“உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராகுங்கள்”
“உங்களை அழைத்த பரிசுத்தருக்கு ஒத்தபடி நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராகுங்கள்: நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்களென்று எழுதியிருக்கிறதே.”—1 பேதுரு 1:15, 16, தி.மொ.
1. பரிசுத்தராயிருக்கும்படி கிறிஸ்தவர்களைப் பேதுரு ஏன் ஊக்குவித்தார்?
ஏன் அப்போஸ்தலன் பேதுரு மேற்காணும் அறிவுரையைக் கொடுத்தார்? ஏனெனில் ஒவ்வொரு கிறிஸ்தவனும், தன் சிந்தனைகளையும் செயல்களையும் யெகோவாவின் பரிசுத்தத்திற்கு ஒத்திருக்கும்படி வைப்பதற்கு, அவற்றைக் காப்பதற்கானத் தேவையை அவர் கண்டார். ஆகவே, மேற்குறிப்பிடப்பட்ட வார்த்தைகளுக்கு முன்னால் இவ்வாறு சொன்னார்: “நீங்கள் உங்கள் மனதின் அரையைக் கட்டிக்கொண்டு, தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து; . . . நீங்கள் முன்னே உங்கள் அறியாமையினாலே கொண்டிருந்த இச்சைகளின்படி இனி நடவாமல் கீழ்ப்படிகிற பிள்ளைகளாயிரு”ங்கள்.—1 பேதுரு 1:13, 14.
2. சத்தியத்தை நாம் கற்றறிவதற்கு முன்பாக நம்முடைய இச்சைகள் ஏன் பரிசுத்தமற்றவையாக இருந்தன?
2 நம்முடைய முந்தின இச்சைகள் பரிசுத்தமற்றவையாக இருந்தன. ஏன்? ஏனெனில் நம்மில் பலர், கிறிஸ்தவ சத்தியத்தை ஏற்பதற்கு முன்னால் உலகப்பிரகாரமான நடத்தைப் போக்கைப் பின்பற்றினோம். பேதுரு பின்வருமாறு தெளிவாக எழுதினபோது இதை அறிந்திருந்தார்: “சென்ற வாழ்நாட் காலத்திலே நாம் புறஜாதிகளுடைய இஷ்டத்தின்படி நடந்துகொண்டது போதும்; அப்பொழுது நாம் காமவிகாரத்தையும் துர் இச்சைகளையும் நடப்பித்து, மதுபானம் பண்ணி, களியாட்டுச்செய்து, வெறிகொண்டு, அருவருப்பான விக்கிரகாராதனையைச் செய்துவந்தோம்.” நிச்சயமாகவே, நம் நவீன உலகத்திற்குத் தனிப்பட்டதாயுள்ள பரிசுத்தமற்ற செயல்களைப் பேதுரு குறிப்பிடவில்லை, ஏனெனில் அவை அப்போது அறியப்படவில்லை.—1 பேதுரு 4:3, 4.
3, 4. (அ) தவறான இச்சைகளை நாம் எவ்வாறு எதிர்த்து தடைசெய்யலாம்? (ஆ) கிறிஸ்தவர்கள் உணர்ச்சிவேகங்கள் அற்றவர்களாக இருக்க வேண்டுமா? விளக்குங்கள்.
3 இந்த இச்சைகள், மாம்சத்துக்கும், புலனுணர்வுகளுக்கும், மனக்கிளர்ச்சிகளுக்கும் கவர்ச்சியளிப்பவையாக இருப்பதைக் கவனித்தீர்களா? இவை நம்மைக் கட்டுப்படுத்தியாளுவதற்கு நாம் இடமளிக்கையில், நம்முடைய சிந்தனைகளும் செயல்களும் வெகு எளிதில் பரிசுத்தமற்றவையாகி விடுகின்றன. பகுத்தறியும் வல்லமை நம் செயல்களை அடக்கியாள அனுமதிப்பதற்கானத் தேவையை இது சித்தரித்துக் காட்டுகிறது. பவுல் இதை இம்முறையில் வெளிப்படுத்திக் கூறினார்: “ஆகையால் சகோதரரே, பகுத்தறியும் வல்லமையோடுகூடிய பரிசுத்த சேவையாகிய, பரிசுத்தமும் கடவுளால் ஏற்கத்தக்கதுமான ஜீவபலியாக உங்கள் சரீரங்களை அளிக்க வேண்டுமென்று கடவுளுடைய இரக்கங்களை முன்னிட்டு நான் உங்களை வருந்தி கேட்டுக்கொள்கிறேன்.”—ரோமர் 12:1, 2, NW.
4 ஒரு பரிசுத்த பலியைக் கடவுளுக்குச் செலுத்துவதற்கு, உணர்ச்சிவேகங்கள் அல்ல, பகுத்தறியும் வல்லமையே முதன்மையாயிருக்கும்படி நாம் விடவேண்டும். தங்கள் உணர்ச்சிகள் தங்கள் நடத்தையை அடக்கியாளுவதற்குத் தாங்கள் அனுமதித்ததன் காரணமாக எத்தனை பேர் ஒழுக்கக்கேட்டுக்குள் வீழ்ந்துவிட்டிருக்கின்றனர்! நம்முடைய உணர்ச்சிவேகங்களை வெளிப்படுத்தாமல் அடக்கிவைக்க வேண்டுமென்று அது பொருள்படுகிறதில்லை; மற்றபடி, யெகோவாவின் சேவையில் மகிழ்ச்சியை நாம் எவ்வாறு வெளிப்படுத்திக் காட்டக்கூடும்? எனினும், மாம்சத்தின் கிரியைகளுக்கு மாறாக, ஆவியின் கனியை நாம் பிறப்பிக்க வேண்டுமானால், அப்போது கிறிஸ்துவின் சிந்தனை முறைக்கு நம்முடைய மனதை மாற்ற வேண்டும்.—கலாத்தியர் 5:22, 23; பிலிப்பியர் 2:5.
பரிசுத்த வாழ்க்கை, பரிசுத்த விலைமதிப்பு
5. பரிசுத்தத்திற்கான அவசியத்தைப் பற்றி பேதுரு ஏன் உணர்வுள்ளவராக இருந்தார்?
5 கிறிஸ்தவ பரிசுத்தத்திற்கான அவசியத்தைப் பற்றி பேதுரு ஏன் அவ்வளவு அதிக உணர்வுள்ளவராக இருந்தார்? ஏனெனில், கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கத்தை மீட்பதற்குச் செலுத்தப்பட்டிருந்த அந்தப் பரிசுத்த விலையைப் பற்றி அவர் நன்றாய் அறிந்திருந்தார். அவர் இவ்வாறு எழுதினார்: “உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அநுசரித்துவந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல், குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே.” (1 பேதுரு 1:18, 19) ஆம், பரிசுத்தத்தின் மூலகாரணராகிய யெகோவா தேவன், தம்முடன் நல்ல உறவை உடையோராவதற்கு ஆட்களை அனுமதிக்கும் மீட்பின் கிரயத்தைச் செலுத்தும்படி, தம்முடைய ஒரே பேறான குமாரனாகிய, ‘கடவுளின் பரிசுத்தரை’ பூமிக்கு அனுப்பியிருந்தார்.—யோவான் 3:16; 6:69, தி.மொ.; யாத்திராகமம் 28:36; மத்தேயு 20:28.
6. (அ) பரிசுத்த நடத்தையைப் பின்பற்றுவது நமக்கு ஏன் எளிதாக இல்லை? (ஆ) நம்முடைய நடத்தையைப் பரிசுத்தமாக வைத்துக்கொள்ள எது நமக்கு உதவிசெய்யக்கூடும்?
6 எனினும், கறைபட்ட சாத்தானுடைய உலகத்தின் மத்தியில் இருக்கையில், பரிசுத்தமாக வாழ்க்கை நடத்துவது எளிதல்லவென்று நாம் தெரிந்துணர வேண்டும். சாத்தானுடைய காரிய ஒழுங்குமுறையில் பிழைத்திருப்பதற்கு முயற்சி செய்கிற உண்மையான கிறிஸ்தவர்களுக்கு அவன் கண்ணிகளை வைக்கிறான். (எபேசியர் 6:12; 1 தீமோத்தேயு 6:9, 10) உலகப்பிரகாரமான வேலை, குடும்ப எதிர்ப்பு, பள்ளியில் கேலிக்கு ஆட்படுதல் மற்றும் சகாக்களின் வற்புறுத்தல் ஆகியவற்றைப் போன்ற நெருக்கடிகளின் மத்தியில் பரிசுத்தத்தை விடாது காத்துவர ஒருவருக்கு உறுதியான ஆவிக்குரியத் தன்மை இன்றியமையாததாக உள்ளது. இது நம்முடைய பங்கில் தனிப்பட்ட படிப்பையும், கிறிஸ்தவ கூட்டங்களுக்குத் தவறாமல் வருவதையும் முக்கியமென அறிவுறுத்துகிறது. பவுல் தீமோத்தேயுவுக்கு இவ்வாறு அறிவுரை கூறினார்: “நீ கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தோடும் அன்போடும் என்னிடத்தில் கேட்டிருக்கிற ஆரோக்கியமான வசனங்களின் சட்டத்தைக் கைக்கொண்டிரு.” (2 தீமோத்தேயு 1:13) ஆரோக்கியம் தரும் அந்த வார்த்தைகளை நம்முடைய ராஜ்ய மன்றத்தில் கேட்கிறோம், நம்முடைய தனிப்பட்ட பைபிள் படிப்பில் அதை வாசிக்கிறோம். தினந்தோறும் பல்வேறு சூழ்நிலைகளின்போது நம்முடைய நடத்தையில் பரிசுத்தராயிருக்கும்படி அவை நமக்கு உதவிசெய்யக்கூடும்.
குடும்பத்தில் பரிசுத்தமான நடத்தை
7. பரிசுத்தம் நம் குடும்ப வாழ்க்கையை எவ்வாறு பாதிக்க வேண்டும்?
7 லேவியராகமம் 11:44-ஐ பேதுரு மேற்கோளாக எடுத்துக் குறிப்பிட்டபோது, கிரேக்கச் சொல்லாகிய ஹேகியாஸ் (haʹgi·os) என்பதைப் பயன்படுத்தினார். இது, “பாவத்திலிருந்து பிரித்துத் தனிப்படுத்தப்பட்டு இவ்வாறாக கடவுளுக்கென ஒதுக்கிவைக்கப்பட்டது, புனிதமானது” என்று பொருள்படுகிறது, (புதிய ஏற்பாடு சொற்களின் ஓர் விளக்க அகராதி [ஆங்கிலம்], டபிள்யூ. இ. வைன் எழுதியது) நம்முடைய கிறிஸ்தவ குடும்ப வாழ்க்கையில் இது நம்மை எவ்வாறு பாதிக்க வேண்டும்? “தேவன் அன்பாகவே இருக்கிறார்,” ஆதலால், நம்முடைய குடும்ப வாழ்க்கை அன்பின்மீது ஆதாரம் கொண்டிருக்க வேண்டும் என்று இது நிச்சயமாகவே அர்த்தங்கொள்ள வேண்டும். (1 யோவான் 4:8) தன்னலத் தியாக அன்பு, கணவன் மனைவிக்கிடையேயும் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமிடையேயும் உள்ள உறவுகளில் உராய்வைக் குறைக்கும் எண்ணெய்யாக உள்ளது.—1 கொரிந்தியர் 13:4-8; எபேசியர் 5:28, 29, 33; 6:4; கொலோசெயர் 3:18, 21.
8, 9. (அ) கிறிஸ்தவ வீட்டில் என்ன நிலைமை சிலசமயங்களில் தோன்றுகிறது? (ஆ) இந்தக் காரியத்தின்பேரில் என்ன நல்ல அறிவுரையை பைபிள் கொடுக்கிறது?
8 இத்தகைய அன்பை வெளிப்படுத்துவது ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் தன்னியல்பானதாக இருக்கும் என்று நாம் ஒருவேளை நினைக்கலாம். எனினும், கிறிஸ்தவ குடும்பங்கள் சிலவற்றில், அன்பு, அது மேலோங்கியிருக்க வேண்டிய அந்த அளவில் எப்போதும் இருப்பதில்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். அன்பு காட்டுவதாக ராஜ்ய மன்றத்தில் தோன்றலாம், ஆனால், வீட்டு சூழ்நிலையில் வெகு எளிதாக நம்முடைய பரிசுத்தம் குறைந்துவிடலாம். நம்முடைய மனைவி இன்னும் நம் கிறிஸ்தவ சகோதரி என்பதை, அல்லது கணவர், ராஜ்ய மன்றத்தில் மதிப்பு கொடுக்கப்பட வேண்டியவராகத் தோன்றின அதே சகோதரராக (ஒருவேளை ஓர் உதவி ஊழியராக அல்லது ஒரு மூப்பராக) இன்னும் இருக்கிறார் என்பதை நாம் அப்போது திடீரென்று மறந்துவிடக்கூடும். எரிச்சலடைந்து கோப விவாதங்கள் ஏற்படலாம். இரு வகை தராதரங்களுங்கூட நம்முடைய வாழ்க்கையில் மெள்ளத் தோன்றலாம். அது கிறிஸ்துவின் மாதிரியைப் போன்ற கணவன் மனைவி உறவாக இனிமேலும் இராமல், சண்டையிடும் வெறும் ஓர் ஆண் பெண் உறவாகிவிடுகிறது. வீட்டில் பரிசுத்த சூழ்நிலை இருக்க வேண்டுமென்பதை அவர்கள் மறந்துவிடுகின்றனர். உலகப்பிரகாரமான ஆட்களைப்போல் அவர்கள் பேசத் தொடங்கக்கூடும். சிடுசிடுப்பான, புண்படுத்தும் வசைச் சொல் எவ்வளவு எளிதாக வாயினின்று அப்போது வெளிப்படக்கூடியதாக இருக்கிறது!—நீதிமொழிகள் 12:18; அப்போஸ்தலர் 15:37-39-ஐ ஒப்பிடுக.
9 எனினும், பவுல் இவ்வாறு அறிவுரை கூறுகிறார்: “கெட்ட வார்த்தை [கிரேக்கில், லோகாஸ் சாப்ராஸ், (loʹgos sa·prosʹ) “தூய்மை கெடுக்கும் பேச்சு,” ஆகையால் பரிசுத்தமற்றது] ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள்.” அது, பிள்ளைகள் உட்பட, வீட்டில் கேட்டுக்கொண்டிருக்கிற எல்லாரையும் குறிக்கிறது.—எபேசியர் 4:29; யாக்கோபு 3:8-10.
10. பரிசுத்தத்தின்பேரில் கொடுக்கப்பட்ட அறிவுரை பிள்ளைகளுக்கு எவ்வாறு பொருந்துகிறது?
10 பரிசுத்தத்தின்பேரில் கொடுக்கப்பட்ட இந்த அறிவுரை, கிறிஸ்தவ குடும்பத்திலுள்ள பிள்ளைகளுக்கும் சரிசமமாகப் பொருந்துகிறது. பள்ளியிலிருந்து வீட்டுக்கு வந்து, தங்கள் வயதொத்த, இவ்வுலகத்தைச் சார்ந்த பிள்ளைகளின் கலகத்தனமான மற்றும் அவமதிப்பான பேச்சைப்போல் பேசத்தொடங்குவது அவர்களுக்கு எவ்வளவு எளிதாயுள்ளது! பிள்ளைகளே, யெகோவாவின் தீர்க்கதரிசியை நிந்தித்துக் கேலிசெய்த, நற்பண்பற்ற மனப்பான்மையைக் காட்டிய பையன்களைப் போன்றே இன்றிருப்போரான, கெட்ட வார்த்தைகளையும் தூஷணமானவற்றையும் பேசுபவர்களால் கவர்ந்திழுக்கப்படாதீர்கள். (2 இராஜாக்கள் 2:23, 24) மதிப்புக்குரிய வார்த்தைகளைப் பயன்படுத்துவதற்கு மட்டுக்கு மீறிய சோம்பலுள்ள அல்லது பிறருணர்ச்சி கருதாத ஆட்களின் பண்பற்ற அசுத்தமான முரட்டுப் பேச்சால் உங்கள் பேச்சு தூய்மைக்கேடு செய்யப்படக் கூடாது. கிறிஸ்தவர்களாக, நம்முடைய பேச்சு பரிசுத்தமானதாயும், மகிழ்வளிப்பதாயும், கட்டியெழுப்புவதாயும், தயவானதாயும், “உப்பால் சாரமேறினதாயும்” இருக்க வேண்டும். அது நம்மை மற்ற ஆட்களிலிருந்து வேறுபட்டவர்களாக வித்தியாசப்படுத்திக் காட்ட வேண்டும்.—கொலோசெயர் 3:8-10; 4:6.
பரிசுத்தமும், அவிசுவாசிகளாயிருக்கும் நம் குடும்ப உறுப்பினரும்
11. பரிசுத்தராயிருப்பது ஏன் மற்றவர்களைப் பார்க்கிலும் நேர்மையுள்ளவர்கள் போல் இருப்பதைக் குறிக்கிறதில்லை?
11 பரிசுத்தத்தை நடைமுறையில் பழக்கமாய் அனுசரித்து வருவதற்கு நாம் உள்ளப்பூர்வமாய் முயற்சி செய்கையில், நாம் மற்றவர்களைப் பார்க்கிலும் அதிக மேம்பட்டவர்களாயும் நேர்மையுள்ளவர்களாயும் இருப்பதுபோல் காட்டிக்கொள்ளக்கூடாது. முக்கியமாய் அவிசுவாசிகளாயிருக்கும் குடும்ப உறுப்பினரோடு கொள்ளும் தொடர்பில் அவ்வாறு நடந்துகொள்ளக்கூடாது. நன்மை பயக்கும் முறையில் நாம் வேறுபட்டவர்களாயிருக்கிறோம் என்றும், இயேசுவின் உவமையில் குறிப்பிடப்பட்ட நல்ல சமாரியனைப்போல், அன்பும் இரக்கமும் காட்டுவது எப்படியென நமக்குத் தெரியும் என்றும் அவர்கள் காணும்படியாவது, நம்முடைய தயவான கிறிஸ்தவ நடத்தை அவர்களுக்கு உதவிசெய்ய வேண்டும்.—லூக்கா 10:30-37.
12. கிறிஸ்தவ மணத்துணைவர்கள் எவ்வாறு தங்கள் துணைவர்களுக்குச் சத்தியத்தை மேலுமதிகக் கவர்ச்சியுள்ளதாக்கலாம்?
12 கிறிஸ்தவ மனைவிமாருக்கு, பேதுரு பின்வருமாறு எழுதினபோது, அவிசுவாசிகளான நம் குடும்ப உறுப்பினரிடமாகச் சரியான மனப்பான்மையை உடையவர்களாய் இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை அறிவுறுத்தினார்: “அந்தப்படி மனைவிகளே உங்கள் சொந்தப் புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; அப்பொழுது அவர்களில் யாராவது திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாயிருந்தால், பயபக்தியோடுகூடிய உங்கள் கற்புள்ள நடக்கையை அவர்கள் பார்த்து, போதனையின்றி, மனைவிகளின் நடக்கையினாலேயே ஆதாயப்படுத்திக்கொள்ளப்படுவார்கள்.” ஒரு கிறிஸ்தவ மனைவி (அல்லது கணவன்) தன் நடத்தை கற்புள்ளதாயும், அன்பாதரவுள்ளதாயும், மரியாதைக்குரியதாயும் இருந்தால், அவிசுவாசியான தன் மணத்துணைவருக்கு சத்தியத்தை அதிக கவர்ச்சியுடையதாக்கலாம். அவிசுவாசியான மணத்துணைவர் கவனியாமல் விடப்படாதபடி தேவராஜ்ய நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட கால அட்டவணையில் ஏற்றவாறு மாற்றம் செய்துகொள்வதற்கு வழிவகைகள் இருக்க வேண்டும் என்பதை இது குறிக்கிறது.a—1 பேதுரு 3:1, 2.
13. அவிசுவாசிகளான கணவர்கள் சத்தியத்தை மதித்துணரும்படி மூப்பர்களும் உதவி ஊழியர்களும் சிலசமயங்களில் எவ்வாறு உதவிசெய்யலாம்?
13 அவிசுவாசியாயிருக்கும் அந்தக் கணவரிடம், உரையாடி பழகும் அளவுக்கு அறிமுகமாவதன்மூலம் மூப்பர்களும் உதவி ஊழியர்களும் அத்தகையோருக்கு உதவி செய்யலாம். இவ்வாறு, சாட்சிகள், பைபிளுக்குப் புறம்பான மற்ற விஷயங்கள் உட்பட, விரிவான பல்வேறு அக்கறைகளையுடைய இயல்பான, நற்பாங்குடைய ஆட்கள் என்பதை அவர் காணலாம். ஒரு சந்தர்ப்பத்தில், ஒரு கணவரின் மீன்பிடிக்கும் பொழுதுபோக்கில் மூப்பர் ஒருவர் அக்கறை காட்டினார். அது தொடக்க இடையூறை மேற்கொண்டு, நட்புறவைத் தொடங்குவதற்குப் போதுமானதாக இருந்தது. அந்தக் கணவர் முடிவில் முழுக்காட்டப்பட்ட சகோதரரானார். மற்றொருவருடைய காரியத்தில், அவிசுவாசியாயிருந்த ஒரு கணவர் கானரி பறவைகளில் கவர்ச்சியுடையவராக இருந்தார். மூப்பர்கள் சோர்வடையவில்லை. அவர்களில் ஒருவர் அந்தப் பறவைகளைப் பற்றி ஆராய்ந்து படித்தார், இவ்வாறு அடுத்த தடவை அந்த மனிதரை அவர் சந்தித்தபோது அந்தக் கணவரின் விருப்பமான விஷயத்தின்பேரில் ஓர் உரையாடலைத் தொடங்க முடிந்தது! ஆகையால், பரிசுத்தமாயிருப்பது, விட்டுக்கொடுக்காதிருப்பதை அல்லது குறுகிய மனப்பான்மையுடையவராக இருப்பதைக் குறிக்கிறதில்லை.—1 கொரிந்தியர் 9:20-23.
சபையில் நாம் எவ்வாறு பரிசுத்தமாக இருக்கலாம்?
14. (அ) சபைக்கு மறைகேடு செய்வதற்கான சாத்தானின் வழிவகைகளில் ஒன்று என்ன? (ஆ) சாத்தானின் கண்ணியை நாம் எவ்வாறு எதிர்த்து மேற்கொள்ளலாம்?
14 பிசாசாகிய சாத்தான் பொய்ப் பழிதூற்றுபவன், எப்படியெனில், பிசாசு என்பதற்கான கிரேக்கப் பெயராகிய டயபோலஸ், (di·aʹbo·los) “குற்றம் சுமத்துபவன்” அல்லது “பழிதூற்றுபவன்” என்று பொருள்படுகிறது. பழிதூற்றுவது அவனுடைய தனிச்சிறப்பு வாய்ந்த செயல்களில் ஒன்றாக இருக்கிறது, இதை சபையில் பயன்படுத்த அவன் முயற்சி செய்கிறான். அவனுடைய தனி விருப்பத்துக்குகந்த முறையானது வீண்பேச்சாகும். இந்தப் பரிசுத்தமற்ற நடத்தையில் அவனால் ஏமாற்றப்பட்டவர்களாக இருக்க நாம் நம்மை அனுமதிக்கிறோமா? அது எவ்வாறு ஏற்படலாம்? வீண்பேச்சைத் தொடங்குவதன் மூலம், அதைத் திரும்ப எடுத்துச் சொல்வதன் மூலம், அல்லது அதற்குச் செவிகொடுத்துக் கேட்பதன் மூலம் ஏற்படலாம். ஞானமுள்ள நீதிமொழி இவ்வாறு கூறுகிறது: “மாறுபாடுள்ளவன் சண்டையைக் கிளப்பிவிடுகிறான்; கோள் சொல்லுகிறவன் பிராண சிநேகிதரையும் பிரித்துவிடுகிறான்.” (நீதிமொழிகள் 16:28) வீண்பேச்சுக்கும் பழிதூற்றுவதற்கும் மாற்று மருந்து என்ன? நம்முடைய பேச்சு, எப்போதும் கட்டியெழுப்புவதாயும் அன்பில் ஆதாரங்கொண்டதாயும் இருக்கும்படி நாம் நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும். நம்முடைய சகோதரரில், குற்றமாகக் கருதுபவற்றிற்காகத் தேடுவதைப் பார்க்கிலும் நற்பண்புக்காக நோக்கினால், நம்முடைய உரையாடல் எப்போதும் இன்பமானதாயும் ஆவிக்குரியதாயும் இருக்கும். குற்றங்குறை கூறுவது எளிது என்பதை நினைவில் வையுங்கள். மேலும், மற்றவர்களைப் பற்றி உங்களிடம் வீண்பேச்சு பேசும் அந்த ஆள், உங்களைப் பற்றியும் மற்றவர்களிடம் வீண்பேச்சு பேசலாம்!—1 தீமோத்தேயு 5:13; தீத்து 2:3.
15. சபையிலுள்ள எல்லாரையும் பரிசுத்தமாய் வைப்பதற்கு, கிறிஸ்துவினுடையதைப்போன்ற என்ன பண்புகள் உதவிசெய்யும்?
15 சபையைப் பரிசுத்தமானதாக வைத்துவருவதற்கு, நாம் எல்லாரும் கிறிஸ்துவின் மனதை உடையோராக இருக்க வேண்டும். அவருடைய முதன்மையான பண்பு அன்பு என்று நாம் அறிந்திருக்கிறோம். இதனால், கிறிஸ்துவைப்போல் இரக்கமுள்ளவர்களாக இருக்கும்படி கொலோசெயருக்குப் பவுல் அறிவுரை கூறினார்: “ஆகையால், நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு; . . . ஒருவருக்கொருவர் மன்னியுங்கள் . . . இவை எல்லாவற்றின்மேலும், பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.” பின்பு இதை மேலும் கூட்டினார்: “கிறிஸ்துவின் சமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது.” (தி.மொ.) நிச்சயமாகவே இந்த மன்னிக்கும் மனப்பான்மையுடன், சபையின் ஒற்றுமையையும் பரிசுத்தத்தையும் நாம் காத்து வரலாம்.—கொலோசேயர் 3:12-15.
நம் சுற்றுப்புறத்தில் நம்முடைய பரிசுத்தம் காட்டப்படுகிறதா?
16. நம்முடைய பரிசுத்த வணக்கம் ஏன் சந்தோஷமான வணக்கமாக இருக்க வேண்டும்?
16 நம்முடைய சுற்றுப்புறத்தில் இருப்போரைப் பற்றியதென்ன? அவர்கள் நம்மை எவ்வாறு கருதுகிறார்கள்? சத்தியத்தின் மகிழ்ச்சியை நாம் பரவச் செய்கிறோமா, அல்லது அதை ஒரு பாரம்போல் தோன்ற செய்கிறோமா? யெகோவாதாமே பரிசுத்தராக இருப்பதுபோல் நாம் பரிசுத்தராக இருந்தால், அப்போது அது நம்முடைய பேச்சிலும் நடத்தையிலும் தெளிவாகத் தெரிய வேண்டும். நம்முடைய பரிசுத்த வணக்கம் சந்தோஷமான வணக்கம் என்பது தெளிவாயிருக்க வேண்டும். அது ஏன்? ஏனெனில் நம்முடைய கடவுளாகிய யெகோவா சந்தோஷமுள்ள கடவுள், தம்மை வணங்குவோரும் மகிழ்ச்சியுள்ளோராக இருக்க வேண்டுமென்று விரும்புகிறார். இவ்வாறு, பூர்வ காலங்களிலிருந்த யெகோவாவின் ஜனங்களைக் குறித்து சங்கீதக்காரன் பின்வருமாறு சொல்ல முடிந்தது: “யெகோவாவைக் கடவுளாகக் கொண்டிருக்கிற ஜனம் சந்தோஷமுள்ளது!” அந்தச் சந்தோஷத்தை நாம் பிரதிபலிக்கிறோமா? ராஜ்ய மன்றத்திலும் மாநாடுகளிலும் யெகோவாவின் ஜனங்களோடு இருப்பதில் நம்முடைய பிள்ளைகளுங்கூட மனத்திருப்தியைக் காட்டுகிறார்களா?—சங்கீதம் 89:15, 16; 144:15ஆ, NW.
17. சமநிலைப்பட்ட பரிசுத்தத்தை காட்டுவதற்கு, நடைமுறையில் நாம் என்ன செய்யலாம்?
17 ஒத்துழைக்கும் நம் மனப்பான்மையின் மூலமும் அயலாருக்குக் காட்டும் தயவின் மூலமும்கூட நம் சமநிலைப்பட்ட பரிசுத்தத்தை காட்டலாம். சில சமயங்களில், ஒருவேளை சுற்றுப்புறத்தைச் சுத்தம் செய்வதற்கு அல்லது, சில நாடுகளில் இருப்பதுபோல், பாதைகளை அல்லது நெடுஞ்சாலைகளைச் செப்பனிடுவதற்கு, சுற்றுப்புறத்தார் ஒன்றாக ஒத்துழைப்பது அவசியமாயிருக்கிறது. இந்த விஷயத்தில் நம்முடைய தோட்டங்களை, முற்றங்களை, அல்லது மற்றவரின் உடைமையை நாம் எவ்வாறு கவனித்துவருகிறோம் என்பதிலும் நம் பரிசுத்தத்தன்மை வெளிப்படலாம். குப்பைகள் சுற்றிலும் கிடப்பதற்கு அல்லது முற்றம் அழுக்கடைந்து அலங்கோலமாக இருப்பதற்கு நாம் விட்டிருப்போமானால், பழைய பழுதடைந்துவிட்ட வண்டிகளுங்கூட ஒருவேளை எல்லாரும் காணக்கூடிய இடத்தில் கிடக்கும்படி விட்டிருந்தால், நம் சுற்றுப்புறத்தாரை மதிப்புடன் நடத்துகிறோமென்று நாம் சொல்ல முடியுமா?—வெளிப்படுத்துதல் 11:18.
வேலை செய்யுமிடத்திலும் பள்ளியிலும் பரிசுத்தம்
18. (அ) எது இன்று கிறிஸ்தவர்களுக்கு இடர்ப்பாடான நிலைமையாக உள்ளது? (ஆ) எவ்வாறு நாம் இந்த உலகத்திலிருந்து வேறுபட்டவர்களாக இருக்கலாம்?
18 பரிசுத்தமற்ற கொரிந்து பட்டணத்திலிருந்த கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “விபசாரக்காரரோடே கலந்திருக்கக்கூடாதென்று நிருபத்தில் உங்களுக்கு எழுதினேன். ஆனாலும், இவ்வுலகத்திலுள்ள விபசாரக்காரர், பொருளாசைக்காரர், கொள்ளைக்காரர், விக்கிரகாராதனைக்காரர் இவர்களோடு எவ்வளவும் கலந்திருக்கக்கூடாதென்று நான் எழுதவில்லை; அப்படியானால் நீங்கள் உலகத்தைவிட்டு நீங்கிப்போகவேண்டியதாயிருக்குமே.” (1 கொரிந்தியர் 5:9, 10) இது கிறிஸ்தவர்களுக்கு இடர்ப்பாடான நிலைமையாக உள்ளது, ஒழுக்கக்கேடான அல்லது ஒழுக்க உணர்வில்லாத ஆட்களோடு அவர்கள் தினந்தோறும் கலந்திருக்க வேண்டியதாக உள்ளது. முக்கியமாய், பாலியல் தொல்லையும், ஊழலும், நேர்மையில்லாமையும் ஊக்குவிக்கப்படுகிற அல்லது குற்றமாக கருதப்படாத கலாச்சாரங்களில், இது உத்தமத்தின் பெரும் சோதனையாக உள்ளது. இந்தச் சூழமைவில் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கேற்ப “இயல்பாய்த்” தோன்றுவதற்கு, நம்முடைய தராதரங்களை நாம் தாழ்த்திக்கொள்ள முடியாது. மாறாக, நம்முடைய தயவான ஆனால் வேறுபட்ட கிறிஸ்தவ நடத்தை, தெளிந்துணர்வுள்ள ஆட்களுக்கு, தங்கள் ஆவிக்குரியத் தேவையை உணர்ந்து, மேம்பட்ட ஒன்றுக்காகத் தேடுவோருக்கு, முனைப்பாய்த் தோன்றிநிற்கும்படி நம்மைச் செய்விக்க வேண்டும்.—மத்தேயு 5:3, NW; 1 பேதுரு 3:16, 17.
19. (அ) பிள்ளைகளே, பள்ளியில் உங்களுக்கு என்ன சோதனைகள் இருக்கின்றன? (ஆ) தங்கள் பிள்ளைகளுக்கும் அவர்களுடைய பரிசுத்த நடத்தைக்கும் ஆதரவளிப்பதற்குப் பெற்றோர் என்ன செய்யலாம்?
19 அவ்வாறே, பள்ளியில் நம்முடைய பிள்ளைகளுக்குப் பல சோதனைகள் எதிர்ப்படுகின்றன. பெற்றோரே, உங்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கு நீங்கள் சென்று வருகிறீர்களா? அங்கு என்ன வகையான சூழ்நிலை இருந்துவருகிறதென்று உங்களுக்குத் தெரியுமா? ஆசிரியர்களோடு உங்களுக்குத் தொடர்பு இருக்கிறதா? இந்தக் கேள்விகள் ஏன் முக்கியமானவை? ஏனெனில் இந்த உலகத்தின் நகர்ப்புற பகுதிகள் பலவற்றில் பள்ளிகள், வன்முறைச் செயல்கள், போதைப்பொருட்கள், பாலின ஈடுபாடு ஆகியவற்றிற்குரிய காடுகளாகிவிட்டிருக்கின்றன. உங்கள் பிள்ளைகள், தங்கள் பெற்றோரின் முழு பரிவிரக்க ஆதரவைப் பெறுவதில்லை என்றால், அவர்கள் எப்படி தங்கள் உத்தமத்தையும் தங்கள் நடத்தையையும் பரிசுத்தமாகக் காத்துவர முடியும்? சரியாகவே பவுல் பெற்றோருக்கு இவ்வாறு அறிவுரை கூறினார்: “பிதாக்களே, உங்கள் பிள்ளைகள் மனந்தளர்ந்துபோகாதபடி அவர்களுக்கு எரிச்சலுண்டாக்காதிருங்கள்.” (கொலோசேயர் 3:21, தி.மொ.) பிள்ளைகளின் அன்றாட பிரச்சினைகளையும் சோதனைகளையும் புரிந்துகொள்ளத் தவறுவது, அவர்களை மனந்தளர்ந்து போகச் செய்யும் ஒரு வழியாக உள்ளது. பள்ளியில் ஏற்படும் சோதனைகளை மேற்கொள்வதற்கு ஆயத்தம் செய்வது கிறிஸ்தவ வீட்டின் ஆவிக்குரிய சூழ்நிலையில் தொடங்குகிறது.—உபாகமம் 6:6-9; நீதிமொழிகள் 22:6.
20. பரிசுத்தம் ஏன் நம்மெல்லாருக்கும் இன்றியமையாதது?
20 முடிவாக, ஏன் நம்மெல்லாருக்கும் பரிசுத்தம் இன்றியமையாதது? ஏனெனில் அது, சாத்தானுடைய உலகத்தின் தாக்குதல்களுக்கும் சிந்தனைக்கும் எதிரான ஒரு பாதுகாப்பாகச் சேவிக்கிறது. அது இப்போதும் ஆசீர்வாதமாக இருக்கிறது, எதிர்காலத்திலும் ஆசீர்வாதமாயிருக்கும். நீதியுள்ள புதிய உலகத்தில் உண்மையான வாழ்க்கையாயிருக்கும் அந்த வாழ்க்கையை நமக்கு உத்தரவாதமளிக்க அது உதவிசெய்கிறது. இரக்கமற்ற மதவெறியராக அல்ல—சமநிலைப்பட்ட, அணுகக்கூடிய, பேசிப் பழகக்கூடிய கிறிஸ்தவர்களாக இருக்கும்படி அது நமக்கு உதவிசெய்கிறது. சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால், அது நம்மைக் கிறிஸ்துவைப் போன்றவர்களாக்குகிறது.—1 தீமோத்தேயு 6:19.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ பரிசுத்தத்தின்பேரில் கிறிஸ்தவர்களுக்கு அறிவுரை கொடுப்பதை அவசியமாக பேதுரு ஏன் கண்டார்?
◻ பரிசுத்த வாழ்க்கை நடத்துவது ஏன் எளிதல்ல?
◻ குடும்பத்தில் பரிசுத்தத்தை முன்னேற்றுவிப்பதற்கு நாம் எல்லாரும் என்ன செய்யலாம்?
◻ சபை பரிசுத்தமாக நிலைத்திருப்பதற்கு, பரிசுத்தமற்ற என்ன நடத்தையை நாம் தவிர்க்க வேண்டும்?
◻ வேலை செய்யுமிடத்திலும் பள்ளியிலும் நாம் எவ்வாறு பரிசுத்தராக நிலைத்திருக்கலாம்?
[அடிக்குறிப்பு]
a அவிசுவாசிகளான மணத்துணைவர்களுடன் சாதுரியமான உறவுகளின்பேரில் மேலுமான தகவலுக்கு, காவற்கோபுரம் (ஆங்கிலம்) ஆகஸ்ட் 15, 1990 பிரதியின், பக்கங்கள் 20-2-ல் “உங்கள் மணத்துணையைக் கவனியாதுவிடாதீர்கள்!” என்பதையும் நவம்பர் 1, 1988 (ஆங்கிலம்) பிரதியில் பக்கங்கள் 24-5, பாராக்கள் 20-2-ஐயும் காண்க.
[பக்கம் 16,17-ன் படங்கள்]
யெகோவாவின் சாட்சிகளாக, கடவுளைச் சேவிப்பதிலும்
மற்ற நடவடிக்கைகளிலும் நாம்
மகிழ்ச்சியுள்ளவர்களாக இருக்க வேண்டும்