கழற்றிவிட்டு, இரட்டை உடுத்திக்கொண்டு, சாம்பலில் உட்காருகிறார்.—யோனா 3:4-6.
யோனாவுக்கு எவ்வளவு ஆச்சரியமாயிருக்கிறது! அந்த அசீரிய அரசன் பின்வருமாறு யாவரறிய அறிவிக்கும்படி கட்டியக்காரர்களை வெளியில் அனுப்புகிறார்: “நினிவேயிலெங்கும் மனுஷர் எதையும் ருசிபார்க்க வேண்டாம், மிருகங்கள், மாடுகளும் ஆடுகளும், மேயவும் தண்ணீர் குடிக்கவும் வேண்டாம்; மனுஷரும் மிருகங்களும் இரட்டினால் மூடிக்கொண்டு கடவுளை நோக்கி உரத்த சத்தமாய்க் கூப்பிடவேண்டும், அவரவர் தம்தம் தீய வழியையும் தம்தம் கைகளின் கொடுமையையும் விட்டுத் திரும்பவும் வேண்டும். யாருக்குத்தெரியும், நாம் அழிந்துபோகாதபடி கடவுள் மனஸ்தாபப்பட்டுத் தமது உக்கிரகோபத்தைவிட்டுத் திரும்பமாட்டாரோ என்று கூறச்சொன்னான்.”—யோனா 3:7-9, தி.மொ.
நினிவே மக்கள் தங்கள் அரசனின் கட்டளைக்கு இணங்க செயல்படுகின்றனர். அவர்கள் தங்கள் கெட்ட வழியை விட்டு திரும்பியிருப்பதை கடவுள் காண்கையில், அவர் அவர்களுக்குக் கொண்டுவரப்போவதாகப் பேசின ஆபத்தைக் குறித்து வருத்தப்படுகிறார், ஆகவே அதைச் செய்யாதிருக்கிறார். (யோனா 3:10) அவர்களுடைய மனந்திரும்புதல், மனத்தாழ்மை, மற்றும் விசுவாசத்தின் காரணமாக யெகோவா, தாம் கருதின ஆக்கினைத் தீர்ப்பை அவர்கள்மேல் நிறைவேற்றாமலிருக்கத் தீர்மானிக்கிறார்.
வெறுப்பை வெளிப்படுத்தும் தீர்க்கதரிசி
நாற்பது நாட்கள் கடந்து செல்கின்றன, நினிவேக்கு ஒன்றும் நடப்பதில்லை. (யோனா 3:4) நினிவே மக்கள் அழிக்கப்படமாட்டார்கள் என்பதை உணர்ந்து, யோனா மிகவும் வெறுப்புற்று, கடுங்கோபம் மூண்டவராகி, இவ்வாறு ஜெபிக்கிறார்: “ஐயோ யெகோவாவே, என் தேசத்தில் இருக்கையிலேயே நான் சொன்னது இதுதானே, இதினிமித்தமே நான் முதலில் தர்ஷீசுக்கு ஓடிப்போக விருந்தேன்; நீர் இரக்கமும் உருக்கமும் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ள கடவுள், தீங்கைப் பற்றி மனஸ்தாபப்படுகிறவர் என்பது எனக்குத் தெரிந்ததே. இப்போதும் யெகோவாவே, என் பிராணனை என்னிடமிருந்து எடுத்துக்கொள்ளும்; நான் உயிரோடிருப்பதிலும் சாவது நலம்.” கடவுள் பதிலளிப்பவராக “நீ கோபங்கொள்வது நியாயமோ” என்ற கேள்வியைக் கேட்கிறார்.—யோனா 4:1-4, தி.மொ.
இத்துடன், யோனா அந்தப் பட்டணத்திலிருந்து வெளியேறுகிறார். கிழக்கே சென்று, அந்தப் பட்டணத்துக்கு என்ன நடக்கிறது என்று தான் காணும் வரையில் அதன் நிழலில் உட்கார்ந்திருப்பதற்கு ஒரு குடிசையைப் போடுகிறார். தன் பங்கில் யெகோவா, இரக்கத்துடன் ‘ஒரு ஆமணக்குச்செடி முளைக்கும்படி கட்டளையிட்டு யோனாவுடைய தலையின்மேல் நிழலுண்டாக்கவும் அவரை அவருடைய மனமடிவுக்கு நீங்கலாக்கவும் அதை அவர்மேல் ஓங்கிவளரப்பண்ணினார்.’ அந்த ஆமணக்குச் செடியின்பேரில் யோனா எவ்வளவு மிகுதியாய் மகிழ்ச்சியடைகிறார்! ஆனால் விடியற்காலையில் அந்தச் செடியை அரித்துப் போடுவதற்கு ஒரு புழுவைக் கடவுள் ஏற்பாடு செய்கிறார், அது வாடிப்போகத் தொடங்குகிறது. சீக்கிரத்தில் அது முற்றிலுமாகக் காய்ந்துபோய்விடுகிறது. உஷ்ணமான கீழ்க்காற்றையும் கடவுள் அனுப்புகிறார். தீர்க்கதரிசியின் தலைமீது இப்போது சூரியன் கடுமையாகத் தாக்குகிறது, அவருக்கு மயக்கமுண்டாகிறது. தான் சாகும்படி தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறார். ஆம், “நான் உயிரோடிருப்பதிலும் சாவது நலம்,” என்று யோனா திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கிறார்.—யோனா 4:5-8, தி.மொ.
யெகோவா இப்போது பேசுகிறார். அவர் யோனாவைக் கேட்கிறார்: “ஆமணக்கைப்பற்றி நீ கோபங்கொள்வது நியாயமோ”? யோனா பதிலளிக்கிறார்: “நான் சாவை விரும்பிக் கோபங்கொள்வது நியாயந்தான்.” சுருக்கமாக, யெகோவா இப்போது அந்தத் தீர்க்கதரிசிக்குச் சொல்கிறார்: “நீ உழைத்து வளர்க்காத ஆமணக்கைப் பற்றிப் பரிதபிக்கிறாயே, அது ஒரே இரவில் முளைத்து ஒரே இரவில் அழிந்துபோனது.” கடவுள் மேலுமாக நியாயங்காட்டி: ‘என் பங்கில், மகா நகரமாகிய நினிவேக்காக நான் பரிதபிக்க வேண்டுமல்லவா, வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் அறியாத இலட்சத்து இருபதினாயிரம்பேருக்கு அதிகமானவர்கள் அதில் இருக்கிறார்களே, அநேக மிருக ஜீவன்களும் அதில் உண்டே?’ என்று சொல்லுகிறார். (யோனா 4:9-11, தி.மொ.) சரியான பதில் தெளிவாக உள்ளது.
யோனா இப்போது மனந்திரும்பினவராக இருக்கிறார், தன் பெயரைக் கொண்டிருக்கும் இந்த பைபிள் புத்தகத்தை எழுதுவதற்கு உயிரோடிருக்கிறார். அந்த மாலுமிகள் யெகோவாவுக்குப் பயந்தவர்களாக இருந்து, அவருக்கு ஒரு பலியைச் செலுத்தி, பொருத்தனைகளைச் செய்தார்கள் என்று அவருக்கு எவ்வாறு தெரிந்தது? தேவாவியால் ஏவப்பட்டு தெரிந்திருக்கலாம் அல்லது ஆலயத்தில் அந்த மாலுமிகள் அல்லது பயணிகள் ஒருவரிடமிருந்து தெரிந்துகொண்டிருக்கலாம்.—யோனா 1:16; 2:4.
“யோனா தீர்க்கதரிசியின் அடையாளம்”
வேதபாரகரும் பரிசேயரும் இயேசு கிறிஸ்துவினிடம் ஓர் அடையாளத்தைக் கேட்டபோது அவர், “இந்தப் பொல்லாத விபசாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள்; ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை,” என்று சொன்னார். இயேசு மேலும் தொடர்ந்து: “யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்ததுபோல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார்,” என்றார். (மத்தேயு 12:38-40) யூத நாட்கள் சூரிய அஸ்தமனத்தோடு தொடங்கினது. கிறிஸ்து வெள்ளிக்கிழமை பிற்பகல், நிசான் 14, பொ.ச. 33-ல் மரித்தார். அவருடைய உடல் அந்த நாளின் சூரிய மறைவுக்கு முன்பாகக் கல்லறையில் வைக்கப்பட்டது. அந்தச் சாயங்காலத்தில் நிசான் 15 தொடங்கி, ஏழாவதும் அந்த வாரத்தின் கடைசி நாளுமாகிய சனிக்கிழமை சூரிய மறைவு வரையாகத் தொடர்ந்தது. அந்தச் சமயத்தில் நிசான் 16 தொடங்கி, நாம் ஞாயிற்றுக்கிழமை என்று அழைக்கிற நாளின் சூரிய மறைவு வரையில் நீடித்தது. இதனால், இயேசு மரித்தவராக கல்லறையில் குறைந்தது நிசான் 14-ல் ஒரு காலப்பகுதியிலும், நிசான் 15-ல் முழு நாளளவும், மற்றும் நிசான் 16-ன் இரவுகால மணிநேரங்களிலும் இருந்தார். ஞாயிற்றுக்கிழமை காலையில் பெண்கள் சிலர் கல்லறைக்கு வந்தபோது, அவர் ஏற்கெனவே உயிர்த்தெழுப்பப்பட்டிருந்தார்.—மத்தேயு 27:57-61; 28:1-7.
மூன்று நாட்களின் பாகங்களுக்கு இயேசு கல்லறையில் இருந்தார். இவ்வாறு அவருடைய எதிரிகள் ‘யோனா தீர்க்கதரிசியின் அடையாளத்தைப்’ பெற்றார்கள், ஆனால் கிறிஸ்து இவ்வாறு சொன்னார்: “யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினார்கள். இதோ, யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே நினிவே பட்டணத்தார் இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவார்கள்.” (மத்தேயு 12:41) எவ்வளவு உண்மையாக உள்ளது! யூதர்களின் மத்தியில் இயேசு கிறிஸ்து—யோனாவைப் பார்க்கிலும் மிகப் பெரிய தீர்க்கதரிசி—இருந்தார். யோனா நினிவே மக்களுக்குப் போதிய அடையாளமாக இருந்தபோதிலும், இயேசு அந்தத் தீர்க்கதரிசி பிரசங்கித்ததைப் பார்க்கிலும் மிக அதிகமான அதிகாரத்தோடும் ஆதரவான நிரூபணத்தோடும் பிரசங்கித்தார். எனினும், பொதுவில் யூதர்கள் நம்பவில்லை.—யோவான் 4:48.
ஒரு ஜனமாக யூதர்கள், யோனாவைப் பார்க்கிலும் பெரிய தீர்க்கதரிசியானவரை மனத்தாழ்மையோடு ஏற்கவில்லை, அவரில் விசுவாசமும் வைக்கவில்லை. ஆனால் அவர்களுடைய முற்பிதாக்களைப் பற்றியதென்ன? விசுவாசம் மற்றும் தாழ்மையுள்ள மனப்பான்மை அவர்களுக்கும் இருக்கவில்லை. உண்மையில், மனந்திரும்பின நினிவே மக்களுக்கும், விசுவாசத்திலும் மனத்தாழ்மையிலும் மிகக் குறைவுபட்ட வணங்காக் கழுத்துடையோராக இருந்த இஸ்ரவேலருக்கும் இடையிலுள்ள வேறுபாட்டைக் காட்டுவதற்கே யெகோவா யோனாவை நினிவேக்கு அனுப்பினதாகத் தோன்றுகிறது.—உபாகமம் 9:6, 13-ஐ ஒப்பிட்டுக் காண்க.
யோனாவைத்தானே பற்றியதென்ன? கடவுளுடைய இரக்கம் எவ்வளவு பெரிது என்பதை அவர் கற்றார். மேலும், மனந்திரும்பின நினிவே மக்களுக்குக் காட்டப்பட்ட இரக்கத்தைப் பற்றி யோனா முணுமுணுத்ததற்கு யெகோவாவின் பிரதிபலிப்பானது, நம்முடைய நாளில் நம் பரலோகத் தகப்பன் ஆட்களுக்கு இரக்கம் காட்டுகையில், முணுமுணுக்காமல் இருக்கும்படி நம்மை வைக்க வேண்டும். நிச்சயமாகவே, ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் விசுவாசத்துடனும் தாழ்மையுள்ள இருதயத்துடனும் யெகோவாவிடம் திரும்புவதைக் குறித்து நாம் களிகூருவோமாக.