ராஜ்ய அறிவிப்பாளர் அறிக்கை
கியூபாவில் ‘பெரிதும் வேலைக்கு அநுகூலமுமான வாசல் திறக்கப்பட்டிருக்கிறது’
அப்போஸ்தலனாகிய பவுல் கடவுளுடைய ராஜ்ய நற்செய்தியின் ஒரு தலைசிறந்த பிரசங்கிப்பாளராக இருந்தார். கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கத்திற்கு நித்திய ஜீவனுக்கான சிருஷ்டிகரின் வாக்குறுதிகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் அவர் பயன்படுத்திக்கொண்டார். பண்டைய எபேசுவுக்கு விஜயம் செய்தபோது, இன்னும் அநேக ஆட்களுக்கு உதவிசெய்ய தன்னை அனுமதிக்கும் ஒரு புதிய சூழமைவை பவுல் கண்டார். அவர் கூறியதாவது: “எபேசுவில் இருப்பேன். இங்கே பெரிதும் அநுகூலமுமான வாசல் எனக்குத் திறக்கப்பட்டிருக்கிறது.”—1 கொரிந்தியர் 16:8, 9, திருத்திய மொழிபெயர்ப்பு.
கியூபாவில் இருக்கும் யெகோவாவின் சாட்சிகளும் ஒரு புதிய சூழமைவில் தாங்கள் இருப்பதை உணருகிறார்கள். அதிகாரப்பூர்வமாக இன்னும் பதிவுசெய்யப்படாவிட்டாலும், சாட்சிகளால் தம் தேச மக்களோடு தங்களுடைய பைபிள் நம்பிக்கைகளை இப்போது வெளிப்படையாகவே பகிர்ந்துகொள்ள முடிகிறது. பல்வேறு மதத்தொகுதிகளைத் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிப்பதில் உள்ளார்ந்த ஆர்வத்தைச் சமீபத்தில் கியூபா அரசாங்கம் வெளிப்படுத்தியுள்ளது. இப்போது கியூபா அரசாங்கத்துடன் ஒரு முன்னேற்றுவிக்கப்பட்ட உறவை அனுபவித்து மகிழும் ஒரு மதத் தொகுதியினராக யெகோவாவின் சாட்சிகளை ஜனாதிபதி காஸ்ட்ரோ பொதுப்படையாக குறிப்பிட்டார்.
சாட்சிகளுக்கு இந்தப் புதிய சூழமைவு ‘பெரிதும் வேலைக்கு அநுகூலமுமான வாசலை திறந்து வைக்கிறது.’ உதாரணத்திற்கு, சமீபத்தில் யெகோவாவின் சாட்சிகள் கியூபாவில் ஒரு கிளை அலுவலகத்தைத் திறந்துவைத்தார்கள், அது அந்த நாட்டில் அவர்களது பிரசங்க வேலையை ஒருங்கிணைப்பதில் அவர்களுக்கு உதவிசெய்கிறது. 65,000-க்கும் மேற்பட்ட சாட்சிகள், பைபிளை படிப்பதற்கும் புரிந்துகொள்வதற்கும் மக்களுக்கு உதவுகிறார்கள். அவர்கள் காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! போன்ற பைபிள் பிரசுரங்களைப் பயன்படுத்துகிறார்கள். நேர்மையின்பக்கம் மனச்சாய்வுள்ள கியூபா நாட்டவர் பலர் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிள் படிப்பதிலிருந்து பயனடைந்து வருகிறார்கள்.
சாட்சிகள், அந்தத் தீவெங்கும் சிறு தொகுதிகளாக ஒழுங்காக கூட்டங்களையும் நடத்தி வருகிறார்கள். சில நேரங்களில் சுமார் 150 பேர் அடங்கிய தொகுதிகளாக பெரிய அசெம்பிளிகளை நடத்தக்கூடிய சிலாக்கியத்தையும்கூட மகிழ்ந்து அனுபவிக்கிறார்கள். கியூபா அதிகாரிகளிடமிருந்து பெற்றுக்கொண்ட அனுமதியை அவர்கள் உண்மையில் போற்றுகிறார்கள், அது அவர்களுக்குத் தங்கள் ஆவிக்குரிய சகோதர சகோதரிகளோடு கூடிவரவும், கடவுளுக்குத் துதிகளைப் பாடவும், ஒன்றுசேர்ந்து ஜெபிக்கவும் வாய்ப்பை அளிக்கிறது.
சமீபத்தில் “தேவ பயம்” மாவட்ட நாடு, மூன்று வார இறுதிகளுக்குள்ளாக 1,000-க்கும் மேற்பட்ட தடவை நடைபெற்றது. ஒவ்வொரு மாநாட்டிலும் “ஒழுங்கு, கட்டுப்பாடு, அமைதி” வெளிப்படையாகத் தெரிந்தன என்று அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. சாட்சிகளை இந்த விஷயத்தில் அதிகாரிகள் பாராட்டினார்கள்.
உலகெங்கிலும் இருக்கும் உண்மை கிறிஸ்தவர்கள், கடவுளுடைய ராஜ்ய நற்செய்தியைப் பிரசங்கிக்க தங்களுக்கு கடவுளால் கொடுக்கப்பட்ட கட்டளையை நிறைவேற்ற கடினமாக முயற்சிக்கிறார்கள். அதேநேரத்தில், அரசாங்க அதிகாரிகளோடு அவர்கள் சமாதானமான உறவைக் காத்துக்கொள்ளவும் கடினமாக முயற்சிக்கிறார்கள். (தீத்து 3:1) அப்போஸ்தலன் பவுலின் அறிவுரையை யெகோவாவின் சாட்சிகள் பின்பற்றுகிறார்கள், அவர் எழுதினார்: “நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்; நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்ய வேண்டும்.”—1 தீமோத்தேயு 2:1, 2.