அருமையான ஒன்றிற்காக அநேகத்தைக் கைவிட்டேன்
ஜூலியஸ் ஓவொ பெல்லோ சொன்னபடி
நான் 32 வருடங்களாக ஒரு ஆலாடெராவாக இருந்தேன்.a விசுவாச சுகப்படுத்துதலும், ஜெபங்களும் என்னோட எல்லா கஷ்டங்களையும் நீக்கும், என் வியாதிகளை எல்லாம் சரியாக்கும் என்றும் நம்பினேன். நான் ஒருநாள்கூட மருந்து வாங்கினது கிடையாது; ஏன் வலி போக்கும் மருந்தக்கூட வாங்கினதில்லை. அந்தச் சமயங்களில்,
என்னோட குடும்பத்திலிருந்து ஒருத்தரைக்கூட ஆஸ்பத்திரியில் சேர்த்தது கிடையாது. என் பிள்ளைகளுக்கு நோய் வந்தா, அவங்க குணமாகும்வரை இராப்பகலாக ஜெபம் செய்வேன். கடவுள் என்னோட ஜெபங்களைக் கேட்கிறாரு, என்னை ஆசீர்வதிக்கிறாரு என்று நம்பினேன்.
யக்பி ஜாலி என்ற கிளப்பில் சேர்ந்திருந்தேன், இது மேற்கு நைஜீரியாவில், ஆகூரி என்ற நகரில் இருந்த ஒரு பிரபலமான சமூக கிளப். என்னோட சிநேகிதர்கள் எல்லாரும் பெரிய பணக்காரங்க, சமுதாயத்தில் நல்ல செல்வாக்கு உள்ளவங்க. ஆகூரின் ராஜா டெஜீ என்னோட வீட்டுக்கு அடிக்கடி வந்து என்னை சந்திப்பார்.
நான் பல பெண்டாட்டிக்காரனா இருந்தேன்; எனக்கு ஆறு பெண்டாட்டிகளும் பல வைப்பாட்டிகளும் இருந்தாங்க. என்னோட தொழில் ரொம்ப செழிப்பா வளர்ந்தது. நான் எடுத்தக்காரியம் எல்லாம் வெற்றியா முடிந்தது. இருந்தாலும், முத்தைப் பற்றி இயேசு சொன்ன உவமையிலே வரும் அந்த வியாபாரி மாதிரி நானும், ரொம்ப அருமையான ஒண்ண கண்டுபிடிச்சேன். அவ்வளவு அருமையான ஒன்றிற்கு பதிலாக என்னோட ஐந்து பெண்டாட்டிகளையும், வைப்பாட்டிகளையும், சர்ச்சையும், சமூக கிளப்பையும், ஆளுங்க மத்தியிலே பிரபலமா இருக்கிறதையும் கைவிட்டேன்.—மத்தேயு 13:45, 46.
நான் எப்படி ஒரு ஆலாடெராவாக மாறினேன்
எனக்கு 13 வயதிருக்கும்போது, முதல் தடவையா 1936-ல் ஆலாடெராவைப் பற்றி நான் கேள்விப்பட்டேன். என்னோட சிநேகிதன் கேபிரியல் சொன்னான்: “கிரைஸ்ட் அப்பாஸ்டலிக் சர்ச்சுக்கு நீ வந்தா, கடவுள் பேசறதை கேட்கலாம்.”
“எப்படிடா கடவுள் பேசுவாரு?” என்று அவனிடம் கேட்டேன்.
அவன் சொன்னான்: “வா, வந்தா நீயே பார்ப்ப.”
கடவுள் பேசறதை கேட்கணுமே என்று என் மனசு ஆசையால் அடித்துக்கொண்டது. அதனாலே, அன்னக்கி ராத்திரி, கேபிரியலோடு நான் சர்ச்சுக்குப் போனேன். அந்தச் சின்ன கட்டிடம் முழுவதும் வணக்கத்தாரால் நிரம்பி இருந்தது. அந்தச் சபையார் இப்படி ஓத ஆரம்பித்தார்கள்: “ஓ ஜனங்களே, வாருங்கள்! இங்குதான் இயேசு இருக்கிறார்!”
இவ்வாறு ஓதிக்கொண்டிருக்கும்போது, யாரோ ஒருவர் இந்தமாதிரி ஒரு கூச்சல் போட்டாரு: “பரிசுத்த ஆவியானவரே, இறங்கி வாரும்!” யாரோ இன்னோருவர் மணி அடிச்சாரு, சபையார் கப்சிப் ஆனாங்க. அடுத்தப்படியா, ஒரு அம்மா ஏதோ ஒரு பாஷையில் எதையோ கடகடவென்று உணர்ச்சி பொங்க சொல்லிக்கொண்டே போனாங்க. திடீரென்று அவங்க கூவினாங்க: “ஓ ஜனங்களே, கடவுளின் செய்தியைக் கேளுங்கள்! இதைத்தான் கடவுள் சொன்னார்: ‘வேட்டைக்காரர்களுக்காக ஜெபம் செய்யுங்கள், அப்போது அவர்கள் மனிதர்களைக் கொல்லமாட்டார்கள்.’” அந்த இடமே பரவசம் அடைந்தது.
கடவுள்தான் அந்தப் பெண் மூலமா பேசினாரு என்று நம்பினேன், அதனாலே, அதற்கு அடுத்த வருஷம் கிரைஸ்ட் அப்பாஸ்டலிக் சர்ச்சின் ஒரு அங்கத்தினனாக முழுக்காட்டுதல் எடுத்தேன்.
முதல் முறையாக யெகோவாவின் சாட்சிகளோடு தொடர்பு
1951-ல் அடெடெஜீ போபோய் என்ற சாட்சியிடமிருந்து ஒரு காவற்கோபுர பத்திரிகையை வாங்கினேன். அந்தப் பத்திரிகை நல்ல சுவாரஸ்யமா இருந்ததாலே, அதை சந்தா எடுத்து, தொடர்ந்து படித்தேன். 1952-ல் அடொ இக்கிடி என்ற நகரில் நடைபெற்ற யெகோவாவின் சாட்சிகளுடைய நான்கு நாள் மாவட்ட மாநாட்டிற்கு போனேன்.
அந்த மாநாட்டில் நான் எதை பார்த்தேனோ, அது என்னை ரொம்பவும் கவர்ந்தது. நானும் ஒரு யெகோவாவின் சாட்சியாக ஆகணும் என்று தீவிரமாக யோசித்தேன், ஆனால் அந்த யோசனையை கைவிட்டேன். அந்தச் சமயத்தில் எனக்கு மூன்று பெண்டாட்டிகளும், ஒரு வைப்பாட்டியும் இருந்ததுதான் என் பிரச்சினை. ஒரே ஒரு மனைவியுடன் வாழ்வது என்பது முடியாத காரியம் என்று நான் நினைத்தேன்.
நான் ஆகூரி வந்ததும், இனிமேல் என்னை வந்து சந்திக்கவேண்டாம் என்று ஆடெடெஜீயிடம் சொன்னேன். காவற்கோபுர சந்தாவை நான் புதுப்பிக்கவில்லை. என்னுடைய சர்ச்சில் இன்னும் மும்முரமாக செயல்பட்டேன். பார்க்கப்போனால், நான் கிரைஸ்ட் ஆப்பாஸ்டலிக் சர்ச்சில் சேர்ந்ததிலிருந்துதான் கடவுள் என்னை ஆசீர்வதித்திருக்கிறார் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். நான் மூன்று பெண்டாட்டிகளை கல்யாணம் செய்து, பல பிள்ளைகளைப் பெற்றேன். சொந்த வீட்டை கட்டினேன். என்னை ஒருநாளும் ஆஸ்பத்திரியில் சேர்த்தது கிடையாது. கடவுள் என் ஜெபங்களுக்குப் பதிலளிப்பதாக தோன்றியது, பிறகு ஏன் மதம் மாற வேண்டும்?
ஒருபுறம் பிரபலம் மறுபுறம் அதிருப்தி
சர்ச்சுக்கு இன்னும் அதிக பணத்தை நன்கொடையாக கொடுக்க ஆரம்பித்தேன். ரொம்ப சீக்கிரத்தில் என்னை ஒரு சர்ச்சு மூப்பராக ஆக்கினாங்க, அந்தப் பதவி, சர்ச்சின் உள்ளே என்ன நடக்கிறது என்பதை பார்க்க எனக்கு உதவியது. அங்கே நான் பார்த்த காரியங்களால் என் அமைதி பறிபோனது. அந்தப் பாஸ்டரும், “தீர்க்கதரிசிகளும்” பணத்திற்காக பேய்யாய் அலைந்தார்கள்; அவங்க பேராசையைப் பார்த்து நான் மலைத்துப்போய் நின்னேன்.
உதாரணம் சொல்றேன், 1967, மார்ச்சில் எனக்கு மூன்று பிள்ளைகள் வேற வேற பெண்டாட்டிகள் மூலம் பிறந்தாங்க. பிள்ளைக்கு பெயர் வைக்கும் சடங்கை சர்ச்சில் நடத்துவது வழக்கமாக இருந்தது. ஆகவே, சடங்கை ஏற்பாடு செய்ய, மீன், லெமெனேடு, கூல் டிரிங்ஸ் பாட்டில்கள் ஆகியவற்றை பரிசுகளாக அந்தப் பாஸ்டருக்குக் கொண்டுபோனேன்.
சர்ச்சில் பிரசங்கம் நடந்த அந்த நாளில், சபையார் முன்னிலையில் அந்தப் பாஸ்டர் இந்தமாதிரி சொன்னாரு: “இந்தச் சர்ச்சில் இருக்கும் பணக்காரங்க செய்யறது எனக்கு ஒரே அதிர்ச்சியா இருக்கு. பெயர் வைக்க என்னமோ சடங்கு நடத்தணுமாம், ஆனா, வெறும் கூல் டிரிங்ஸ்ஸையும் மீனையும்தான் கொண்டுவராங்க. கறி இருக்கா, ஆடு இருக்கா, ஒண்ணத்தையும் காணோம்! நீங்களே யோசிச்சுப்பாருங்க! காயீன் பெரிய பெரிய கருணைக்கிழங்குகளை கடவுளுக்கு பலியா செலுத்தினான், அதில் இரத்தம் இல்லை, அதனாலே கடவுள் அதை ஏற்கவில்லை. இரத்தத்தோடு இருக்கும் பொருட்களையே கடவுள் விரும்புகிறார். ஆபேல் ஒரு மிருகத்தைக் கொண்டுவந்தான், அவனுடைய பலி ஏற்கப்பட்டது.”
அதைக் கேட்டவுடன், விருட்டென்று எழுந்து வெளியேறினேன். இருந்தாலும், சர்ச்சுக்கு போய்க்கொண்டிருந்தேன். இன்னும் அதிகமாக, வெளியே கூட்டுறவு கொள்வதிலும், கிளப் மீட்டிங்களுக்குப் போவதிலும் நிறைய நேரத்தை செலவுசெய்தேன். ஒருசில நேரங்களில் ராஜ்ய மன்றத்தில் கூட்டங்களுக்குப் போனேன், காவற்கோபுர சந்தாவை புதுப்பித்தேன். இருந்தாலும், ஒரு யெகோவாவின் சாட்சியாக மாற நான் அப்போதும் தயாராக இல்லை.
யெகோவாவை சேவிக்க தீர்மானம்
1968 எனக்கு திருப்பு முனையாக அமைந்தது. ஒருநாள் நான் காவற்கோபுரத்தில் ஒரு கட்டுரையைப் படிக்க ஆரம்பித்தேன், மலாவியில் யெகோவாவின் சாட்சிகள் மிருகத்தனமாக துன்புறுத்தப்படுவதை அது விவரித்தது. ஒரு பதினைந்து வயது பெண் தன் விசுவாசத்திற்கு எதிராக இணங்கவில்லை என்பதற்காக அவளை மரத்தில் கட்டிப்போட்டனர், ஆறு தடவை கற்பழித்தனர். அதைப் படித்தமாத்திரத்தில் அப்படியே அதிர்ச்சியில் உறைந்துபோய், படிப்பதை நிறுத்தினேன்; ஆனால் அதைப்பற்றி யோசித்து பார்த்தேன். என் சர்ச்சில் இருக்கும் எந்தவொரு பெண்ணும் அந்தமாதிரி ஒரு விசுவாசத்தைக் காட்டமாட்டாள் என்பதை உணர்ந்தேன். பிறகு, சாயங்காலம் அந்தப் பத்திரிகையை எடுத்து அதே பக்கத்தை மறுபடியும் படித்தேன்.
பைபிளை மும்முரமாக படிக்க ஆரம்பித்தேன். எனக்கு அறிவு பெருகப்பெருக, சர்ச்சு எவ்வளவு தூரத்திற்கு நம்மை தவறாக வழிநடத்தியிருக்கிறது என்பது எனக்குப் புரிய ஆரம்பித்தது. அந்தக் காலத்துல செய்தமாதிரியே நம்ம பாதிரிகள், ‘வெட்கக்கேடான காரியங்களையே செய்கிறார்கள்.’ (ஒசேயா 6:9, தி.மொ.) அந்தமாதிரி ஆளுங்க இயேசு எச்சரித்த கள்ளத்தீர்க்கதரிசிகளின் வகையாராக இருந்தாங்க! (மத்தேயு 24:24) இனிமேலும் அவங்க கண்ட தரிசனங்களையும், செய்த அற்புதங்களையும் நான் நம்ப தயாரில்லை. பொய் மதத்தை விட்டு வெளிவரவும் மத்தவங்களும் அதைவிட்டு வெளிவர உதவிசெய்யவும் தீர்மானம் எடுத்தேன்.
என்னை சர்ச்சில் வைத்திருக்க முயற்சிகள்
நான் சர்ச்சை விட்டு போக உறுதியா இருந்தது சர்ச்சு மூப்பர்களுக்குத் தெரியவந்ததும், என்னிடம் கெஞ்சி கூத்தாட ஒரு கும்பலை அனுப்புனாங்க. பணம் காய்க்கும் பெரிய மரத்தை அவ்வளவு சுலபத்தில் இழக்க அவர்கள் விரும்புவாங்களா என்ன! பாபா எக்பா பதவியை உனக்கு தருகிறோம் என்று அவர்கள் சொன்னார்கள், இது ஆகூரில் கிரைஸ்ட் அப்பாஸ்டலிக் சர்ச்சில் கொடுக்கிற ஒரு கௌரவமான பதவி.
அவர்கள் எதைக் கொடுத்தாலும் நான் கொஞ்சம்கூட மசியவில்லை, அதற்கான காரணத்தையும் அவங்ககிட்ட சொன்னேன். “சர்ச்சு நம்மிடம் பொய் சொல்லிக்கொண்டிருக்கிறது. நல்லவங்க எல்லாரும் பரலோகத்துக்குப் போவதாக அவை சொல்லுகின்றன. ஆனால், நான் பைபிளை படித்தேன், வெறும் 1,44,000 பேர் மாத்திரம் பரலோகத்துக்கு போவார்கள் என்பது எனக்குத் தெளிவாக இருக்கிறது. மத்த நீதியான ஜனங்க பரதீஸ் பூமியில் வாழுவாங்க,” என்று அவர்களிடம் சொன்னேன்.—மத்தேயு 5:5; வெளிப்படுத்துதல் 14:1, 3.
அந்தச் சர்ச் பாஸ்டர் இப்போது என் பெண்டாட்டிகளை எனக்கு எதிரா மூட்டிவிட்டு, முயன்று பார்த்தாரு. எங்க வீட்டுக்கு யெகோவாவின் சாட்சிகள் வருவதைத் தடுக்கும்படி அவர்களிடம் அவர் சொன்னார். என் பெண்டாட்டிகளில் ஒருத்தி எனக்கு உணவில் விஷம் வைத்தாள்; மத்த இரண்டு பெண்டாட்டிக சர்ச்சில் ஒரு தரிசனத்தைக் கண்டதாக என்னை எச்சரித்தாங்க. நான் சர்ச்சை விட்டுப்போனா, செத்துப்போவேன் என்பதாக அந்தத் தரிசனம் காட்டியதாம். இவற்றின் மத்தியிலும், என் பெண்டாட்டிகளுக்கு விடாமல் சாட்சி கொடுத்தேன், என்கூட மீட்டிங் வரும்படி கூப்பிட்டேன். “உங்களுக்கு வேற புருஷனுங்க கிடைப்பாங்க,” என்று அவர்களிடம் சொன்னேன். ஆனால், அவர்களில் யாரும் எந்தவொரு அக்கறையும் காட்டவில்லை, அவர்கள் தொடர்ந்து என் உற்சாகத்தைக் குலைக்கவே முயன்றாங்க.
கடைசியில், பிப்ரவரி 2, 1970-ல் நான் பக்கத்து ஊருக்குப்போய், வீட்டுக்குத் திரும்பியபோது, வீடு காலியாக இருந்தது. என் பெண்டாட்டிகள் எல்லாரும் பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு போய்விட்டார்கள்.
ஒரே பெண்டாட்டியோடு குடித்தனம்
‘இப்போது, என் கல்யாண சமாச்சாரத்தை சரிபடுத்த முடியும்’ என்று நான் நினைத்தேன். என் மூத்த மனைவி ஜானட்டை வீட்டிற்கு திரும்பி வரும்படி கூப்பிட்டேன். அதற்கு அவள் சம்மதித்தாள். ஆனால், அவளுடைய குடும்பத்தினர் அந்த யோசனைக்கு கடும் எதிர்ப்பு தெரிவிச்சாங்க. நான் ஜானட்டை கூப்பிட்ட செய்தி, என்னுடைய மத்த பெண்டாட்டிகளுக்குத் தெரியவந்தவுடன், அவளுடைய அப்பா வீட்டிற்கே அவர்கள் படையெடுத்துப்போய், ஜானட்டை அடித்து நொறுக்க முயன்றாங்க. அவளுடைய குடும்பத்தார் ஒரு பஞ்சாயத்தை கூட்டி என்னை கூப்பிட்டு அனுப்புனாங்க.
பஞ்சாயத்துக்குச் சுமார் 80 பேர் வந்திருந்தாங்க. குடும்பத்தின் தலைவராக இருந்த ஜானட்டின் மாமா சொன்னாங்க: “எங்க பெண்ணை நீ மறுபடியும் கல்யாணம் செய்ய நினைச்சா, மத்த பெண்ணுங்களையும் நீ கூட்டிக்கணும், ஆனா, நீ உன்னுடைய புது மதத்தை பின்பற்றி, ஒரே பெண்டாட்டியோடு இருக்க விரும்புனா, வேறவொரு பெண்ணை பார்த்துக்கோ. ஒருவேளை நீ ஜானட்டை கூட்டிக்கொண்டு போனால், உன்னோட மத்த பெண்டாட்டிங்க அவளை தீர்த்துக்கட்டிடுவாங்க, எங்க பெண்ணு அப்படி சாக நாங்க விரும்பல.”
எவ்வளவோ பேசிய பிறகு, ஒரே ஒரு பெண்டாட்டியோடு குடும்பம் நடத்த நான் உறுதியா இருக்கிறதை அந்தக் குடும்பத்துல இருந்தவங்க புரிஞ்சிக்கிட்டாங்க. கடைசியா அவங்க விட்டுக்கொடுத்துட்டாங்க. அந்த மாமா சொன்னாங்க: “உன் பெண்டாட்டியை உன்கிட்டயிருந்து பிரிக்க மாட்டோம். அவளை உன்கூட கூட்டிக்கிட்டு போகலாம்.”
மே 21, 1970-ல் ஜானட்டும் நானும் சட்டப்படி கல்யாணம் முடிச்சிக்கிட்டோம். ஒன்பது நாட்களுக்குப்பின், ஒரு யெகோவாவின் சாட்சியாக முழுக்காட்டுதல் எடுத்தேன். அதே வருஷம் டிசம்பர் மாதம் ஜானட்டும் முழுக்காட்டுதல் எடுத்தாள்.
யெகோவாவின் ஆசீர்வாதங்களை அனுபவித்தல்
நாங்கள் யெகோவாவின் சாட்சிகளாக மாறினால், செத்துப்போவோம் என்று என்னுடைய முன்னாள் சர்ச்சு ஆளுங்க சோதிடம் சொன்னாங்க. அது சுமார் 30 வருஷங்களுக்கு முன்னாடி. ஒருவேளை, இப்போ நான் செத்துப்போனா, ஒரு யெகோவாவின் சாட்சியாக மாறியதற்காகவா? ஒருவேளை என் பெண்டாட்டி செத்துப்போனா, அவள் யெகோவாவின் சாட்சியாக ஆனதால் செத்துப்போனா என்று யாராவது சொல்ல முடியுமா?
என்னோட 17 பிள்ளைகளுக்கு சத்தியத்தின் பாதையை காட்ட நான் ரொம்ப போராடினேன். நான் ஒரு சாட்சியாக ஆவதற்குள்ளாக அவர்கள் வளர்ந்து பெரிய பசங்களா இருந்தாலும், பைபிளை படிக்க அவங்களுக்கு உற்சாகம் கொடுத்தேன்; மீட்டிங்களுக்கும் மாநாடுகளுக்கும் கூட்டிக்கொண்டு போனேன். அவர்களில் ஐந்துபேர் என்னோடுசேர்ந்து யெகோவாவை சேவிப்பது எனக்கு ரொம்ப சந்தோஷம். ஒருத்தன் சபையில் என்னோடு ஒரு மூப்பரா சேவிக்கிறான். இன்னோருத்தன் பக்கத்தில் இருக்கும் சபையில் ஒரு உதவி ஊழியனாக இருக்கான். என் பிள்ளைகளில் இரண்டுபேர் ஒழுங்கான பயனியர்களாக இருக்காங்க.
நடந்தவற்றையெல்லாம் நான் திரும்பிப்பார்க்கும்போது, நான் அவருடைய ஒரு ஊழியக்காரனாக ஆக உதவிய யெகோவாவின் அளவிடமுடியாத தயவை எண்ணும்போது எனக்கு வியப்பா இருக்கு. இயேசு சொன்ன வார்த்தைகள் எவ்வளவு உண்மை: ‘என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்!’—யோவான் 6:44.
[அடிக்குறிப்புகள்]
a யொருபா மொழியில், ஆலாடெரா என்ற வார்த்தையின் அர்த்தம் “ஜெபம் செய்பவர்.” ஆப்பிரிக்க சர்ச்சை சேர்ந்த ஆன்மீக சுகப்படுத்துதல் செய்யும் ஒருவரை அது குறிக்கிறது.