மதுபானங்களைப் பற்றியதில் நீங்கள் கடவுளுடைய நோக்குநிலையை உடையவரா?
ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு முன்னால், ஈரானிலுள்ள ஊர்மியா பட்டணத்துக்கு அருகில், களிமண் கற்களாலாகிய ஒரு பழைய கட்டிடத்தை புதை பொருள் ஆராய்ச்சியாளர் தோண்டி வெளிப்படுத்தினர். அதில் ஒரு மட்பாண்ட குடுவையை அவர்கள் கண்டுபிடித்தனர்; அறிவியலாளர் மதிப்பிடுவதன் பிரகாரம், அது ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானது, முதன்முதல் மனித குடியிருப்புகள் ஸ்தாபிக்கப்பட்ட காலத்துக்குரியவை. சமீபத்தில் அந்தக் குடுவையைக் கூர்ந்து ஆராய்வதில் மிக சமீப காலத்திய தொழில்துறை விஞ்ஞானம் பயன்படுத்தப்பட்டது. அதன் உட்புறத்தில் திராட்சரச மதுபானம் தயாரிப்பதற்கான மிகப் பழமையான வேதியியல் சான்று ஒன்றை கண்டதில் அறிவியலாளர் ஆச்சரியமடைந்தனர்.
திராட்ச மதுபானமும், பியரும், போதைதரும் மற்ற பானங்களும் பூர்வ காலங்களிலிருந்தே அருந்தப்பட்டு வந்தன என்று பைபிளும் தெளிவாக உறுதிப்படுத்துகிறது. (ஆதியாகமம் 27:25; பிரசங்கி 9:7; நாகூம் 1:10; NW) மற்ற உணவுகளின் காரியத்தில் இருப்பதுபோல்,—போதைதரும் பானங்களைக் குடிப்பதை அல்லது குடிக்காமல் இருப்பதை—அவரவர் தெரிவுசெய்துகொள்ளும்படி யெகோவா நம்மை விடுகிறார். இயேசு, தம்முடைய உணவுகளோடு திராட்ச மதுபானத்தை அடிக்கடி அருந்தினார். முழுக்காட்டுபவனாகிய யோவான் மதுபானத்தை அருந்துவதிலிருந்து விலகியிருந்தார்.—மத்தேயு 11:18, 19.
குடிப்பதில் மிதமீறி செல்வதை பைபிள் கட்டளையிட்டு தடைசெய்கிறது. குடிவெறி கடவுளுக்கு விரோதமான பாவம். (1 கொரிந்தியர் 6:9-11) இதற்கு ஒத்திசைய, மனந்திரும்பாத குடிப்பழக்கக்காரராகும் எவரையும், கிறிஸ்தவ சபையில் தொடர்ந்திருப்பதற்கு யெகோவாவின் சாட்சிகள் அனுமதிப்பதில்லை. சபையிலுள்ளவர்கள், போதைதரும் பானங்களைக் குடிப்பதற்குத் தெரிவுசெய்தால் அதை மிதமான அளவில் அருந்த வேண்டும்.—தீத்து 2:2, 3.
தேவபக்தியற்ற ஒரு கருத்து
போதை உண்டாக்கும் பானங்களைப் பற்றியதில் தேவபக்தியுள்ள ஒரு கருத்தை உடையோராக இன்று பலர் இல்லை. இந்தப் பூர்வ உற்பத்திப் பொருள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைச் சாத்தான் முன்னேற்றுவித்துக் கொண்டிருக்கிறான் என்று எளிதாகக் காண முடிகிறது. உதாரணமாக, தென் பசிபிக் தீவுகள் சிலவற்றில், வீட்டில் உண்டாக்கும் புளிக்கச்செய்யப்பட்ட பானங்களை பேரளவில் குடிக்கும்படி ஆண்கள் ஒன்றுகூடுவது பழக்கமாயிருக்கிறது. பல மணிநேரங்களுக்கு இந்தக் கூட்டங்கள் நீடிக்கலாம், அடிக்கடியும் வைக்கப்படுகின்றன—ஆண்கள் பலர் தினந்தோறும் இந்தப் பழக்கத்தில் மட்டற்று உட்படுகின்றனர். நாகரிக பண்பாட்டின் ஒரு பாகமேயென சிலர் இதைக் கருதுகின்றனர். வீட்டில் செய்யப்பட்ட பானத்துக்குப் பதிலாக—அல்லது அதோடுகூட—பியரும் செறிவார்ந்த சாராயங்களும் சில சமயங்களில் அருந்தப்படுகின்றன. குடிவெறியடைவதில் அடிக்கடி முடிகின்றன.
மற்றொரு பசிபிக் நாட்டில், போதை பானத்தை மித அளவோடு ஆண்கள் குடிப்பது பெரும்பாலும் கேள்விப்படாத ஒன்றாக இருக்கிறது. பொதுவாக, அவர்கள் குடிக்கையில் போதையடைவதற்கே குடிக்கின்றனர். உதாரணமாக எடுத்துக்கொண்டால், சம்பளம் பெறும் நாளில் ஒரு தொகுதி ஆண்கள் ஒன்று சேர்ந்து, ஒவ்வொன்றும் 24 பாட்டில்கள் அடங்கிய பல பெட்டிகளை வாங்குவார்கள். அந்தப் பியர்கள் தீரும்போதுதானே அவர்கள் குடிப்பதை நிறுத்துவார்கள். இதன் விளைவாக வெளிப்படையானக் குடிபோதை மிகச் சாதாரணமாயுள்ளது.
கள் போன்ற புளித்துப் பொங்கவைக்கப்பட்ட பானங்களும், உள்ளூரில் செய்யப்படும் மற்ற மதுபானங்களும், ஆப்பிரிக்க நாடுகளில் பரம்பரையாகப் பயன்படுத்தப்படுகின்றன. விருந்தினரை உபசரிக்கையில் மதுபானம் அளிக்க வேண்டும் என்று, சில சமுதாயங்களில் பாரம்பரியம் வற்புறுத்துகிறது. உதாரகுணமுடைய விருந்தளிப்பவர், தன் விருந்தாளி அருந்த இயலுவதற்கும் அதிகப்பட்டதை வழக்கமாய் அளிக்கிறார். ஓர் நாட்டில், ஒவ்வொரு விருந்தாளிக்கு முன்பும் 12 பியர் பாட்டில்கள் வைப்பது வழக்கமாக இருக்கிறது.
ஜப்பானிய கம்பெனிகள் பல, தங்கள் தொழிலாளருக்கு பஸ் பிரயாணங்களை ஏற்பாடு செய்கின்றன, போதைதரும் பானங்கள் பேரளவுகளில் கூடக் கொண்டுசெல்லப்படுகின்றன, குடிபோதை கண்டிக்கப்படுவதில்லை. இந்தக் கம்பெனிகளின் இன்பப் பயணங்கள் சில, இரண்டு அல்லது மூன்று நாட்கள் நீடிக்கின்றன. ஏஷியாவீக் பத்திரிகையின் பிரகாரம், ஜப்பானில், “அரிசி விவசாயிகளிலிருந்து செல்வந்தரான அரசியல்வாதிகள் வரையில், ஆண்மைத்தன்மை என்பது, அந்த நபர் அருந்தக்கூடிய மதுபான அளவெனப் பாரம்பரியமாய் இருந்துவந்திருக்கிறது.” மற்ற ஆசிய நாடுகளிலும் இதைப்போன்ற போக்குகள் கவனிக்கப்படுகின்றன. “இந்த உலகத்தில் எங்காயினும் இருக்கும் குடிகாரர்களைப் பார்க்கிலும் தெற்கத்திய கொரியர்களிலேயே ஒவ்வொரு ஆளும் அதிகமான மதுபானங்களை இப்போது குடிக்கிறவனாக இருக்கிறான்,” என்று ஏஷியாவீக் கூறுகிறது.
பிங்கி மதுபானம் குடிப்பது, ஐக்கிய மாகாணங்களிலுள்ள கல்லூரி வளாகங்களில் விரிவாகப் பரவியுள்ள பழக்கமாகிவிட்டிருக்கிறது. “பிங்கி குடிப்பவர்களில் பெரும்பான்மையர் தங்களைப் பிரச்சினையுண்டாக்கும் குடிகாரராகக் கருதுகிறதில்லை,” என்று தி ஜர்னல் ஆஃப் தி அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷன் பத்திரிகை கூறுகிறது.a இது ஆச்சரியமுண்டாக்க வேண்டியதில்லை, ஏனெனில் குடிப்பதை வீரச்செயலெனவும், நவநாகரிகமெனவும், ஞானமான செயலெனவும் பலநாடுகளில் செய்தித்தாள்கள் ஊக்குவிக்கின்றன. இந்தப் பிரச்சாரம் அடிக்கடி இளைஞரை குறியாக வைத்து செய்யப்படுகிறது.
பிரிட்டனில், கடந்த 20-ஆண்டு காலப்பகுதியில், பியர் குடிப்பது இரட்டிப்பாகிவிட்டிருக்கிறது; வெறிய சக்தி மிகுந்த மதுபானம் குடிப்பது மூன்று மடங்குகள் அதிகமாகிவிட்டிருக்கிறது. குடிகாரர்கள் இளைஞராக இருக்கையிலேயே குடிக்கத் தொடங்குகின்றனர்; பெண்கள் மேலுமதிகமானோர் குடிக்கின்றனர். கிழக்கு ஐரோப்பிய மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் இவற்றைப்போன்ற போக்குகள் கவனிக்கப்பட்டிருக்கின்றன. குடிபோதை விளைவுகளிலும், குடிபோதை சம்பந்தப்பட்ட ஊர்திப்போக்குவரத்தில் நேரிடும் உயிரிழப்பு விபத்துகளின் விகிதங்களிலும் அதற்கேற்ப பெருக்கம் ஏற்பட்டிருப்பதில் இது முனைப்பாகத் தெரிகிறது. போதைதரும் பானங்களைத் தவறான முறையில் பயன்படுத்துவது உலகமெங்கும் அதிகப்பட்டிருப்பதானது சந்தேகமில்லாமல் தெளிவாயுள்ளது.
எவ்வளவு அருந்துவது மிதமீறியது?
போதைதரும் பானங்களைப் பற்றிய பைபிளின் கருத்து சமநிலைப்பட்டதாக இருக்கிறது. ஒரு கருத்தில், “மனுஷனுடைய இருதயத்தை மகிழ்ச்சியாக்கும்” திராட்ச மதுபானம் யெகோவா தேவன் அருளிய வரம் என்று வேதவாக்கியங்கள் சொல்லுகின்றன. (சங்கீதம் 104:1, 15) மறுபட்சத்தில், மிதமீறி செல்வதை கண்டனம் செய்வதில், ‘வெறிக்கக் குடித்தல்,’’ ‘திராட்சமதுபான மிதமீறுதல்கள்,’ “மதுபானம் களியாட்டு குடி,” ‘மிகுதியான திராட்சமது அருந்துதல்,’ மற்றும் ‘மதுபானத்துக்கு அடிமைப்படுதல்’ போன்ற சொற்றொடர்களை பைபிள் பயன்படுத்துகிறது. (லூக்கா 21:34, NW; 1 பேதுரு 4:3, தி.மொ.; 1 தீமோத்தேயு 3:8, NW; தீத்து 2:3; தி.மொ.) ‘மிகுதியான திராட்ச மது’ என்பது எந்த அளவு? போதைதரும் பானங்களைப் பற்றிய தேவபக்தியுள்ள கருத்தில் அடங்கியிருப்பது என்னவென்பதை ஒரு கிறிஸ்தவன் எவ்வாறு தீர்மானிக்க முடியும்?
குடிவெறியை கண்டுகொள்வது கடினமாக இல்லை. அதன் விளைவுகள் இவ்வார்த்தைகளைக்கொண்டு பைபிளில் விவரிக்கப்பட்டிருக்கின்றன: “ஐயோ! யாருக்கு வேதனை? யாருக்குத் துக்கம்? யாருக்குச் சண்டைகள்? யாருக்குப் புலம்பல்? யாருக்குக் காரணமில்லாத காயங்கள்? யாருக்கு இரத்தங்கலங்கின கண்கள்? மதுபானம் இருக்கும் இடத்திலே தங்கித் தரிப்பவர்களுக்கும், கலப்புள்ள சாராயத்தை நாடுகிறவர்களுக்குந்தானே. . . . உன் கண்கள் பரஸ்திரீகளை நோக்கும் [“பலவிதத் தோற்றங்களைக் காணும்,” தி.மொ.]; உன் உள்ளம் தாறுமாறானவைகளைப் பேசும்.”—நீதிமொழிகள் 23:29-33.
போதைதரும் பானத்தை மிதமீறிய அளவில் உட்கொள்வது, குழப்பத்தையும், மாயக் காட்சிகளையும், உணர்வற்றுப் போதலையும், மனதுக்கும் உடலுக்கும் ஏற்படும் மற்ற கோளாறுகளையும் உண்டுபண்ணலாம். போதைதரும் பானத்தின் தாக்குதலின்கீழ் இருக்கையில். ஒருவர் தன் நடத்தையைக் கட்டுப்படுத்தும் சக்தியை இழந்து, இவ்வாறு தனக்கு அல்லது மற்றவர்களுக்கு தீங்குண்டாக்கக்கூடும். குடிகாரர்கள் முட்டாள்தனமான, அவமதிப்பான, அல்லது ஒழுக்கக்கேடான நடத்தையில் ஈடுபடுவோராக அறியப்பட்டிருக்கின்றனர்.
குடிமயக்க வெறியடையும் நிலைவரையாகக் குடித்து, மேலே குறிப்பிடப்பட்ட விளைவுகள் ஏற்பட செய்வது, நிச்சயமாகவே மிதமீறி குடித்தலாக உள்ளது. எனினும், குடிவெறியைக் குறிக்கும் எல்லா அடையாளங்களையும் வெளிப்படுத்தாமலுங்கூட ஒருவர் மிதமீறிய தன்மையைக் காட்டலாம். ஆகையால், ஒருவர் மிதமீறி குடித்திருக்கிறாரா என்ற கேள்வி அடிக்கடி விவாதத்துக்குரியதாகிறது. மிதமாயிருப்பதற்கும் மிதமீறுவதற்கும் உள்ள வேறுபாடு என்ன?
உங்கள் சிந்திக்கும் திறமைகளைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்
இரத்தத்தில் போதைதரும் பானம் எந்த சதவீதம் இருக்கலாம் என்பதையோ அல்லது வேறு எதாவது அளவையோ குறிப்பிட்டு, மட்டுப்பாடுகளை பைபிள் வைக்கிறதில்லை. போதைதரும் பானத்தை ஏற்கும் திறன் ஒருவருக்கொருவர் வேறுபடுகிறது. எனினும், பைபிள் நியமங்கள் கிறிஸ்தவர்கள் எல்லாருக்கும் பொருந்துகின்றன, மற்றும் போதைதரும் பானங்களைக் குறித்ததில் தேவபக்தியான கருத்தை வளர்க்க நமக்கு உதவிசெய்ய முடியும்.
“உன் கடவுளாகிய யெகோவாவை உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் நேசிப்பாயாக,“ என்பதே முதலாவது கற்பனை என்று இயேசு சொன்னார். (மத்தேயு 22;.37, 38, NW) போதைதரும் பானம், மனதின்மீது நேரடியான பாதிப்பை உடையதாக இருக்கிறது; மிதமீறி குடிப்பது, எல்லா கற்பனைகளிலும் பிரதானமான இந்தக் கற்பனைக்கு நீங்கள் கீழ்ப்படிவதற்கு இடையூறு செய்யலாம். சரியானத் தீர்மானங்கள் செய்வதற்கும், பிரச்சினைகளைத் தீர்க்கும் திறமைக்கும், தற்கட்டுப்பாட்டைப் பயன்படுத்துவதற்கும், மனதின் மற்ற முக்கியமான இயக்கங்களுக்கும் இது வினைமையான இடையூறு உண்டாக்கலாம். வேதவாக்கியங்கள் நமக்கு இவ்வாறு அறிவுரை கூறுகின்றன: “செயல்முறையான ஞானத்தையும் சிந்திக்கும் திறமையையும் பாதுகாத்துக்கொள், அவை உன் ஆத்துமாவுக்கு ஜீவனும் உன் கழுத்துக்கு அலங்காரமுமாக நிருபிக்கும்.”—நீதிமொழிகள் 3:21, 22, NW.
அப்போஸ்தலன் பவுல் கிறிஸ்தவர்களை இவ்வாறு பரிந்து கேட்டுக்கொள்கிறார்: ‘உங்கள் சரீரங்களைக் கடவுளுக்கு ஏற்கத்தகுந்த, பரிசுத்தமான ஜீவபலியாக, உங்கள் பகுத்தறியும் வல்லமையோடுகூடிய பரிசுத்த சேவையாகக் கடவுளுக்கு ஒப்புக்கொடுங்கள்.’ (ரோமர் 12:1, NW) ஒரு கிறிஸ்தவன் தன் ‘பகுத்தறியும் வல்லமையை’ இழக்கும் அளவுக்கு போதைதரும் பானத்தைக் குடிப்பானாகில், ‘கடவுளுக்கு ஏற்கத்தகுந்தவனாக’ அவன் இருக்க முடியுமா? பொதுவாய் மட்டுக்கு மீறி குடிப்பவன் போதைதரும் பானத்தை தடையில்லாமல் ஏற்கும் பழக்கத்தை படிப்படியாய் வளர்க்கிறான். மிகுதியாய்க் குடிப்பது குடிவெறிக்கு மட்டுப்பட்டதாகவே தனக்கு இருப்பதாக அவன் உணரலாம். எனினும், போதைதரும் பானம் குடியாமல் இருக்கமுடியாத அளவுக்கு அதன்பேரில் சார்ந்திருக்கும் கெட்ட பழக்கத்தை அவன் உண்டாக்கிக்கொண்டிருக்கலாம். அத்தகைய ஓர் ஆள் தன் சரீரத்தை “பரிசுத்தமான ஜீவபலியாக” அளிக்க முடியுமா?
உங்கள் “செயல்முறையான ஞானத்தையும் சிந்திக்கும் திறமையையும்” குறைக்கும் எந்த அளவான போதைதரும் பானமும், கிறிஸ்தவரான உங்களுக்கு மிதமீறியதாக இருக்கிறது.
போதைதரும் பானத்தைப் பற்றியதில் உங்கள் கருத்தை எது திட்டம் செய்கிறது?
குடிப்பதைப் பற்றிய தன் மனப்பான்மையின்பேரில், தற்காலத்திய மனப்போக்குகள் செல்வாக்குச் செலுத்துகின்றனவா அல்லது பாரம்பரியமா என்பதை ஒரு கிறிஸ்தவன் கவனித்துப் பார்க்க வேண்டும். போதைதரும் பானங்களைக் குறித்ததில் உங்கள் தெரிவுகளை நாகரிகப் போக்குகளின்பேரிலோ அல்லது விளம்பரங்களின்பேரிலோ ஆதாரங்கொள்ளச் செய்ய நீங்கள் நிச்சயமாகவே விரும்பமாட்டீர்கள். உங்கள் சொந்த மனப்பான்மையை மதிப்பிடுவதில் இவ்வாறு உங்களைக் கேட்டுக்கொள்ளுங்கள், என் மனப்பான்மை எதால் செல்வாக்குச் செலுத்தப்படுகிறது, சமுதாயத்தில் ஏற்கத்தக்கதாக இருப்பதாலா, அல்லது நான் குடிப்பது பைபிள் நியமங்களால் ஆளப்படுகிறதா?
யெகோவாவின் சாட்சிகள் நாகரிகப் பண்பாட்டை எதிர்ப்போராக இராதபோதிலும், இன்று விரிவாக ஏற்கப்படுகிற பல பழக்கவழக்கங்களை யெகோவா வெறுக்கிறாரென்பதை அவர்கள் உணருகிறார்கள். கருச்சிதைவு செய்தல், இரத்தம் ஏற்றுதல்கள், ஒத்த பாலினத்தவர் புணர்ச்சி, அல்லது பலதார மணம் ஆகியவற்றை சில சமுதாயங்கள் கண்டனம் செய்வதில்லை. கிறிஸ்தவர்களோவெனில், இந்தக் காரியங்களில் கடவுளுடைய கருத்துக்கு ஒத்திசைவாய் நடக்கின்றனர். ஆம், அந்தக் காரியங்கள் நாகரிகப் பண்பாடாக ஏற்கப்பட்டாலும் ஏற்கப்படுகிறதில்லை என்றாலும், தேவபக்தியுள்ள கருத்தானது, அத்தகைய பழக்கவழக்கங்களை வெறுக்கும்படி ஒரு கிறிஸ்தவனைத் தூண்டுவிக்கும்.—சங்கீதம் 97:10.
“புறஜாதிகளின் யோசனைப்படி” என்று பைபிள் குறிப்பிடுகிறது. அதில், மிதமீறிய ‘மதுபானம் குடித்தல்’ மற்றும் “களியாட்டுக் குடி” அடங்கியிருக்கின்றன. “களியாட்டுக் குடி” என்ற சொற்றொடர், போதைதரும் பானங்களை மிகுதியான அளவுகளில் குடிக்கும் தனி நோக்கத்துடன் ஏற்படுத்தினக் கூட்டங்கள் என்ற எண்ணத்தைத் தெரிவிக்கின்றன. பைபிள் காலங்களில், எவ்வளவு மதுபானமாயினும், அதன் பாதிப்புகளை உணராமல் தாங்குமளவுக்குத் தங்களுக்குத் திறமை இருந்ததாகப் பெருமைகொண்ட சிலர், குடிப்பதில் மற்றவர்களைத் தோற்கடிக்க முயற்சி செய்தனர், அல்லது யார் அதிகம் குடிக்க முடியும் என்று போட்டியிட்டுக் காண முயன்றனர் என்று தோன்றுகிறது. மனந்திரும்பினக் கிறிஸ்தவர்கள் அதற்குமேலும் பங்குகொள்ளாத இந்த வகையான நடத்தையை, “துன்மார்க்க உளை” என்று அப்போஸ்தலன் பேதுரு குறிப்பிடுகிறார்.—1 பேதுரு 4:3, 4, தி.மொ.
ஒரு கிறிஸ்தவன், தான் போதை அடையாத வரையில், எங்கே, எப்போது, அல்லது எவ்வளவு குடித்தாலும் உண்மையில் கவலையில்லை என்ற கருத்தை ஏற்பது நியாயமானதாக இருக்குமா? அது தேவபக்தியுள்ள கருத்தாக இருக்கிறதா? என்று நாம் கேட்கலாம். பைபிள் இவ்வாறு சொல்லுகிறது: “ஆகையால் நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்.” (1 கொரிந்தியர் 10:31) போதைதரும் பானத்தைப் பேரளவுகளில் குடிக்கும்படி பொதுவிடத்தில் கூடிவரும் ஒரு தொகுதி ஆண்களில் எல்லாரும் போதையடையாதிருக்கலாம், ஆனால் அவர்களுடைய நடத்தை யெகோவாவுக்கு மகிமையைக் கொண்டுவருமா? பைபிள் இவ்வாறு அறிவுரை கூறுகிறது: “நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.”—ரோமர் 12:2.
மற்றவர்களுக்கு இடறல் உண்டாக்குவதைத் தவிருங்கள்
மிகுதியாய்க் குடிப்பவர் கடவுள்பக்தியுள்ள மனிதனாக உரிமைபாராட்டுகையில், மிதமீறி குடிப்பதற்கு இடமளிக்கும் நாகரிகப் பண்பாடுகளுங்கூட அடிக்கடி வெறுப்பு காட்டுவது கவனிக்கத்தக்கதாயுள்ளது. தென் பஸிபிக்கிலுள்ள ஒரு சிறிய சமுதாயத்தில், இதை கவனித்த ஒருவர் இவ்வாறு சொன்னார்: “உங்களை நான் போற்றுகிறேன். நீங்கள் சத்தியத்தைப் பிரசங்கிக்கிறீர்கள். ஆனால் நாங்கள் காணும் பிரச்சினை என்னவென்றால், உங்கள் ஆண்கள் மிதமீறி போதைபானம் குடிக்கிறார்கள்.” அறிவிக்கப்பட்டபடி, அந்த நபர்கள் குடிபோதை அடையவில்லை, எனினும், அந்த நுட்ப விவரம், சமுதாயத்திலுள்ள பலருக்கு அவ்வளவு தெளிவாகத் தெரியவில்லை. குடிப்பதற்காகக் கூடுவதில் ஈடுபடும் பெரும்பான்மையான மற்ற ஆண்களைப்போல் சாட்சிகளும் குடிபோதை அடைகிறார்கள் என்று முடிவுசெய்வதே பார்ப்போருக்கு எளிதாயிருக்கும். நீடித்துக் குடிப்பதற்காக அமரும் கூட்டங்களில் பங்குகொள்கிற ஒரு கிறிஸ்தவன் நற்பெயரைக் காத்து, தன் வெளி ஊழியத்தைப் பேச்சு சுயாதீனத்துடன் நிறைவேற்ற முடியுமா?—அப்போஸ்தலர் 28:31.
சில சமயங்களில், சில சகோதரரும் சகோதரிகளும் தங்கள் சுவாசத்தில் பெரும் போதை பான வாடையுடன் ராஜ்ய மன்றத்துக்கு வந்து சேருகிறார்கள் என்று ஜரோப்பிய நாடு ஒன்றிலிருந்து வந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இது மற்றவர்களின் மனச்சாட்சிகளைச் சங்கடப்படுத்தியிருக்கிறது. பைபிள் இவ்வாறு அறிவுரை கூறுகிறது: “மாம்சம் புசிக்கிறதும், மதுபானம்பண்ணுகிறதும், மற்றெதையாகிலும் செய்கிறதும், உன் சகோதரன் இடறுகிறதற்காவது, . . . ஏதுவாயிருந்தால், அவைகளில் ஒன்றையும் செய்யாமலிருப்பதே நன்மையாயிருக்கும்.” (ரோமர் 14:21) சில சந்தர்ப்பங்களின்கீழ் போதை பானம் குடிப்பதைவிட்டு விலகியிருக்க வேண்டியதாக இருந்தாலும், முதிர்ச்சியடைந்த ஒரு கிறிஸ்தவர், மற்றவர்களின் மனச்சாட்சிக்கு உணர்வுள்ளவராக இருக்கும்படி, போதைதரும் பானங்களைப் பற்றிய தேவபக்தியுள்ள கருத்து அவரைத் தூண்டுவிக்கும்.
சந்தேகமில்லாமல் கிறிஸ்தவர்கள் வேறுபட்டவர்களாக இருக்கிறார்கள்
போதைதரும் பானங்கள் உட்பட, யெகோவா மனிதவர்க்கத்திற்கு அருளியிருக்கும் நல்ல பொருட்களை, வருந்தத்தக்கதாக, இந்த உலகம் தவறாய்ப் பயன்படுத்துவதன்மூலம் அவருக்கு வருத்தமுண்டாக்குவதற்கு அதிகமானவற்றைச் செய்திருக்கிறது. பரவலாக இருந்துவரும் தேவபக்தியற்ற கருத்துக்களைத் தவிர்க்க, ஒப்புக்கொடுத்த கிறிஸ்தவர் ஒவ்வொருவரும் மனமார முயற்சி செய்ய வேண்டும். இவ்வாறு, “நீதிமானுக்கும் துன்மார்க்கனுக்கும், தேவனுக்கு ஊழியஞ்செய்கிறவனுக்கும் அவருக்கு ஊழியஞ்செய்யாதவனுக்கும் இருக்கிற வித்தியாசத்தை” ஆட்கள் காணமுடியும்.—மல்கியா 3:18.
போதைதரும் பானங்களைக் குறித்ததில், யெகோவாவின் சாட்சிகளுக்கும் இந்த உலகத்துக்கும் இடையேயுள்ள வித்தியாசம்’ சந்தேகத்துக்கு இடமில்லாமல் தெளிவாக இருக்க வேண்டும். போதைதரும் பானங்களைக் குடிப்பது, உண்மையானக் கிறிஸ்தவர்களின் வாழ்க்கையில் முக்கியமானக் காரியமல்ல. ஆபத்தான முறையில் குடிவெறிக்கு நெருங்க வரும்வரை குடித்து, போதை பானங்களைத் தாங்கள் எந்த அளவுக்குத் தாங்க முடியுமென்று அவர்கள் சோதனைசெய்தும் பார்ப்பதில்லை; தங்கள் முழு ஆத்துமாவோடும் தெளிந்த மனதோடும் கடவுளைச் சேவிப்பதை, போதைதரும் பானங்கள் கெடுப்பதற்கும் அல்லது எவ்வகையிலாவது இடையூறு செய்வதற்கும் அவர்கள் அனுமதிக்கிறதில்லை.
ஒரு தொகுதியாக, போதைதரும் பானங்களைப் பற்றிய தேவபக்தியுள்ள கருத்தை, யெகோவாவின் சாட்சிகள் உடையோராக இருக்கின்றனர். உங்களைப் பற்றியதென்ன? “அவபக்தியையும் லெளகிக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்தபுத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாய் இவ்வுலகத்திலே ஜீவனம்பண்”ணும்படி கூறும் பைபிளிள் போதனையை நாம் பின்பற்றுகையில் யெகோவாவின் ஆசீர்வாதங்களைப் பெற நாம் ஒவ்வொருவரும் நம்பிக்கையுடன் இருக்கலாம்.—தீத்து 2:12.
[அடிக்குறிப்பு]
a “பிங்கி குடிப்பதானது, ஆண்களைக் குறித்ததில் ஒன்றன்பின் ஒன்றாக ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட மதுபானங்களை வரிசையாகக் குடிப்பதையும், பெண்களைக் குறித்ததில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்டவற்றை அவ்வாறு வரிசையாகக் குடிப்பதையும் குறிக்கிறது என விளக்கப்பட்டது.”—த ஜர்னல் ஆஃப் தி அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷன்.
[பக்கம் 28-ன் பெட்டி/படம்]
உங்களை நேசிப்போருக்குச் செவிகொடுத்துக் கேளுங்கள்
மிதமீறி குடிக்கிற ஒருவர், தனக்கு ஒரு பிரச்சினை இருக்கிறதென்பதை உணருவதற்கு, பெரும்பாலும் கடைசியானவராக இருப்பார். மிதமாயிராத தங்கள் அன்பானவர்களுக்கு உதவிசெய்ய முன்வருவதற்கு, உறவினர்களும், நண்பர்களும், கிறிஸ்தவ மூப்பர்களும் தாமதிக்கக்கூடாது. மறுபட்சத்தில், போதைதரும் பானங்களைக் குடிக்கும் உங்கள் பழக்கங்களின்பேரில், உங்களுக்கு அன்பானவர்கள் மனசங்கடத்தை வெளிப்படுத்தினால், அதற்கு நல்ல காரணம் அவர்களுக்கு இருக்கலாம். அவர்கள் சொல்வதைக் கவனியுங்கள்.—நீதிமொழிகள் 19:20; 27:6.