மற்றவர்களை நம்ப நீங்கள் பயப்படுகிறீர்களா?
‘எனக்குப் பேசுவதற்கு யாருமே இல்லை. ஆட்கள் புரிந்துகொள்ளமாட்டார்கள். அவர்கள் தங்களுடைய சொந்த பிரச்சினைகளிலேயே மூழ்கிப்போய் இருக்கிறார்கள். என்னிடம் பேச அவர்களுக்கு நேரமில்லை.’ அநேகர் அவ்விதமாக நினைக்கிறார்கள், ஆகவே தாங்கள் நினைக்கும் காரியங்களைத் தங்களுக்குள்ளேயே புதைத்து வைத்துக்கொள்கிறார்கள். அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதாக மற்றவர்கள் கேட்கும்போது, பதில் சொல்ல விரும்புகிறார்கள், ஆனால் சொல்வது கிடையாது. அவர்களால் வெறுமனே மனந்திறந்து பேச முடியாது.
உண்மைதான், மற்றவர்களிடமிருந்து உதவியை விரும்பாத ஆட்கள் இருக்கிறார்கள். என்றபோதிலும், அநேகருக்கு உதவி மிகவும் தேவையாக இருக்கிறது, ஆனால் அவர்கள் தங்களின் சொந்த எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் அனுபவங்களையும் வெளிப்படுத்த பயப்படுகிறார்கள். நீங்கள் அப்படிப்பட்டவர்களில் ஒருவரா? உங்கள் நம்பிக்கைக்குரியவர் உண்மையில் ஒருவரும் இல்லையா?
பயத்தைப் புரிந்துகொள்ளுதல்
இன்றைய உலகில் அவநம்பிக்கையான ஒரு சூழ்நிலை நிலவிவருகிறது. இளைஞர் தங்கள் பெற்றோரிடம் பேசுவது கிடையாது. பெற்றோர் தங்களுக்கிடையே பேச முடிவதில்லை. வெகு சிலரே அதிகாரத்தில் இருப்பவர்களிடம் பேச விருப்பமுள்ளவர்களாயிருக்கிறார்கள். மற்றவர்களிடம் நம்பிக்கையோடு பேச இயலாதவர்களாய், சிலர் தங்கள் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்ள மதுபானம், போதைப் பொருட்கள் அல்லது கட்டுப்பாடில்லாத ஒரு வாழ்க்கை முறையை நாடி அதில் ஈடுபடுகிறார்கள்.—நீதிமொழிகள் 23:29-35; ஏசாயா 56:12.
பாதிரிமார், மருத்துவர்கள், சிகிச்சையளிப்பவர்கள் மற்றும் ஆசிரியர்கள் போன்ற அதிகாரத்திலுள்ளவர்களில் இருந்த நம்பிக்கை, நேர்மையின்மை மற்றும் ஒழுக்கக்கேடு பற்றி அடுக்கடுக்காக வரும் செய்திகளால் குலைந்துபோய்விட்டது. உதாரணமாக, பாதிரிமாரில் 10 சதவீதத்திற்கும் மேலானவர்கள் பாலியல் சம்பந்தமான தவறான நடத்தையில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதாக ஒரு மதிப்பீடு சொல்கிறது. “நம்பிக்கையை அழிக்கும்” இவர்கள் “மனித உறவுகளில் கணவாய்களையும் பிளவுகளையும் தோண்டுகிறார்கள்,” என்பதாக ஒரு எழுத்தாளர் குறிப்பிடுகிறார். இது அவர்களுடைய சபையாரை எவ்விதமாக பாதிக்கிறது? இது நம்பிக்கையை குலைத்துப்போடுகிறது.
எங்கும் பரவியுள்ள ஒழுக்கச் சீர்குலைவு குடும்பத்திலும்கூட நெருக்கடிக்கு வழிநடத்தியுள்ளது; நெறிதவறி நடக்கும் குடும்பங்கள் விதிவிலக்காக இல்லாமல், ஏறக்குறைய ஏற்கத்தக்க நிலைக்கு வந்திருக்கிறது. ஒரு காலத்தில் வீட்டில் பயிற்றுவிப்பு அளிப்பதற்கு ஏற்ற ஒரு சூழல் இருந்துவந்தது. இன்று அது சாப்பாட்டு நேரங்களில் அநேகமாக சில சேவைகளைப்பெற்றுக் கொள்ளும் ஒரு இடமாக ஆகியிருக்கிறது. “சுபாவ அன்பில்லாத” ஒரு குடும்பத்தில் ஒரு பிள்ளை வளர்ந்து வருகையில், வளர்ந்து பெரியவனாகும்போது மற்றவர்களிடம் அவனால் நம்பிக்கை வைக்க முடியாமல் போய்விடுவதே பொதுவான ஒரு விளைவாக இருக்கிறது.—2 தீமோத்தேயு 3:3.
மேலுமாக, உலக நிலைமைகள் இன்னும் மோசமாகிக் கொண்டே போகையில், அதிர்ச்சியை உண்டுபண்ணக்கூடிய அனுபவங்களுக்கு அதிகமதிகமாக நாம் உட்படுத்தப்படுகிறோம். இதுபோன்ற ஒரு சூழ்நிலையில், மீகா தீர்க்கதரிசி இவ்வாறு எழுதினார்: “நண்பனிடத்தில் நம்பிக்கை வைக்காதே.” (மிக்கேயாஸ் 7:5, தமிழ் கத்தோலிக்க பைபிள்) ஒரு சிறிய ஏமாற்றம், நம்பிக்கைத் துரோகம், அல்லது உயிருக்கு ஆபத்தாக இருந்த ஒரு முக்கிய நிகழ்ச்சி ஆகியவற்றுக்குப்பின் அதேவிதமாக நீங்கள் உணரலாம். மறுபடியுமாக மற்றவர்களை நம்புவது கடினமாக இருப்பதை நீங்கள் கண்டு உணர்ச்சிகள் மரத்துப்போனவராக மனதை மறைக்கும் ஒரு சுவருக்குப் பின்னால் ஒவ்வொரு நாளும் நீங்கள் வாழ்ந்துவரலாம். (சங்கீதம் 102:1-7-ஐ ஒப்பிடுக.) உண்மைதான் இப்படிப்பட்ட ஒரு மனநிலை நீங்கள் தொடர்ந்து செயல்பட உங்களுக்கு உதவலாம், ஆனால் ‘மனோதுக்கம்’ வாழ்க்கையில் எந்த உண்மையான மகிழ்ச்சியையும் உங்களிடமிருந்து பறித்துவிடுகிறது. (நீதிமொழிகள் 15:13) உண்மை என்னவென்றால், நீங்கள் ஆவிக்குரிய விதமாகவும், உணர்ச்சிப்பூர்வமாகவும், மனதின் பிரகாரமாகவும், சரீரப்பிரகாரமாகவும் ஆரோக்கியத்துடன் இருக்கவேண்டுமென்றால், அந்தச் சுவர் தகர்க்கப்பட வேண்டும், நீங்கள் ஆட்களை நம்ப கற்றுக்கொள்ள வேண்டும். அது சாத்தியமா? ஆம்.
அந்தச் சுவர் ஏன் தகர்க்கப்பட வேண்டும்?
நம்பிக்கையோடு மற்றவர்களிடம் பேசுவது துயரப்படும் ஒரு இருதயத்தின் பாரத்தைக் குறைக்கிறது. அன்னாளுக்கு இந்த அனுபவம் இருந்தது. ஒரு நல்ல குடும்ப வாழ்க்கையும், பாதுகாப்பான ஒரு வீடும் அவளுக்கு இருந்தது, ஆனால் அவள் மிகவும் துக்கமாக இருந்தாள். அவள் ‘மனங்கசந்துபோய்’ இருந்தாலும், அவளுடைய மெளனமான உதடுகளை அசையச் செய்த ஒரு தீவிரத்தோடு அவள் ஞானமாக “கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி”னாள். ஆம், அவள் யெகோவாவிடம் நம்பிக்கையோடு பேசினாள். பின்னர் அவள் கடவுளுடைய பிரதிநிதியாகிய ஏலியினிடம் மனந்திறந்து பேசினாள். விளைவு என்ன? “[அன்னாள்] புறப்பட்டுப்போய், போஜனஞ்செய்தாள்; அப்புறம் அவள் துக்கமுகமாயிருக்கவில்லை.”—1 சாமுவேல் 1:1-18.
பெரும்பாலான கலாச்சாரங்களிலுள்ளவர்கள் தனிப்பட்ட விஷயங்களைக் குறித்து பேசுவதில் இருக்கும் நன்மைகளை அறிந்தவர்களாக இருக்கின்றனர். உதாரணமாக, அதேப் போன்ற நிலைமைகளில் இருந்திருக்கும் ஆட்களோடு எண்ணங்களையும் அனுபவங்களையும் பரிமாறிக்கொள்வது பிரயோஜமான இருக்கலாம். ஆய்வாளர்களின் முடிவு இவ்வாறாக இருக்கிறது: “உணர்ச்சிப்பூர்வமாக தனிமைப்படுத்திக்கொள்வது நோயை உண்டுபண்ணுகிறது—மன ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு நாம் காரியங்களை வெளிப்படுத்துவது அவசியமாகும்.” வளர்ந்துவரும் எண்ணிக்கையில் அறிவியல் ஆய்வுக் குழுக்கள் ஏவப்பட்டெழுதப்பட்ட நீதிமொழியின் உண்மையை உறுதிசெய்கின்றன: “பிரிந்துபோகிறவன் தன் இச்சையின்படி செய்யப்பார்க்கிறான், எல்லா ஞானத்திலும் தலையிட்டுக்கொள்ளுகிறான்.”—நீதிமொழிகள் 18:1.
நீங்கள் மற்றவர்களிடம் மனம்விட்டு பேசவில்லையென்றால், அவர்கள் உங்களுக்கு எவ்விதமாக உதவிசெய்வார்கள்? யெகோவா தேவனுக்கு உங்களுடைய இருதயங்கள் திறந்த புத்தகம் போலிருந்தாலும், உங்களுடைய உள்ளான எண்ணங்களும் உணர்ச்சிகளும், நீங்கள் வெளிப்படுத்தினாலொழிய குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் தெரியப்போவதில்லை. (1 நாளாகமம் 28:9) பிரச்சினை கடவுளுடைய சட்டத்தை மீறுவதை உட்படுத்துவதாக இருந்தால், ஒரு காரியத்தை அறிக்கையிடுவதை தள்ளிப்போட்டுக் கொண்டிருப்பது அதை இன்னும் மோசமானதாகவே ஆக்கிவிடுகிறது.—நீதிமொழிகள் 28:13.
நிச்சயமாகவே, மற்றவர்களிடம் நம்முடைய துன்பங்களைச் சொல்வதால் வரும் நன்மைகள், புண்பட்டுவிடக்கூடிய அபாயத்தைக் காட்டிலும் அதிகமாக இருக்கின்றன. நிச்சயமாகவே, அந்தரங்கமான நுணுக்க விவரங்களை நாம் முன்யோசனையின்றி வெளியிடவேண்டும் என்பதை அது அர்த்தப்படுத்துவதில்லை. (ஒப்பிடுக: நியாயாதிபதிகள் 16:18; எரேமியா 9:4; லூக்கா 21:16.) “ஒருவரையொருவர் நிலைகுலைந்துபோகச் செய்யும் சிநேகிதருமுண்டு,” என்பதாக நீதிமொழிகள் 18:24 (NW) எச்சரித்துவிட்டு பின்னர் சொல்லுகிறது: “சகோதரனிலும் அதிக சொந்தமாய்ச் சிநேகிப்பவனுமுண்டு.” இப்படிப்பட்ட ஒரு சிநேகிதனை நீங்கள் எங்கே காணமுடியும்?
உங்கள் குடும்பத்தாரில் நம்பிக்கை வையுங்கள்
உங்களுக்கு பிரச்சினை இருக்குமென்றால், உங்கள் திருமண துணைவரோடு அல்லது உங்கள் பெற்றோரோடு அதை கலந்துபேச முயற்சி செய்திருக்கிறீர்களா? “அநேக பிரச்சினைகளுக்கு, உள்ளே புதைந்து கிடப்பவற்றை வெறுமனே மனம்விட்டு பேசுவதுதானே தேவையாக இருக்கிறது,” என்பதாக அனுபவமிக்க ஆலோசகர் ஒருவர் சொல்கிறார். (நீதிமொழிகள் 27:9) “தன்னிடத்தில் அன்புகூருவதுபோல, தன் மனைவியினிடத்திலும் அன்பு”கூரும் கணவன்மாரும், ‘தங்கள் புருஷருக்குக் கீழ்ப்படிந்திருக்கும்’ மனைவிமாரும், ‘பிள்ளைகளை யெகோவாவின் மனச்சீரமைப்பில் வளர்க்கும்’படியாக கடவுள் கொடுத்துள்ள தங்கள் உத்தரவாதத்தைக் கருத்தாய் எடுத்துக்கொள்ளும் பெற்றோரும் ஒற்றுணர்வுடன் செவிகொடுத்து கேட்பவர்களாகவும் பயனுள்ள ஆலோசகர்களாகவும் ஆவதற்காக கடினமாக உழைப்பார்கள். (எபேசியர் 5:22, 33; 6:4, NW) அவருக்கு மாம்சப்பிரகாரமான கருத்தில் மனைவியோ பிள்ளைகளோ இல்லாதபோதிலும், இயேசு இந்த விஷயத்தில் என்னே ஒரு அதிசயமான முன்மாதிரியை வைத்தார்!—மாற்கு 10:13-16; எபேசியர் 5:25-27.
குடும்ப அங்கத்தினர்களால் சரிசெய்ய முடியாத பிரச்சினையாக இருந்தால் அப்போது என்ன? கிறிஸ்தவ சபையில், நாம் ஒருபோதும் தனிமையாக இல்லை. “ஒருவன் பலவீனனானாலும் நானும் பலவீனனாகிறதில்லையோ?” என்று அப்போஸ்தலன் பவுல் கேட்டார். (2 கொரிந்தியர் 11:29) அவர் கூறிய அறிவுரையானது: ‘ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து’ கொண்டிருங்கள். (கலாத்தியர் 6:2; ரோமர் 15:1) நம்முடைய சகோதர சகோதரிகள் மத்தியில், ‘இடுக்கணில் உதவவே பிறந்திருக்கும் சகோதரர்’ ஒன்றுக்கும் மேற்பட்டவர் இருப்பதை நாம் சந்தேகமின்றி காணமுடியும்.—நீதிமொழிகள் 17:17.
சபையில் நம்பிக்கை வையுங்கள்
பூமி முழுவதிலுமுள்ள 80,000-க்கும் மேற்பட்ட யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளில், மனத்தாழ்மையுள்ள ஆட்கள் ‘உங்கள் சந்தோஷத்திற்கு உடன்வேலையாட்களாக’ சேவை செய்து வருகின்றனர். (2 கொரிந்தியர் 1:24) இவர்களே மூப்பர்கள். ‘ஒவ்வொருவரும்,’ “காற்றுக்கு ஒதுக்காகவும், பெருவெள்ளத்துக்குப் புகலிடமாகவும், வறண்ட நிலத்துக்கு நீர்க்கால்களாகவும், விடாய்த்த பூமிக்குப் பெருங்கன்மலையின் நிழலாகவும்” இருக்க வேண்டும் என்பதாக ஏசாயா குறிப்பிடுகிறார். இது மாதிரி இருக்கத்தான் மூப்பர்கள் முயற்சிசெய்கிறார்கள்.—ஏசாயா 32:2; 50:4; 1 தெசலோனிக்கேயர் 5:14.
மூப்பர்கள் ‘பரிசுத்த ஆவியினால் நியமனம்’ செய்யப்படுவதற்கு முன்பாக வேதப்பூர்வமான தகுதிகளைப் பூர்த்திசெய்கிறார்கள். இதை நீங்கள் அறிந்திருப்பது அவர்களில் உங்கள் நம்பிக்கையை பலப்படுத்துவதாக இருக்கும். (அப்போஸ்தலர் 20:28; 1 தீமோத்தேயு 3:2-7; தீத்து 1:5-9) நீங்கள் ஒரு மூப்பரோடு கலந்துபேசும் காரியம் கண்டிப்பாக இரகசியமாக காத்துக்கொள்ளப்படும். நம்பிக்கைக்குப் பாத்திரமானவராக இருப்பது அவர் தகுதிகளில் ஒன்றாக இருக்கிறது.—யாத்திராகமம் 18:21; நெகேமியா 7:2-ஐ ஒப்பிடுக.
சபையிலுள்ள மூப்பர்கள் “உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம் பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கி”றார்கள். (எபிரெயர் 13:17) இது இந்த ஆட்களில் நம்பிக்கையை வைக்கும்படியாக உங்களைத் தூண்டவில்லையா? இயல்பாகவே, எல்லா மூப்பர்களும் ஒரே பண்புகளில் சிறந்துவிளங்குவதில்லை. சிலர் மற்றவர்களைவிட அதிக எளிதில் அணுகமுடிகிறவர்களாக, தயவுள்ளவர்களாக அல்லது புரிந்துகொள்ளுகிறவர்களாக தோன்றலாம். (2 கொரிந்தியர் 12:15; 1 தெசலோனிக்கேயர் 2:7, 8, 11) அணுகத்தக்கவர் என நீங்கள் உணரும் ஒரு மூப்பரிடம் ஏன் நம்பிக்கையோடு பேசக்கூடாது?
இந்த ஆட்கள் சம்பளம் பெற்றுக்கொண்டு ஆதாயத்துக்காக வேலைசெய்பவர்கள் அல்ல. மாறாக, இவர்கள் உங்களுக்கு உதவிசெய்வதற்காக யெகோவா அளித்திருக்கும் ‘மனித வரங்களாக’ இருக்கின்றனர். (எபேசியர் 4:8, 11-13; கலாத்தியர் 6:1) எவ்விதமாக? பைபிளைத் திறமையோடு உபயோகித்து, அதன் குணப்படுத்தும் வல்லமையை உங்கள் தனிப்பட்ட நிலைமைக்குத் தக்கவாறு அவர்கள் பயன்படுத்துவார்கள். (சங்கீதம் 107:20; நீதிமொழிகள் 12:18; எபிரெயர் 4:12, 13) அவர்கள் உங்களோடும் உங்களுக்காகவும் ஜெபிப்பார்கள். (பிலிப்பியர் 1:9; யாக்கோபு 5:13-18) கலங்கிய மனநிலையை குணப்படுத்தி மனசமாதானத்தை நிலைநாட்டுவதற்கு இப்படிப்பட்ட ஆலோசகரிடமிருந்து வரும் உதவி அதிகத்தைச் செய்யக்கூடும்.
நம்பிக்கைக்குரிய உறவுகளை வளர்த்துக்கொள்வது எப்படி
உதவிக்காக, ஆலோசனைக்காக அல்லது வெறுமனே செவிகொடுக்கும்படியாக கேட்பது பலவீனத்துக்கு அல்லது தோல்விக்கு அடையாளமாக இல்லை. இது நாம் அபூரணராய் இருக்கிறோம், எந்த ஒருவரிடமும் எல்லா தீர்வுகளும் இல்லை என்பதை யதார்த்தமாக ஒப்புக்கொள்ளும் காரியமாக மாத்திரமே இருக்கிறது. நிச்சயமாகவே நமக்கிருக்கும் மிகப் பெரிய ஆலோசகரும் நம்பிக்கைக்குரியவருமானவர் நம்முடைய பரம தந்தையாகிய யெகோவா தேவனே. பின்வருமாறு எழுதின சங்கீதக்காரனோடு நாம் ஒப்புக்கொள்ளுகிறோம்: “கர்த்தர் என் பெலனும் என் கேடகமுமாயிருக்கிறார்; என் இருதயம் அவரை நம்பியிருந்தது; நான் சகாயம் பெற்றேன்.” (சங்கீதம் 28:7) அவர் நமக்கு செவிகொடுக்கிறார், நம்மை விசாரிக்கிறவராக இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு ஜெபத்தில் எந்தச் சமயத்தில் வேண்டுமென்றாலும் தடங்கலின்றி அவரிடமாக நாம் ‘நம்முடைய இருதயத்தை ஊற்றிவிடலாம்.’—சங்கீதம் 62:7, 8; 1 பேதுரு 5:7.
ஆனால் சபையிலுள்ள மூப்பர்களிலும் மற்றவர்களிலும் நம்பிக்கை வைக்க எவ்வாறு நீங்கள் கற்றுக்கொள்ளலாம்? முதலாவது உங்களை நீங்களே ஆராய்ந்து பார்க்கவேண்டும். உங்களுடைய பயங்களுக்கு உறுதியான ஆதாரமிருக்கிறதா? மற்றவர்களுடைய உள்நோக்கங்களை நீங்கள் சந்தேகிக்கிறவர்களாக இருக்கிறீர்களா? (1 கொரிந்தியர் 13:4, 7) புண்படக்கூடிய அபாயத்தைக் குறைப்பதற்கு ஒரு வழி இருக்கிறதா? ஆம். எவ்விதமாக? ஆவிக்குரிய நடவடிக்கையில் தனிப்பட்டவிதமாக மற்றவர்களுடன் பழகிப்பார்க்க முயற்சி எடுங்கள். சபை கூட்டங்களில் அவர்களோடு பேசுங்கள். வீட்டுக்கு வீடு ஊழியத்தில் ஒன்றாக சேர்ந்து பங்குகொள்ளுங்கள். மரியாதையைப் போலவே, நம்பிக்கை என்பது சம்பாதிக்கப்பட வேண்டும். ஆகவே பொறுமையாயிருங்கள். ஒரு ஆவிக்குரிய மேய்ப்பராக நீங்கள் அவரை அறிய வருகையில், அவர்மேல் உள்ள உங்கள் நம்பிக்கை வளரும். உங்கள் கவலைகளை அவரிடமாக படிப்படியாக வெளிப்படுத்துங்கள். அவர் பொருத்தமாக, அனுதாபத்துடன், விவேகமான முறையில் செயல்படுவாரேயானால், அவரிடமாக நீங்கள் அதிகத்தை வெளிப்படுத்த முயற்சிசெய்யலாம்.
யெகோவாவின் உடன் வணக்கத்தார், விசேஷமாக கிறிஸ்தவ மூப்பர்கள், தங்கள் மத்தியில் கடவுளுடைய அருமையான குணங்களைப் பார்த்துப் பின்பற்ற கடினமாக உழைக்கிறார்கள். (மத்தேயு 5:48) இது சபையில் நம்பிக்கையான ஒரு சூழ்நிலை உருவாவதில் விளைவடைகிறது. நீண்டகாலமாக மூப்பராக இருக்கும் ஒருவர் இவ்வாறு சொல்கிறார்: “சகோதரர்கள் ஒரு காரியத்தை அறிந்துகொள்ள வேண்டும்: ஒரு நபர் என்னசெய்தாலும் சரி, அது மூப்பருக்கு அவரிடமிருக்கும் கிறிஸ்தவ அன்பை குறைத்துவிடுவது கிடையாது. செய்யப்பட்ட காரியம் அவருக்குப் பிடிக்காமல் இருக்கலாம், ஆனால் அவர் இன்னும் தன்னுடைய சகோதரரை நேசிக்கிறார், அவருக்கு உதவிசெய்யவே விரும்புகிறார்.”
ஆகவே ஒரு பிரச்சினை ஏற்படுகையில் ஒருவர் தனிமையாக உணரவேண்டிய அவசியம் இல்லை. உங்கள் சுமைகளைத் தாங்குவதற்கு உங்களுக்கு உதவக்கூடிய ‘ஆவிக்குரிய தகுதிகள்’ பெற்றிருக்கும் எவருடனாவது பேசுங்கள். (கலாத்தியர் 6:1, NW) “மனுஷனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும்,” ஆனால் “இனிய சொற்கள் தேன்கூடுபோல் ஆத்துமாவுக்கு மதுரமும், எலும்புகளுக்கு ஒளஷதமுமாகும்,” என்பதை நினைவில் வையுங்கள்.—நீதிமொழிகள் 12:25; 16:24.
[பக்கம் 26-ன் பெட்டி]
தனிப்பட்ட பிரச்சினையுள்ள ஓர் உறவினருக்கு, நண்பருக்கு அல்லது ஆவிக்குரிய சகோதரருக்கு உதவும்படியாக எந்த கிறிஸ்தவனும் அழைக்கப்படலாம். எவ்வாறு உதவிசெய்வது என்பது உங்களுக்குத் தெரியுமா?
திறமையுள்ள ஒரு ஆலோசகர்
அணுகமுடிகிறவராக இருக்கிறார்: மத்தேயு 11:28, 29; 1 பேதுரு 1:22; 5:2, 3
சரியான சூழ்நிலையைத் தெரிந்துகொள்கிறார்: மாற்கு 9:33-37
பிரச்சினையைப் புரிந்துகொள்ள முற்படுகிறார்: லூக்கா 8:18; யாக்கோபு 1:19
அளவுக்கு அதிகமாக உணர்ச்சிவசப்பட மாட்டார்: கொலோசெயர் 3:12-14
மனவேதனைதரும் உணர்ச்சிகளைச் சமாளிக்க உதவிசெய்கிறார்: 1 தெசலோனிக்கேயர் 5:14; 1 பேதுரு 3:8
தன் வரையறைகளை அறிந்திருக்கிறார்: கலாத்தியர் 6:3; 1 பேதுரு 5:5
திட்டவட்டமான புத்திமதியைக் கொடுக்கிறார்: சங்கீதம் 19:7-9; நீதிமொழிகள் 24:26
இரகசியங்களைக் காத்துக்கொள்கிறார்: நீதிமொழிகள் 10:19; 25:9