நீங்கள் சமநிலைப்பட்ட பயனியரா?
தன் பெண் குழந்தை, தட்டுத்தடுமாறும் முதல் அடிகளை எடுத்து வைப்பதற்காக திறந்த புயங்களுடன் காத்திருக்கும் தகப்பனின் கண்கள் ஒளி வீசுகின்றன. அவள் திடீரென்று தள்ளாடி விழுகையில், மறுபடியும் பிரயாசப்படும்படி அவளை அவர் ஊக்குவிக்கிறார். சீக்கிரத்தில் அவள் தன் சமநிலையையும் பலத்தையும் அடைவாள் என்று அவர் அறிந்திருக்கிறார்.
இதே முறையில், முழுநேர ராஜ்ய அறிவிப்பாளராக வெற்றிகாண்பதற்குத் தேவைப்படும் சமநிலையை அடைவதற்கு முன்பாக, ஒரு புதிய பயனியர் ஊழியருக்கு காலமும் ஊக்கமூட்டுதலும் தேவைப்படலாம். பயனியர்கள் பலர் பல பத்தாண்டுகளாக மகிழ்ச்சியுடன் தொடர்ந்து சேவித்து வருகின்றனர். ஒருசிலரே தங்கள் சூழ்நிலைமைகளில் உண்டான எதிர்பாராத மாற்றங்களால் சமநிலையை இழக்கும்படி செய்யப்பட்டிருக்கின்றனர். சிலர் தங்கள் மகிழ்ச்சியையும் இழந்துவிடுகின்றனர். ஒரு நாட்டில், பயனியர் செய்யத் தொடங்கினவர்களில் 20 சதவீதத்தினர், தங்கள் முழுநேர சேவையின் முதல் இரண்டு ஆண்டுகளுக்குள் பயனியர் செய்வதை நிறுத்திவிடுகின்றனர். மிக அதிக மகிழ்ச்சியுள்ள இந்தச் சேவையிலிருந்து ஒரு பயனியரை நிறுத்திப்போடுவது எதுவாக இருக்கலாம்? இந்தத் தடைகளைத் தவிர்ப்பதற்கு ஏதாவது செய்யப்படலாமா?
உடல்நலக் குறைவு, பண சம்பந்தமான தேவைகள், மற்றும் குடும்பப் பொறுப்புகள், முழுநேர ஊழியத்தை விட்டுவிடும்படி சிலரைச் செய்விக்கலாமென்றாலும், மற்றவர்களின் காரியத்தில், பல்வேறு கிறிஸ்தவ கடமைகளுக்கிடையில் நல்ல சமநிலையைக் காத்துவரத் தவறுவதே முட்டுக்கட்டையாக இருந்திருக்கிறது. சமநிலை என்பது, “எந்த ஒரு பாகமோ கூறோ அல்லது விசையோ மற்றொன்றைப் பார்க்கிலும் எடைமீறியதாகவோ அல்லது மற்றொன்றுடன் சரியான விகிதத்தில் அல்லாமலோ இல்லாத ஒரு நிலை” என்பதை குறிப்பாக உணர்த்துகிறது.
பிரசங்கிக்கும் மற்றும் சீஷராக்கும் ஊழியம் எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்பதை இயேசு கிறிஸ்து தம்முடைய சீஷர்களுக்கு காட்டினார். சமநிலையைக் காத்துவருவது எவ்வாறு என்பதையும் தம் சொந்த ஊழியத்தில் சித்தரித்துக் காட்டினார். அந்த யூத மதத் தலைவர்கள் சமநிலையற்றவர்களாக இருந்தனரென இயேசு காண்பித்து, இவ்வாறு அவர்களிடம் சொன்னார்: “மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாமிலும் வெந்தையத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள், இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்க வேண்டுமே.”—மத்தேயு 23:23.
இந்த நியமம் இன்றும் அதே விதமாய் நன்றாகப் பொருந்துகிறது, முக்கியமாக பயனியர் ஊழியத்துக்கு அவ்வாறு பொருந்துகிறது. பயனியர் ஊழியத்துக்கு முழுமையாக ஆயத்தம் செய்யாமல் அல்லது அது உட்படுத்துகிற எல்லாவற்றையும் சிந்திக்காமல் சிலர், ஆர்வத்தாலும் நல்ல நோக்கத்தாலும் உந்துவிக்கப்பட்டவர்களாக அதை ஏற்றிருக்கின்றனர். (லூக்கா 14:27, 28) மற்றவர்கள், வெளி ஊழியத்தில் அவ்வளவு அதிகமாய்க் கருத்தூன்றியவர்களாகி, கிறிஸ்தவத்தின் மற்ற முக்கிய அம்சங்களுக்குக் கவனம் செலுத்தாமல் விட்டிருக்கின்றனர். அவர்கள் எவ்வாறு சமநிலையைப் பெற்று, அதைக் காத்துவரக்கூடும்?
ஆவிக்குரியப்பிரகாரமாக பலமுள்ளோராய் வைத்துக்கொள்ளுங்கள்!
இயேசு தம்முடைய ஆவிக்குரியத் தேவையைக் கவனியாமல் ஒருபோதும் இருக்கவில்லை. அவர் சொல்வதைச் செவிகொடுத்துக் கேட்கவும், சுகப்படுத்தப்படவும் வந்த ஜனக்கூட்டங்கள் அவருடைய நேரத்தை மட்டுக்குமீறி எடுத்துக்கொண்டபோதிலும், தியானித்து ஜெபிப்பதற்கு அவர் நேரத்தை ஒதுக்கினார். (மாற்கு 1:35; லூக்கா 6:12) இன்று சமநிலைப்பட்ட பயனியர் ஊழியம் செய்வது, ஆவிக்குரியப் பிரகாரமாக பலமாய் வைத்துக்கொள்வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் பயனியர் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்வதையும் தேவைப்படுத்துகிறது. “மற்றவனுக்குப் போதிக்கிற நீ உனக்குத்தானே போதியாமலிருக்கலாமா?” என்று பவுல் நியாயங்காட்டி விவாதித்தார். (ரோமர் 2:21) போதிய தனிப்பட்ட படிப்புக்கும் ஒழுங்குதவறாத ஜெபத்துக்கும் நேரத்தை ஒதுக்கி வைப்பதற்குக் கவனம் செலுத்தாமல் விட்டு, தனக்கு இருக்கும் எல்லா நேரத்தையும் மற்றவர்களுக்குப் பிரசங்கிப்பதில் செலவிடுவது நிச்சயமாகவே தவறாயிருக்கும்.
குமீக்கோ இருபது ஆண்டுகளாகப் பயனியராக இருந்துவருகிறாள். அவளுக்கு மூன்று பிள்ளைகளும் அவிசுவாசியான கணவரும் இருக்கிறபோதிலும், பைபிளை வாசித்து ஆழ்ந்து படிப்பதற்கு தனக்கு சிறந்த நேரம், இரவில் படுக்கைக்குச் செல்லும் நேரத்திற்கு முன்பு என்பதாக அனுபவத்தின்மூலம் கண்டிருக்கிறாள். அவள் படிக்கும்போது, அன்றாட ஊழியத்தைப் புத்தம்புதியதாகவும் அக்கறையைத் தூண்டுவதாகவும் வைத்துக்கொள்வதற்காக வெளி ஊழியத்தில் பயன்படுத்துவதற்கென குறிப்புகளை முக்கியமாக கவனித்துக்கொள்கிறாள். ஊழியத்தில் வெற்றிகாணும் மற்ற பயனியர்கள், அமைதியான காலை மணிநேரங்களில் ஆவிக்குரிய ஊக்கமூட்டும் படிப்பை அனுபவிப்பதற்கு, குடும்பத்தில் மற்றவர்கள் யாவரும் எழும்புவதற்கு முன்பாகப் படுக்கையைவிட்டு எழும்புகிறார்கள். நீங்கள் ஒருவேளை, கூட்டங்களுக்காக ஆயத்தம் செய்வதற்கும் சமீபத்தில் வெளியான கிறிஸ்தவ பிரசுரங்களை அவ்வப்போது படித்து முடிப்பதற்கும் மற்ற பொருத்தமான நேரங்களை ஒதுக்கி வைத்திருக்கலாம். ஊழியத்தின் மகிழ்ச்சியைக் காத்துவருவதற்கு நீங்கள் விரும்பினால், தனிப்பட்ட படிப்பு, அவசரப்பட்டு செய்வதற்கோ அல்லது செய்யாமல் விடுவதற்கோ உரிய ஒன்றல்ல.
குடும்பப் பொறுப்புகளை சமநிலைப்படுத்துதல்
பயனியர் செய்யும் பெற்றோர்கள், தங்களுக்கான ‘யெகோவாவின் சித்தத்தின்’ பெரும் பாகமானது, தங்கள் சொந்தக் குடும்பத்தின் சரீர, உணர்ச்சி சம்பந்த, மற்றும் ஆவிக்குரிய தேவைகளைக் கவனிப்பதை உட்படுத்துகிறது என்பதையும் மனதில் வைக்க வேண்டும். (எபேசியர் 5:17; 6:1-4; 1 தீமோத்தேயு 5:8) மனைவியும் தாயுமாக இருக்கிறவள் பயனியர் செய்யத் தொடங்கிவிட்டால், அவளிடமிருந்து ஆறுதலும் ஆதரவும் தங்களுக்குக் கிடைக்காதென, விசுவாசியான கணவரும் குடும்ப உறுப்பினருங்கூட சிலசமயங்களில் பயப்படுகின்றனர். அத்தகைய உணர்ச்சிகள், பயனியராகும்படியான அவளுடைய ஆவலுக்கு ஆர்வங்குறைந்த பிரதிபலிப்பில் விளைவடைகின்றன. எனினும் நல்ல திட்டத்துடனும் முன்சிந்தனையுடனும், சமநிலையைக் காத்துவரலாம்.
பயனியர்கள் பலர், குடும்ப உறுப்பினர்கள் வீட்டில் இராதபோது தங்கள் பிரசங்க ஊழியம் முழுவதையும் செய்ய முயற்சி செய்கின்றனர். முன் குறிப்பிட்ட குமீக்கோ, தன் குடும்பத்தினர் காலை உணவைச் சாப்பிடுகையில் அவர்களுடன் இருக்கிறாள், தன் கணவரும் பிள்ளைகளும் வெளிச்செல்கையில் அவர்களை வழியனுப்பிவிட்ட பின்பு, தான் ஊழியத்துக்குச் சென்று, அவர்கள் திரும்பிவருவதற்கு முன்பாக வீட்டுக்கு வந்துவிடுகிறாள். சமையலறையில் தான் வேலைசெய்துகொண்டிருப்பதற்குப் பதிலாக, தன் குடும்பத்துடன் அமரிக்கையாக இருந்து சாப்பிடும்படி, பல போஜனங்களை முன்னதாகவே தயாரித்து வைப்பதற்கு திங்கட்கிழமைகளை அவள் பயன்படுத்துகிறாள். சாப்பாடு தயாரிக்கும்போதே மற்ற வீட்டு வேலைகளையும் செய்வதுபோல், ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளைச் செய்வதும் உதவியாக உள்ளது. அந்த முறையில் குமீக்கோ, தன் பிள்ளைகளின் நண்பர்களை வரவழைத்து, அவர்களுக்கு விசேஷித்த இன்ப விருந்து அளிப்பதற்கும்கூட நேரத்தைக் கண்டடைகிறாள்.
பிள்ளைகள் பருவ வயதுக்கு வளருகையில், அவர்களை ஆழ்த்தும் புதிய உணர்ச்சிவேகங்கள், ஆவல்கள், சந்தேகங்கள், பயங்கள் ஆகியவற்றை சமாளிப்பதற்கு, பெற்றோரிடமிருந்து மேலும் அதிகப்பட்ட கவனிப்பு அவர்களுக்கு அடிக்கடி தேவைப்படுகிறது. இது, பயனியராக இருக்கும் பெற்றோர் ஒருவரின் அட்டவணையில் விழிப்பையும் சரிசெய்தலையும் தேவைப்படுத்துகிறது. மூன்று பிள்ளைகளையுடையவராக பயனியர் ஊழியம் செய்யும் ஒரு தாயான ஹிசாக்கோவைக் கவனியுங்கள். அவளுடைய மூத்த மகள், உலகப்பிரகாரமான பள்ளி நண்பர்களால் வசீகரிக்கப்பட்டு, கிறிஸ்தவ கூட்டங்களுக்கும் வெளி ஊழியத்துக்கும் மகிழ்ச்சியும் ஆர்வமும் குன்றியவளாகத் தன்னைக் காட்ட தொடங்கினபோது, அவள் என்ன செய்தாள்? அவளுடைய மகள், சத்தியத்தைத் தனக்கு சொந்தமானதாக்கிக் கொள்வதும், இந்த உலகத்திலிருந்து பிரிந்திருப்பதே சிறந்த போக்கென முழுமையாக உறுதிசெய்யப்பட்டவளாவதும் உண்மையில் தேவைப்பட்டது.—யாக்கோபு 4:4.
ஹிசாக்கோ சொல்கிறாள்: “என்றும் வாழலாம் புத்தகத்தில் அடிப்படையான கோட்பாடுகளை மறுபடியுமாக தினந்தோறும் அவளுடன் படிக்கும்படி நான் தீர்மானித்தேன். படிப்பதற்கான நேரம் வந்தவுடன் என் மகள், கடுமையாக வயிறு வலிப்பதாகவும் தலை வலிப்பதாகவும் அடிக்கடி முணுமுணுத்ததால், முதலில், சில நிமிடங்கள் மாத்திரமே எங்களால் படிக்க முடிந்தது. ஆனால் நான் தவறாமல் படிப்பை நடத்தி வந்தேன். சில மாதங்களுக்குப் பின், அவளுடைய மனப்பான்மை பெரிதும் முன்னேற்றமடைந்து, சொற்ப காலத்துக்குள் அவள் ஒப்புக்கொடுத்து முழுக்காட்டப்படுவதற்கு வழிநடத்தினது.” இப்போது ஹிசாக்கோ தன் மகளுடன் சேர்ந்து முழுநேர ஊழியத்தை அனுபவித்து மகிழ்கிறாள்.
பயனியர்களாக இருக்கும் தகப்பன்மாரும், வெளி ஊழியத்தில் அக்கறை காட்டுவோரை கவனிப்பதிலும் சபை பொறுப்புகளை கவனிப்பதிலும் மூழ்கியவர்களாவதால், வளரும் தங்கள் பிள்ளைகளுக்குத் தாங்கள் தகுந்தபடி கொடுக்க வேண்டிய உணர்ச்சிப்பூர்வமான ஆதரவையும் வழிநடத்துதலையும் கொடுக்கத் தவறாதபடி கவனமாயிருக்க வேண்டும். இது, ஒரு கணவன் தன் மனைவியினிடம் கடத்திவிடுவதற்குரிய ஒரு பொறுப்பல்ல. நெடுங்காலம் பயனியராக இருந்துவருபவரும், அதோடு ஒரு சிறிய தொழிலையுங்கூட நடத்திவருபவருமான அதிக வேலையுள்ள கிறிஸ்தவ மூப்பர் ஒருவர், தன் நான்கு பிள்ளைகளான ஒவ்வொருவருடனும் தனித்தனியே படிப்பதற்கு நேரத்தை ஒதுக்கி வைக்கிறார். (எபேசியர் 6:4) கூடுதலாக, தன் குடும்பத்துடன் வாராந்தர கூட்டங்களுக்கு அவர் ஆயத்தம் செய்கிறார். சமநிலைப்பட்ட பயனியர்கள், பொருளாதார வகையிலும் ஆவிக்குரியப் பிரகாரமும் தங்கள் குடும்பத்தைக் கவனியாமல் விடுகிறதில்லை.
பொருளாதார சமநிலை
அன்றாட தேவைகளைச் சரியான முறையில் கருதுவதானது, பயனியர்கள் நல்ல சமநிலையைக் காத்துவர முயற்சிசெய்ய வேண்டியதற்கான மற்றொரு அம்சமாகும். இங்கே மறுபடியுமாக, இயேசுவின் சிறந்த முன்மாதிரியிலிருந்தும் அறிவுரையிலிருந்தும் நாம் மிகுதியானதைக் கற்றுக்கொள்ளலாம். பொருளாதார அக்கறைகளைப் பற்றி மட்டுக்குமீறி கவலையுள்ளோராக இருப்பதற்கு எதிராக அவர் எச்சரித்தார். மாறாக, ராஜ்யத்தை முதலாவதாக வைக்கும்படி தம்முடைய சீஷர்களை அவர் ஊக்குவித்து, கடவுள் தம்முடைய மற்ற சிருஷ்டிப்புகளைக் கவனித்துக் காப்பதுபோல் அவர்களையும் காப்பார் என்று வாக்குக் கொடுத்தார். (மத்தேயு 6:25-34) இந்த நல்ல அறிவுரையைப் பின்பற்றுவதன்மூலம், பயனியர்கள் பலர், தங்கள் முழுநேர சேவையில் பல ஆண்டுகள் நிலைத்திருக்கக் கூடியோராக இருந்திருக்கின்றனர். ‘அன்றன்று வேண்டிய ஆகாரத்தை’ அடைவதற்கான அவர்களுடைய முயற்சிகளை யெகோவா ஆசீர்வதித்திருக்கிறார்.—மத்தேயு 6:11, தி.மொ.
‘தங்கள் நியாயமானத் தன்மை எல்லா மனிதருக்கும் தெரியவரச் செய்யும்படி,’ அப்போஸ்தலன் பவுல் உடன் தோழர்களான கிறிஸ்தவர்களுக்கு அறிவுரை கொடுத்தார். (பிலிப்பியர் 4:5, NW) நிச்சயமாகவே, நியாயமானத் தன்மை, நம்முடைய உடல்நலத்தை நாம் சரியான முறையில் கவனித்துக்கொள்ளும்படி செய்விக்கும். சமநிலைப்பட்ட பயனியர்கள், தங்கள் நடத்தையை மற்றவர்கள் கவனிக்கிறார்கள் என்பதைத் தெரிந்திருப்போராக, தங்கள் வாழ்க்கை முறையிலும், பொருளாதார காரியங்களினிடமாகத் தங்கள் மனப்பான்மையிலும் நியாயமானத் தன்மையைக் காட்டுவதற்கு எல்லா முயற்சியும் செய்கிறார்கள்.—1 கொரிந்தியர் 4:9-ஐ ஒப்பிடுக.
பயனியர் சேவையை ஏற்கும் இளைஞர்கள், தங்கள் பெற்றோரின் தாராள குணத்தை மட்டுக்குமீறி அனுகூலப்படுத்திக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். அவர்கள் தங்கள் பெற்றோரின் வீட்டில் வாழ்வோராக இருந்தால், அன்றாட வீட்டு வேலைகளில் பங்குகொள்வதும், குடும்பத்தை நடத்துவதற்கு ஏற்படும் செலவினிடமாகத் தங்கள் பங்கைச் செய்ய உதவும் பகுதிநேர வேலை ஒன்றைக் கொண்டிருப்பதும், நல்ல சமநிலையையும் மதித்துணர்வையும் காட்டுவதாக இருக்கும்.—2 தெசலோனிக்கேயர் 3:10.
சமநிலைப்பட்ட பயனியர்கள் உண்மையான ஓர் ஆசீர்வாதம்
சரியான சமநிலையைக் காத்துக்கொள்ள கடினமாய் உழைக்கும் ஒரு பயனியராக நீங்கள் இருக்கலாம். நம்பிக்கையுடையோராக இருங்கள். தன்னைச் சமநிலைப்படுத்திக்கொண்டு நடப்பதற்குக் கற்றுக்கொள்ள ஒரு சிறு பிள்ளைக்குக் காலம் தேவைப்படுவதுபோல், முதிர்ச்சியடைந்த பயனியர்கள் பலர், தங்கள் கடமைகள் எல்லாவற்றையும் கவனிப்பதில் சமநிலையை அடைய தங்களுக்குக் காலம் எடுத்ததாகச் சொல்கின்றனர்.
தனிப்பட்ட படிப்பில் ஈடுபடுவது, குடும்ப உறுப்பினர்களைக் கவனிப்பது, மற்றும் தங்கள் சொந்த பொருளாதார தேவைகளைச் சம்பாதிப்பது ஆகியவை, சமநிலைப்படுத்துவதற்காக பயனியர்கள் உழைக்கும் அம்சங்களுக்குள் அடங்கியிருக்கின்றன. பயனியர்கள் பலர் தங்கள் பொறுப்புகளை மிகச் சிறந்த முறையில் நிறைவேற்றுகிறார்கள் என்று அறிக்கைகள் காட்டுகின்றன. அவர்கள் மெய்யாகவே சமுதாயத்துக்கு ஆசீர்வாதமாயும் யெகோவாவுக்கும் அவருடைய அமைப்புக்கும் புகழைக் கொண்டுவருவோராயும் இருக்கிறார்கள்.