ஆசீர்வாதங்கள் அல்லது சாபங்கள்—இன்று நமக்கு உதாரணங்கள்
“இந்தக் காரியங்கள் அவர்களுக்கு உதாரணங்களாகச் சம்பவித்துக்கொண்டிருந்தன, இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவுகள் நம்மீது வந்துசேர்ந்திருக்கிற நமக்கு ஓர் எச்சரிப்பாக அவை எழுதப்பட்டன.”—1 கொரிந்தியர் 10:11, NW.
1. ஒரு கருவியை ஒருவர் கூர்ந்தாராய்ந்து பார்ப்பதுபோல், என்ன கூர்ந்தாராய்ச்சியை நாம் செய்ய வேண்டும்?
இரும்பால் செய்யப்பட்டு வண்ணம் பூசியிருக்கும் ஒரு கருவியின் வண்ணப் பூச்சுக்கு அடியில், கண்ணுக்குப் புலப்படாத வகையில் துரு அரிக்கத் தொடங்கலாம். அந்தத் துரு மேல்பாகத்தில் காணக்கூடியதாவதற்கு சிறிது காலமெடுக்கலாம். அவ்வாறே, ஒருவருடைய இருதயப்பான்மைகளும் ஆவல்களும், வினைமையான விளைவுகளில் முடிவடைவதற்கு அல்லது மற்றவர்களுக்குக் காணப்படுவதற்குங்கூட மிக முன்பாகவே, கேடடைந்துகொண்டு வரத் தொடங்கலாம். ஒரு கருவி துருப்பிடிக்கிறதா என்பதைக் காண அதை நாம் ஞானமாய்க் கூர்ந்தாராய்ந்து பார்ப்பதுபோல், நம்முடைய இருதயத்தையும் கூர்ந்தாராய்ந்து பார்த்து, தகுந்த நேரத்தில் அதற்குத் தேவைப்படும் சரிப்படுத்தலைச் செய்வதானது, நம்முடைய கிறிஸ்தவ உத்தமத்தைப் பாதுகாக்கலாம். வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டுமானால், நாம் கடவுளுடைய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ளலாம், அவருடைய சாபங்களைத் தவிர்க்கலாம். பூர்வ இஸ்ரவேலின்மீது கூறப்பட்ட அந்த ஆசீர்வாதங்களும் சாபங்களும், இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவை எதிர்ப்படுவோருக்கு அர்த்தமுடையதாகப் பெரும்பாலும் இல்லை என்று சிலர் நினைக்கலாம். (யோசுவா 8:34, 35; மத்தேயு 13:49, 50; 24:3) எனினும், அவ்வாறில்லை. 1 கொரிந்தியர் 10-வது அதிகாரத்தில் சொல்லியிருக்கிறபடி, இஸ்ரவேல் உட்பட்ட எச்சரிக்கையான உதாரணங்களிலிருந்து நாம் மிகுதியாக நன்மையடையலாம்.
2. வனாந்தரத்தில் இஸ்ரவேலின் அனுபவங்களைப் பற்றி, 1 கொரிந்தியர் 10:5, 6-ல் என்ன சொல்லியிருக்கிறது?
2 மோசேயின்கீழ் இஸ்ரவேலர் இருந்ததை கிறிஸ்துவின்கீழ் கிறிஸ்தவர்கள் இருப்பதோடு அப்போஸ்தலன் பவுல் இணையாகப் பொருத்துகிறார். (1 கொரிந்தியர் 10:1-4) இஸ்ரவேல் ஜனங்கள் கீழ்ப்படிந்திருந்தால் வாக்குக்கொடுக்கப்பட்ட தேசத்துக்குள் பிரவேசித்திருக்கலாமென்றாலும், “அவர்களில் பெரும்பாலாரிடம் கடவுள் பிரியமாயிருந்ததில்லை; அவர்கள் வனாந்தரத்தில் விழுந்து மடிந்தார்கள்.” ஆகையால் பவுல் உடன்தோழரான கிறிஸ்தவர்களுக்கு இவ்வாறு சொன்னார்: ‘அவர்கள் அவற்றை இச்சித்ததுபோல், தீங்கானக் காரியங்களை இச்சிப்போராக நாம் இராதபடி, இந்தக் காரியங்கள் நமக்கு உதாரணங்களாயின.’ (1 கொரிந்தியர் 10:5, தி.மொ., 6, NW) இச்சைகள் இருதயத்தில் ஊட்டி வளர்க்கப்படுகின்றன, ஆகையால் பவுல் குறிப்பிடுகிற எச்சரிக்கைக்குரிய உதாரணங்களுக்கு நாம் கவனம் செலுத்துவது அவசியம்.
விக்கிரக வணக்கத்துக்கு எதிராக எச்சரிக்கை
3. பொற்கன்றுக்குட்டியின் சம்பந்தமாக இஸ்ரவேலர் எவ்வாறு பாவம் செய்தார்கள்?
3 பவுலின் முதல் எச்சரிக்கை: ‘ஜனங்கள் புசிக்கவும் குடிக்கவும் உட்கார்ந்து விளையாட எழுந்திருந்தார்கள் என்று எழுதியிருக்கிறபடி, அவர்களில் சிலர் விக்கிரகாராதனைக்காரர் ஆனதுபோல நீங்களும் ஆகாதிருங்கள்.’ (1 கொரிந்தியர் 10:7) இந்த எச்சரிக்கை உதாரணமானது, இஸ்ரவேலர் எகிப்தின் வழிகளுக்குத் திரும்பி, விக்கிரக வணக்கத்துக்குரிய பொன் கன்றுக்குட்டி ஒன்றைச் செய்ததைப் பற்றியது. (யாத்திராகமம், அதிகாரம் 32) சீஷனாகிய ஸ்தேவான் இதற்கு அடிப்படையாயிருந்த பிரச்சினையைக் குறிப்பிட்டுக் காட்டினார்: “நம்முடைய பிதாக்கள் [கடவுளுடைய பிரதிநிதியாகிய மோசேக்கு] கீழ்ப்படிய மனதாயிராமல், இவனைத் தள்ளிவிட்டு, தங்கள் இருதயங்களில் எகிப்துக்குத் திரும்பி, ஆரோனை நோக்கி: எகிப்துதேசத்திலிருந்து எங்களை அழைத்துக்கொண்டுவந்த அந்த மோசேக்கு என்ன சம்பவித்ததோ அறியோம்; ஆதலால் எங்களுக்கு முன்செல்லும் தெய்வங்களை எங்களுக்கு உண்டுபண்ணும் என்று சொல்லி; அந்நாட்களில் ஒரு கன்றுக்குட்டியை உண்டுபண்ணி, அந்த விக்கிரகத்திற்குப் பலியிட்டு, தங்கள் கையின் கிரியைகளில் களிகூர்ந்தார்கள்.” (அப்போஸ்தலர் 7:39-41) முரட்டாட்டமுள்ள இந்த இஸ்ரவேலர், விக்கிரக வணக்கத்துக்கு வழிநடத்தின தவறான இச்சைகளைத் “தங்கள் இருதயங்களில்” பேணி வைத்திருந்தனர் என்பதைக் கவனியுங்கள். அவர்கள் “ஒரு கன்றுக்குட்டியை உண்டுபண்ணி, அந்த விக்கிரகத்திற்குப் பலியிட்”டார்கள். மேலும், “தங்கள் கையின் கிரியைகளில் களிகூர்ந்தார்கள்.” அங்கே கீதவாத்தியமும், பாட்டும், நடனமும், புசித்தலும், குடித்தலும் நடந்தது. அந்த விக்கிரகாராதனை கவர்ச்சியூட்டுவதாயும் மகிழ்விப்பதாயும் இருந்ததாகத் தெரிகிறது.
4, 5. விக்கிரகாராதனை சம்பந்தப்பட்ட என்ன பழக்கவழக்கங்களை நாம் தவிர்க்க வேண்டும்?
4 மாதிரிப்படிவமாகிய எகிப்து—சாத்தானின் உலகம்—பொழுதுபோக்கு மகிழ்விப்பை உண்மையில் வணங்குகிறது. (1 யோவான் 5:19; வெளிப்படுத்துதல் 11:8) நடிகர்களையும், பாடகர்களையும், போட்டி விளையாட்டு புகழ்பெற்றவர்களையும், அவர்கள் நடனத்தையும், அவர்கள் இசையையும், அவர்கள் இன்பக் கேளிக்கை மற்றும் மகிழ்விப்புகளையுமே அது தெய்வங்களாக்குகிறது. பலர், தாங்கள் யெகோவாவை வணங்குவதாகப் பாராட்டிக்கொண்டிருக்கையிலேயே பொழுதுபோக்கு மகிழ்விப்பில் தங்களை முற்றிலும் உட்படுத்தும் சோதனைக்குட்பட்டிருக்கின்றனர். தவறான செயலுக்காக ஒரு கிறிஸ்தவன் கண்டிக்கப்படவேண்டியதாக இருக்கையில், அவனுடைய பலவீனமாக்கப்பட்ட ஆவிக்குரிய நிலைக்குக் காரணம், மதுபானங்களைக் குடிப்பது, நடனம், மற்றும் ஏதோ ஒரு முறையில் விக்கிரகாராதனைக்கு நெருங்க கொண்டுசெல்லக்கூடிய மகிழ்விப்பு நேரத்தைக் கொண்டிருந்தது ஆகியவற்றில் ஏதோவொன்றாகக் கண்டறியப்படுகிறது. (யாத்திராகமம் 32:5, 6, 17, 18) சில பொழுதுபோக்கு மகிழ்விப்புகள், ஆரோக்கியமானவையாக, களிப்புறத்தக்கவையாக உள்ளன. எனினும், இன்று உலகப்பிரகாரமான இசை, நடனம், திரைப்படங்கள், வீடியோக்கள் பெரும்பான்மையானவை, சீர்கெட்ட மாம்ச இச்சைகளைத் தூண்டியெழுப்பி திருப்திசெய்பவையாக உள்ளன.
5 உண்மையானக் கிறிஸ்தவர்கள் விக்கிரக வணக்கத்துக்கு இடமளிப்பதில்லை. (2 கொரிந்தியர் 6:16; 1 யோவான் 5:21) விக்கிரகாராதனை சம்பந்தப்பட்ட பொழுதுபோக்கு மகிழ்விப்புக்கு அடிமையாகி, உலகப்பிரகாரமான வகையில் நல்ல நேரத்தை அனுபவிப்பதில் மூழ்கியிருப்பதனால் உண்டாகும் தீங்கானப் பாதிப்புகளை அனுபவிக்கும் ஆபத்துக்குட்படாதபடி, அவ்வாறே நாம் ஒவ்வொருவரும் கவனமாயிருப்போமாக. உலக செல்வாக்குகளுக்கு நம்மைக் கீழ்ப்படுத்துவோமானால், தீங்குண்டாக்கும் இச்சைகளும் மனப்பான்மைகளும் மனதிலும் இருதயத்திலும் அறியப்படாத முறையில் இடங்கொள்ளக்கூடும். இவை திருத்தப்படாவிட்டால், முடிவாக, சாத்தானுடைய ஒழுங்குமுறையின் ‘வனாந்தரத்தில் அழிக்கப்பட்டுப்போவதில்’ விளைவடையக்கூடும்.
6. பொழுதுபோக்கு மகிழ்விப்பைக் குறித்ததில் என்ன உடன்பாடான நடவடிக்கையை நாம் எடுக்க வேண்டியிருக்கலாம்?
6 பொற்கன்றுக்குட்டி சம்பவத்தின்போது மோசே சொன்னதைப்போல், செயல்முறையளவில், “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” வகுப்பார் சொல்கின்றனர்: “யார் யார் யெகோவாவின் பட்சம்? வாருங்கள் எம்மிடம்!” உண்மையான வணக்கத்தின் சார்பாக நாம் உறுதியான நிலைநிற்கை கொள்கிறோம் என்று காட்டுவதற்கு உடன்பாடான நடவடிக்கை எடுப்பது உயிரைக் காப்பதாயிருக்கும். இழிவான பாதிப்புகளை ஒழிப்பதற்கு, மோசேயின் கோத்திரத்தாராகிய லேவியர் தாமதமின்றி உடனடியாகச் செயல்பட்டனர். (மத்தேயு 24:45-47, NW; யாத்திராகமம் 32:26-28, தி.மொ.) ஆகையால், பொழுதுபோக்கு மகிழ்விப்பு, இசை, வீடியோக்கள் போன்றவற்றில் உங்கள் தெரிவைக் கவனமாய்ச் சோதித்துப் பாருங்கள். அது ஏதோ ஒரு வகையில் கேடுற்றதாக இருந்தால், யெகோவாவின் சார்பில் நிலைநிற்கை கொள்ளுங்கள். ஜெபசிந்தையுடன் யெகோவாவில் நம்பிக்கை வைத்து, உங்கள் பொழுதுபோக்கு மகிழ்விப்பு மற்றும் இசை சம்பந்தப்பட்ட உங்கள் தெரிவில் மாற்றங்களைச் செய்து, பொற்கன்றுக்குட்டியை மோசே அழித்ததைப்போல், ஆவிக்குரியப் பிரகாரமாய்த் தீங்குள்ளதாயிருக்கும் பொருளை அழித்துப்போடுங்கள்.—யாத்திராகமம் 32:20; உபாகமம் 9:21.
7. அடையாளக் குறிப்பான இருதயத்தை நாம் எவ்வாறு பாதுகாக்கலாம்?
7 இருதயம் துருப்பிடிப்பதை நாம் எவ்வாறு தடுத்து நிறுத்தலாம்? கடவுளுடைய வார்த்தையை ஊக்கமாய்ப் படிப்பதன் மூலம், அதன் சத்தியங்கள் நம்முடைய மனதிலும் இருதயத்திலும் ஆழமாய்ப் பதியும்படி செய்யலாம். (ரோமர் 12:1, 2) நிச்சயமாகவே, கிறிஸ்தவ கூட்டங்களுக்கு நாம் தவறாமல் செல்ல வேண்டும். (எபிரெயர் 10:24, 25) கூட்டங்களுக்கு சென்று வெறுமனே உட்கார்ந்து வருவதை, துருப்பிடித்த இடத்தின்மீது வண்ணம் பூசுவதற்கு ஒப்பிடலாம். இது சிறிது காலம் நமக்குக் கிளர்ச்சியளிக்கலாம், ஆனால் உள் ஆழத்திலுள்ள பிரச்சினையைத் தீர்க்கிறதில்லை. மாறாக, முன்னதாகவே தயாரித்து, தியானித்து, கூட்டங்களில் சுறுசுறுப்பாய்ப் பங்கெடுப்பதால், நம்முடைய அடையாளக் குறிப்பான இருதயத்தின் உள்மறைவிடங்களில் இன்னும் நீடித்திருக்கக்கூடிய அரித்தழிக்கும் மூலங்களை நாம் வலுக்கட்டாயமாக நீக்கிவிடலாம். இது, கடவுளுடைய வார்த்தையை தவறாமல் கடைப்பிடிக்கும்படி நமக்கு உதவிசெய்யும், விசுவாச பரீட்சைகளைச் சகிக்கும்படி நம்மைப் பலப்படுத்தும், மற்றும் ‘எல்லா வகையிலும் நிறைவுள்ளவர்களாகும்படி’ செய்யும்.—யாக்கோபு 1:3, 4, தி.மொ.; நீதிமொழிகள் 15:28.
வேசித்தனத்திற்கு எதிரான எச்சரிக்கை
8-10. (அ) 1 கொரிந்தியர் 10:8-ல் என்ன எச்சரிக்கையான உதாரணம் குறிப்பிடப்படுகிறது? (ஆ) மத்தேயு 5:27, 28-ல் காணப்படுகிற இயேசுவின் வார்த்தைகளை, நன்மை பயக்கும் வகையில் எவ்வாறு பொருத்திப் பயன்படுத்தலாம்?
8 பவுலின் அடுத்த உதாரணத்தில் நாம் இவ்வாறு அறிவுரை கொடுக்கப்படுகிறோம்: “அவர்களில் சிலர் வேசித்தனம்பண்ணி, ஒரேநாளில் இருபத்துமூவாயிரம் பேர் விழுந்துபோனார்கள்; அதுபோல நாமும் வேசித்தனம்பண்ணாதிருப்போமாக.”a (1 கொரிந்தியர் 10:8) இஸ்ரவேலர், பொய்த் தேவர்களுக்கு வணக்கம் செலுத்தி, ‘மோவாபின் குமாரத்திகளோடே வேசித்தனம் பண்ணின’ அந்தச் சமயத்தை அப்போஸ்தலன் குறிப்பிடுகிறார். (எண்ணாகமம் 25:1-9) பாலின ஒழுக்கக்கேடு மரண தண்டனையைக் கொண்டுவரும்! ஒழுக்கக்கேடான சிந்தனைகளையும் இச்சைகளையும் கட்டுப்பாடற்று செல்லும்படி விடுவதானது, இருதயத்தைத் “துருப்பிடிக்க” அனுமதிப்பதைப்போல் உள்ளது. இயேசு இவ்வாறு கூறினார்: “விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று.”—மத்தேயு 5:27, 28.
9 நோவாவினுடைய நாளின் ஜலப்பிரளயத்திற்கு முன்னால், கீழ்ப்படியாத தூதர்களுடைய இழிவான சிந்தனையின் விளைவானது, ‘ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்ப்பதன்’ விளைவுகளுக்குச் சான்றளிப்பதாக உள்ளது. (ஆதியாகமம் 6:1, 2) அரசன் தாவீதின் வாழ்க்கையில் மிகப் பெரும் வருத்தமுண்டாக்கின சம்பவங்களில் ஒன்றானது, ஒரு பெண்ணை அவர் தகாதமுறையில் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருந்ததால் தொடங்கினது என்பதையும் நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். (2 சாமுவேல் 11:1-4) எதிர்மாறாக, மணம் செய்திருந்த நீதியுள்ள மனிதனாகிய யோபு, ‘ஒரு கன்னிகையின்மேல் நினைப்பாயிராதபடி தன் கண்களோடே உடன்படிக்கைபண்ணினார்,’ இவ்வாறு பால் சம்பந்த ஒழுக்கக்கேட்டைத் தவிர்த்து, உத்தமத்தைக் காத்தவராக நிரூபித்தார். (யோபு 31:1-3, 6-11) கண்களை இருதயத்தின் பலகணிகளுக்கு ஒப்பிடலாம். கேடுற்ற இருதயத்திலிருந்தே பொல்லாதக் காரியங்கள் பல வெளிப்படுகின்றன.—மாற்கு 7:20-23.
10 இயேசுவின் வார்த்தைகளை நாம் பொருத்திப் பயன்படுத்தினால், இழிபொருள் ஓவியங்களைப் பார்ப்பதன்மூலமோ, உடன் கிறிஸ்தவர் ஒருவரை, உடன் வேலைசெய்பவர் ஒருவரை, அல்லது வேறு எவரையாவது குறித்து ஒழுக்கக்கேடான சிந்தனைகள் மனதில் இடம்பெறச் செய்வதன் மூலமோ, தவறான சிந்தனைகள் கட்டுப்பாடின்றி செல்ல நாம் அனுமதிக்க மாட்டோம். துருப்பிடித்திருப்பதை வெறுமனே துடைத்து விடுவதனால் அந்தத் துரு நீக்கப்படுகிறதில்லை. ஆகையால் ஒழுக்கக்கேடான எண்ணங்களையும் மனச்சாய்வுகளையும், அவை கவனத்துக்குரியவையல்ல என்பதுபோல் இலேசாக உதறிவிடுவோராக இராதீர்கள். ஒழுக்கக்கேடான மனச்சாய்வுகளை உங்களிலிருந்து அறவே ஒழிப்பதற்கு உறுதியான நடவடிக்கைகள் எடுங்கள். (ஒப்பிடுக: மத்தேயு 5:29, 30.) உடன் விசுவாசிகளுக்கு பவுல் இவ்வாறு அறிவுரை கூறுகிறார்: “விபசாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள் [“மரத்துப்போகச் செய்யுங்கள்,” NW] இவைகளின்பொருட்டே . . . தேவ கோபாக்கினை வரும்.” ஆம், பால்சம்பந்த ஒழுக்கக்கேடு போன்ற இத்தகைய காரியங்களின் நிமித்தமாக, கடவுள் சாபத்தைக் கூறுவதுபோல், ‘தேவ கோபாக்கினை வருகிறது.’ ஆகையால் இந்தக் காரியங்களைக் குறித்ததில் நம்முடைய அவயவங்களை நாம் ‘மரத்துப்போகச் செய்ய’ வேண்டும்.—கொலோசெயர் 3:5, 6.
கலகத்தனமாய்க் குறைகூறுவதற்கு எதிராக எச்சரிக்கை
11, 12. (அ) 1 கொரிந்தியர் 10:9-ல் என்ன எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது, என்ன சம்பவம் குறிப்பிடப்பட்டது? (ஆ) பவுலின் எச்சரிக்கை நம்மை எவ்வாறு பாதிக்க வேண்டும்?
11 அடுத்தபடியாக பவுல் இவ்வாறு எச்சரிக்கிறார்: “அவர்களில் சிலர் ஆண்டவரைச் [“யெகோவாவை,” NW] சோதித்துப்பார்த்துப் பாம்புகளால் அழிக்கப்பட்டார்கள். அதுபோல் நாமும் ஆண்டவரைத் சோதித்துப் பாராதிருப்போமாக.” (1 கொரிந்தியர் 10:9, தி.மொ.) ஏதோமின் எல்லைக்கருகில் வனாந்தரத்தில் பயணப்படுகையில், இஸ்ரவேல் “ஜனங்கள் தேவனுக்கும் மோசேக்கும் விரோதமாகப் பேசி: நாங்கள் வனாந்தரத்திலே சாகும்படி நீங்கள் எங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணினதென்ன? இங்கே அப்பமும் இல்லை, தண்ணீரும் இல்லை; இந்த அற்பமான உணவு எங்கள் மனதுக்கு வெறுப்பாயிருக்கிறது என்றார்கள்.” அற்புதமாய் அளிக்கப்பட்ட மன்னாவைக் குறித்து அவ்வாறு சொன்னார்கள். (எண்ணாகமம் 21:4, 5) சற்று சிந்தித்துப் பாருங்கள்! அந்த இஸ்ரவேலர் அவருடைய ஏற்பாடுகளை அவமதிக்கத்தக்கதாக கூறி, தொடர்ந்து ‘தேவனுக்கு விரோதமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள்!’
12 தங்கள் முறையிடுதல்களால், அந்த இஸ்ரவேலர் யெகோவாவின் பொறுமையைச் சோதித்துக்கொண்டிருந்தார்கள். தண்டனை நிறுத்தி வைக்கப்படவில்லை, எப்படியெனில் யெகோவா அவர்களுக்குள் நச்சுப் பாம்புகளை அனுப்பினார், பாம்புக் கடிகளால் பலர் இறந்தனர். ஜனங்கள் மனந்திரும்பின பின்பு, மோசே அவர்களுக்காக விண்ணப்பம் செய்தார், அந்த வாதை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. (எண்ணாகமம் 21:6-9) நாம், கலகத்தனமான, குறைகூறி முறையிடும் மனப்பான்மையைக் காட்டக்கூடாது, முக்கியமாக கடவுளுக்கும் அவருடைய தேவராஜ்ய ஏற்பாடுகளுக்கும் எதிராக அவ்வாறு செய்யக்கூடாது என்பதற்கு, இந்தச் சம்பவம் நமக்கு ஓர் எச்சரிக்கையாக நிச்சயமாகவே சேவிக்க வேண்டும்.
முறுமுறுப்பதற்கு எதிராக எச்சரிக்கை
13. 1 கொரிந்தியர் 10:10 எதற்கு எதிராக எச்சரிக்கிறது, எந்தக் கலகத்தை பவுல் மனதில் வைத்திருந்தார்?
13 வனாந்தரத்தில் இஸ்ரவேலர் உட்பட்ட தன்னுடைய கடைசி உதாரணத்தைக் குறிப்பிட்டு, பவுல் எழுதுகிறார்: “அவர்களில் சிலர் முறுமுறுத்து, சங்காரக்காரனாலே அழிக்கப்பட்டார்கள்; அதுபோல நீங்களும் முறுமுறுக்காதிருங்கள்.” (1 கொரிந்தியர் 10:10) கோராகும், தாத்தானும், அபிராமும், அவர்களுடைய கூட்டாளிகளும் தேவராஜ்ய ஏற்பாடுகளுக்கு எதிராகச் செயல்பட்டு, மோசேயின் அதிகாரத்துக்கும் ஆரோனின் அதிகாரத்துக்கும் எதிர்ப்பைத் தெரிவித்தபோது கலகம் தொடங்கினது. (எண்ணாகமம் 16:1-3) அந்தக் கலகக்காரர் அழிக்கப்பட்ட பின்பு, இஸ்ரவேலர் முறுமுறுக்கத் தொடங்கினார்கள். இது ஏனென்றால், அந்தக் கலகக்காரர் அழிக்கப்பட்டது நியாயமல்லவென அவர்கள் விவாதிக்கத் தொடங்கினார்கள். எண்ணாகமம் 16:41 (தி.மொ.) இவ்வாறு சொல்கிறது: “மறுநாளில் இஸ்ரவேல் புத்திரரின் சபையார் எல்லாரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்து: நீங்கள் யெகோவாவின் ஜனத்தைக் கொன்றுபோட்டீர்கள் என்றார்கள்.” அந்தச் சந்தர்ப்பத்தில் நியாயம் வழங்கப்பட்ட முறையில் அவர்கள் குற்றம் கண்டுபிடித்ததன் விளைவாக, 14,700 இஸ்ரவேலர், கடவுள் அனுப்பின வாதையால் மாண்டனர்.—எண்ணாகமம் 16:49.
14, 15. (அ) சபைக்குள் கள்ளத்தனமாய் நுழைந்திருந்த ‘தேவபக்தியற்றவர்களின்’ பாவங்களில் ஒன்று என்னவாக இருந்தது? (ஆ) கோராகு உட்பட்ட அந்தச் சம்பவத்திலிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?
14 பொ.ச. முதல் நூற்றாண்டில், கிறிஸ்தவ சபைக்குள் கள்ளத்தனமாய் நுழைந்த ‘தேவபக்தியற்றவர்கள்,’ பொய்ப் போதகர்களாகவும் அதோடு முறுமுறுக்கிறவர்களாகவும் நிரூபித்தனர். இந்த மனிதர், ‘கர்த்தத்துவத்தை அசட்டைபண்ணி,’ சபையின் ஆவிக்குரிய கண்காணிப்பு அப்போது ஒப்புவிக்கப்பட்டிருந்த அபிஷேகஞ்செய்யப்பட்டவர்களாகிய ‘மகத்துவமானவர்களைத் தூஷித்தார்கள்.’ தேவபக்தியற்ற விசுவாசத்துரோகிகளைக் குறித்து, சீஷனாகிய யாக்கோபு இவ்வாறு மேலும் சொன்னார்: “இவர்கள் முறுமுறுக்கிறவர்களும், முறையிடுகிறவர்களும், தங்கள் இச்சைகளின்படி நடக்கிறவர்களுமாயிருக்கிறார்கள்.” (யூதா 3, 4, 8, 16) இன்று சில நபர்கள், ஆவிக்குரியப் பிரகாரமாய் அரித்தழிக்கும் மனப்பான்மை, தங்கள் இருதயத்தில் தோன்றி வளருவதற்கு அனுமதிப்பதால் முறுமுறுக்கிறவர்களாகின்றனர். சபையில் கண்காணிப்புக்குரிய ஸ்தானங்களில் இருப்போரின் அபூரணங்களின்பேரிலேயே அவர்கள் அடிக்கடி கவனத்தை ஊன்றவைத்து, அவர்களுக்கு விரோதமாக முறுமுறுக்கத் தொடங்குகின்றனர். இவர்களுடைய முறுமுறுப்பும் குறைகூறுதலும், ‘உண்மையுள்ள அடிமையின்’ பிரசுரங்களைக் குற்றங்குறை கூறுமளவுக்குங்கூட செல்லலாம்.
15 பைபிள் சம்பந்தமான ஒரு விஷயத்தைப் பற்றி உள்ளப்பூர்வமான கேள்விகளைக் கேட்பது தகுந்ததே. ஆனால், நாம் எதிர்மறையான மனப்பான்மையை வளர்த்து, அது, நெருங்கிய பழக்கமுடையோருக்குள் அல்லது நண்பர்களுக்குள் நடக்கும் குற்றங்காணும் உரையாடல்களில் தன்னை வெளிப்படுத்தினால் என்ன செய்வது? நம்மைநாமே இவ்வாறு கேட்டுக்கொள்வது நல்லது, ‘இது எங்கே சென்று முடிவடையலாம்? முறுமுறுப்பதை நிறுத்திவிட்டு, ஞானத்துக்காக மனத்தாழ்மையுடன் ஜெபிப்பது இதைப்பார்க்கிலும் மிக மேம்பட்டதல்லவா?’ (யாக்கோபு 1:5-8; யூதா 17-21) மோசேயும் ஆரோனுமான இவர்களுடைய அதிகாரத்துக்கு எதிராகக் கலகம் செய்த, கோராகும் அவனுடைய ஆதரவாளர்களும், தங்களுடைய நோக்குநிலையே நியாயமானது என்று அவ்வளவு உறுதியாக நம்பினதால், தங்கள் உள்நோக்கங்களைச் சோதித்துப் பார்க்கவில்லை. இருப்பினும், அவர்கள் முற்றிலும் தவறில் இருந்தனர். அவ்வாறே, கோராகும் கலகக்காரரான மற்றவர்களும் அழிக்கப்பட்டதைப் பற்றி முறுமுறுத்த அந்த இஸ்ரவேலரும் தவறில் இருந்தனர். நம்முடைய உள்நோக்கங்களை நாம் சோதித்துப் பார்த்து, முறுமுறுத்தலையும் குறைகூறுவதையும் அகற்றி, யெகோவா நம்மைச் சுத்திகரித்துப் பண்படுத்த அனுமதிப்பதற்கு, இத்தகைய உதாரணங்கள் நம்மைத் தூண்டியியக்கச் செய்வது எவ்வளவு ஞானமானது!—சங்கீதம் 17:1-3.
கற்றுக்கொண்டு, ஆசீர்வாதங்களை அனுபவித்து மகிழுங்கள்
16. 1 கொரிந்தியர் 10:11, 12-ல் உள்ள அறிவுரையின் அடிப்படை கருத்தென்ன?
16 கடவுளுடைய ஆவியால் ஏவப்பட்டு, பவுல் இந்த எச்சரிப்பு செய்திகளின் பட்டியலை இந்த அறிவுரையுடன் முடிக்கிறார்: “இந்தக் காரியங்கள் அவர்களுக்கு உதாரணங்களாகச் சம்பவித்துக்கொண்டிருந்தன, இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவுகள் நம்மீது வந்துசேர்ந்திருக்கிற நமக்கு ஓர் எச்சரிப்பாக அவை எழுதப்பட்டன. ஆதலால், தான் நிற்கிறதாக நினைக்கிறவன் விழாதபடி எச்சரிக்கையாக இருக்கக்கடவன்.” (1 கொரிந்தியர் 10:11, 12, NW) கிறிஸ்தவ சபையில் நம் நிலைநிற்கையை அற்பமாக எண்ணாதிருப்போமாக.
17. தகாத ஒரு தூண்டுதலை நம் இருதயத்தில் உணர்ந்தால், நாம் என்ன செய்ய வேண்டும்?
17 துருப்பிடிக்கும் தன்மை இரும்புக்கு இருப்பதுபோல், கேட்டினிடமாகச் சாயும் ஒரு தன்மையை பாவியான ஆதாமின் சந்ததியாராகிய நாம் சுதந்தரித்திருக்கிறோம். (ஆதியாகமம் 8:21; ரோமர் 5:12) ஆகையால், நம்முடைய இருதயத்தில் தகாத ஒரு தூண்டுதலை உணர்ந்தால் நாம் சோர்வடைந்துவிடக்கூடாது. மாறாக, தீர்மானமான நடவடிக்கை எடுப்போமாக. இரும்பை ஈரக் காற்றுபடும்படி அல்லது நவச்சார சூழ்நிலை ஒன்றில் வைத்தால், அதன் துருப்பிடிப்பு பேரளவில் விரைவுபடுத்தப்படுகிறது. இழிந்த பொழுதுபோக்கு மகிழ்விப்பு, வெகு பரவலான ஒழுக்கக்கேடு, எதிர்மறையான மனச்சாய்வு ஆகியவை அடங்கிய சாத்தானுடைய உலகத்தின் ‘ஆகாயம்’ பாதிக்கும்படியான நிலையில் நம்மை வைப்பதை நாம் தவிர்க்க வேண்டும்.—எபேசியர் 2:1, 2.
18. மனிதவர்க்கத்தின் தவறான மனச்சாய்வுகள் சம்பந்தமாக யெகோவா என்ன செய்திருக்கிறார்?
18 நாம் சுதந்தரித்திருக்கிற தவறான மனச்சாய்வுகளை எதிர்த்துத் தடைசெய்வதற்கு ஒரு வழிவகையை யெகோவா மனிதவர்க்கத்துக்கு அருளிச்செய்திருக்கிறார். தம்முடைய ஒரே பேறான குமாரனில் விசுவாசம் காட்டுவோர் நித்திய ஜீவனடையும்படி, அவரைத் தந்தருளினார். (யோவான் 3:16) இயேசுவின் அடிச்சுவடுகளைக் கவனமாய்ப் பின்பற்றி, கிறிஸ்துவினுடையதைப் போன்ற பண்பியல்பை நாம் காட்டுவோமானால், மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாயிருப்போம். (1 பேதுரு 2:21) மேலும், சாபங்களையல்ல, கடவுளுடைய ஆசீர்வாதங்களையும் பெறுவோம்.
19. வேதப்பூர்வமான உதாரணங்களைச் சிந்தித்துப் பார்ப்பதிலிருந்து நாம் எவ்வாறு பயனடையலாம்?
19 இன்று நாம், பூர்வ இஸ்ரவேலர் இருந்ததைப்போல், தவறு செய்யும் இயல்புடையோராக இருக்கிறபோதிலும், நம்மை வழிநடத்துவதற்கு, பூர்த்தியாக்கப்பட்ட கடவுளுடைய எழுதப்பட்ட வார்த்தை நமக்கு உள்ளது. மனிதவர்க்கத்துடன் தொடர்புகொண்ட யெகோவாவின் செயல்களையும், அவற்றோடுகூட, ‘கடவுளுடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருக்கிற’ இயேசுவில் வெளிப்படுத்திக் காட்டப்பட்ட அவருடைய பண்புகளையும் பற்றி, அதன் பக்கங்களிலிருந்து நாம் கற்றறிகிறோம். (எபிரெயர் 1:1-3; யோவான் 14:9, 10) ஜெபத்தின்மூலமும், வேதவாக்கியங்களை ஊக்கமாய்ப் படிப்பதன்மூலமும், நாம் ‘கிறிஸ்துவின் சிந்தையை’ உடையோராக இருக்கலாம். (1 கொரிந்தியர் 2:16) சோதனைகளையும் நம்முடைய விசுவாசத்துக்குரிய மற்ற பரீட்சைகளையும் எதிர்ப்படுகையில், வேதவாக்கியங்களிலுள்ள பூர்வகால முன்மாதிரிகளையும், முக்கியமாய் இயேசு கிறிஸ்துவின் மிக உயர்ந்த முன்மாதிரியையும் சிந்தித்துப் பார்ப்பதிலிருந்து நாம் பயனடையலாம். அவ்வாறு செய்வோமானால், கடவுளுடைய சாபங்களின் நிறைவேற்றத்தை நாம் அனுபவிக்க வேண்டியதில்லை. மாறாக, இன்று யெகோவாவின் தயவையும் என்றென்றுமாக அவருடைய ஆசீர்வாதங்களையும் நாம் அனுபவித்து மகிழ்வோம்.
[அடிக்குறிப்பு]
a 1992, ஜூலை 15-ன் ஆங்கில காவற்கோபுரம், 4-ம் பக்கம் காண்க.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ விக்கிரகாராதனைக்காரராக வேண்டாமென்ற பவுலின் அறிவுரையை நாம் எவ்வாறு பொருத்திப் பயன்படுத்தலாம்?
◻ வேசித்தனத்துக்கு எதிரான அப்போஸ்தலனின் எச்சரிக்கைக்கு செவிகொடுக்க நாம் என்ன செய்யலாம்?
◻ முறுமுறுப்பதையும் குறைகூறுவதையும் நாம் ஏன் தவிர்க்க வேண்டும்?
◻ சாபங்களை அல்ல, கடவுளுடைய ஆசீர்வாதங்களை நாம் எவ்வாறு பெறலாம்?
[பக்கம் 18-ன் படம்]
கடவுளுடைய ஆசீர்வாதங்கள் நமக்கு வேண்டுமானால், விக்கிரகாராதனையை நாம் தவிர்க்க வேண்டும்
[பக்கம் 20-ன் படங்கள்]
இரும்புத்துருவை நீக்க வேண்டியதாக இருப்பதுபோல், தகாத இச்சைகளை நம்முடைய இருதயத்திலிருந்து நீக்குவதற்கு உடன்பாடான நடவடிக்கை எடுப்போமாக