இயற்கைப் பேரழிவுகள் தாக்கும்போது
அக்ரா, கானா, ஜூலை 4, 1995: சுமார் 60 வருடத்திலேயே இதுவரை பெய்யாத அடைமழை பெய்து, பெரும் வெள்ளப்பெருக்கை உருவாக்கியது. சுமார் 2,00,000 பேர் எல்லாவற்றையும் இழந்தார்கள், 5,00,000 பேர் தங்கள் வீடுகளுக்குப் போக முடியவில்லை, 22 பேர் தங்கள் உயிரை இழந்தார்கள்.
சான் ஏன்ஜலோ, டெக்ஸஸ், அ.ஐ.மா., மே 28, 1995:
90,000 குடிமக்களைக் கொண்ட இந்த நகரத்தை சூறாவளி காற்றும் கல்மழையும் சின்னா பின்னமாக தாக்கி, சுமார் $12 கோடி (ஐ.மா.) பெறுமானமுள்ள நஷ்டத்தை ஏற்படுத்தின.
கோப், ஜப்பான், ஜனவரி 17, 1995:
வெறும் 20 நொடிகளே நீடித்த பூமியதிர்ச்சி, ஆயிரக்கணக்கானோரை பிணமாக்கி, பத்தாயிரக்கணக்கானோரை காயப்படுத்தி, லட்சக்கணக்கானோரை வீடு இழந்த நிலையில் விட்டுச்சென்றது.
பேரழிவுகளின் சகாப்தம் என அழைக்கப்படும் ஒரு காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். 1963-92 வரை உட்பட்ட 30 வருட காலப்பகுதியில், பேரழிவுகளால் கொல்லப்பட்ட, காயப்படுத்தப்பட்ட அல்லது வேறு இடம் மாற்றப்பட்ட ஆட்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 6 சதம் அதிகரித்தது என்று ஐக்கிய நாடுகளின் ஒரு அறிக்கை காட்டுகிறது. இந்தத் துயர் நிறைந்த நிலைதான் 1990-ம் வருடங்களை “இயற்கைப் பேரழிவுகளைக் குறைப்பதற்கான சர்வதேச பத்தாண்டு” என ஒதுக்கும்படி ஐ.நா.-வை செய்வித்திருக்கிறது.
உண்மைதான், புயல், எரிமலை வெடிப்பு அல்லது பூமியதிர்ச்சி போன்ற ஓர் இயற்கை சக்தி எப்போது பார்த்தாலும் பேரழிவைக் கொண்டுவருவதில்லை. மனிதருக்குத் தீங்கு விளைவிக்காமலே ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கில் வந்து போகின்றன. ஆனால், எப்போது உயிருக்கும் உடைமைக்கும் பெரும் சேதத்தை அது உண்டாக்குகிறதோ, அப்போது அதனை பேரழிவு என்று மிகச் சரியாகவே அழைக்கலாம்.
இயற்கைப் பேரழிவுகளின் அதிகரிப்பு தவிர்க்க முடியாததாகத் தோன்றுகிறது. இயற்கைப் பேரழிவுகள்—கடவுளின் செயல்களா அல்லது மனிதரின் செயல்களா? (ஆங்கிலம்) என்ற புத்தகம் குறிப்பிடுகிறது: “மனிதர் தங்களுடைய சுற்றுச்சூழலை ஏதேனும் இயற்கைப் பேரழிவு அதிகமாக நேரிடுவதற்கு ஏற்ப மாற்றுகிறார்கள், அத்தகைய பேரழிவுகளால் அதிகமாக தாக்கப்படும் விதத்தில் தங்களை நடத்திக்கொள்கிறார்கள்.” அந்தப் புத்தகம் ஒரு ஊகிக்கப்பட்ட எடுத்துக்காட்டை அளிக்கிறது: “ஆழமான பள்ளத்தாக்கின் பக்கமாக, கனமான செங்கல்லால் கட்டப்பட்ட சுவர்களையுடைய குடிசைகள் உள்ள நகரில், ஒரு சிறிய நில அதிர்வு ஏற்பட்டாலும், அது ஏற்படுத்தும் மனித மரணங்களையும் துன்பத்தையும் கணக்கில் எடுத்தால் ஒருவேளை அது ஒரு பேரழிவாகவே நிரூபிக்கும். ஆனால் பூமியதிர்ச்சிகளால் பேரழிவு ஏற்படுகிறதா அல்லது அத்தகைய ஆபத்தான நிலப்பகுதியில், அப்படிப்பட்ட ஆபத்தான வீடுகளில் மக்கள் வாழ்வதால் பேரழிவு ஏற்படுகிறதா?”
இயற்கைப் பேரழிவுகளின் அதிகரிப்பு பைபிள் மாணாக்கருக்கு ஏன் ஆச்சரியம் அளிப்பதில்லை என்பதற்கு மற்றொரு காரணம் இருக்கிறது. ‘இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவை’ அடையாளப்படுத்தி காட்டும் காரியங்களோடுகூட “பஞ்சங்களும் . . . பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்” என்பதாக சுமார் 2,000 வருடங்களுக்கு முன் இயேசு கிறிஸ்து முன்னறிவித்தார். (மத்தேயு 24:3, 6-8, NW) “கடைசிநாட்களில்” மனிதர்கள் தன்னலப் பிரியராயும், பணப்பிரியராயும், சுபாவ அன்பு இல்லாதவராயும், அவதூறு செய்வோராயும் இருப்பார்கள் என்பதாகவும் பைபிள் முன்னறிவித்துள்ளது.a (2 தீமோத்தேயு 3:1-5) இத்தகைய பண்புகள் அடிக்கடி மனிதனை தன்னுடைய சுற்றுச்சூழலுக்கு எதிராக செயல்படும்படி செய்து, மனிதரை இயற்கை சக்திகளால் இன்னும் அதிகம் பாதிக்கும்படி செய்கின்றன. நம்மில் பெரும்பான்மையினர் வாழவேண்டி இருக்கும் அன்பற்ற சமுதாயத்திலிருந்தும்கூட மனிதனால் உண்டாக்கப்படும் பேரழிவுகள் வருகின்றன.
நம் பூமியில் மக்கள் தொகை பெருக்கம் அதிகரிக்கும்போதும், மனித நடத்தைகள் மக்களை அதிக ஆபத்திற்குள்ளாக்கும்போதும், பூமியின் இயற்கை வளங்களை மேலும் மேலும் தவறாக பராமரிக்கும்போதும் மனிதனை பேரழிவுகள் தொடர்ந்து தாக்கவிருக்கின்றன. பின்வரும் கட்டுரை காட்டவிருப்பதைப்போல், நிவாரணங்களை அளிப்பது சவால்களை முன்வைக்கிறது.
[அடிக்குறிப்பு]
a கடைசி நாட்களின் அடையாளங்களைப் பற்றி இன்னும் கூடுதலான தகவலுக்காக, உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்ட நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு என்ற புத்தகத்தில், பக்கங்கள் 98-107-வரை பார்க்கவும்.
[பக்கம் 3-ன் படத்திற்கான நன்றி]
Top: Information Services Department, Ghana; right: San Angelo Standard-Times
[பக்கம் 2-ன் படத்திற்கான நன்றி]
COVER: Maxie Roberts/Courtesy of THE STATE