தப்பெண்ணத்திற்கு நீங்கள் இலக்கானவரா?
இன வன்முறை, இனவெறி, ஓரவஞ்சனை, தனியாக ஒதுக்குதல், இனத்தை அழித்தல் ஆகிய அனைத்துக்கும் பொதுவானது எது? அவை அனைத்தும் வெகுவாக பரவியுள்ள மனித மனச்சாய்வாகிய தப்பெண்ணத்தின் விளைவுகளே!
தப்பெண்ணம் என்றால் என்ன? ஒரு கலைக்களஞ்சியம், “நியாயமான முறையில் நியாயந்தீர்த்து முடிவெடுக்க நேரமோ அக்கறையோ எடுத்துக்கொள்ளாமல் உருவாக்கப்பட்ட ஒரு கருத்து” என்பதாக அதை வரையறுக்கிறது. அபூரண மனிதர்களாகிய நாம் ஓரளவுக்குத் தப்பெண்ணம் கொள்ளும் சுபாவம் உள்ளவர்களே. எல்லா உண்மைகளும் இல்லாமலே நீங்கள் நியாயந்தீர்த்த சம்பவங்களை ஒருவேளை நீங்கள் நினைவுகூரலாம். அத்தகைய தப்பெண்ண மனச்சாய்வுகளை யெகோவா தேவன் நியாயந்தீர்க்கும் விதத்திலிருந்து பைபிள் வேறுபடுத்துகிறது. அது சொல்கிறது: “கடவுள் பார்க்கும் விதத்தில் மனிதன் பார்ப்பதில்லை, ஏனென்றால் மனிதனோ கண்ணுக்குப் புலப்படுவதைப் பார்க்கிறான்; ஆனால் யெகோவாவோ, இதயம் எத்தகையது என்று பார்க்கிறார்.”—1 சாமுவேல் 16:7, NW.
தப்பெண்ணம் புண்படுத்தும்
சந்தேகத்திற்கிடமின்றி, எப்போதாவது எவரோ ஒருவரால் அனைவருமே தவறாக மதிப்பிடப்பட்டுள்ளோம். (பிரசங்கி 7:21, 22-ஐ ஒப்பிடுக.) பொதுவான கருத்தில், நாம் அனைவருமே தப்பெண்ணத்திற்கு இலக்கானவர்கள். இருப்பினும், தப்பெண்ண சிந்தனைகள் உடனே களையப்பட்டுவிட்டால், ஒருவேளை சிறிய அளவில் புண்படுத்தலாம் அல்லது முற்றிலுமாகப் புண்படுத்தாமலும் இருக்கலாம். அத்தகைய சிந்தனைகளைத் தொடர்ந்து வளர்ப்பதுதான் தீமையில் விளைவடையக்கூடும். இது பொய்யை நம்பும்படி நம்மை ஏமாற்றவும் செய்யலாம். உதாரணத்திற்கு, ஒரு நபர் வெறுமனே ஒரு குறிப்பிட்ட மதத்தை, இனத்தை அல்லது தேசிய தொகுதியைச் சேர்ந்தவர் என்ற காரணத்திற்காக அவர் பேராசையுள்ளவர், சோம்பேறி, மக்கு அல்லது பெருமைபிடித்தவர் என்று சிலர் தப்பெண்ண செல்வாக்கின்கீழ் உண்மையில் நம்புகிறார்கள்.
பல சந்தர்ப்பங்களில் அத்தகைய தவறான மதிப்பிடுதல் மற்றவர்களை நியாயமற்றவிதத்தில், தகாதமுறையில் அல்லது வன்முறையாகவும்கூட நடத்த வழிவகுக்கிறது. படுகொலைகளிலும், இன அழித்தல்களிலும், இன கொலைகளிலும், மிதமிஞ்சிய தப்பெண்ணத்தின் மற்ற வகைகளிலும் கோடிக்கணக்கானோர் தங்கள் உயிரை இழந்துள்ளனர்.
பூமியெங்கும், சுதந்திரத்திற்கும், பாதுகாப்பிற்கும், சமத்துவத்திற்கும் மீறக்கூடாத உரிமையைச் சட்டப்படி உத்தரவாதம் அளிப்பதன் மூலம் அரசாங்கங்கள் தப்பெண்ணத்தைத் தடுக்கும் முயற்சியைச் செய்திருக்கின்றன. உங்கள் நாட்டின் அரசமைப்புச் சட்டத்தையோ முதன்மையான சட்டங்களின் தொகுப்பையோ படித்தீர்களென்றால், இனம், பால் அல்லது மதம் என வேற்றுமையின்றி எல்லா குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சட்ட உட்பிரிவையோ சட்டத்திருத்தத்தையோ ஐயத்திற்கிடமின்றி நீங்கள் காண்பீர்கள். இருப்பினும், தப்பெண்ணமும் ஓரவஞ்சனையும் உலகளவில் பரவலாய் இருக்கின்றன.
நீங்கள் தப்பெண்ணத்திற்கு இலக்கானவரா? வெறுமனே, உங்கள் இனம், வயது, பால், தேசியம் அல்லது மத நம்பிக்கைகளின் காரணமாக, நீங்கள் பேராசைப்பிடித்தவர், சோம்பேறி, மக்கு அல்லது பெருமைபிடித்தவர் என்றும் முத்திரை குத்தப்பட்டிருக்கிறீர்களா? தப்பெண்ணத்தின் காரணமாக உங்களுக்குச் சரியான கல்வி, வேலை, வீடு, சமுதாய சலுகைகள் மறுக்கப்படுகின்றனவா? அப்படியென்றால், நீங்கள் எவ்வாறு சமாளிக்கலாம்?
[பக்கம் 3-ன் படம்]
தப்பெண்ணத்தைத் தொடர்ந்து வளர்ப்பதானது இன பகைமையைத் தூண்டுகிறது
[படத்திற்கான நன்றி]
Nina Berman/Sipa Press