“எவ்வாறு ஜெபிப்பதென்று எங்களுக்குக் கற்றுக்கொடும்”
“ஆண்டவரே, எவ்வாறு ஜெபிப்பதென்று எங்களுக்குக் கற்றுக்கொடும்.” அந்த வேண்டுகோள் இயேசு கிறிஸ்துவின் சீஷர்களில் ஒருவர் விடுத்ததாகும். (லூக்கா 11:1, NW) தெளிவாகவே, அந்தப் பெயர் தெரிவிக்கப்படாத சீஷன் ஜெபத்தின் பேரில் ஆழமான மதித்துணருதலை வைத்திருந்த ஒரு மனிதராக இருந்தார். அவ்விதமே இன்றைய உண்மை வணக்கத்தாரும் அதனுடைய முக்கியத்துவத்தை உணருகிறார்கள். பார்க்கப்போனால், இந்தப் பிரபஞ்சத்திலேயே மிக உயரிய நபரால் செவிகொடுத்து கேட்கப்படும் ஒரு வாய்ப்பை நாம் பெறுவதற்கு ஜெபம் ஒரு வழியாக இருக்கிறதே! இந்த உண்மையை யோசித்துப்பாருங்கள்! ‘ஜெபத்தைக் கேட்கிறவர்’ நமது கவலைகளுக்கும் வியாகூலங்களுக்கும் தனிப்பட்ட கவனத்தைச் செலுத்துகிறார். (சங்கீதம் 65:2) அதிமுக்கியமாக, ஜெபத்தின் மூலம் கடவுளுக்கு நன்றியையும் துதியையும் நாம் செலுத்துகிறோம்.—பிலிப்பியர் 4:6.
எப்படியிருப்பினும், “எவ்வாறு ஜெபிப்பதென்று எங்களுக்குக் கற்றுக்கொடும்” என்ற வார்த்தைகள் சில கருத்தார்ந்த கேள்விகளை எழுப்புகின்றன. உலகம் முழுவதிலும் கடவுளை அணுகும் பல முறைகள் வெவ்வேறு மதங்களால் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், ஜெபிப்பதற்கு சரியான மற்றும் தவறான வழியும் இருக்கிறதா? விடைக்காக, ஜெபத்தை உட்படுத்தக்கூடிய பிரபலமான மத வழக்கங்கள் சிலவற்றை முதலில் பார்க்கலாம். நாம் லத்தீன் அமெரிக்காவில் நடைமுறையிலிருக்கும் வழக்கங்களின் பேரில் கவனத்தை ஒருமுகப்படுத்தலாம்.
சொரூபங்கள் மற்றும் “பரிந்துபேசும் புனிதர்கள்”
பொதுவாக, இலத்தீன்-அமெரிக்க நாடுகள் மிகுந்த மதப்பற்றுள்ளவை. உதாரணத்திற்கு, “பரிந்துபேசும் புனிதர்களிடம்” ஜெபிக்கும் பிரபலமான பழக்கத்தை ஒருவர் மெக்ஸிகோ முழுவதிலும் காணலாம். உண்மையில், “பரிந்துபேசும் புனிதர்களை” வைத்திருப்பதும், அவர்களுக்குக் குறிப்பிட்ட தினங்களில் திருவிழா எடுப்பதும் மெக்ஸிகோ நகரங்களுக்கு வழக்கமானதே. மெக்ஸிக கத்தோலிக்கர்கள் திரளான பல்வேறு சொரூபங்களிடத்திலும் ஜெபிக்கிறார்கள். இருப்பினும், எந்தப் “புனிதரை” தொழுதுவேண்டுவது என்பது வழிபடுபவர் எந்த விதமான விண்ணப்பதைச் செய்ய ஆவலுள்ளவராக இருக்கிறார் என்பதைச் சார்ந்திருக்கும். ஒருவேளை ஒருவர் திருமணம் செய்ய ஒரு நபரைத் தேடிக்கொண்டிருந்தால், “புனிதர்” அந்தோணியாரிடத்தில் நேர்ந்துகொண்டு மெழுகுவர்த்தியை ஏற்றிவைக்கக்கூடும். வாகனத்தில் பயணத்தைத் துவங்கவிருக்கும் ஒருவர், பிரயாணிகளின் பாதுகாவலரான, விசேஷமாக மோட்டார் சைக்கிளில் செல்வோருக்குப் பாதுகாவலராக இருக்கும் “புனிதர்” கிரிஸ்டோஃப்ரிடத்தில் தன்னையே அடைக்கலமாக ஒப்படைத்துவிடக்கூடும்.
இருப்பினும், அத்தகைய வழக்கங்கள் எங்கிருந்து தோன்றின? ஸ்பானியர்கள் மெக்ஸிகோ வந்துசேர்ந்தபோது, புறமத தெய்வங்களின் வழிபாட்டில் பக்தியாய் இருந்த மக்கள் கூட்டம் ஒன்றை அவர்கள் கண்டார்கள் என்பதை வரலாறு காட்டுகிறது. லாஸ் ஆஸ்டிகாஸ், ஹாம்பிரி இ டிரிபூ (மெக்ஸிகோ பழங்குடியினர், மனிதன் மற்றும் குலம்) என்னும் தனது புத்தகத்தில் விக்டர் வால்ஃப்காங் வான் ஹாகன் கூறுகிறார்: “அங்கே தனிப்பட்ட தெய்வங்கள் இருந்தன, ஒவ்வொரு தாவரமும் அதனுடைய தெய்வத்தைக் கொண்டிருந்தது, ஒவ்வொரு செயலும் அதன் தெய்வத்தையும், பெண் தெய்வத்தையும் கொண்டிருந்தது, தற்கொலை செய்வோருக்கும்கூட ஒரு தெய்வம் இருந்தது. வியாபாரிகளின் தெய்வமாக யாகாடிகூட்லி இருந்தது. பல தெய்வங்களை வழிபடும் இந்த உலகில், எல்லா தெய்வங்களுக்கும் சுபாவங்களும் பொருத்தமான செயல்களும் தெளிவாக வரையறுக்கப்பட்டிருந்தன.”
உள்ளூர்வாசிகளை “கிறிஸ்தவர்களாக மாற்ற” வெற்றியடைந்த ஸ்பானியர்கள் முயன்றபோது இந்தத் தெய்வங்களின் சாயல் கத்தோலிக்க ‘புனிதர்களிடத்தில்’ அதிகளவில் காணப்பட்டதால், அவர்கள் தங்களுடைய பக்தியைச் சொரூபங்களிடமிருந்து சர்ச் ‘புனிதர்களிடத்திற்கு’ வெறுமனே மாற்றினார்கள். மெக்ஸிகோவின் சில பகுதிகளில் பழக்கத்திலுள்ள கத்தோலிக்க மதத்தின் புறமத மூலங்களை தி உவால் ஸ்ட்ரீட் ஜர்னலின் ஒரு கட்டுரை ஒப்புக்கொண்டது. ஒரு பகுதியில் இந்த மக்கள் கூட்டத்தினரால் வழிபடப்பட்ட பெரும்பாலான 64 “புனிதர்களும்,” “குறிப்பிட்ட மாயர் தெய்வங்களுக்கு” இசைவாக இருந்தனர் என்று அது குறிப்பிட்டது.
புதிய கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்) வாதிடுகிறது: “புனிதர்களுக்கும் பூமியிலிருப்போருக்கும் இடையே நம்பகமான நெருக்கம் என்னும் நிலைநாட்டப்பட்ட ஒரு பிணைப்பு இருக்கிறது, . . . இயேசுவிடத்திலும் கடவுளிடத்திலும் உள்ள உறவிலிருந்து திசைதிருப்புவதற்கு மாறாக, அதனை மெருகேற்றக்கூடிய மற்றும் ஆழமாக்கக்கூடிய ஒரு பிணைப்பு அது.” ஆனால் தெளிவாகவே புறமதத்தின் ஒரு தடயமாக இருக்கும் ஒரு பிணைப்பு எவ்வாறு உண்மை கடவுளுடன் உள்ள ஒருவரின் உறவை ஆழமாக்கும்? அத்தகைய “புனிதர்களிடத்தில்” ஏறெடுக்கப்படும் ஜெபங்கள் எவ்வாறு கடவுளை உண்மையிலேயே பிரியப்படுத்தும்?
ஜெபமாலையின் தோற்றம்
மற்றொரு பிரபலமான வழக்கம் ஜெபமாலை உபயோகிப்பதை உட்படுத்துகிறது. டிக்ஸியோனாரியோ என்ஸிக்ளோப்பீடிகோ ஹிஸ்பானியோ-ஆமெரிக்கானோ (ஸ்பானிக்-அமெரிக்கன் என்ஸைக்ளோப்பீடிக் டிக்ஷ்னரி) “ஐம்பது அல்லது நூற்றைம்பது மணிகள் உள்ள சரம், பத்து பத்தாக மற்ற பெரியளவு மணிகளால் பிரிக்கப்பட்டு, முனைகள் ஒரு சிலுவையினால் இணைக்கப்பட்டிருக்கும், தற்போது மூன்று மணிகளுக்கு அப்புறம் சிலுவையினால் இணைக்கப்பட்டிருக்கும்” என்பதாக ஜெபமாலையை விவரிக்கிறது.
ஜெபமாலை எவ்வாறு உபயோகிக்கப்படுகிறது என்று விளக்குகையில், ஒரு கத்தோலிக்க பிரசுரம் சொல்கிறது: “நம் மீட்பின் சம்பவங்களைப்பற்றி வாய்விட்டும், மனதிலும் ஜெபிக்கும் ஒரு முறைதான் புனித ஜெபமாலை. அது பதினைந்து பத்தின் தொகுதிகளால் ஆனது. ஒவ்வொரு பத்தின் தொகுதியிலும் கர்த்தருடைய ஜெபமும், பத்து வாழ்க மரியே துதியும், ஒரு குளோரியா பாட்ரீயும் அடங்கியிருக்கும். ஒவ்வொரு பத்தின் தொகுதியிலும் ஒரு சம்பவம் தியானிக்கப்படும்.” சம்பவங்கள் என்பது ஒரு கத்தோலிக்கர் அறிந்திருக்கவேண்டிய கோட்பாடுகளும் அல்லது போதனைகளும் ஆகும், இங்கே சம்பவங்கள் என்பது இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையையும், பாடுகளையும், மரணத்தையும் குறிப்பிடுகின்றன.
தி உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா சொல்கிறது: “ஆரம்பத்தில் ஜெபமாலையைக்கொண்டு ஜெபிக்கும் முறைகள் கிறிஸ்தவத்தில் மத்திப காலங்களில்தான் துவங்கியது, ஆனால் 1400-களிலும் 1500-களிலும்தான் மிகப் பரவலாக ஆனது.” ஜெபமாலையின் உபயோகம் கத்தோலிக்க மதத்திற்கு மாத்திரம் உரியதா? இல்லை. டிக்ஸியோனாரியோ என்ஸிக்ளோப்பீடிகோ ஹிஸ்பானியோ-ஆமெரிக்கானோ குறிப்பிடுகிறது: “இஸ்லாமிலும், புத்தமத குருக்களிடத்திலும், புத்த வழிபாட்டிலும் இதேபோன்ற மணிகள் உபயோகத்தில் இருக்கின்றன.” உண்மையில், மதம் மற்றும் மதங்களின் கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்) குறிப்பிடுகிறது: “முகமதியர்கள் புத்த மதத்தினரிடமிருந்து ஜெபமாலையைப் பெற்றார்கள் என்றும் சிலுவைப் போர்களின் சமயத்தில் முகமதியர்களிடமிருந்து கிறிஸ்தவர்கள் பெற்றார்கள் என்றும் சொல்லப்படுகிறது.”
திரும்பத்திரும்ப பல ஜெபங்களைச் செய்யவேண்டியிருப்பதால், இந்த ஜெபமாலை வெறுமனே ஞாபகப்படுத்தும் உபகரணமாகச் சேவிக்கிறது என்பதாக சிலர் வாதிடுகிறார்கள். ஆனால், அதன் உபயோகத்தால் கடவுள் பிரியப்படுகிறாரா?
அத்தகைய வழக்கங்களின் பொருத்தமானத்தன்மையை அல்லது செல்லத்தக்கத்தன்மையைப் பற்றி நாம் ஊகிக்கவோ விவாதிக்கவோ தேவையில்லை. தம்முடைய சீஷர்கள் எவ்வாறு ஜெபிக்கவேண்டும் என்று போதிக்கும்படி விடுத்த வேண்டுகோளுக்கு இயேசு அதிகாரப்பூர்வமான பதிலை அளித்தார். அவர் சொன்னவை அறிவொளியூட்டும், ஒருவேளை சில வாசகர்களுக்கு ஆச்சரியமும் அளிக்கலாம்.
[பக்கம் 3-ன் படங்கள்]
கத்தோலிக்கர்கள் பொதுவாக ஜெபமாலை மணிகளை உபயோகிக்கிறார்கள். அவற்றின் தொடக்கம் என்ன?