மண்ணுக்குத் திரும்புதல்—எவ்வாறு?
“நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய்.” முதல் மனிதனாகிய ஆதாம் அந்த வார்த்தைகளை கேட்டபோது, எதை எதிர்பார்க்க வேண்டும் என்பதை அவன் அறிந்திருந்தான். அவன் பூமியின் மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டிருந்தான், ஆகையால் அவன் வெறும் மண்ணுக்கே திரும்புவான். அவன் தன் படைப்பாளராகிய யெகோவா தேவனுக்குக் கீழ்ப்படியாமல் போயிருந்ததன் காரணமாக இறந்து போவான்.—ஆதியாகமம் 2:7, 15-17; 3:17-19.
மானிடர்கள் மண்ணால் ஆனவர்கள் என்று பைபிள் காண்பிக்கிறது. “பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்,” என்றும்கூட அது சொல்கிறது. (எசேக்கியேல் 18:4; சங்கீதம் 103:14) மரணம் கோடிக்கணக்கானோருக்கு துக்கத்தைக் கொண்டு வந்திருக்கிறது, மேலும் செத்த உடலை அகற்றுவதைப் பற்றிய கேள்விகளை திரும்பத்திரும்ப எழுப்பியிருக்கிறது.
கடந்தகால மற்றும் தற்போதைய பழக்கவழக்கங்கள்
பண்டைய காலங்களிலிருந்த கடவுளுடைய ஜனங்கள் மத்தியில் மானிடரின் செத்த உடல்கள் எவ்வாறு அகற்றப்பட்டன? மண்ணுக்கடியில் புதைத்தல் உட்பட, இறந்தவர்களைக் கையாளும் பல்வேறு வழிகளை பைபிள் அதன் முதல் பகுதியில் குறிப்பிடுகிறது. (ஆதியாகமம் 35:8) கோத்திரப் பிதாவாகிய ஆபிரகாம், அவருடைய மனைவி சாராள், அவர்களுடைய மகன் ஈசாக்கு மற்றும் பேரன் யாக்கோபு ஆகியோர் மக்பேலா என்னும் குகையிலே புதைக்கப்பட்டார்கள். (ஆதியாகமம் 23:2, 19; 25:9; 49:30, 31; 50:13) இஸ்ரவேல நியாயாதிபதிகளாகிய கிதியோனும் சிம்சோனும் ‘தங்கள் தகப்பன்களின் கல்லறைகளிலே அடக்கம்பண்ணப்பட்டார்கள்.’ (நியாயாதிபதிகள் 8:32; 16:31) கடவுளுடைய பண்டையகால மக்கள் மத்தியில் குடும்ப கல்லறைகளைக் கொண்டிருப்பது விரும்பப்பட்டதென்பதை இது குறிப்பிட்டுக் காண்பிக்கிறது. பொ.ச. முதல் நூற்றாண்டில் இயேசு கிறிஸ்து மரித்தபோது, அவருடைய உடல் கன்மலையில் வெட்டியிருந்த புதிய கல்லறையில் வைக்கப்பட்டது. (மத்தேயு 27:57-60) அப்போது, பொதுவாக, மானிடரின் செத்த உடல்கள் பூமிக்கடியில் புதைக்கப்பட்டன அல்லது கல்லறைகளில் வைக்கப்பட்டன. இது இன்றும் பூமிமுழுவதிலும் பெரும்பாலான இடங்களில் பழக்கமாய் இருந்துவருகிறது.
இருப்பினும், இன்று உலகின் சில பகுதிகளில் நிலத்துக்கான பற்றாக்குறையும் நிலத்துக்கான விலையும் மிகவும் அதிகமாக இருப்பதால், புதைப்பதற்கான இடங்களை பெறுவது மிகவும் கடினமாகிக்கொண்டே வருகிறது. ஆகையால், சில ஜனங்கள் மானிடரின் செத்த உடல்களை அகற்றுவதற்கு மற்ற வழிகளை சிந்தித்துப் பார்க்கின்றனர்.
மானிடரின் செத்த உடல்களை எரித்த பிறகு, சாம்பலைத் தூவுவது மிகவும் சர்வசாதாரணமாக ஆகிவருகிறது. இங்கிலாந்தில், மரித்தோரில் சுமார் 40 சதவீதத்தினர் இப்போது இந்த முறையில் அகற்றப்பட்டு வருகின்றனர். ஸ்வீடனில், நகர்ப்புறங்களில் இறந்துவிடும் 80 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் எரிக்கப்படுவதால், சாம்பலைத் தூவுவதற்கு சில காட்டுப்பகுதிகள் நியமிக்கப்பட்டிருக்கின்றன. ஷாங்காயிலும் சீனாவில் உள்ள மற்ற வேறுசில கடற்கரையோர நகரங்களிலும், ஒரு வருடத்துக்கு பல தடவை சாம்பலைப் பெருமளவில் கடல்களில் தூவும் திட்டத்தை நகர அரசாங்கங்கள் ஏற்பாடு செய்கின்றன.
சாம்பலை எங்கு தூவலாம்? எந்த இடத்திலும் அல்ல. சாம்பலைத் தூவுவது சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கிறது என்று சிலர் ஒருவேளை பயப்படலாம். ஆனால், உண்மையில், நோய்கள் பெருவாரியாகப் பரவக்கூடிய எந்த ஆபத்தும் எரிப்பதன் மூலம் நீக்கப்பட்டு விடுகிறது. இங்கிலாந்தில் உள்ள சில சுடுகாடுகளும் ஐக்கிய மாகாணங்களில் உள்ள நினைவுச் சின்னங்களையுடைய பூங்காக்களும் புல்தரைகளை அல்லது பூந்தோட்டங்களை சாம்பல் தூவும் நிலங்களாக ஒதுக்கி வைக்கின்றன. ஆனால் கிறிஸ்தவர்களோ எரிப்பதைப் பற்றியும் சாம்பலைத் தூவுவதைப் பற்றியும் வேதப்பூர்வமான கருத்தை அறிந்துகொள்ள விசேஷமாக அக்கறையுள்ளவர்களாய் இருக்கின்றனர்.
வேதப்பூர்வமான கருத்து என்ன?
“பாபிலோன் ராஜாவுக்கு” விரோதமாய் கூறப்பட்ட தீர்ப்பில் ஏசாயா தீர்க்கதரிசி சொன்னார்: “உன் கல்லறைக்குப் புறம்பாய் எறிந்து விடப்பட்டாய்.” (ஏசாயா 14:4, 19) சாம்பல் தூவுவதை அப்படிப்பட்ட இழிவுபடுத்தும் விஷயத்துக்கு ஒப்பிட வேண்டுமா? இல்லை, எரிப்பதைக் குறித்தும் எரித்த சாம்பலைப் பாதுகாத்து வைப்பதைக் குறித்தும் அல்லது தூவுவதைக் குறித்தும் எந்தக் குறிப்பும் இல்லை.
இயேசு கிறிஸ்து தம்முடைய ஆயிரவருட ஆட்சியின்போது நடைபெறப்போகும் மரித்தோரின் பூமிக்குரிய உயிர்த்தெழுதலைப் பற்றி பேசியபோது இவ்வாறு சொன்னார்: “பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் [என்னுடைய] சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்.” (யோவான் 5:28, 29) இருப்பினும், ஒரு நபரை உயிர்த்தெழுப்புவதற்கு தனியாக ஒதுக்கப்பட்ட கல்லறை ஒன்று கட்டாயமாக தேவைப்படுவதில்லை என்ற கருத்து உயிர்த்தெழுதலைப் பற்றிய மற்றொரு தீர்க்கதரிசன விவரிப்பில் எடுத்துக் காண்பிக்கப்பட்டுள்ளது. வெளிப்படுத்துதல் 20:13 குறிப்பிடுகிறது: “சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன.” ஆகையால், ஒரு நபர் எங்கே அல்லது எவ்வாறு ‘மண்ணுக்குத் திரும்புகிறார்’ என்பது முக்கியமான காரியமல்ல. மாறாக, அவர் கடவுளுடைய நினைவில் வைக்கப்பட்டு உயிர்த்தெழுப்பப்படுவாரா என்பதே முக்கியம். (யோபு 14:13-15; ஒப்பிடுக: லூக்கா 23:42, 43.) ஆட்களை நினைவில் வைப்பதற்கு உதவிட யெகோவாவுக்கு நிச்சயமாகவே கவர்ச்சிகரமான கல்லறைகள் தேவையில்லை. செத்த உடலை எரித்துவிடுவது ஒரு நபர் உயிர்த்தெழுந்திருப்பதை தடைசெய்வதில்லை. சாம்பலைத் தூவுதல் சரியான உள்நோக்கத்தோடும் பொய் மத சடங்குகள் இன்றியும் செய்யப்பட்டால், அப்போது அது வேதாகமத்துக்கு முரணாய் இருக்காது.
சாம்பலைத் தூவ வேண்டும் என்று விரும்பி தீர்மானம் செய்பவர்கள் தேசத்தின் சட்டத்துக்கு கவனம் செலுத்துவது அவசியம். இழப்புக்கு ஆளானவர்கள் மேலும் மற்றவர்களுடைய உணர்ச்சிகளை சிந்தித்துப் பார்ப்பதும்கூட அவர்களுக்கு பொருத்தமானதாய் இருக்கும். இந்த விஷயத்தைக் குறித்து யெகோவாவின் ஊழியர்கள் தங்கள் வேதப்பூர்வமான சுயாதீனத்தை பிரயோகிக்கையில், கிறிஸ்தவர்கள் தாங்கியிருக்கும் நற்பெயரின் மீது அவதூறு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள கவனமாயிருப்பது நல்லது. செத்த உடலை எரிப்பதற்கும் சாம்பலைத் தூவுவதற்கும் சட்டப்பூர்வமான அனுமதி இருந்தும், சமுதாயத்தில் அவை இன்னும் முழுவதுமாக ஏற்றுக்கொள்ளப்படாமல் இருக்கும் தேசங்களில் இது விசேஷமாக முக்கியம். மனித ஆத்துமா சாவாமையுள்ளது என்ற நம்பிக்கையின் பேரில் சார்ந்திருக்கும் எல்லா சடங்குகளையும் அல்லது பழக்கவழக்கங்களையும் ஒரு கிறிஸ்தவர் தவிர்க்க வேண்டும்.
கல்லறையிலிருந்து முழு சுயாதீனம்
சாம்பலைத் தூவுவது, கல்லறைகளில் புதைக்கப்படுவதிலிருந்து சுயாதீனத்தை அளிக்கிறது என்று அர்த்தப்படுத்துவதாக அதன் சார்பாக ஆதரித்து பேசுவோர் சிலர் சொல்கின்றனர். இருப்பினும், “பரிகரிக்கப்படுங் கடைசிச் சத்துரு மரணம்” என்ற பைபிள் வாக்குறுதியின் நிறைவேற்றமே மிகப்பெரிய விடுதலையைக் கொண்டுவரும்.—1 கொரிந்தியர் 15:24-28.
பிணக்குழிகள், கல்லறைகள், செத்த உடலை எரித்து சாம்பலைத் தூவுதலும்கூட கடந்தகால காரியங்களாக ஆகிவிடும். ஆம், மரணம் இனிமேலும் இருக்காது. தெய்வீக ஏவுதலின் கீழ் அப்போஸ்தலனாகிய யோவான் எழுதினார்: “பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.”—வெளிப்படுத்துதல் 21:3, 4.
கடவுளுடைய ராஜ்யத்தின் கீழ், ஆதாம் செய்த பாவத்தின் காரணமாக ஏற்பட்ட மானிட மரணம் முழுவதுமாக நீக்கப்பட்டுப்போகும்போது இவையனைத்தும் நடைபெறும். அந்தச் சமயம் கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கம் மண்ணுக்குத் திரும்பும் எதிர்பார்ப்பை எதிர்ப்படாது.
[பக்கம் 29-ன் படங்கள்]
மனித பிணங்களைக் கையாளும் சாதாரண முறைகள்
[பக்கம் 31-ன் படம்]
ஜப்பான், சகாமி விரிகுடாவில் சாம்பலைத் தூவுதல்
[படத்திற்கான நன்றி]
Courtesy of Koueisha, Tokyo