உண்மையான சமாதானத்தை நாடி அதைப் பின்தொடருங்கள்!
“ஜீவனை விரும்பி, நல்ல நாட்களைக் காணவேண்டுமென்றிருக்கிறவன் . . . பொல்லாப்பைவிட்டு நீங்கி, நன்மைசெய்து, சமாதானத்தைத் தேடி, அதைப் பின்தொடரக்கடவன்.”—1 பேதுரு 3:10, 11.
1. ஏசாயாவின் பிரசித்திபெற்ற என்ன வார்த்தைகள் நிச்சயமாக நிறைவேறும்?
“அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஜாதிக்கு விரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.” (ஏசாயா 2:4) நியூ யார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகளின் உலக தலைமைக் காரியாலயத்தின் அருகில் பிரசித்திபெற்ற இந்த வாசகம் எழுதப்பட்டிருந்தாலும்கூட, அந்த உலக அமைப்பு அவற்றை நிறைவேற்றியிருப்பதாக நிச்சயமாகவே சொல்லமுடியாது. என்றபோதிலும், யெகோவா தேவனின் தவறாத வார்த்தையின் பாகமாக, அந்த உறுதிமொழி நிச்சயமாக நிறைவேறும்.—ஏசாயா 55:10, 11.
2. ஏசாயா 2:2, 3-ன் பிரகாரம் ‘கடைசி நாட்களில் நடந்தேற’ வேண்டியது என்ன?
2 ஏசாயா 2:4-ல் காணப்படும் வார்த்தைகள் உண்மையில் ஒரு மகத்தான தீர்க்கதரிசனத்தின், உண்மையான சமாதானத்தைப் பற்றிய ஒரு தீர்க்கதரிசனத்தின் பாகமாக இருக்கின்றன, மேலும் நம்முடைய சொந்த நாளில்தானே நிறைவேற்றமடைந்துகொண்டும் வருகிறது. எதிர்காலத்தில் போர்களும் போர் கருவிகளும் இனிமேலும் இராது என்ற கிளர்ச்சியூட்டும் அறிவிப்புகளைச் செய்வதற்கு முன்பாக, தீர்க்கதரிசனம் இவ்வாறு சொல்கிறது: “கடைசிநாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்படும்; எல்லா ஜாதிகளும் அதற்கு ஓடிவருவார்கள். திரளான ஜனங்கள் புறப்பட்டுவந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள். அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும்.”—ஏசாயா 2:2, 3.
மனிதர்கள் சமாதானமுள்ளவர்களாய் ஆகமுடியும்
3. போரில் ஈடுபடுகிற ஒருவர் எவ்விதமாக சமாதானமுள்ளவராக மாறமுடியும்?
3 மக்கள் சமாதானமான போக்கைப் பின்தொடருவதற்கு முன்பாக, யெகோவாவின் வழிகளில் அவர்கள் போதிக்கப்படவேண்டும் என்பதை கவனியுங்கள். யெகோவாவின் போதனைகளுக்கு கீழ்ப்படிதலுடன் பிரதிபலிப்பது ஒரு நபர் சிந்திக்கும் விதத்தையும் செயல்படும் விதத்தையும் மாற்றக்கூடும், ஆகவே போரில் ஈடுபடுகிறவராக இருந்தவர் சமாதானமுள்ளவராக மாறுகிறார். இந்த மாற்றம் எவ்வாறு ஏற்படுகிறது? ரோமர் 12:2 சொல்கிறது: “நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.” நம்முடைய மனதை கடவுளுடைய வார்த்தையிலுள்ள நியமங்களாலும் போதனைகளாலும் நிரப்புவதன் மூலமாக நாம் அதை மாற்றுகிறோம் அல்லது வேறு திசையில் உந்துவிக்கிறோம். பைபிளை தவறாமல் படிப்பது இந்த மாற்றத்தைச் செய்ய நமக்கு உதவிசெய்கிறது; மேலும் நமக்கான யெகோவாவின் சித்தம் என்ன என்பதை நாம் தொடர்ந்து நமக்கு நிரூபித்துக்கொள்கிறோம், ஆகவே போக வேண்டிய வழியை தெளிவாக நாம் காண்கிறோம்.—சங்கீதம் 119:105.
4. சமாதானமுள்ள புதிய ஆளுமையை ஒருவர் எவ்வாறு தரித்துக்கொள்கிறார்?
4 பைபிள் சத்தியம் நாம் சிந்திக்கும் முறையை மாத்திரமல்லாமல் நம்முடைய செயல்களையும் ஆளுமையையும்கூட மாற்றுகிறது. அப்போஸ்தலன் பவுல் ஊக்குவித்த பின்வரும் காரியத்தைச் செய்ய அது நமக்கு உதவிசெய்கிறது: “அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி, மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்.” (எபேசியர் 4:22-24) மனதை உந்துவிக்கிற அந்த சக்தி உட்புறத்திற்குரியதாகும். யெகோவாவிடமும் அவருடைய கட்டளைகளிடமும் நமக்கிருக்கும் அன்பு வளரும்போது அது மாற்றமடைந்து வலிமைமிக்கதாய் ஆகிறது, அது நம்மை ஆவிக்குரியவர்களாகவும் சமாதானமுள்ளவர்களாகவும் ஆக்குகிறது.
5. இயேசு தம்முடைய சீஷர்களுக்குக் கொடுத்த “புதிதான கட்டளை” எவ்விதமாக அவர்கள் மத்தியில் சமாதானத்துக்குப் பங்களிக்கிறது?
5 இயேசு தம்முடைய சீஷர்களோடு கழித்த அந்த கடைசி மணிநேரங்களின்போது அவர்களுக்குக் கொடுத்த பின்வரும் அறிவுரையிலிருந்து இந்த மாற்றம் அவசியம் என்பது தெரிகிறது; “நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.” (யோவான் 13:34, 35) கிறிஸ்துவினுடையதைப் போன்ற இந்தத் தன்னலமற்ற அன்பு சீஷர்களை பூரண ஐக்கியத்தில் பிணைக்கிறது. (கொலோசெயர் 3:14) இந்தப் “புதிதான கட்டளையை” ஏற்று அதன்படி வாழ மனமுள்ளவர்கள் மாத்திரமே கடவுள் வாக்களிக்கும் அந்தச் சமாதானத்தை அனுபவித்து மகிழுவர். இன்று இதைச் செய்கிற மக்கள் எவராவது இருக்கின்றனரா?
6. உலகிலுள்ள மக்களுக்கு நேர் எதிர்மாறாக யெகோவாவின் சாட்சிகள் சமாதானத்தை அனுபவித்து மகிழுவது ஏன்?
6 யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய உலகளாவிய சகோதரத்துவத்தில் இந்த அன்பைக் காண்பிக்க கடினமாக பிரயாசப்படுகிறார்கள். உலகின் அனைத்து தேசங்களிலிருந்தும் இவர்கள் வந்தபோதிலும், அவர்கள் உலகின் சச்சரவுகளில் ஈடுபடுவது இல்லை, கடுமையான அரசியல் மற்றும் மத சம்பந்தமான அழுத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டாலும் அதில் ஈடுபடுவதில்லை. ஐக்கியப்பட்ட ஒரு ஜனமாக, அவர்கள் யெகோவாவால் போதிக்கப்படுகிறார்கள், சமாதானத்தை அனுபவித்து மகிழுகிறார்கள். (ஏசாயா 54:13) அரசியல் சண்டைசச்சரவுகளில் அவர்கள் நடுநிலைமையைக் காத்துக்கொள்கிறார்கள்; அவர்கள் போர்களில் பங்குகொள்வது கிடையாது. முற்காலங்களில் வன்முறையில் ஈடுபட்டவர்களாக இருந்தவர்கள் அந்த வாழ்க்கை முறையை விட்டுவிட்டிருக்கிறார்கள். அவர்கள் சமாதானத்தை நேசிக்கும் கிறிஸ்தவர்களாக மாறி, கிறிஸ்து இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றுகிறவர்களாக ஆகிறார்கள். மேலும் அவர்கள் பேதுருவின் ஆலோசனையை முழு இருதயத்தோடு பின்பற்றுகிறார்கள்: “ஜீவனை விரும்பி, நல்ல நாட்களைக் காணவேண்டுமென்றிருக்கிறவன் பொல்லாப்புக்குத் தன் நாவையும், கபடத்துக்குத் தன் உதடுகளையும் விலக்கிக்காத்து, பொல்லாப்பைவிட்டு நீங்கி, நன்மை செய்து, சமாதானத்தைத் தேடி, அதைப் பின்தொடரக்கடவன்.”—1 பேதுரு 3:10, 11; எபேசியர் 4:3.
சமாதானத்தைப் பின்தொடருகிறவர்கள்
7, 8. போரைக் கைவிட்டுவிட்டு உண்மையான சமாதானத்தை நாடுகிறவர்களாக ஆன ஆட்களின் உதாரணங்களைக் கொடுங்கள். (நீங்கள் அறிந்திருக்கும் மற்றவர்களைப் பற்றிச் சொல்லுங்கள்.)
7 உதாரணமாக, ராமி ஓவ்டு என்பவர், பயங்கரவாதத்திற்கெதிரான விசேஷித்த படையின் முன்னாள் அதிகாரியாவார். அவர் தன்னுடைய விரோதிகளைக் கொலைசெய்வதற்குப் பயிற்சியளிக்கப்பட்டார். தான் காதலித்த அந்தப் பெண் ஒரு ஆசிய நாட்டவளாக, ஒரு வேறுநாட்டவளாக இருந்தாள் என்ற காரணத்துக்காகவே அவர் அவளைத் திருமணம் செய்துகொள்வதை ரபீக்கள் விரும்பவில்லை என்பதை அவர் கண்டுபிடிக்கும் நாள் வரையாக அவர் தன்னுடைய இஸ்ரேல் நாட்டு தேசப்பற்றை ஊக்கமாக கடைப்பிடித்துவந்தார். பைபிளில் சத்தியத்திற்காக அவர் தேட ஆரம்பித்தார். பின்பு அவர் யெகோவாவின் சாட்சிகளுடன் தொடர்புகொண்டார். சாட்சிகளுடன் அவர் கொண்டிருந்த பைபிள் படிப்பு, தான் இனிமேலும் வெறித்தனமான இனப்பற்றுள்ளவனாக இருக்கமுடியாது என்பதை நம்பும்படி செய்தது. கிறிஸ்தவ அன்பு, போரையும் ஆயுதங்களையும் கைவிட்டுவிட்டு, எல்லா இனத்தவரையும் நேசிக்க கற்றுக்கொள்வதை அர்த்தப்படுத்தியது. “என்னுடைய சகோதரர் ராமி” என்ற ஆரம்ப வார்த்தைகளுடன் ஒரு அன்பான கடிதத்தை பெற்றபோது அவர் எவ்வளவு ஆச்சரியமடைந்தார்! அது ஏன் அந்தளவுக்கு வினோதமாக இருந்தது? அதை எழுதியிருந்தவர் ஒரு பாலஸ்தீன சாட்சியாக இருந்தார். “பாலஸ்தீனியர்கள் என்னுடைய விரோதிகளாக இருந்தனர்; இதோ, இங்கே ஒருவர் என்னை ‘என்னுடைய சகோதரர்’ என்று எழுதியிருக்கிறார், இது நம்புவதற்கரியதாக இருக்கிறதே என்பதாக நான் நினைத்தேன்” என்பதாக ராமி சொல்லுகிறார். ராமியும் அவருடைய மனைவியும் உண்மையான சமாதானத்தை கடவுளுடைய வழியில் இப்பொழுது பின்தொடருகிறார்கள்.
8 மற்றுமொரு உதாரணம் ஜார்ஜ் ரியூட்டர் என்பவருடையது; இரண்டாம் உலகப் போரின்போது ரஷ்யாவுக்குள் புகுந்த ஜெர்மன் படையில் அவர் சேவை செய்தார். உலக ஆதிக்கத்திற்கான ஹிட்லரின் ஆரவாரமான திட்டத்தால் கடைசியில் நம்பிக்கையிழந்தார். போருக்குச் சென்று திரும்பி வந்தபோது, யெகோவாவின் சாட்சிகளுடன் அவர் பைபிளை படிக்க ஆரம்பித்தார். அவர் எழுதினார்: “கடைசியில், காரியங்கள் எனக்கு தெளிவாக தெரிய ஆரம்பித்தன. எல்லா இரத்தம் சிந்துதலுக்கும் குற்றம்சாட்டப்பட வேண்டியவர் கடவுள் அல்ல என்பதை நான் உணர்ந்தேன். . . . கீழ்ப்படியும் மனிதவர்க்கத்திற்கு நித்திய ஆசீர்வாதங்களுடன் உலகளாவிய ஒரு பரதீஸை நிலைநாட்டுவது அவருடைய நோக்கம் என்பதைக் கற்றுக்கொண்டேன். . . . ஹிட்லர் தன்னுடைய ‘ஆயிரமாண்டு ஆட்சியைப்பற்றி’ பெருமையடித்துக்கொண்டான், ஆனால் 12 [ஆண்டுகள்]—மாத்திரமே ஆட்சிசெய்தான். ஆனால் எப்பேர்ப்பட்ட கோரமான முடிவு! ஹிட்லர் அல்ல, கிறிஸ்துவே பூமியின்மீது ஆயிர வருட ஆட்சியை நிலைநாட்ட முடியும், நிலைநாட்டவும் செய்வார்.” இப்பொழுது சுமார் 50 ஆண்டுகளாக, ஜார்ஜ் உண்மையான சமாதான தூதுவராக முழுநேர ஊழியம் செயது வருகிறார்.
9. நாசி ஜெர்மனியில் யெகோவாவின் சாட்சிகளுடைய அனுபவம், அவர்கள் தைரியமுள்ளவர்கள் ஆனாலும் சமாதானமுள்ளவர்கள் என்பதை எவ்வாறு நிரூபிக்கிறது?
9 நாசி ஆட்சியின்போது ஜெர்மனியிலிருந்த யெகோவாவின் சாட்சிகளுடைய உத்தமத்தன்மையும் நடுநிலைவகிப்பும் 50-க்கும் அதிகமான ஆண்டுகளுக்குப் பிறகு இப்பொழுதும்கூட கடவுள் பேரிலும் சமாதானத்தின் பேரிலும் அவர்களுக்கிருந்த அன்புக்கு நன்மதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் தொடர்ந்து சாட்சிபகருகிறது. வாஷிங்டன், டி.சி.-யிலுள்ள ஐக்கிய மாகாணங்கள் படுகொலை அருங்காட்சியகத்தால் சமீபத்தில் பிரசுரிக்கப்பட்ட ஒரு சிறுபுத்தகம் இவ்வாறு குறிப்பிடுகிறது: “நாசி ஆட்சியில் யெகோவாவின் சாட்சிகள் கடுமையான துன்புறுத்தலை அனுபவித்தனர். . . . சித்திரவதை முகாம்களில் சித்திரவதையையும் கொடுமைப்படுத்துதலையும் சில சமயங்களில் மரண தண்டனையையும் எதிர்ப்பட்டவர்களாய், [தங்களுடைய மதத்தை துறக்க மறுத்ததில்] பெரும்பாலானோர் காண்பித்த தைரியம் சமகாலத்தில் வாழ்ந்த அநேகரின் மரியாதையை சம்பாதித்துக் கொடுத்துதிருக்கிறது.” அந்தப் புத்தகம் தொடர்ந்து சொல்லுகிறது: “முகாம்களிலிருந்து விடுதலை செய்யப்பட்ட போது, மீந்திருந்தவர்களின் மத்தியில் சென்று மதமாற்றம் செய்வதற்காக யெகோவாவின் சாட்சிகள் தொடர்ந்து தங்களுடைய ஊழியத்தைச் செய்தனர்.”
மிகப் பெரியளவிலான ஒரு மாற்றம்
10. (அ) உண்மையான சமாதானம் வருவதற்கு மிகப் பெரியளவிலான என்ன மாற்றம் அவசியமாயிருக்கிறது? (ஆ) தானியேல் புத்தகத்தில் இது எவ்வாறு வருணிக்கப்பட்டது?
10 கிறிஸ்தவ நடுநிலைமையில் நம்பிக்கை வைப்பதற்கு திரளானோரை மாற்றுவதன் மூலம் தங்களால் உலகத்திற்கு சமாதானத்தைக் கொண்டுவர முடியும் என்று யெகோவாவின் சாட்சிகள் நம்புகிறார்கள் என்பதை இது அர்த்தப்படுத்துமா? இல்லை! பூமியில் சமாதானத்தை திரும்ப நிலைநாட்டுவதற்கு, மிகப் பெரியளவிலான மாற்றம் தேவைப்படுகிறது. அது என்னமாற்றம்? பிரிவினையை, பகைமையை, சண்டையை உண்டாக்குகிற மனித ஆட்சி, இயேசு ஜெபிக்கும்படியாக தம்முடைய சீஷர்களுக்கு கற்றுக்கொடுத்த கடவுளுடைய ராஜ்ய ஆட்சிக்கு வழிவிட வேண்டும். (மத்தேயு 6:9, 10) ஆனால் அது எவ்விதமாக நடந்தேறும்? கடவுளுடைய ஆவியால் ஏவப்பட்ட ஒரு சொப்பனத்தில், கடைசி நாட்களில், ‘மனித கைகளால் பெயர்க்கப்படாத’ ஒரு பெரிய கல்லைப்போன்று, கடவுளுடைய ராஜ்யம் பூமியில் மனிதவர்க்கத்தின் அரசியல் ஆட்சிகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு மாபெரும் சிலையை நொறுக்கும் என்பதை தானியேல் தீர்க்கதரிசி கற்றறிந்தார். பின்னர் அவர் இவ்வாறு அறிவித்தார்: “அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை; . . . அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.”—தானியேல் 2:31-44.
11. சமாதானத்துக்கு தேவையான மாற்றத்தை எதன் மூலமாக யெகோவா கொண்டுவருவார்?
11 உலக காட்சியில் ஏன் இந்தத் தீவிரமான மாற்றம் நடந்தேறும்? ஏனெனில் பூமியை அசுத்தப்படுத்தி அதை அழிக்கிற எல்லாரையும் நீக்கப்போவதாக யெகோவா வாக்குறுதி கொடுத்திருக்கிறார். (வெளிப்படுத்துதல் 11:18) சாத்தானுக்கும் அவனுடைய பொல்லாத உலகத்துக்கும் எதிராக யெகோவா நடத்தவிருக்கும் நீதியுள்ள போரில் இந்த மாற்றம் நடைபெறும். வெளிப்படுத்துதல் 16:14, 16-ல் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “அவைகள் [அதாவது, அசுத்தமான ஏவப்பட்ட வசனிப்புகள்] அற்புதங்களை செய்கிற பிசாசுகளுடைய வசனிப்புகள்; அவைகள் பூலோகமெங்குமுள்ள ராஜாக்களை [அரசியல் ஆட்சியாளர்களை] சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்தத்திற்குக் கூட்டிச்சேர்க்கும்படிக்குப் புறப்பட்டுப் போகின்றன. அப்பொழுது எபிரெயு பாஷையிலே அர்மகெதோன் என்னப்பட்ட இடத்திலே அவர்களைக் கூட்டிச் சேர்த்தான்.”
12. அர்மகெதோன் எதைப்போல் இருக்கும்?
12 அர்மகெதோன் எதைப்போல் இருக்கும்? அது அணு ஆயுத வெளிப்பாடாகவோ அல்லது மனிதர்களால் தூண்டப்படுகிற வேறொரு பேரழிவாகவோ இருக்காது. இது அனைத்து மனித போர்களையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் இப்படிப்பட்ட போர்களை முன்னேற்றுவிக்கும் அனைவரையும் அழிப்பதற்குமான கடவுளுடைய போர். இது சமாதானத்தை நேசிக்கிறவர்களுக்காக உண்மையான சமாதானத்தைக் கொண்டுவருவதற்கான கடவுளுடைய போர். ஆம், யெகோவா நோக்கம் கொண்டுள்ளபடியே அர்மகெதோன் வருகிறது. அது தாமதிக்காது. அவருடைய தீர்க்கதரிசியாகிய ஆபகூக் இவ்வாறு எழுதும்படியாக தூண்டப்பட்டார்: “குறித்தகாலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது; முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது; அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு; அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை.” (ஆபகூக் 2:3) நம்முடைய மனித உணர்ச்சிகளின் காரணமாக, அது தாமதிப்பது போல தோன்றலாம். ஆனால் யெகோவா தம்முடைய கால அட்டவணையைக் கடைப்பிடிக்கிறவராக இருக்கிறார். யெகோவா முன்தீர்மானித்திருக்கும் அந்த மணிநேரத்தில் அர்மகெதோன் வரும்.
13. உண்மையான குற்றவாளியான பிசாசாகிய சாத்தானை கடவுள் எவ்வாறு கையாளுவார்?
13 இந்த முடிவான நடவடிக்கை உண்மையான சமாதானத்துக்கு தடைகளை நீக்கி வழியை உண்டுபண்ணும்! ஆனால் உண்மையான சமாதானம் உறுதியாக நிலைநாட்டப்படுவதற்கு, வேறு ஒன்றும்கூட செய்யப்பட வேண்டும்—பிரிவினையை, பகைமையை, சண்டையை உண்டாக்குகிறவன் நீக்கப்பட வேண்டும். அடுத்து அதையே தான் பைபிள் தீர்க்கதரிசனம் சொல்லுகிறது—போரைத் தூண்டுகிறவனும் பொய்க்குப் பிதாவுமாகிய சாத்தான் விரைவில் அபிஸ்ஸுக்குள் தள்ளப்படுவான். வெளிப்படுத்துதல் 20:1-3-ல் பதிவுசெய்யப்பட்டுள்ளபடி, அப்போஸ்தலனாகிய யோவான் இந்தச் சம்பவத்தைத் தீர்க்கதரிசன காட்சியில் பார்த்தார்: “ஒரு தூதன் பாதாளத்தின் திறவுகோலையும் பெரிய சங்கிலியையும் பிடித்துக்கொண்டு வானத்திலிருந்திறங்கிவரக்கண்டேன். பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தை அவன் பிடித்து, அதை ஆயிரம் வருஷமளவுங் கட்டிவைத்து, அந்த ஆயிரம் வருஷம் நிறைவேறும்வரைக்கும் அது ஜனங்களை மோசம்போக்காதபடிக்கு அதைப் பாதாளத்திலே தள்ளியடைத்து, அதின்மேல் முத்திரைபோட்டான்.”
14. சாத்தானுக்கு எதிரான யெகோவாவின் வெற்றிகரமான நடவடிக்கை எவ்விதமாக விவரிக்கப்படலாம்?
14 இது கனவல்ல; இது கடவுளுடைய வாக்குறுதி—பைபிள் சொல்லுகிறது: “தேவன் பொய் சொல்லக்கூடாதவராயிருக்கிறார்.” (எபிரெயர் 6:18) இவ்விதமாக யெகோவா தம்முடைய தீர்க்கதரிசி எரேமியாவின் மூலம் சொல்லமுடிந்தது: “நான் யெகோவா; பூமியிலே கிருபையையும் நியாயத்தையும் நீதியையும் செய்கிறவர்; இவைகளின்மேல் பிரியமாயிருக்கிறேன் என்று யெகோவா சொல்லுகிறார்.” (எரேமியா 9:24, NW) யெகோவா நியாயமாகவும் நீதியாகவும் செயல்படுகிறார்; தாம் பூமிக்குக் கொண்டுவரப்போகிற சமாதானத்தில் களிகூருகிறார்.
சமாதான பிரபுவின் ஆட்சி
15, 16. (அ) ராஜாவாக ஆளுகைச் செய்வதற்கு யெகோவா யாரைத் தெரிந்துகொண்டிருக்கிறார்? (ஆ) அந்த ஆளுகை எவ்வாறு விவரிக்கப்படுகிறது, யார் அதில் பங்குகொள்வர்?
15 தம்முடைய ராஜ்ய ஏற்பாட்டின்கீழ் வாழும் அனைவருக்கும் உண்மையான சமாதானம் கிடைப்பதை உறுதிசெய்வதற்கு, ஏசாயா 9:6, 7-ல் முன்னறிவிக்கப்பட்டுள்ளபடி, யெகோவா உண்மையான சமாதான பிரபுவாகிய இயேசு கிறிஸ்துவுக்கு ஆளுகையை கொடுத்திருக்கிறார்: “நமக்கு ஒரு பாலகன் பிறந்தார், நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, [“அதிசயமான ஆலோசனைக்கர்த்தா,” NW] வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும். . . . அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை; சேனைகளின் கர்த்தருடைய வைராக்கியம் இதைச் செய்யும்.” மேசியாவின் சமாதானமான ஆட்சியைக் குறித்து சங்கீதக்காரனும்கூட இவ்வாறு எழுதினார்: “அவருடைய நாட்களில் நீதிமான் செழிப்பான்; சந்திரனுள்ளவரைக்கும் மிகுந்த சமாதானம் இருக்கும்.”—சங்கீதம் 72:7.
16 இதோடுகூட, ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்துவின் சகோதரர்களாகிய 1,44,000 பேர், பரலோகத்தில் அவருடன் ஆட்சிசெய்து கொண்டிருப்பார்கள். அவர்கள் கிறிஸ்துவுடன் உடன் சுதந்தரவாளிகளாக இருக்கிறார்கள், அவர்களைக் குறித்து பவுல் இவ்வாறு எழுதினார்: “சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக.” (ரோமர் 16:20) ஆம், போரில் பிரியப்படுகிற பிசாசாகிய சாத்தான்மீதான கிறிஸ்துவின் வெற்றியில் இவர்கள் பரலோகங்களிலிருந்து பங்குகொள்வார்கள்!
17. உண்மையான சமாதானத்தை சுதந்தரித்துக்கொள்ள நாம் என்ன செய்யவேண்டும்?
17 ஆகவே, இப்பொழுது கேள்வியானது, உண்மையான சமாதானத்தை சுதந்தரித்துக்கொள்ள நாம் என்ன செய்யவேண்டும்? உண்மையான சமாதானம் கடவுளுடைய வழியில் மட்டுமே வரமுடியும், அதைப் பெற்றுக்கொள்ள நீங்கள் சாதகமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். நீங்கள் சமாதான பிரபுவை ஏற்றுக்கொண்டு அவரிடம் திரும்பவேண்டும். பாவமுள்ள மனிதவர்க்கத்துக்கு மீட்பராகவும் கிரயபலி அளிப்பவராகவும் அவர் வகிக்கும் பாகத்தில் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதை இது அர்த்தப்படுத்துகிறது. இயேசு தாமே இந்தப் பிரபலமான வார்த்தைகளைச் சொன்னார்: “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.” (யோவான் 3:16) உண்மையான சமாதானத்திற்கும் இரட்சிப்புக்குமான கடவுளுடைய ஏற்பாடாகிய கிறிஸ்து இயேசுவில் விசுவாசம் வைப்பதற்கு நீங்கள் மனமுள்ளவர்களாக இருக்கிறீர்களா? சமாதானத்தைக் கொண்டுவரக்கூடியதும் அதற்கு உத்தரவாதமளிப்பதுமான வேறெந்த பெயரும் பரலோகத்தின்கீழ் இல்லை. (பிலிப்பியர் 2:8-11) ஏன்? ஏனென்றால் இயேசுவே கடவுளுடைய தெரிந்துகொள்ளப்பட்ட நபர். பூமியில் எக்காலத்திலும் வாழ்ந்தவருள் அவரே சமாதானத்தின் மிகப் பெரிய தூதுவராக இருக்கிறார். இயேசுவுக்குச் செவிகொடுத்து, நீங்கள் அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றி நடப்பீர்களா?
18. யோவான் 17:3-ல் பதிவுசெய்யப்பட்டுள்ள இயேசுவின் வார்த்தைகளுக்கு பிரதிபலிக்கிறவர்களாக நாம் என்ன செய்யவேண்டும்?
18 “ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்” என்பதாக இயேசு சொன்னார். (யோவான் 17:3) ராஜ்ய மன்றத்தில் யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களில் தவறாமல் ஆஜராவதன் மூலமாக திருத்தமான அறிவை எடுத்துக்கொள்வதற்கு இதுவே சமயமாக இருக்கிறது. கல்விபுகட்டுபவையாக இருக்கும் இந்தக் கூட்டங்கள் உங்கள் அறிவையும் உங்கள் நம்பிக்கையையும் மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளும்படியாக உங்களைத் தூண்டும். கடவுளுடைய சமாதானத்துக்கு நீங்களும்கூட ஒரு தூதுவராக ஆகலாம். ஏசாயா 26:3-ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி யெகோவா தேவனில் இப்பொழுது நம்பிக்கை வைப்பதன் மூலம் சமாதானத்தை அனுபவித்து மகிழலாம்: “உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்.” நீங்கள் யாரை நம்பியிருக்க வேண்டும்? “கர்த்தரை என்றென்றைக்கும் நம்புங்கள்; கர்த்தராகிய யேகோவா நித்திய கன்மலையாயிருக்கிறார்.”—ஏசாயா 26:4.
19, 20. சமாதானத்தை நாடி அதைப் பின்தொடருகிறவர்களுக்கு என்ன காத்திருக்கிறது?
19 கடவுளுடைய சமாதானமான புதிய உலகில் நித்திய ஜீவனுக்காக இப்பொழுதே உறுதியான நிலைநிற்கை எடுங்கள். வெளிப்படுத்துதல் 21:3, 4-ல் கடவுளுடைய வார்த்தை இவ்வாறு உறுதியளிக்கிறது: “இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து, அவர்களுடைய தேவனாயிருப்பார். அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை, முந்தினவைகள் ஒழிந்துபோயின.” நீங்கள் வாஞ்சிக்கும் சமாதானமான எதிர்காலம் இதுவல்லவா?
20 கடவுள் வாக்களித்திருப்பதை நினைவுகூருங்கள்: “சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள். நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு; அந்த மனுஷனுடைய முடிவு சமாதானம்.” (சங்கீதம் 37:11, 37) அந்த மகிழ்ச்சியான நாள் வரும்போது, நாம் நன்றியுணர்ச்சியுடன் இவ்வாறு சொல்வோம்: “உண்மையான சமாதானம் இறுதியாக! உண்மையான சமாதானத்தின் ஊற்றுமூலராகிய யெகோவா தேவனே உமக்கு நன்றி!”
உங்களால் விளக்கமுடியுமா?
◻ சிந்தனையிலும் செயலிலும் மாற்றங்களைச் செய்வதற்கு ஒருவருக்கு எது உதவிசெய்யக்கூடும்?
◻ யெகோவாவின் சாட்சிகள், தனிப்பட்டவர்களாகவும், தொகுதியாகவும் உண்மையான சமாதானத்தை தாங்கள் நேசிப்பதை எவ்வாறு காண்பித்திருக்கிறார்கள்?
◻ பகைமையையும் போரையும் ஊக்குவிக்கும் அனைவருக்கும் யெகோவா என்ன செய்வார்?
◻ சமாதான பிரபுவின் ஆட்சி மனிதவர்க்கத்துக்கு என்ன செய்யும்?
[பக்கம் 14-ன் படங்கள்]
ஏசாயாவின் வார்த்தைகளை நிறைவேற்றுவது யெகோவாவின் போதனைக்கு பிரதிபலிப்பவர்களே அல்லாமல் ஐநா அல்ல
[பக்கம் 15-ன் படங்கள்]
சமாதானத்தைப் பின்தொடருவதற்காக இந்த இரண்டுபேரும் மாற்றங்களைச் செய்தனர்
ராமி ஓவ்டு
ஜார்ஜ் ரியூட்டர்
[பக்கம் 16-ன் படம்]
சமாதான பிரபுவின் ஆட்சியில் உண்மையான சமாதானம் நிலவும்