அவர்கள் யெகோவாவின் சித்தத்தைச் செய்தனர்
பெந்தெகொஸ்தே நாளன்று பேதுரு பிரசங்கிக்கிறார்
அது பொ.ச. 33-ஆம் ஆண்டின் மிதமான இளவேனிற்கால காலை வேளையாயிருந்தது. அங்கே கிளர்ச்சி எங்கும் ஊடுருவிப் பரவியிருந்தது! யூதர்களும் யூத மதத்துக்கு மாறியவர்களும் அடங்கிய ஒரு ஆரவாரமிக்க ஜனக்கூட்டத்தார் எருசலேமின் தெருக்களில் திரளாய் இருந்தனர். அவர்கள் எலாம், மெசொப்பொத்தாமியா, கப்பத்தோக்கியா, எகிப்து, ரோம் போன்ற இடங்களிலிருந்து வந்திருந்தனர். அவர்கள் அவரவர் தேசத்துக்குரிய உடைகள் உடுத்தியிருந்ததை கண்டபோதும், பல்வேறு மொழிகளை அவர்கள் பேசியதைக் கேட்டபோதும் அது எவ்வளவு கவர்ச்சியூட்டுவதாய் இருந்தது! இந்த விசேஷ நிகழ்ச்சிக்கு ஆஜராயிருப்பதற்காக சிலர் ஏறக்குறைய இரண்டாயிரம் கிலோமீட்டர் பயணம் செய்திருந்தனர். அது என்னவாயிருந்தது? பெந்தெகொஸ்தே—வாற்கோதுமை அறுவடையின் முடிவைக் குறிக்கும் மகிழ்ச்சிமிக்க ஒரு யூத பண்டிகை.—லேவியராகமம் 23:15-21.
ஆலய பலிபீடத்தின் மீது செலுத்தப்பட்ட பலிகளிலிருந்து புகை எழும்பிக்கொண்டிருந்தது, லேவியர்கள் ஹல்லேல் பாடினார்கள் (சங்கீதம் 113 முதல் 118 வரை). காலை 9 மணிக்கு சற்றுமுன்பு திடுக்கிடச்செய்யும் ஏதோவொன்று நிகழ்ந்தது. அப்போது வானத்திலிருந்து, “பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல” உண்டாயிற்று. அது இயேசு கிறிஸ்துவின் சுமார் 120 சீஷர்கள் கூடியிருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. வேதப்பூர்வமான பதிவு இவ்வாறு சொல்கிறது: “அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்.”—அப்போஸ்தலர் 2:1-4.
ஒவ்வொருவரும் தங்கள் சொந்த மொழியைக் கேட்கின்றனர்
விரைவில் அநேக சீஷர்கள் அந்த வீட்டிலிருந்து வெளியேறிக்கொண்டிருந்தனர். வியப்படையும் விதத்தில், ஜனக்கூட்டத்தாரின் பல்வேறு மொழிகளில் அவர்களால் பேசமுடிந்தது! பெர்சியாவிலிருந்து வருகை தந்தவரும் எகிப்து நாட்டவரும் தங்கள் சொந்த மொழிகளை கலிலேயர் பேசியதைக் கேட்டபோது எவ்வளவு ஆச்சரியமாய் இருந்திருக்கும் என்பதை கற்பனை செய்துபாருங்கள். ஜனக்கூட்டத்தார் பயபக்தியோடுகூடிய வியப்பால் மூழ்கியிருந்தது புரிந்துகொள்ளத்தக்கதே. “இதென்னமாய் முடியுமோ?” என்று அவர்கள் கேட்டனர். சிலர் சீஷர்களை பரியாசம்பண்ணி இவ்வாறு கூறினர்: ‘இவர்கள் மதுபானத்தினால் நிறைந்திருக்கிறார்கள்.’—அப்போஸ்தலர் 2:12, 13.
அடுத்து அப்போஸ்தலனாகிய பேதுரு எழுந்து நின்று ஜனக்கூட்டத்தாரிடம் பேசினார். மொழிகளைப் பேசும் இந்த அற்புதமான வரம் தீர்க்கதரிசியாகிய யோவேலின் மூலம் கடவுள் கொடுத்த வாக்குறுதியின் நிறைவேற்றமாய் இருந்தது: “நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்.” (அப்போஸ்தலர் 2:14-21; யோவேல் 2:28-32) ஆம், கடவுள் அப்போதுதான் தம் பரிசுத்த ஆவியை இயேசுவின் சீஷர்கள் மீது ஊற்றியிருந்தார். இயேசு மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டிருந்தார் என்பதற்கும் இப்போது பரலோகத்தில் கடவுளுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார் என்பதற்கும் இது தெளிவான அத்தாட்சியாய் இருந்தது. “ஆகையினால்” என்று பேதுரு சொல்லி, “நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாய் அறியக்கடவர்கள்.”—அப்போஸ்தலர் 2:22-36.
செவிகொடுத்துக் கேட்டுக்கொண்டிருந்தோர் எவ்வாறு பிரதிபலித்தனர்? ‘இருதயத்திலே குத்தப்பட்டார்கள்’ என்று பதிவு சொல்கிறது, “பேதுருவையும் மற்ற அப்போஸ்தலரையும் பார்த்து: சகோதரரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்றார்கள். பேதுரு பதிலளித்தார்: “நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள்.” ஏறக்குறைய 3,000 பேர் அதையே செய்தனர்! அதற்குப்பிறகு, “அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்தில் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்.”—அப்போஸ்தலர் 2:37-42.
என்றென்றும் நினைவில் நிற்கும் இந்த நிகழ்ச்சியின்போது தலைமைதாங்கி நடத்தினதன் மூலம், இயேசு தனக்கு கொடுப்பதாக வாக்களித்திருந்த ‘பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களில்’ முதலாவதை பேதுரு பயன்படுத்தினார். (மத்தேயு 16:19) இந்தத் திறவுகோல்கள் வித்தியாசமான ஜனத்தொகுதிகளுக்கு விசேஷமான சிலாக்கியங்களைத் திறந்து வைத்தன. யூதர்கள் ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களாக ஆவதை இந்த முதல் திறவுகோல் சாத்தியமாக்கிற்று. பின்னர், இரண்டாவது மற்றும் மூன்றாவது திறவுகோல்கள், சமாரியருக்கும் புறஜாதியாருக்கும் முறையே இதே வாய்ப்பு கிடைக்கக்கூடியதை சாத்தியமாக்கிற்று.—அப்போஸ்தலர் 8:14-17; 10:44-48.
நாம் கற்றுக்கொள்ளும் பாடங்கள்
யூதர்களும் யூத மதத்துக்கு மாறியவர்களும் அடங்கிய இந்த ஜனக்கூட்டத்தார் கடவுளுடைய குமாரனின் மரணத்துக்கு சமுதாயப் பொறுப்பை பகிர்ந்துகொண்டாலும், பேதுரு அவர்களை மரியாதையோடு “சகோதரரே” என்று அழைத்தார். (அப்போஸ்தலர் 2:29) அவர்களை மனந்திரும்பும்படி தூண்டுவதே அவருடைய இலக்காக இருந்தது, அவர்களைக் கண்டனம் செய்வதற்கல்ல. ஆகையால், அவருடைய அணுகுமுறை உடன்பாடானதாய் இருந்தது. அவர் உண்மைகளை எடுத்துரைத்தார், அவருடைய குறிப்புகளை வேதாகம வசனங்களைக் கொண்டு ஆதரித்தார்.
இன்று நற்செய்தியைப் பிரசங்கிப்போர் பேதுருவின் உதாரணத்தை பின்பற்றுவது நல்லது. அவர்கள் செவிகொடுத்துக் கேட்போருக்கு ஆர்வமாயிருக்கும் காரியங்களை அடிப்படையாய் வைக்க முயற்சி செய்ய வேண்டும், பின்னர் அவர்களோடு வேதாகமத்திலிருந்து சாதுரியமாக நியாயங்காட்டி பேச வேண்டும். பைபிள் சத்தியத்தை உடன்பாடான முறையில் எடுத்துரைத்தால் நேர்மை இதயமுள்ளோர் பிரதிபலிப்பர்.—அப்போஸ்தலர் 13:48.
சுமார் ஏழு வாரங்களுக்கு முன்பு இயேசுவை மறுதலித்த பிறகு, பெந்தெகொஸ்தே நாளன்று பேதுரு காட்டிய வைராக்கியமும் தைரியமும் முற்றிலும் வேறுபட்டதாய் இருந்தது. அந்தச் சம்பவத்தின்போது பேதுரு மனிதரைக் கண்டு பயந்ததால் நிலைகுலைந்து போனார். (மத்தேயு 26:69-75) ஆனால் பேதுருவின் சார்பாக இயேசு விண்ணப்பம் செய்திருந்தார். (லூக்கா 22:31, 32) சந்தேகமின்றி, இயேசு உயிர்த்தெழுந்த பிறகு பேதுருவுக்கு காட்சியளித்தது அப்போஸ்தலரை பலப்படுத்தியது. (1 கொரிந்தியர் 15:5) அதன் காரணமாக, பேதுரு தன் விசுவாசத்தை இழந்துவிடவில்லை. சிறிது காலத்திற்குள்ளாக, அவர் தைரியமாக பிரசங்கித்துக்கொண்டிருந்தார். ஆகையால் அவர் பெந்தெகொஸ்தே நாளன்று மட்டுமல்ல, ஆனால் தன் வாழ்க்கையின் மீதமாயிருந்த காலமெல்லாம் அவ்வாறு பிரசங்கித்தார்.
பேதுருவைப் போல் நாம் ஏதாவது ஒருவிதத்தில் தவறு செய்திருந்தால் அப்போது என்ன செய்வது? மனந்திரும்புதலை காண்பித்து, மன்னிப்புக்காக ஜெபித்து, ஆவிக்குரிய உதவியைப் பெற்றுக்கொள்வதற்காக நாம் செயல்படுவோமாக. (யாக்கோபு 5:14-16) அப்போது நம்முடைய இரக்கமுள்ள பரலோக பிதாவாகிய யெகோவாவுக்கு நம்முடைய பரிசுத்த சேவை ஏற்கத்தகுந்ததாய் இருக்கிறது என்ற நம்பிக்கையோடு நாம் தொடர்ந்து முன்னேறலாம்.—யாத்திராகமம் 34:6.